Monday, March 18, 2013

கல்லூரிப் பூக்கள் - பாலகுமாரன்
எழுத்துலக ஜாம்பவான்களில் ஒருவரான பாலகுமாரன் அவர்களின் புத்தகத்தை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தில்லியில் எங்கள் வீட்டு புத்தக அலமாரியில் கணவர் வாசித்த இவரின் இரும்பு குதிரைகள், மெர்க்குரி பூக்கள், அகல்யா, இனிது இனிது காதல் இனிது என இவரது பல புத்தகங்கள் இருந்தாலும் ஏனோ எனக்கு இதுவரை வாசிக்க தோன்றவில்லை. பக்கத்து வீட்டு பெண்மணி கல்லூரிப் பூக்கள் புத்தகத்தை படித்து விட்டு நன்றாக இருக்கிறது படித்துப் பாருங்கள் என்று கொடுத்தார்.

அவரின் கதைகள் புரிய சற்று நேரமாகுமளவு கடினமாக இருக்கும் என்று மனதுள்ளேயே ஒரு எண்ணம். அதனால் தான் புத்தக அலமாரியில் இதுவரை தூசி தட்டி வைத்ததோடு சரி. இம்முறை படித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. வாசிக்க ஆரம்பித்தேன். வைக்க மனம் வரவில்லை. 416 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை கிடைக்கும் பகல் இரண்டு மணி நேரங்களில் என்று இரண்டு நாட்களில் முடித்தேன். வாங்க கதைக்குள் போவோமா…..

வாசகர்களின் கடிதங்களில் ஆரம்பிக்குது புத்தகம். சரபேஸ்வரன் என்னும் இளைஞன் திரைப்படத்தை இயக்கும் ஆர்வத்தோடு தன் கிராமத்தை விட்டு விட்டு சென்னைக்கு வந்து துன்பப்படுகிறார். அவருடைய கிராமத்தில் அவரின் தாய் வெண்ணெய் வியாபாரம் செய்கிறாள். மகனின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் மகனுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருகிறாள். சரபேஸ்வரனோ வாய்ப்பு கிடைக்காமல் உதவி இயக்குனராக ஒரிரு படங்களில் வேலை செய்கிறார். மானசீகமாக தான் இயக்கத் துடிக்கும் திரைப்படத்திற்கு தேவையான கருவையும், திட்டங்களையும் தயார் செய்து வைக்கிறான். வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படும் இவர்  அன்னையின் வேண்டுகோள்படி ஊருக்கே செல்லலாமா என தவிக்கும் சமயத்தில் சத்யா என்னும் கதாநாயகனுடனான சந்திப்பு ஏற்படுகிறது. இருவரும் இணைந்து ஒரு தயாரிப்பாளரை சந்திக்க வாழக்கைக்கு ஒரு வழி கிடைக்கிறது. அது தான் கல்லூரிப் பூக்கள் திரைப்படம்.

தன்னை போலவே வாய்ப்புக்காக துடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு திரைப்படம் தயாராகிறது. ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இந்த துறைக்கு வந்தார்கள், ஒரு மனிதன் காசுக்காகவும், வாய்ப்புக்காகவும், வாழக்கைக்காகவும் எப்படியெல்லாம் வேஷம் போடுகிறான் என்பது இந்த கதையில் வெட்ட வெளிச்சமாகிறது. திரைப்படம் நல்ல முறையில் வெளிவந்து சரபேஸ்வரனுக்கு நல்ல பெயரை வாங்கித் தருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து வேறு சில படங்கள் இயக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பின்பு மாமன் மகளை மணந்து கொண்டு இன்ப வாழ்க்கை வாழ்வதாக முடிகிறது. (இந்தமுறை உங்களுக்கெல்லாம் முழுக்கதையையும் சொல்லி விட்டேனே!)

இந்த புத்தகத்தை வாசிக்கும் போது என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால் திரைப்படத் துறையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும், நுணுக்கமான தொழில்நுட்ப  விஷயங்களையும் பாலகுமாரன் அவர்கள் விவரித்திருப்பது தான்.

அதே போல் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் ஒரு படத்தை பார்த்து விட்டு சர்வசாதாரணமாக நம் கருத்துகளை தெரிவிக்கிறோம். ஆனால் ஒரு திரைப்படம் வெளிவர அந்த துறையில் பணியாற்றும் ஒவ்வொரும் படும் துயரை நாம் அறிவதில்லை என்று தான்…:(

சரி! இனி அடுத்து எனக்கு தோன்றியது, இங்கு திருச்சியில் பரணில் கணவரின் புத்தகப் பெட்டியில் இருக்கும் பாலகுமாரன் புத்தகங்களை அவர் வரும் போது எடுத்துத் தர சொல்ல வேண்டும் என்று….:)

இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க அணுக வேண்டிய முகவரி

திருமகள் நிலையம்
புதிய எண் 16, பழைய எண் 55
வெங்கட்நாராயணா ரோடு
தியாகராய நகர், சென்னை – 600017
விலை 145

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.17 comments:

 1. பாலகுமாரன் அவர்களின் நாவல்கள் மிகவும் பெரிதாக இருக்கும். அதனாலேயே நான் அவ்வளவு அதிகமாகப் படித்ததில்லை. நல்ல பகிர்வு... நன்றி.

  ReplyDelete
 2. பாலகுமாரன் அவர்களின் சிறந்த நாவல்களில் ஒன்று...

  நல்ல விமர்சனம்...

  ReplyDelete
 3. Arumaiyaaka vimarchayam seithulleerkal avasiyam padiththuvidukiren vaazhththukkaludan

  ReplyDelete
 4. புத்தக விமர்சனம் அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. நல்லதொரு புத்தகம்.

  நானும் கடந்த வாரத்தில் பாலகுமாரன் அவர்களின் இரண்டு புத்த்கங்களை படித்து முடித்தேன். இந்த புத்தகத்தையும் படிக்கிறேன். நன்றி ஆதி.

  ReplyDelete
 6. அருமை.வாசிக்க ஆவல்.

  ReplyDelete
 7. விமர்சனம் அருமை.நாவலை வாங்கி படிக்க தூண்டி விட்டது

  ReplyDelete
 8. இந்த புத்தகத்தை வாசிக்கும் போது என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால் திரைப்படத் துறையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும், நுணுக்கமான தொழில்நுட்ப விஷயங்களையும் பாலகுமாரன் அவர்கள் விவரித்திருப்பது தான்.//


  பாலகுமரன் அவர்கள் இந்த கதை எழுதும் போது சினிமாதுறையில் இல்லை என்று நினைக்கிறேன், இருந்தாலும் அவர் அதைப்பற்றி விளக்கமாய் எழுதி இருப்பார்.

  ’தாயுமானவன்’ கதை என்று நினைக்கிறேன் அதில் கார் கம்பெனியைபற்றி அவ்வளவு விளக்கமாய் சொல்லி இருப்பார்.
  இரும்புக்குதிரையில் லாரியில் வரும் அரிசி மூட்டைகளில் சிதறும் அரிசிகளை சேகரித்து எடுத்து சென்று செல்லும் ஒரு பெண் பாத்திரத்தைப் பற்றி அழகாய் சொல்லி இருப்பார்.

  உங்கள் புத்தக விமர்சனம் நன்றாக இருக்கிறது ஆதி.

  ReplyDelete
 9. அருமையான விமர்சனம்.. பாலகுமாரனை கொஞ்சமா வாசிச்சிருக்கேன்.

  ReplyDelete
 10. அருமையான விமர்சனம் ....

  ReplyDelete
 11. படிக்க வேண்டும் என ஆர்வத்தை தூண்டுகிறது!

  ReplyDelete
 12. படித்து,ரசித்துப் பகிர்ந்திருக்கிறீர்கள்

  ReplyDelete
 13. பாலகுமாரனின் கதைகள் நிறையப் படித்திருக்கிறேன். இந்தக் கதையையும் படித்திருக்கிறேன்.
  நானும் இந்தக் கதை வாசிக்கும்போது உங்களைப் போலத்தான் திரைத் துறை பற்றி அவர் எழுதியதைப் பற்றி வியந்திருக்கிறேன்.

  என் தோழி எந்தப் படத்தையும் நன்றாக இல்லை என்று சொல்லவே மாட்டாள். எத்தனை பேர்கள் எத்தனை கஷ்டப்பட்டு உழைத்து எடுக்கிறார்கள், அதனால் நன்றாயில்லை என்று சொல்லக் கூடாது என்பாள்!

  உங்கள் விமரிசனம் மறுபடி இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆசையை உண்டாக்கியது.

  ReplyDelete
 14. நல்ல விமர்சனம்.// நாம் ஒவ்வொருவரும் ஒரு படத்தை பார்த்து விட்டு சர்வசாதாரணமாக நம் கருத்துகளை தெரிவிக்கிறோம். ஆனால் ஒரு திரைப்படம் வெளிவர அந்த துறையில் பணியாற்றும் ஒவ்வொரும் படும் துயரை நாம் அறிவதில்லை என்று தான்…:(//

  நானும் இதனை படபிடிப்பு காட்சிகளை டிவியில் பார்க்கும்போது நினைத்ததுண்டு

  ReplyDelete
 15. புத்தக அறிமுகத்தை வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.

  பரணில் இருந்த பாலகுமாரன் அவர்களின் புத்தகங்களை எடுத்தாயிற்று. இனி முடியும் போது வாசித்து பகிர்கிறேன்...:)

  ReplyDelete
 16. இந்த நாவலை மட்டும் மிக சமீபத்தில்தான் படித்தேன். பழைய புத்தகங்கள் விற்கும் கடையிலிருந்து வாங்கி வந்தேன். படித்து ஒரு வாரம் தான் ஆகிறது. ஆனால் இறுதியில் சட்டென்று முடித்திவிட்டார்.

  ReplyDelete
 17. கவிப்ரியன் - தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…