Wednesday, March 13, 2013

கோவளம், ஆழிமலா, அனந்தன்! (கோவை – கேரளா சுற்றுலா – 9)

பட உதவி: கூகிள்

விழிஞம் துறைமுகத்தின் அழகைக் கண்டு திகைத்துப் போன நாங்கள் அடுத்துச் சென்றது ஆழிமலா எனும் சிவன் கோவிலுக்கு. கோவளம் செல்லும் வழியில் உள்ளது. கோவிலின் வெளியே இசைக்கருவிகளை வாசித்து கொண்டிருக்கும் நங்கைகள் புடைப்பு சிற்பங்களாக அழகாக உள்ளனர். உள்ளே சுவாமிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. கோவில் பிரகாரத்தை ஒரு முறை சுற்றி வந்தோம். ஒருபுறம் இங்கிருந்து கீழே பார்த்தால் கடற்கரை தெரிகிறது. ஜில்லென்ற காற்று நம்மைத் தள்ளுகிறது.

விநாயகர், அம்பாள் என அனைத்து தெய்வங்களும் சிறப்பான அலங்காரத்தில் காட்சி தந்தனர். மக்கள் அமைதியாக சன்னிதியின் இருபுறமும் வரிசையாக நின்று கொண்டு காத்திருந்தனர். நாங்களும் சிவனின் சன்னிதிக்கு சென்று ஐந்து நிமிடங்கள் காத்திருப்புக்கு பின் திரை அகற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிவன் விபூதி அலங்காரத்தில் அற்புதமாக காட்சி தந்தார். தரிசனம் முடித்த பின் வெளியே வந்து காரில் ஏறிப் புறப்பட்டோம்.

அடுத்து நாம் செல்லப் போவது பிரபலமான கோவளம் கடற்கரைக்கு. வழியெங்கும் மீன் நாற்றம்! நல்லவேளை மாத்திரையால் நான் தப்பித்தேன்….:) மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. காரில் FMல் மழை பற்றிய மலையாளப் பாடல்கள் காதுக்கு இதமாய் கேட்டுக் கொண்டே சென்றோம். மழ.. மழ.. மழா.. மழாஎன்று ஒரு பாடல், நான் இங்கு வந்த பின்னும் என்னை முணுமுணுக்க வைத்தது. யூ ட்யூபில் தேடினாலும் கிடைக்கவில்லை. ராக்கியிடம் கேட்டால் அது தமிழ்ப் பாட்டாஎன்று கேட்கிறார் பாவம்…:))


பட உதவி: கூகிள்

எங்கு பார்த்தாலும் வெளிநாட்டவர்களும், ஏகப்பட்ட ரிஸார்ட்டுகளும், மசாஜ் செண்டர்களும் என கோவளத்தின் யதார்த்த நிலை தென்படுகிறது….:) நாங்கள் செல்லும் போதே இருட்டத் துவங்கி விட்டது. காரை ஓரிடத்தில் பார்க் செய்து விட்டு எல்லோரும் அலைகளில் சற்று நேரம் காலை நனைத்தோம். ஒருபுறம் குடித்து விட்டு இளைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தனர்…:( சிறிது நேரத்திலேயே அங்கிருந்து கிளம்பி விட்டோம். ஷங்குமுக கடற்கரையை முதலில் பார்த்த எங்களுக்கு இந்த இடம் பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வெளிநாட்டவர்களுக்கும், சுதந்திரம்(!!!) வேண்டி வருபவர்களுக்கும் மட்டுமே இந்த இடம் ஏற்றது. கடற்கரையை ரசிக்க வேண்டுமானால் ஷங்குமுகம் தான் நல்ல இடம்…:)

வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் இன்று இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, நான் இருக்கும் காய்கறிகளை பார்த்து விட்டு ஆலு கோபி சப்ஜியும், சப்பாத்தியும் ராக்கியின் உதவியுடன் செய்து முடித்தேன். சோர்வும், தூக்கமும் ஒருசேர இருந்த குழந்தைகளுக்கு முதலில் கொடுத்து விட்டு பின்பு நாங்களும் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றோம்.

காலை வழக்கம் போல் குளித்து தயாரானோம். இன்று நாம் பார்க்கப் போவது அனந்த பத்மநாபனை…. ஆமாங்க பத்மநாப சுவாமி அம்பலத்துக்கு (கோவிலுக்கு) தான் போகப் போகிறோம். இங்கு புடவையும் வேஷ்டியும் தான் அனுமதிக்கப்படும் என்பதால், அதற்கேற்றாற் போல் நாங்கள் உடுத்தித் தயாரானோம்.

காலை உணவாக தோசையும், சம்மந்தியும் ராக்கி செய்ய, நான் நம்ம ஊரு வெங்காயம், தக்காளி சட்னி செய்தேன். எப்போதுமே வெங்காயம், தக்காளி, வரமிளகாய் வதக்கும் போது அதனுடன் சிறிது கறிவேப்பிலையும், இஞ்சியும் சேர்த்து வதக்கி அரைப்பேன். சுவையாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.(நெஜமா நம்புங்கப்பா!) நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன். ராக்கியிடம் வரமிளகாயே இல்லாததால் மிளகாய்தூள் சேர்த்து வதக்கி அரைத்தேன்..:)

மின்னுவுக்கு சற்றே வீசிங் பிரச்சனை இருந்ததால் அவளை மருத்துவரிடம் காண்பித்து விட்டு வருவதற்காக பிரமோத்தும், ராக்கியும் எங்களை கோவில் வாசலில் இறக்கி விட்டு விட்டுச் சென்றார்கள். சுவாமியை பார்த்து விட்டு இதே இடத்தில் காத்திருக்கும்படியும் அரை மணி நேரத்தில் வருவதாகவும் சொன்னார்கள். கேமிரா, பைகள் என்று எதுவுமே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லாததால் காரிலேயே விட்டு விட்டு தான் உள்ளே சென்றோம். ஆண்கள் சட்டை அணியவும் கூடாது என்பதால் சட்டையையும் காரிலேயே வைத்து விட்டார். கையில் கொஞ்சம் பணமும், ATM கார்டு ஒன்றும் தான் வைத்திருந்தோம். இது தான் நல்லது. ஏனென்றால் கையில் எடுத்துச் செல்லும் பொருட்களை வைப்பதற்கு CLOAK ROOM இருக்கிறது. அதற்கு கும்பலோ ஏராளம்…:)


பட உதவி: கூகிள்

நாங்கள் சென்றது வடக்கு வாயில். இங்கு வேஷ்டியில்லாமல் பேண்ட் அணிந்து கொண்டு வரும் ஆண்களுக்கென வாடகைக்கு வேஷ்டி தரப்படுகிறது. அது போல் சுடிதார் அணிந்து வரும் பெண்களுக்கு அதன் மேலேயே கட்டிக் கொள்ள ஒரு முண்டும் (வேஷ்டி) வாடகைக்கு தரப்படுகிறது. கல்லூரிப் பெண்கள் ஒருபுறம் இதுபோல் சுடிதாரின் மேல் முண்டு கட்டிக் கொண்டு திரிய, வடநாட்டிலிருந்து வரும் மக்களில் வேஷ்டியே கட்டி பழக்கமில்லாத ஆண்கள் ஒருபுறம் திரிய , இந்த கூத்தையெல்லாம் பார்த்து ரசிக்கும் மக்கள் ஒருபுறம் என ஒருதினுசாகத் தான் இருந்தது கோவில்….:))

முதலில் பிள்ளையாரை தரிசித்து விட்டு, பத்மநாபனை தரிசிக்க செல்கிற வரிசையில் நாங்களும் இணைந்து கொண்டோம். ஒரு அம்மா வரிசையில் ஹரே ராம..ஹரே ராம..ராம ராம ஹரே ஹரே….ஹரே கிருஷ்ணஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேஎன்று ஓங்கிய குரலில் சொல்ல நாமளும் சொல்லிக் கொண்டே தரிசிக்கச் செல்கிறோம். கட்டண சேவை இங்கு இல்லை போலும்…. அர்ச்சனைக் கூடை எடுத்து செல்பவர்களை மட்டும் தனி வரிசையாக இங்கு பிரித்து விடுகிறார்கள். சில இடங்களை கடந்து பெருமாளின் திவ்ய தரிசனத்துக்காக காத்திருந்தோம். கிட்டே வர வர ஒரு சிலிர்ப்பு! எப்போது பார்ப்போம் என

போட்டே! போட்டே! என வரிசையை நோக்கி ஒரு அதிகாரக் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்ன இது?

பத்மநாபனின் அழகைத் தெரிந்து கொள்ளக் காத்திருங்கள்…..

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

15 comments:

 1. நல்ல பிரயாணம். பத்மநாபசாமி கோவிலில் நம் பொருள் ஏதாவது கீழே விழுந்தால் அதை எடுக்கக்கூடாதாம். அது சாமிக்குத்தான் சொந்தமாம். நாங்கள் போயிருந்தபோது அப்படிச் சொன்னார்கள்.

  ReplyDelete
 2. அருமையான பயணப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. சந்தோசமான பயணம்...

  காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 4. பயணப்பதிவு அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. மிகவும் சுவாரசியமான பயணம்.

  //போட்டே! போட்டே! என வரிசையை நோக்கி ஒரு அதிகாரக் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்ன இது?//

  சஸ்பன்ஸில் விட்டுடீங்களே ஆதி. காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 6. பயண அனுபவங்கள் மிக நன்றாக இருக்கிறது.
  பத்மநாபனின் அழகைத் தெரிந்து கொள்ளக் காத்திருங்கள்…..//

  காத்து இருக்கிறோம். நான் பார்த்து பலவருடங்கள் ஆகிவிட்டது.

  ReplyDelete
 7. பத்மனாபர் நல்ல தரிசனம் கொடுத்தாரா?.. கேரளாவுலேர்ந்து வெளிய வர மனசே இருந்துருக்காதே :-)

  ReplyDelete
 8. //பத்மநாபசாமி கோவிலில் நம் பொருள் ஏதாவது கீழே விழுந்தால் அதை எடுக்கக்கூடாதாம். அது சாமிக்குத்தான் சொந்தமாம்.//
  உண்டியலில் குழந்தை விழுந்ததை வைத்து ஒரு படம் (ராமநாராயணன்?) வந்தது நினைவுக்கு வருகிறது.

  தப்பித் தவறி வழுக்கி விழுந்தால் கடவுளுக்குச் சொந்தம் என்று ‘மேலே’ அனுப்பிவிடுவார்களா?
  ;-)

  ReplyDelete
 9. அருமையான பகிர்வு...
  பத்மநாபனின் அழகை நானும் ரசித்திருக்கிறேன்... நண்பர்களுடன் ஒரு சுற்றுப் பயணத்தில்...

  பத்மநாபனின் அழகை உங்கள் பதிவிலும் படிக்க் ஆர்வமாய் இருக்கிறேன்...

  ReplyDelete
 10. கடற்கரை அனுபவம் நல்லாதான். இருக்கு மா
  நல்லவேளை ந்ம் மஹாபலிபுரத்தில் இந்தக் கலாசாரம் வரவில்லை.

  போட்டே போட்டேன்னால் .ஜெரகண்டினு நினைக்கிறேன்.:)
  பத்மநாபஸவாமியை எப்பவோ பார்த்தது.
  உங்க மூலமா மூன்றாம் தரம் பார்க்கணும். துளசி பதிவு வழியா அழைத்துக் கொண்டு போயாச்சு.நன்றி மா ஆதி.

  ReplyDelete
 11. நானும் வாடகை வேட்டி கட்டிக் கொண்டு சென்றிருக்கிறேன்,
  அருமையான பகிர்வு!

  ReplyDelete
 12. பத்மநாபஸ்வாமியை பார்க்க வேண்டும் என்றஆவலை தருகின்றது பகிர்வு.

  ReplyDelete
 13. கும்பல் அதிகம் இல்லாத போதும் 'போட்டே, போட்டே' என்று விரட்டுவது வருத்தமாக இருக்கிறது.
  பெருமாளுக்கு அத்தனை சொத்து இருந்தும் கர்ப்ப கிருஹத்தில் சரியான விளக்கு வெளிச்சம் இல்லாதது பெரிய குறை.
  உங்களுக்கு எப்படி தரிசனம் இருந்தது endru அரிய ஆவல்!

  ReplyDelete
 14. ok.sutri parthhaassu.

  //நம் பொருள் ஏதாவது கீழே விழுந்தால் அதை எடுக்கக்கூடாதாம். அது சாமிக்குத்தான் சொந்தமாம்.//

  பர்ஸ் விழுந்தால் என்னாவதுன்னு நினைச்சேன் .

  ஒருத்தர் வழுக்கி விழுந்தால் என்னாவதுன்னு யோசிச்சிட்டார்.

  அட்வான்சா இருக்காங்கப்பா

  ReplyDelete
 15. கேரள பயணத்தில் தொடர்ந்து என்னுடன் பயணிக்கும் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…