Thursday, August 8, 2013

ஓரம் போ! ஓரம் போ!.......என்ன! தலைப்பை பார்த்ததும் நம்ம இளையராஜா சார் இசையில் வந்த ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருது”… அப்படின்னு பாடறீங்களா? நானும் அப்படித்தான் இப்போ பாடறேன்…..:)) ஆமாங்க, நான் இப்போ வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன். வெற்றி கண்டு விட்டேன். அந்த வித்தையை கற்றுக் கொள்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அது ஒரு பெரிய கதைவாங்க கதைக்குள் போவோம்…:))

சின்ன வயதில் அப்பா சைக்கிளை ஓட்டிப் பழக ஆசைப்பட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அப்பாவும், தம்பியும் (தம்பி முன்னரே கற்றுக் கொண்டு விட்டான்) பிடித்துக் கொள்ள ஓட்ட ஆரம்பித்தேன். ஒருநாள் ரோட்டில் விழுந்தும் விட்டேன். குவார்ட்டர்ஸில் உள்ளோர் முன்னிலையில் விழுந்ததில் எனக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது. விழுந்த வேகத்தில் கொலுசும் அறுந்து விட அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். பயமும், வெட்கமும் தொற்றிக் கொள்ள, மீண்டும் கற்றுக் கொள்ள மறுத்து விட்டேன். எவ்வளவோ பேர், ”உயரமாக இருப்பதால் திரும்பியும் விழவே மாட்டஎன்று எடுத்துச் சொன்னார்கள். ம்ம்ஹூம்! முடியாதுன்னா முடியாது தான்…:)

பள்ளிக்கு நடந்தே செல்வேன். பஸ் பாஸ் இருந்தாலும் நடராஜா சர்வீஸ் தான் எனக்கு பிடித்தது. கல்லூரிக்கும் பதினைந்து நிமிடங்கள் நடைக்கு பின் பேருந்து என…. இப்படியே போய் விட்டது. வேலைக்கு போகும் போதும் இரண்டு பேருந்துகள் மாற்றி என கோவை வாழ்க்கை இனிதாகவே இருந்தது.

திருமணமாகி தில்லி சென்ற பின் அங்கிருந்த டிராஃபிக்கில் டூ வீலர் ஓட்டுவது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அது போக வீட்டை விட்டு கீழே இறங்கினாலே ரிக்‌ஷாவாலா எங்கும் இருப்பர்ஓ! (BHA)பையா! இதர் தக் ஜானா ஹை! கித்னா சாஹியே! இப்படி கூப்பிட்டு எங்கள் ஏரியா முழுதும் சுற்றியிருக்கிறேன். விடுமுறைநாளில் குடும்பத்துடன் எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால் ஆட்டோ, மெட்ரோ, பஸ் என இப்படி சென்றது தில்லியில் என்னுடைய பத்து வருட வாழ்க்கை….

சென்ற வருடம் முதல் என் உடல்நிலை போன்ற சில பல காரணங்களுக்காக என் புகுந்த வீட்டினருடன் நானும் ரோஷ்ணியும் ஸ்ரீரங்கத்தில் வசிக்க ஆரம்பித்தோம். அப்போது தான் வண்டி ஓட்ட கற்றுக் கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று ஏங்க ஆரம்பித்தேன். அவசர தேவைக்கு தவிர மற்ற எல்லாமே வாங்க தெற்கு வாசலுக்கு தான் செல்ல வேண்டும். இங்கு அநேகமாக எல்லோருமே ஆரோக்கிய வாகனத்தை அதாங்க மிதிவண்டியைத் தான் பயன்படுத்துகின்றனர். இல்லையென்றால் டூ வீலர். நமக்குத் தான் இரண்டுமே தெரியாதேஅதனால் நடராஜா சர்வீஸ்.. முடியவில்லையென்றால் ஆட்டோ…:)

ஆட்டோவிலேயே செல்ல வேண்டுமென்றால், திருச்சியில் ஆட்டோக்காரர்களுக்கு நம் சொத்தையே எழுதி வைக்க வேண்டும். குறைந்த பட்சமே நாற்பது ரூபாய் தான்…:(( இனி சைக்கிள் ஓட்டினால் நன்றாக இருக்காது. அதனால் வண்டி ஓட்ட எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒரு சில சம்பவங்களாலும், குத்தல் பேச்சுக்களாலும் வெறியாக மாறியது…..:) இனியும் தாமதிக்கக்கூடாது என்று ஒரு டிரைவிங் ஸ்கூலில் கேட்டு சேர்ந்தேன். பத்து நாட்கள் வகுப்பு. காலையில் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளையும் அரக்க பரக்க முடித்துக் கொண்டு கிளம்பி ஓடினேன். கொடுமை என்னவென்றால் என் வகுப்புகள் நடந்ததும் தொலைவில் தான். காலையில் ஆட்டோவில் சென்று விட்டு வரும் போது கடைத்தெருவில் உள்ள வேலைகளையும் முடித்துக் கொண்டு வருவேன்.

வகுப்பு சேர்ந்த அன்று என்னிடம் முதலில் கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா? சைக்கிள் ஓட்டத் தெரியுமா? என்று தான்….:)) என்னுடைய பயிற்சியாளர் ஒரு இளம்பெண் தான். சைக்கிள் ஓட்டத் தெரியாதென்றால் கற்றுக் கொள்ள முடியாதா? என்றதற்கு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லைதெரிந்தால் சுலபமாக இருக்கும் அவ்வளவு தான் என்றார். முதல் வகுப்பே வண்டியை இரண்டு ரவுண்ட் தள்ளிக் கொண்டு வர வேண்டும். அடுத்து வண்டியில் உட்கார்ந்து கொண்டு காலால் நடப்பது போல் வண்டியை உந்தித் தள்ள வேண்டும். இப்படி வீர தீர சாகசத்தை பத்து நாட்களில் சிறப்பாக முடித்தேன்.

வீர தீர சாகசம் என்று சொல்லி விட்டு விழுப்புண்கள் இல்லா விட்டால் எப்படி….:)) ஆறாம் நாள் ஒரு மேட்டிலிருந்து கீழே இறங்கி வரும் போது கட்டுப்பாடு இல்லாமல் ஆட்டிக்குட்டிகளா! மாநகராட்சி குப்பைத் தொட்டியா என்ற விவாதத்தில் குப்பை தொட்டியே வெற்றி பெற்றது. நேராக படு வேகமாக கொண்டு விட்டு, விழுந்து, உடை கிழிந்து, காலில் ரத்தம் வந்து, கை முட்டியில் அடி என்று தப்பித்தேன். பத்தாம் நாளும் வண்டி என் கால் பாதம் மடக்கி இருக்கும் போது மேலே விழுந்ததில் நரம்பு சுருண்டு விட்டது போலஉதறி விட்டு இரண்டு ரவுண்ட் ஓட்டி விட்டு, பயிற்சியாளருக்கு நன்றி சொல்லி விட்டு லைசென்சுக்கு அப்ளை செய்வது பற்றி பேசி விட்டு, கடைத்தெருவில் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

மதியம் சாப்பிடும் போது தான் வலியே ஆரம்பித்தது. காலை அசைக்க முடியவில்லை. துடித்துப் போய் மாமியாரிடம் போனேன். பூண்டு, மிளகு உப்பு மூன்றையும் அரைத்து கிளறி சூட்டோடு பற்று போட்டார். சிறிது நேரத்துக்கு பின் வலி மெல்ல குறைய ஆரம்பித்தது. வீக்கமும் வற்றியது. உள் காயங்கள் இன்னும் உள்ளனஎப்படியோ விழுந்து வாரி கற்றுக் கொண்டு விட்டேன். அடுத்து காரும் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று மனங்கொள்ளாத ஆவல் உள்ளது. வாங்கும் போது சேர்ந்து கொள். மறந்து போகாது என்று சொல்லியுள்ளார் என்னவர்…:)

தினமும் பயிற்சியாளரிடம் கேட்பேன் கற்றுக் கொண்டு விடுவேனா?” என்று அவரும் பொறுமையாக, நிச்சயமாக நீங்க வண்டி ஓட்டுவீங்க….கவலையே வேண்டாம் என்பார். இதெல்லாம் பெரிய விஷயமா? இவ சொல்ல வந்துட்டான்னு நினைக்காதீங்கஎன்னை மாதிரி பயந்தாங்கொள்ளிக்கு, அதுவும் நடந்தாலே நாலு தடவை விழற எனக்கு, வண்டி ஓட்ட கற்றுக்கொள்ள வகுப்பில் சேர்ந்ததே மிகப்பெரிய விஷயம் இல்லையா….:)) நடுவில் கூட விட்டு விடுகிறேன், பயமாயிருக்குஎன்று என்னவரிடமும், பெண்ணிடமும் சொன்னேன். என்னம்மா ஸ்கூல் போற பொண்ணு மாதிரி அடம்பிடிக்கிறஎன்றாள்…..:))

என்ன! உங்களுக்கும் இது போல் அனுபவங்கள் இருந்தால் பகிருங்களேன்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


24 comments:

 1. டூ வீலர் ஓட்டிப் பழகியதற்கு முதலில் பாராட்டுக்கள்!

  //இதெல்லாம் பெரிய விஷயமா?// நிச்சயமாக இது ஒரு பெரிய விஷயம்தான்! நம்ம ஊர் டிராஃபிக்ல வண்டி ஓட்டுவது என்பதே ஒரு பிரம்மப் பிரயத்தனமாக அல்லவா இருக்கு? அதுவும், இத்தனை நாட்கள் கழித்து வெற்றிகரமாக பழகி இருக்கீங்களே, எல்லாராலும் அது கண்டிப்பாக முடியாது.

  நான் 6த் படிக்கும்போதே சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டுவிட்டேன். பிறகு +1, +2 வருகையில் டூ வீலரும் கத்துகிட்டாச்சு. அதிலும் இதுவரை(!) ஒரு வீரத்தழும்பு கூட கிடையாதாக்கும்! கோவையில் 4-வீலர் லைசென்ஸ் வாங்கியதுதான் ஒரு காமெடி ஸ்டோரி. அதைச் சொன்னால் இந்த கமெண்ட், பதிவு நீளத்துக்கு எகிறிடும். ஹிஹ்ஹி! ஆனால் யு.எஸ். வந்து நான் லைசென்ஸ் வாங்கிய கதைய 2 பதிவா எழுதிருக்கேனாக்கும்! ;) :)

  கரம்-சிரம்-புறம் எல்லாம் பத்திரமா பாத்து வண்டி ஓட்டுங்க. நினைச்ச இடத்துக்கு நினைச்ச நேரத்துக்கு போய் வரும் சுதந்திரம் கிடைப்பது டூ வீலர்லதானே! என்ஜாய்!

  ReplyDelete
 2. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 3. ”என்னம்மா ஸ்கூல் போற பொண்ணு மாதிரி அடம்பிடிக்கிற” என்றாள்…..:))

  நம்ம பொண்ணு கிட்டவாவது வீரத்தை மெயிண்ட்டன் செய்யவேண்டியிருக்கிறதே..!

  டூ வீலர் ஓட்டிப் பழகியதற்கு பாராட்டுக்கள்! வாழ்த்துகள்..!

  ReplyDelete
 4. நானும் சமீபத்தில் முதலில் சைக்கிளும் அப்புறம் டூ வீலரும் ஓட்டக்கத்துக்கிட்டேன். ரங்க்ஸ்தான் வாத்தியார். கத்துக்கும்போதே தத்தக்கா பித்தக்கான்னு ஓட்டி அபார்ட்மெண்ட் வாசலில் விழுந்தும் வைத்தேன். லேசான அடிதான்னாலும் ஏற்கனவே இருந்த கைவலி அதிகமானதுதான் மிச்சம். அதுக்குப் பயந்தே டூவீலர் வேண்டாம்ன்னுட்டேன். அதான் ஃபோர்வீலர் லைசென்ஸ் இருக்கே. என்னன்னா, அதையும் தனியா ஓட்ட ரங்க்ஸ் அனுமதிக்கிறதில்லை. பயம்+என்னுடைய பாதுகாப்பு :-))

  நீங்க ஓட்டக்கத்துக்கிட்டு பயமில்லாம கலக்குங்க. பாதுகாப்பா ஓட்டுங்க. வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. நீச்சலும் இரு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியையும்
  இளம் வயதிலேயே கற்றுக் கொள்வது சுலபம்
  வயதானபின் எனில் நிச்சயம்
  அதற்கொரு தனித் துணிச்சல் வேண்டும்
  பயின்றமைக்கும் அதனை அழகாகப் பகிர்ந்தமைக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வண்டி ஓட்டும் அவசரத்துல கூட குப்பைத்தொட்டியா?! ஆட்டுக்குட்டியான்னு பட்டிமன்றம் வச்சீங்க பாருங்க!! அங்க நிக்குறீங்க நீங்க!!

  ReplyDelete
 7. ஸ்ரீ ரங்கத்தைச் சுற்றி ரவுண்ட் அடிங்க!இப்ப ஸ்கூட்டில அப்புறம் காரில!

  ReplyDelete
 8. விழுவது எழுவதற்கே என்பதை மறக்க வேண்டாம்.

  இதைப்பற்றி மேலும் விபரங்களுக்கு:

  http://gopu1949.blogspot.in/2013/06/11.html

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. அடடா..சுவாரஸ்யமான அனுபவமாக உள்ளது ஆதி...என்ன செய்வது எனக்கும் கற்றுக்கொண்டு விழுந்து வைத்த அனுபவம் உணடுதான்.ஆனால் வெற்றிகண்டதில்லை.வெற்றி கிட்டியதும் பதிவெழுதுகிறேன்:)

  ReplyDelete
 10. சிறுவயதில் சைக்கிள் கற்றுக் கொண்ட என் அனுபவத்தை நினைவு படுத்தியது பதிவு.

  ReplyDelete
 11. ஹாஹா, எனக்கெல்லாம் அப்பா அனுமதிச்சிருந்தால் ஸ்கூட்டரே ஓட்டக் கத்துட்டு இருக்கலாம். எங்கே! வில்லன் மாதிரி அப்பா எல்லாத்துக்கும் குறுக்கே வந்துடுவார். :))) அந்த ஆசையை எங்க குழந்தைகளிடம் தீர்த்துக் கொண்டேன். பொண்ணு பத்து வயசிலேயே நல்லா சைகிள் ஓட்ட ஆரம்பிச்சுட்டா. அவளைப் பார்த்தே பையர் குரங்கு பெடல் போட்டே தானே சைகிள் கத்துக் கொண்டு 2 ஆம் வகுப்பிலேயே சைகிளில் சவாரி ஆரம்பிச்சுட்டார். அவரும் அந்த வயசுக்கு நல்ல உயரம். :)))) பத்தாவது படிக்கையிலே பள்ளியிலே சின்ன க்ளாஸ் குழந்தைங்க எல்லாம் அங்கிள் னு கூப்பிட ஆரம்பிக்கவே, ஜிம்முக்குப் போய் உயரத்தை நிலை நிறுத்திட்ட்டார். :)))))

  ReplyDelete
 12. வாழ்த்துகள். லைசென்ஸ் கிடைச்சுடுச்சா?

  ReplyDelete
 13. ஜி+ இலே போட்டால் பார்க்க வசதியா இருக்கு. இல்லைனா தெரியறதில்லை. :)))) டாஷ் போர்டிலே அப்டேட் ஆகிறதே இல்லை.

  ReplyDelete
 14. // ஆட்டோவிலேயே செல்ல வேண்டுமென்றால், திருச்சியில் ஆட்டோக்காரர்களுக்கு நம் சொத்தையே எழுதி வைக்க வேண்டும். குறைந்த பட்சமே நாற்பது ரூபாய் தான்… //

  திருச்சிக்காரர்கள் மனநிலையை அப்படியே பிரதிபலித்த வரிகள். நானும் ஆட்டோவும் என்று தொடர் பதிவே போடலாம்.

  // ஆமாங்க, நான் இப்போ வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன். வெற்றி கண்டு விட்டேன். //

  முதல் பாராவில் சொன்ன இந்த வரிகளுக்கு, நீங்கள் என்ன வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டீர்கள என்று கடைசிவரை
  சொல்லவே இல்லையே. வாழ்த்துக்கள், கார் ஓட்டக் கற்றுக் கொள்ள.

  ReplyDelete
 15. வண்டி ஓட்ட கற்றுக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. இதுக்கு பேசாம நீங்க டூவீலருக்கு ஒரு டிரைவர் வச்சிக்கிரலாம் :-))))

  ReplyDelete
 17. இங்கு அநேகமாக எல்லோருமே ஆரோக்கிய வாகனத்தை அதாங்க மிதிவண்டியைத் தான் பயன்படுத்துகின்றனர். //

  மிதிவண்டி உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பது உண்மைதான்.

  வண்டி ஓட்ட கற்றுக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்.

  நானும் சைக்கிள் கற்றுக் கொண்டேன். அடி படாமல் வாடகை சைக்கிள் கடையில் கொண்டு கொடுத்து வரும் வரை துணை இல்லாமல் போய் வந்தேன். அப்பா வாங்கி கொடுத்து இருந்தால் தொடர்ந்து ஓட்டி இருப்பேன். அப்பா வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றி விட்டார்கள். கண்வர் கார் ஓட்ட கற்றுத் தருகிறேன் என்று சொல்லி விட்டு இப்போது உனக்கு ஏன் டென்சன் என்கிறார்கள்.
  கார் ஓட்டவும் கற்றுக் கொள்ளுங்கள்.
  யாரையும் எதிர்ப்பார்க்காமல் நினைத்தவுடன். நினைத்த இடத்திற்கு செல்ல டூவீலர் தான் நல்லது.
  கவனமாய், மெதுவாய் வண்டி ஓட்டுங்கள்.
  ரோஷ்ணிக்கு ஜாலிதான் அம்மா வண்டி ஓட்டுவது.

  ReplyDelete
 18. வண்டி ஓட்ட கற்றுக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்.
  நல்லதொரு பகிர்வு!

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. வெற்றிகரமாக டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொண்டதற்கு வாழ்த்துக்கள். விழுந்து எழுந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். விழுப்புண் இல்லாமல் ஒரு வீர தீர செயலைச் செய்ய முடியுமா?

  ReplyDelete
 21. வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல....

  தமிழ் இளங்கோ ஐயா- நான் ஓட்டக் கற்றுக் கொண்டது ஸ்கூட்டி தான். சில நாட்கள் TVS EXCELம் ஓட்டினேன்.

  ReplyDelete
 22. வண்டி ஓட்ட கற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகள். இனிமேல் அம்மாவும் மகளும் ஜாலியாக பயணம் செய்யலாம்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…