Thursday, August 15, 2013

கதம்பம் – 17

அதிர்ச்சி உண்டாக்கிய செய்தி:-

சென்ற வாரத்தில் ஒருநாள் எங்கள் பால்காரர் மிகுந்த கவலையுடன் எனக்கு தெரிவித்த செய்தி இது. பள்ளி சிறுவர் சிறுமிகளை அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், ஒரு கடைக்கு பக்கத்தில் நிறுத்தி விட்டு ஆட்டோவில் உள்ள குழந்தைகளிடம் பத்து ரூபாயைத் தந்து ஏதேனும் சாக்லேட் வாங்கித் தின்னுங்கள் என்று தர, அவர்களும் இறங்கி வாங்க எத்தனிக்க அதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவளும் இறங்க முயற்சித்திருக்கிறாள். அவளை மட்டும் நீ இங்கேயே இருஎன்று சொல்லி அக்குழந்தையிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார். வீட்டிற்கு வந்த பெண் தன் அம்மாவிடம் சொல்லி அழ, அந்த ஆட்டோ ஓட்டுனரை அந்த ஏரியாக்காரர்கள் அனைவரும் சேர்ந்து வெளுத்து எடுத்திருக்கிறார்கள். காவல் துறையிடம் சென்றால் அந்த பெண்ணையும் வரச் சொல்லி பெரிய விவகாரம் ஆகி விடும் என்று விட்டுள்ளனர். அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு வீட்டில் வயதுக்கு வந்த இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றார்களாம்இப்படிப்பட்ட மிருகங்களின் அராஜகங்கள் எங்கேனும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன….:( இதற்கு விடிவுகாலம் தான் ஏது?

மயில் நடனம்:-

இரண்டு நாட்களுக்கு முன்பு மாலையில் கோவிலுக்கு சென்றிருந்தேன். சக்கரத்தாழ்வாரை பிரதட்சணம் செய்யலாம் என்று ஸ்லோகத்தை மனதில் சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தால் அங்கு வந்திருந்த மக்கள் அனைவரும் சக்கரத்தாழ்வாரை அம்போன்னு விட்டு, ஜன்னல் வழியே எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். சரி சக்கரத்தாழ்வார் காத்திருப்பார், அங்கு என்ன நடக்கிறது என பார்த்தேன். ஆண் மயில், பெண் மயில் என இரண்டும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தன. எப்போதுமே இங்கு இருப்பவை தான். தேமேன்னு நெல் மணிகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும். இன்று ஆண் மயில் தோகையை விரித்துக் கொண்டு ஆடியது. கண் கொள்ளா காட்சி. திடீரென்று அது திரும்பிக் கொள்ள, மக்கள் பெருமாளே திரும்புடாப்பா, திரும்புடாப்பாஎன்று சொல்லிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு முறை தரிசனம்…. செல்போனில் எல்லோரும் க்ளிக்கோ, க்ளிக் தான்….:) ஒரு வழியாக கண்களை அங்கிருந்து விடாப்பிடியாக அகற்றி விட்டு சுவாமியை தரிசித்து விட்டு வெளியே வந்தேன். அன்று என்ன விசேஷம் என்று தெரியவில்லைபெருமாள் அன்ன வாகனத்தில் புறப்பாடு ஆனார். ரங்கா எல்லோரையும் காப்பாற்றுஎன்று வேண்டிக் கொண்டு நடந்தேன்.

பூண்டு பீலர்:-எங்கள் குடியிருப்பில் ஒருவர் VEGETABLE CUTTER, CHOPER, SLICER, PEELER, APPLE CUTTER முதலியவை கொண்டு வந்து செய்முறை காட்டி அனைவரையும் கவர்ந்து கொண்டிருந்தார். உபயோகமான பொருளாக இருந்ததால் ஒவ்வொருவராக வாங்கிக் கொண்டிருந்தனர். முதல் வாரம் நமக்குத் தேவையா? ஏன் வாங்க வேண்டும்என்று விட்டு விட்டேன். அப்புறம் வாங்கியவர்கள் நன்றாக உள்ளதாக சொல்லவும், எங்க வீட்டு வாண்டும் அடம் பிடிக்கவும் வாங்கிக் கொண்டேன். அதில் GARLIC PEELERம் விற்றுக் கொண்டிருந்தார். விலை நாற்பது எனச் சொல்லவும் வாங்கிக் கொண்டேன். பூண்டு உரிப்பது கொஞ்சம் கடினமான வேலை தான்…:) நகக்கணுக்குள் வேறு சென்று சில நேரம் வலிக்கும்விஞ்ஞானம் எப்படியெல்லாம் முன்னேறி விட்டது பாருங்கள். சின்ன ரப்பர் ட்யூப் போல் உள்ள இதற்குள் பூண்டை போட்டு சப்பாத்தி குழவியை உருட்டுவது போல் மேடை மேல் வைத்து தேய்த்தால் பூண்டு தனியாக, தோல் தனியாக வந்து விடுகிறது.

சூப்பர் பாட்டி:-

எங்க டிரைவிங் ஸ்கூல் பயிற்சியாளர் ஒருநாள் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயம் இதுஅவரிடம் 74 வயதான பாட்டி ஒருவர் டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாராம். கோவையில் உள்ள தன் மகள் வீட்டுக்கு சென்று தங்கும் போது அங்குள்ள கோவில்களுக்கு சென்று வர வேண்டுமாம். ஆட்டோக்காரருக்கு கொடுத்து கட்டுப்படியாகாது, சீக்கிரம் வண்டி ஓட்டக் கற்றுக் கொள் என்றாராம் மகள். இந்த வயதில் எப்படி பாட்டி ஓட்டுவீங்க? லைசென்ஸ் வாங்குவதும் கடினம் என்றாராம் பயிற்சியாளர். என்னை உன் பாட்டியா நினைச்சுக்கோகற்றுக் கொடு என்று அடமாம். சீக்கிரமே டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொண்டு இவரிடமே பழைய வண்டி ஒன்று வாங்கித் தர ஏற்பாடு செய்து வாங்கி ஓட்டினாராம். கோவையில் மகள் வீட்டிலும் மகளின் வண்டியில் சவாரி செய்தாராம். அதோடு விட வில்லைகாரும் ஓட்டக் கற்றுக் கொண்டாராம். எனக்கு வாகனம் ஓட்ட தன்னம்பிக்கை தந்த விஷயம் இது!

திண்ணைக் கச்சேரி:-

என் மகளை வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ள வகுப்பில் சேர்த்திருக்கிறேன். வகுப்புக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு அங்கேயே திண்ணையில் அமர்ந்திருப்பேன். என்னைப் போல் விட வரும் அம்மாக்கள் சிலருடன் திண்ணைக் கச்சேரி அவ்வப்போது நடக்கும். என்னைத் தவிர வரும் அம்மாக்கள் எல்லோருமே ஸ்கூட்டியில் கொண்டு விட்டு விட்டு போய் விடுவார்கள். ஒரு மணி நேரம் கழித்து வந்து அழைத்துச் செல்வார்கள். நான் மட்டும் மீண்டும் நடந்து வீட்டுக்கு போய் வர அலுத்து, அங்கேயே உட்கார்ந்து கொள்வேன். நான் ஸ்கூட்டி ஓட்ட வெறியாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். முதலில் பொழுது போக புத்தகங்களை எடுத்துச் சென்றேன். இது படிப்ஸ் போலஎன்று யாருமே பேசவில்லை…. :) அப்புறம் புத்தகம் எடுத்துச் செல்வதை விட்டு விட்டேன். சில நாட்கள் கோவிலுக்கு சென்று விட்டு அப்படியே பழங்கள் முதலியவற்றை வாங்கி வருவேன். இல்லையென்றால் திண்ணையில் உட்கார்ந்து செல்ப்போனில் கேம்ஸ் தான்….:)

ரோஷ்ணி கார்னர்:-

அம்மா ஆக்சிலேட்டரை மெதுவாக கொடுக்க வேண்டும். ப்ரேக்கில் எப்போதும் கை வைத்துக் கொள்என்று ஏகப்பட்ட அறிவுரை ரோஷ்ணியிடமிருந்து….. எப்படி கண்ணா உனக்கு இதெல்லாம் தெரியும்என்றால்….. எனக்கு எப்பவோ தெரியும். இதெல்லாம் ரொம்ப ஈசி என்கிறாள்!!!! இப்ப இருக்கற குழந்தைங்க எல்லாருமே ரொம்ப விவரமாத் தான் இருக்கறாங்க…:))

அப்பாவின் வருகை குறித்து ரோஷ்ணி இப்போது பயங்கர குஷியாக இருக்கிறாள். தினமும் காலையில் எழுந்திருக்கும் போதே அம்மா அப்பா வர இன்னும் ஒரு வாரம் தான் இருக்குநாலு நாட்கள் தான் இருக்குஹைய்யா! ஜாலி என்று ஆட்டம் தான்….:)) குஷியாக இருப்பது அவள் மட்டுமல்ல.. என்று உங்களுக்கு நான் சொல்லவும் வேண்டுமோ……:))

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.....மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


25 comments:

 1. இன்றையக் கதம்பம் சூப்பர்.

  முதல் நிகழ்ச்சி ரொம்ப அதிர்ச்சி:( இப்படியாக் காஞ்சு கிடக்குறானுங்க :( ச்சீ.....

  மயில் டான்ஸை நீங்க க்ளிக்கலையா?


  பூண்டு பீலர் நாற்பது ரூ தானா? விடாதீங்க. இங்கே சிலிகானில் செஞ்சது அஞ்சு டாலர்.

  திண்ணையில் உக்கார்ந்தபடி நீங்களும் கத்துக்கலாமேப்பா.

  ட்ரைவிங் தெரிஞ்சுக்கறது ஒரு வாழ்க்கைப் படிப்பு. விட்டுடாதீங்க,

  ரோஷ்ணி கார்னர் வழக்கம்போல் ஹிட் :-))))

  ReplyDelete
 2. பூண்டு பீலரா..வாவ்..அது என்ன பிராண்ட்?எந்த ஊரில் வாங்கினீரக்ள்?

  ReplyDelete
 3. இப்ப இருக்கற குழந்தைங்க எல்லாருமே ரொம்ப விவரமாத் தான் இருக்கறாங்க…//உண்மைதான்

  ReplyDelete
 4. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.....

  ஆண் மயில் தோகையை விரித்துக் கொண்டு ஆடியது. கண் கொள்ளா காட்சி...!

  ReplyDelete
 5. அந்த ஆட்டோக்காரனை விட்டது தப்பு. இழுத்து உதைத்திருக்க வேண்டும்.

  வெஜ். கட்டர் (பிளேடு வைத்தது) விதமாக வாங்கி ஏமாந்த அனுபவங்கள் நிறைய உண்டு. பூண்டு பீலர் பார்த்திருக்கிறேன்.

  கதம்பம் சுவாரஸ்யம்.

  ReplyDelete
 6. ஸாதிகா,

  பூண்டு உரிக்கும் மெஷீன் இங்கே.

  http://thulasidhalam.blogspot.co.nz/2008/07/2_22.html

  ReplyDelete
 7. ஆட்டோக்காரன்... கயவர்களும் பல ரூபங்கள் எடுப்பார்கள்... இங்கே(யும்!!!) ஒருத்தன் - ட்யூஷன் டீச்சர் - இப்படி பிடிபட்டான். புகார் செஞ்சா, வேலை போகும், எதிர்காலமே போச்சு... என்று நமக்குள் இருக்கும் பரிதாப உணர்ச்சிகளால் தப்பித்து விட்டான். என்ன கொடுமைன்னா, இவனுக்கும் ரெண்டு பெண் குழந்தைகள்!!

  பெண்கள், ஆண்களோடு தனித்திருப்பதைத் தவிர்க்கணும்னு சிலர் சொல்றதைப் பார்க்கும்போதெல்லாம் கோவம் வந்தாலும்... இந்த மாதிரி நிகழ்வுகளால் அவை சரியாகவேப் படுகிறது. யார் எப்ப என்ன மாதிரி மாறுவாங்கன்னு (குறிப்பா லிஃப்டில்) தெரியாதே...

  ReplyDelete
 8. மற்றபடி எல்லா கதம்பப்பூக்களும் அருமை. அதுவும் 74 வயதுப் பாட்டி... கலக்குறாங்க..

  இங்கல்லாம் பூண்டு பெரிசா இருக்கும், அதனால உரிப்பது அத்தனை கஷ்டம் இல்லை. இந்தியா வந்தாத்தான் கோவமா வரும். ஆமா, இதில ஒண்ணொண்ணா போட்டுத்தான் உருட்டணுமா? (அப்படின்னா அதுக்கு கையாலயே உரிச்சிடலாம்... அவ்வ்வ்...)

  மைக்ரோ அவன்ல லேசா சூடாக்கினாலும் சீக்கிரம் உரிச்சிடலாம்னு எங்கயோ படிச்ச ஞாபகம்...

  //அப்பாவின் வருகை குறித்து ரோஷ்ணி//
  உங்க பகக்த்து சொந்தக்காரங்க வீட்டில கல்யாணமாமே, வராம இருக்க முடியுமா? :-)))

  ReplyDelete
 9. கதம்பம் செய்திகள் மகிழ்ச்சியும் வருத்தமும் கொடுத்தது.
  ஆட்டோக்காரர் செய்தி யாரை நம்புவது என்று இருக்கிறது.
  தன்னம்பிக்கை பாட்டி நன்றாக இருக்கிறது.
  அம்மாவுக்கும், பெண்ணுக்கும் மகிழ்ச்சி தரும் விஷயம் மிக அருமை. சீக்கிரம் மாற்றல் கிடைக்குமா என்று பார்க்க சொல்லுங்கள்.
  எல்லோருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. பூண்டு பீலர் இங்கே சரவணா ஸ்டோரில் 25ரூபாய்க்கு கிடைக்குது.

  ReplyDelete
 11. பூண்டு உரிக்கிறதுக்கு ஈசி வழி பார்த்து திகைப்பூண்டு போனேன்!

  ReplyDelete
 12. குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் தங்கள் வக்கிரகுணத்தைக் காட்டும் கயவர்களிடமிருந்து எப்படிதான் குழந்தைகளைக் காப்பாற்றுவதோ? மிகவும் அதிர்ச்சியான செய்தி. நமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையும் கூட.

  முதலாவதைத் தவிர மற்ற அனைத்தும் மனத்துக்கு இதம். பாட்டி வியப்பூட்டுகிறார். ரோஷ்ணி அசத்துகிறாள். பகிர்வுக்கு நன்றி ஆதி.

  ReplyDelete
 13. பூண்டு பீலர் சுப்பர்.

  இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. :) எனக்கொண்ணு வாங்கி அனுப்புங்க ..
  கவுண்ட்டவுன் நடக்குதா..அங்கே.. அவங்கப்பாவும் கிளம்பர குஷியில் இருந்தாரே தில்லியில்..:)

  ReplyDelete
 15. ஆட்டோக்காரனை அங்கேயே வெட்டிப் போட்டிருக்க வேண்டும்.

  சமீபத்தில் வெங்காயம் கட் பண்ண ஒரு கருவி வாங்கினேன். என் மாட்டுப்பெண் அழுவது குறைந்திருக்கிறது :) பூண்டு உபயோகிப்பது இல்லை. ஸோ, நோ வொரீஸ்!

  உங்கள் எல்லோரையும் சென்னை பதிவர் விழாவில் சந்திக்க நாங்களும் ரெடியாகிறோம்!

  ReplyDelete
 16. முதலில் பால்காரர் சொல்லியுள்ளது மட்டும் வேதனை.

  மீதி அனைத்துமே அருமை.

  தோகை விரித்தாடும் மயிலைப்பார்ப்பது மிகவும் அழகாகத்தான் இருக்கும். எங்கள் அலுவலகத்தைச்சுற்றி பலமுறை ஆண்மயில்கள் ஆட நான் பார்த்து மகிழ்ந்துள்ளேன்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. பால்காரர் சொன்னது வேதனைதரும் விசயம்...

  மயில் நடனம் பார்ப்பது என்பது எல்லாருக்கும் சந்தோஷமே.... எங்கள் ஊரில் நிறைய மயில்கள் இருக்கும்... அங்காங்கே நடனம் களைகட்டும். மேகம் கருத்தால்தான் மயிலின் நடனம் அரங்கேறும்...

  குழந்தையின் அறிவுரை கேளுங்கள்... பாட்டி சூப்பர் பாட்டிதான்....

  இன்னும் சாப்பாடு ஊட்டத்தான் மிஷின் வரவில்லை போல....

  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. Dear,

  Autokaranai oormakkal vetti pottu irukkavendum.

  Poonduvurikkum peelar kidaithal vangivaithal nangal varumbodhu
  Yeduthukkolgirom.

  Chennai varumbodhu neram kidaithal yellorum athukku varavum.

  ReplyDelete
 19. எல்லாம் அழகாக இருந்தது. அந்த ரிக்க்ஷாகாரனைத்தவிர. பேப்பரைத் திறந்தால் இதே ஸமாசாரங்கள்தான்
  நீவேறு,அவர்வேறிடமா.திருவரங்கத்திலிருந்து என்பதைப் பார்த்தேன்.
  ரோஷ்னியின் சுட்டித்தனம் அருமை.
  பாட்டியின் வளர்ச்சி லக்ஷத்தில் ஒருவர் என்று
  தோன்றியது. வரலக்ஷ்மி நோன்பு நன்றாக நடந்ததா அன்புடன்

  ReplyDelete
 20. அதிர்ச்சி உண்டாக்கிய செய்தி - நிஜமாகவே அதிர்ச்சிதான்.

  மயில் நடனம், பூண்டு பீலர் மற்றும் திண்ணைக் கச்சேரி வர்ணனைகள் சுவாரஸ்யமாக இருந்தது.
  சூப்பர் பாட்டி - உண்மையிலேயே சூப்பர்தான்.
  ரோஷ்ணி கார்னர் - சாலமன் பாப்பையா சொல்வது போல விவரமான பொண்ணு தான்.
  அப்பா ரயிலில் வந்து கொண்டு இருக்கிறார்
  வாழ்த்துக்கள்
  விஜய் / டெல்லி

  ReplyDelete
 21. இங்க குறிஞ்சிப்பாடியில இதுபோல் சில்மிஷம் செஞ்ச டிரைவரை ஸ்கூலில் மாட்டி விட்டாள் ஒரு மாணவி. அவனுக்கு வேலை போனது. வேறு வேலை கிடைக்காமல் பல மாதங்கள் சிரமப்பட்ட அவன் சில மாதங்களுக்கு முன் அப் பெண்ணை வேறு வண்டியில் வீட்டு வாசலில் இறங்கும் போது கத்தியால் குத்த, தடுத்த அவள் பாட்டிக்கும் கத்திக்குத்து. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டனர். பெண் குழந்தைகளுக்கு எல்லா திசையிலும் எல்லா விதத்திலும் அபாயங்கள் காத்திருக்கின்றன என்பது திகில் எழுப்புவதாய்.

  சூப்பர் பாட்டி எனக்கும் உத்வேகத்தைத் தருகிறார்.

  உங்களுக்காவது ஆறுதலுக்கு ரோஷ்ணியின் அருகாமை. சகோ தான் பாவம். சக்ரத்தாழ்வார் மனம் இறங்கட்டும்.

  ReplyDelete
 22. சுதந்திரதினத்தன்று 5 செய்திகளைச் சொல்லி அசத்திவிட்டீர்கள். முதலாவதாகச்சொன்னது 6-வது தகவல். சிறுவர்களோ /சிறுமியரோ அவர்களுடன் பழகுவோர் தவறான நோக்கில் தொட்டுப் பேசிப் பழகாமலிருக்க வருமுன் காக்கும் விதத்தில் உரிய அறிவுரைகளைக் கூறியே வளர்த்தல் வேண்டும். எச்சரிக்கை உணர்வைப் பெற்றோருக்கு ஊட்டும் தகவல். தொடரட்டும் நும் பணி. வளர்க. வெல்க.

  ReplyDelete
 23. I got your blog and it is very much interesting

  ReplyDelete
 24. அன்பின் ஆதி வெங்கட் - பதிவு அருமை - அத்தனை நிக்ழவுகளூம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 25. பின்னூட்டமிட்ட அனைத்து நட்புகளுக்கும் நன்றிகள் பல...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…