Friday, March 1, 2013

கன்னா பின்னா கதைகள்! – ரா.கி.ரங்கராஜன்
ரா.கி.ரங்கராஜன் அவர்களின் புத்தகத்தை முதல்முறையாக படிக்கும் வாய்ப்பு இப்போது தான் கிடைத்தது. ரா.கி.ரங்கராஜன் அவர்கள் கும்பகோணத்தில் பிறந்தவர். தனது 16வது வயது முதல் எழுத ஆரம்பித்துள்ளார்.

கல்கி அவர்கள் இவரைப் பற்றி எழுதியுள்ளதாவது – இதுவரை 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். ரங்கராஜன், சூர்யா, ஹம்ஸா, கிருஷ்ணகுமார், மாலதி, முள்றி, அவிட்டம் போன்ற புனைப்பெயர்களில் எழுதினாலும் ஒவ்வொரு புனைப்பெயருக்கும் எழுத்திலோ, நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி”.

முதல் பக்கத்தில் சுஜாதா அவர்கள் இவரைப் பற்றி சொல்வது

ஓசைப் படாமல் சாதனை படைத்த தமிழர்களில்
ஒருவரான எனது இனிய நண்பர்.
ரா.கி.ரங்கராஜன் ஒரு கர்ம யோகி

இனி புத்தகத்தை பற்றி பார்க்கலாமா? இது ஒரு சிறுகதை தொகுப்பு. பதினெட்டு கதைகளை கொண்ட இந்த புத்தகத்தில் உள்ள அத்தனை கதைகளுமே கடிதங்களாகவே உள்ளன. ஆம். கடிதங்கள் மூலமே கதையை நகர்த்துகிறார். ஆச்சரியமாகத் தான் உள்ளது. சுருக்கமான சில வரிகளின் மூலமே கதாபாத்திரங்கள் பேசுகின்றனர். காதலிக்கின்றனர். அத்தனையுமே வேடிக்கை கதைகள் தான். நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார். ஒவ்வொரு கடிதத்திலும் வரும் பின்குறிப்பு பிரமாதம்.

இதிலுள்ள கதைகளாவன.

மீரா.கே.பிரபு
கதாநாய்
கொஞ்சம் இரு
இந்த பிரேம மாலாவையா ஏமாற்ற முடியும்?
சிவகாமியின் சப்தம்
டெல்லி மெஷின்
கூடை ஒன்று ஆள் இரண்டு
என்னையே பார்த்துக் கொண்டிருந்தவர்
மணி என்ன ஆகிறது?
அச்சுப் பிழை!
பூனை பிடித்தவள் பாக்கியம்
வீணா, என் காதல் வீணா?
வெள்ளையனே! வெளியேறு!
தொண்டையடிப்பொடி!
அம்மா வராதே!
கேட்டாயா?
சபாஷுக்கு ஒரு சபாஷ்
காதல் பைனாகுலரில் தெரியும்

அம்மா வராதே என்ற கதையில் மகன் தந்தைக்கு எழுதிய கடிதத்தின் பின்குறிப்பில்….

நேற்று பத்மாவை டாக்டர் பார்த்து விட்டு அவள் உடம்பு மிக நன்றாய்த் தேறியிருக்கிறதென்று சொன்னார். ஆக அம்மாவோடு தினசரி சண்டை போட்டது அவளுக்குப் பெரிய எக்ஸர்ஸைஸாக இருந்தது போலிருக்கிறது. இனிமேல் எப்போது பத்மாவுக்கு வீக்காக இருந்தாலும் கடிதம் போடுகிறேன். அம்மாவை அனுப்புங்கள்.

அப்படி என்ன தான் ஆனது பத்மாவுக்கு. தெரிந்து கொள்ள புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

மணி என்ன ஆகிறது என்ற கதையில் கணவனும், மனைவியும் ஒரே வீட்டிலிருந்தே கடிதத்தின் மூலம் பேசிக் கொள்கிறார்கள். வித்தியாசமாயிருக்கிறது அல்லவா!

வசந்தாவுக்கு,

இன்று பூரா உன்னோடு நான் பேசப் போவதில்லை. எல்லாம் எழுத்து மூலம் தான். புருஷனென்றால் வரவர உனக்கு அலட்சியமாகி விட்டது.  நான் சொன்னதை இந்த காதால் வாங்கி அந்தக் காதால் விட்டாயா?

ஏன் இந்த கோபம்? என்னவென்று தெரிய வேண்டுமா?

டெல்லி மிஷின் என்ற கதையில்,

என் அன்புள்ள சிரஞ்சீவி வெங்கிட்டுவுக்கு,

அத்தை எழுதிக் கொள்வது. நீ டெல்லியிலிருந்து செளக்கியமாக ஊர் திரும்பியது பற்றி ரொம்பவும் சந்தோஷம். நீ நல்லபடியாக திரும்பி வந்தவுடன் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். இத்துடன் பிரசாதம் அனுப்பி உள்ளேன்.
                                      உன் பிரியமுள்ள,
                                        அத்தை.

பின் குறிப்பு:-

பார்த்தாயா, மறந்தே போய் விட்டேன். இட்டிலி, தோசை, மிளகாய்ப் பொடிக்கெல்லாம் அரைத்து கொடுக்கிற மெஷின் ஏதோ வாங்கி வந்திருக்கிறாயாமே? அதை எனக்கு அனுப்பி வை

வெங்கிட்டு என்ன பதில் எழுதினாரோ?

இதையெல்லாம் தெரிந்து கொள்ள புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளவர்கள்:-

அல்லயன்ஸ் கம்பெனி
ப.எண். 244, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600004.

விலை ரூ60 

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

20 comments:

 1. எழுத்துல ஜாம்பவான் ராகி ரங்கராஜன் ஒரு வித்தியாசமான எழுத்தாளர்.எப்படிக் கதை எழுதுவது என்று அவர் எழுதியதை நூலகத்தில் படித்திருக்கிறேன்.
  லைட்ஸ் ஆன் வினோத் தும் அவர்தானே?

  ReplyDelete
 2. இத்தனை நாள் எப்படி ரா.கி.ர.வை மிஸ் பண்ணினீங்க...? மறுபடியும் தேவகி, புரொபசர் மித்ரா, படகு வீடு, இது சத்தியம்... சொல்லிக்கிட்டே போகலாம் தோழி. படிக்க ஆரம்பிசசா கீழ வெக்கத் தோணாத பல படைப்புகளுக்கு சொந்தக்காரர். அல்லயன்ஸ் வெளியிட்ட இவரோட கன்னாபின்ன கதைகள், திகதிக் கதைகள் எல்லாம் வாங்கி வெச்சிருக்கேன். படிச்சு ரசிச்சிருக்கேன். ஏனோ எழுதணும்னு தோணலை. இங்க நீங்க அழகா எழுதியிருக்கீங்க. ரொம்பவே ரசிச்சேங்க.

  ReplyDelete
 3. வெங்கிட்டு என்ன பதில் எழுதினாரோ?

  கேட்டுச்சொல்லுங்களேன் ...

  ReplyDelete
 4. மிகவும் ரசித்த எழுத்துகள் அவருடையவை. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 5. அருமையான அழகான அந்தக்கால ஆச்சர்யமான சம்பவங்களைப் பற்றி அவர் எழுதியுள்ள எழுத்துக்களை அறிமுகம் செய்து விமர்சித்துள்ளது அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. ரசித்து எழுதினதை ரசித்தேன்... நூல் அறிமுகத்திற்கும் நன்றி...

  ReplyDelete
 7. ரா.கி. ரங்கராஜன் அவர்களின் புத்தக விமர்சனம் அழகாய் அருமையாக இருக்கிறது ஆதி.
  அந்தகால சினிமா பாடல் புத்தகத்தில் கொஞ்சம் கதை மீதியை வெள்ளிதிரையில் காண்க என்று போட்டு இருக்கும் அது போல் உங்கள் விமர்சனம் இருக்கிறது.
  படிக்கும் ஆவலை தூண்டும் பகுதிகளை எடுத்து காட்டியது அழகு.

  ReplyDelete
 8. ரா.கி.ர.! மொழிபெயர்ப்புக் கதைகளை அற்புதமாக தந்த மனிதர். குமுதத்தில் அவரது தொடர்களை தொடர்ந்தவன் நான்.

  ‘கன்னா பின்னா கதைகள்’ ப்பா! தலைப்பே கன்னா பின்னான்னு இருக்கு. கண்டிப்பா சூப்பரா இருக்கும்.

  டெல்லி மிஷின் கதை அறிமுகமும் - சிரஞ்சீவி வெங்கிட்டும் - சரி சரி நமக்கெதுக்கு வம்பு.

  ReplyDelete
 9. இந்தக் காலப் புத்தகங்களின் விலையையும் இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். 60 ரூபாய்க்கு ஒரு பொக்கிஷம்.

  ReplyDelete
 10. ரா.கி.ர, அற்புதமான எழுத்துக்கு சொந்தக்காரர்...

  ReplyDelete
 11. அருமையான ஒரு ஆசிரியரை அறிமுகம் செய்ததற்கு நன்றி, நான் இதுவரை இவரைபற்றி கேள்விப்பட்டதேயில்லை, இப்போது உங்கள் மூலமாகத்தான் கேட்க்கிறேன். மிக்க நன்றி நேரம் கிடைக்கும்போது புத்தகம் வாங்கி படிக்கிறேன்.

  ReplyDelete
 12. புத்தக கண்காட்சியில் இவர் புத்தகங்களை வாங்க நினைத்து வாங்காமல் விட்டுவிட்டேன்... அவரைப் பற்றி கல்கி எழுதி இருக்கும் வாசகம் படிக்கவே மலைப்பாய் உள்ளது

  ReplyDelete
 13. மிகவும் நல்லதொரு புத்தக அறிமுகம் ஆதி.
  குறிப்புகளை கொடுத்து உடனே படிக்க வேண்டும் என்று ஆசையை தூண்டி விட்டுட்டீங்க.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 14. நல்லதொரு புத்தக அறிமுகம்...

  வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 15. ராகிராவின் விசிறி நான். நிறைய கதைகள் படித்திருக்கிறேன். எப்படிக் கதை எழுதுவது? என்ற அவர் புத்தகம் நாவலை விட சுவாரஸ்யமாக இருக்கும்.பல ஆங்கில நாவல்களை மொழி பெயர்த்திருக்கிறார்.

  அவரைப் பற்றி நான் எழுதிய பதிவின் இணைப்பு:
  http://wp.me/p244Wx-jY

  மிகச் சிறந்த எழுத்தாளர்.
  அவர் எழுதிய 'நான் கிருஷ்ணதேவராயன்'என்ற நாவலைப் பலமுறை படித்திருக்கிறேன்.  ReplyDelete
 16. டி.துரைசாமியும் அவர் பெயர்தான். ஒளிவதற்கு இடமில்லை அந்த நாட்களில் மிகப் பிரபல தொடர். அவர் எழுத்துக்களைப் படிக்க குமுதம் தேடிய நாட்கள்.

  ReplyDelete
 17. சமீபத்தில் வாங்கிய ராகிர புத்தகங்களுள் ஒன்று. இன்னும் படிக்கவில்லை. விமர்சனத்துக்கு நன்றி.

  ReplyDelete
 18. டி.என்.முரளிதரன் சார் - நன்றி. நீங்கள் கேட்டுள்ள புத்தகம் பற்றி எனக்கு தெரியவில்லை...

  கணேஷ் சார் - நன்றி.

  இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.

  அமைதிச்சாரல் - நன்றிங்க.

  வை.கோபாலகிருஷ்ணன் சார் - நன்றி.

  திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க.

  கோமதிம்மா - நன்றி. முழுக்கதையையும் இங்கே சொல்லி விட்டால் படிக்கும் ஆர்வம் குறைந்து விடும் என்று நினைத்தேன்.

  ஈஸ்வரன் சார் - நன்றி.

  ஸ்ரீராம் - நன்றி. விலை குறைவு தான்.

  கே.பி.ஜனா சார் - நன்றி.

  செம்மலை ஆகாஷ் - நன்றிங்க. வாய்ப்பு கிடைக்கும் போது வாங்கிப் படியுங்கள்.

  சீனு - நன்றிங்க.

  ரமா - நன்றிங்க.

  சே.குமார் - நன்றிங்க.

  ரஞ்சனிம்மா - நன்றி. தங்களுடைய பதிவை விரைவில் படிக்கிறேன்.

  ரிஷபன் சார் - அவரின் மற்றொரு பெயரும் தங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  அப்பாதுரை சார் - நன்றி.

  ReplyDelete
 19. ஆச்சி - ஆஜரானதுக்கு நன்றி...:)

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…