Monday, April 29, 2013

தாயுமானவன்!

பரமசிவம் என்கிற பரமு, பிரபல மோட்டார் கம்பெனியில் பதினேழு வருடங்களாக வேலை செய்து வருகிறான். ஆரம்பத்தில் டயர்கள் மாற்றும் வேலை, பொருட்களை சரி பார்க்கும் வேலை என்று ஆர்வமுடன் வேலை செய்து இன்று தலைமை ஃபோர்மேனாக இருக்கிறான். யூனியன் லீடராகவும் மாறி உடன் வேலை பார்க்கும் ஊழியர்களின் நலனுக்காக பாடுபடுகிறான். தனிப்பட்ட முறையிலும் உதவுகிறான்.

பரமுவின் மனைவி சரஸ்வதி என்கிற சரசு. திருமணத்துக்கு முன்பு பெயிண்ட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாள். திருமணம் நிச்சயம் ஆனவுடன் பெண்கள் வேலை செய்து விட்டு, வீட்டுக்குச் சோர்ந்து வருவது கூடாதுஎன்ற வருங்கால கணவனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வேலையை விட்டு விட்டாள். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் என கண்ணுக்கு நிறைவான குழந்தைகள். பெண் மூத்தவள். கணவனும் மனைவியும் அன்னியோன்யமாக குடித்தனம் நடத்துகிறார்கள்.

யூனியனில் விரிசல் ஏற்பட்டு, விற்பனைக்கு அனுப்பிய வண்டிகளில் ஏதோ ஒன்று கவனிக்கப்படாமல் பிரச்சனையாகி விட தலைமையிடத்திலிருந்து கேள்வி மேல் கேள்வி, தவறு பரமுவுடையது இல்லையென்றாலும், கெளரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் ராஜினாமா செய்து விட்டு வந்து விடுகிறான். குடும்பமும் தலைவன் மனது நோகாமல் நடந்து கொள்கிறார்கள். குழந்தைகளும் குடும்ப கஷ்டங்களை பக்குவமாக புரிந்து கொள்கின்றன. வேறு வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தும் யூனியனில் இருந்த காரணத்தை காட்டி தர மறுக்கிறார்கள். வெளிநாட்டு வாய்ப்புக்காக பணத்தை செலவழித்து ஏமாந்து விடுகிறான்.

இருக்கறதையெல்லாம் விற்று சாப்பிட ஆரம்பிக்க, மனைவி தான் முதலில் வேலை செய்த இடத்திலேயே பணியாற்றுகிறேன் என்று சொல்ல, ”நான் இருக்கற போது நீ எதுக்கு போய் கஷ்டப்படணும்என மறுக்க, சரசு பிடிவாதம் பிடித்து செல்கிறாள். இயந்திரங்களோடயே இருந்த நான் இப்போ என்ன செய்யட்டும்என பரமு விழிக்க என் ராசா நீங்க குழந்தைகளை பார்த்துக்கோங்க, கொஞ்ச நாள் நான் சுமை தூக்கறேன்”. என்கிறாள். அப்பாவிடம் எந்த வேலையும் சொல்லி சங்கடப்பட வைக்கக்கூடாது. நீங்களே செய்ய கத்துக்கோங்க என குழந்தைகளுக்கு சொல்லிச் செல்கிறாள். தந்தையின் உதவிகளை மறுத்த குழந்தைகள், பின்பு தந்தையாக செய்ய ஆச்சரியப்படுகிறார்கள். மகளிடமும் சில கற்றுக் கொள்கிறான் பரமு. மனைவியிடமும் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். முதலில் உப்பே இல்லாத கட்டி கட்டியான உப்புமா, ஃபில்டரில் டிகாஷன் எது என்று தெரியாத கீழ் பாத்திரத்தில் உள்ளதை கொட்டி விட்டு மேலே பொடியோடு உள்ளதை விட்டு கலப்பது, என்று செய்தவன் பின்பு ஒவ்வொன்றாக கற்றுத் தேறுகிறான்.

மனைவி முடிந்தவரை வீட்டு வேலைகளை செய்து விட்டு கணவனது உதவியை மறுத்தும், அவள் நகர்ந்ததும், அவளின் புடவையை காயப் போடுகையிலும், கொல்லையில் பாத்திரங்களை போட்டு தேய்க்கும் போதும் நடக்கும் கேலிகளையும், பிரச்சனைகளையும் சமாளிக்கிறான். பணிச்சுமையாலும், குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தாலும் திட்டிய சரசுவோடு ஊடல் கொள்ளும் பரமு, குழந்தைகளை ஒரு வார்த்தை கூட சொல்ல விடாத தந்தையாக இருக்கிறான்.

இந்த நிலையில் மகளின் பள்ளியிலிருந்து ப்யூன் வந்து மகள் மயக்கம் போட்டு விழுந்ததாகவும் தாயை உடனே வரும்படி ஆசிரியர் சொல்லி விட்டதாகவும் சொல்ல, பதறியடித்து ஓடுகிறான் பரமு. பள்ளியில் மகள் பெரிய மனுஷியாகி விட்டதாக சொல்ல, ஒரு நிமிடம் மகளிடமிருந்து தான் அந்நியப்பட்டதாக உணர்கிறான். தந்தையுடன் அனுப்ப மறுக்கும் ஆசிரியரிடம், தான் தந்தையுடன் போக விரும்புவதாக சொல்லி வெட்கத்துடன் வரும் மகளை ஆச்சரியத்துடன் பார்த்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறான்.

என்ன செய்வது என்று தெரியவில்லை? நேராக லேடி டாக்டரிடம் அழைத்துச் சென்று தகவலை சொல்லி மகளுக்கு சொல்லித் தரும்படி சொல்கிறான். (இந்த இடத்தில் கண்ணீர் துளிர்த்தது! எந்த தகப்பனுக்கும் வரக் கூடாத சூழ்நிலை).

மாலையில் வீடு திரும்பிய மனைவியிடம் தகவலைச் சொல்லிவிட்டு, வேண்டிய பொருட்களை அவள் சொல்லும் முன் கையிலிருக்கும் மோதிரத்தை பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு வாங்க கிளம்பும் தகப்பன்…. இனி மகளை தனியே விட்டு விட்டு வெளியே கூட போகக் கூடாது என மனதுக்குள் நினைத்து கொண்டு காபந்து பண்ணுகிறான்.

ஒரு நாள் எல்லோருமாக வெளியே போய் விட்டு வீடு திரும்பும் வேளையில், இவர்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனை காத்திருந்தது. பழுதான ஒரு காருடன் தவித்து கொண்டிருந்த ஒருவருக்கு பழுதுகளை சரி பார்த்து வேண்டிய உதவி செய்து தந்து உதவுகிறான் பரமு. அவன் குடும்பம் மொத்தமும் ஒத்துழைக்கிறது. இவர்களுக்கு பிரதி உபகாரமாக வீடு வரை வந்து விடும் அவர் குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்டு அவர் பரமுவுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். ஆறுமாதம் பம்பாயிலும், ஆறுமாதம் டெல்லியிலும் பணியாற்றியவுடன் சென்னையிலிலேயே பணியாற்றலாம் என சொல்ல மனைவியின் சுமையை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு பம்பாய்க்கு பறக்கிறான் பரமு. இனி அவர்கள் வாழ்வில் வசந்த காலம் தான்.இது தான் நான் சமீபத்தில் வாசித்த பாலகுமாரன் அவர்களின் தாயுமானவன்கதைச்சுருக்கம். மனதை நெகிழ வைத்த கதை. அங்கங்கே கண்ணீர் துளியும் துளிர்த்தது…. ”கல்லூரிப் பூக்கள்என்ற பதிவில் சொல்லியிருந்தது போல் பரணில் இருந்து எடுத்த என்னவரின் புத்தகங்களை ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்து விட்டேன். இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் உடனேயே அவரிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். இந்த கதை தொலைக்காட்சியில் நெடுந்தொடராக வந்திருந்ததாகவும் சொன்னார்.

இந்த புத்தகத்தில் உள்ள ஆச்சரியப்படுத்தும் விஷயங்களாவன, மோட்டார் துறையை ஆராய்ச்சி செய்தது போல் கதையெங்கும் அவ்வளவு நுணுக்கமான விஷயங்கள். படிக்கும் போது 1997லிருந்து 2000 வரை சென்று வந்தது போல் இருந்தது. ஆம்! அப்போ நான் இயந்திரவியல் துறை மாணவி. படிக்கும், பார்க்கும், வரையும் அனைத்துமே இயந்திரங்கள் தான். நெடுநாட்களுக்கு பிறகு நினைவூட்டி கொள்ளவும் உதவியது.

அதே போல் பரமு என்கிற இந்த கதாபாத்திரம் சட்டென்று நம் மனதில் பதிந்து விடுகிறார். இப்படியொரு கணவனும், தகப்பனும் அமைந்து விட்டால் உலகில் வேறு என்ன வேண்டும்! பெண்ணுக்கு எங்கிருந்து தீங்கு நிகழும்….

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

நர்மதா பதிப்பகம்
16/7, ராஜாபாதர் தெரு
பாண்டி பஜார்
தியாகராய நகர்
சென்னை – 600017
மொத்த பக்கங்கள் – 288
அப்போதைய விலை ரூ 25 (இப்போ சத்தியமா இந்த விலைக்குக் கிடைக்காது). விசா பதிப்பகமும் இப் புத்தகத்தினை பின்னர் வெளியிட்ட்து. அதன் விலை 125/-.

என்ன நண்பர்களே கதைச் சுருக்கத்தினை ரசித்தீர்களா? வேறு ஒரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.....


ஆதி வெங்கட்.

35 comments:

 1. தாயுமானவன் கதை தொலைக்காட்சியில் நெடுந்தொடராய் வந்தபோதே மனத்தை மிகவும் பாதித்திருந்தது. அதில் தாயுமானவனாக நடிகர் சந்திரசேகர் நடித்திருந்தார். மிகவும் மனத்தைத் தொட்ட நடிப்பு. கதையாக இதுவரை வாசித்ததில்லை என்றாலும் அன்றைய நெடுந்தொடரில் நீங்கள் குறிப்பிட்ட காட்சிகள் எல்லாமே மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் காட்டப்பட்டிருந்தன. முக்கியமாய் மகள் பெரியவளானதும் தந்தையின் தவிப்பு... இப்போது பல வருடங்களுக்குப் பின்னும் நினைவில் தங்கியுள்ள அக்கதையை புத்தகமாய் வாசிக்கும் ஆவலை எழுப்பிவிட்டீர்கள். கிடைக்கும்போது வாசிக்க விரும்புகிறேன். நன்றி ஆதி.

  ReplyDelete
 2. தொழிற்சாலை பற்றிய அத்தனை தகவல்கள் அதில் வருவதற்கும், பரமு கதாபாத்திரத்தின் உணர்வு உங்களுக்குள் அப்படியே இறங்குவதற்கும் காரணம்... அந்த கதாபாத்திரத்தில் பாலகுமாரனும் (சொந்த அனுபவங்களாய்) இருப்பதுதான். அவர் டிராக்டர் தொழிற்சாலையில் வேலை பார்த்தபோது சந்தித்த விஷயங்களையும் உணர்வுகளையும் அப்படியே எழுத்தில் பிரதிபலித்திருப்பதால்தான் அத்தனை உயிர்ப்பு இந்த நாவலில்! கீதா சொன்ன மாதிரி இபப நீங்க எழுதினதப் படிச்சதும் மறுபடி படிக்கணும்கற ஆசையே வந்துடுச்சு எனக்கும்!

  ReplyDelete
 3. நான் இதுவரை படித்ததில்லை..நிச்சயம் வாங்கி படிக்கிறேன்..அழகாக விவரித்துள்ளீர்கள்.

  ReplyDelete
 4. நெகிழ்ச்சியான கதை.பரமு கதாபாத்திரம் மனதில் ப்பசக் என்று ஒட்டிக்கொண்டது.

  ReplyDelete
 5. I read all most all of Balakumaran novels of these times. You are night, some times his writings make us cry!

  ReplyDelete
 6. என்னிடம் இந்த புத்தகம் இருக்கிறது, படிக்கப் படாமல் உறங்கிக் கொண்டுள்ளது, உங்கள் விமர்சனம் படித்துவிடலாம் என்கிறது... நிச்சயம் படிக்கிறேன்

  ReplyDelete
 7. நான் படிக்க,பார்கத் தவறிய கதை மிக அழகாகத் தந்தஈமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 8. நான் சொல்ல வந்ததை இதன் முதல் பின்னூட்டத்தில் திருமதி கீத மஞ்சரி அவர்கள் அப்படியே சொல்லி விட்டார்கள்.

  நானும் அதை தொலைகாட்சியில் பார்த்துள்ளேன். அருமையானதொரு கதை.

  நல்லதொரு பதிவுக்கு நன்றிகள்>

  ReplyDelete
 9. Dear Venkat

  Wonderful comments by you. Thanks for encouraging people to read tamil novels in spite of tv etc etc. Will try to read that novel.
  Vijay

  ReplyDelete
 10. இந்த கதையை வாசித்த பசுமை நிறைந்த நினைவுகள் ..

  அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 11. படித்திருக்கிறேன். தொடர் பார்த்த நினைவு இல்லை. பொதுவாகவே படித்த தொடர்களை காட்சியாகப் பார்ப்பது திருப்தியிருக்காது. மற்றபடி நான் சொல்ல நினைத்த விஷயங்களை பாலகணேஷ் சொல்லி விட்டார்.

  ReplyDelete
 12. அருமையான கதை... நன்றாக விமர்ச்சித்துள்ளீர்கள்... நன்றி...

  ReplyDelete
 13. தாயுமானவன் எனக்கு பிடித்த கதைகளுள் ஒன்று.
  நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 14. பாலகுமரன் அவர்கள் கதையும் படித்து இருக்கிறேன் கீதமஞ்சரி சொன்னது போல் தொலைக்காட்சியிலும் பார்த்து இருக்கிறேன்.
  கதை மிக நன்றாக இருக்கும்.
  பாலகுமரன்அவர்கள் எந்த துறையைபபற்றி எழுதினாலும் அதை அழகாய் எழுதுவார்.
  உங்கள் விமர்சனம் மிக அருமை.

  ReplyDelete
 15. இதுவரை படிக்கவில்லை அவசியம் படிக்கத் தூண்டும் அருமையான விம்சனம் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. ஆதி! தெளிவான விமர்சனம். இப்படி விமர்சனம் எழுதுவது தான் கதை எழுதுவதை விட சிரமமான வேலை.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. தொடராக வந்த போதே படித்து ஆச்சர்யப் பட்டிருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தை படைக்க வேண்டுமென்று பாலகுமாரனுக்கு ஏன் தோன்றியது என்று கூட கேள்வி எழுந்திருக்கிறது மனதில்.

  தகப்பனாக மட்டுமிருந்த பரமுவை தாயும் ஆக்கிப் பார்த்த பாலகுமாரனுக்கு ஜே!

  உங்கள் புத்தக விமரிசனம் அருமை.

  ReplyDelete
 18. விமர்சனம் வாசிக்கும்போதே தோணிச்சு ..இதை பள்ளி படிக்கும்போதே தூர்தர்ஷனில் தொடராக பார்த்த நினைவு வந்தது ..
  ..அந்த துணி துவைக்கும் காயபோடும் காட்சி எல்லாமே அப்படியே மாற்றமில்லாமல் இருந்தது புத்தகத்தில் இருந்ததைப்போலவே ..எங்கள் லைப்ரரியில் பார்க்கணும் கிடைக்குதான்னு .
  நான் நிறைய பாலகுமாரன் கதைகளை வாசிதிருக்கேன் ..மனதை பிசையும் .
  அவரின் கதா நாயகிகள் எல்லாமே சூப்பர்ப் ..கூடு என்ற கதை அப்புறம் அருகம்புல் ..அப்புறம் இன்னோர் கதை பெயர நினைவில்லை தாமஸ் மெக்காலே ..என்று வரும் ..உங்க விமர்சனம் அருமை ..எனக்கு மீண்டும் படிக்கும் ஆவல தூண்டுகிறது

  ReplyDelete
 19. கதையை வாசித்து சுவாரசியமாக விமர்சனம் எழுத நன்றாகவே வருகிறது உங்களுக்கு,பாராட்டுக்கள் ஆதி.

  ReplyDelete
 20. ஐ! இந்தக் கதையை நான் படித்திருக்கிறேனே! ஆனாலும் மீண்டும் படிக்கத் தூண்டி விட்டீர்கள். வாழ்க.

  ReplyDelete
 21. தாயுமானவன் கீழே வைக்க முடியாமல் படித்த புத்தகம். இரும்புக்குதிரைகளும் அப்படித்தான்.
  கணேஷ் சொல்கிற மாதிரி அவர் வேலையை உள்வாங்கி அந்தந்த இடங்களை வர்ணிக்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கும். தொழிலாளர் பிரச்சினைகள்,
  குழப்பம் விளைக்கும் ஊழல் காரர்கள் என்று அருமையாக விவரித்திருப்பார்.அருமையான பகிர்வு ஆதி.

  ReplyDelete
 22. மிகவும் நெகிழ்சியான கதை, அருமையான பகிர்வு

  ReplyDelete
 23. ஏற்கனவே படித்தது தான்! இருப்பினும் உங்களின் விமர்சனம் நிறைவாக இருக்கிறது!

  ReplyDelete
 24. நன்றாக விமர்சித்துள்ளீர்கள்.

  ReplyDelete
 25. உங்களுடையதைத்தான் படித்தேன். மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. நடுத்தர குடும்பங்களின் அனுபவப்பட்டவர்களுக்கு, கதையின் எதார்த்தநிலை
  புலப்படுகிரது. வெளிநாட்டிலிருந்து விட்டு இம்மாதிரியான புத்தகங்கள், ஸீரியல்கள் யாவும் மிஸ்ஸிங்தான். மிகவும் அழகாக கதை எப்படி நிகழ்ந்திருக்கும் என்று யோசிக்க முடிந்தது. ஸீரியல் பார்ப்பதைவிட உங்கள் விமரிசன நடை மனதில் பதிந்து விட்டது.

  ReplyDelete
 26. நான் இப்போதுதான் படித்தேன். உங்கள் விமரிசனத்திற்கே ஆங்காங்கே உணர்ச்சியினால் கண்ணீர் வருகிரதென்றால் முழுதும் புத்தகத்தைப் படித்தால் எப்படியிருக்கும். தாயுமானார் நல்ல அர்த்தமுள்ள பெயர். கணவன், மனைவியின் அர்த்தமுள்ள ஈடுபாட்டுடன் கூடிய பின்னணியுடந் கூடிய முன்னணி. வியக்க வைக்கிரது.

  ReplyDelete
 27. இது நான் முதன் முதலாக படித்த பாலகுமாரனின் கதை. ஆ.வி.யில் தொடராக வந்தது. கதையைப் படித்தபின் தொடர்ந்து நூலகங்களில் பாலகுமாரனின் நாவல்களின் வேட்டை ஆரம்பமாகியது. மெர்குரி பூக்கள், இரும்புக் குதிரைகள் நாவல்களைப் படித்தால் அவர் மோட்டார் துறையை நுணுக்கமாக எழுதியிருப்பது புரியும்.

  பின்னர், ஆங்கில நாவல்களில் Arthur Hailey-யின் நாவல்களைப் படிக்கும் பொழுது பாலகுமாரனுக்கு இவரது inspiration இருந்திருக்கக் கூடும் என்று தோன்றியது. அதிலும் அவரது ‘Wheels' நாவலில் இது போலவே நுணுக்கத் தகவல்கள் இருக்கும்.

  இருந்தாலும் பாலகுமாரன் தான் லூக்காஸ்-இல் வேலை செய்தது தான் காரணம் என்று ’முன் கதை சுருக்கம்’ என்ற சுயசரிதையில் கூறியுள்ளார்.

  தொலைக்காட்சித் தொடரைப் பார்த்ததில்லை. தொ.தொடர் நான் 10 அல்லது 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதோ அல்லது தில்லி வந்த பின்னரோ வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 28. நல்ல விமர்சனம்.

  //எந்த தகப்பனுக்கும் வரக் கூடாத சூழ்நிலை//

  ஏம்ப்பா அப்படிச் சொல்றீங்க? கதை நடந்த காலகட்டத்துக்கு வேணுமா இது பொருத்தமா இருக்கலாம். ஆனா, அப்பவும்-இப்பவும், இது தகப்பனுக்குத் தெரியக்கூடாத விஷயமா என்ன? :-)

  ReplyDelete
 29. விமர்சனத்தை வாசித்து தங்களது அழகான கருத்துக்களையும் இங்கு பதிவு செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.

  ஹுசைனம்மா - //ஆனா, அப்பவும்-இப்பவும், இது தகப்பனுக்குத் தெரியக்கூடாத விஷயமா என்ன? :-)//

  நிச்சயம் தெரிந்து, புரிந்து அனுசரித்துப் போக வேண்டிய விஷயம் தான்....
  ஒரு சிலரைத் தவிர அநேகமாகமான ஆண்களுக்கு பெண்களின் நிலை நன்றாகவே தெரியும். இருந்தும் தந்தையாக கொஞ்சம் சங்கடம் தரும் விஷயம் தானே என்று நினைத்து எழுதியிருந்தேன்....:)

  கருத்துக்களுக்கு நன்றிப்பா...

  ReplyDelete
 30. எளிமையான வார்த்தைகளில் தெளிவான நூல் விமர்சனம். சில மாதங்களுக்கு முன்னர் பாலகுமாரன் நூல்கள் சிலவற்றை வாங்கினேன். கண்கூச்சம் காரணமாக முன்புபோல் தொடர்ந்து என்னால் படிக்க இயலவில்லை.அவற்றுள் இந்த ” தாயுமானவன் “ நாவலும் அடக்கம்.

  உங்கள் பதிவில் வரும்,

  // பள்ளியில் மகள் பெரிய மனுஷியாகி விட்டதாக சொல்ல, ஒரு நிமிடம் மகளிடமிருந்து தான் அந்நியப்பட்டதாக உணர்கிறான். தந்தையுடன் அனுப்ப மறுக்கும் ஆசிரியரிடம், தான் தந்தையுடன் போக விரும்புவதாக சொல்லி வெட்கத்துடன் வரும் மகளை ஆச்சரியத்துடன் பார்த்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறான்.//

  என்ற வரிகள், அந்த நாவலை எடுத்து படிக்கத் தூண்டுகின்றன.

  ReplyDelete
 31. படிச்சிருக்கேன். கதை மட்டும் படிச்சிருக்கேன். தொலைக்காட்சி சீரியல் பார்த்ததில்லை. :)))

  ReplyDelete
 32. தமிழ் இளங்கோ ஐயா - தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

  கீதா மாமி - கருத்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 33. எனக்கும் மிக பிடித்தமான நாவல் அது. என் வீட்டுப் பரணிலும் பாலகுமாரனின் எல்லா புத்தகங்களும் தூங்கிக் கொண்டிருக்கின்றன. எனது குழந்தைகளோ வாசிப்பு பழக்கமே இல்லாமல் வளர்கின்றன. என்ன செய்வது.

  ReplyDelete
 34. கவிப்ரியன் - தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…