Monday, April 29, 2013

தாயுமானவன்!

பரமசிவம் என்கிற பரமு, பிரபல மோட்டார் கம்பெனியில் பதினேழு வருடங்களாக வேலை செய்து வருகிறான். ஆரம்பத்தில் டயர்கள் மாற்றும் வேலை, பொருட்களை சரி பார்க்கும் வேலை என்று ஆர்வமுடன் வேலை செய்து இன்று தலைமை ஃபோர்மேனாக இருக்கிறான். யூனியன் லீடராகவும் மாறி உடன் வேலை பார்க்கும் ஊழியர்களின் நலனுக்காக பாடுபடுகிறான். தனிப்பட்ட முறையிலும் உதவுகிறான்.

பரமுவின் மனைவி சரஸ்வதி என்கிற சரசு. திருமணத்துக்கு முன்பு பெயிண்ட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாள். திருமணம் நிச்சயம் ஆனவுடன் பெண்கள் வேலை செய்து விட்டு, வீட்டுக்குச் சோர்ந்து வருவது கூடாதுஎன்ற வருங்கால கணவனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வேலையை விட்டு விட்டாள். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் என கண்ணுக்கு நிறைவான குழந்தைகள். பெண் மூத்தவள். கணவனும் மனைவியும் அன்னியோன்யமாக குடித்தனம் நடத்துகிறார்கள்.

யூனியனில் விரிசல் ஏற்பட்டு, விற்பனைக்கு அனுப்பிய வண்டிகளில் ஏதோ ஒன்று கவனிக்கப்படாமல் பிரச்சனையாகி விட தலைமையிடத்திலிருந்து கேள்வி மேல் கேள்வி, தவறு பரமுவுடையது இல்லையென்றாலும், கெளரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் ராஜினாமா செய்து விட்டு வந்து விடுகிறான். குடும்பமும் தலைவன் மனது நோகாமல் நடந்து கொள்கிறார்கள். குழந்தைகளும் குடும்ப கஷ்டங்களை பக்குவமாக புரிந்து கொள்கின்றன. வேறு வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தும் யூனியனில் இருந்த காரணத்தை காட்டி தர மறுக்கிறார்கள். வெளிநாட்டு வாய்ப்புக்காக பணத்தை செலவழித்து ஏமாந்து விடுகிறான்.

இருக்கறதையெல்லாம் விற்று சாப்பிட ஆரம்பிக்க, மனைவி தான் முதலில் வேலை செய்த இடத்திலேயே பணியாற்றுகிறேன் என்று சொல்ல, ”நான் இருக்கற போது நீ எதுக்கு போய் கஷ்டப்படணும்என மறுக்க, சரசு பிடிவாதம் பிடித்து செல்கிறாள். இயந்திரங்களோடயே இருந்த நான் இப்போ என்ன செய்யட்டும்என பரமு விழிக்க என் ராசா நீங்க குழந்தைகளை பார்த்துக்கோங்க, கொஞ்ச நாள் நான் சுமை தூக்கறேன்”. என்கிறாள். அப்பாவிடம் எந்த வேலையும் சொல்லி சங்கடப்பட வைக்கக்கூடாது. நீங்களே செய்ய கத்துக்கோங்க என குழந்தைகளுக்கு சொல்லிச் செல்கிறாள். தந்தையின் உதவிகளை மறுத்த குழந்தைகள், பின்பு தந்தையாக செய்ய ஆச்சரியப்படுகிறார்கள். மகளிடமும் சில கற்றுக் கொள்கிறான் பரமு. மனைவியிடமும் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். முதலில் உப்பே இல்லாத கட்டி கட்டியான உப்புமா, ஃபில்டரில் டிகாஷன் எது என்று தெரியாத கீழ் பாத்திரத்தில் உள்ளதை கொட்டி விட்டு மேலே பொடியோடு உள்ளதை விட்டு கலப்பது, என்று செய்தவன் பின்பு ஒவ்வொன்றாக கற்றுத் தேறுகிறான்.

மனைவி முடிந்தவரை வீட்டு வேலைகளை செய்து விட்டு கணவனது உதவியை மறுத்தும், அவள் நகர்ந்ததும், அவளின் புடவையை காயப் போடுகையிலும், கொல்லையில் பாத்திரங்களை போட்டு தேய்க்கும் போதும் நடக்கும் கேலிகளையும், பிரச்சனைகளையும் சமாளிக்கிறான். பணிச்சுமையாலும், குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தாலும் திட்டிய சரசுவோடு ஊடல் கொள்ளும் பரமு, குழந்தைகளை ஒரு வார்த்தை கூட சொல்ல விடாத தந்தையாக இருக்கிறான்.

இந்த நிலையில் மகளின் பள்ளியிலிருந்து ப்யூன் வந்து மகள் மயக்கம் போட்டு விழுந்ததாகவும் தாயை உடனே வரும்படி ஆசிரியர் சொல்லி விட்டதாகவும் சொல்ல, பதறியடித்து ஓடுகிறான் பரமு. பள்ளியில் மகள் பெரிய மனுஷியாகி விட்டதாக சொல்ல, ஒரு நிமிடம் மகளிடமிருந்து தான் அந்நியப்பட்டதாக உணர்கிறான். தந்தையுடன் அனுப்ப மறுக்கும் ஆசிரியரிடம், தான் தந்தையுடன் போக விரும்புவதாக சொல்லி வெட்கத்துடன் வரும் மகளை ஆச்சரியத்துடன் பார்த்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறான்.

என்ன செய்வது என்று தெரியவில்லை? நேராக லேடி டாக்டரிடம் அழைத்துச் சென்று தகவலை சொல்லி மகளுக்கு சொல்லித் தரும்படி சொல்கிறான். (இந்த இடத்தில் கண்ணீர் துளிர்த்தது! எந்த தகப்பனுக்கும் வரக் கூடாத சூழ்நிலை).

மாலையில் வீடு திரும்பிய மனைவியிடம் தகவலைச் சொல்லிவிட்டு, வேண்டிய பொருட்களை அவள் சொல்லும் முன் கையிலிருக்கும் மோதிரத்தை பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு வாங்க கிளம்பும் தகப்பன்…. இனி மகளை தனியே விட்டு விட்டு வெளியே கூட போகக் கூடாது என மனதுக்குள் நினைத்து கொண்டு காபந்து பண்ணுகிறான்.

ஒரு நாள் எல்லோருமாக வெளியே போய் விட்டு வீடு திரும்பும் வேளையில், இவர்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனை காத்திருந்தது. பழுதான ஒரு காருடன் தவித்து கொண்டிருந்த ஒருவருக்கு பழுதுகளை சரி பார்த்து வேண்டிய உதவி செய்து தந்து உதவுகிறான் பரமு. அவன் குடும்பம் மொத்தமும் ஒத்துழைக்கிறது. இவர்களுக்கு பிரதி உபகாரமாக வீடு வரை வந்து விடும் அவர் குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்டு அவர் பரமுவுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். ஆறுமாதம் பம்பாயிலும், ஆறுமாதம் டெல்லியிலும் பணியாற்றியவுடன் சென்னையிலிலேயே பணியாற்றலாம் என சொல்ல மனைவியின் சுமையை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு பம்பாய்க்கு பறக்கிறான் பரமு. இனி அவர்கள் வாழ்வில் வசந்த காலம் தான்.இது தான் நான் சமீபத்தில் வாசித்த பாலகுமாரன் அவர்களின் தாயுமானவன்கதைச்சுருக்கம். மனதை நெகிழ வைத்த கதை. அங்கங்கே கண்ணீர் துளியும் துளிர்த்தது…. ”கல்லூரிப் பூக்கள்என்ற பதிவில் சொல்லியிருந்தது போல் பரணில் இருந்து எடுத்த என்னவரின் புத்தகங்களை ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்து விட்டேன். இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் உடனேயே அவரிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். இந்த கதை தொலைக்காட்சியில் நெடுந்தொடராக வந்திருந்ததாகவும் சொன்னார்.

இந்த புத்தகத்தில் உள்ள ஆச்சரியப்படுத்தும் விஷயங்களாவன, மோட்டார் துறையை ஆராய்ச்சி செய்தது போல் கதையெங்கும் அவ்வளவு நுணுக்கமான விஷயங்கள். படிக்கும் போது 1997லிருந்து 2000 வரை சென்று வந்தது போல் இருந்தது. ஆம்! அப்போ நான் இயந்திரவியல் துறை மாணவி. படிக்கும், பார்க்கும், வரையும் அனைத்துமே இயந்திரங்கள் தான். நெடுநாட்களுக்கு பிறகு நினைவூட்டி கொள்ளவும் உதவியது.

அதே போல் பரமு என்கிற இந்த கதாபாத்திரம் சட்டென்று நம் மனதில் பதிந்து விடுகிறார். இப்படியொரு கணவனும், தகப்பனும் அமைந்து விட்டால் உலகில் வேறு என்ன வேண்டும்! பெண்ணுக்கு எங்கிருந்து தீங்கு நிகழும்….

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

நர்மதா பதிப்பகம்
16/7, ராஜாபாதர் தெரு
பாண்டி பஜார்
தியாகராய நகர்
சென்னை – 600017
மொத்த பக்கங்கள் – 288
அப்போதைய விலை ரூ 25 (இப்போ சத்தியமா இந்த விலைக்குக் கிடைக்காது). விசா பதிப்பகமும் இப் புத்தகத்தினை பின்னர் வெளியிட்ட்து. அதன் விலை 125/-.

என்ன நண்பர்களே கதைச் சுருக்கத்தினை ரசித்தீர்களா? வேறு ஒரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.....


ஆதி வெங்கட்.

Tuesday, April 23, 2013

கதம்பம் – 14


ரோஷ்ணியின் முழுப்பரீட்சை, வெயில், வீட்டு வேலைகள் என ஏதேதோ காரணம் சொன்னாலும், வலைப்பூ பக்கம் வராததற்கு உண்மையான காரணம், வாசிப்பில் ஆழ்ந்து போவது தான். உங்கள் மகள் நீங்கள் படிக்கும் போது தொந்தரவு செய்வதில்லையா? என இங்குள்ள தோழி கேட்டார்கள் :) வீட்டுக்கும், அவளுக்குமான எல்லாவற்றையும் செய்து விட்டு படிக்க அமர்ந்தால், அவ்வப்போது வந்து ஏதேனும் சொல்வாள், கொஞ்சி விட்டு செல்வாள், CHOTA BHEEM, NINJA HATTORI கதையும் சொல்வாள், என்ன புத்தகம் என இரண்டு வரி வாசித்து பார்ப்பாள். அவ்வளவு தான். மற்றபடி இப்போதைக்கு தொந்தரவில்லை…:))

குபேரவன காவல்:-

திரு. காலச்சக்கரம்நரசிம்மா அவர்கள் எழுதிய இந்த புத்தகத்தை பற்றி ஏற்கனவே மின்னல் வரிகள் கணேஷ் சார் அவர்களும், என்னவரும் எழுதி விட்டார்கள். அதனால் என்னுடைய கருத்தாக நான் இங்கே பதிய நினைப்பது இது தான். அற்புதமான புத்தகம், பகுதிக்கு பகுதி விறுவிறுப்பு. கையில் எடுத்தால்  கீழே வைக்க நிச்சயம் மனசு வராது. படிக்கும் போது பயம் வந்து நம்மை தொற்றிக் கொள்கிறது. சரித்திர பின்னணியும், கற்பனையும், நிதர்சனமும் என அருமையான இந்த புத்தகத்தை வாங்கி வாசித்து பார்த்தால் மட்டுமே தங்களால் உணர முடியும்.

ஸ்ரீரங்கத்து இற்றைகள்:-

ரங்கனின் தெப்போற்சவம், கொள்ளிடக்கரையில் திருவெள்ளறைப் பெருமாள், உத்தமர் கோவில் பெருமாள், அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் ஆகியோரின் திவ்ய தரிசனம். பங்குனித் திருவிழாவில் கருட வாகனம், கற்பக விருட்சம், பூத்தேர், பங்குனித் தேர், சேர்த்தி சேவை எனரங்கனின் உற்சவங்களுக்கு பஞ்சமா என்ன? வருடம் முழுவதுமே அவனுக்கு விதவிதமான அலங்காரங்களும், ஊர் சுற்றி வருதலும் தானே வேலை…..:)

தற்போது பூச்சாத்து திருநாள் நடந்து வருகிறது. மக்கள் கொண்டு வந்து தரும் கூடை கூடையான மல்லிகைச் சரங்களால் அவனை அலங்கரிக்கிறார்கள். சன்னிதியிலிருந்து புறப்பாடாகி கொட்டாரம், சந்திர புஷ்கரிணி வழியாக மணல்வெளியில் சேவை சாதிக்கிறான்.

மேலப்பட்டாபிராமர் சன்னிதியில் ஸ்ரீ ராம நவமிஉற்சவத்தின் பொருட்டு தினமும் ஒரு அலங்காரமாக ராமர் தரிசனம் தருகிறார். ரோஷ்ணியின் பரீட்சை காரணமாக இரண்டு நாட்களுக்கு தான் சென்று காண முடிந்தது. முதல் நாள் ராமர் ஜனனம், இரண்டாம் நாள் அகலிகை சாப விமோசனம்.

சமயபுரத்தில் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் திருவிழாவும், தேரும் சிறப்பாக நடைபெற்றது. இங்கு நம் வீட்டருகிலிருந்து வண்டி வண்டியாக மாரியம்மனுக்கு பூக்கள் எடுத்துச் செல்லப்பட்டு அவளை குளிர்வித்தார்கள்.

எங்கு கூட்டம் என்றாலும் அங்கு தாய்மார்களின் பேச்சு குழந்தைகள் சாப்பாட்டுக்கு அடம் பிடிப்பதை பற்றிய புலம்பல் தான் காதில் விழுகிறது. குழந்தைகளா! ப்ளீஸ் ஒழுங்காக அம்மா கொடுப்பதை சாப்பிட்டால் என்னப்பா?

துளசிப் பாட்டி:-

வாரா வாரம் எனக்கு பூ கொண்டு வந்து தரும் இந்த பாட்டிக்கு வயது எப்படியும் 70க்கு மேல் தான் இருக்கும். குழந்தை போன்று மென்மையான குரல். உரிமையோடு காபி போட்டுத் தாடா செல்லம் என கேட்டு வாங்கி குடித்து விட்டு செல்வார். திருமணம் முடிந்து ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே ஒரு குழந்தையை தந்து விட்டு கணவன் இறந்து விட, வீடு வீடாக சென்று பூ விற்று தான் மகனை ஆளாக்கியிருக்கிறார். பத்தாம் வகுப்பு முடித்த கையோடு  பேத்தியையும் திருமணம் செய்து வைக்க, குடிகாரக் கணவனோடு இனி வாழ முடியாது எனஅவளும் மூன்று வயது மகனை எடுத்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாளாம். இப்போது தையல் வேலையும், பூக்களும் கட்டி தருவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். ஏழ்மை ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் புரட்டி தான் போடுகிறது.

ரோஷ்ணி கார்னர்:-

குழந்தைத்தனத்தை விட்டு விட்டு பெரியவளாகிக் கொண்டு வருவதால் தெள்ளத் தெளிவாக பேசுகிறாள். இருந்தாலும் அவ்வப்போது இது போல் குறும்புகளும் உண்டு.

ஏதோ விஷமம் செய்து விட்டு வந்த ரோஷ்ணியிடம் ,

அம்மா: உன்னோட போராட வேண்டியதா இருக்கறதே….
ரோஷ்ணி : அம்மா நீயென்ன SOLDIER ?
அம்மா : ஏம்மா அப்படி கேட்கிற?
ரோஷ்ணி: SOLDIER தான் நாட்டுக்காக போராடுவாங்க….
அம்மா: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கொள்ளிடக்கரையில் இருந்த பெருமாளை தரிசனம் செய்து விட்டு இருட்டும் வேளையில் வீடு வந்து கொண்டிருந்தோம்

அம்மா: ரோஷ்ணி அம்மா கைய பிடித்துக் கொண்டு வா..
ரோஷ்ணி: ஏம்மா?
அம்மா: இல்லையின்னா யாராவது உன்னை கூட்டிக் கொண்டு போய் கண்ணைத் தோண்டிடுவாங்க….
ரோஷ்ணி: அம்மா அது என்ன மண்ணா தோண்ட….
அம்மா: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வாசல் துடைத்து கோலம் போட்டு விட்டு வந்த என்னிடம், அம்மா தினமும் கோலத்தை ஏன் பெருக்கி குப்பையில போட்டு விட்டு மறுபடியும் துடைத்து வேற கோலம் போடுறே? பெருக்கி எடுத்த கோலப்பொடிய திரும்ப டப்பாவிலயே போட்டு வைத்துக் கொண்டால் மறுபடியும் போட உதவும் இல்லையா!!!!!!!!!!!!

என்ன நண்பர்களே கதம்பம் மணம் வீசியதா?

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Wednesday, April 17, 2013

தாழம்பூவும் தங்கநிலாவும்பட உதவி: கூகிள்


காஞ்சனா ஜெயதிலகர் அவர்கள் எழுதிய இந்த புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். மென்மையான கதை. காஞ்சனா அவர்கள் குடும்பப் பாங்கான கதைகளை எழுதிக் கொண்டு வருபவர்.  இது ஒரு இனிமையான அதே சமயம் கொஞ்சம் த்ரில்லான கதை…. கதைக்குள் போவோமா…..

நீலவேலி எஸ்டேட்டின் சிறப்பை விவரிக்கும் வரிகள்  இயற்கை அழகை நம் கண் முன்னால் நிறுத்துகிறது. வயதான காரணத்தால் முதலாளி ஜனார்த்தனன் தன்னுடைய இறுதி நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய மகள் வயிற்று பேத்தியான கனகாங்கியை தனித்து விட்டு விட்டு செல்கிறோமே என மனக்கவலை அவருக்கு. அந்த கவலை கனகாங்கிக்கும் தான். தாத்தாவுக்கு பின் தனிமையில், வனாந்திரம் போலுள்ள இவ்வளவு பெரிய எஸ்டேட்டில் எப்படி இருப்பதென….

ஜனார்த்தனனின் மகள் குறும்படங்களை  தயாரிக்கும் ஒரு கலைஞனை காதலித்து திருமணம் செய்தவர். கணவனோ சொத்துகளை பற்றி யோசிக்காமல் இயற்கையின் அழகை படமெடுக்க செல்ல மனைவியும் உடன் சென்று, ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட அன்றிலிருந்து கனகாங்கி தாத்தா வசம் தான்

தாத்தாவின் இந்த நிலையில் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு தூரத்து சொந்தம் பிரபாவதி தன் மகன்களில் ஒருவரை கனகாங்கிக்கு திருமணம் செய்ய திட்டமிடுகிறார். தாத்தாவும் வெளியே சென்று மாப்பிள்ளை பார்க்க முடியாததால் சொந்தம் விட்டு போக வேண்டாமென பிரபாவதி மகன்களை பற்றி யோசிக்க, அருகில் உள்ள பண்ணை வீட்டுக்கு அசோக் என்னும் கலைஞன் வருகிறார்.

அபூர்வமான ராகத்தின் பெயரான கனகாங்கி என்ற பெயரை கேட்டதிலிருந்தே அவளை காண வேண்டும் என்று தவித்த  அசோக்கை சந்தித்து தன்னை தாத்தாவிடம் வந்து பெண் கேட்குமாறு நாடகமாட சொல்கிறாள் அழகி கனகாங்கி. பிரபாவதி மகன்களிடம் இருந்து தப்பிக்க….

கனகாங்கியின் அப்பா படங்களை உபயோகப்படுத்த வேண்டி உதவி கேட்க ஏற்கனவே ஒரு முறை தாத்தாவை சந்தித்திருந்ததால், நாடகம் நடத்த கடினமாக இருக்கவில்லை. தாத்தாவுக்கு அசோக்கை பிடித்து விடுகிறது. இந்த அசோக்கை கன்யா என்பவள் ஒரு தலையாக காதலிக்கிறாள். கனகாங்கிக்காக அசோக் நடத்தும் நாடகத்தை நிறுத்த கன்யா சதி செய்கிறாள். மறுபுறம் பிரபாவதி மகன்கள் இடைஞ்சல் தர, கனகாங்கிக்கும் அசோக்குக்கும் இடையே காதல் மலர்கிறது. தாத்தாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக, என்ன முடிவெடுக்கிறார்? கனகாங்கியின் காதல் என்னவானது? கன்யா அசோக்கை விட்டாளா? தெரிந்து கொள்ள புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்.

புத்தகத்தை வாங்க அணுக வேண்டிய முகவரி:-

அருணோதயம்
5/3, கெளடியா சாலை,
இராயப்பேட்டை,
சென்னை – 600014.

புத்தகத்தின் விலை ரூ 60.

மீண்டும் சந்திப்போம்,
ஆதிவெங்கட்.

Monday, April 15, 2013

கல்லுக்குள் புகுந்த உயிர்!


இந்திரா செளந்தர்ராஜனின் இந்த நாவலை சமீபத்தில் வாசித்தேன். இது ஒரு ஆன்மீக மர்மம் நிறைந்த நாவல் என்று ஆரம்பத்தில் அவரே குறிப்பிடுகிறார். இந்த புத்தகத்தில் இரண்டு நாவல்கள் உள்ளன. இரண்டுமே அருமையாக உள்ளன. நம்முள் நிச்சயம் ஒரு அதிர்வை உண்டாக்குகிறது. அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடியது அல்ல இக்கதைகள்! இனி கதைக்குள் போவோமா…..


பட உதவி: கூகிள்

முதல் கதையான நீலக்கல் மோதிரத்தில் சோமநாத பிள்ளை என்பவர் ஒவ்வொரு பகுதிக்கும் முன்னும் நீலக்கல் மோதிரத்தால் தன் வாழ்நாளில் நடைபெற்ற மர்மங்களை விவரிக்கிறார். திவான் பகதூராக இருந்த அவருடைய தாத்தாவுக்கு பிரிட்டிஷ் ராணி பரிசாக அணிவித்ததாகவும், அதனால் அவருடைய பரம்பரையே சின்னா பின்னமாக போனதாகவும், அடுத்து வந்த தலைமுறையினர் அந்த மோதிரத்தை எங்காவது விட்டெறிந்தாலும் அது திரும்ப அவர்களிடமே வந்து சேர்வதையும் சொல்கிறார்! அது தற்போது இருப்பது……

சாருலதா சில நாட்களுக்கு முன் பட்டதாரியான அழகான துடிப்புள்ள பெண். இவள் தான் நம் கதையின் நாயகி. வேலைக்கு போக முயற்சித்துக் கொண்டிருக்கும் சாருலதாவிற்கு அவள் அத்தை மகனை திருமணம் முடிக்க பேச்சு எழுகிறது. சாருலதாவின் தந்தை தான் இருக்கும் ஏழ்மை நிலைக்கு, பரணில் பித்தளை சம்படத்தில் சாணி உருண்டைக்குள் புதைத்து வைக்கப் பட்டிருக்கும் அந்த நீலக்கல் மோதிரம் தான் காரணம் என்று சொல்கிறார்.

தைரியசாலியான சாருலதா அந்த மோதிரத்தை எடுத்து அணிந்து கொள்கிறாள். அத்தை மகனை திருமணம் செய்ய மறுக்கிறாள். அப்பா மோதிரத்தை பிடுங்கி விட்டெறிகிறார். ஆனால் அது மீண்டும் வந்து விடுகிறது. மோதிரத்தை அணியாத போது அவள் வாழ்க்கை தலைக்கீழாக புரள்கிறது. இதற்கு காரணம் என்ன? என்ன தான் மர்மம்? மீண்டும் அணிந்த போது வெற்றி கொள்கிறாள். அத்தை மகனை மணந்தாளா? அல்லது வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டாளா, விருப்பப்பட்ட வேலையில் சேர்ந்தாளா? மோதிரத்தில் என்ன தான் ரகசியம் உள்ளது? தெரிந்து கொள்ள புத்தகத்தை வாங்கி வாசியுங்களேன்…..

அடுத்த கதையான கல்லுக்குள் புகுந்த உயிர்….

பிரபலமான மிருதங்க வித்வானான நாகநாதன் பிள்ளைக்கு பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பக்கவாதம் வந்து விடுகிறது. மனைவி லட்சுமியும், நண்பர் சிவப்பிரகாசமும் ஆறுதல் சொல்லி மருத்துவமனையில் சேர்க்கின்றனர். மருத்துவரும் பக்கவாதத்தின் நிலையை பார்த்து குழப்பமடைகிறார். அவரின் கார் ஓட்டுனர் பக்கவாதத்தின் காரணத்தை சொல்கிறார். அதற்கான விடை  விடைதாங்கி என்னும் கிராமத்தில் உள்ளது.

நந்தனா என்ற நடிகை சினிமாத் துறையின் உயர்ந்த நிலையில் உள்ளவள். அவளுக்கொரு பிரச்சனை. அதற்கான விடை விடைதாங்கியில் உள்ளது.

விடைதாங்கி என்பது திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள குக்கிராமம். அங்கே உள்ள கோவிலின் நந்திகேஸ்வரர் சிறப்பு வாய்ந்தவர். அவருக்கு 108 வருடத்துக்கு ஒருமுறை அவரின் திருநட்சத்திரத்தன்று உயிர் பெறுவதாக சொல்லப்படுகிறது. அந்த கிராமத்திற்கென்று பல கட்டுப்பாடுகள் உண்டு. கோபுரத்தை விட உயரமாக எந்த கட்டடமும் கட்டக்கூடாது. இந்த ஸ்தலத்தின் சுவாமியை பற்றி வெளியே புகழ்ந்து சொல்லக் கூடாது, ஒருமுறை தான் பிரச்சனையை சொல்ல வேண்டும், வயலில் விளைந்ததில் ஒரு பகுதியை நந்திகேஸ்வரருக்கு கொடுக்க வேண்டும். இப்படிப் பல….

நந்தனா தன்னுடைய பிரச்சனையை பற்றி சமையல்கார மாமியிடம் சொல்கிறாள். விடைதாங்கியில் பிறந்த மாமி என்பதால் நந்தனாவின் பிரச்சனைக்கு வழி சொல்கிறாள். அதன்படி நந்தனா நந்திகேஸ்வரரின் காதில் பிரச்சனையை சொல்லவே காது மடல் அசைந்து ஏற்கிறது! அடுத்த இரண்டு நாட்களிலேயே யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனை தீர்ந்து போகிறது.

விடைதாங்கியில் ஒரு வயலை வாங்கிய நாகநாதன் பிள்ளை, வயலை விற்றவர் நந்திகேஸ்வரரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு போகும் படி சொல்லியும் கேட்காமல் கிளம்புகிறார். எதிரே வந்த காளை மாடு வழி விடாமல் தடுக்கவே காளையின் மீது காரை ஏற்ற, அடுத்த நாள் பக்கவாதம் வந்து அவதிப்படுகிறார். காளை இவர் எங்கு சென்றாலும் அங்கு ரத்த காயங்களோடு வந்து காட்சி தருகிறது. விடை தேட விடைதாங்கிக்கு வருகின்றனர்.

நாகநாதன் பிள்ளைக்கு வாதம் சரியாகிறது. ஆனால் நண்பர் சிவப்பிரகாசத்துக்கு ஏனோ பேச்சு வராமல் போகிறது. அது போல் நந்தனாவுக்கு அவளுக்கு பிடித்தமான வாழ்க்கை அமைகிறது. இப்படிப் பல அதிசயங்கள்….

நந்திகேஸ்வரரின் கதை என்ன? சிற்ப சாஸ்திரத்தில் என்னென்ன விஷயங்கள் உண்டு. கல்லுக்குள்ளும் உயிர் வருமா? தெரிந்து கொள்ள புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். மர்ம நாவல் படிக்கும் விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்ற நாவல். என்னால் இரண்டு நாட்களுக்கு தூங்கவே முடியவில்லை. விபூதி வைத்துக் கொண்டு, ஸ்லோகம் சொன்ன படி தான் இருந்தேன்……

இந்த புத்தகம் படித்த அதே சமயத்தில் தான் கூட்டிற்குள் புகுந்த உயிர்என்ற புத்தகமும் படித்தேன். இதுவும் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் கதை தான். இதுவும் ஒரு மர்ம நாவல் தான். ஏனோ முதல் புத்தகம் ஏற்படுத்திய அதிர்வை இது தரவில்லை….:)


புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

திருவரசு புத்தக நிலையம்
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை – 600017.
மொத்த பக்கங்கள் – 204
புத்தகத்தின் விலை ரூ 65

மீண்டும் வேறு புத்தகம் படித்த அனுபவத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

ஆதி வெங்கட்.

Thursday, April 11, 2013

ஈச்சயும், அனந்தபுரியும், கேரள புட்டும்! (கோவை கேரளா சுற்றுலா – 12)புத்தாண்டன்று காலை எழுந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டோம். அலைபேசியில் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தோம். எங்களுக்கும் வாழ்த்துகள் வந்த வண்ணமே இருந்தது. மூன்று நாட்களாக எங்களுடனேயே ஊர்சுற்றிக் கொண்டிருந்த பிரமோத்தும், ராக்கியும் இன்று அலுவலகம் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். புத்தாண்டுக்காக பார்ட்டி உண்டாம். நாங்களும் சென்று வாருங்கள். நாங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்கிறோம் என்றோம். மாலை செல்ல வேண்டும் என்பதால் பெட்டியை வேறு பேக் செய்ய வேண்டும். எங்களுக்கு பேச்சுத் துணையாக இருக்கட்டும் என்று பிரமோத் தன்னுடைய பெற்றோரை அழைத்திருந்தார்.

காலை உணவாக ராக்கி இன்று புட்டும், கொண்டக்கடலைக் கறியும் செய்திருந்தார். அரிசி மாவில் தான் புட்டு சாப்பிட்டிருக்கிறேன். இவர் கோதுமை மாவிலும் புட்டு செய்திருந்தார். தனக்கு இது தான் மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். அலுவலகம் செல்வதற்கு முன் மதியத்துக்கு வேண்டிய உணவுகளையும் மாமனார், மாமியாருக்காக சிலதும் செய்து விட்டுக் கிளம்பினார். கேஷுவுக்கும் மின்னுவுக்கும் வீசிங்குக்கு வேண்டிய மருந்துகளை மேஜையில் எடுத்து வைத்து, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நினைவூட்டும் படி சொல்லி விட்டு, எங்களுடைய பயணச்சீட்டு விஷயமாக பிரமோத் முன்பே செல்ல, ராக்கி அவருக்கான காலை உணவையும் பேக் செய்து எடுத்துச் சென்றார்.

அம்மையும், அச்சனும் அடுத்திருந்த அம்பலத்துக்கு சென்று விட்டு பிரசாதங்களை எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். ராக்கி விட்டு விட்டு சென்ற ஒரு சில வேலைகளை நான் செய்து விட்டு வந்து உட்கார்ந்தேன். கேஷுவும் மின்னுவும் ஈச்ச காணாம், ஈச்ச காணாம்என்று சொல்லிக் கொண்டு ஒரு சிடியை போட்டார்கள். ஈச்ச என்றால் ஈ. அதாங்க நான் ஈபடத்தின் மலையாள வெர்ஷன்….:) பார்த்து முடித்தோம். இந்த படத்தை முன்பு என் தம்பி திருச்சி வந்த போது, அவனும் ரோஷ்ணியும் பார்த்தார்கள். நான் வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது எட்டி பார்த்தேன். கிளைமாக்ஸ் மட்டும் முழுதாக பார்த்தேன். நடு நடுவே மருந்துக்கான நினைவூட்டல். அண்ணன் தானும் உண்டு தங்கைக்கும் தருவான்….:))

அடுத்ததாக ஒரு சிடி. இது "இங்கிலிஷ் விங்கிலிஷ்"  ஹிந்தி படம். இது பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தது என்று லக்கேஜ்களை பேக் செய்து கொண்டே பார்த்தோம். மதியம் வந்து விட்டதால் பிரமோத்தும் ராக்கியும் அலுவலகத்திலிருந்து வந்து விட்டார்கள். அனைவரும் சாப்பிட்டோம். இன்று சிகப்பரிசி சாதம், தீயல், தோரன், கூட்டுக் கறி, பப்படம் சகிதமாக…. பரிமாறி விட்டு ராக்கி கிளம்பி விட்டார். விடைபெறும் போது அடிக்கடி வரும்படியும், தொடர்பில் இருக்கும் படியும் சொல்லிச் சென்றார். படம் முடிந்ததும் நாங்களும் அம்மை, அச்சனிடம் விடைபெற்று கேஷுவுக்கும் மின்னுவுக்கு பை சொல்லி விட்டுக் கிளம்பினோம்.

பிரமோத் எங்களை ஸ்டேஷனில் விட்டு விட்டு விடைபெற்றார். தங்களுடைய வேலைகளையெல்லாம் விட்டு விட்டு, தன்னுடைய காரிலேயே எங்களை ஊரைச் சுற்றிக் காட்டி அருமையான விருந்தோம்பல் செய்த அவரிடம்மனமார்ந்த நன்றியைச் சொன்னேன்….

லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம். திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் ஏறி உட்கார்ந்தோம். ஏறியதிலிருந்தே என் மனதில் ஒரு வித பயம்?

பயத்திற்கு காரணம்…. EQ (EMERGENCY QUOTA) போட்டும், என் கணவருக்கு மட்டுமே பயணச்சீட்டு உறுதியானது. என்னுடையதும், ரோஷ்ணியுடையதும் வெயிட்டிங் லிஸ்ட் 1, 2 ல்…..:) வெயிட்டிங் லிஸ்ட் உள்ளவர்கள் ரயிலில் ஏறக் கூடாது என்று தெரிந்த காரணத்தால் தான் பயம். என் கணவரோ கூலாக "பார்த்துக் கொள்ளலாம் வா" என்கிறார்….:) ரயிலும் கிளம்பியது. ஆனால்  உடனிருந்தவர்கள் எல்லோருமே எங்களை மாதிரி தான் என்று பார்த்தபோது கொஞ்சம்  நிம்மதி ….:) ஒருவருக்கு மட்டும் உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு மற்றவர்கள். வெயிட்டிங் லிஸ்ட்டில்…:)

புத்தாண்டு விடுமுறை சீசன் முடிந்து அனைவரும் ஊருக்கு திரும்ப வேண்டுமே, அதனால் சீட்டு பற்றாக்குறை. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நின்று நின்று தான் வந்தது. கேரளா முழுவதுமே இப்படித் தான்….:( இரவு என் கணவரின் மிடில் பெர்த்தில் என்னையும், ரோஷ்ணியையும் படுத்துறங்க சொல்லி விட்டு என் கணவர் நின்று கொண்டும், கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டும் வந்தார் பாவம்!

விடிகாலை 2 மணிக்கு திருச்சி வந்து இறங்கினோம். வெளியே வந்து ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்தை பிடித்தால் கும்பல்!!! எப்போதுமே இப்படித் தான்…. நடு இரவிலும் ஜன நடமாட்டம் இருக்கும் ஊர். இதுவும் ஒருவிதத்தில் மதுரை போலவே தூங்கா நகரம் தான்…:) இரவு முழுதுமே பேருந்துகளும் நிறையவே உண்டு. ஸ்ரீரங்கத்தில் இறங்கி ஆட்டோவை பிடித்து வீட்டை வந்தடைந்து லக்கேஜ்களை போட்டு விட்டு படுத்தவர்கள் தான். காலை 8 மணிக்கே எழுந்தோம். விடுமுறை முடிந்து ரோஷ்ணிக்கும் அன்றிலிருந்து பள்ளி துவங்கிறது. நான் வேண்டாம் என்று சொல்லியும் அவள் போவதாக சொல்லவே விரைவாக தயாராக்கி பள்ளிக்கு அனுப்பினோம்….:))

இனி! அன்றாட வேலைகள் துவங்கி விடும்….:) சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசித்தோம். பிரமோத் குடும்பத்துக்கும், மன்னிம்மாவுக்கும் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்ததை தெரியப்படுத்தினோம்.

சுற்றுலா சென்ற இடங்களில் பிடித்தமானதை ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டோம். என்னவருக்கு பிடித்தமானது பொன்முடியாம். அதுவும் அந்த அமைதியான சூழலில் தமிழக இடத்தில் ஒரு 200 மீட்டர் வரை காற்றும், குளிரும், மழை ஒருசேர நடந்தோமே! அது தான் என்றார். நிச்சயம் அருமையான இடம்.. அடுத்து ஷங்குமுக கடற்கரை, அது போல கோவையில் அநுவாவி மலை….. அந்த ஓட்டுநர் மட்டும் சொல்லி இருக்காவிட்டால் தவற விட்டிருப்போம். அது போல் பல வருடங்கள் கழித்து பார்த்த நட்புகள், சொந்தங்கள், பதிவர் சந்திப்பு. அன்றாட வீட்டு வேலைகளிலிருந்தும், சமையலிலிருந்தும் ஒரு மாறுபாடு…. இப்படிப் பல…..

துணியெல்லாம் போடு கண்ணு நாந்துவைக்கிறேன்” ”ஏன் நாஞ்செய்யக் கூடாதாபோடு கண்ணுஒரு பையன பெத்துக்க கண்ணு நான் பார்த்துக்கிறேன்…” இப்படிப்பட்ட பாசமான மனிதர்களையும் சந்தித்ததே மனதிற்கு இதமான விஷயம் தானே….

நம்ம கந்தசாமி ஐயா, இராஜராஜேஸ்வரி மேடம் போன்று பல பதிவர்கள் இருந்தும் எங்களால் நேரம் ஒதுக்கி பார்க்க முடியவில்லை. அடுத்த முறையாவது சந்திக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டோம்.

அவ்வப்போது ஒரு சுற்றுலா சென்று வந்தால் மனதிற்கு உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். இந்த பயணத்தொடரில் என்னுடன் பயணித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டு எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்த அனைவருக்கும் நன்றிகள் பல….


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Thursday, April 4, 2013

குட்டிப் பொண்ணுக்கு பிறந்தநாள்….


இன்னிக்கு எங்க செல்லத்துக்கு பிறந்தநாள். இந்த வருடம் ஆரம்பத்திலிருந்தே என் பிறந்தநாள் வரப் போகிறதே! ஹை! ஜாலி! என்று சொல்லிக் கொண்டிருந்தவள்.. இன்னும் ஒரு மாதம் இருக்கிறது, இன்னும் ஒரு வாரம் இருக்கிறதுஇன்னும் நாலு நாள் இருக்கிறது என்று அவளின் பிறந்தநாள் இதோ வந்தே விட்டது. இந்த சின்ன வயதில் தான் இது போன்ற எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் இருக்கும் அல்லவா!


எங்களது இல்லத்தில்!தில்லியின் Doll Museum பொம்மையைப் பார்க்கும் பொம்மைநானும் தாஜ் மஹாலை தொடுவேன்.....


ஜெய்ப்பூர் ஆமேர் கோட்டையில்...


தில்லி பீதம்புராவின் தில்லி ஹாட்! – குல்ஃபி ரொம்பவே டேஸ்டி!


நான் சீக்கிரமே எழுந்து விடுகிறேன் அம்மா. தலையை இப்படி பின்னி விடு, இந்த வளையல் போட்டுக்கறேன், என்று ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே சென்றாள். அம்மா எனக்கு இந்த பாயசம் தான் வேண்டும் என்று அன்பு கட்டளை வேறு…:) அவளின் ஆர்வத்தைப் பார்க்கும் போது என்னுடைய சிறுவயது பிறந்தநாள்கள் தவறாமல் கண் முன்னே வந்து சென்றது. நாம அனுபவிக்காததை நம் குழந்தைகள் அனுபவிக்கட்டுமே என்று மனதில் தோன்றுவதென்னவோ உண்மைஇப்போது கூட மகளுக்கு, கணவருக்கு என்று பார்த்து பார்த்து இனிப்புகள் செய்யும் எனக்கு என்னுடைய பிறந்தநாளுக்காக செய்ய தோன்றாது…:)பொங்கல் அன்று வீட்டில்....
திருவனந்தபுரம் ZOO
வெளியே இருக்கும் சறுக்கு மரத்தில்!
Garden of Five Senses – தில்லி
பூக்களாலான மயிலுக்கு அருகில் பூமகள்...

Garden of Five Senses – தில்லி
மற்றுமொரு போஸ்!திருவனந்தபுரம் அருகே பொன்முடி!
இயற்கையின் சூழலில்....அவளின் ஒவ்வொரு ஆசைகளும், கனவுகளும் நிறைவேறட்டும். அவள் ஃப்ரெண்ட் கணேஷா அவளை அன்பான, அடக்கமான, அனுசரணையான, ஆரோக்கியமுள்ள குழந்தையாக வைத்திருக்கட்டும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டிம்மா!

அம்மாவும், அப்பாவும்

டிஸ்கி:- இது என்னுடைய 150 வது பதிவு. ஒருவழியாக இத்தனை பதிவுகளை தேற்றி விட்டேன். தொடர்ந்து ஆதரவும் தந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் நன்றிகள் பல.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Tuesday, April 2, 2013

குளு குளு பொன்முடியும்! கோல்டன் வேலியும்! (கோவை கேரளா சுற்றுலா – 11)உங்க எல்லோரையும் மலைவாசஸ்தலத்துக்கு போகலாம் என்று தயாராக சொல்லி விட்டு நான் சில வேலைகளின் காரணமாக வலைப்பூ பக்கமே வராமல் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டேன்…..:) மன்னிக்கவும். சரி வாங்க இப்போ போகலாமா?

மதிய உணவு எடுத்துக் கொண்டவுடன் நாங்கள் புறப்பட்டோம். போகும் வழியில் கேஷுவை பள்ளியிலிருந்து பிக்கப் செய்து கொண்டோம். அவனுக்கான உணவுகளும் எடுத்து வந்திருந்ததால் அவன் வண்டியிலேயே சாப்பிட்டுக் கொண்டான். நான் கண்களை மூடிக் கொண்டு காரில் ஒலித்த பாட்டுகளையும், மற்றவர்கள் பேசிக் கொண்டு வருவதையும் கேட்டுக் கொண்டே பயணிக்க ஆரம்பித்தேன்.

பொன்முடியை நெருங்கி விட்டோம். இந்த மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரம் கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சியாக உள்ள இந்த ஸ்தலம் வருடம் முழுவதுமே இதமான வெப்ப நிலையை கொண்டுள்ளது. அதனால் எப்போதுமே சுற்றுலா பயணிகளின் வரவு இருக்குமாம். மலையின் அடிவாரத்தில் பெப்பரா வனவிலங்கு சரணாலயம்அமைந்துள்ளது. இருட்டுவதற்குள் மேலே சென்று வர வேண்டும் என்பதால், இந்த சரணாலயத்திற்கு செல்ல முடியவில்லை.

மலையின் பாதி வழியில் உள்ள GOLDEN VALLEY க்கு சென்றடைந்தோம். ஒருபுறம் மலைத் தொடர் மறுபுறம் பள்ளத்தாக்கு. முதலிலேயே தகவல் பலகை நம்மை வரவேற்று எச்சரிக்கிறது. பாறைகள் வழுக்கும் என்பதால் கவனமாக செல்ல வேண்டும் என்றுபடிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். பாசி படர்ந்து இருந்தது. குட்டீஸ்களை ஆளுக்கொருபுறம் பிடித்துக் கொண்டு, வழியில் தென்பட்ட மரங்களையும், கொடிகளையும் பார்த்துக் கொண்டு அமைதியான சூழலில் நடக்க ஆரம்பித்தோம். நிச்சயம் ரசிக்க வேண்டிய சூழல்….

பாறைகளின் ஊடே சலசலத்து ஓடி வரும் ஓடையைப் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. காலணிகளை ஒருபுறத்தில் விட்டு விட்டு ஆற்றில் இறங்கினோம். பாறைகள் வழுக்குகின்றது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆற்றின் நடுவில் ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு தண்ணீரை ஒருவர் மீது மற்றொருவர் தெளித்து விளையாடினோம். சின்ன பசங்க தான் விளையாடுவாங்களா என்ன! நானும் இவர்களோடு சேர்ந்து கொண்டேன். என்னவரும் பிரமோத்தும் எங்களையும் தாண்டி ஆளுக்கொரு புறம் உயரமான பாறைகளை தேர்ந்தெடுத்து அங்கு நின்று கொண்டு எங்களையும் இயற்கையின் அழகையும் புகைப்படமெடுத்து தள்ளினார்கள்.

தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தாலும் இவர்களின் மேலும் ஒரு கண்ணை வைத்திருந்தோம்…:) மனமின்றி அங்கிருந்து கிளம்பி மேலே ஏறுவதற்கு முன் ஊஞ்சல் போலிருந்த மரத்தின் மீது அமர்ந்து கொண்டு படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அடுத்து நாம் செல்லப் போவது 21 கொண்டை வளைவுகளை கொண்ட பொன்முடியின் உச்சிக்கு….

பொன்முடியைச் சுற்றி தேயிலைத் தோட்டங்களும், மரங்களும் ,செடி கொடிகளும் என என்னே இயற்கையின் பேரழகு!!! பசுமையின் வனப்பு எங்கும் தென்பட்டது. வரிசையாக கொண்டை ஊசி வளைவுகளையும், வழியில் தென்பட்ட குரங்குகள், பறவைகள் என ரசித்துக் கொண்டே சென்றோம். ஏறக்குறைய உச்சிக்கு சென்றடையும் நேரத்தில் வழக்கம் போல் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது…..:) மழை நின்றதும், ஒருபுறம் சூரியன் எட்டிப் பார்க்க மறுபுறம் வானவில் தோன்றியது. நல்ல சிலுசிலுவென காற்று வேறு…. கேட்கவா வேண்டும். புகைப்பட கலைஞருக்கு……:))இங்கு சுற்றுலாப் பயணிகள்  வந்து தங்கி இயற்கையை ரசிக்க காட்டேஜ்கள் உள்ளன. சென்ற முறை பிரமோத்தின் குடும்பத்தினர் முதல் நாள் பொன்முடியின் உச்சிக்கு வந்து காட்டேஜ் எடுத்து தங்கி சுற்றி விட்டு மறுநாள் இறங்கும் போது வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று விட்டு வந்தார்களாம். நமக்கு இந்த முறை நேரம் இல்லைஅடுத்த முறை அது போல் செய்ய வேண்டும்.

உச்சிக்கு சென்று விட்டோம். காவல் துறையின் வயர்லெஸ் அலுவலகம் இங்கு உள்ளது. மீண்டும் தூறல். இங்கு ஒரு இடத்தில் கட்டையால் தடுத்துள்ளனர். வண்டிகள் இந்த தடுப்பைத் தாண்டி செல்ல அனுமதியில்லை. தடுப்புக்கு அடுத்துள்ள 200 மீட்டர் இடம் தமிழகத்தினுடையதாம். சிறிது நேரம் வண்டியிலேயே அமர்ந்து கொண்டு ரசித்தோம். பின்பு நானும் என்னவரும் மட்டும் ஆளுக்கொரு குடை சகிதமாக இறங்கி தடுப்புக்கு அப்பால் உள்ள தமிழகத்தின் எல்லை வரை சென்று வந்தோம். அதற்கப்பால் வழி இல்லை. பள்ளத்தாக்கு தான். அமைதியான இயற்கை சூழ்நிலையில், சில்லென்ற காற்று உடனிருக்க, மழைத் தூறல் வேறு நம்மை சிலிர்க்க வைக்கிறது. நிச்சயம் மறக்க முடியாத அருமையான அனுபவம்….:)

இருட்டத் துவங்கி விட்டதால் அடுத்த முறையும் இங்கு வந்து இரண்டு நாட்களாவது தங்கி இயற்கையின் அழகை அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கிருந்து மனமின்றிக் கிளம்பினோம்.

என்னவரையும், பிரமோத்தையும் தவிர குட்டீஸ் உள்பட அனைவருமே நன்றாக உறங்கிப் போனோம். வீடு வந்து எழுப்பி தான் அனைவரும் எழுந்தோம்.  எல்லோருமே அசதியாக இருந்ததால் பிரமோத் ஹோட்டலிருந்து இரவு உணவை வாங்கி வந்தார். குட்டி குட்டியாக தோசைகள், சட்னி சகிதமாகரச வடை (உளுந்து வடையைத் தான் ரசத்தில் போட்டு சாப்பிட்டிருக்கிறேன். இங்கு பருப்பு வடையை போட்டிருந்தார்கள். இதுவும் ஒரு சுவை!) சாப்பிட்டு முடித்தோம். அடுத்து என்ன! உறக்கம் தான்….:)

நாளை புத்தாண்டு! நாங்களும் மாலை கிளம்ப வேண்டும். பயணச்சீட்டு இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்டில்…..:) என்ன செய்தோம்? அடுத்த பகுதியில்.

அநேகமாக அடுத்த பகுதியில் பயணத் தொடர் முடிந்து விடும். என்ன எல்லோருக்கும் ஜாலியா….:))

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.