Friday, July 19, 2013

விருந்து சாப்பாடு!

சென்ற வாரம் கோவில் கும்பாபிஷேகம், திருமண வரவேற்பு, சீமந்தம் என அமர்க்களமாக சென்றது. ஒவ்வொரு இடத்திலும் பலவிதமான மனிதர்கள், அனுபவங்கள் என உங்களிடத்தில் பகிர நிறைய விஷயங்கள் உள்ளன. பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி!

எங்கள் குடியிருப்பில் இருப்பவர்களது மகளுக்கு திருமணம். திருமணத்தின் முதல் நாளே வரவேற்பு. பயங்கர கும்பல். அதோடு பல வரிசைகள்....  ரேஷன் கடையில் நிற்பது போல் இருக்கைக்கு ஒரு வரிசை, கவர் கொடுக்க ஒரு வரிசை என இருந்தால், அதற்கு அடுத்த வரிசை தான் கொடுமை….:) அது தாங்க சாப்பாட்டுக்கு ஒரு வரிசை! :) முதல் பந்தி முடிவதற்குள்ளாகவே அடுத்த பந்திக்கான ஆட்கள் முதல் பந்தியில் சாப்பிடுபவர்களின் இருக்கைக்கு பின்னே “சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திரு என்பது போல்! சிலர் முன்பதிவு வேறு செய்து கொண்டிருந்தார்கள்….:)

எப்படியோ இருக்கை கிடைத்து விட்டது. நான் அமர்ந்து கொண்டு அடுத்த இருக்கையில் ரோஷ்ணி அமர்வதற்குள் ஒரு பெண்மணி அமர்ந்து விட, என்னடா இது! என்று பார்த்தால் அவர் ரோஷ்ணியின் ஆசிரியர்…:) ஒன்றும் சொல்ல முடியலை. அவரும் அசடு வழிந்து கொண்டு எழுந்திருக்கவும் மனமில்லாமல், குழந்தையை நிற்க வைக்கவும் தோன்றவில்லை போலிருக்கிறது. தன்னுடைய இருக்கையில் பாதியை ரோஷ்ணிக்கு கொடுத்து, எங்கள் இருவருக்கும் இடையில் குழந்தைக்கு ஒரு இலையையும் அட்ஜஸ்ட் செய்து போட்டுக் கொடுத்து சாப்பிட வைத்தார்…..:))

மெனு இது தாங்க…. வெஜிடபுள் புலாவ், பிசிபேளாபாத், அக்கார அடிசல், தயிர்சாதம், சிப்ஸ், உருளைக்கிழங்கு கறி, வடை, குலாப்ஜாமூன்……:)

சரி இலை கிடைத்ததே பெரிய விஷயம். நிம்மதியாக சாப்பிடுவோம் என்றால்…..அதுவும் முடியவில்லையே...:( எனக்குப் பின்னே அடியாட்களைப் போல் அடுத்த பந்திக்கான ஆட்கள். என் பின்னே நின்று கொண்டிருந்த சிறுவனை அவன் அம்மா மிரட்டிக் கொண்டிருந்தார். நான் எழுந்தவுடன் அமரச் சொல்லி….:) திரும்பத் திரும்ப சொல்லவும், நான் அந்த சிறுவனிடம் கண்ணா நான் எழுந்தவுடன் இந்த இடம் உனக்கே உனக்கு தான். கவலைப்படாதே அம்மாவிடம் சொல்லி விடுஎன்று சொல்லி எழுந்தவுடன் அவனை உட்காரவும் வைத்த பின்னர் தான் அவன் அம்மா சமாதானம் ஆனாள்…:)) அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு பெரிசு இல்லையா?

அடுத்து கையை வரிசையில் யார் மீதும் படாமல், என் புடவையையும் காப்பாற்றிக் கொண்டு, அலம்பிக் கொண்டு வருவதே அங்கு வீரதீர சாகசம் செய்ததுக்கு சமம்…:) அடுத்து கும்பலில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு, பீடா போட்டுக் கொண்டு, தாம்பூலப் பையை வாங்கிக் கொண்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

உண்மையில் அன்று ஏதோ வீரதீரம் செய்து ஜெயித்து விட்டது போல் தான் இருந்தது….:)

அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து தயாராகி திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருப்பராய்த்துறையில் உள்ள என்னவரின் பெரியம்மா வீட்டிற்கு சென்றடைந்தோம். அன்று தான் இங்குள்ள பழம்பெரும் கோவிலான பசும்பொன் மயிலாம்பிகை சமேத பராய்த்துறைநாதர் குடி கொண்டுள்ள கோவிலின் மஹா கும்பாபிஷேகம். இத்திருத்தலத்தை பற்றி சைவப் பெரியோர்கள் நால்வரும் பாடியுள்ளனர். அருகிலுள்ள ராமகிருஷ்ண தபோவனத்தினர் தான் திருப்பணிகளை செவ்வனே நிறைவேற்றியிருந்தனர்.

பக்கத்து ஊர்களிலிருந்தும், வெளியூரிலிருந்தும் மக்கள் கடல் அலையென வந்திருந்தார்கள். விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்று வந்திருந்தவர்களுக்கு தபோவனத்தினர் அங்குள்ள விவேகானந்தர் பள்ளியில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தனர். நம் மக்கள் எங்கு சென்றாலும் எப்படியோ! அப்படித் தான் இங்கும். கும்பலில் அடித்துக் கொண்டு சாப்பாடுகளை வாங்கி கீழே சிந்தி அதை மிதித்து என அமர்க்களம் தான்….:) நாங்கள் பெரியம்மா கையால் பாயசத்துடன் அருமையான சமையலை வீட்டிலேயே சாப்பிட்டோம். அன்று மாலை சுமார் ஏழு மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அடுத்த நாள் பள்ளிக்கு செல்ல வேண்டிய காரணத்தால் கண்டு களிக்க முடியவில்லை.

மறுநாள் எங்கள் மேல் வீட்டில் உள்ளவர்களுக்கு சீமந்தம். ரோஷ்ணியை பள்ளிக்கு அனுப்பி விட்டு தயாராகி சென்றோம். நல்லவேளை இங்கு வரிசை இல்லை. எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்து விட்டு சீமந்தம் ஆனதும், கர்ப்பிணிக்கு நல்லது என்று வீணை வாசிக்கப்பட்டது. சிறிது நேரம் கேட்டு விட்டு, அடுத்து எங்கே சாப்பாடு தான். நிதானமாக அருமையான சாப்பாட்டை சாப்பிட்டோம். பால் பாயசம், வடை, உருளைக்கிழங்கு கறி, பீன்ஸ் பருப்புசிலி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, புளியோதரை, குடைமிளகாய் சாம்பார், ரசம், அப்பளம், ஊறுகாய், மோர் என மெனு இருந்தது. மோர் சாதமே நான் போட்டுக் கொள்ளவில்லை. ஹெவியாக போய் விட்டது. தாம்பூலத்தை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

இப்படியாக நான் கலந்து கொண்ட விழாக்களை பற்றி உங்க எல்லாரிடமும் சொல்லியாச்சு! அப்பாடா! இப்பத் தான் கொஞ்சம் ரிலாக்சா இருக்கு….:))  [அது என்ன எங்கேயோ புகைச்சலா இருக்கு!]

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


19 comments:

 1. //அது என்ன எங்கேயோ புகைச்சலா இருக்கு!//
  அது வேறெங்குமிருந்தும் இல்லை. இங்கு அமெரிக்காவிலிருந்து தான்! நல்லா இருங்க!

  ReplyDelete
 2. அட்டகாசமான விருந்து அந்த சீமந்த வீட்டுலேதான். கூடவே உக்காந்து சாப்பிட்ட திருப்தி எனக்கு!

  கல்யாண ஹால்களில் சாப்பாட்டுச்சமயம் உண்மையில் போர்தான்!

  வென்று வந்தீர்களே... அதுவே பெரிய விஷயம்:-))))

  ReplyDelete
 3. நல்லா வெட்டு வெட்டு என வெட்டி இருக்கீங்க போல, நம் இந்திய விசேடங்களில் இது தான் பிரச்சனை. கூட்டம் நிரம்பி வழியும், அதுவும் பந்திக்கு முந்துவதில், என்னவோ இப்போ தான் சோமாலியாவில் குலைப் பட்டினியில் கிடந்து வந்தது போல பாய்ந்து விழுவர். நம்மவர்களுக்கு கலியாணம், காதுக்குத்து, சீமந்தம், கருமாதி என போனவன் வந்தவனுக்கு எல்லாம் அழைப்பு விடுவதும் பெருந் தவறாகும், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் போதாதா? அதே போல நெருக்கம் இல்லாதோரின் வைபவங்களும் போக வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கும் செலவு மிச்சம், நமக்கும் நேரம் மிச்சம்.

  ReplyDelete
 4. சில இடங்களில் விருந்து இப்படி தான்... அதனால் பந்திக்கு முந்து...!

  முடிவில் திருப்தியான சாப்பாடு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அமர்களமான விருந்துகள்....!

  ReplyDelete
 6. கல்யாணப் பந்திகள்ல பின்னால காத்திருக்கறவங்க மிரட்டறது ஒரு பக்கம்னா, பக்கத்து இலைல சாப்பிடறவங்க (சிலசமயம்) நாகரீகமில்லாம சாப்பிடறதும், வீடியோக்காரங்க அங்ககூட காமிராவத் தூக்கிட்டு வந்துடறதும்.... பெரிய எரிச்சல் எப்பவும் எனக்கு. லேசா கொறிச்சுட்டு எஸ்கேப்பாயிடுவேன். உங்க அனுபவத்தை பகிர்ந்த விதம் ரசனை!

  ReplyDelete
 7. //அடுத்து கையை வரிசையில் யார் மீதும் படாமல், என் புடவையையும் காப்பாற்றிக் கொண்டு, அலம்பிக் கொண்டு வருவதே அங்கு வீரதீர சாகசம் செய்ததுக்கு சமம்…:) //

  மிகவும் சங்கடமான விஷயம் தான்.

  திட்டமிடாமல் ஏராளமானவர்களை அழைத்து விடுகிறார்கள். அதற்கு ஏற்றார்ப்போல இடவசதிகள் முதலியவற்றை திட்டமிட்டு செய்வதும் இல்லை. கஷ்டம் தான் ...... மஹா கஷ்டமான அனுபவம் தான்.

  சீமந்த சாப்பாடு பொறுமை, அருமை. அவஸ்தை ஏதும் இல்லை. கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. தலைநகரிலிருந்து திருவரங்கத்துக்கு வந்துட்டீங்களா!!!!!

  ReplyDelete
 9. உங்க நடை உங்களுடனேயே வந்து கல்யாணம், கோவில் திருவிழா, சீமந்தம் என அனைத்து விருந்துகளிலும் கலந்துக்கொண்ட அனுபவத்தை கொடுத்தது.

  இந்த மாதிரியான அனுபவம் எனக்கும் பல சமயங்களில்.. அதுவும் சமீபத்தில் ஆளும் கட்சியை சார்ந்த பெரிய தலைவருடைய வீட்டு திருமணத்தில் கலந்துக்கொண்டு சட்டை கிழியாமல் வெளியில் வந்தாலே போதும் என்றாகிவிட்டது. சுமார் ஐயாயிரம் பேரை எப்படி அழைப்பிதழ் கொடுத்து அழைத்தார்கள் என்று மலைத்துப் போகும் அளவுக்கு கூட்டம். தெரியாத்தனமாக காரில் போய்விட்டு அதை பார்க்கிங்தளத்தில் இருந்து எடுப்பதற்கே படாதபாடு பட்டோம்.

  ReplyDelete
 10. விருந்து மெனுவச் சொல்லி எங்களுக்கு பசிய உசுப்பேத்தி விட்டுட்டீங்களே...

  ReplyDelete
 11. கல்யாணப் பந்தியில் அதுவும் முதல் பந்தியில் இடம் பிடிப்பது ஒரு கலை! அதில் வென்று விட்டீர்கள்!
  எங்கள் ஊரில் ஒரு பந்திக்கு ஆட்கள் உட்கார்ந்ததும் கதவை மூடிவிடுவார்கள். அந்த பந்தி முடிந்ததும் சுத்தம் செயதபின் அடுத்த பந்திக்காக கதவைத் திறப்பார்கள். அப்போதும் நாற்காலி சுற்றும் போட்டி நடக்கத்தான் செய்யும்.

  (கல்யாண ஆல்பத்தில் சாப்பாட்டுக்கூட புகைப்படங்களில் காண்பது நகைச்சுவைக் காட்சிகள்தான்)

  ReplyDelete
 12. உண்மையில் அன்று ஏதோ வீரதீரம் செய்து ஜெயித்து விட்டது போல் தான் இருந்தது….:)//
  உண்மைதான்.பல திருமணங்களில் இப்படி கண்டதுண்டு.பல சமயம் சாப்பிடமாலேயே திரும்பியும் இருக்கிறோம்.எத்தனை பேரை அழைத்து இருக்கிறோம்,சுமாராக எத்தனை பேர் வருவார்கள் என்று கணக்கு போட்டு அதற்கு வசதியான மண்டபத்தை பிடித்தால் இந்த சங்கடம் இராது.சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் பொழுது இருக்கையை பிடித்துக்கொண்டு அடுத்த பந்திக்காரர் நிற்கும் பொழுது மிக சங்கடமாக உணர்வோம்.

  ReplyDelete
 13. சமீபத்தில் நான் சென்று வந்த உறவினர் ஒருவரின் 60ம் அப்படித்தான் அமைந்தது. நகரவே இன்ச் இஞ்சாக நகரவேண்டிய அளவு மண்டபம் கொள்ளாக் கூட்டம். ஆறாவது பந்தியில் அமர்ந்தும், எதுவும் குறைவின்றி கிடைத்தது திருப்தி!

  ReplyDelete
 14. சீமந்தவீட்டு சாப்பாடுதான் திருப்தி. மற்றைய தள்ளு முள்ளு எல்லாம் நமக்கு சரிப்பட்டுவராது.

  "வீரதீரம் செய்து ஜெயித்து விட்டபெண்ணுக்கு வாழ்த்துகள். :)))

  ReplyDelete
 15. நம்ம ஊர்களில் ஒரு சில இடங்களில் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவதே ஒரு சாகசம்தான்...

  ReplyDelete
 16. புகை டெல்லியிலிருந்து வருதுன்னு நினைக்கிறேன் :-)))

  சூப்பர் சாப்பாடுப்பா.

  ReplyDelete
 17. மூன்று வித்தியாசமான அனுபவங்கள். உங்களோடு நாங்களும் சுவைத்தோம். ரசித்தோம். ருசித்தோம்

  ReplyDelete
 18. தொடர்ந்து மூன்று நாட்கள் விருந்து சாப்பாடு என்றால் புகைச்சல் வராதா?

  எல்லாக் கல்யாணங்களிலும் இப்படியாகிவிட்டது, ஆதி.
  என்ன செய்வது? சிலசமயம் சாப்பிடாமலேயே வந்திருக்கிறோம்.

  நல்லா ரிலாக்ஸ் பண்ணிக்கோங்கோ!

  ReplyDelete
 19. இப்பகிர்வை ரசித்து, கருத்திட்டு தங்களின் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…