Monday, April 15, 2013

கல்லுக்குள் புகுந்த உயிர்!


இந்திரா செளந்தர்ராஜனின் இந்த நாவலை சமீபத்தில் வாசித்தேன். இது ஒரு ஆன்மீக மர்மம் நிறைந்த நாவல் என்று ஆரம்பத்தில் அவரே குறிப்பிடுகிறார். இந்த புத்தகத்தில் இரண்டு நாவல்கள் உள்ளன. இரண்டுமே அருமையாக உள்ளன. நம்முள் நிச்சயம் ஒரு அதிர்வை உண்டாக்குகிறது. அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடியது அல்ல இக்கதைகள்! இனி கதைக்குள் போவோமா…..


பட உதவி: கூகிள்

முதல் கதையான நீலக்கல் மோதிரத்தில் சோமநாத பிள்ளை என்பவர் ஒவ்வொரு பகுதிக்கும் முன்னும் நீலக்கல் மோதிரத்தால் தன் வாழ்நாளில் நடைபெற்ற மர்மங்களை விவரிக்கிறார். திவான் பகதூராக இருந்த அவருடைய தாத்தாவுக்கு பிரிட்டிஷ் ராணி பரிசாக அணிவித்ததாகவும், அதனால் அவருடைய பரம்பரையே சின்னா பின்னமாக போனதாகவும், அடுத்து வந்த தலைமுறையினர் அந்த மோதிரத்தை எங்காவது விட்டெறிந்தாலும் அது திரும்ப அவர்களிடமே வந்து சேர்வதையும் சொல்கிறார்! அது தற்போது இருப்பது……

சாருலதா சில நாட்களுக்கு முன் பட்டதாரியான அழகான துடிப்புள்ள பெண். இவள் தான் நம் கதையின் நாயகி. வேலைக்கு போக முயற்சித்துக் கொண்டிருக்கும் சாருலதாவிற்கு அவள் அத்தை மகனை திருமணம் முடிக்க பேச்சு எழுகிறது. சாருலதாவின் தந்தை தான் இருக்கும் ஏழ்மை நிலைக்கு, பரணில் பித்தளை சம்படத்தில் சாணி உருண்டைக்குள் புதைத்து வைக்கப் பட்டிருக்கும் அந்த நீலக்கல் மோதிரம் தான் காரணம் என்று சொல்கிறார்.

தைரியசாலியான சாருலதா அந்த மோதிரத்தை எடுத்து அணிந்து கொள்கிறாள். அத்தை மகனை திருமணம் செய்ய மறுக்கிறாள். அப்பா மோதிரத்தை பிடுங்கி விட்டெறிகிறார். ஆனால் அது மீண்டும் வந்து விடுகிறது. மோதிரத்தை அணியாத போது அவள் வாழ்க்கை தலைக்கீழாக புரள்கிறது. இதற்கு காரணம் என்ன? என்ன தான் மர்மம்? மீண்டும் அணிந்த போது வெற்றி கொள்கிறாள். அத்தை மகனை மணந்தாளா? அல்லது வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டாளா, விருப்பப்பட்ட வேலையில் சேர்ந்தாளா? மோதிரத்தில் என்ன தான் ரகசியம் உள்ளது? தெரிந்து கொள்ள புத்தகத்தை வாங்கி வாசியுங்களேன்…..

அடுத்த கதையான கல்லுக்குள் புகுந்த உயிர்….

பிரபலமான மிருதங்க வித்வானான நாகநாதன் பிள்ளைக்கு பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பக்கவாதம் வந்து விடுகிறது. மனைவி லட்சுமியும், நண்பர் சிவப்பிரகாசமும் ஆறுதல் சொல்லி மருத்துவமனையில் சேர்க்கின்றனர். மருத்துவரும் பக்கவாதத்தின் நிலையை பார்த்து குழப்பமடைகிறார். அவரின் கார் ஓட்டுனர் பக்கவாதத்தின் காரணத்தை சொல்கிறார். அதற்கான விடை  விடைதாங்கி என்னும் கிராமத்தில் உள்ளது.

நந்தனா என்ற நடிகை சினிமாத் துறையின் உயர்ந்த நிலையில் உள்ளவள். அவளுக்கொரு பிரச்சனை. அதற்கான விடை விடைதாங்கியில் உள்ளது.

விடைதாங்கி என்பது திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள குக்கிராமம். அங்கே உள்ள கோவிலின் நந்திகேஸ்வரர் சிறப்பு வாய்ந்தவர். அவருக்கு 108 வருடத்துக்கு ஒருமுறை அவரின் திருநட்சத்திரத்தன்று உயிர் பெறுவதாக சொல்லப்படுகிறது. அந்த கிராமத்திற்கென்று பல கட்டுப்பாடுகள் உண்டு. கோபுரத்தை விட உயரமாக எந்த கட்டடமும் கட்டக்கூடாது. இந்த ஸ்தலத்தின் சுவாமியை பற்றி வெளியே புகழ்ந்து சொல்லக் கூடாது, ஒருமுறை தான் பிரச்சனையை சொல்ல வேண்டும், வயலில் விளைந்ததில் ஒரு பகுதியை நந்திகேஸ்வரருக்கு கொடுக்க வேண்டும். இப்படிப் பல….

நந்தனா தன்னுடைய பிரச்சனையை பற்றி சமையல்கார மாமியிடம் சொல்கிறாள். விடைதாங்கியில் பிறந்த மாமி என்பதால் நந்தனாவின் பிரச்சனைக்கு வழி சொல்கிறாள். அதன்படி நந்தனா நந்திகேஸ்வரரின் காதில் பிரச்சனையை சொல்லவே காது மடல் அசைந்து ஏற்கிறது! அடுத்த இரண்டு நாட்களிலேயே யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனை தீர்ந்து போகிறது.

விடைதாங்கியில் ஒரு வயலை வாங்கிய நாகநாதன் பிள்ளை, வயலை விற்றவர் நந்திகேஸ்வரரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு போகும் படி சொல்லியும் கேட்காமல் கிளம்புகிறார். எதிரே வந்த காளை மாடு வழி விடாமல் தடுக்கவே காளையின் மீது காரை ஏற்ற, அடுத்த நாள் பக்கவாதம் வந்து அவதிப்படுகிறார். காளை இவர் எங்கு சென்றாலும் அங்கு ரத்த காயங்களோடு வந்து காட்சி தருகிறது. விடை தேட விடைதாங்கிக்கு வருகின்றனர்.

நாகநாதன் பிள்ளைக்கு வாதம் சரியாகிறது. ஆனால் நண்பர் சிவப்பிரகாசத்துக்கு ஏனோ பேச்சு வராமல் போகிறது. அது போல் நந்தனாவுக்கு அவளுக்கு பிடித்தமான வாழ்க்கை அமைகிறது. இப்படிப் பல அதிசயங்கள்….

நந்திகேஸ்வரரின் கதை என்ன? சிற்ப சாஸ்திரத்தில் என்னென்ன விஷயங்கள் உண்டு. கல்லுக்குள்ளும் உயிர் வருமா? தெரிந்து கொள்ள புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். மர்ம நாவல் படிக்கும் விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்ற நாவல். என்னால் இரண்டு நாட்களுக்கு தூங்கவே முடியவில்லை. விபூதி வைத்துக் கொண்டு, ஸ்லோகம் சொன்ன படி தான் இருந்தேன்……

இந்த புத்தகம் படித்த அதே சமயத்தில் தான் கூட்டிற்குள் புகுந்த உயிர்என்ற புத்தகமும் படித்தேன். இதுவும் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் கதை தான். இதுவும் ஒரு மர்ம நாவல் தான். ஏனோ முதல் புத்தகம் ஏற்படுத்திய அதிர்வை இது தரவில்லை….:)


புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

திருவரசு புத்தக நிலையம்
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை – 600017.
மொத்த பக்கங்கள் – 204
புத்தகத்தின் விலை ரூ 65

மீண்டும் வேறு புத்தகம் படித்த அனுபவத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

ஆதி வெங்கட்.

13 comments:

 1. கல்லுக்குள் புகுந்த உயிர் எனக்குள்ளும் அதிர்வுகளை ஏற்படுத்திய நாவல்! இ‌.செள.ராஜன் சரளமான தன் எழுத்து நடையில் விவரிப்பது காட்சிகளாய் மனக்கண்ணில் விரியும். இது உங்களுக்குப் பிடித்திருந்தது என்றால் நிச்சயம் அவரின் ‘ருத்ர வீணை’ வாசியுங்கள். ரொம்பவும் பிடிக்கும்!

  ReplyDelete
 2. இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் கதைகளை மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. அடடா..... அருமையான விமரிசனம்! இதெல்லாம் இப்போதைய புத்தக்கடையில் கிடைக்குமான்னு தெரியலையே:(

  கடைகளுக்குப் போனாலும் இவை கண்ணில் படுவதில்லைப்பா!!!

  ReplyDelete
 4. அருமையான விமர்சனம்

  ReplyDelete
 5. நூல் அறிமுகமும் விமர்சனமும் அருமை. பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. சுவாரஸ்யமான விமர்சனம்...

  ReplyDelete
 7. 204 பக்கங்கள் 65 ரூபாய்தான் என்பது ஆறுதல்.

  முதல் கதை கவர்கிறது.

  இரண்டாம் கதைச் சுருக்கம் படித்தபோது ஒரு பழைய நாவல் நினைவு வந்தது. பி வி ஆர் என்று ஞாபகம். திடீரென வந்து விடும் ஏதோ தொந்தரவுக்கு முன்னர் செய்த பாவம்தான் காரணம் என்று தெரிந்ததும், ஒவ்வொரு பாவத்துக்கும் பிராயச்சித்தம் செய்யும் கதை. இந்நிலை தெரிந்து உதவும் தன பிசினஸ் பார்ட்னருக்குக் கூட தான் செய்த துரோகம் பற்றிச் சொல்லிப் பியாச்சித்தம் செய்யும் கதை! பால கணேஷுக்கு நினைவு இருக்கலாம். கதைப் பெயர் நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது.

  ReplyDelete
 8. படிக்கத் தூண்டும் விமர்சனம். ஒவ்வொரு கதையிலும் இருக்கும் முடிச்சு அவிழும் மர்மத்தைத் தெரிந்துகொள்ள மனம் துடிக்கிறது. உங்களுடைய வாசிப்பனுபவத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஆதி. வாய்ப்பு அமையும்போது கட்டாயம் வாசிப்பேன்.

  ReplyDelete
 9. கதை விமர்சனம் நன்றாக இருக்கிறது ஆதி.தேவன் அவர்கள் கதை ஒன்றில் இது போல் மோதிரம் மாயங்கள் செய்யும்.

  ReplyDelete
 10. மர்மக் கதை மன்னன் ஆயிற்றே இந்திரா சவுந்தரராஜன்...!

  // என்னால் இரண்டு நாட்களுக்கு தூங்கவே முடியவில்லை. விபூதி வைத்துக் கொண்டு, ஸ்லோகம் சொன்ன படி தான் இருந்தேன்……//

  ரொம்ப சின்னப்புள்ளத் தனமா இருக்கீங்க...! ரோஷ்ணி கேட்டால் சிரிக்கப் போகிறாள்...(சும்மா, தமாஸ்.) வாசிப்பினால் ஏற்ப்படும் உணர்வு எதுவானாலும் அப்படைப்பாளியின் திறன் அல்லவா அது!

  நிறைய படிக்க நேரமும் விருப்பமும் இருப்பது போற்றப்பட வேண்டிய ஒன்று.

  ReplyDelete
 11. இந்திரா சௌந்தரராஜன் கதைகள் என்றாலே எனக்கு அலர்ஜி! வேறு புத்தகம் சொல்லுங்கள். படிக்கிறேன்.

  ReplyDelete
 12. இந்த பகிர்வை ரசித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் பல...

  ReplyDelete
 13. அருமையான விமர்சனம் சகோதரி.
  ஏற்கனவே படித்த புத்தகம் தான். உங்களின் இந்த விமர்சனத்தைப் படித்தவுடன், கதை நியாபகம் வந்துவிட்டது.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…