Monday, August 5, 2013

பயணிகள் கவனிக்கவும்!பரபரப்பான மீனம்பாக்கம் விமான நிலையம். விடிகாலையில் வந்திறங்க வேண்டிய கஜராஜ்என்கிற சிலோன் ராணுவ விமானத்தின் விமானியிடம் தரையிறங்குவதற்கு வேண்டிய தகவல்களை தந்து கொண்டிருக்கிறார் ஸ்டீபன் மனோகரன் இஸ்ரேல். விமானம் தரையைத் தொடும் நேரத்தில் ரன்வேயில் ஒரு இளைஞர் கையில் எதையோ வைத்துக் கொண்டு கைகளை ஆட்ட, விமானம் மீண்டும் வானிலேயே சீறிப் பாய்கிறது. காரணம் என்னவென்று ஒன்றும் புரியாமல் ரன்வேயை பார்த்தால் புல் வெட்ட கத்தியுடன் வந்த இளைஞன் தெரிய, பரபரப்பான செக்யூரிட்டியும், போலீஸும் இளைஞனை தாக்க ஸ்டீபனுக்கு தகவல்களை சரியாக தராத காரணத்திற்காக மெமோ தரப்படுகிறது.

இப்படியாகத் தான் ஆரம்பிக்கிறது பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும்நாவல். விமான நிலையமும், அதைச் சுற்றியுள்ள குவார்ட்டர்ஸில் உள்ள மனிதர்களும் தான் கதை முழுவதும் வியாபித்திருக்கிறார்கள். இங்கு தான் சத்திய நாராயணன் என்கிற இளைஞனுக்கும் ஜார்ஜினா என்கிற பெண்ணுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஜார்ஜினா ஒரு இளம் விதவை. கணவன் வின்செண்ட்டுடன் ஆறு மாதம் அழகாக குடித்தனம் செய்து கொண்டிருந்த வாழ்க்கையில் சூறாவளியாக, விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் வின்செண்ட் இறந்து போக, ஆறு மாத கர்ப்பவதியாக கதறி துடிக்கிறாள். அவர்களுக்கு கிடைத்தது வின்செண்ட்டின் க்யூட்டெக்ஸ்வைத்திருந்த வலது கால் மட்டுமே.

குழந்தை பிறந்து ஒரு சில வருடங்களில் ஜார்ஜினாவுக்கு விமான நிலையத்திலேயே வேலை கிடைக்க, நான்கு வயது மகன் செல்வாவுடன் அம்மா வீட்டில் இருக்கிறாள். வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் வின்செண்ட்டின் ஆருயிர் நண்பன் சத்திய நாராயணன் என்கிற சத்தியை பற்றி உடன் வேலை செய்பவர்கள் மூலம் தெரிந்து கொள்கிறாள். வின்செண்ட் இறந்த அன்று முதல் அவன் யாருடனும் பேசாமல் இருப்பதாகவும், தான் தான் அவன் இறந்து போக காரணம் என்றும் சொல்லிக் கொண்டிருப்பதாகவும், தற்கொலைக்கும் முயன்றதாகவும் சொல்ல அவன் மேல் இரக்கமும், ஆர்வமும் மேலிட அவனுடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கிறது.

அதே போல் ஜார்ஜினாவுக்கு பணியில் சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனை வந்த போது திடுக்கிட்டு பதறுகிறான் சத்தி. பழகும் சமயத்தில் அவனிடமிருக்கும் மனக்குறைகளை பகிரச் சொல்கிறாள். சத்தி முன்பு ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த காதல் மயக்கத்தில் தான் பணியாற்ற வேண்டிய ஷிஃப்டையும் வின்செண்ட்டை வேலை செய்யச் சொல்ல, அன்று தான் குண்டு வெடித்து வின்செண்ட் இறந்து போக, ”வினுப்பா, வினுப்பாஎன்று கர்ப்பிணியான ஜார்ஜினா கதறியதும் மனதை வாட்ட தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். இதை தெரிந்து கொண்ட காதலி கோழைக்கு வாழ்க்கைப்பட தனக்கு விருப்பமில்லை என்று உதறியிருக்கிறாள். மனதை அழுத்திக் கொண்டிருந்த விஷயங்களை ஜார்ஜினாவிடம் பகிர்ந்து கொண்ட சத்தி, செல்வாவிடமும் அக்கறையுடன் நடந்து கொண்டு, தான் செல்வாவுக்கு அப்பாவாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லி, இப்படியாக இவர்களிடையே காதல் மலருகிறது.

ஜார்ஜினாவின் மகன் செல்வாவும் சத்தியுடன் நன்றாக ஒட்டிக் கொள்ள, பெற்றோரிடம் சம்மதம் கேட்கின்றனர். சத்தியின் அப்பா விதவை மறுமணத்தை ஆதரித்து ஜார்ஜினாவை வாழ்த்தினாலும் தன்னுடையை குடும்பத்தில் ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று சொல்லி இவர்களின் திருமணத்துக்கு பச்சைக் கொடி காட்டி மருமகளுக்காக வைத்திருந்த ஆறு பவுன் இரட்டை வட சங்கிலியை ஜார்ஜினாவுக்கு பரிசளிக்கிறார். ஜார்ஜினாவின் வீட்டிலும் சில வாக்கு வாதங்களுக்குப் பிறகு பச்சைக் கொடி காட்ட, அடுத்து இவர்கள் சென்றது வின்செண்ட்டின் அப்பா வீட்டுக்கு. இங்கு தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

முதலில் மறுமணத்தை எதிர்த்து ஜார்ஜினாவை கேள்விக் கணைகளால் துளைத்து, பின்பு இவர்களுக்கென்று குழந்தை பிறந்தால் அது என்ன மதமாக இருக்கும்? அப்போது செல்வாவின் நிலை என்ன? சத்தி மதம் மாறினால் தான் இந்த மறுமணம் ஒத்து வரும் என்றும், மறுத்தால் பேரனை தன்னிடம் விட வேண்டி வரும் என்றும் சொல்லஜார்ஜினா தடுமாறுகிறாள். சத்தியை மதம் மாறுகிறீர்களா? என்று சொல்ல அவன் இவருக்காக பயந்து மதம் மாற எனக்கு மனதில்லை. எனக்காக தோன்றி மதம் மாறினால் தான் உங்கள் மதத்துக்கும் நன்றாக இருக்கும் என்று சொல்லி விட்டான். இப்போது தான் இவர்களின் காதல் எங்கே கைகூடாமல் போய்விடுமோ என்று பதட்டம் வந்தது.

பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜார்ஜினாவை வற்புறுத்தாமல் செல்வாவுக்கு மட்டுமே தான் தகப்பனாக இருந்தால் போதும் என்று நினைத்து ஜார்ஜினாவுக்கு தெரியாமல் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டு வருகிறான். இவர்களின் திருமணம் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெறுகிறது. அதன் பின்பு தான் ஜார்ஜினாவுக்கு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை குறித்துக் கூறி நெகிழ வைக்கிறான். இப்படியாக இந்த கதை சிறப்பாக இருந்தது.

ஆரம்பத்தில் விமானம் ரன்வேயில் சிறிது தூரம் சென்று மேலே பறப்பது போல் கதை சூடுபிடிக்க சற்று தாமதமானாலும், பின்பு விறுவிறுப்பாக காதல் கதை சூடுபிடிக்கிறது. பள்ளி விடுமுறைநாளில் அப்போது கோவை விமான நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மாமா ரேடார் மூலம் விமானியுடன் பேசுவது, தகவல்களை தருவது, டேக் ஆஃப், லேண்டிங் அனைத்தும் பார்த்திருக்கிறேன். அதனால் கதையில் வரும் விமான நிலையத்தில் உள்ள விஷயங்கள் கண் முன்னே விரிந்தது.

பாலகுமாரனின் கதை நாயகர்கள் யாவரும் பெண்ணைப் போற்றுபவர்களாக, ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள். பெண்ணின் மனநிலையையும், பிரச்சனைகளையும், வலிகளையும் புரிந்து கொண்டு நடக்கிறார்கள்.

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

விசா பப்ளிகேஷன்ஸ்
55, வெங்கட்நாராயணா சாலை
தி.நகர், சென்னை – 600017.
மொத்த பக்கங்கள் – 448
1995 பதிப்பின் படி அப்போதைய விலை ரூ 70

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


16 comments:

 1. கதையைப் படிக்கும்போது ஒரு ஆங்கில நாவலைத் தழுவி எழுதப்பட்டது போல் தோன்றுகிறது.... விறுவிறுப்பு இருப்பின் படிக்கலாம்.... நன்றி..

  ReplyDelete
 2. விமான நிலையத்தில் உள்ள விஷயங்கள் கண் முன்னே விரிந்தது.

  அருமையான புத்தகப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 3. அன்பின் ஆதிவெங்கட் அவர்களுக்கு...

  தற்செயலாக இந்த வலைபூவை கண்டேன்..முக்கியமாக பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் நாவல் தலைப்பை பார்த்த உடன் உள்ளே வந்து வாசித்தேன்..

  இந்த புத்தகத்தை எத்தனை முறை வாசித்து இருப்பேன் என்று எனக்கு தெரியாது.. ஆனால் எல்லா வரிகளும் அத்துப்படி....

  சென்னை வந்த போது பரங்கிமலையும், விமான நிலையத்தையும் பார்க்கும் போது அங்கே நடக்கும் ஆண் பெண்களை பார்க்கும் போது, ஜார்ஜியானா, சக்தி கேரக்டர்கள் போலவே என் கண்ணுக்கு தெரியும்....

  பாலகுமாரனை இந்த நாவல் மூலம்தான் நான் வாசிக்க ஆரம்பித்தேன்.. அதன் பிறகு 70 சதவீகித நாவல்கள் வாசித்து விட்டேன் என்று எண்ணுகின்றேன்..

  நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.. ஆனால் கிளைமாக்சையை சேர்த்து எழுதி இருக்கின்றீர்கள்... அதை தவிர்த்து இருக்கலாம்.

  எனக்கு இந்த கதையில் ஜார்ஜியானா வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் மேஜர் சுபேதார் சின்னசாமி, கேரக்டர் எனக்கு பிடித்த கேரக்டர்..


  ஜர்ஜியானாவுக்கு கல்யாணம் நடக்க பவுன் பிரச்சனையால் தடை பட.. பக்கத்து நிலததை விற்று நகை வாங்க பணம் கொடுத்து, திருமண தம்பதிகளுக்கு கறி சோறு போட்டு ஜமாய்ப்பார்..சின்னசாமி...ஏனோ எனக்கு அந்த வரிகளை வாசிக்கையில் நெகிழ்ச்சியாகவும் கண்களில் நீர் கசியும்...

  ஒரு விமான நிலையத்தின் பிரச்சனைகளை அவர்கள் சதிக்கும் இடர்களை பாலா அழகாக விளக்கி இருப்பார்...

  ரொம்ப நாள் கழித்து மிக விரிவாய் ஒரு பின்னுட்டம்... நானும் ஜாக்கிசேகர் என்று ஒரு தளம் வைத்து இருக்கின்றேன்... அதில் புத்தக விமர்சனம் எழுதும் போது முதல் புத்தக விமர்சனமாய் இந்த புத்தகத்தை என் தளத்தில் எழுத வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருந்தேன்..

  பட் என்னால் எழுத முடியவில்லை... விரைவில் எழுதுவேன்.. வரிவாய்...

  இந்த புததகம்தான் எனக்கு பாலாவின் அறிமுகம்... பட் இன்று நான் எழுத அவரே காரணம் ... நான் உருப்பட அவர்காரணம்... நான் முன்னேற அவர் காரணம்... நான் நேசித்த புத்தகத்தை இங்கே நீங்கள் எழுதியதை பார்த்து மிகவும் சந்தோஷம் கொண்டேன்.  பாலகுமாரன் பற்றி நான் எழுதிய பதிவு.

  http://www.jackiesekar.com/2011/03/blog-post.html


  பிரியங்களுடன்
  ஜாக்கிசேகர்.

  ReplyDelete
 4. பாலகுமாரனின் நாவல் போலவே விறுவிறுப்பா இருந்தது விமர்சனம்..

  ReplyDelete
 5. விடிகாலையில் வந்திறங்க வேண்டிய ”கஜராஜ்” என்கிற சிலோன் ராணுவ விமானத்தின் விமானியிடம்//

  கஜராஜ் விமானம்... சிலோன் விமானபடை விமானம் அல்ல... அது இந்திய விமான படை விமானம்.. சிலோனுக்கு போய் அங்கே அடிபட்ட ராணுவ தளவாடங்களை ஏற்றிக்கொண்டு வரும் விமானம்.,...விமானி பெயர் கூட குப்தா என்று நினைக்கின்றேன்..

  ReplyDelete
 6. விறுவிறுப்பான விமர்சனத்திற்கு நன்றிகள்.

  ReplyDelete
 7. அருமையான விமர்சனம்
  ஜாக்கி சேகரின் பின்னூட்டம்
  தங்கள் பதிவுக்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. இந்த முறை சென்னையிலிருந்து திரும்பி வரும்போது இந்தப் புத்தகத்தைத்தான் படித்துக் கொண்டு வந்தேன். தொடராக வந்தபோது வாசித்தது. இப்போது திரும்பவும் படிக்கும்போது இன்னும் ரசிக்க முடிந்தது.

  எப்போதும் முடிவைச் சொல்லமாட்டீர்களே, ஏன் இந்த முறை சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டே பின்னூட்டங்களை வாசித்தபோது திரு ஜாக்கிசேகரும் அதையே சொல்லியிருக்கிறார்.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 9. எதிர்பாராத முடிவுதான்.அருமையான பகிர்வு

  ReplyDelete
 10. நல்லதொரு கதையைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றி...
  இணையத்தில் தேடி படிக்க முயற்சிக்கிறேன்..

  ReplyDelete
 11. சிலபல வருடங்களுக்கு முன் படித்த கதைகளை மீண்டும் நினைவுபடுத்துகின்றன உங்கள் பதிவுகள். என் அண்ணன் ஒருவர் சாண்டில்யன், அகிலன், பாலகுமாரன் இவர்களின் பலமான விசிறி! அவரிடம் ஒரு லைப்ரரி வைக்கும் அளவுக்கு இவர்களின் புத்தகங்கள் இருந்தன. பாலகுமாரன் கதைகள் நிறையப் படித்திருப்பேன் என நினைக்கிறேன். சமீப காலமாகத்தான் அவரின் கதைகள் படிப்பதில்லை.

  இணையத்தில் இந்தக் கதைகள் கிடைக்குமா என தேடிப் பார்க்கவில்லை. நீங்கள் அனுபவித்துப் படித்து விமர்சனமும் தருகிறீர்கள், கொஞ்சம் காதில் புகை வந்தாலும் சந்தோஷமாகவே இருக்கு! ;)

  //சே. குமார் said...
  நல்லதொரு கதையைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றி...
  இணையத்தில் தேடி படிக்க முயற்சிக்கிறேன்..// இணையத்தில் கிடைத்தால் லிங்கை எங்களுடனும் பகிர்ந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் திரு. குமார்! அட்வான்ஸாக இப்பவே நன்றி சொல்லிக்கிறேன்! :)

  ReplyDelete
 12. பாலகுமாரனின் இந்த கதை படித்து இருக்கிறேன்.வீட்டில் இந்த கதை தொகுப்பு இருக்கிறது.
  நீங்கள் அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள் ஆதி.
  முடிவை மறந்து போய் சொல்லி விட்டீர்களோ!

  ReplyDelete
 13. வாங்க ஸ்கூல்பையன்,

  விறுவிறுப்பு இருக்கிறது வாங்கிப் படிங்க. நன்றிங்க.

  வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  நன்றி.

  வாங்க ஜாக்கிசேகர் சார்,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  //நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.. ஆனால் கிளைமாக்சையை சேர்த்து எழுதி இருக்கின்றீர்கள்... அதை தவிர்த்து இருக்கலாம்.//

  பெரும்பாலும் முடிவை நான் சொல்வதில்லை. ஆனால் ஒரு சில கதைகளின் முடிவைச் சொன்னால், அது அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க தூண்டுபவையாக இருக்கும் என்று நினைத்து வெளியிடுவேன். இனி மாற்றிக் கொள்கிறேன். நன்றி.

  தங்களது பதிவையும் வந்து படிக்கிறேன்.

  வாங்க அமைதிச்சாரல்,

  நன்றிங்க.

  வாங்க ஜாக்கிசேகர் சார்,

  //கஜராஜ் விமானம்... சிலோன் விமானபடை விமானம் அல்ல... அது இந்திய விமான படை விமானம்.. சிலோனுக்கு போய் அங்கே அடிபட்ட ராணுவ தளவாடங்களை ஏற்றிக்கொண்டு வரும் விமானம்.,...விமானி பெயர் கூட குப்தா என்று நினைக்கின்றேன்..//

  தங்களின் நினைவாற்றல் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. நன்றி தவறைச் சுட்டி காட்டியமைக்கு.

  வாங்க வை.கோ சார்,

  நன்றி.

  வாங்க ரமணி சார்,

  நன்றி. தமிழ்மண வாக்குகளுக்கும்...

  வாங்க ரஞ்சனிம்மா,

  தாங்களும் சமீபத்தில் மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி. நன்றி.

  வாங்க சென்னை பித்தன் சார்,

  நன்றி.

  வாங்க சே.குமார்,

  நன்றி. இணையத்தில் கிடைத்தால் இங்கு சுட்டி கொடுங்கள். மஹி அவர்களும் கேட்டிருக்கிறார் பாருங்கள்.

  வாங்க மஹி,

  நான் படிக்கும் இந்த புத்தகங்கள் அனைத்துமே என் கணவர் வாசித்து குவித்தவை தான். இப்போது தான் எனக்கு ஞானோதயம் வந்து பாலகுமாரனின் புத்தகங்களை தொடர்ந்து ப்டித்து வருகிறேன். தற்போது அவரின் சுயசரிதமான ”முன்கதை சுருக்கம்” வாசித்து கொண்டு இருக்கிறேன்.

  புகை வந்தாலும் சந்தோஷப்படுகிற தங்களுக்கு மிக்க நன்றி...:))

  வாங்க கோமதிம்மா,

  நன்றிம்மா. முடிவைச் சொன்னால் எல்லோருக்கும் வாங்கி படிக்கும் ஆர்வம் மேலிடும் என்று நினைத்தேன்...:)  ReplyDelete
 14. விறுவிறுப்பான ஒரு நாவலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!! வாங்கி படிச்சுட வேண்டியதுதான்!!

  ReplyDelete
 15. ராஜி - நன்றிங்க. படித்துப் பாருங்கள்..

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…