Friday, March 15, 2013

ஜாய் ஆலூக்காஸ் – கேம்லின் ஓவியப் போட்டி


ரோஷ்ணியின் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு CAMLIN நிறுவனத்தார் ஓவியப் போட்டி நடத்தி இருந்தார்கள். அதில் ரோஷ்ணிக்கும் ஒரு பரிசு கிடைத்துள்ளது. பள்ளி முதல்வர் அழைத்து தந்தார்கள். பள்ளியிலிருந்து வரும் போதே அம்மா ப்ரைஸ் கிடைச்சிருக்குஎன்று கத்தியவாறே ஓடி வந்தாள். வாழ்த்தி விட்டு மேலும் பல ஓவியங்களை வரையச் சொல்லி ஊக்கமும் கொடுத்தேன்.அடுத்து பள்ளியின் ஆண்டு விழாவில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் இரண்டு முறையுமே ஒரு பேப்பர் தவிர மற்ற அனைத்திலும் முழு மதிப்பெண்கள் (தமிழ் உள்பட) வாங்கியதற்காக, இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டு SHIVANI GROUP OF INSTITUTIONS தலைவர் டாக்டர் P.செல்வராஜ்  அவர்கள் கையால் சான்றிதழும், புத்தகமும் அளிக்கப்பட்டது. ஏன் தமிழ் உள்பட என்று சொல்லியிருந்தேன் என்றால் தில்லியில் இருந்தவரை அவளுக்கு அம்மா, அப்பா என்ற இரு வார்த்தைகளும் அதில் உள்ள எழுத்துகள் மட்டுமே அறிவாள். இந்த வருடம் இங்கு சேர்க்கப் போகிறோம் என்றவுடன் விடுமுறையில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து படிக்க வைத்தேன் அவ்வளவே. ஆனால் இங்கு வந்த பின் நன்றாக பிடித்துக் கொண்டு விட்டாள்.

அடுத்து JOY ALUKKASம், UTVயும் இணைந்து பள்ளிக்கு வந்திருந்து ஓவியப் போட்டி நடத்தியிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்  பள்ளியிலிருந்து என்னுடைய அலைபேசிக்கு தகவல் வந்தது. பள்ளியிலிருந்து அழைப்பு என்றதும் உடம்பு சரியில்லையோ என்று தான் பதட்டம் வந்தது. பின்பு தான் பரிசு வாங்கியிருக்கிறாள் என்று சொல்லவே மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. உடனே கணவரை தொடர்பு கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். மாமனார், மாமியாரிடமும் மாலையில் நடக்கும் பரிசளிப்பு விழாவுக்கு போகலாம் என்று சொல்லவே, மாமியார் வருகிறேன் என்று சொன்னார். மாலையில் பள்ளியிலிருந்து குதூகலித்து வந்தவளை வாழ்த்தி தயாராக்கி நான், ரோஷ்ணி, மாமியார் மூவரும் பேருந்தை பிடித்து JOY ALUKKAS ஷோரூம்க்கு சென்று சேர்ந்தோம்.சிறிது நேர காத்திருப்புக்கு பின் திருச்சியின் லோக்கல் சேனல் UTV யிலிருந்து வந்திருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். பள்ளி முதல்வர் திருமதி பத்மினி தேஷ்பாண்டே அவர்களும் திருச்சியின் ஜாய் ஆலூக்காஸ் தலைவர் அவர்களும் இணைந்து பெற்றோர் உடனிருக்க குழந்தைகளுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள். புகைப்படங்களும், காணொளிகளும் எடுக்கப்பட்டு உடனேயே முகப்புத்தகத்தில் பகிர்ந்தனர். இந்நிகழ்ச்சி UTVல் மூன்று நான்கு வாரங்களுக்கு பிறகு ஞாயிறுகளில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

பெற்றோர்கள் பேசுவதற்கும், தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. ஓரிருவர் பேச, என் அருகில் அமர்ந்திருந்த மாமியார் என்னிடம் நீயும் போய் பேசு என்றார்நானும் என்னம்மா போய் பேச! பழக்கமே இல்லை என்றேன்மீண்டும் சொல்லவே எழுந்து மேடைக்கு சென்று மைக்கை வாங்கியதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை, நேரம் ஆனது. எல்லோருமே கை தட்டினார்கள் தான். எனக்கு தான் பதட்டத்தில் என்ன பேசினேன் என்று தெரியவில்லை…:)

மாமியார் சொன்னது இது தான் நீ பேசியது என்று என் பெயர் ஆதிலஷ்மி. என் மகள் ரோஷ்ணி இரண்டாம் வகுப்பில் படிக்கிறாள். இன்று அவள் பரிசு வாங்கியது குறித்து மிகவும் மகிழ்ச்சி. நாங்க தில்லியிலிருந்து இந்த வருடம் தான் இங்கு வந்துள்ளோம். அங்கு இவள் யாருடனும் சட்டுனு பழகவும் மாட்டாள். எதிலும் கலந்து கொள்ளவும் மாட்டாள். இங்கு வந்த பின் அவள் தொடர்ந்து பரிசு பெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இம்மாதிரி வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் ஜாய் ஆலூக்காஸுக்கு நன்றி. என் சந்தோஷத்தை அவள் அப்பாவிடமும் உடனேயே பகிர்ந்து கொண்டேன். நன்றி.இது தான்  நான் பேசிய வார்த்தைகள். அன்று என் மாமியார் சொன்னதால் தான் என் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

இப்போட்டியில் ரோஷ்ணி மூன்றாம் பரிசு பெற்றிருந்தாள். இப்போதெல்லாம் பேப்பரில் வரைவது தவிர கணினியிலும் வரைய ஆரம்பித்திருக்கிறாள்.  அவள் வரைந்ததில் சிலவற்றை வெளிச்சக் கீற்றுகள் எனும் அவளது வலைப்பூவில் அவ்வப்போது வலையேற்றுவது வழக்கம். இதுவரை பார்க்காதவர்கள் வெளிச்சக்கீற்றுகளை சுட்டிப் பார்க்கலாம்.

இது போல் வெற்றிகள் அவளை என்றென்றும் தேடி வர அவளுடைய ஃப்ரெண்ட் கணேஷா அருள் புரியட்டும்…:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

19 comments:

 1. ரோஷ்னிக்கு எங்கள் வாழ்த்துகள், பாராட்டுகள். அவர் இது போன்று இன்னும் பலப்பல பரிசுகள் பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு... ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 3. தங்கள் மகள் ரோஷ்ணிக்கு என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள். கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

  ReplyDelete
 4. ரோஷ்ணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... மறக்காம சொல்லிடுங்க...

  ReplyDelete
 5. குழந்தை ரோஷ்ணிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

  குடும்பத்தலைவி! பதிவு எழுத்தாளர்! இப்போது மேடைப்பேச்சாளர் வகையிலும் சேர்த்துக் கொண்டோம். ஆனால், இவை மூன்றைவிட ‘அம்மா’ என்கிற பெருமைதான் மேலோங்கி நிற்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 6. ரோஷ்ணி பரிசு வாங்கும் போது போட்டோ எடுக்கவில்லையா? எடுத்து இருந்தால் அதையும் பகிர்ந்து இருக்கலாமே ஆதி.

  ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள். மேலும், மேலும் நிறைய பரிசுகள் வாங்க வேண்டும்.
  ஆதிக்கும் வாழ்த்துக்கள் மைக்கில் தன் கருத்தை சொன்னதற்கு அதற்கு ஊக்கம் தந்த உங்கள் அத்தைக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. மகள் ரோஷ்ணி பரிசு வாங்கியது குறித்து மிகவும் மகிழ்ச்சி.

  இது போல் வெற்றிகள் அவளை என்றென்றும் தேடி வர அவளுடைய ஃப்ரெண்ட் கணேஷா அருள் புரியட்டும்…:)

  இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 8. ரோஷ்னிக்கு எங்கள் வாழ்த்துகள், பாராட்டுகள். அவர் இது போன்று இன்னும் பலப்பல பரிசுகள் பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. GREAT ROSHNI!
  'வெளிச்ச்க் கீற்றுகள்' பார்த்தது நினைவுக்கு வருகிறது.ராவணனுக்கு தலை பத்தலைன்னு பதினொண்ணு வரைந்தது உள்பட அனைத்துமே நல்லாயிருந்தது!

  ReplyDelete
 10. குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

  குழந்தைகளை உற்சாகப்படுத்த இந்த மாதிரி பரிசகள் கொடுப்பது மிக அவசியம்.இது அவர்களது தன்நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

  ரோஷிணி வரைந்த ஓவியங்களை பார்க்கிறேன்.

  மிக அழகாக பேசிய உங்களுக்கும் வாழ்த்துக்கள், ஆதி.

  ReplyDelete
 11. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்:)!

  ReplyDelete
 12. இது போல மகள் பரிசு மேல் பரிசு பெற்று பேரும் புகழும் பெற வாழ்த்துக்கள்.தில்லியில் இருந்து திருச்சி வந்தாச்சா? இனி தில்லி-திருச்சி யாகிவிடுமா?
  ரோஷ்ணியின் அம்மாவாச்சே இது கூட பேசலைன்னால் எப்படி ஆதி!சூப்பர் மகிழ்ச்சிகரமான பகிர்வு.

  ReplyDelete
 13. ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. ரோஷ்ணிக்கு எங்கள் வாழ்த்துகள் !

  ReplyDelete
 15. இந்தப் பதிவைப் படித்ததும் நினைவுக்கு வந்த சில பொன்மொழிகள்:
  புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?
  தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.

  ரோஷ்ணி செல்லத்திற்கு இன்னும் இன்னும் நிறைய பரிசுகள் வாங்க இந்தப் பாட்டியின் ஆசிகள்!

  ReplyDelete
 16. ரோஷ்னிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. வாழ்த்துகள் ,வாழ்த்துகள் ,டிவி ப்ரோக்ராம் இணையத்தில் வந்தால் லிங்க் கொடுங்கள்.என் மகளிடமும் இந்த பதிவை பகிர்ந்து கொண்டேன்.100 out of 100 ஆ னு ஆச்சர்யப்பட்டாள்.

  ReplyDelete
 18. ரோஷ்ணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
  சிறுவயதில் பேசாதவர்கள் பத்துவயதுக்கப்புறம் பாருங்கள். எப்படிக் கலகலப்பாகிறாள். என்று.
  நீங்கள் மேடை ஏறிய கதை இன்னும் சூப்பர்.

  ReplyDelete
 19. ரோஷ்ணிக்கு வாழ்த்துகளை தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…