Monday, July 1, 2013

என் சோக கதையக் கேளுங்க…….

 
பதிவின் தலைப்பில் சொல்லியிருப்பது போல் பாட்டே பாடி விடலாம்…. என்னடா! ஆரம்பமே புலம்பலா இருக்கேன்னு எஸ்கேப் ஆகாதீங்க…. எனக்கொரு வழியச் சொல்லுங்க

மாயமில்லே மந்திரமில்லேன்னு சொல்லுவாங்க…. எனக்கு இப்ப அப்படித் தான் எதோ இருக்கும்னு தோணுது. சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன். எல்லாராலும் சுலபமாக செய்ய முடியற ஒரு விஷயம் என்னால செய்ய முடியல. என்ன விஷயம்?

தயிர் உறைய மாட்டேன் என்று தகராறு செய்கிறது. சிரிக்காதீங்க…. பத்து பேருக்கு கூட சுலபமாக சமையல் செய்ய முடிகிற எனக்கு தயிரை உறைய வைக்க தெரியவில்லை…. தில்லியில் இருந்த வரை கோடை காலத்தில் சுலபமாக செய்ய முடிந்தது. ஆனால் பனிக்காலத்தில் பாடாய் படுத்தி விடும். சண்டித்தனம் செய்யும். அங்குள்ள தோழிகள் எல்லோரும் மாவு பொங்கியது, தயிர் நன்றாக உறைந்தது என்பார்கள். எனக்குத் தான் பனிக்காலம் முழுவதும் இரண்டுமே தகராறு செய்யும். சிலருக்கு கை ராசி. அவங்க மாவு அரைச்சா உடனே புளிக்கும் என்பார்கள். அதனால் அவர்களுக்கு மாவு பொங்கியிருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். என் கை புளிக்காது…. (இது ஒண்ணும் ப்ளஸ் பாயிண்ட் இல்லங்கஉயரமாயிருந்தாலும், குள்ளமாயிருந்தாலும் சில விஷயங்களில் எப்படி பிரச்சனையோ அது போல் தான் இதுவும்).

மாவுக்கு கம்பளி எல்லாம் சுத்தி வைத்து இரண்டு நாள் கழித்து பார்த்தாலும் அப்படியே தான் இருக்கும். அதனால் பனிக்காலத்தில் இட்லி தோசைக்கு பை..பை சொல்லி விடுவோம்தயிரும் CASSROLEல் விட்டு வைத்தால் தயிர் நன்றாக உறைந்து விடும் என்பார்கள். ஃப்ரிட்ஜ் ஸ்டெபிலைசர் மேல் வைத்தும் பார்த்தேன். ம்ஹூம்…. அதனால் தயிர் கடையில் வாங்கிக் கொள்வோம். மூன்று கம்பளி போர்த்திக் கொண்டு தூங்கினாலும் என்னால் தயிர் சாப்பிடாமல் இருக்க முடியாது. சாதத்தில் போட்டு சாப்பிடா விட்டாலும் கப்பில் விட்டு குடித்து விடுவேன்….:))பதினோரு வருடங்கள் இப்படி சென்று கொண்டிருக்க, சென்ற வருடம் தமிழ்நாட்டிற்கு வந்த பின் இந்த தயிர் பிரச்சனை வரவில்லை. நம்ம ஸாதிகா அவர்கள் இந்த கதையை ஏற்கனவே எழுதியிருந்தாங்க அப்போ நான் கூட இப்போ நல்லாவே உறையுதுன்னு சொன்னேன். இப்போ நிலைமை தலைகீழ்…. நல்லா சூடு பண்ணியா? கலக்கினியா? தயிர் எவ்வளவு விட்ட? ஏடுக்கு கீழே கொஞ்சம் கலக்கு…. இப்படி ஏகப்பட்ட கேள்விகள். யோசனைகள். எல்லாம் செய்தாச்சு

ஒண்ணும் நடக்கறதில்லைகாரணமும் புரியவில்லை. இரண்டு நாளானாலும் பாலாவே இருக்கு. அப்புறம் வாடை வந்து கொட்டினேன். சரி! நம்ம செஞ்ச தயிரை விட வேண்டாம்னு கடையில தயிர் வாங்கி அதிலும் உறை ஊற்றினேன். ம்ஹூம்! ஒண்ணும் வித்தியாசம் இல்லை. மாமியாரிடம் சொன்னால்…” உனக்கு தாண்டிம்மா இப்படின்னு சொல்ற, நான் அரை ஸ்பூன் கூட தயிர் விடுவதில்லை, ஜோரா தயிர் ஆயிடுத்துன்னு சொல்லும் போது அழுகையாகத் தான் வந்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி. ஜீ பூம் பாவா இருக்கே

ரோஷ்ணி இதுவரை தயிர் சாப்பிட்டதில்லை. பாலும், பால் பொருட்களும் சாப்பிடும் அவள் தயிர் மட்டும் சேர்த்துக் கொள்வதில்லை. நாங்க தயிர்சாதம் சாப்பிடுவதையே ஒருமாதிரியாக பார்ப்பாள். சாப்பிடும் முன்னும், சாப்பிட்ட பின்னும் பாத்திரங்களை கொண்டு வந்து உதவி செய்யும் அவள் தயிர் பாத்திரத்தையே தொட மாட்டாள். வீட்டிற்கு ஒன்று வித்தியாசமாக இருக்க வேண்டாமா? (இதுவரை காபியே சுவைத்திராத என்னைப் போல் தயிர் சாப்பிடாத பெண் என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தான்.)

ஒரு வயது நிறைவடைவதற்குள் அனைத்தையும் கொடுத்து பழக்க வேண்டும் என்பார்கள். எல்லாம் கொடுத்தேன். பனிக்காலம் இருந்ததால் குழந்தைக்கு ஒப்புக் கொள்ளாதோ என்று தயிர் கொடுக்காமல் விட்டு விட்டேன். தவறு நான் தான் செய்து விட்டேனோ என்று நினைத்தால் இங்கு என் புகுந்த வீட்டில் நாத்தனார்களின் பசங்க எல்லாம் இதே கேஸ் தான். இப்போது தான் பெரியவர்களான பின் சேர்த்துக் கொள்கிறார்கள். அது போல் ரோஷ்ணியும் பெரியவளானதும் சாப்பிடுவாள் என வற்புறுத்துவதில்லை. ஆனால் இப்போ இருக்கற நிலைமையை பார்த்தால் நானும் தயிரை துறந்து விடுவேன் போல் இருக்கிறது….

யாராவது இதுக்கு ஒரு உபாயம் சொல்லுங்களேன்….

மீண்டும்  சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

42 comments:

 1. "தயிர் உறைய மாட்டேன்"கிறதை விட இதுவரை காபியே குடிக்காதது ஆச்சரியம் தான்...!

  ReplyDelete
 2. மண் பாத்திரம் இரண்டு உங்களுக்குத் தேவையான அளவு பார்த்து வாங்கிக்கொண்டு உபயோகிக்கவும். மண் பாத்திரத்தை நன்றாக கழுவி வெயிலில் வைத்து நன்கு காய்ந்த பிறகு உபயோகிக்கவும்.

  இது சரிப்படாவிட்டால் சொல்லி அனுப்பவும். எங்க வீட்டு அம்மா வந்து ட்யூஷன் எடுப்பாங்க.

  ReplyDelete
 3. தயிர் இல்லாமல் ரொம்பக் கஷ்டமாயிற்றே! இதற்குத் தீர்வு எனக்குத் தெரியலை.... ஙேன்னு முழிச்சுட்டிருக்கேன்!

  ReplyDelete
 4. தயிர் உறைவிடும் முன் கொஞ்சம் தயிரை எடுத்து வேறு கிண்ணத்தில் போட்டு அதை ஸ்பூனால் நன்கு கலக்கி விட்டு பின் இளஞ்சூட்டு பாலில் அதை கலந்து ஸ்பூனால் கலக்கி விட்டு வைக்க வேண்டும்.தயிர் கிண்ணத்தை உறைவிட்ட பின் அந்த பக்கம் இந்த பக்கம் நகர்ந்த கூடாது, திறந்து பார்க்க கூடாது.முன்பே எந்த இடத்தில் தயிர் உறை ஊற்றி இருக்கும் கிண்ணத்தை எங்கே வைப்பது என்று முடிவு செய்து விட்டு உறை ஊற்றி வைத்து விட்டு நகர்த்தாமல் இருந்தால் மந்திரமல்ல மாயம் இல்லை தயிர் உறைந்து இருக்கும். இப்போது வெயில் காலம் தானே! காலை 10 மணிக்கு உறை ஊற்றினால் கூட மதியம் 1மணிக்கு உறைந்து விடும்.

  ReplyDelete
 5. தெரியாத விஷயம்
  ஆகையால் நானும் பின்னூட்டங்களைப்
  படித்துக் கொண்டு வருகிறேன்
  (எங்களுக்கு இங்கே ஃப்ரிட்ஜில் வைக்காவிட்டால்
  சில மணி நேரத்தில் அதிகம் புளித்துவிடுகிற பிரச்சனை)

  ReplyDelete
 6. ஸாதிகாவின் பதிவிலும் இதைப் பகிர்ந்திருந்தேன்:
  /இளம் சூடான பாலில் உறைஊற்றிக் கலக்கி பாத்திரத்தை ஹாட் கேசில் வைத்துப் பாருங்கள். வருடக் கணக்காக நான் பின்பற்றும் முறை. இந்த ஊர் குளிருக்கு சிலர் இரவில் மைக்ரோவேவ் உள்ளே (ஆன் செய்யாமல்) பாத்திரத்தை வைத்துக் காலையில் எடுப்பதுண்டு./

  அகன்ற பாத்திரத்தைத் தவிர்த்து குறுகிய உயரமான மூடி கொண்ட எவர்சில்வர் டப்பாக்களில் சூடு சீக்கிரமாய் குறைந்து விடாமல் இருக்கும். அதை வைக்க என்றே லஞ்ச் அடுக்கு ஹாட்கேஸ் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். அதன் டப்பாக்களை வேறு உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளலாம்:)! முயன்று பாருங்கள்.

  ReplyDelete
 7. கோமதி அக்கா சொன்னது போல் செய்து பாருங்களேன்...

  இங்க எல்லாம் கடையில் விற்கும் தயிர் டப்பாக்கள்தான்...

  ReplyDelete
 8. கோமதி அரசு சொல்லி இருப்பது சரியான முறையே. என்றாலும் நாங்கள் மாற்றல் ஆகிச் செல்கையில் உறை மோர் இல்லை என்றால் பாலைக் காய்ச்சி ஆற வைத்து எலுமிச்சம்பழம் பிழிந்துவிடுவோம். அப்படிச் செய்து பாருங்கள். ஆனால் வட மாநிலங்களில் கிடைக்கும் பாலில் எலுமிச்சைச் சாறை ஊற்றினாலும் திரித்திரியாக வராது. இங்கே எப்படினு சொல்ல முடியலை. காலை ஏழு மணிக்கு உறை ஊற்றினால் மதியம் ஒரு மணிக்கு உறைந்துவிடும். அடுப்படியிலேயே வைத்துப் பார்க்கவும். சீக்கிரம் உறையலாம். புளிப்பு வரும் முன்னர் எடுத்து வைத்துவிடவும்.

  ReplyDelete
 9. எனக்கு புதிதாக உள்ளது இந்த விசயம்...

  ReplyDelete
 10. //ரோஷ்ணி இதுவரை தயிர் சாப்பிட்டதில்லை. பாலும், பால் பொருட்களும் சாப்பிடும் அவள் தயிர் மட்டும் சேர்த்துக் கொள்வதில்லை. நாங்க தயிர்சாதம் சாப்பிடுவதையே ஒருமாதிரியாக பார்ப்பாள். சாப்பிடும் முன்னும், சாப்பிட்ட பின்னும் பாத்திரங்களை கொண்டு வந்து உதவி செய்யும் அவள் தயிர் பாத்திரத்தையே தொட மாட்டாள். //

  இதுபோலவே எங்கள் குடும்ப உறவினர்களில் இருவர் உள்ளனர். அதில் ஒருவர் உங்கள் குழந்தை போலவே தான். வயது 50க்கு மேல் ஆகிவிட்டது. எங்குபோனாலும் அவருக்கு மட்டும் ரகசியமாகத் தனி சாப்பாடு தான். அவரின் மனைவிக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

  அவருக்குத்தெரியாமல் தோசை வார்க்கும் போது நிறைய மோரை ஊற்றி தோசை வார்த்துக் கொடுத்து வருகிறாள்.

  இன்னொருவனுக்கு வயது 28. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தான் மட்டும் மோரோ, தயிரோ, தயிர் பச்சடியோ சாப்பிட மாட்டான். ஆனால் பிறர் சாப்பிட்டால் அவனுக்கு அருவருப்பு ஏதும் கிடையாது.

  >>>>>

  ReplyDelete
 11. //ஒரு வயது நிறைவடைவதற்குள் அனைத்தையும் கொடுத்து பழக்க வேண்டும் என்பார்கள்.//

  ஆமாம். அது தான் மிகவும் நல்லது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 12. that that lady that that feeling.. but I know this feeling... becos I too same the feeling of the kodumai thayir problem...awwww...:(

  ReplyDelete
 13. தயிர் வாங்குவதே இங்கே வழக்கமாகிவிட்டது,. இருந்தாலும் சரியான உஷ்ணத்தில் உறை குத்தினால்தயிர் உறையாமல் இருக்காதே மா.அதுவும் திருச்சி வெய்யிலுக்கு!! ராமலக்ஷ்மி, கோமதியின் யோசனைகள் நன்றாக இருக்கின்றன. ஆல் த பெஸ்ட்.

  ReplyDelete
 14. திண்டுக்கல் தனபாலன் - எல்லாருக்குமே ஆச்சரியம் தான்..இதுவரை குடிக்க வேண்டும் என்று தோன்றியதேயில்லை...:)

  கந்தசாமி ஐயா - மண் பானை வாங்கி உபயோகித்து பார்க்கிறேன். ஓடோடி வந்து தகவல் சொன்னதற்கு நன்றி..

  கணேஷ் சார் - நானும் அப்படித்தான் முழிச்சிட்டிருக்கிறேன்...:)

  கோமதிம்மா - நீங்க சொன்னபடி செய்து பார்க்கிறேன். நன்றிம்மா.

  ரமணி சார் - எனக்கு புளிப்பு தயிர் பிடிக்கும். ஆனா எனக்கு புளிப்பே வர மாட்டேங்குதே....

  ராமலஷ்மி - நீங்க சொல்வதை குறித்துக் கொண்டேன்..நன்றிங்க.

  சே.குமார் - நன்றிங்க.

  கீதா மாமி - தகவலுக்கு நன்றி.

  சங்கவி - நன்றிங்க..

  வை.கோ சார் - நன்றி சார். நானும் , கணவரும் அவளுக்கு தெரியாமல் சில சமய்ங்களில் கலந்து கொடுத்துள்ளோம்...:)

  புவனா - நீங்களுமா!!!

  வல்லிம்மா - அது தானேம்மா பிரச்சனை... வெய்யிலிலும் உறைய மாட்டேங்குது...:)) இங்கு கிடைத்துள்ள யோசனைகளை உபயோகித்து பார்க்கிறேன்.


  ReplyDelete
 15. யாரும் இதை படித்து விட்டு சிரிக்கக் கூடாது...

  பக்கத்து வீட்டில் தயிர் உறைக்கூற்றி விட்டு உப்பு வைத்து சுத்திப் போட சொன்னாங்க...(மனுஷங்களுக்கு தான் சுத்தி போடுவாங்க...என் நிலைமை பாருங்க..) அதையும் செய்து பார்த்து விட்டு தான் இந்த பதிவே எழுதினேன்...:)

  ReplyDelete
 16. //உப்பு வைத்து சுத்திப் போட சொன்னாங்க//

  வெயில் காலத்தில் அதுவும் திருச்சியில் தயிர் உறையலன்னா பயங்கர கடுப்பாத்தான் இருக்கும். இந்த நிலைமைல யார் எது சொன்னாலும் செய்யத்தான் தோணும்.

  உங்களுக்கு தயிர், நம்ம அப்பாவிக்கு இட்லி, எனக்கு.. எனக்கு... இடியாப்பம்!! சரியா சமைக்கக்கூடாத தெரியாத காலத்திலேயே 10 பேருக்குன்னாலும் தனியாளா கடகடன்னு இடியாப்பம் பிழிஞ்சிடுவேன். யார் கண்ணு பட்டுச்சோ, ஏழெட்டு வருஷமா இடியாப்பமும் நானும் அமெரிக்கா-ஆப்கான் மாதிரி ஆகிட்டோம்!! அதுக்கும் சுத்திப் போட்டுப் பாக்கலாமான்னு... அவ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 17. நான் தயிருக்கு உரை ஊத்தியே ரொம்ப நாளாச்சு! இங்கே நல்லதாக கிடைப்பதால் வாங்கியே பழகியாச்சு.ஊர் போனால் தான் என் சங்கதி தெரியும்,என்னைப் பொருத்தவரை வெது வெதுப்பான கெட்டிப்பாலில் உரை ஊற்றினால் உறைந்து விடும்,ஒரு விஷயம் வாங்கும் பாலில் ஏதும் கலப்படமான்னு பாருங்க ஆதி.

  ReplyDelete
 18. எங்கள் வீட்டில் கந்தசாமி சார் சொன்ன படி மண் பானையில் உரை ஊற்றிவிட்டு கோமதி அரசு அவர்கள் சொன்னபடி சரியான வெப்பத்தில் உறை விட்டவுடன் அந்த பக்கம் இந்த பக்கம் நகர்த்தாமல் ராமலக்ஷ்மி சொன்னது போல oven உள்ளே வைத்து விடுகிறோம்! தயிர் தயார்!

  ReplyDelete
 19. ஹுசைனம்மா - ஓ! உங்களுக்கு இடியாப்பமா! சுத்திப் போட்டு தான் பாருங்களேன்...:))

  ஆசியா உமர் - அதே பால் தான் மாமியாரும் வாங்கறாங்க...:)) என்னத்தை சொல்றது...:))

  பந்து - ஓ! நீங்க எல்லா டிப்ஸையும் உபயோகிக்கிறீங்களா? சரி தான்...:))

  ReplyDelete
 20. ஹூசைனம்மா, இந்தப் பதிவிலே உங்க புலம்பலைப் பார்த்துட்டு இங்கே லிங்க் எடுத்துக் கொடுக்கலாம்னு போனால் நீங்க ஏற்கெனவே அங்கே வந்துட்டுப் போயிருக்கீங்க. ஹிஹிஹி, இன்னிக்குத் தான் பார்க்கிறேன். இந்த அச்சு இங்கே திருச்சியிலேயே கிடைக்குது. அவ்வளவு கஷ்டமா இருக்காது. நீங்க சொன்ன மாதிரி மொத்தமா அரிசியை ஊற வைச்சு அரைச்சு வைக்கிறதிலே எனக்குச் சரியா வரதில்லை. பச்சரிசியையும் நன்கு ஊற வைச்சுப் பின் இட்லி மாவு போல் நீர் விட்டு அரைச்சுக் கிளறி அதை அச்சில் போட்டு இடியாப்பம் மாதிரிப் பண்ணுவேன். அதையே தூளாக்கிச் சேவையாகவும் பண்ணுவதுண்டு. :)))) திருச்சி வந்தால் கடைகளில் பாருங்க கட்டாயமாய்க் கிடைக்கும். எனக்குச் சீரில் வந்தது. அப்போ 2 ரூபாய்க்கு வாங்கினதாக்கும். :))))

  ReplyDelete
 21. பாலை நல்லாக் காய்ச்சி லேசா குறுக விட்டுட்டு இளஞ்சூட்டோட இருக்கும்போதே உறைமோரை விட்டு நல்லாக் கலக்கி ஆடாம அசையாம ஒரு இடத்துல வெச்சுட்டாலே போதும். சில சமயம் காலைல உறைகுத்தி மதியம் வரைக்கும் உறையாம இருந்துச்சுன்னா வெறும் ஸ்பூனால இன்னொருக்கா அடிமேலாக கலக்கி வெச்சுருவேன். ஒரு மணி நேரத்துல அல்வா மாதிரி உறைஞ்சுரும்.

  @சேவை பிழியறதுக்குன்னே ஸ்டூல் உசரத்துக்கு ஒரு நாழி உண்டே கீத்தாம்மா. அது மேலயே உக்காந்துக்கலாம் போல இருக்கும். எங்க சித்தி வீட்ல பார்த்திருக்கேன். இங்கியும் சேவைமெஷின்னு கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. சேவைக்காக அவிச்ச இட்லிகளை இதில் போட்டு நல்லா வாகா நின்னுக்கிட்டு கைப்பிடியைச் சுத்தினாப்போறும். அடிப்பக்கம் வெச்சுருக்கும் தட்டில் அழகா வந்து விழுது.

  ReplyDelete
 22. எந்த ஆலோசனை தங்களுக்குப் பலனளித்தது என்பது குறித்து மேலும் ஒரு பதிவிட வேண்டுகிறேன்! நன்றி!

  ReplyDelete
 23. அமைதி, அதே மாதிரி நாழி தான் என்னிடமும். என்னோட சாப்பிடலாம் வாங்க பதிவிலே போய்ப் பாருங்க. :))))))

  ReplyDelete
 24. எங்க வீட்டுல பாலை 'சுருக்' பதத்தில் சுடவைத்து உறை குத்தில் காபி ஆற்றுவதுபோல நான்கு ஐந்து தடவை ஆற்றி வைத்துவிடுவேன். உறைந்து விடும்.
  புதிதாக வாங்கிய தயிரை உரை குத்த பயன்படுத்தவும்.

  முயற்சி பண்ணிப் பாருங்க, ஆதி!
  திருச்சில பால் உரையலையா? ஆச்சரியமா இருக்கே!

  ReplyDelete
 25. நானும் பால் மெல்லிய சூடாக இருக்கும்போது சிறிய கோப்பையில் ஊற்றி உறையை விட்டு கலக்கி விடுவேன். ஆட்டாமல் அசையாமல் இருக்க சற்று இருட்டான இடத்தில் வைத்துவிடுவேன்.
  பால் ஆடையுடன் போட்டால் கட்டித்தயிர் கிடைக்கும்.

  ReplyDelete
 26. ஊருக்குப் போய்விட்டு நாலைந்து நாட்கள் கழித்து வரும் போதெல்லாம் உறை விட இந்த டெக்னிக் யூஸ் பண்ணுவோம். பச்சைமிளகாயைப் போட்டு டைட்டா மூடி வச்சா போதும் !

  ReplyDelete
 27. முதலில் பாலை காச்சின பின் கை பொறுக்கும் சூட்டில் ஒரு மேசைக்கரண்டி தயிர் ஊற்றவேண்டும்.
  oven ஐ 250 degree ல் preheat பண்ணி oven ஐ off பண்ணிவிட்டு அதில் உறைகுத்தின பாலைவைக்கவேண்டும்.
  இரவு வைத்தால் காலையில் தயிர் நன்கு உறைந்துவிடும்.

  ReplyDelete
 28. ஆதி! தயிர் உறைய வைக்க பால் விரல் பொறுக்கும் சூட்டில் இருப்பது அவசியம். சற்று ஆறினாலும் உறையாது. ஒரு லிட்டர் காய்ச்சிய பாலுக்கு 2 மேசைக்கரண்டி கட்டித்தயிரை எடுத்துக்கொண்டு அதில் அரை ஸ்பூன் உப்பு, 10 கறிவேப்பிலை பிய்த்துப்போட்டு அதை ஸ்பூனால் நன்கு கலக்கி, பால் சேர்த்து இரண்டு தடவை நுரை பொங்க ஆற்றி இரண்டு சிறிய பாத்திரங்களில் ஊற்றி மூடி வைத்துப்பாருங்கள். அப்படியே கட்டியாக உறைந்து விடும்.

  ReplyDelete
 29. மேலே சொல்லப்பட்டது எதுவுமே செய்யறதில்லை. பால் நல்லாவே ஆறி இருக்கும். பால் மேல் படிந்திருக்கும் ஆடையை மட்டும் கரண்டியால் கொஞ்சம் போல் நகர்த்திட்டு ஒரு சொட்டு மோரை ஊற்றுவேன். அல்லது ஏற்கெனவே உறைந்த தயிரின் மேலே இருந்து எடுத்து வைத்த ஆடையைப் போடுவேன். உறைந்துவிடும். :)))) இரவு, பகல் கணக்கில்லை. ராஜஸ்தான், குஜராத்திலும் இதுவே தான் செய்தது. அங்கே எல்லாம் தோசை மாவு, இட்லி மாவு தான் குளிர்காலத்தில் புளிக்காது. இரண்டு நாட்கள் முன்னேயே அரைச்சு வைச்சுப்பேன். வெளியேவே இருக்கும். இலேசான புளிப்புடன் இட்லியும், தோசையும் நன்றாகவே வரும். :))))))

  ReplyDelete
 30. ஆதி..அஹ்ஹாஹா..உங்களுக்கு தயிர் பிரச்சினையா?சூப்பர்.

  இப்போ இருக்கற நிலைமையை பார்த்தால் நானும் தயிரை துறந்து விடுவேன் போல் இருக்கிறது…....வேண்டாம் வேண்டாம்..பண்ணுங்க பண்ணுங்க டிரை பண்ணிட்டே இருங்க...

  ReplyDelete
 31. //என்னோட சாப்பிடலாம் வாங்க பதிவிலே போய்ப் பாருங்க. :))))))//

  பார்த்துட்டேனே கீத்தாம்மா :-))

  //இரண்டு நாட்கள் முன்னேயே அரைச்சு வைச்சுப்பேன். வெளியேவே இருக்கும். இலேசான புளிப்புடன் இட்லியும், தோசையும் நன்றாகவே வரும்.//

  @கீத்தாம்மா,. எங்கூட்ல மாவு அரைச்ச மறுநாள் தோசை, அதுக்கடுத்த நாள் இட்லி. அந்த ரெண்டு நாளும் மாவு வெளியவே இருக்கும். அப்றமாத்தான் ஃப்ரிஜ்ஜுக்குள்ள போகும். இதான் குளிர்காலக்கணக்கு :-)))))

  ReplyDelete
 32. கீதா மாமி - நன்றி. நான் இப்போ ரெடிமேட் சேவை (CONCORD) தான் பயன்படுத்துகிறேன். இரண்டு மூன்று பேருக்கு ஓகே. ஆனால் நிறைய பேருக்கு அது காணாது...:) அம்மா அரைத்து செய்த சுவை இன்றும் நாவில்.. அதுக்கு ஈடு இணையில்லை...

  அமைதிச்சாரல் - குறிப்புகளுக்கு நன்றிங்க.

  சேஷாத்ரி சார்- மேலும் ஒரு பதிவா...:) கட்டாயம் சொல்கிறேன்.

  ரஞ்சனிம்மா - தகவல்களுக்கு நன்றி..

  மாதேவி - நன்றிங்க.

  ரிஷபன் சார் - நன்றி. பச்சை மிளகாய் குறிப்புக்கு.

  காஞ்சனா ராதாகிருஷ்ணன் - குறிப்புக்கு நன்றி. அவசியமில்லாததால் ஓவன் இதுவரை வாங்கிக் கொள்ளவில்லை...:)

  மனோம்மா - உப்பு, கறிவேப்பிலை போட்டு தயிர் உறைக்கூற்றுவது புதுசா இருக்கேம்மா. செய்து பார்க்கிறேன்.

  கீதா மாமி - நீங்க பெரிய ஆளு தான்...:) தயிர் உங்களுக்கு சுலபமா ஆயிடுதே.... சுத்திப் போட்டுக்குங்கோ மாமி...:))

  ஸாதிகா - உங்க செட் ஆகிட்டேன்னு சிரிக்கிறீங்களா...:)) ட்ரை பண்ணிட்டு இருக்கறேன்..

  அமைதிச்சாரல் - பொறாமையா இருக்குப்பா....:))))

  ReplyDelete
 33. வெற்றி வெற்றி....வெற்றி கண்டு விட்டேன் மக்களே....:)

  உறையாததின் காரணமும் கண்டுபிடித்து விட்டேன். இப்போ கட்டி தயிர் தான்...

  என்ன? எப்படி? அடுத்த பதிவில்....:)) அடிக்க வராதீங்க...நானும் ஒரு பதிவு தேத்த வேண்டாமா?

  ReplyDelete
 34. ஹாஹா, பாலைக் காய்ச்சாமாலேயே உறை ஊத்திவிட்டீங்களோ??? ஹிஹிஹி just kidding. என்னனு தெரிஞ்சுக்கலைனா மண்டை காய்ஞ்சுடும் போலிருக்கே! :)))))))))

  ReplyDelete
 35. அடிக்க வராதீங்க...நானும் ஒரு பதிவு தேத்த வேண்டாமா?//அடேங்கப்பா....சேம் பிளட்...

  ReplyDelete
 36. //உறையாததின் காரணமும் கண்டுபிடித்து விட்டேன்.//

  தயிருக்குப் பதிலா பாலையே உறை குத்தப் பயன்படுத்தினீங்களா ஆதி :-)))))))

  இந்தத்தயிர் உங்களுக்கு அல்வா கொடுத்துருச்சே :-))

  ReplyDelete
 37. கீதா மாமி - மண்டை உடையாமல் இருக்க ஒரு பதிவு போட்டிருக்கிறேன் பருங்க...

  ஸாதிகா - நீங்களும் தான்...பாருங்க..

  அமைதிச்சாரல் - ஆமாங்க...என்ன செய்வது...:))

  ReplyDelete
 38. தயிர் பற்றி இங்கு நிறைய டிப்ஸ் கிடைத்துள்ளது

  நானும் முன்பெல்லாம் ஊரில் கோமதி அக்கா சொல்வது போல் செய்வேன்.

  ஆனால் இங்கு தயிருக்கு பஞ்சமில்லை, நல்ல கெட்டி தயிர் , அப்படி யே எடுத்து சாப்பிடுவது போல் கிடைக்கிறது. ஆகையால் உறை குத்துவதில்லை

  மனோ அக்கா சொன்ன மாதிரி செய்து பார்க்கனும்

  ReplyDelete
 39. சொன்னால் நம்பமாட்டீர்கள்! எனக்கு தயிர் உறைகுற்றல் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் தினமும் தயிர் இல்லாமல் சாப்பிட மாட்டேன். வீட்டில் மனைவி வெளியூர் சென்று விட்டால் கடையில் வாங்கும் கப் தயிர்தான். உங்கள் வாசகர் வட்டம் மூலம் ஏகப்பட்ட டிப்ஸ். கோமதிஅரசு செய்முறை எளிமையாகத் தோன்றுகிறது. செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 40. ஜலீலாக்கா - நன்றி.

  தமிழ் இளங்கோ ஐயா - நீங்களும் செய்து பாருங்கள். நன்றி.

  ReplyDelete
 41. பாலை கொஞ்சம் சுருக்கென்று சுட வைத்து உறை ஊற்றிவிட்டு இரண்டு மூன்று பச்சை மிளகாய் விதைகளை உள்ளே போட்டுவிடுங்கள். அல்லது ஒரு சிறிய துண்டு மிளகாய் போட்டாலும் சரிதான். பச்சை மிளகாய் இல்லாவிட்டால் வரமிளகாய் பயன்படுத்தலாம்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…