Thursday, August 15, 2013

கதம்பம் – 17

அதிர்ச்சி உண்டாக்கிய செய்தி:-

சென்ற வாரத்தில் ஒருநாள் எங்கள் பால்காரர் மிகுந்த கவலையுடன் எனக்கு தெரிவித்த செய்தி இது. பள்ளி சிறுவர் சிறுமிகளை அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், ஒரு கடைக்கு பக்கத்தில் நிறுத்தி விட்டு ஆட்டோவில் உள்ள குழந்தைகளிடம் பத்து ரூபாயைத் தந்து ஏதேனும் சாக்லேட் வாங்கித் தின்னுங்கள் என்று தர, அவர்களும் இறங்கி வாங்க எத்தனிக்க அதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவளும் இறங்க முயற்சித்திருக்கிறாள். அவளை மட்டும் நீ இங்கேயே இருஎன்று சொல்லி அக்குழந்தையிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார். வீட்டிற்கு வந்த பெண் தன் அம்மாவிடம் சொல்லி அழ, அந்த ஆட்டோ ஓட்டுனரை அந்த ஏரியாக்காரர்கள் அனைவரும் சேர்ந்து வெளுத்து எடுத்திருக்கிறார்கள். காவல் துறையிடம் சென்றால் அந்த பெண்ணையும் வரச் சொல்லி பெரிய விவகாரம் ஆகி விடும் என்று விட்டுள்ளனர். அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு வீட்டில் வயதுக்கு வந்த இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றார்களாம்இப்படிப்பட்ட மிருகங்களின் அராஜகங்கள் எங்கேனும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன….:( இதற்கு விடிவுகாலம் தான் ஏது?

மயில் நடனம்:-

இரண்டு நாட்களுக்கு முன்பு மாலையில் கோவிலுக்கு சென்றிருந்தேன். சக்கரத்தாழ்வாரை பிரதட்சணம் செய்யலாம் என்று ஸ்லோகத்தை மனதில் சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தால் அங்கு வந்திருந்த மக்கள் அனைவரும் சக்கரத்தாழ்வாரை அம்போன்னு விட்டு, ஜன்னல் வழியே எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். சரி சக்கரத்தாழ்வார் காத்திருப்பார், அங்கு என்ன நடக்கிறது என பார்த்தேன். ஆண் மயில், பெண் மயில் என இரண்டும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தன. எப்போதுமே இங்கு இருப்பவை தான். தேமேன்னு நெல் மணிகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும். இன்று ஆண் மயில் தோகையை விரித்துக் கொண்டு ஆடியது. கண் கொள்ளா காட்சி. திடீரென்று அது திரும்பிக் கொள்ள, மக்கள் பெருமாளே திரும்புடாப்பா, திரும்புடாப்பாஎன்று சொல்லிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு முறை தரிசனம்…. செல்போனில் எல்லோரும் க்ளிக்கோ, க்ளிக் தான்….:) ஒரு வழியாக கண்களை அங்கிருந்து விடாப்பிடியாக அகற்றி விட்டு சுவாமியை தரிசித்து விட்டு வெளியே வந்தேன். அன்று என்ன விசேஷம் என்று தெரியவில்லைபெருமாள் அன்ன வாகனத்தில் புறப்பாடு ஆனார். ரங்கா எல்லோரையும் காப்பாற்றுஎன்று வேண்டிக் கொண்டு நடந்தேன்.

பூண்டு பீலர்:-எங்கள் குடியிருப்பில் ஒருவர் VEGETABLE CUTTER, CHOPER, SLICER, PEELER, APPLE CUTTER முதலியவை கொண்டு வந்து செய்முறை காட்டி அனைவரையும் கவர்ந்து கொண்டிருந்தார். உபயோகமான பொருளாக இருந்ததால் ஒவ்வொருவராக வாங்கிக் கொண்டிருந்தனர். முதல் வாரம் நமக்குத் தேவையா? ஏன் வாங்க வேண்டும்என்று விட்டு விட்டேன். அப்புறம் வாங்கியவர்கள் நன்றாக உள்ளதாக சொல்லவும், எங்க வீட்டு வாண்டும் அடம் பிடிக்கவும் வாங்கிக் கொண்டேன். அதில் GARLIC PEELERம் விற்றுக் கொண்டிருந்தார். விலை நாற்பது எனச் சொல்லவும் வாங்கிக் கொண்டேன். பூண்டு உரிப்பது கொஞ்சம் கடினமான வேலை தான்…:) நகக்கணுக்குள் வேறு சென்று சில நேரம் வலிக்கும்விஞ்ஞானம் எப்படியெல்லாம் முன்னேறி விட்டது பாருங்கள். சின்ன ரப்பர் ட்யூப் போல் உள்ள இதற்குள் பூண்டை போட்டு சப்பாத்தி குழவியை உருட்டுவது போல் மேடை மேல் வைத்து தேய்த்தால் பூண்டு தனியாக, தோல் தனியாக வந்து விடுகிறது.

சூப்பர் பாட்டி:-

எங்க டிரைவிங் ஸ்கூல் பயிற்சியாளர் ஒருநாள் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயம் இதுஅவரிடம் 74 வயதான பாட்டி ஒருவர் டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாராம். கோவையில் உள்ள தன் மகள் வீட்டுக்கு சென்று தங்கும் போது அங்குள்ள கோவில்களுக்கு சென்று வர வேண்டுமாம். ஆட்டோக்காரருக்கு கொடுத்து கட்டுப்படியாகாது, சீக்கிரம் வண்டி ஓட்டக் கற்றுக் கொள் என்றாராம் மகள். இந்த வயதில் எப்படி பாட்டி ஓட்டுவீங்க? லைசென்ஸ் வாங்குவதும் கடினம் என்றாராம் பயிற்சியாளர். என்னை உன் பாட்டியா நினைச்சுக்கோகற்றுக் கொடு என்று அடமாம். சீக்கிரமே டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொண்டு இவரிடமே பழைய வண்டி ஒன்று வாங்கித் தர ஏற்பாடு செய்து வாங்கி ஓட்டினாராம். கோவையில் மகள் வீட்டிலும் மகளின் வண்டியில் சவாரி செய்தாராம். அதோடு விட வில்லைகாரும் ஓட்டக் கற்றுக் கொண்டாராம். எனக்கு வாகனம் ஓட்ட தன்னம்பிக்கை தந்த விஷயம் இது!

திண்ணைக் கச்சேரி:-

என் மகளை வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ள வகுப்பில் சேர்த்திருக்கிறேன். வகுப்புக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு அங்கேயே திண்ணையில் அமர்ந்திருப்பேன். என்னைப் போல் விட வரும் அம்மாக்கள் சிலருடன் திண்ணைக் கச்சேரி அவ்வப்போது நடக்கும். என்னைத் தவிர வரும் அம்மாக்கள் எல்லோருமே ஸ்கூட்டியில் கொண்டு விட்டு விட்டு போய் விடுவார்கள். ஒரு மணி நேரம் கழித்து வந்து அழைத்துச் செல்வார்கள். நான் மட்டும் மீண்டும் நடந்து வீட்டுக்கு போய் வர அலுத்து, அங்கேயே உட்கார்ந்து கொள்வேன். நான் ஸ்கூட்டி ஓட்ட வெறியாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். முதலில் பொழுது போக புத்தகங்களை எடுத்துச் சென்றேன். இது படிப்ஸ் போலஎன்று யாருமே பேசவில்லை…. :) அப்புறம் புத்தகம் எடுத்துச் செல்வதை விட்டு விட்டேன். சில நாட்கள் கோவிலுக்கு சென்று விட்டு அப்படியே பழங்கள் முதலியவற்றை வாங்கி வருவேன். இல்லையென்றால் திண்ணையில் உட்கார்ந்து செல்ப்போனில் கேம்ஸ் தான்….:)

ரோஷ்ணி கார்னர்:-

அம்மா ஆக்சிலேட்டரை மெதுவாக கொடுக்க வேண்டும். ப்ரேக்கில் எப்போதும் கை வைத்துக் கொள்என்று ஏகப்பட்ட அறிவுரை ரோஷ்ணியிடமிருந்து….. எப்படி கண்ணா உனக்கு இதெல்லாம் தெரியும்என்றால்….. எனக்கு எப்பவோ தெரியும். இதெல்லாம் ரொம்ப ஈசி என்கிறாள்!!!! இப்ப இருக்கற குழந்தைங்க எல்லாருமே ரொம்ப விவரமாத் தான் இருக்கறாங்க…:))

அப்பாவின் வருகை குறித்து ரோஷ்ணி இப்போது பயங்கர குஷியாக இருக்கிறாள். தினமும் காலையில் எழுந்திருக்கும் போதே அம்மா அப்பா வர இன்னும் ஒரு வாரம் தான் இருக்குநாலு நாட்கள் தான் இருக்குஹைய்யா! ஜாலி என்று ஆட்டம் தான்….:)) குஷியாக இருப்பது அவள் மட்டுமல்ல.. என்று உங்களுக்கு நான் சொல்லவும் வேண்டுமோ……:))

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.....மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Saturday, August 10, 2013

கொள்ளிடமும், மாலோலனும்!

நேற்று தோழி குடும்பத்துடன் , கரை புரண்டோடும் கொள்ளிடத்திற்கு சென்றிருந்தோம். வறண்டு கிடந்த காவிரி கரைபுரண்டோவது மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது. குழந்தைகள் இப்பவே குளிக்க வேண்டும் என்று அடம்....:) இரண்டு நாள் போகட்டும்.....அப்புறம் வந்து குளிக்கலாம் என்று தண்ணீரில் கால் நனைத்து விட்டு, இடதுபுறம் இருந்த மண்டபத்திற்கு தண்ணீரில் இறங்கி அங்கு போய் சிறிது நேரம் நின்று விட்டு திரும்பி வர மனமில்லாமல் திரும்பி வந்தோம்..... குழந்தைகள் மட்டுமல்ல நாங்களும் தான்.....:))

நீச்சல் போட்டி நடக்குதுகிழக்கே போகும் ரயில்


இவர் தான் மாலோலன். வயது பதினேழு. சேலையூர் அஹோபில மடத்திலிருந்து அழகியசிங்கருடன் ஸ்ரீரங்கத்திற்கு வந்துள்ளார். அங்கு பாகனை பாடாய்படுத்தும் இவர் ஸ்ரீரங்கத்திற்கு வந்து சமத்தாயிட்டாராம்...:) காபி, டீ, கூல் டிரிங்ஸ், பிஸ்கெட் என எதுவாயிருந்தாலும் கபளீகரம் செய்கிறார். டேப் ரிக்காடரில் பாட்டு கேட்கிறார்....:))


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

Thursday, August 8, 2013

ஓரம் போ! ஓரம் போ!.......என்ன! தலைப்பை பார்த்ததும் நம்ம இளையராஜா சார் இசையில் வந்த ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருது”… அப்படின்னு பாடறீங்களா? நானும் அப்படித்தான் இப்போ பாடறேன்…..:)) ஆமாங்க, நான் இப்போ வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன். வெற்றி கண்டு விட்டேன். அந்த வித்தையை கற்றுக் கொள்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அது ஒரு பெரிய கதைவாங்க கதைக்குள் போவோம்…:))

சின்ன வயதில் அப்பா சைக்கிளை ஓட்டிப் பழக ஆசைப்பட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அப்பாவும், தம்பியும் (தம்பி முன்னரே கற்றுக் கொண்டு விட்டான்) பிடித்துக் கொள்ள ஓட்ட ஆரம்பித்தேன். ஒருநாள் ரோட்டில் விழுந்தும் விட்டேன். குவார்ட்டர்ஸில் உள்ளோர் முன்னிலையில் விழுந்ததில் எனக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது. விழுந்த வேகத்தில் கொலுசும் அறுந்து விட அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். பயமும், வெட்கமும் தொற்றிக் கொள்ள, மீண்டும் கற்றுக் கொள்ள மறுத்து விட்டேன். எவ்வளவோ பேர், ”உயரமாக இருப்பதால் திரும்பியும் விழவே மாட்டஎன்று எடுத்துச் சொன்னார்கள். ம்ம்ஹூம்! முடியாதுன்னா முடியாது தான்…:)

பள்ளிக்கு நடந்தே செல்வேன். பஸ் பாஸ் இருந்தாலும் நடராஜா சர்வீஸ் தான் எனக்கு பிடித்தது. கல்லூரிக்கும் பதினைந்து நிமிடங்கள் நடைக்கு பின் பேருந்து என…. இப்படியே போய் விட்டது. வேலைக்கு போகும் போதும் இரண்டு பேருந்துகள் மாற்றி என கோவை வாழ்க்கை இனிதாகவே இருந்தது.

திருமணமாகி தில்லி சென்ற பின் அங்கிருந்த டிராஃபிக்கில் டூ வீலர் ஓட்டுவது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அது போக வீட்டை விட்டு கீழே இறங்கினாலே ரிக்‌ஷாவாலா எங்கும் இருப்பர்ஓ! (BHA)பையா! இதர் தக் ஜானா ஹை! கித்னா சாஹியே! இப்படி கூப்பிட்டு எங்கள் ஏரியா முழுதும் சுற்றியிருக்கிறேன். விடுமுறைநாளில் குடும்பத்துடன் எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால் ஆட்டோ, மெட்ரோ, பஸ் என இப்படி சென்றது தில்லியில் என்னுடைய பத்து வருட வாழ்க்கை….

சென்ற வருடம் முதல் என் உடல்நிலை போன்ற சில பல காரணங்களுக்காக என் புகுந்த வீட்டினருடன் நானும் ரோஷ்ணியும் ஸ்ரீரங்கத்தில் வசிக்க ஆரம்பித்தோம். அப்போது தான் வண்டி ஓட்ட கற்றுக் கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று ஏங்க ஆரம்பித்தேன். அவசர தேவைக்கு தவிர மற்ற எல்லாமே வாங்க தெற்கு வாசலுக்கு தான் செல்ல வேண்டும். இங்கு அநேகமாக எல்லோருமே ஆரோக்கிய வாகனத்தை அதாங்க மிதிவண்டியைத் தான் பயன்படுத்துகின்றனர். இல்லையென்றால் டூ வீலர். நமக்குத் தான் இரண்டுமே தெரியாதேஅதனால் நடராஜா சர்வீஸ்.. முடியவில்லையென்றால் ஆட்டோ…:)

ஆட்டோவிலேயே செல்ல வேண்டுமென்றால், திருச்சியில் ஆட்டோக்காரர்களுக்கு நம் சொத்தையே எழுதி வைக்க வேண்டும். குறைந்த பட்சமே நாற்பது ரூபாய் தான்…:(( இனி சைக்கிள் ஓட்டினால் நன்றாக இருக்காது. அதனால் வண்டி ஓட்ட எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒரு சில சம்பவங்களாலும், குத்தல் பேச்சுக்களாலும் வெறியாக மாறியது…..:) இனியும் தாமதிக்கக்கூடாது என்று ஒரு டிரைவிங் ஸ்கூலில் கேட்டு சேர்ந்தேன். பத்து நாட்கள் வகுப்பு. காலையில் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளையும் அரக்க பரக்க முடித்துக் கொண்டு கிளம்பி ஓடினேன். கொடுமை என்னவென்றால் என் வகுப்புகள் நடந்ததும் தொலைவில் தான். காலையில் ஆட்டோவில் சென்று விட்டு வரும் போது கடைத்தெருவில் உள்ள வேலைகளையும் முடித்துக் கொண்டு வருவேன்.

வகுப்பு சேர்ந்த அன்று என்னிடம் முதலில் கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா? சைக்கிள் ஓட்டத் தெரியுமா? என்று தான்….:)) என்னுடைய பயிற்சியாளர் ஒரு இளம்பெண் தான். சைக்கிள் ஓட்டத் தெரியாதென்றால் கற்றுக் கொள்ள முடியாதா? என்றதற்கு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லைதெரிந்தால் சுலபமாக இருக்கும் அவ்வளவு தான் என்றார். முதல் வகுப்பே வண்டியை இரண்டு ரவுண்ட் தள்ளிக் கொண்டு வர வேண்டும். அடுத்து வண்டியில் உட்கார்ந்து கொண்டு காலால் நடப்பது போல் வண்டியை உந்தித் தள்ள வேண்டும். இப்படி வீர தீர சாகசத்தை பத்து நாட்களில் சிறப்பாக முடித்தேன்.

வீர தீர சாகசம் என்று சொல்லி விட்டு விழுப்புண்கள் இல்லா விட்டால் எப்படி….:)) ஆறாம் நாள் ஒரு மேட்டிலிருந்து கீழே இறங்கி வரும் போது கட்டுப்பாடு இல்லாமல் ஆட்டிக்குட்டிகளா! மாநகராட்சி குப்பைத் தொட்டியா என்ற விவாதத்தில் குப்பை தொட்டியே வெற்றி பெற்றது. நேராக படு வேகமாக கொண்டு விட்டு, விழுந்து, உடை கிழிந்து, காலில் ரத்தம் வந்து, கை முட்டியில் அடி என்று தப்பித்தேன். பத்தாம் நாளும் வண்டி என் கால் பாதம் மடக்கி இருக்கும் போது மேலே விழுந்ததில் நரம்பு சுருண்டு விட்டது போலஉதறி விட்டு இரண்டு ரவுண்ட் ஓட்டி விட்டு, பயிற்சியாளருக்கு நன்றி சொல்லி விட்டு லைசென்சுக்கு அப்ளை செய்வது பற்றி பேசி விட்டு, கடைத்தெருவில் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

மதியம் சாப்பிடும் போது தான் வலியே ஆரம்பித்தது. காலை அசைக்க முடியவில்லை. துடித்துப் போய் மாமியாரிடம் போனேன். பூண்டு, மிளகு உப்பு மூன்றையும் அரைத்து கிளறி சூட்டோடு பற்று போட்டார். சிறிது நேரத்துக்கு பின் வலி மெல்ல குறைய ஆரம்பித்தது. வீக்கமும் வற்றியது. உள் காயங்கள் இன்னும் உள்ளனஎப்படியோ விழுந்து வாரி கற்றுக் கொண்டு விட்டேன். அடுத்து காரும் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று மனங்கொள்ளாத ஆவல் உள்ளது. வாங்கும் போது சேர்ந்து கொள். மறந்து போகாது என்று சொல்லியுள்ளார் என்னவர்…:)

தினமும் பயிற்சியாளரிடம் கேட்பேன் கற்றுக் கொண்டு விடுவேனா?” என்று அவரும் பொறுமையாக, நிச்சயமாக நீங்க வண்டி ஓட்டுவீங்க….கவலையே வேண்டாம் என்பார். இதெல்லாம் பெரிய விஷயமா? இவ சொல்ல வந்துட்டான்னு நினைக்காதீங்கஎன்னை மாதிரி பயந்தாங்கொள்ளிக்கு, அதுவும் நடந்தாலே நாலு தடவை விழற எனக்கு, வண்டி ஓட்ட கற்றுக்கொள்ள வகுப்பில் சேர்ந்ததே மிகப்பெரிய விஷயம் இல்லையா….:)) நடுவில் கூட விட்டு விடுகிறேன், பயமாயிருக்குஎன்று என்னவரிடமும், பெண்ணிடமும் சொன்னேன். என்னம்மா ஸ்கூல் போற பொண்ணு மாதிரி அடம்பிடிக்கிறஎன்றாள்…..:))

என்ன! உங்களுக்கும் இது போல் அனுபவங்கள் இருந்தால் பகிருங்களேன்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Monday, August 5, 2013

பயணிகள் கவனிக்கவும்!பரபரப்பான மீனம்பாக்கம் விமான நிலையம். விடிகாலையில் வந்திறங்க வேண்டிய கஜராஜ்என்கிற சிலோன் ராணுவ விமானத்தின் விமானியிடம் தரையிறங்குவதற்கு வேண்டிய தகவல்களை தந்து கொண்டிருக்கிறார் ஸ்டீபன் மனோகரன் இஸ்ரேல். விமானம் தரையைத் தொடும் நேரத்தில் ரன்வேயில் ஒரு இளைஞர் கையில் எதையோ வைத்துக் கொண்டு கைகளை ஆட்ட, விமானம் மீண்டும் வானிலேயே சீறிப் பாய்கிறது. காரணம் என்னவென்று ஒன்றும் புரியாமல் ரன்வேயை பார்த்தால் புல் வெட்ட கத்தியுடன் வந்த இளைஞன் தெரிய, பரபரப்பான செக்யூரிட்டியும், போலீஸும் இளைஞனை தாக்க ஸ்டீபனுக்கு தகவல்களை சரியாக தராத காரணத்திற்காக மெமோ தரப்படுகிறது.

இப்படியாகத் தான் ஆரம்பிக்கிறது பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும்நாவல். விமான நிலையமும், அதைச் சுற்றியுள்ள குவார்ட்டர்ஸில் உள்ள மனிதர்களும் தான் கதை முழுவதும் வியாபித்திருக்கிறார்கள். இங்கு தான் சத்திய நாராயணன் என்கிற இளைஞனுக்கும் ஜார்ஜினா என்கிற பெண்ணுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஜார்ஜினா ஒரு இளம் விதவை. கணவன் வின்செண்ட்டுடன் ஆறு மாதம் அழகாக குடித்தனம் செய்து கொண்டிருந்த வாழ்க்கையில் சூறாவளியாக, விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் வின்செண்ட் இறந்து போக, ஆறு மாத கர்ப்பவதியாக கதறி துடிக்கிறாள். அவர்களுக்கு கிடைத்தது வின்செண்ட்டின் க்யூட்டெக்ஸ்வைத்திருந்த வலது கால் மட்டுமே.

குழந்தை பிறந்து ஒரு சில வருடங்களில் ஜார்ஜினாவுக்கு விமான நிலையத்திலேயே வேலை கிடைக்க, நான்கு வயது மகன் செல்வாவுடன் அம்மா வீட்டில் இருக்கிறாள். வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் வின்செண்ட்டின் ஆருயிர் நண்பன் சத்திய நாராயணன் என்கிற சத்தியை பற்றி உடன் வேலை செய்பவர்கள் மூலம் தெரிந்து கொள்கிறாள். வின்செண்ட் இறந்த அன்று முதல் அவன் யாருடனும் பேசாமல் இருப்பதாகவும், தான் தான் அவன் இறந்து போக காரணம் என்றும் சொல்லிக் கொண்டிருப்பதாகவும், தற்கொலைக்கும் முயன்றதாகவும் சொல்ல அவன் மேல் இரக்கமும், ஆர்வமும் மேலிட அவனுடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கிறது.

அதே போல் ஜார்ஜினாவுக்கு பணியில் சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனை வந்த போது திடுக்கிட்டு பதறுகிறான் சத்தி. பழகும் சமயத்தில் அவனிடமிருக்கும் மனக்குறைகளை பகிரச் சொல்கிறாள். சத்தி முன்பு ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த காதல் மயக்கத்தில் தான் பணியாற்ற வேண்டிய ஷிஃப்டையும் வின்செண்ட்டை வேலை செய்யச் சொல்ல, அன்று தான் குண்டு வெடித்து வின்செண்ட் இறந்து போக, ”வினுப்பா, வினுப்பாஎன்று கர்ப்பிணியான ஜார்ஜினா கதறியதும் மனதை வாட்ட தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். இதை தெரிந்து கொண்ட காதலி கோழைக்கு வாழ்க்கைப்பட தனக்கு விருப்பமில்லை என்று உதறியிருக்கிறாள். மனதை அழுத்திக் கொண்டிருந்த விஷயங்களை ஜார்ஜினாவிடம் பகிர்ந்து கொண்ட சத்தி, செல்வாவிடமும் அக்கறையுடன் நடந்து கொண்டு, தான் செல்வாவுக்கு அப்பாவாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லி, இப்படியாக இவர்களிடையே காதல் மலருகிறது.

ஜார்ஜினாவின் மகன் செல்வாவும் சத்தியுடன் நன்றாக ஒட்டிக் கொள்ள, பெற்றோரிடம் சம்மதம் கேட்கின்றனர். சத்தியின் அப்பா விதவை மறுமணத்தை ஆதரித்து ஜார்ஜினாவை வாழ்த்தினாலும் தன்னுடையை குடும்பத்தில் ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று சொல்லி இவர்களின் திருமணத்துக்கு பச்சைக் கொடி காட்டி மருமகளுக்காக வைத்திருந்த ஆறு பவுன் இரட்டை வட சங்கிலியை ஜார்ஜினாவுக்கு பரிசளிக்கிறார். ஜார்ஜினாவின் வீட்டிலும் சில வாக்கு வாதங்களுக்குப் பிறகு பச்சைக் கொடி காட்ட, அடுத்து இவர்கள் சென்றது வின்செண்ட்டின் அப்பா வீட்டுக்கு. இங்கு தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

முதலில் மறுமணத்தை எதிர்த்து ஜார்ஜினாவை கேள்விக் கணைகளால் துளைத்து, பின்பு இவர்களுக்கென்று குழந்தை பிறந்தால் அது என்ன மதமாக இருக்கும்? அப்போது செல்வாவின் நிலை என்ன? சத்தி மதம் மாறினால் தான் இந்த மறுமணம் ஒத்து வரும் என்றும், மறுத்தால் பேரனை தன்னிடம் விட வேண்டி வரும் என்றும் சொல்லஜார்ஜினா தடுமாறுகிறாள். சத்தியை மதம் மாறுகிறீர்களா? என்று சொல்ல அவன் இவருக்காக பயந்து மதம் மாற எனக்கு மனதில்லை. எனக்காக தோன்றி மதம் மாறினால் தான் உங்கள் மதத்துக்கும் நன்றாக இருக்கும் என்று சொல்லி விட்டான். இப்போது தான் இவர்களின் காதல் எங்கே கைகூடாமல் போய்விடுமோ என்று பதட்டம் வந்தது.

பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜார்ஜினாவை வற்புறுத்தாமல் செல்வாவுக்கு மட்டுமே தான் தகப்பனாக இருந்தால் போதும் என்று நினைத்து ஜார்ஜினாவுக்கு தெரியாமல் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டு வருகிறான். இவர்களின் திருமணம் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெறுகிறது. அதன் பின்பு தான் ஜார்ஜினாவுக்கு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை குறித்துக் கூறி நெகிழ வைக்கிறான். இப்படியாக இந்த கதை சிறப்பாக இருந்தது.

ஆரம்பத்தில் விமானம் ரன்வேயில் சிறிது தூரம் சென்று மேலே பறப்பது போல் கதை சூடுபிடிக்க சற்று தாமதமானாலும், பின்பு விறுவிறுப்பாக காதல் கதை சூடுபிடிக்கிறது. பள்ளி விடுமுறைநாளில் அப்போது கோவை விமான நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மாமா ரேடார் மூலம் விமானியுடன் பேசுவது, தகவல்களை தருவது, டேக் ஆஃப், லேண்டிங் அனைத்தும் பார்த்திருக்கிறேன். அதனால் கதையில் வரும் விமான நிலையத்தில் உள்ள விஷயங்கள் கண் முன்னே விரிந்தது.

பாலகுமாரனின் கதை நாயகர்கள் யாவரும் பெண்ணைப் போற்றுபவர்களாக, ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள். பெண்ணின் மனநிலையையும், பிரச்சனைகளையும், வலிகளையும் புரிந்து கொண்டு நடக்கிறார்கள்.

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

விசா பப்ளிகேஷன்ஸ்
55, வெங்கட்நாராயணா சாலை
தி.நகர், சென்னை – 600017.
மொத்த பக்கங்கள் – 448
1995 பதிப்பின் படி அப்போதைய விலை ரூ 70

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Thursday, August 1, 2013

அல்லம் பச்சடி!


அல்லம் பச்சடியா! இது என்ன புதுசா இருக்கே என்று நினைக்கிறீர்களா? ஒன்றும் புதுசில்லைங்க.. இஞ்சிப் புளி, புளி இஞ்சி என்று சொல்வார்களே…  அது தான். ஆந்திராவில் இது அல்லம் பச்சடி…:) தெலுங்கில் அல்லம் என்றால் இஞ்சி. ஆந்திர செய்முறை வேறு. நாம் இப்போது செய்யப் போவது நம்முடைய வழக்கமான முறை தான். கேரளாவிலும் இது மிகவும் பிரபலம். தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட இது மிகவும் தோதான ஜோடி. வாங்க செய்முறை பார்க்கலாம்தேவையானப் பொருட்கள்:-

இஞ்சி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 7 அல்லது 8
புளி எலுமிச்சையளவு
உப்பு தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி சிறிதளவு
வெல்லம் சிறிதளவு
நல்லெண்ணெய் தேவையான அளவு
கடுகு – ½ தேக்கரண்டி

செய்முறை:-

இஞ்சியை தோல் சீவி நன்கு கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் சூடானதும், கடுகு தாளித்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். அடுத்து இஞ்சியை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்பு புளியை கரைத்து விட்டு உப்பு, மஞ்சள்பொடி, வெல்லம் சேர்த்து நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்க வேண்டியது தான். சுவையான இஞ்சிப் புளி தயார்.

ஆந்திர செய்முறை :-

இஞ்சி, புளி, வரமிளகாய், உப்பு, வெல்லம் அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்க வேண்டியது தான். இது தான் அல்லம் பச்சடி…:)  இதில் காரம் தூக்கலாக இருக்க வேண்டும். இந்த முறையில் நான் இருமுறை செய்து பார்த்திருக்கிறேன்.

என்ன நட்புகளே! உங்கள் வீட்டிலும் இது போல் இரு முறையிலும் செய்து பார்த்து சுவையுங்கள்.

இஞ்சியை பொடியாக நறுக்கி உப்பு, எலுமிச்சை சாறு விட்டு ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது வாயில் போட்டுக் கொள்ளலாம். பித்தத்தை குறைக்கும். நன்கு ஜீரணமாகும். பசியைத் தூண்டும்.

மாங்காய் இஞ்சி கிடைக்கும் போது அதையும் இது போல் பொடியாக நறுக்கி உப்பு, எலுமிச்சை சாறு விட்டு கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயம் தாளித்து வைத்துக் கொண்டால் மோர் சாதத்துக்கு அருமையாக இருக்கும். செய்து பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்
திருவரங்கம்.