Tuesday, April 2, 2013

குளு குளு பொன்முடியும்! கோல்டன் வேலியும்! (கோவை கேரளா சுற்றுலா – 11)உங்க எல்லோரையும் மலைவாசஸ்தலத்துக்கு போகலாம் என்று தயாராக சொல்லி விட்டு நான் சில வேலைகளின் காரணமாக வலைப்பூ பக்கமே வராமல் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டேன்…..:) மன்னிக்கவும். சரி வாங்க இப்போ போகலாமா?

மதிய உணவு எடுத்துக் கொண்டவுடன் நாங்கள் புறப்பட்டோம். போகும் வழியில் கேஷுவை பள்ளியிலிருந்து பிக்கப் செய்து கொண்டோம். அவனுக்கான உணவுகளும் எடுத்து வந்திருந்ததால் அவன் வண்டியிலேயே சாப்பிட்டுக் கொண்டான். நான் கண்களை மூடிக் கொண்டு காரில் ஒலித்த பாட்டுகளையும், மற்றவர்கள் பேசிக் கொண்டு வருவதையும் கேட்டுக் கொண்டே பயணிக்க ஆரம்பித்தேன்.

பொன்முடியை நெருங்கி விட்டோம். இந்த மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரம் கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சியாக உள்ள இந்த ஸ்தலம் வருடம் முழுவதுமே இதமான வெப்ப நிலையை கொண்டுள்ளது. அதனால் எப்போதுமே சுற்றுலா பயணிகளின் வரவு இருக்குமாம். மலையின் அடிவாரத்தில் பெப்பரா வனவிலங்கு சரணாலயம்அமைந்துள்ளது. இருட்டுவதற்குள் மேலே சென்று வர வேண்டும் என்பதால், இந்த சரணாலயத்திற்கு செல்ல முடியவில்லை.

மலையின் பாதி வழியில் உள்ள GOLDEN VALLEY க்கு சென்றடைந்தோம். ஒருபுறம் மலைத் தொடர் மறுபுறம் பள்ளத்தாக்கு. முதலிலேயே தகவல் பலகை நம்மை வரவேற்று எச்சரிக்கிறது. பாறைகள் வழுக்கும் என்பதால் கவனமாக செல்ல வேண்டும் என்றுபடிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். பாசி படர்ந்து இருந்தது. குட்டீஸ்களை ஆளுக்கொருபுறம் பிடித்துக் கொண்டு, வழியில் தென்பட்ட மரங்களையும், கொடிகளையும் பார்த்துக் கொண்டு அமைதியான சூழலில் நடக்க ஆரம்பித்தோம். நிச்சயம் ரசிக்க வேண்டிய சூழல்….

பாறைகளின் ஊடே சலசலத்து ஓடி வரும் ஓடையைப் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. காலணிகளை ஒருபுறத்தில் விட்டு விட்டு ஆற்றில் இறங்கினோம். பாறைகள் வழுக்குகின்றது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆற்றின் நடுவில் ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு தண்ணீரை ஒருவர் மீது மற்றொருவர் தெளித்து விளையாடினோம். சின்ன பசங்க தான் விளையாடுவாங்களா என்ன! நானும் இவர்களோடு சேர்ந்து கொண்டேன். என்னவரும் பிரமோத்தும் எங்களையும் தாண்டி ஆளுக்கொரு புறம் உயரமான பாறைகளை தேர்ந்தெடுத்து அங்கு நின்று கொண்டு எங்களையும் இயற்கையின் அழகையும் புகைப்படமெடுத்து தள்ளினார்கள்.

தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தாலும் இவர்களின் மேலும் ஒரு கண்ணை வைத்திருந்தோம்…:) மனமின்றி அங்கிருந்து கிளம்பி மேலே ஏறுவதற்கு முன் ஊஞ்சல் போலிருந்த மரத்தின் மீது அமர்ந்து கொண்டு படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அடுத்து நாம் செல்லப் போவது 21 கொண்டை வளைவுகளை கொண்ட பொன்முடியின் உச்சிக்கு….

பொன்முடியைச் சுற்றி தேயிலைத் தோட்டங்களும், மரங்களும் ,செடி கொடிகளும் என என்னே இயற்கையின் பேரழகு!!! பசுமையின் வனப்பு எங்கும் தென்பட்டது. வரிசையாக கொண்டை ஊசி வளைவுகளையும், வழியில் தென்பட்ட குரங்குகள், பறவைகள் என ரசித்துக் கொண்டே சென்றோம். ஏறக்குறைய உச்சிக்கு சென்றடையும் நேரத்தில் வழக்கம் போல் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது…..:) மழை நின்றதும், ஒருபுறம் சூரியன் எட்டிப் பார்க்க மறுபுறம் வானவில் தோன்றியது. நல்ல சிலுசிலுவென காற்று வேறு…. கேட்கவா வேண்டும். புகைப்பட கலைஞருக்கு……:))இங்கு சுற்றுலாப் பயணிகள்  வந்து தங்கி இயற்கையை ரசிக்க காட்டேஜ்கள் உள்ளன. சென்ற முறை பிரமோத்தின் குடும்பத்தினர் முதல் நாள் பொன்முடியின் உச்சிக்கு வந்து காட்டேஜ் எடுத்து தங்கி சுற்றி விட்டு மறுநாள் இறங்கும் போது வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று விட்டு வந்தார்களாம். நமக்கு இந்த முறை நேரம் இல்லைஅடுத்த முறை அது போல் செய்ய வேண்டும்.

உச்சிக்கு சென்று விட்டோம். காவல் துறையின் வயர்லெஸ் அலுவலகம் இங்கு உள்ளது. மீண்டும் தூறல். இங்கு ஒரு இடத்தில் கட்டையால் தடுத்துள்ளனர். வண்டிகள் இந்த தடுப்பைத் தாண்டி செல்ல அனுமதியில்லை. தடுப்புக்கு அடுத்துள்ள 200 மீட்டர் இடம் தமிழகத்தினுடையதாம். சிறிது நேரம் வண்டியிலேயே அமர்ந்து கொண்டு ரசித்தோம். பின்பு நானும் என்னவரும் மட்டும் ஆளுக்கொரு குடை சகிதமாக இறங்கி தடுப்புக்கு அப்பால் உள்ள தமிழகத்தின் எல்லை வரை சென்று வந்தோம். அதற்கப்பால் வழி இல்லை. பள்ளத்தாக்கு தான். அமைதியான இயற்கை சூழ்நிலையில், சில்லென்ற காற்று உடனிருக்க, மழைத் தூறல் வேறு நம்மை சிலிர்க்க வைக்கிறது. நிச்சயம் மறக்க முடியாத அருமையான அனுபவம்….:)

இருட்டத் துவங்கி விட்டதால் அடுத்த முறையும் இங்கு வந்து இரண்டு நாட்களாவது தங்கி இயற்கையின் அழகை அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கிருந்து மனமின்றிக் கிளம்பினோம்.

என்னவரையும், பிரமோத்தையும் தவிர குட்டீஸ் உள்பட அனைவருமே நன்றாக உறங்கிப் போனோம். வீடு வந்து எழுப்பி தான் அனைவரும் எழுந்தோம்.  எல்லோருமே அசதியாக இருந்ததால் பிரமோத் ஹோட்டலிருந்து இரவு உணவை வாங்கி வந்தார். குட்டி குட்டியாக தோசைகள், சட்னி சகிதமாகரச வடை (உளுந்து வடையைத் தான் ரசத்தில் போட்டு சாப்பிட்டிருக்கிறேன். இங்கு பருப்பு வடையை போட்டிருந்தார்கள். இதுவும் ஒரு சுவை!) சாப்பிட்டு முடித்தோம். அடுத்து என்ன! உறக்கம் தான்….:)

நாளை புத்தாண்டு! நாங்களும் மாலை கிளம்ப வேண்டும். பயணச்சீட்டு இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்டில்…..:) என்ன செய்தோம்? அடுத்த பகுதியில்.

அநேகமாக அடுத்த பகுதியில் பயணத் தொடர் முடிந்து விடும். என்ன எல்லோருக்கும் ஜாலியா….:))

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட். 

14 comments:

 1. இயற்கையின் பேரழகு! பசுமையின் வனப்பு

  அருமையான பயணப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. பொன்முடியைப்பற்றிய படங்கள் எல்லாமே மிகுந்த் இயற்கை அழகுடன் உள்ளன. பசுமையான பயணக்கட்டுரைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. இயற்கை அழகு என்றுமே அலுக்காதவைதான். பகிர்வும் படங்களும் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி

  ReplyDelete
 4. எங்க பகுதியில் ரசவடைன்னாலே அது பருப்பு வடையை ரசத்தில் போட்டு வைக்கிறதுதான். ஏங்க இப்ப அதை ஞாபகப்படுத்தறீங்க :-))))))

  அழகான படங்கள். வாழ்த்துகள் வல்லுநருக்கு:-)

  ReplyDelete
 5. அடிக்கிற வெயிலுக்கு படங்கள் கண்களுக்கு இதம்... நன்றி...

  பயணம் தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. படத்திலிருக்கும் இயற்கை சூழல் வெகு அழகு! மலைகளும், ஊஞ்சல் கட்டும் மரங்களுமாக குளுகுளுவென்று இருக்கிறது.
  பொன்முடி கேரளாவில் எந்தப் பகுதியில் இருக்கிறது? எப்படிப் போக வேண்டும்? சீசன் எப்போது? அந்த விவரங்களைக் கொஞ்சம் எழுதுங்களேன், ஆதி!

  ReplyDelete
 7. ஆஹா... ஒவ்வொரு படமும் ரசிக்க வைக்கிறது. உஙகளவர் நன்றாகவே சுடுகிறார்! பயண அனுபவம் அலுப்புத் தட்டவில்லை. தொடர்வதற்குக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. அருமையாக பயணக்கட்டுரையை படங்களோடு பகிர்கின்றீர்கள் தொடரட்டும் பயணம்!

  ReplyDelete
 9. பொன்முடி இயற்கையின் வரபிரசாதம் தான்.
  வெங்கட்எடுத்த படங்கள் எல்லாம் வெகு அழகு.
  மரத்தில் அமைந்த இயற்கை ஊஞ்சலில் ஆட மனம் ஆசைக் கொள்கிறது.
  உங்கள் விவரிப்பு அருமை.

  ReplyDelete
 10. போய் பார்க்கனும்ன்னு ஆசையை ஏற்படுத்திவிட்டீர்கள்..ஆதி..:)

  ReplyDelete
 11. இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றி.

  வை.கோ சார் - நன்றி.

  பூந்தளிர் - நன்றிங்க.

  அமைதிச்சாரல் - ரச வடையை ஞாபகப்படுத்திட்டேனோ...:)) வாழ்த்துக்கு நன்றிங்க.

  திண்டுக்கல் தனபாலன் சார் - நன்றிங்க.

  ரஞ்சனிம்மா - பொன்முடி திருவனந்தபுரத்திலிருந்து ஒன்னரை மணி நேரத்தில் செல்லும் இடம் தான். பேருந்து வசதியெல்லாம் இல்லை. நம்முடைய தனிப்பட்ட வாகனங்களில் தான் செல்லலாம். வருடம் முழுவதுமே சீசன் தான்.

  கருத்துக்களுக்கு நன்றிம்மா.

  கணேஷ் சார் - நன்றி. என்னவருக்கும் சொல்லி விடுகிறேன்.

  தனிமரம் - நன்றிங்க.

  கோமதிம்மா - நன்றி.

  முத்துலெட்சுமி - நன்றிங்க. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

  ReplyDelete
 12. சுற்றுலாவிற்கு கூடவே ஒரு சூப்பர் ஃபோட்டோகிராபர் வராரே! அவர் ஒரு நாளைக்கு எவ்வளவு பேட்டா வாங்குகிறார்.

  (எங்கள் ஊரிலும் ரசவடை என்றால் பருப்பு வடைதான்!)

  ReplyDelete
 13. பொன்முடியில் இயற்கை அழகு நிறைந்து கிடக்கின்றது.

  ReplyDelete
 14. பத்மநாபன் சார் - நன்றி.

  மாதேவி - நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…