Monday, September 30, 2013

நட்பு என்னும் நூலெடுத்து…..நட்பு என்பது ஒரு அலாதியான உணர்வு. ஒருவரை மனதார பிடித்து விட்டால் அவர்கள் செய்யும் தப்புகள் கூட நம் கண்ணை மறைத்து விடும். பதிலாக அவர்களுக்கே நாம் பரிந்து பேசுவோம். இதுவே ஒருவரை பிடிக்காவிட்டால் அவர்கள் எது செய்தாலும் குற்றம் தான்செய்யாவிட்டாலும் குற்றம் தான்…..:) அதே போல தான் நல்ல நட்புக்கு பல வருடப் பழக்கம் தேவையில்லை. சில நாட்கள் பழகினாலும் மனதில் இடம் பிடித்து, பல வருடங்கள் பழகிய உணர்வை ஏற்படுத்தி விடும். இதெல்லாம் இங்கு ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்?

திருவரங்கம் வந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே என் மகளுக்கு ஒரு நட்பு கிடைத்தது. அவர்கள் வகுப்பில் இவளைப் போலவே அந்த மாணவனும் புதிதாக சேர்ந்திருந்தான். மேட்டூரிலிருந்து திருவரங்கம் வந்துள்ள அவன் எங்கள் குடியிருப்பில் தான் உள்ளான் என்பதை தெரிந்து கொண்டதிலிருந்து இருவரும் வீட்டிற்கு போவது, வருவது, விளையாடுவது என நாட்கள் ஓடின

அந்த சிறுவனின் அம்மா என் மகளிடம் வீட்டுப்பாடம் பற்றிய விவரங்களை அலைப்பேசியில் கேட்பார்கள். அப்போது நானும் அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களிடம் பழக ஆரம்பித்தேன். இப்படியாக அம்மாவுக்கும் மகளுக்கும் நட்பால் நேரங்கள் நல்லபடியாக சென்றன. தோழியின் கணவர் சவூதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் இவர்கள் இங்கு வசித்துக் கொண்டிருந்தனர்.

எங்காவது ஷாப்பிங், சினிமா, ஹோட்டல் என்று செல்லலாம் என்று யோசித்து இதுவரை போக முடிந்ததில்லை. கோவிலுக்கு சென்று மணல்வெளியில் குழந்தைகளை விளையாட விட்டு நாங்கள் அரட்டை அடித்திருக்கிறோம். சரி இப்போ அதுக்கென்ன? என்று தானே கேட்கிறீர்கள்….


விஷயம் இது தான்…. விசா கிடைத்து இப்போது இவர்களும் சவூதிக்கு சென்று விட்டார்கள்…. செல்லப் போகிறார்கள் என்றதிலிருந்தே என் மனதை அதற்கேற்ப மாற்றி கொண்டு விட்டேன். ஆனால் குழந்தைகள்? மகள் அவர்கள் சென்றதிலிருந்தே ஓரே அழுகை தான்என்னுடைய BEST FRIEND என்னை விட்டு விட்டு ஊருக்கு போயிட்டான்….இப்போ என்ன பண்ணுவேன் என்று…..:))

சிறுவயதிலிருந்து எனக்கு கிடைத்த நட்புகளையும், காலத்தால் அவர்களுக்கும் நமக்கும் ஏற்படும் இடைவெளியையும் சொல்லி புரிய வைத்தேன்.

நெடுநேர அழுகையின் பின் அவள் ஃப்ரெண்ட் கணேஷாவிடம் முறையிட்டிருக்கிறாள். கூடிய சீக்கிரம் ஒரு ஃப்ரெண்ட் கிடைக்கவாம்……:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Friday, September 27, 2013

நிலா நிலா ஓடி வா! காலம் மாறிப் போச்சு!!!

என்னங்க! சின்னபிள்ளைத் தனமாக நிலா நிலா ஓடி வான்னு பாடறேன்னு நினைக்காதீங்க! நம்மல்லாம் நம்ம காலத்துல இப்படித்தான் பாடியிருப்போம்.நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேல ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
நடு வீட்டுல வைய்யி
நல்ல துதி செய்யி

கடைசி வரிகளை ஒரு சிலர் மாத்தி சொல்லலாம். ஆனா பாட்டு இது தான்.

ஆனா இப்பப் பாருங்க! இந்த காலத்து குழந்தைங்களுக்கு தகுந்த மாதிரி இருந்த இந்தப் பாடல் என் மகளின் பாடத்தில் உள்ளது. பிடித்திருந்ததால் இங்கு பகிர்கிறேன்.

நிலா, நிலா, ஓடி வா;
நில்லாமல் ஓடிவா
பல காலம் இப்படிப்
பாடிப் பயன் இல்லையே!
மலை மேலே ஏறிநீ
வருவாய் என்றே எண்ணினோம்.
மல்லிகைப்பூக் கொண்டுநீ
தருவாய் என்றும் பாடினோம்.

எத்தனை நாள் பாடியும்
ஏனோ நீயும் வரவில்லை.
சத்தம் போட்டுப் பாடியும்
சற்றும் நெருங்கி வரவில்லை.

உன்னை விரும்பி அழைத்துமே
ஓடி நீ வராததால்
விண்கலத்தில் ஏறியே
விரைவில் வருவோம் உன்னிடம்!

-    அழ. வள்ளியப்பா
                                                                       
என்ன நட்புகளே! இனி நாமும் இப்படிப் பாடுவோமா?….

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Tuesday, September 24, 2013

ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு!

(கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு நாள்)

உறவினர் திருமணத்துக்காக சென்னை செல்ல முன்பதிவு செய்திருந்தோம். நான்கு நாட்கள் சென்னை வாசம் தான்.. முதலில் திருமணத்துக்கு முன் ஏற்பாடு செய்திருந்த சுமங்கலி பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும். முதல் நாள் இரவு மலைக்கோட்டை விரைவு ரயிலில் புறப்பட்டு காலையில் சென்னையில் காலை பதித்தோம்.

என்னவர் திருச்சிக்கு வந்ததிலிருந்து உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன் என்று சொன்னார். என்னன்னு தெரிஞ்சிக்கலைன்னா நம்ம மண்டை உடைஞ்சிடுமே! அவர் சபரிமலை சென்றவுடன் பெட்டியெல்லாம் குடைஞ்சும் பார்த்துட்டேன். ஒன்றும் தெரியவில்லைவந்தவுடன் கேட்டால் சென்னையில் தான் அந்த சர்ப்ரைஸ் இருக்கு என்றார். அட! போங்கய்யா! கடைசியில் சொதப்பலா எதையாவது சொல்லி வழக்கம் போல் மழுப்பப் போறார்னு நினைச்சு அந்த விஷயத்தையே மறந்துட்டேன்…..:))

அங்க போன பிறகு தான் விஷயமே தெரிந்தது. ஒரு நாள் பயணமாக மாமல்லபுரம் வரை செல்ல ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் என….:)) முதல் நாள் சுமங்கலி பிரார்த்தனை, உறவினர்களிடம் குசலம் விசாரிப்பு என அன்றைய நாள் இனிதாகச் சென்றது. கீதா மாமி கல்யாணம் பற்றி எழுதும் தொடரில் சுமங்கலி பிரார்த்தனை பற்றி விரிவாக எழுதியிருந்தார். அதை படித்த பின் இந்த விசேஷத்தில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் கவனிக்க தொடங்கினேன். நம்ம வீட்டு வழக்கம் என்ன? எப்படி செய்ய வேண்டும் என்று. சுமங்கலி பிரார்த்தனை பற்றி தெரிந்துகொள்ள கீதா மாமியின் பக்கத்திற்குச் சென்று படிக்கலாம்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு கால் டாக்ஸி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனால் அதற்கு முன்பே தயாரானோம். காலை உணவுக்கு என்னவரின் சித்தி இட்லியும் தேங்காய் சட்னியும், மிளகாய்ப் பொடியும் பரிமாறினார். எனக்கு தான் நம்ம டீச்சர் பாஷையில் டேஷ் பிரச்சனையாச்சே…. பயந்து கொண்டே சாப்பிட்டேன். மாத்திரையும் போட்டுக் கொண்டாயிற்று. தண்ணீர் பாட்டில்களும், நிறைய கவர்களும் எடுத்துக் கொண்டாயிற்று. கவர் எதற்கு என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை…..:))

வண்டியும் கிளம்பியாயிற்று. கிழக்கு கடற்கரை சாலையை எட்டுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. வழியெங்கும் ட்ராஃபிக் ஜாம் தான். அதற்குள்ளேயே வழக்கம் போல் கவருக்கு இரண்டு முறை வேலை வந்து விட்டது. வயிறும் காலி…..:)) அத்தோடு நானும் புத்துணர்ச்சி பெற்று விட்டேன்……:)) இனி சுகமான பயணம் தான். வாருங்கள். கிழக்கு கடற்கரைச் சாலைக்குள் வந்து விட்டோம். இனி ஒவ்வொரு இடமாக கண்டுகளிக்கலாம்.வழியிலே V.G.P கோல்டன் பீச்சின் முன்பு டிரைவர் நிறுத்தினார். உள்ளே சென்றால் பாதி நாள் இங்கேயே ஓடி விடும் என்று வாசலில் சில படங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டோம். இந்த சாலையிலேயே எத்தனை AMUSEMENT PARKS இருக்கின்றன. பொழுதுபோக்க ஒன்றுக்குள் நுழைந்து விட்டால் அன்றைய நாளே இனிமையாக கழிந்து விடும். கூடவே உங்கள் பர்ஸின் கனமும் குறைந்து விடும். :)முதலில் நாங்கள் சென்றது ISKON கோயிலுக்கு. கிருஷ்ணனின் ஆலயம். அமைதியான அழகான இடம். எங்கும் சுத்தம். வித்தியாசமாக கடவுள் சிலைகளை படம் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் மற்றதை எடுக்கக் கூடாது என்று இங்கு சொன்னார்கள். அதன்படி விதவிதமான படங்கள் எடுக்கப்பட்டன. கிருஷ்ணனின் லீலைகள் படங்களாக சித்தரிக்கப்பட்டிருந்தன. இந்தக் கோவிலைப் பற்றி நம்ம டீச்சர் விரிவாக எழுதியிருக்காங்க. உள்ளே போனதிலிருந்தே நம்ம டீச்சர் ஞாபகம் தான் வந்தது..:). அப்போது வரவிருந்த ஜன்மாஷ்டமியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு நம்மால் இயன்றதை தரச்சொல்லி அங்கிருந்த அலுவலர் சொல்லவும், எங்களால் இயன்றதை தந்து விட்டு வந்தோம். வெளியே பிரசாதமாக வெண்பொங்கல் தரப்பட்டது. கையை ஏந்தி நின்றால் தான் தருகிறார்கள். ஒரு தொன்னை போதும் என்று சொல்லி வாங்கிக் கொண்டோம்.

காலணிகளை எடுக்கச் சென்ற இடத்தில் உள்ள பெண்மணிகள் அங்கு நின்றுகொண்டிருந்த வட இந்திய ஆண்களிடம் ஏதோ சொல்ல முயன்று கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்தால்கோவிலைச் சேர்ந்த இந்த மாமரத்தில் உள்ள மாங்காய்கள் எல்லாம் கிருஷ்ணனுக்கு உரியவை. அவற்றை பறிக்கக் கூடாது என்று நீங்களே சொல்லுங்கஎன்றார். என்னவர் அவர்களுக்கு ஹிந்தியில் சொல்லி புரிய வைத்தார். பின்பு அங்கிருந்து கிளம்பி அடுத்த இடத்திற்கு சென்றோம்.அடுத்து நாங்கள் சென்றது ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவியின் கோயில். மக்கள் கூட்டமும், அங்கிருந்த கடைகளும் இது நல்ல பிரபலமான கோயில் தான் போல என்று தோன்ற வைத்தது. கேரள பாணியில் இருந்த கட்டடக் கலையில் ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி, மண்டை ஓடு மாலையுடன் மெகா சைஸில் இருந்த மஹா காளி, ஸ்டெதஸ்கோப்புடன் இருந்த தன்வந்திரி, குபேரன், நவக்கிரகங்கள், குருவாயூரப்பன், மஹாலட்சுமி என தனித்தனி சன்னிதிகள் நிறைய இருந்தன. ப்ரத்யங்கிரா தேவியிடம் வேண்டுதல் நிறைவேற விரளி மஞ்சளை மாலையாக கட்டி சார்த்துகிறார்கள். அதே போல குபேரனிடம் உள்ள மூங்கில் கூடையில் குபேர காயத்ரியைச் சொல்லி கூண்டுக்கு அப்பால் உள்ள நாம் நாணயத்தை கீழே விழாமல் போட வேண்டும்.

வித்தியாசமாக இருந்த இந்த கோவிலில், உள்ள பல சன்னிதிகள் நாம் கேள்விப்படாதவை தான். அப்படி ஒரு சிலை மெகா சைஸில் இருந்தது. யாருடையது என்றே தெரியவில்லை - இரண்டு முகங்கள், ஏழு கைகள், மூன்று கால்கள், ஆடு தான் வாகனம். கோவில் என்றாலே நம்ம இராஜராஜேஸ்வரி மேடம் எழுதாத விஷயம் இல்லை. அவர் எங்கிருந்தாலும் இங்கு வந்து அது என்ன கடவுளின் சிலை என்று தெரியப்படுத்தவும்…..:)

அடுத்து நாம் செல்லப் போவது தென்னிந்திய பண்பாட்டை, கலையை விளக்கும் ஒரு இடம். கண்ணுக்கு விருந்தாக அமைந்த இந்த இடத்திற்கு கொஞ்சம் இளைப்பாறி விட்டு செல்லலாமா?

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Monday, September 16, 2013

பதிவர் திருவிழா – எனது பார்வையில்

பதிவு எழுதுவதை பெருமையாக எல்லோரிடமும் பீற்றிக் கொள்ளும் நான் பதிவர் திருவிழாவில் கலந்து கொள்வது என்றால் சொல்லவும் வேண்டுமோ! சென்றவருடம் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. இந்த வருடம் குடும்பத்துடன் கலந்து கொண்டோம். கோடம்பாக்கத்தில் உள்ள என்னவரின் நண்பர் தன் வீட்டிற்கு அருகில் தான் அரங்கம் உள்ளதாக தெரிவிக்க, முதல்நாள் இரவு மலைக்கோட்டை விரைவு ரயிலை ஸ்ரீரங்கத்தில் பிடித்து மறுநாள் அதிகாலை சென்னை வந்தடைந்தோம். நண்பர் வீட்டுக்கு சென்று அவர்களுடன் கொஞ்சம் அளவளாவி விட்டு விழாவுக்கு தயாரானோம்.நண்பர் வீட்டிலிருந்து ஒரு ஆட்டோவை பிடித்து அரங்கத்தினை சென்றடைந்தோம். சென்னையில் ஆட்டோ கட்டணம் மிகவும் மோசம். அநியாயத்துக்கு கேட்கிறார்கள்…..:(( அரங்கத்தின் உள்ளே சென்றவுடனேயே பார்ப்பவர்களிடமெல்லாம் அறிமுகம் செய்து கொண்டோம். திண்டுக்கல் தனபாலன் அவர்கள், புலவர் இராமாநுசம் ஐயா, சென்னை பித்தன் ஐயா, பழனி கந்தசாமி ஐயா, ஸ்கூல் பையன், கவியாழி கண்ணதாசன் அவர்கள், சேட்டைக்காரன் அவர்கள், மதுமதி அவர்கள், நுழைவாயிலில் நின்றிருந்த அகிலா, தென்றல் சசிகலா, எழில் அருள், அபயா அருணா ஆகியோர்….

மோகன்குமார் சார், கணேஷ் சார் ஆகியோரிடம் எனக்கு முன்பே அறிமுகம் உண்டு. ஆதலால் அவர்களிடம் நலம் விசாரிப்புபுலவர் ஐயா, கந்தசாமி ஐயா, சேட்டைக்காரன், மதுமதி ஆகியோரை என்னவருக்கு முன்பே அறிமுகம்…..:) அவர்களை அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எங்கள் பெயர்களை நுழைவாயிலில் பதிவு செய்து கொண்டு நானும் ரோஷ்ணியும் உள்ளே சென்று அமர்ந்தோம். காணாமல் போன கனவுகள் ராஜி வந்து அறிமுகம் செய்து கொண்டார். சிறிது நேரத்தில் பாட்டி சொல்லும் கதைகள் ருக்மணி சேஷசாயி பாட்டி வந்தார்கள். அவர்களை என்னவர் அறிமுகம் செய்து வைத்தார்.

அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா சிறப்பாக ஆரம்பமானது. சுரேகா அவர்களின் நேர்த்தியான நடையில் வரவேற்புரை, பதிவர்கள் அறிமுகம், சிறப்புரை, பாமரன் உரை என விழா தொடர்ந்து கொண்டு இருந்தது. ரமணி சார், ஜாக்கி சேகர் போன்று இடையிடையே நிறைய பேரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் என்னவர்.

ஜாக்கி சேகர் அவர்கள் நீங்க தானே பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் பற்றி விமர்சனம் எழுதியதுஎன்று கேட்டார். ஆமாங்க. இன்னும் கூட தொடர்ந்து அவரின் நாவல்களைத் தான் வாசித்து கொண்டிருக்கிறேன் என்றேன். மகிழ்ச்சி. நிறையப் படிங்க என்றார். நான் விமர்சனமாக எழுதுவதில்லை சார் என்றேன். பதிவு செய்ங்க அது தான் முக்கியம் என்றார். அமுதா கிருஷ்ணா அவர்கள் வந்து அறிமுகமானார்கள். பாமரன் அவர்களிடமும் அறிமுகமானோம். கோவை என்றதும் அட! நம்ம ஊர்காரங்கஎங்கே படித்தீர்கள்? எங்கு வசித்தீர்கள்? என்று மகிழ்ச்சிப் பொங்க விசாரித்தார்.

மதிய உணவுக்குப்பின் அங்கிருந்த புத்தக கடையில் தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் சாதனை அரசிகளும், கேபிள் சங்கர் அவர்களின் தெர்மக்கோல் தேவதைகளும், காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் இதுவரை வாசிக்காமல் போன அவர்களின் முதல் புத்தகமான காலச்சக்கரமும், இவைத் தவிர அன்று வெளியான சேட்டைக்காரன் அவர்களின் மொட்டைத்தலையும் முழங்காலும், மோகன்குமார் சாரின் வெற்றிக்கோடுகளும், சங்கவி அவர்களின் இதழில் எழுதிய கவிதைகளும் வாங்கிக் கொண்டோம்.

மதியம் ரஞ்சனிம்மாவை சந்தித்து நிறைய பேசிக் கொண்டோம். மதுமதி அவர்களின் ”90 டிகிரிகுறும்படத்தை பார்த்து மனம் கலங்கினோம். பாராட்டுகள் சார். அடுத்து புத்தக வெளியீட்டு விழாவும் இடையே ஆர்.வீ.எஸ், அநன்யா மகாதேவன், மாதங்கி மாலீ, எங்கள் ப்ளாக் கெளதமன் சார் ஆகியோரையும் சந்தித்தோம். இதில் ஆர்,வீ.எஸ் முன்பே அறிமுகமானவர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்தியுடன் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். விழாவில் கலந்து கொண்டு நிறைய பேரை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஏனோ அங்கிருந்து கிளம்பும் போது மனதில் இனி இடைவெளி விடாமல் நிறைய எழுதணும். அதுவும் உருப்படியாக எழுதணும்என்று தோன்றியது….:) பார்க்கலாம்

நண்பர் வீட்டுக்கு வந்து அரட்டை அடித்து விட்டு இரவு உணவை அங்கேயே முடித்து கொண்டு, எழும்பூருக்கு வந்து அதே மலைக்கோட்டை ரயிலை பிடித்து அதிகாலையில் ஸ்ரீரங்கத்துக்கு வந்தடைந்தோம்அடுத்த ஆண்டு விழாவில் சந்திப்போம் நண்பர்களே!


அனைவருக்கும் இனிய பொன் ஓணம் வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Tuesday, September 10, 2013

பண்டிகைகளும் நலம் விசாரிப்பும்!என்ன நட்புகளே! எல்லாரும் எப்படியிருக்கீங்க? பதிவுலகம் பக்கம் வந்து ஏறக்குறைய ஒரு மாதமாகி விட்டது. அப்பப்போ இப்படித் தான் ஆகி விடுகிறது. இனிமேலாவது தொடர்ந்து வலம் வரணும். என்னவரின் தமிழக வருகை, உறவினரின் திருமணம், பதிவர் திருவிழா, கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என பிஸியாக இருந்து விட்டேன். இதற்கிடையில் என் வலைப்பூவின் மூன்றாம் பிறந்தநாளும் சத்தமில்லாமல் முடிந்து விட்டது. சென்ற வருடம் ஸ்ரீரங்கத்துக்கு வந்து நெட் கனெக்‌ஷன் கிடைக்க தாமதமானதால் கொண்டாட முடியாமல் போய் விட்டது…..:) சரி விடுங்க! அடுத்த வருடம் தடபுடலா கொண்டாடிலாம்…..:)) நான்காம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நான் உங்க அனைவரின் ஆதரவை வேண்டுகிறேன்.

எங்க வீட்டில் எடுத்த பண்டிகை தினப் புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு….
சென்னைப் பயணத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சில இடங்களுக்கு சென்று வந்தோம். அவைப் பற்றி அடுத்தடுத்த பகிர்வுகளில்…… பயப்படாதீங்க! பயணத்தொடர் பெரிதாகவெல்லாம் இருக்காது….:)) என்னவருக்கும் எனக்கும் நடந்த பதிவுகள் பாகப் பிரிவினையில் சென்னை பயணத்தை எனக்காக பங்கீடு செய்து கொடுத்துவிட்டார்….:)) அதனால உங்க அனைவரின் வரவேற்பு இருந்தால் கொஞ்சமா எழுதலாம்னு நினைக்கிறேன்….:))நாளை மறுநாள் முதல் ரோஷ்ணிக்கு காலாண்டுத் தேர்வுகள் ஆரம்பமாக உள்ளது. நாம தான் அவங்கள விட டென்ஷனா இருப்போமே….:)) உங்க எல்லாரோட பதிவையும் நேரம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன்….

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.