Saturday, June 15, 2013

கதம்பம் - 15நெடுநாட்களுக்குப்பின் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி. பள்ளி விடுமுறை, வெயில் என்று கணிணி பக்கம் வரமுடியாமலே போய் விட்டது.

சிவகங்கைச் சீமை:-

கோடை விடுமுறையை ஒரு வாரம் நீட்டியதால் ஒரு மாறுதலுக்காக சிவகங்கையில் உள்ள என் மாமா வீட்டிற்கு ரோஷ்ணியுடன் சென்றிருந்தேன். இது நான் பிறந்த ஊர். சிறு வயதில் பார்த்த சிவகங்கைக்கும் தற்போதுள்ள சிவகங்கைக்கும் நிறைய மாற்றங்கள். அப்போது நிறைய பன்னிக்குட்டிகள் உண்டு. இன்னும் இருக்கின்றனவா என்று கேட்டுக் கொண்டேன்!. அரண்மனை வாயிலைச் சுற்றி பல்வேறு விதமான கடைகள். மருத்துவக் கல்லூரி கூட அங்கு வந்து விட்டதாக மாமி சொல்லிக் கொண்டிருந்தார். பிள்ளை வயல் காளியம்மன் கோவில், கடைத் தெரு என்று சுற்றி வந்தோம். நல்ல ஒரு மழை நாளில் மாமா சூடான மிளகாய் பஜ்ஜிகளை வாங்கி வந்து தந்தார். மாமி பறித்துத் தந்த வாழைப்பூவும், மாமா கைப்பக்குவத்தில் பருப்பு பொடியும் எடுத்து வந்து சுவைத்தேன். கிளம்பும் அன்று தானே சமைத்த பதார்த்தங்களை மாமாவே பரிமாறினார். பல வருடங்களுக்குப் பின்னர் என் அம்மா கையால் சாப்பிட்ட உணர்வு ஏற்பட்டது….:) வெற்றிலைப் பாக்கு தாம்பூலத்துடன் மயக்கும் மதுரை மல்லியும், மருதாணியும்.

ரயில் பயணத்தில் ஆச்சி:-

திருச்சியிலிருந்து சிவகங்கை ரயிலில் பயணித்த போது பல்வேறு விதமான மனிதர்களை சந்தித்தேன். அதில் காரைக்குடியில் ஏறிய ஒரு ஆச்சி, எதிர்ப்புற இருக்கையில் அமர்ந்தார். சற்று நேர அமைதிக்குப் பின் ரோஷ்ணியிடம் என்னைக் காட்டி இது தான் உன் அம்மாவா? என்றார். புது மனிதர்களிடம் பேசாத அவள், என்னைப் பார்க்க நான் ஆம் என்றேன். இது ஒரே பொண்ணா? என்றார். ஆம் என்றேன். ஆம்பிளை பிள்ளை இல்லையா? கட்டுப்பாடு பண்ணிட்டியா? இதோட ஜாதகம் பார்த்தியா? இதக் கொண்டு போய் கோவில்ல விட்டுடு. உனக்கு ஆம்பிளை பிள்ளை பிறக்கும். என்றதோடு, ரோஷ்ணியிடமும் நீ போய் கோவில்ல இருந்திக்கறயா? எனவும், குழப்பத்தோடு ரோஷ்ணி என்னைப் பார்த்தாள். நான் கண் ஜாடையால் ஒண்ணும் இல்லை. எனக் கூறவும் தான் சமாதானம் ஆனாள். ஏன் தான் மக்கள் இப்படி இருக்காங்களோ? கல்யாணம் ஆகலையா? ”ஆயிடுச்சுன்னு..சொன்னா ஏன் இன்னும் குழந்தை பிறக்கலஒரு குழந்தை எனச் சொன்னால், “ஒண்ணே ஒண்ணு தானா?” எத்தனை எத்தனை கேள்விகள் மனிதர்களிடம். அவங்கவங்க விருப்பம், கவலை, பிரச்சனைஎன்று தான் திருந்துவார்களோ?

அடையார் ஆனந்த பவன்:-

திருச்சி ஜங்ஷனில் இருந்த அடையார் ஆனந்த பவனில் இனிப்புகள் வாங்கிக் கொள்ளலாம் என்று உள்ளே சென்றேன். கேரட் மைசூர் பாக் என்று போட்டிருந்த இடத்தை காட்டி கால் கிலோ கொடுங்க என்றேன். கடை ஊழியர் கால் கிலோவா?” என்று கேட்ட விதம் வித்தியாசத்தை காட்ட நான் ஹிந்தியில் சொல்லவும் அவர்களுக்கு அவ்வளவு ஒரு மகிழ்ச்சி. எங்கிருந்து வந்துள்ளீர்கள் என விசாரிக்கவும், தாங்கள் நேபாளத்திலிருந்து இங்கு வந்து பணிபுரிவதாக சொன்னார்கள். அடுத்து நம்மிடம் மைசூர் பாக் பற்றி வரலாறு வேறு. ஐந்து விதமான வெரைட்டி இதில் உண்டாம்….:))

ஒரு எழுத்தாளரின் பதில்:-

குபேரவனக் காவல், ரங்கராட்டினம் என்ற இரு வேறு நாவல்களை படித்த பின் அதைப் பற்றி அதன் ஆசிரியரான திரு காலச்சக்கரம் நரசிம்மா அவர்களுக்கு மடல் எழுத நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் அவரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியும் வைத்தேன். அவருடைய பல வேலைகளுக்கு நடுவே எனது மின்னஞ்சலை படித்து, அதற்கு எங்கே பதிலெழுதப் போகிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அன்றே அதற்கு அழகான பதிலும் அனுப்பி இருந்தார். எனக்கு மகிழ்ச்சி. அவருக்கு மனமார்ந்த நன்றி.

விழிப்புணர்வு ஊர்வலம்:-

நாங்கள் பயணம் மேற்கொண்ட அன்று வழக்கத்திற்கு மாறாக வைகை எக்ஸ்பிரஸ் ஜங்க்‌ஷனில் கூடுதலான நேரம் நின்றது. என்னவென்று பார்த்தால் ரயில்வே ஊழியர்கள் பேனர்களை பிடித்துக் கொண்டும், நோட்டீஸ்களை பயணிகளுக்கு தந்து கொண்டும் வந்தனர். உணவுப் பொருட்களை ரயிலின் உள்ளே எறிந்து கரப்பான், எலிகளுக்கு அழைப்பு விடுக்காதீர்கள்என்றும், ”தண்ணீரை வீணாக்காதீர்கள்என்றும் எழுதியிருந்தது. மக்கள் மனதில் என்று நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டால் பற்றாது. சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ, அன்று தான் சரியாகும் என்று தோன்றியது

ரோஷ்ணி கார்னர்:-

ரோஷ்ணி இந்த வருடம் மூன்றாம் வகுப்புக்கு சென்றுள்ளாள். பள்ளி செல்ல ஆரம்பித்ததிலிருந்து அவளிடமிருந்து நான் கேட்பது புலம்பல்கள் தான்….:)

ரோஷ்ணி:- அம்மா என்னை செக்‌ஷன் மாத்தி விட்டுட்டாங்க. நான் தான் வகுப்புலயே உயரம் ஜாஸ்தியாம், அதனால் என்னை கடைசி சீட்டுல உட்கார வெச்சுட்டாங்க. என் பக்கத்துல இருக்கற குண்டு பொண்ணு என்னை நசுக்கறா…. என் பேக் வைக்க இடமே தர மாட்டேங்கறா

அம்மா:- இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல கண்ணா.. மாத்திக்கலாம்

ரோஷ்ணி:- என்னம்மா இப்படி சொல்ற? எனக்கு இது தான் பெரிய விஷயம்….

அம்மா:- ஞேஞேஞேஞேஞேஞேஞே......

அது சரி! அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு…..:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

19 comments:

 1. அவங்கவங்க கவலை அவங்கவங்களுககு...!!!!!

  அழகான மலர்களுன் கதம்பம் மணக்கிறது .. பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 2. //நான் தான் வகுப்புலயே உயரம் ஜாஸ்தியாம், அதனால் என்னை கடைசி சீட்டுல உட்கார வெச்சுட்டாங்க. என் பக்கத்துல இருக்கற குண்டு பொண்ணு என்னை நசுக்கறா…. என் பேக் வைக்க இடமே தர மாட்டேங்கறா…// ;)))))

  //அது சரி! அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு…..:)// ;)

  நீண்ட நாட்களுக்குப்பின் நல்ல மணமுள்ள கதம்பம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. எல்லார் வீட்டிலும் நடக்கும் பெரிய விசயங்களோடு கதம்பம் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. :) அவளுக்கு பெரியவிஷயம் தானே.. போட்டாளே போடு..

  ReplyDelete
 5. வழக்கம்போல் மயக்கும் மணத்துடன் கூடிய
  அருமையான கதம்பம் மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
 6. தஞ்சாவூர் கதம்பத்தை முழம் போட்டு வாங்கியதைப் போல, இந்த கதம்பத்தில், படிக்க அலுப்பு தட்டாத அதிகப்படியான விஷயங்கள்.

  ReplyDelete
 7. கதம்பத்தின் மணம் பெருக்கியது கடைசி இனுக்கு மரிக்கொழுந்து :))

  ReplyDelete
 8. //இதக் கொண்டு போய் கோவில்ல விட்டுடு//

  ஏங்க, இதக்கேட்டுட்டு நீங்க ஒண்ணும் சொல்லாமயா வந்தீங்க? :-(

  ReplyDelete
 9. நாங்களும் சிவகங்கை காரங்க தான். அப்பா பூர்வீகம் சிவகங்கை. :))

  ரோஷ்ணியின் கவலை சரிதானே!!!

  ReplyDelete
 10. கதம்பம் மணக்க மணக்க இருந்தது.

  ReplyDelete
 11. என்னம்மா இப்படி சொல்ற? எனக்கு இது தான் பெரிய விஷயம்….

  haa haa !

  இப்ப கடையில் கிடைக்கிறது மைசூர் பா ! எனக்கு மைசூர் பாக் தான் வேணும்.. பார்த்தா முரட்டுத்தனமா ஆனா வாயிலிட்டா கரைஞ்சு போய்.. ஆஹா..

  ReplyDelete
 12. ஹூஸைனம்மாவின் கேள்விதான் எனக்கும். பாவம் குழந்தை மனசு வேதனைப்படாதா!!

  ReplyDelete
 13. நானும் அந்த ஆச்சி மாதிரி நிறையப் பேரை சந்திச்சிருக்கேன் தோழி. தன் பேச்சு மத்தவங்களை எந்த அளவு பாதிக்கும்ங்கறதக் கூட உணராம எதையாவது பேசி எரிச்சலூட்டும் மனிதர்கள்! ரோஷ்ணி வயதுக் குழந்தைகளின் உலகமே தனிதான்! சரியாச் சொன்னா போங்கோ...! நண்பர் நரசிம்மா வாசகர்களை மிக மதிப்பவர். அவர் பதில் அனுப்பியதில் மகிழ்ந்து இங்கே குறிப்பிட்டதைக் கண்டு எனக்கும் மிக மகிழ்வாக இருக்கிறது!

  ReplyDelete
 14. கதம்பம் மிக சுவாரஸ்யம்.

  ReplyDelete
 15. ரோஷ்ணியின் வயதுக்கு அவள் பிரச்சனை பெரிய பிரச்சனைதான். சமர்த்துக் குழந்தை அவள். ஆச்சியின் பேச்சு அவளைப் பாதிக்காவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.

  உணர்வுக் கதம்பம் மனம் தொட்டது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. எப்படி முதல் முதல் பார்க்கும் மனிதர்களிடம் இரக்கமே இல்லாமல் பேசறாங்களோ! நீங்க ஒரு கேள்வியாவது கேட்டிருக்கணும் அவங்களை! :(

  ரோஷ்ணியின் பிரச்னையே எங்க பையருக்கும் வந்தது. சமாளிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! அப்புறமா பதினைந்து வயசிலே ஜிம்முக்குப் போய் உயரம் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டார். :)))) பதினைந்து வயதில் ஐந்தே முக்காலடி உயரம்! :)))))ஆறடிக்கும் மேலே போனால் கல்யாணத்துக்கு எப்படிப்பா பொண்ணு பார்ப்பதுனு சொல்லுவேன்.:)))))

  ReplyDelete
 17. கதம்பத்தை ரசித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல....

  உங்கள் கருத்துகள் தான் என்னை மேலும் எழுத ஊக்கப்படுத்துகிறது...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…