Friday, July 5, 2013

சேனை எரிசேரி செய்யலாம் வாங்க!

எரிசேரி கேரளத்தின் உணவு. சேனைக்கிழங்கில் பொடிப் பொடியாக நறுக்கி உப்பு, காரம் சேர்த்து கறி செய்து சாப்பிடுவோம். அவியலிலும் சேர்ப்பார்கள். அந்த சேனைக்கிழங்கில் எரிசேரி வித்தியாசமானது. வாய்க்கு ருசியாக இருக்கும். எங்கம்மா வீட்டில் அடிக்கடி செய்வார்கள். மாமியார் வீட்டில் வழக்கம் இல்லை. அவியல் செய்வார்கள். ஆனால் எரிசேரி செய்வது இல்லை. அம்மா செய்யும் போது நான் தெரிந்து கொள்ளவில்லை. இப்போ நம்ம கீதா மாமி அவங்க பதிவில போட்டிருந்ததை பார்த்து செய்து பார்த்தேன். அருமையான ருசி! நன்றி மாமி. அவங்க கிட்ட நேரிலும் சொல்லி விட்டேன்.

தேவையானப் பொருட்கள்:-

சேனைக்கிழங்கு கால் கிலோ
தேங்காய் ஒன்று (துருவிக் கொள்ளவும்)
அரிசி – 1 மேஜைக்கரண்டி (தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்)
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

தாளிக்க:-

தேங்காயெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி


செய்முறை:-

சேனைக்கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்து பெரிய பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொண்டு, அரிசி களைந்த இரண்டாம் தண்ணீரில் ஒரு கொதி விட்டு வடிகட்டவும். அல்லது தண்ணீரில் பாதி வேக்காடு வெந்த பின் அந்த தண்ணீரை கொட்டி விடவும். இதன் மூலம் சேனையின் காறல் குணம் குறையுமாம்.

தேங்காயில் ஒரு மூடியை துருவிக் கொண்டு அரிசியுடன் சேர்த்து மைய அரைத்து எடுக்கவும். மீதி ஒரு மூடியில் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளவும். சக்கையை தூக்கி எறிய வேண்டாம்.

தேவையான அளவு தண்ணீரில் சேனைக்கிழங்கைப் போட்டு நன்கு வேக விடவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, பின்பு இதில் அரைத்த தேங்காய் அரிசி விழுதை சேர்த்து ஒரு கொதி விடவும். பின்பு தேங்காய்ப்பால் சேர்த்து இரண்டு நிமிடங்களில் அடுப்பை அணைத்து விடலாம். மிளகாய்த்தூள் விருப்பம் தான். மிளகுத்தூளே போதும் என்பவர்கள் மிளகாய்த்தூளை விட்டு விடலாம்.

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயை சூடேற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து தேங்காய் சக்கையை சேர்த்து சிவக்க வறுத்து கொட்டவும். சுவையான சேனைக்கிழங்கு எரிசேரி தயார். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம், சைட் டிஷ்ஷாகவும் உபயோகிக்கலாம். பப்படம் அல்லது அப்பளம் நல்ல காம்பினேஷன்.

டிஸ்கி:-இந்த பாத்திரத்தின் கதையை உங்களுக்கெல்லாம் சொல்லா விட்டால் என் தலையே வெடித்து விடவும். என் மாமியாரிடம் இதே மாதிரி பாத்திரங்கள் ஒன்றுக்குள் ஒன்று போடும் படியாக செட்டாக இருக்கும். வீட்டிலுள்ள நபர்களுக்கும், அல்லது யாரேனும் வந்தாலும் அதற்கு தகுந்தாற் போல் பாத்திரம் எடுத்து உபயோகிப்பார். நெடுநாட்களாக அதே போல் எனக்கும் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் என் கணவரின் பெரியம்மாவிடமிருந்து எனக்கு இந்த பாத்திரம் கிடைத்தது. இப்போ இதில் தான் நான் சாம்பார், வத்தக்குழம்பு, கூட்டு, பொரிச்ச கூட்டு, கறிவேப்பிலைக் குழம்பு முதலிய அனைத்தும் செய்கிறேன். சென்ற முறை பெரியம்மா வீட்டுக்கு சென்ற போது பாத்திரத்தின் வயதை கேட்டேன். 1959 ஆம் ஆண்டு வாங்கியதாக தெரிவித்தார்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

திருவரங்கம்

29 comments:

 1. நன்னாயிட்டுண்டு மோளே!

  நாங்க தேங்காய் அரைச்சு விடறதில்லை கேட்டோ!

  வறுத்திடும்.

  ஆமாம். பாத்திரத்துக்குப் பேர் வச்சாச்சா?

  நம்ம வீட்டுலே எல்லாத்துக்கும் பெயர் உண்டு. நிலக்கோட்டை டம்ப்ளர், குருவாயூர் அப்பக்குண்டு. மதுரை வெண்ணெய்த்தாழி இப்படி"=___

  ReplyDelete
 2. எரிசேரி மிக நன்றாக இருக்கிறது ஆதி,
  கீதாவுக்கும் நன்றி,
  சேனையை வாங்கினவுடன் சமைக்காமல் கொஞ்சநாள் கழித்து சமைத்தால் காறல் குணம் இருக்காது.
  திருவனந்தபுரத்தில் எங்கள் பாட்டிவீட்டில் எரிசேரிசெய்து கீழே இறக்கி வைத்து அதில் வெங்காய வடகம் வறுத்து கொட்டுவோம்.
  பழமையான பாத்திரம் அருமை.(கல்சட்டி போலவே இருக்கு)

  ReplyDelete
 3. இது நன்னாயிட்டு உண்டு, ட்றை செய்து நோக்காமே.. :)

  ReplyDelete
 4. ருசியான குறிப்பு... நன்றி...

  டிஸ்கி - வருடம் வியக்க வைத்தது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. தேங்காயில் பாதியை வறுத்தும் மீதியை அரைச்சும் போடணும். அப்பத்தான் நாஞ்சில் பகுதி மக்களுக்கு எரிசேரி ருசிக்கும் மக்ளே :-))

  நம்மூட்டுப் பக்குவம் இங்கேயிருக்கு. ருசியுங்க :-)

  http://amaithicchaaral.blogspot.com/2010/08/blog-post_21.html

  ReplyDelete
 6. என் பாட்டி செய்து ருசித்துச் சாப்பிட்டது
  என மனைவி தெரியாது எனச் சொல்லிவிட்டார்
  உங்கள் பதிவு இப்போது மிகவும் உதவுகிறது
  படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. படிக்கும் போதே ருசியா இருக்குங்க...

  நாங்களும் செய்து பார்க்கிறோம்...

  ReplyDelete
 8. பழமை பேசும் பாத்திரத்தில் ருசியான எரிசேரி..

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 9. எரிசேரி எனக்குப் பிடிச்ச ஐட்டம்.. அப்படியே சாப்பிடலாம்..

  ReplyDelete
 10. பகிர்வுக்குப்பாராட்டுக்கள்.

  [கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு + சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகிய இரண்டு தவிர, வேறு எதையும் கண்ணால் பார்க்கக்கூட எனக்கு ஏனோ பிடிப்பது இல்லை]

  ReplyDelete
 11. ஹாஹா, விளம்பரத்துக்கு நன்றி. :)))) இதை நாங்க காதுக்கிண்ணம் என்று சொல்லுவோம். என் அம்மாவிடமும் சின்னதிலிருந்து பெரிசு வரை இருந்தது. இன்னொண்ணு அலுமினிய அடுக்கு செட். அதிலும் சின்னதிலிருந்து பெரிசு வரை இருந்தது. என்னிடமும் ஒண்ணு கொடுத்திருந்தாங்க. அலுமினியம் வேண்டாம்னு சொன்னதாலே திருப்பிக் கொடுத்துட்டேன். :))) இதிலே அடியிலே தாளித்துக் கொட்டிப் பயமில்லாமல் வற்றல் குழம்பு, பருப்புக் குழம்பு செய்யலாம். :))))

  ReplyDelete
 12. தேங்காயை வறுத்தும் போட வேண்டும், அரைத்தும் விட வேண்டும். எரிசேரிக்கே தேங்காய் தான் மிக முக்கியம். :))))

  ReplyDelete
 13. என் தம்பி மனைவி, (திருநெல்வேலிக்காரங்க)எரிசேரி செய்முறையில் மி.வத்தல், உளுத்தம்பருப்பு, மிளகு, தேங்காய் வறுத்து அரைக்கிறாங்க. அதைத் தவிர வெறும் தேங்காயும் அரைச்சு விடறாங்க.

  ReplyDelete
 14. செய்து பார்த்துட்டு சொல்றோம்

  ReplyDelete
 15. எரிசேரி சாப்பிட்டு நாளாச்சு... பாஸ் கிட்டப் போய் அப்ப்ளிகேஷன் போடணும். அது கற் சட்டிதானே?

  ReplyDelete
 16. ஓ..எரிசேரி என்றால் இப்படித்தான் செய்யவேண்டுமா?அவசியம் டிரை செய்கிறேன் ஆதி.

  ReplyDelete
 17. அருமை. பரம்பரை பாத்திரம்.

  ReplyDelete
 18. நானும் அமைதிக்கா பதிவைப் பார்த்துத்தான் (அப்போவே) எரிசேரி செய்யக் கத்துகிட்டேன். எனக்கும், எங்கூட்டுக்காரருக்கும் ரொம்பப் பிடிச்சு போச்சு அது.

  இது சேனை மட்டும் வச்சு எரிசேரியா? கிட்டத்தட்ட அதே செய்முறை. ஆனாலும், கால்கிலோ சேனைக்கு ஒரு தேங்காய்ங்கிறது ரொம்பவே அதிகமாத் தெரியுதேப்பா?

  பால் எடுத்த தேங்காய்ப்பூவையே வறுத்து அதில் போடலாம்கிறது நல்ல டிப்ஸ். இனி தேங்காய்க்குப் பதில் இப்படி செய்யறேன்.

  //சேனையை வாங்கினவுடன் சமைக்காமல் கொஞ்சநாள் கழித்து சமைத்தால் காறல் குணம் இருக்காது.//
  ஓ, அப்படியா? நானும் வாரத்துக்கு மொத்தமா காய்கறிகள் வாங்கிவிடுவதால் சேனை வாங்கி 2-3 நாள் கழிச்சுத்தான் செய்வேன். வெந்த தண்ணீரை வடிக்கல்லாம் மாட்டேன், சத்து போயிடுமே. ஆனாலும், எனக்கு மட்டும் காறல் இல்லையே, சேனை நல்ல சேனையோ, இல்ல நாந்தான் நல்லா சமைக்கிறேனான்னு ஒரு டவுட்டு இருந்துகிட்டே இருந்துது. கோமதிக்கா தெளிவாக்கிட்டாங்க. :-)

  ReplyDelete
 19. கல்சட்டியா ஆதி?

  ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறதா. சரியான மலரும் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்:)
  எரிசேரி பார்க்க யம்மியாக இருக்கிறது.

  ReplyDelete
 20. துளசி டீச்சர் - இது வரைக்கும் பெரியம்மா பாத்திரம் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்களே ஒரு பெயர் சொல்லிடுங்களேன்...:)) மாமியார் இந்த மாதிரி பாத்திரத்தை கெட்டி பாத்திரம் என்கிறார்கள்...

  கோமதிம்மா - வெங்காய வடாம் வறுத்து போடுவீர்களா? சுவை கூடும் என்று நினைக்கிறேன். கல் சட்டி இங்கு கோவில் கடையில் கிடைக்கின்றன... இது இண்டாலியம் என்று நினைக்கிறேன்...

  நிரஞ்சன் தம்பி - நன்றிங்க..

  திண்டுக்கல் தனபாலன் - ஆமாங்க...54 வயது அதுக்கு....:)

  அமைதிச்சாரல் - உங்க வீட்டு பக்குவமும் சூப்பர்...

  ரமணி சார் - தமிழ்மண வாக்குகளுக்கும், கருத்திற்கும் நன்றி...

  சங்கவி - நன்றிங்க...

  இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றி.

  ரிஷபன் சார் - நன்றி...

  வை.கோ சார் - கருத்திற்கு நன்றி. சேனை, கருணை, சேம்பு முத்லியவையும் சுவையானது சார்.

  ReplyDelete
 21. கீதா மாமி - குறிப்புக்கு மீண்டும் நன்றி. இங்கு கெட்டிக் கிண்ணம் என்கிறார்கள். இதிலேயே தாளித்து கொட்டி தான் செய்கிறேன்...

  //என் தம்பி மனைவி, (திருநெல்வேலிக்காரங்க)எரிசேரி செய்முறையில் மி.வத்தல், உளுத்தம்பருப்பு, மிளகு, தேங்காய் வறுத்து அரைக்கிறாங்க. அதைத் தவிர வெறும் தேங்காயும் அரைச்சு விடறாங்க.//

  மாமி கூட கொஞ்சம் பெருங்காயம் வறுத்து சேர்த்தா பொரிச்ச கூட்டு சுவை வந்திடாதா?...

  ராஜி - நன்றிங்க..

  ஸ்ரீராம் சார் - கெட்டிக் கிண்ணம் என்று சொல்வோம். கல் சட்டி வேறு. அது சூடாகவே நேரம் எடுக்கும் என்பார்களே... பாஸ் கிட்ட சொன்னீங்களா?

  ஸாதிகா - நன்றிங்க..

  மாதேவி - நன்றிங்க...

  மிடில் கிளாஸ் மாதவி - ஆமாங்க. ஆனா நான் செய்தது இல்லை...

  ஹுசைனம்மா - சேனையை கொஞ்ச நாள் வைத்திருந்து தான் அம்மா செய்வாங்க. நறுக்கும் போது கையையும் அரிக்காது...சிலருக்கு சாப்பிடும் போதும் நாக்கு அரிக்கும் என்பார்கள். அதுவும் இருக்காது...

  //கால்கிலோ சேனைக்கு ஒரு தேங்காய்ங்கிறது ரொம்பவே அதிகமாத் தெரியுதேப்பா?//

  சின்ன சைஸ் தேங்காய் தான்ப்பா...:))

  வல்லிம்மா - கல்சட்டி இங்கு கிடைக்கிறது. கல் விளக்கு கூட....ஆனால் இது கெட்டிக் கிண்ணம்...

  ReplyDelete
 22. எரிசேரி புதுமையான தகவல்...

  ReplyDelete
 23. சே.குமார் - நன்றிங்க..

  ReplyDelete
 24. இதுவரை செய்ததில்லை. உங்கள் குறிப்பு பார்த்து செய்கிறேன். நீங்க பயன்படுத்திய பாத்திரம் கல்சட்டியா, இல்லை ஈயப் பாத்திரமா?

  ReplyDelete
 25. ரஞ்சனிம்மா - இன்று கூட என் வீட்டில் எரிசேரி தான். சாம்பார், ரசம் தவிர்த்து வித்தியாசமாக சாதத்தில் போட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

  இது காரீயத்தில் ஆன பாத்திரமாம். பெரியம்மாவிடம் கேட்டுக் கொண்டு வந்தேன்.

  ReplyDelete
 26. எரிசேரி பற்றிய தகவல்கள் / செய்திகள் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.
  விஜய்

  ReplyDelete
 27. வாங்க விஜயராகவன் சார்,

  நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…