Monday, July 29, 2013

பாலகுமாரனின் முத்துக்கள் சில பார்வைக்கு….
பரணிலிருந்து எடுத்த பாலகுமாரனின் புத்தகங்களில் தேர்ந்தெடுத்து படித்த சில முத்துக்கள் தங்களின் பார்வைக்காக, ஒரு சில வரிகளில் இங்கே….

ஆனந்த வயல்

காதலித்து கரம் பிடித்தவர்களான செண்பகாவும், பன்னீர் செல்வமும் அன்னியோன்யமாக குடித்தனம் செய்கிறார்கள். பணம், புகழ், அந்தஸ்து எல்லாம் இருந்தும் அவர்களுக்கு இருக்கும் ஒரே மனக்குறை, திருமணமாகி வருடங்கள் ஆன பின்னும் குழந்தை இல்லை என்பது தான். இவர்கள் இருக்கும் கிராமத்தில் மற்றவர்களின் குதர்க்கமான பேச்சுக்கு ஆளாகிறார்கள். பல சந்தர்ப்பங்களை சந்தித்த பின் ஒரு சிறுவனை தத்தெடுக்கின்றனர். அந்த விழாவிலேயே செண்பகா கர்ப்பம் தரித்திருப்பதாக உறுதி செய்யப்படுவதாக முடிகிறது கதை..

1990 பதிப்பின் படி அப்போதைய விலை ரூ 30.

பந்தயப்புறா

கதாநாயகி திருவளர்ச்செல்வி ப்ளஸ் டூ முடித்து விட்டு வீட்டில் தான் இருக்கிறாள். நாவலை படித்து விட்டு ஆண்களில் அகல்யாநாவலின் சிவசுவைப் போல் யாரும் இருப்பார்களா? தனக்கு அப்படி ஒரு கணவன் கிடைப்பானா என யோசிக்கும் ஒரு சராசரி பெண். கதாசிரியனுக்கு கடிதம் எழுதி அண்ணன், அண்ணிக்கு தெரியாமல் சேர்ப்பிக்கிறாள். பெரும் பாடுபட்டு வேலைக்கு செல்கிறாள். பலதரப்பட்ட மனிதர்களையும், அனுபவங்களையும் சந்தித்து மனதை பக்குவப்படுத்திக் கொள்கிறாள். ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டு, கூண்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடக்கும் புறா பல மணி நேர போராட்டத்துக்கு பின் திறந்து விட்டால் மேலே மேலே சென்று பறந்து பந்தயப்புறாஆவதைப் போல திருவளர்ச்செல்வியும் சுதந்திரமாக மேலே பறக்கிறாள்.

1991 பதிப்பின் படி அப்போதைய விலை ரூ 35.

பச்சை வயல் மனது

சரஸ்வதி, சுதா, கல்பனா என மூன்று சகோதரிகளும் தாங்களே சம்பாதித்து வாழ்க்கையில் மேம்பட்டவர்கள். மூத்தவள் சரஸ்வதி விதவை. ஆசிரியராக வேலை செய்கிறார். அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். சுதா வங்கியில் பணிபுரிபவள். கல்பனா கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறாள். இளையவர்கள் இருவரும் திருமணமாகாதவர்கள். சுதாவுக்கு காதல் தோல்வி. பேராசிரியரும், கவிதாயினியுமான கல்பனா, சகோதரிகளின் வாழ்க்கையில் ஆண்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை எண்ணி தனக்கு திருமணமே வேண்டாம் எனச் சொல்ல, சகோதரிகளின் பிடிவாதத்தால் தினசரி தாள்களில் விளம்பரம் கொடுக்கிறாள். அதை பார்த்து வரும் நபர்களுடன் கிடைக்கும் சில அனுபவங்களில் அக்கா சுதாவின் வாழ்க்கைக்கு ஒரு வழி பிறக்கிறது

பனி விழும் மலர் வனம்:-

பச்சை வயல் மனதுபுத்தகத்திலேயே இந்த கதையும் உள்ளது. கதாநாயகி நாகலஷ்மி. அவள் பணிபுரியும் அலுவலகத்தில் அவள் இனிய தோழி புனிதா. இருவரும் அரட்டைகள் பல அடித்து கவியரங்கங்களுக்கு ஒன்றாக சென்று, வாழ்க்கை இப்படி இனிமையாக செல்லும் வேளையில். கவிஞர் ஒருவரை சந்திக்கின்றனர். புனிதா கவிஞரை விரும்பி பரஸ்பரம் காதல் பரிமாறல் நடக்கிறது. இடையில் நாகலஷ்மிக்கு வீட்டில் திருமணம் நிச்சயக்கின்றனர். மூவரும் சினிமாவுக்குச் செல்ல மாப்பிள்ளை வீட்டார் நாகலஷ்மியை கவிஞரோடு தொடர்புப்படுத்தி திருமணத்தை ரத்து செய்கின்றனர். நாகலஷ்மியின் அண்ணன் கவிஞரையே பேசி முடிக்க, வழி இல்லாமல் திருமணம் செய்து கொண்டு சீறுகிறாள். இதற்கிடையில் ரத்து செய்த வீட்டு மாப்பிள்ளை தன் வீட்டு சார்பாக மன்னிப்பு கோரி புனிதாவை ஏற்க முன் வருகிறான்.

1993 பதிப்பின் படி அப்போதைய விலை ரூ 24.

கை வீசம்மா கைவீசு

கதாநாயகி ராஜி தன் குழந்தைப்பருவம் முதல் வாழ்வில் ஏற்பட்ட இன்ப, துன்ப அனுபவங்கள் நம் கண் முன்னே விரிகிறது. திருமணம் என்ற பேச்சு வந்தவுடன், தன் காதல் விஷயத்தை சொல்ல குடும்பம் ஒத்துக் கொள்கிறது. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் ராஜியின் நடத்தையை சந்தேகப்பட்டு ஒப்புதல் தர மறுத்து கலவரமாகி மண்டபத்தோடு கிளம்பிச் செல்கின்றனர். மனதொடிந்த நிலையில் ராஜி குடும்பத்தார் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு செல்கின்றனர். பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுக்குப் பின் ராஜி தெளிவான முடிவெடுக்கிறாள்.

அப்போதைய விலை ரூ 30

இவையெல்லாமே ஒரே பதிப்பகத்தின் பதிப்புகள் தான்.

புத்தகங்களை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

நர்மதா பதிப்பகம்
16/7, ராஜாபாதர் தெரு, பாண்டி பஜார்
தியாகராய நகர், சென்னை – 600017.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Friday, July 26, 2013

என் இனிய கணினியே - என் முதல் கணினி அனுபவம்

என்னுடைய கணினி அனுபவங்களைப் பற்றி எழுதச் சொல்லி தோழி கீதமஞ்சரி அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்கள். இந்த பதிவு எழுத காரணமாக இருந்த அவர்களுக்கு முதற்கண் என் நன்றி. இன்றைய உலகில் கணினி இல்லாமல் எதுவுமில்லை என்கிற அளவுக்கு நாம் இருக்கிறோம். ஆரம்பம் முதலே கணினியை கற்றுக் கொள்வதில் எனக்கு எந்த வித பயமோ, தகராறோ இருந்ததில்லை.

பள்ளி நாட்களில் கணினி பற்றி எதுவும் எனக்கு பரிச்சயமில்லை. பத்தாவது முடித்தவுடன் விடுமுறையில் தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் டைப் ரைட்டிங் சேர்ந்தேன். அப்போது அப்பா சொன்ன காரணம் பிற்காலத்தில் கணினியில் டைப் பண்ண சுலபமாக இருக்குமென்று.  ஏறக்குறைய ஒரு மாதம் சென்ற பின் எனக்கு MERITல் GOVERNMENT POLYTECHNIC-ல் D.M.E படிக்க இடம் கிடைத்தது. இனி டைப் ரைட்டிங் தேவையில்லை என்று அப்பா சொன்னதால் அதை தொடரவில்லை.நான் D.M.E அதாவது DIPLOMA IN MECHANICAL ENGINEERING படிக்கும் போது மூன்றாம் வருடத்தில் ஒரு செமஸ்டரில் கணினி பற்றிய பாடங்கள் வந்தன. அப்போது PRACTICAL வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று கணினியை காண்பித்தார்கள். MS-DOS, LOTUS, BASIC ஆகிய மொழிகளை பற்றிய அங்கு சிறு அறிமுகங்கள் கிடைத்தன. அப்போது வழக்கத்தில் இருந்த FLOPPY மூலம் விவரங்களை சேமித்துக் கொள்ளலாம் என்றும் தெரிந்து கொண்டேன்.

DIPLOMA முடித்த கையோடு நானும் என் தோழி கீதாவும் எங்கள் வீடுகளில் கெஞ்சி கூத்தாடி கோவையின் பிரபலமான PSG INSTIUTE OF TECHNOLOGY ல் AUTOCAD 2000 கோர்ஸுக்கு பணம் கட்டி சேர்ந்தோம். கோவையின் பிரபலமான கல்லூரியில் சேர்ந்தது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், அங்கிருந்த வெளிநாட்டினருடன் நாங்களும் கற்றுக் கொள்கிறோம் என்று மறுபுறம் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. DIPLOMA படிக்கும் போதே எனக்கு MACHINE DRAWING ல் மிகுந்த ஈடுபாடு உண்டு. வீட்டிலும் எப்போதும் DRAFTER வைத்துக் கொண்டு வரைந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். அதே MACHINE DRAWING கணினியில் 2D, 3D மூலம் வரைகிறதென்றால் கசக்குமா என்ன? முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டு சான்றிதழ்களைப் பெற்றேன்.அதன் பிறகு சென்னைக்கு சென்றேன். அங்கு தி.நகரில் என்னுடைய உறவினரின் சென்டரில் CNC (COMPUTER NUMERICAL CONTROL) TURNING AND MILLING கோர்ஸ் சேர்ந்தேன். லேத்தில்(LATHE) மாங்கு மாங்கென்று வேலை செய்து உருவாக்க வேண்டிய உதிரி பாகங்களை, கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் சிறிய அளவிலான லேத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கணினி சுலபமாய் முடிக்கிறது என்பது எனக்கு அப்போது மிகுந்த ஆச்சரியம் தான். கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் லேத்தில், உருவாக்க வேண்டிய பாகத்தை பொருத்தி விட்டு, கணினியில் PROGRAMME களை டைப் பண்ணி ON பண்ணி விட்டால் அவ்வளவு அழகாக நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி GROOVE  எடுக்க வேண்டிய இடத்தில் எடுத்து என்று சூப்பராக இருந்தது. அப்போது G00, G20, G14, G21  என ஏகப்பட்ட ப்ரோகிராம்களை விருப்பமாக எழுதி செய்திருக்கிறேன். அந்த கோர்ஸ் முடித்து சான்றிதழ் பெற்றவுடன், அவர்களே அடுத்து PRO E  கோர்ஸ் சேர்ந்து படித்து முடித்தவுடன் அங்கேயே பணிபுரியும் படிச் சொன்னார்கள்.

ஆனால் சில பல காரணங்களால் அங்கிருந்து கிளம்பி கோவை வந்து சில இடங்களில் பணிபுரிந்தேன். அப்போது என் மாமா EMAIL பற்றி எனக்கு சொல்லித் தந்து எனக்கு ஒரு முகவரியும் துவக்க சொல்லிக் கொடுத்தார். அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்பியும் பழகினேன். பணிபுரிந்த இடங்களில் தனிக்காட்டு ராணியாக இருக்கும் போது WINAMP மூலம் பாடல்கள் கேட்டுக் கொண்டும், SOLITAIRE, MINESWEEPER விளையாடிக் கொண்டும் இருப்பேன். திருமணம் நிச்சயமான பின் ப்ரவுசிங் செண்டர் சென்று ஓரிரு முறை என்னவரோடு CHAT செய்தும் பழகிக் கொண்டேன். அதன் பிறகு திருமணமாகி தில்லி சென்ற பின் எனக்கும் கணினிக்கும், என்னுடைய துறைக்கும் எந்த வித தொடர்பும் இன்றி, முழு மூச்சோடு கரண்டி அலுவலகத்தில் பணிபுரியத் தொடங்கினேன்….:))2009ல் அலுவலகத்தில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் என்னவர் தன்னுடைய வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்ததிலிருந்து, தான் எழுதியதை முடிந்த போது ப்ரிண்ட் அவுட் எடுத்து வந்து காண்பிப்பார்கள். படித்துப் பார்ப்பேன். பின் எங்கள் வீட்டில் மடிக்கணினி வாங்கிய பின்னும் அவரது பதிவுகளைத் தான் படித்துக் கொண்டிருந்தேன். பின்னூட்டம் இடுவதற்கு அவருக்கு ஃபோன் போட்டு கேட்டு, தங்கிலீஷில் கொலை பண்ணி போட்டுக் கொண்டிருந்தேன்.

2010 ஆகஸ்ட்டில் (அட! அடுத்த மாதம் என்னுடைய வலைப்பூவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்) எனக்கான வலைப்பூவை தொடங்கி கொடுத்து NHM WRITER டவுன்லோட் செய்து தமிழில் டைப் பண்ண சொல்லிக் கொடுத்தார். முதலில் டைரியில் எழுதி வைத்துக் கொண்டு அதைப் பார்த்து டைப் பண்ண ஆரம்பித்தேன். இரண்டு பேரும் வலைப்பூவில் எழுதுவதனால் ஒரு சலுகை. ஆரம்ப காலங்களில் நான் எழுதி வைத்துள்ளதை என்னவர் தான் டைப் பண்ணி பதிவிடுவார். அதன் பின் சில நாட்களில் நானும் கற்றுக் கொண்டேன். டைப்பிங் தெரியாததால் மிகவும் மெதுவாக, KEYPAD மட்டுமே பார்த்து டைப்பிக் கொண்டிருந்தேன். இப்போது தான் KEYPAD ஐ பார்க்காமல் டைப் பண்ண முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பல சமயங்களில் வெற்றியும் கிட்டுகிறது…..:))


எப்போ பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்துட்டிருக்காஎன்று அவ்வப்போது பேச்சுகள் காதில் விழுந்தாலும், என்னவரின் ஒத்துழைப்பு தான் நான் பதிவுலகத்தில் உலவுவதற்கு காரணம். மகளும் இப்போது தன்னுடைய பாடத்தில் வரும் கணினி விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுக்கிறாள். பதிவுலகம் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நட்பு வட்டமும் பெரிதாகி உள்ளது. எந்த ஊருக்கு செல்வது என்று முடிவெடுத்தாலும் அங்கு பதிவர் சந்திப்பு வைத்துக் கொள்ளலாமா? என்று தான் முதலில் தோன்றுகிறது. இந்த மாதிரி பல சந்தோஷங்களை தந்திருக்கும், தந்து கொண்டிருக்கும் என் தோழி கணினியே உனக்கு நன்றிகள் பல

இந்த பதிவை தொடர நான் அழைப்பது….


மீண்டும் சந்திப்போம்.....


ஆதி வெங்கட்
திருவரங்கம்.Monday, July 22, 2013

நேர் நேர் தேமா!

தமிழ் இலக்கணத்தில் உள்ள நேர் நேர் தேமா, நிறை நேர் புளிமா என்று வகுப்பு நடத்தவோ அல்லது பள்ளிக்கூட நினைவுகளோ பகிர்ந்து கொள்ள அல்ல….. இந்த பகிர்வு.

தோழியிடத்தில் இரவல் வாங்கி (புத்தகங்களைத் தேடி வேட்டை தான்!) சமீபத்தில் நான் வாசித்த இரண்டு புத்தகங்களும் என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது. நீயா? நானா?” கோபிநாத் அவர்களின் நேர் நேர் தேமாவும், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்ற புத்தகங்களும் தான் அவை.. இரண்டுமே சுய முன்னேற்ற புத்தகங்கள்

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க:-


பட உதவி: கூகிள்


மக்களை கவர்வதற்காக வைத்த தலைப்போ? என முதலில் தோன்றினாலும் உள்ளே உள்ள விஷயங்கள் ஒவ்வொன்றும் நம்முள்ளே இருக்கும் தன்னம்பிக்கையை தூண்டில் போட்டு வெளியே இழுக்கிறது.  சந்தோஷம் எங்கும் வெளியில் இல்லை. நம்முள்ளே தான் வைத்துக் கொண்டு இருக்கிறோம். அன்றாட வாழ்வில் சின்னச் சின்ன மாற்றங்களை ஏற்படுத்துவது மூலம் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி தரலாம்.இப்படியான பல விஷயங்களை எடுத்துக்காட்டுகளுடன், சுலபமாக நாம் புரிந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் தந்திருக்கிறார்.

நேர் நேர் தேமா:-


இந்த புத்தகத்தின் முன்னுரையில் கோபிநாத் அவர்களின் வார்த்தைகளில் இதோ

அரிச்சந்திரன் நாடகம் பார்த்த காந்தி, தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார் என்று சொல்லுவார்கள். ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கை இன்னொருவரை அப்படியே மாற்றி விடுமா என்ன? அது சாத்தியம் என்றால், அரிச்சந்திரன் நாடகம் பார்த்த அத்தனை பேரும் உண்மையே பேச வேண்டும் என்று காந்தி போல் முடிவு செய்திருக்க வேண்டும். இந்த புத்தகத்தையும் நான் அப்படியே பார்க்கிறேன்.

எனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் நான் சந்தித்த சிறப்பான மனிதர்கள் சிலர் பேசிய விஷயங்கள், அவர்களின் வாழ்க்கை, தங்கள் துறையில் எடுத்துக் கொண்ட முயற்சிகள், அவர்கள் இன்று வரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

எழுதியது கோபிநாத் ஆக இருக்கட்டும்.
படிக்கிறவர்கள் காந்தியாக இருங்கள்.
அது தான் என் வேண்டுகோள்.

இந்த புத்தகத்தில் இவர் சிறப்பான சில மனிதர்களான சாலமன் பாப்பையா, பத்மா சுப்ரமணியம், சிவசங்கரி, ப.சிதம்பரம், பாலச்சந்தர் போன்ற பலரை விஜய் டீவி மூலமாக பேட்டி எடுத்து நமக்கு அவர்கள் வாழ்க்கையில் கண்ட வெற்றியின் தாரக மந்திரத்தை நமக்கு தந்திருக்கிறார்.

இந்த கலியுகத்திலும் நேர்மையும், உண்மையும் , செய்யும் தொழிலின் நேர்த்தியும், முயற்சியும் தான் வாழ்வை வெற்றிக்கு இட்டுச் செல்கிறது என படிக்கும் போதே நம் தன்னம்பிக்கையின் அளவு நிச்சயம் கொஞ்சம் கூடுதலாகிறது என்பதோ உண்மை.

படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

நீங்களும் வாங்கிப் படித்து டானிக்சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்களேன்….

இந்த புத்தகங்களை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை
தி.நகர், சென்னை- 600017.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Friday, July 19, 2013

விருந்து சாப்பாடு!

சென்ற வாரம் கோவில் கும்பாபிஷேகம், திருமண வரவேற்பு, சீமந்தம் என அமர்க்களமாக சென்றது. ஒவ்வொரு இடத்திலும் பலவிதமான மனிதர்கள், அனுபவங்கள் என உங்களிடத்தில் பகிர நிறைய விஷயங்கள் உள்ளன. பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி!

எங்கள் குடியிருப்பில் இருப்பவர்களது மகளுக்கு திருமணம். திருமணத்தின் முதல் நாளே வரவேற்பு. பயங்கர கும்பல். அதோடு பல வரிசைகள்....  ரேஷன் கடையில் நிற்பது போல் இருக்கைக்கு ஒரு வரிசை, கவர் கொடுக்க ஒரு வரிசை என இருந்தால், அதற்கு அடுத்த வரிசை தான் கொடுமை….:) அது தாங்க சாப்பாட்டுக்கு ஒரு வரிசை! :) முதல் பந்தி முடிவதற்குள்ளாகவே அடுத்த பந்திக்கான ஆட்கள் முதல் பந்தியில் சாப்பிடுபவர்களின் இருக்கைக்கு பின்னே “சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திரு என்பது போல்! சிலர் முன்பதிவு வேறு செய்து கொண்டிருந்தார்கள்….:)

எப்படியோ இருக்கை கிடைத்து விட்டது. நான் அமர்ந்து கொண்டு அடுத்த இருக்கையில் ரோஷ்ணி அமர்வதற்குள் ஒரு பெண்மணி அமர்ந்து விட, என்னடா இது! என்று பார்த்தால் அவர் ரோஷ்ணியின் ஆசிரியர்…:) ஒன்றும் சொல்ல முடியலை. அவரும் அசடு வழிந்து கொண்டு எழுந்திருக்கவும் மனமில்லாமல், குழந்தையை நிற்க வைக்கவும் தோன்றவில்லை போலிருக்கிறது. தன்னுடைய இருக்கையில் பாதியை ரோஷ்ணிக்கு கொடுத்து, எங்கள் இருவருக்கும் இடையில் குழந்தைக்கு ஒரு இலையையும் அட்ஜஸ்ட் செய்து போட்டுக் கொடுத்து சாப்பிட வைத்தார்…..:))

மெனு இது தாங்க…. வெஜிடபுள் புலாவ், பிசிபேளாபாத், அக்கார அடிசல், தயிர்சாதம், சிப்ஸ், உருளைக்கிழங்கு கறி, வடை, குலாப்ஜாமூன்……:)

சரி இலை கிடைத்ததே பெரிய விஷயம். நிம்மதியாக சாப்பிடுவோம் என்றால்…..அதுவும் முடியவில்லையே...:( எனக்குப் பின்னே அடியாட்களைப் போல் அடுத்த பந்திக்கான ஆட்கள். என் பின்னே நின்று கொண்டிருந்த சிறுவனை அவன் அம்மா மிரட்டிக் கொண்டிருந்தார். நான் எழுந்தவுடன் அமரச் சொல்லி….:) திரும்பத் திரும்ப சொல்லவும், நான் அந்த சிறுவனிடம் கண்ணா நான் எழுந்தவுடன் இந்த இடம் உனக்கே உனக்கு தான். கவலைப்படாதே அம்மாவிடம் சொல்லி விடுஎன்று சொல்லி எழுந்தவுடன் அவனை உட்காரவும் வைத்த பின்னர் தான் அவன் அம்மா சமாதானம் ஆனாள்…:)) அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு பெரிசு இல்லையா?

அடுத்து கையை வரிசையில் யார் மீதும் படாமல், என் புடவையையும் காப்பாற்றிக் கொண்டு, அலம்பிக் கொண்டு வருவதே அங்கு வீரதீர சாகசம் செய்ததுக்கு சமம்…:) அடுத்து கும்பலில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு, பீடா போட்டுக் கொண்டு, தாம்பூலப் பையை வாங்கிக் கொண்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

உண்மையில் அன்று ஏதோ வீரதீரம் செய்து ஜெயித்து விட்டது போல் தான் இருந்தது….:)

அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து தயாராகி திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருப்பராய்த்துறையில் உள்ள என்னவரின் பெரியம்மா வீட்டிற்கு சென்றடைந்தோம். அன்று தான் இங்குள்ள பழம்பெரும் கோவிலான பசும்பொன் மயிலாம்பிகை சமேத பராய்த்துறைநாதர் குடி கொண்டுள்ள கோவிலின் மஹா கும்பாபிஷேகம். இத்திருத்தலத்தை பற்றி சைவப் பெரியோர்கள் நால்வரும் பாடியுள்ளனர். அருகிலுள்ள ராமகிருஷ்ண தபோவனத்தினர் தான் திருப்பணிகளை செவ்வனே நிறைவேற்றியிருந்தனர்.

பக்கத்து ஊர்களிலிருந்தும், வெளியூரிலிருந்தும் மக்கள் கடல் அலையென வந்திருந்தார்கள். விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்று வந்திருந்தவர்களுக்கு தபோவனத்தினர் அங்குள்ள விவேகானந்தர் பள்ளியில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தனர். நம் மக்கள் எங்கு சென்றாலும் எப்படியோ! அப்படித் தான் இங்கும். கும்பலில் அடித்துக் கொண்டு சாப்பாடுகளை வாங்கி கீழே சிந்தி அதை மிதித்து என அமர்க்களம் தான்….:) நாங்கள் பெரியம்மா கையால் பாயசத்துடன் அருமையான சமையலை வீட்டிலேயே சாப்பிட்டோம். அன்று மாலை சுமார் ஏழு மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அடுத்த நாள் பள்ளிக்கு செல்ல வேண்டிய காரணத்தால் கண்டு களிக்க முடியவில்லை.

மறுநாள் எங்கள் மேல் வீட்டில் உள்ளவர்களுக்கு சீமந்தம். ரோஷ்ணியை பள்ளிக்கு அனுப்பி விட்டு தயாராகி சென்றோம். நல்லவேளை இங்கு வரிசை இல்லை. எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்து விட்டு சீமந்தம் ஆனதும், கர்ப்பிணிக்கு நல்லது என்று வீணை வாசிக்கப்பட்டது. சிறிது நேரம் கேட்டு விட்டு, அடுத்து எங்கே சாப்பாடு தான். நிதானமாக அருமையான சாப்பாட்டை சாப்பிட்டோம். பால் பாயசம், வடை, உருளைக்கிழங்கு கறி, பீன்ஸ் பருப்புசிலி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, புளியோதரை, குடைமிளகாய் சாம்பார், ரசம், அப்பளம், ஊறுகாய், மோர் என மெனு இருந்தது. மோர் சாதமே நான் போட்டுக் கொள்ளவில்லை. ஹெவியாக போய் விட்டது. தாம்பூலத்தை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

இப்படியாக நான் கலந்து கொண்ட விழாக்களை பற்றி உங்க எல்லாரிடமும் சொல்லியாச்சு! அப்பாடா! இப்பத் தான் கொஞ்சம் ரிலாக்சா இருக்கு….:))  [அது என்ன எங்கேயோ புகைச்சலா இருக்கு!]

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


Wednesday, July 17, 2013

நினைத்து மறுகுதடி நெஞ்சம்


பட உதவி: கூகிள்

இம்முறை நூலகத்திலிருந்து எடுத்த இந்த புத்தகம் மிகவும் அருமையானதொரு புத்தகம். உமா பாலகுமார் அவர்கள் எழுதிய இந்த புத்தகத்தில் உள்ள இரு கதைகளுமே அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடியவை அல்ல

முதல் கதையான நினைத்து மறுகுதடி நெஞ்சத்தில் விருது நகரிலிருந்து மாற்றலாகி கேரளத்தின் ஆலப்புழைக்கு வந்துள்ள குடும்பத்தின் தலைவி சியாமளா. சியாமளாவின் துள்ளி திரியும் மகளான செளம்யா தான் கதை நாயகி. வேலை தேடிக் கொண்டிருக்கும் அவளுக்கு பக்கத்து வீட்டு கருணாகரன் அங்கிள் தான் வேலை செய்யும் ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை வாங்கித் தருகிறார்.

அங்கு நாயகனும் ஹோட்டலின் முதலாளியுமான விதுரனுடன் பழக்கமாகிறது. இருவரும் நேசிக்க ஆரம்பிக்கின்றனர். விதுரனின் தந்தை இவர்கள் காதலுக்கு ஒப்புதல் தெரிவித்து செளம்யாவின் வீட்டுக்கு செல்கிறார். அங்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. செளம்யாவின் தாய் தான் விதுரனுக்கு தாய் என்று விதுரனின் தந்தை சொல்கிறார். சியாமளாவை நடத்தை கெட்டவள் என்று கூறி அங்கிருந்து செல்ல இளசுகள் இருவரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? கடைசியில் இருவரும் குடும்பத்தார் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். அது எப்படி? படித்தால் தான் அதன் சுவாரசியத்தை புரிந்து கொள்ள முடியும்.

அடுத்த கதை உனக்கென தவமிருந்தேன்இதுவும் ஒரு காதல் கதையே…. நித்தி, தாரா இருவரும் கல்லூரி தோழிகள். இருவரில் தாரா காதல் வயப்பட்டிருந்தாள். அவளது வீட்டில் சொந்தம் விட்டு விடக் கூடாது என்று அத்தை மகனை பேசி முடித்திருந்தனர். தாரா அவளது காதல் பற்றி அம்மாவிடம் தெரிவித்தும் ஒப்புதல் கிடைக்க வில்லை. இதைப் பற்றியும் தன் காதலனுடன் எப்படி சேருவது என்றும் சொல்லிக் கொண்டிருந்த தாரா, ஒரு வழியாக திருமணத்திற்கு ஒப்பு கொண்டுள்ளாள். இந்த நேரத்தில் ப்ராஜெக்ட் விஷயமாக சென்னையிலிருந்து வந்த நித்தியையும் தன்னுடன் அழகு நிலையத்திற்கு கூட்டிச் சென்று, அங்கிருந்து நித்திக்கும் தெரியாமல் ஓடிப் போய் தன் காதலனுடன் திருமணம் செய்து கொள்கிறாள்.


இது மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்து, மாப்பிள்ளை நொந்து போய் கிடக்கையில், அங்கிருந்த நித்தியை மணப்பெண்ணாக ஏற்க சொல்கின்றனர். மாப்பிள்ளை யாரென அப்போது தான் நித்தி தெரிந்து கொள்கிறாள். சிறுவயதில் கோவையில் அக்கம் பக்கம் வீடுகளில் வசித்து இருவர் குடும்பமும் ஏற்கனவே பரிச்சயமானவர்கள் தான். அதுவும் போக நித்திக்கு அப்போதே நரேன் மீது காதல் ஏற்பட்டிருந்தது. வெளியே சொல்லாமல் மனதுக்குளேயே வைத்திருந்தாள். இப்போ தானாகவே அந்த வாய்ப்பு வர ஒப்புக் கொண்டு விட்டாள்.

எல்லோருக்கும் சம்மதம். ஆனால் மாப்பிள்ளையான நரேனுக்கு பெண்கள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் என்று மனதில் பதிந்து விட எரிச்சலையும், கோபத்தையும் நித்தி மீது காட்டுகிறான்.  இதையெல்லாம் மீறி நித்தி அவன் மனதுக்குள் ஆழ பதிந்து கொள்கிறாள். குடும்பத்துக்காக நல்ல விஷயங்களை செய்து அவன் மனதில் இடம் பிடிக்கிறாள். காதலை அவரவர் மனதுக்குள்ளேயே வைத்து கடைசியில் தான் அதை வெளிக்காட்டி வாழ்வில் இணைகின்றனர். இதையும் நீங்கள் வாங்கிப் படித்து அதன் சுவையை உணருங்கள்.

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி

அறிவு நிலையம் பதிப்பகம்
32/107, கெளடியா மடம் சாலை,
இராயப்பேட்டை, சென்னை – 600014
புத்தகத்தின் விலை ரூ 90
மொத்த பக்கங்கள் – 280

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.


Wednesday, July 10, 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.....

கதம்பம் – 16

இந்த படத்தை பற்றி ஏதோ எழுத போறேன்னு நினைக்காதீங்க….:) கொஞ்சம் நேரம் தான் பார்த்தேன். தொடர்ந்து பார்த்தா தலைக்குள்ள பிரச்சனை வந்திடுமோன்ற பயத்துல தொடர்ந்து பார்க்கல…:)) இப்ப நான் சொல்ல வர்றது என்னன்னா…. சுஜாதா அவர்களின் பாதி ராஜ்யம்என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். அதில் இருந்த ஐந்து கதைகளில் புத்தகத்தின் நடுவில் இருந்த ஹோனாலூலுஎன்ற கதையில் உள்ள கிளைமாக்ஸ் பக்கங்களை காணோம். நூலகத்திலிருந்து எடுத்த புத்தகம். முடிவைத் தெரிந்து கொள்ளாமல் மண்டை வெடித்து விடும்போல் உள்ளது. யாராவது கதைச் சுருக்கத்தை கூற முடிந்தால் நன்றாக இருக்கும்…:))

நம்முடைய புத்தகமானாலும் சரி, அடுத்தவர்களோடது, நூலகம் இப்படி எங்கு எடுத்தால் என்ன! புத்தகத்தை ஏன் பாழ்ப்படுத்த வேண்டும்? சமீபத்தில் தோழி ஒருவரிடம் புத்தகம் வாங்கிய போது அவர் அதில் மார்க் செய்து, எழுதி, மின்னஞ்சல் முகவரியெல்லாம் எழுதி வைத்திருந்தார். கேட்டால் தன்னுடையதில் அப்படித் தான் எழுதுவது வழக்கம் என்றார். தொடர்ந்து சொல்ல முடியவில்லை. இந்த பதிவை படிக்கும் நபர்கள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி

நீயா நானா:-சமீபத்தில் பார்த்த நீயா நானாநிகழ்ச்சியில் திருமணத்திற்கு பின் வேறு ஊர்களுக்கு சென்ற போது அங்கு ஏற்பட்ட அனுபவங்கள், பிரச்சனைகள், புதிதாக தெரிந்து கொண்ட வழக்கங்கள் என்பது பற்றி பேசினார்கள். இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. இந்த தலைப்பில் சுவையான நிறைய விஷயங்களை கேட்க முடிந்தது. வட்டார மொழியால் பிரச்சனை, குடும்ப வழக்கங்கள், சமையல் என நிறைய விவாதித்தனர். கொங்கு தமிழில் உள்ள வார்த்தைகளை நான் என்றாவது பேசினாலே என்னவர் கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார். உதாரணமாக அரசாணிக்காய் (பரங்கிக்காய்), மேரக்காய் (செளசெள) இப்படிநானும் விடுவதில்லை அவர்கள் ஊரின் மல்லாட்டை, லோட்டா இப்படி….:)) இன்னொரு நாள் பெண்களுக்கு சமையல் செய்வதே அலுத்து போய் விட்டதாக ஒருபுறமும், மற்றொருபுறம் சுவாரசியமாக உள்ளதாகவும் விவாதம் நடைபெற்றது.

ஆனால் இந்த நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஆரம்பித்து முடிவதற்கு 11.30 ஆகி விடுகிறது. அடுத்த வேலை நாளான திங்கள் எழுந்திருக்க வேண்டாமா! கொஞ்சம் சீக்கிரம் வைத்தால் நன்றாக இருக்கும்.

பார்த்த திரைப்படங்கள்:-தற்போது வருகிற திரைப்படங்களை பார்க்கவே ஏனோ பிடிப்பதில்லை. அப்படியிருந்தும் பார்த்தேன் என்றால் ஏழரை நம்மளை சுத்திகிட்டு தான் இருக்கு என்று அர்த்தம். பார்த்த படங்களில் எதிர்நீச்சல், கும்கி (டி.வி லயே போட்டுட்டாங்களேன்னு சொல்லக் கூடாது. அன்று நான் பார்க்க முடியவில்லை) ஆகியவை நன்றாக இருந்தன.. மூன்று பேர் மூன்று காதல்பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன். வசந்த் படமா இது! என்று இருந்தது….:(( சிறிது நேரம் முப்பொழுதும் உன் கற்பனைகள், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகியவை பார்த்தேன். என்ன இதுவே ஜாஸ்தி இல்லையா…..:)))

ரோஷ்ணி கார்னர்:-ரோஷ்ணியுடன் தினமும் ஒரு கூத்து தான். சமீபத்தில் அவளின் G.K மிஸ் சொன்னார்களாம்….பெரிய சாக்பீஸ் இருந்தா தான் எழுதிப் போடுவேன் என்றுஇவள் வீட்டில் வந்து ஒரே புலம்பல் தான். மிஸ்ஸுக்கு எவ்வளவு கோவம்மா. நான் தாம்மா போய் பெரிய சாக்பீஸ் கொண்டு வந்து கொடுத்தேன் என்று. அடுத்த நாள் வரும் போதே அம்மா இன்னிக்கு ஒரு சர்ப்ரைஸ் என்றாள். என்னவென்று கேட்டால் இன்னிக்கு காலையிலிருந்தே எனக்கு எல்லாமே நல்லதா நடக்குதும்மா.. என்னை முதல் சீட்டுல உட்கார சொல்லிட்டாங்கஎன் ஃப்ரெண்ட் என் கூட சண்டை போடல…. மிஸ் என்னை கொஞ்சினாங்க…. அப்புறம் G.K மிஸ் கூட இன்னிக்கு சின்ன சாக்பீஸே போதும்னு சொல்லிட்டாங்க என்று….:)

அவள் சொல்லச் சொல்ல எனக்கு சிரிப்பு தாங்கலைஅவள் முன்பு சிரித்தால் அவளுக்கு கோவம் வந்துடுமே….:))

ACT II பாப்கார்ன்:-இந்த பாப்கார்ன் வந்த புதிதில் அதன் விளம்பரத்தில் ஒரு குழந்தையின் தந்தை தான் தயாரித்து தருவதாக காண்பிக்கப்படும். அதை பார்த்த பின் எங்க வீட்டு குழந்தையும் அவள் அப்பா தான் செய்ய வேண்டும் எனச் சொல்ல நான் எஸ்கேப் ஆகிட்டேன்….:) அன்றிலிருந்து பாப்கார்ன், சூப் இவையிரண்டும் எப்போது செய்தாலும் அவள் அப்பா தான் செய்து சுடச்சுட தருவார். நாங்களும் சாப்பிடுவோம். இப்படியிருக்க இங்கு வந்ததிலிருந்து வாங்கவே இல்லை. மே மாத விடுமுறையில் அவள் அப்பா வருவதாகச் சொல்ல இரண்டு பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருந்தோம். ஒன்று அப்பா வந்து செய்து தர சுவைத்தோம். இன்னொன்றை அவள் அப்பா தில்லிக்கு சென்ற பின் தற்போது ஒருநாள் நான் செய்யப் போக கொஞ்சம் தகராறு செய்து விட்டது. அதற்கு ரோஷ்ணி ஏம்மா அப்பா எவ்வளவு ஈசியா செய்வா! நீ இப்படி சொதப்பறியேஎன்றாள். என் நேரம் தான்…..:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


என்னவரின் இன்றைய பதிவு - கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் ரத்த பூமி பகுதி 6