Tuesday, September 24, 2013

ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு!

(கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு நாள்)

உறவினர் திருமணத்துக்காக சென்னை செல்ல முன்பதிவு செய்திருந்தோம். நான்கு நாட்கள் சென்னை வாசம் தான்.. முதலில் திருமணத்துக்கு முன் ஏற்பாடு செய்திருந்த சுமங்கலி பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும். முதல் நாள் இரவு மலைக்கோட்டை விரைவு ரயிலில் புறப்பட்டு காலையில் சென்னையில் காலை பதித்தோம்.

என்னவர் திருச்சிக்கு வந்ததிலிருந்து உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன் என்று சொன்னார். என்னன்னு தெரிஞ்சிக்கலைன்னா நம்ம மண்டை உடைஞ்சிடுமே! அவர் சபரிமலை சென்றவுடன் பெட்டியெல்லாம் குடைஞ்சும் பார்த்துட்டேன். ஒன்றும் தெரியவில்லைவந்தவுடன் கேட்டால் சென்னையில் தான் அந்த சர்ப்ரைஸ் இருக்கு என்றார். அட! போங்கய்யா! கடைசியில் சொதப்பலா எதையாவது சொல்லி வழக்கம் போல் மழுப்பப் போறார்னு நினைச்சு அந்த விஷயத்தையே மறந்துட்டேன்…..:))

அங்க போன பிறகு தான் விஷயமே தெரிந்தது. ஒரு நாள் பயணமாக மாமல்லபுரம் வரை செல்ல ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் என….:)) முதல் நாள் சுமங்கலி பிரார்த்தனை, உறவினர்களிடம் குசலம் விசாரிப்பு என அன்றைய நாள் இனிதாகச் சென்றது. கீதா மாமி கல்யாணம் பற்றி எழுதும் தொடரில் சுமங்கலி பிரார்த்தனை பற்றி விரிவாக எழுதியிருந்தார். அதை படித்த பின் இந்த விசேஷத்தில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் கவனிக்க தொடங்கினேன். நம்ம வீட்டு வழக்கம் என்ன? எப்படி செய்ய வேண்டும் என்று. சுமங்கலி பிரார்த்தனை பற்றி தெரிந்துகொள்ள கீதா மாமியின் பக்கத்திற்குச் சென்று படிக்கலாம்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு கால் டாக்ஸி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனால் அதற்கு முன்பே தயாரானோம். காலை உணவுக்கு என்னவரின் சித்தி இட்லியும் தேங்காய் சட்னியும், மிளகாய்ப் பொடியும் பரிமாறினார். எனக்கு தான் நம்ம டீச்சர் பாஷையில் டேஷ் பிரச்சனையாச்சே…. பயந்து கொண்டே சாப்பிட்டேன். மாத்திரையும் போட்டுக் கொண்டாயிற்று. தண்ணீர் பாட்டில்களும், நிறைய கவர்களும் எடுத்துக் கொண்டாயிற்று. கவர் எதற்கு என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை…..:))

வண்டியும் கிளம்பியாயிற்று. கிழக்கு கடற்கரை சாலையை எட்டுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. வழியெங்கும் ட்ராஃபிக் ஜாம் தான். அதற்குள்ளேயே வழக்கம் போல் கவருக்கு இரண்டு முறை வேலை வந்து விட்டது. வயிறும் காலி…..:)) அத்தோடு நானும் புத்துணர்ச்சி பெற்று விட்டேன்……:)) இனி சுகமான பயணம் தான். வாருங்கள். கிழக்கு கடற்கரைச் சாலைக்குள் வந்து விட்டோம். இனி ஒவ்வொரு இடமாக கண்டுகளிக்கலாம்.வழியிலே V.G.P கோல்டன் பீச்சின் முன்பு டிரைவர் நிறுத்தினார். உள்ளே சென்றால் பாதி நாள் இங்கேயே ஓடி விடும் என்று வாசலில் சில படங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டோம். இந்த சாலையிலேயே எத்தனை AMUSEMENT PARKS இருக்கின்றன. பொழுதுபோக்க ஒன்றுக்குள் நுழைந்து விட்டால் அன்றைய நாளே இனிமையாக கழிந்து விடும். கூடவே உங்கள் பர்ஸின் கனமும் குறைந்து விடும். :)முதலில் நாங்கள் சென்றது ISKON கோயிலுக்கு. கிருஷ்ணனின் ஆலயம். அமைதியான அழகான இடம். எங்கும் சுத்தம். வித்தியாசமாக கடவுள் சிலைகளை படம் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் மற்றதை எடுக்கக் கூடாது என்று இங்கு சொன்னார்கள். அதன்படி விதவிதமான படங்கள் எடுக்கப்பட்டன. கிருஷ்ணனின் லீலைகள் படங்களாக சித்தரிக்கப்பட்டிருந்தன. இந்தக் கோவிலைப் பற்றி நம்ம டீச்சர் விரிவாக எழுதியிருக்காங்க. உள்ளே போனதிலிருந்தே நம்ம டீச்சர் ஞாபகம் தான் வந்தது..:). அப்போது வரவிருந்த ஜன்மாஷ்டமியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு நம்மால் இயன்றதை தரச்சொல்லி அங்கிருந்த அலுவலர் சொல்லவும், எங்களால் இயன்றதை தந்து விட்டு வந்தோம். வெளியே பிரசாதமாக வெண்பொங்கல் தரப்பட்டது. கையை ஏந்தி நின்றால் தான் தருகிறார்கள். ஒரு தொன்னை போதும் என்று சொல்லி வாங்கிக் கொண்டோம்.

காலணிகளை எடுக்கச் சென்ற இடத்தில் உள்ள பெண்மணிகள் அங்கு நின்றுகொண்டிருந்த வட இந்திய ஆண்களிடம் ஏதோ சொல்ல முயன்று கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்தால்கோவிலைச் சேர்ந்த இந்த மாமரத்தில் உள்ள மாங்காய்கள் எல்லாம் கிருஷ்ணனுக்கு உரியவை. அவற்றை பறிக்கக் கூடாது என்று நீங்களே சொல்லுங்கஎன்றார். என்னவர் அவர்களுக்கு ஹிந்தியில் சொல்லி புரிய வைத்தார். பின்பு அங்கிருந்து கிளம்பி அடுத்த இடத்திற்கு சென்றோம்.அடுத்து நாங்கள் சென்றது ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவியின் கோயில். மக்கள் கூட்டமும், அங்கிருந்த கடைகளும் இது நல்ல பிரபலமான கோயில் தான் போல என்று தோன்ற வைத்தது. கேரள பாணியில் இருந்த கட்டடக் கலையில் ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி, மண்டை ஓடு மாலையுடன் மெகா சைஸில் இருந்த மஹா காளி, ஸ்டெதஸ்கோப்புடன் இருந்த தன்வந்திரி, குபேரன், நவக்கிரகங்கள், குருவாயூரப்பன், மஹாலட்சுமி என தனித்தனி சன்னிதிகள் நிறைய இருந்தன. ப்ரத்யங்கிரா தேவியிடம் வேண்டுதல் நிறைவேற விரளி மஞ்சளை மாலையாக கட்டி சார்த்துகிறார்கள். அதே போல குபேரனிடம் உள்ள மூங்கில் கூடையில் குபேர காயத்ரியைச் சொல்லி கூண்டுக்கு அப்பால் உள்ள நாம் நாணயத்தை கீழே விழாமல் போட வேண்டும்.

வித்தியாசமாக இருந்த இந்த கோவிலில், உள்ள பல சன்னிதிகள் நாம் கேள்விப்படாதவை தான். அப்படி ஒரு சிலை மெகா சைஸில் இருந்தது. யாருடையது என்றே தெரியவில்லை - இரண்டு முகங்கள், ஏழு கைகள், மூன்று கால்கள், ஆடு தான் வாகனம். கோவில் என்றாலே நம்ம இராஜராஜேஸ்வரி மேடம் எழுதாத விஷயம் இல்லை. அவர் எங்கிருந்தாலும் இங்கு வந்து அது என்ன கடவுளின் சிலை என்று தெரியப்படுத்தவும்…..:)

அடுத்து நாம் செல்லப் போவது தென்னிந்திய பண்பாட்டை, கலையை விளக்கும் ஒரு இடம். கண்ணுக்கு விருந்தாக அமைந்த இந்த இடத்திற்கு கொஞ்சம் இளைப்பாறி விட்டு செல்லலாமா?

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


26 comments:

 1. சென்னையில் இருந்தாலும் ஒருமுறை கூட இந்த கோவில்களுக்கு நான் சென்றதில்லை... தங்கள் மூலம் அறியப்பெற்றேன்... தொடருங்கள்... நன்றி...

  ReplyDelete
 2. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக
  அக்னி பகவான் விக்கிரகங்களில் காணலாம் ...

  அழைத்தமைக்கு நன்றிகள்..

  சர்ப்பரைசான பயணம் ரசிக்கவைத்தது..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 3. சர்ப்ரைஸ் என்றதும் ஓடோட் வந்த என்னை நீங்கள் ஏமாற்றவில்லை:-)

  ஹரே க்ருஷ்ணா, விஜிபி எல்லாம் துளசிதளத்தில் வந்தவை சரியாக எழுதப்பட்டிருக்கின்றனவான்னு டபுள் செக் செஞ்சிங்களா?

  அது என்ன ப்ரத்தியங்கராதேவி கோவில்? எங்கே கட்டி இருக்காங்க? புதுசா இருக்கே!

  நான் (ஒரிஜனல்) ப்ரத்யங்கரா (ஐயாவாடி) கோவிலுக்குத்தான் போயிருக்கேன்.

  சென்னைவாசிகள் ரொம்ப அதிர்ஷ்டக்காரர்கள். எல்லா ஊர் கோவில்களுக்கும் ப்ராஞ்ச் ஆஃபீஸ் வந்துருக்கே!

  ReplyDelete
 4. இஸ்கான் கோவில் சென்னையிலும் இருப்பதை பார்க்கத்தூண்டி விட்டீர்கள் !

  ReplyDelete
 5. பயணம் ரசிக்கவைத்தது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. அடுத்தது தக்ஷின் சித்ரா??????
  பிரத்யங்கரா தேவி கோவில் வந்து ஐந்தாறு வருடங்களுக்கு மேல இருக்கும் துளசி.

  இராஜராஜெஸ்வரிக்கு மிக நன்றி.

  அழகான பகிர்வு ஆதி.

  ReplyDelete
 7. தொடருங்கள்! தொடர்கிறேன் படங்கள் எடுத்துள்ள விதம் அருமை!

  ReplyDelete
 8. ரசித்தேன்.பகிர்விற்கு நன்றி ஆதி,

  ReplyDelete
 9. சென்னைக்கு அடிக்கடிச் சென்று வந்தும் கூட
  இந்த இடங்களுக்கெல்லாம் போனதில்லை
  நேரடியாக மகாபலிபுரம் போய் வந்ததோடு சரி
  தங்கள் பதிவைப் படித்ததும் அடுத்தமுறை
  போய்வர உத்தேசித்துள்ளேன்
  படங்களுடன் பகிர்வு அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. படங்களும், விளக்கங்களும் அருமை. இனி டிராவல் பண்ணும்போது கவருடன் எலுமிச்சை பழத்தை கொண்டு போங்க. அப்பப்ப வாசனை பிடிச்சா டேஷ் வராது!!

  ReplyDelete
 11. ரஸிக்க வைத்த பயணம் பற்றி சொன்னதற்கு நன்றிகள்,. படங்கள் எல்லாமே ஜோர் ஜோர். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. ஐயாவாடி ப்ரத்யங்கிரா கோயிலுக்குத் தான் நானும் போயிருக்கேன். கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு முறை கடலூரில் இருந்து சென்னை வரச்சே பயணம் செய்ததுதான். மஹாபலிபுரம் நாற்பது வருடங்கள் முன்னர் பார்த்தது. அப்புறமா அந்தத் திக்கிலேயே தலை வைச்சுக் கூடப் படுக்கலை. போக எனக்கு(மட்டும்) ஆசைதான். எங்கே!:( நீங்க சொல்லி இருக்கும் கோயில்கள் அங்கே இருப்பது இப்போத் தான் தெரியும். துளசியின் பதிவில் தொல் பொருள் ஆராய்ச்சித் துறைக்காரங்க அகழாய்வில் புதுசாத் தோண்டி எடுத்த முருகன் கோயிலைப் பத்திப் படிச்ச நினைவு. இது பத்தி படிச்சேனா நினைவில் இல்லை. :))) நீங்க சொல்லும் அந்தக் கடவுளைப் பத்தி வேறொரு பதிவிலும் பார்த்தேன். ஆனால் என்ன கடவுள்னு படிச்சேன் என்பது நினைவில் இல்லை. :)))))

  ReplyDelete
 13. வல்லிம்மா சொல்றாப்போல் அடுத்து தக்‌ஷின் சித்ராவா?சீக்கிரம் பதிவிடுங்க.ஆவலுடன் இருக்கிறோம்.

  ReplyDelete
 14. பயணம் தொடரட்டும்!

  ReplyDelete
 15. படங்களும் பதிவும் அருமை.

  ReplyDelete
 16. சென்னையில் புதுசு புதுசா நிறைய கோயில்கள் வந்துட்டே இருக்கு.
  துளசி மேடம்..சோழிங்கநல்லூரிலிருந்து(OMR Road) ECR போகும் ரோடில் வலது பக்கத்தில் இந்த பிரத்தியேங்கரா கோயில் இருக்கு.15 வருடங்களாக இருக்கு.இப்போ நன்கு கூட்டம் வருது.வராஹி அம்மன் சிலை மிக அம்சமாக இருக்கும்.

  ReplyDelete
 17. வரிசையாக எத்தனை கோவில்கள்? தொடருங்கள்...

  ReplyDelete
 18. நானும் தொடர்கிறேன்.

  ReplyDelete
 19. படங்கள் மிக அருமை. இதெல்லாம் இருக்கா.. பார்த்ததே இல்லியே..

  ReplyDelete
 20. இனிய அதிர்ச்சியாக ஒரு இனிய பயணம். புதிய பல செய்திகளைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஆதி. புகைப்படங்கள் அழகு.

  ReplyDelete
 21. சர்ப்ரைஸ் பயணம் மிக அருமை.

  ReplyDelete
 22. கிருஷ்ணா, ப்ரத்யங்கரா கோயில் தர்சனம் கிடைத்தது. அடுத்து............வருகின்றேன்.

  ReplyDelete
 23. ஒரு இனிய பயணத்தை உங்களுக்கு இனிய அதிர்ச்சியாகக் கொடுத்துவிட்டாரா, உங்களவர்? எங்களுக்கும் ஜாலிதான் உங்களுடன் மானசீகமாக வருகிறோம்.

  ReplyDelete
 24. அய்யா பாணியில் அம்மாவின் பயணக் கட்டுரையும் அருமை.

  ReplyDelete
 25. இந்த பயணத்தில் என்னுடன் பயணிக்கும் அனைவருக்கும் நன்றிகள் பல.... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…