Tuesday, April 23, 2013

கதம்பம் – 14


ரோஷ்ணியின் முழுப்பரீட்சை, வெயில், வீட்டு வேலைகள் என ஏதேதோ காரணம் சொன்னாலும், வலைப்பூ பக்கம் வராததற்கு உண்மையான காரணம், வாசிப்பில் ஆழ்ந்து போவது தான். உங்கள் மகள் நீங்கள் படிக்கும் போது தொந்தரவு செய்வதில்லையா? என இங்குள்ள தோழி கேட்டார்கள் :) வீட்டுக்கும், அவளுக்குமான எல்லாவற்றையும் செய்து விட்டு படிக்க அமர்ந்தால், அவ்வப்போது வந்து ஏதேனும் சொல்வாள், கொஞ்சி விட்டு செல்வாள், CHOTA BHEEM, NINJA HATTORI கதையும் சொல்வாள், என்ன புத்தகம் என இரண்டு வரி வாசித்து பார்ப்பாள். அவ்வளவு தான். மற்றபடி இப்போதைக்கு தொந்தரவில்லை…:))

குபேரவன காவல்:-

திரு. காலச்சக்கரம்நரசிம்மா அவர்கள் எழுதிய இந்த புத்தகத்தை பற்றி ஏற்கனவே மின்னல் வரிகள் கணேஷ் சார் அவர்களும், என்னவரும் எழுதி விட்டார்கள். அதனால் என்னுடைய கருத்தாக நான் இங்கே பதிய நினைப்பது இது தான். அற்புதமான புத்தகம், பகுதிக்கு பகுதி விறுவிறுப்பு. கையில் எடுத்தால்  கீழே வைக்க நிச்சயம் மனசு வராது. படிக்கும் போது பயம் வந்து நம்மை தொற்றிக் கொள்கிறது. சரித்திர பின்னணியும், கற்பனையும், நிதர்சனமும் என அருமையான இந்த புத்தகத்தை வாங்கி வாசித்து பார்த்தால் மட்டுமே தங்களால் உணர முடியும்.

ஸ்ரீரங்கத்து இற்றைகள்:-

ரங்கனின் தெப்போற்சவம், கொள்ளிடக்கரையில் திருவெள்ளறைப் பெருமாள், உத்தமர் கோவில் பெருமாள், அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் ஆகியோரின் திவ்ய தரிசனம். பங்குனித் திருவிழாவில் கருட வாகனம், கற்பக விருட்சம், பூத்தேர், பங்குனித் தேர், சேர்த்தி சேவை எனரங்கனின் உற்சவங்களுக்கு பஞ்சமா என்ன? வருடம் முழுவதுமே அவனுக்கு விதவிதமான அலங்காரங்களும், ஊர் சுற்றி வருதலும் தானே வேலை…..:)

தற்போது பூச்சாத்து திருநாள் நடந்து வருகிறது. மக்கள் கொண்டு வந்து தரும் கூடை கூடையான மல்லிகைச் சரங்களால் அவனை அலங்கரிக்கிறார்கள். சன்னிதியிலிருந்து புறப்பாடாகி கொட்டாரம், சந்திர புஷ்கரிணி வழியாக மணல்வெளியில் சேவை சாதிக்கிறான்.

மேலப்பட்டாபிராமர் சன்னிதியில் ஸ்ரீ ராம நவமிஉற்சவத்தின் பொருட்டு தினமும் ஒரு அலங்காரமாக ராமர் தரிசனம் தருகிறார். ரோஷ்ணியின் பரீட்சை காரணமாக இரண்டு நாட்களுக்கு தான் சென்று காண முடிந்தது. முதல் நாள் ராமர் ஜனனம், இரண்டாம் நாள் அகலிகை சாப விமோசனம்.

சமயபுரத்தில் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் திருவிழாவும், தேரும் சிறப்பாக நடைபெற்றது. இங்கு நம் வீட்டருகிலிருந்து வண்டி வண்டியாக மாரியம்மனுக்கு பூக்கள் எடுத்துச் செல்லப்பட்டு அவளை குளிர்வித்தார்கள்.

எங்கு கூட்டம் என்றாலும் அங்கு தாய்மார்களின் பேச்சு குழந்தைகள் சாப்பாட்டுக்கு அடம் பிடிப்பதை பற்றிய புலம்பல் தான் காதில் விழுகிறது. குழந்தைகளா! ப்ளீஸ் ஒழுங்காக அம்மா கொடுப்பதை சாப்பிட்டால் என்னப்பா?

துளசிப் பாட்டி:-

வாரா வாரம் எனக்கு பூ கொண்டு வந்து தரும் இந்த பாட்டிக்கு வயது எப்படியும் 70க்கு மேல் தான் இருக்கும். குழந்தை போன்று மென்மையான குரல். உரிமையோடு காபி போட்டுத் தாடா செல்லம் என கேட்டு வாங்கி குடித்து விட்டு செல்வார். திருமணம் முடிந்து ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே ஒரு குழந்தையை தந்து விட்டு கணவன் இறந்து விட, வீடு வீடாக சென்று பூ விற்று தான் மகனை ஆளாக்கியிருக்கிறார். பத்தாம் வகுப்பு முடித்த கையோடு  பேத்தியையும் திருமணம் செய்து வைக்க, குடிகாரக் கணவனோடு இனி வாழ முடியாது எனஅவளும் மூன்று வயது மகனை எடுத்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாளாம். இப்போது தையல் வேலையும், பூக்களும் கட்டி தருவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். ஏழ்மை ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் புரட்டி தான் போடுகிறது.

ரோஷ்ணி கார்னர்:-

குழந்தைத்தனத்தை விட்டு விட்டு பெரியவளாகிக் கொண்டு வருவதால் தெள்ளத் தெளிவாக பேசுகிறாள். இருந்தாலும் அவ்வப்போது இது போல் குறும்புகளும் உண்டு.

ஏதோ விஷமம் செய்து விட்டு வந்த ரோஷ்ணியிடம் ,

அம்மா: உன்னோட போராட வேண்டியதா இருக்கறதே….
ரோஷ்ணி : அம்மா நீயென்ன SOLDIER ?
அம்மா : ஏம்மா அப்படி கேட்கிற?
ரோஷ்ணி: SOLDIER தான் நாட்டுக்காக போராடுவாங்க….
அம்மா: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கொள்ளிடக்கரையில் இருந்த பெருமாளை தரிசனம் செய்து விட்டு இருட்டும் வேளையில் வீடு வந்து கொண்டிருந்தோம்

அம்மா: ரோஷ்ணி அம்மா கைய பிடித்துக் கொண்டு வா..
ரோஷ்ணி: ஏம்மா?
அம்மா: இல்லையின்னா யாராவது உன்னை கூட்டிக் கொண்டு போய் கண்ணைத் தோண்டிடுவாங்க….
ரோஷ்ணி: அம்மா அது என்ன மண்ணா தோண்ட….
அம்மா: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வாசல் துடைத்து கோலம் போட்டு விட்டு வந்த என்னிடம், அம்மா தினமும் கோலத்தை ஏன் பெருக்கி குப்பையில போட்டு விட்டு மறுபடியும் துடைத்து வேற கோலம் போடுறே? பெருக்கி எடுத்த கோலப்பொடிய திரும்ப டப்பாவிலயே போட்டு வைத்துக் கொண்டால் மறுபடியும் போட உதவும் இல்லையா!!!!!!!!!!!!

என்ன நண்பர்களே கதம்பம் மணம் வீசியதா?

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

19 comments:

 1. புத்தகங்கள் முடிந்தால் படித்துப்பார்க்கிறேன். துளசி பாட்டி போலவே நாடெங்கும் பலர் இருக்கிறார்கள் என்பது வேதனை. ரோஷ்ணியின் கேள்விகள் ஆதித்யா சேனலில் வரும் "டாடி எனக்கு ஒரு டவுட்டு" என்ற நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது. நன்றி...

  ReplyDelete
 2. மணம் வீசும் வண்ணக்கதம்பம் ...! பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. அருமையான மணம் வீசும் கதம்பம்
  குறிப்பாக குழந்தையின் போலிப் பூச்சு இல்லாத பேச்சு
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அட்டகாசமான கதம்ப மணம்! ரோஷ்ணி..... ஹாஹா... அம்மாவை மடக்கிட்டயேடா! செம க்யூட்:-)

  துளசி பாட்டி..... ப்ச் சோகம்:(

  பெருமாள் தினமும் அலங்காரமும் ஊர்சுத்தலுமா இருக்கான் பாருங்க!!!

  ஒரு வருசம் ஸ்ரீரங்கம்.......... ஆசை அறுமின் மனசு சொன்னாலும் கேக்கறதில்லை கேட்டோ!

  ReplyDelete
 5. துளசிப் பாட்டி வாழ்வு நெகிழ வைத்தது... குடியால் பலரின் வாழ்வு சீரழிகிறது ...ம்...

  ரோஷ்ணி அவர்களின் குறும்பையும் யோசனையும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. கதம்பம் மணத்தது. பாராட்டுக்கள். வாத்துகள்.

  //அம்மா: உன்னோட போராட வேண்டியதா இருக்கறதே….
  ரோஷ்ணி : அம்மா நீயென்ன SOLDIER ஆ?//

  ;)))))

  ReplyDelete
 7. கதம்பம் மணம் பரப்புகிறது....!

  ReplyDelete
 8. பலருக்கும் புத்தக வாசிப்பில் நாட்டம் குறைந்துவரும் இந்நாளில் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிப்பதோடு வாசிக்கும் புத்தகங்கள் பற்றிய விமர்சனமும் தருவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

  ரோஷ்ணியின் கேள்விகளில் கொப்பளிக்கிறது குறும்பு! புத்திசாலிப்பிள்ளைகளுக்குதான் கேள்விகள் கேட்கத் தோன்றுமாம்.. செல்லப்பெண்ணுக்குப் பாராட்டுகள்.

  துளசிப்பாட்டி போன்று கீழ்மட்ட உழைக்கும் பெண்வர்க்கம் எப்போதுமே சாபத்தில் உழல்வது மனதுக்கு மிகவும் வருத்தம் தரும் செய்தி.

  பகிர்வுக்கு நன்றி ஆதி.

  ReplyDelete
 9. புத்தகம் படிப்பது, படிக்க நேரம் அமைவது வரம். குழந்தையின் கேள்விகள் சிரிக்க வைத்தன.

  ReplyDelete
 10. கதம்பம் கமகமக்கிறது ரோஷ்ணியின் பங்களிப்பு கதம்பத்திற்கு மெருகூட்டியது என்றால் மிகையில்லை.கதை வாசிப்பு தொடரட்டும்.ஸ்ரீரங்கம், துளசிப்பாட்டி பகிர்வும் மனதை தொட்டது..

  ReplyDelete
 11. துளசிப் பாட்டி, ர‌சித்த புத்தகம், ரோஷிணியின் குறும்பான பேச்சுகள் என்று பல மலர்களால் தொடுத்த கதம்பம் அழகுடன் சேர்ந்து மணக்கிறது!!

  ReplyDelete
 12. ரோஷ்ணி கார்னர் சூப்பர் ரொம்பவே ரசித்தேன்.

  ReplyDelete
 13. ரோஷ்ணி அவ் சொல்ல வச்சிட்டாளா உங்களை..:))
  அவளுக்கு பரிட்சைக்கும் வெற்றிக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. கதம்பம் மணக்கிறது.
  கதை விமர்சனம், ஸ்ரீரங்கத்து இற்றைகள் அருமை.
  துளசிப் பாட்டி தள்ளாத வயதிலும் கஷ்டப்பட்டு உழைப்பது மனதுக்கு வருத்தமாய் இருக்கிறது.
  ரோஷ்ணியின் கேள்விகள், ஆலோசனைகள் அருமை.

  ReplyDelete
 15. அவ்அவ்..... வாங்குங்க :)))

  வளர்ந்து பெரியவளானாலும் மீண்டும் வேறு விதத்தில் வாங்கவேண்டி இருக்கும் :))) அம்மாக்களுக்கு கிடைக்கும் பரிசுகள்தான் இவை.

  ReplyDelete
 16. கதம்பத்தை ரசித்து படித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் பல...

  ReplyDelete
 17. ஆஹா. ஸ்ரீரங்கவாசம் மோக்ஷம்தான். துளசிப்பாட்டி இன்னும் நன்றாக வியாபாரம் செய்து நன்றாக இருக்கணும்.
  இத்தனை வேலைகளுக்கு நடுவில் புத்தகம் படிக்கவும் நேரம் ஒதுக்குகிறீர்களே .பாராட்டுகிறேன்.ரோஷ்ணி அம்மா:)

  ReplyDelete
 18. வல்லிம்மா - பதிவுலகை விட புத்தகம் படிப்பதில் தான் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது....:))

  கருத்துக்களுக்கு நன்றிம்மா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…