Monday, July 29, 2013

பாலகுமாரனின் முத்துக்கள் சில பார்வைக்கு….
பரணிலிருந்து எடுத்த பாலகுமாரனின் புத்தகங்களில் தேர்ந்தெடுத்து படித்த சில முத்துக்கள் தங்களின் பார்வைக்காக, ஒரு சில வரிகளில் இங்கே….

ஆனந்த வயல்

காதலித்து கரம் பிடித்தவர்களான செண்பகாவும், பன்னீர் செல்வமும் அன்னியோன்யமாக குடித்தனம் செய்கிறார்கள். பணம், புகழ், அந்தஸ்து எல்லாம் இருந்தும் அவர்களுக்கு இருக்கும் ஒரே மனக்குறை, திருமணமாகி வருடங்கள் ஆன பின்னும் குழந்தை இல்லை என்பது தான். இவர்கள் இருக்கும் கிராமத்தில் மற்றவர்களின் குதர்க்கமான பேச்சுக்கு ஆளாகிறார்கள். பல சந்தர்ப்பங்களை சந்தித்த பின் ஒரு சிறுவனை தத்தெடுக்கின்றனர். அந்த விழாவிலேயே செண்பகா கர்ப்பம் தரித்திருப்பதாக உறுதி செய்யப்படுவதாக முடிகிறது கதை..

1990 பதிப்பின் படி அப்போதைய விலை ரூ 30.

பந்தயப்புறா

கதாநாயகி திருவளர்ச்செல்வி ப்ளஸ் டூ முடித்து விட்டு வீட்டில் தான் இருக்கிறாள். நாவலை படித்து விட்டு ஆண்களில் அகல்யாநாவலின் சிவசுவைப் போல் யாரும் இருப்பார்களா? தனக்கு அப்படி ஒரு கணவன் கிடைப்பானா என யோசிக்கும் ஒரு சராசரி பெண். கதாசிரியனுக்கு கடிதம் எழுதி அண்ணன், அண்ணிக்கு தெரியாமல் சேர்ப்பிக்கிறாள். பெரும் பாடுபட்டு வேலைக்கு செல்கிறாள். பலதரப்பட்ட மனிதர்களையும், அனுபவங்களையும் சந்தித்து மனதை பக்குவப்படுத்திக் கொள்கிறாள். ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டு, கூண்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடக்கும் புறா பல மணி நேர போராட்டத்துக்கு பின் திறந்து விட்டால் மேலே மேலே சென்று பறந்து பந்தயப்புறாஆவதைப் போல திருவளர்ச்செல்வியும் சுதந்திரமாக மேலே பறக்கிறாள்.

1991 பதிப்பின் படி அப்போதைய விலை ரூ 35.

பச்சை வயல் மனது

சரஸ்வதி, சுதா, கல்பனா என மூன்று சகோதரிகளும் தாங்களே சம்பாதித்து வாழ்க்கையில் மேம்பட்டவர்கள். மூத்தவள் சரஸ்வதி விதவை. ஆசிரியராக வேலை செய்கிறார். அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். சுதா வங்கியில் பணிபுரிபவள். கல்பனா கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறாள். இளையவர்கள் இருவரும் திருமணமாகாதவர்கள். சுதாவுக்கு காதல் தோல்வி. பேராசிரியரும், கவிதாயினியுமான கல்பனா, சகோதரிகளின் வாழ்க்கையில் ஆண்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை எண்ணி தனக்கு திருமணமே வேண்டாம் எனச் சொல்ல, சகோதரிகளின் பிடிவாதத்தால் தினசரி தாள்களில் விளம்பரம் கொடுக்கிறாள். அதை பார்த்து வரும் நபர்களுடன் கிடைக்கும் சில அனுபவங்களில் அக்கா சுதாவின் வாழ்க்கைக்கு ஒரு வழி பிறக்கிறது

பனி விழும் மலர் வனம்:-

பச்சை வயல் மனதுபுத்தகத்திலேயே இந்த கதையும் உள்ளது. கதாநாயகி நாகலஷ்மி. அவள் பணிபுரியும் அலுவலகத்தில் அவள் இனிய தோழி புனிதா. இருவரும் அரட்டைகள் பல அடித்து கவியரங்கங்களுக்கு ஒன்றாக சென்று, வாழ்க்கை இப்படி இனிமையாக செல்லும் வேளையில். கவிஞர் ஒருவரை சந்திக்கின்றனர். புனிதா கவிஞரை விரும்பி பரஸ்பரம் காதல் பரிமாறல் நடக்கிறது. இடையில் நாகலஷ்மிக்கு வீட்டில் திருமணம் நிச்சயக்கின்றனர். மூவரும் சினிமாவுக்குச் செல்ல மாப்பிள்ளை வீட்டார் நாகலஷ்மியை கவிஞரோடு தொடர்புப்படுத்தி திருமணத்தை ரத்து செய்கின்றனர். நாகலஷ்மியின் அண்ணன் கவிஞரையே பேசி முடிக்க, வழி இல்லாமல் திருமணம் செய்து கொண்டு சீறுகிறாள். இதற்கிடையில் ரத்து செய்த வீட்டு மாப்பிள்ளை தன் வீட்டு சார்பாக மன்னிப்பு கோரி புனிதாவை ஏற்க முன் வருகிறான்.

1993 பதிப்பின் படி அப்போதைய விலை ரூ 24.

கை வீசம்மா கைவீசு

கதாநாயகி ராஜி தன் குழந்தைப்பருவம் முதல் வாழ்வில் ஏற்பட்ட இன்ப, துன்ப அனுபவங்கள் நம் கண் முன்னே விரிகிறது. திருமணம் என்ற பேச்சு வந்தவுடன், தன் காதல் விஷயத்தை சொல்ல குடும்பம் ஒத்துக் கொள்கிறது. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் ராஜியின் நடத்தையை சந்தேகப்பட்டு ஒப்புதல் தர மறுத்து கலவரமாகி மண்டபத்தோடு கிளம்பிச் செல்கின்றனர். மனதொடிந்த நிலையில் ராஜி குடும்பத்தார் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு செல்கின்றனர். பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுக்குப் பின் ராஜி தெளிவான முடிவெடுக்கிறாள்.

அப்போதைய விலை ரூ 30

இவையெல்லாமே ஒரே பதிப்பகத்தின் பதிப்புகள் தான்.

புத்தகங்களை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

நர்மதா பதிப்பகம்
16/7, ராஜாபாதர் தெரு, பாண்டி பஜார்
தியாகராய நகர், சென்னை – 600017.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


11 comments:

 1. புத்தக அறிமுகங்கள் எல்லாமே அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 2. அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 3. அனைத்தும் முத்துக்கள்... தொகுப்பிற்கு நன்றி...

  ReplyDelete
 4. பாலகுமாரன் சார் எழுத்துக்குக் கேக்கவா வேணும். அத்தனையும் நல்லாத்தான் இருக்கும்.

  ReplyDelete
 5. புத்தக அறிமுகம் அருமை....
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. அனைத்து முத்துக்களும் அருமை.
  பகிர்ந்த விதம் அருமை ஆதி.
  உங்கள் தொடர் அழைப்பை ஏற்றுக் கொண்டு பதிவு அனுப்பி இருக்கிறேன், பாருக்கள் ஆதி.

  ReplyDelete
 7. பரணேறியவற்றுக்கு உங்களால் மறுவாழ்வு கிடைத்துவிட்டது போலும். கதைச்சுருக்கங்களை அழகாய்த் தொடுத்து வாசிக்கும் ஆவலைக் கிளப்புகிறீர்கள். நன்றி ஆதி.

  ReplyDelete
 8. பாலகுமாரன் - அனைவருக்கும் பிடித்த குமாரன்.

  ReplyDelete
 9. பள்ளிக் காலங்களில் பாலகுமாரனின் பரம ரசிகை நான். பிடித்த வரிகளை எழுதி வைத்துக் கொண்டு,(இன்றும் அவை என்னிடம் பத்திரமாக) வாராந்தரி என்றால் அந்தப் பக்கங்களை வெட்டி சேகரித்து, அவர் எழுத்தை யாராவது விமர்சித்தால் வரிந்து கட்டி சண்டையிட்டு...

  திருமணமான புதிதில் 'இன்னும் பாலகுமாரனைத் தாண்டலையா நீங்க?' என்ற இவரின் நண்பரின் கேலி அவ்வளவு கடுப்பேற்றியது என்னை.

  இன்று அவரைத் தாண்டி பலரையும் படித்தாலும் அவருடைய எழுத்துக்கான மதிப்பு அப்படியே.

  ReplyDelete
 10. 'பச்சை வயல் மனது' இன்னும் நீங்காமல் நினைவில் நிற்கிறது. மற்ற கதைகளையும் படித்த நினைவு. சரியாக நினைவு இல்லை.

  நிஜமான முத்துக்கள் தான்.

  ReplyDelete
 11. புத்தக அறிமுகங்களை வாசித்து, கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள் பல...

  //நிலாமகள் said...
  பள்ளிக் காலங்களில் பாலகுமாரனின் பரம ரசிகை நான். பிடித்த வரிகளை எழுதி வைத்துக் கொண்டு,(இன்றும் அவை என்னிடம் பத்திரமாக) வாராந்தரி என்றால் அந்தப் பக்கங்களை வெட்டி சேகரித்து, அவர் எழுத்தை யாராவது விமர்சித்தால் வரிந்து கட்டி சண்டையிட்டு...//

  நல்லவேளை! நான் தப்பித்துக் கொண்டேன்...:))

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…