Monday, March 4, 2013

விழிஞம் – அருள்ஜோதி - வேளி (கோவை கேரளா சுற்றுலா – 8)என்ன நட்புகளே! சென்ற பகுதியில் சென்ற ஷங்குமுக கடற்கரையின் காற்று சில்லென்று இருந்ததா! மறுநாளான இன்று காலையிலேயே விரைவில் தயாரானோம். எங்கு செல்லப் போகிறோம் என்று தெரியவில்லை, சஸ்பென்ஸாக வைத்திருந்தார் பிரமோத்….:) காலை உணவுக்கு அப்பம் செய்யப்போவதாக ராக்கி நேற்று சொல்லிக் கொண்டு, அதற்காக மிக்சியில் மாவு அரைத்தார். சரி! குழிப்பணியாரம் தான் செய்யப் போகிறார் என்று நினைத்துக் கொண்டேன். நாம் குழிப்பணியாரத்திலும் விதவிதமாக செய்வோமே! அது போல் இவர்கள் என்ன முறையில் செய்யப் போகிறார்கள் என பார்க்கலாம் என்று இருந்தேன்…..:)

டைனிங் டேபிளில் அமர்ந்தால் தட்டில் இருந்தது ஆப்பம்….:) ஓ! இவர்கள் ஆப்பத்தை அப்பம் என்பார்களா! அப்போ அப்பத்தை? மெத்தென்று இருந்தது ஆப்பம். ஆப்பத்துக்கு தொட்டுக் கொள்ள வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி உப்பு காரம் சேர்த்து வதக்கி இருந்தார்கள். பிரமோத்துக்கு பூண்டு சட்னி பிடிக்கும் என்று ராக்கி ஸ்பெஷலாக அதை செய்திருந்தார்…..:) சாயா குடித்து விட்டு கிளம்பினோம். நான் டேஷ்க்கு மரியாதை குடுத்து மாத்திரை போட்டுக் கொண்டு விட்டேன். எதற்கு வம்பு என்று….:)

இன்று முதல் ஒரு விஷயத்தை கடைப்பிடிக்க முடிவு செய்து விட்டேன்…. அது என்னவென்றால், காரில் ஏறி அமர்ந்ததும் கண்ணை மூடி தூங்குவது தான்…..:) எங்கு இறங்கப் போகிறோமோ, அங்கு இறங்கி வேடிக்கை பார்த்துக் கொள்ளலாம்….:) என்னுடைய கேரள சுற்றுலாவின் இரண்டாம் பகுதியில் அனுஜா என்ற ஒரு தோழியும் கூட இந்த முறையை தான் சொல்லியிருந்தார்…. போகும் வழியை பார்த்துக் கொண்டு வந்தாலும் தலை சுற்றுமாம்….:) சரி புறப்படலாமா.

வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் தான் பிரமோத்தின் பெற்றோர் இருக்கிறார்கள். இவர்கள் வீடு ஒரு பள்ளத்தில் இறங்கி மேட்டில் ஏற வேண்டியதாக இருந்தது. அம்மையும், அச்சனும் இனிமையாக வரவேற்றார்கள். மோளுக்கு மலையாளம் அறியோஎன்றதும். மனசிலாகும்என்றேன். அவர்கள் முகத்தில் அவ்வளவு ஒரு சந்தோஷம். கிண்ணங்களில் கோதுமைப் பாயசம் தந்தார்கள். எனக்கு அது மிகவும் பிடிக்கும். நேற்று தான் இதைப் பற்றி ராக்கியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ராக்கி சொல்லி அம்மா நமக்காக சிரமப்பட்டு செய்தார்களோ என்று விசாரித்தேன். இல்லையாம். அவர்கள் வீட்டிலும் ஒரு ரோஷ்ணி உண்டு. பிரமோத்தின் அக்கா மகள். அவளுக்கு மசக்கை ஆதலால் அவளுக்கு பிடிக்கும் என்று செய்தார்களாம்….:) எல்லோருக்கும் ஓரியோக்களும், இனிப்புகளும் தந்து உபசரித்தார்கள். நான் பாயசத்தை மட்டும் தான் பருகினேன். நேற்று சக்கை (பலாப்பழம்) கொடுத்தோமே அதை சாப்பிட்டீர்களா என்று விசாரித்தார்கள். அவர்கள் தோட்டத்தில் விளைந்ததல்லவா! சிறிது நேரம் அங்கு பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டோம்.

அங்கிருந்து அரை மணி பயணத்தில் ஒரு சுற்றுலாத் தலத்துக்கு சென்று சேர்ந்தோம். நேற்று பார்த்தோமே ஷங்குமுக கடற்கரை. அதன் தொடர்ச்சி தான் இங்கே. வேளி என்று இந்த இடம் அழைக்கப்படுகிறது. இங்கிருந்த BACK WATERS ல் படகு சவாரி, (எல்லா இடத்திலயும் ஆகாயத் தாமரையின் ஆக்ரமிப்பு) மறுபுறம் குதிரை சவாரி, குழந்தைகளுக்கான சறுக்கு மரம், ஊஞ்சல், பார்வைக்கு குளிர்ச்சியாக பூக்கள், வரிசையாக கடைகள் என அந்த இடமே களைகட்டியிருந்தது. வெயிலாக இருந்ததால் எல்லோரும் இளநீர் வாங்கிக் குடித்தோம். தென்னை மரங்களாக தென்படும் இந்த ஊரிலும் இளநீர் 25 ரூபாய்க்கு விற்கிறது. சுற்றுலாத் தலம் என்பதாலோ….:)
குழந்தைகள் செம ஜாலியாக விளையாடினார்கள். நாங்களும் இரண்டு தென்னை மரங்களுக்கிடையில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஆனந்தமாக ஆடினோம். எங்கே ஊஞ்சலை பார்த்தாலும் ஆடி பார்க்கும் ஆசை வருகிறதே….. இதுவும் அலுக்காதவைகளில் சேர்ந்தது தான்….:) படகு சவாரி செய்யலாம் என்றால், உணவு இடைவேளை நேரமாம். இரண்டு மணிநேரத்துக்கு பிறகு தானாம். சரியென்று கிளம்பி விட்டோம்.

நேரே ஒரு உணவகத்துக்கு வண்டியை செலுத்தினார் பிரமோத். பெயரை பார்த்ததும் முகத்தில் மலர்ச்சி. கோவையில் உள்ள அருள்ஜோதி உணவகத்தின் கிளை இங்கு உள்ளதே என்று தான். காரை பார்க் செய்து விட்டு உள்ளே சென்றோம். நேர்த்தியாக இருந்த உணவகத்தில் வெளிநாட்டினரின் வரவு அதிகமாகவே இருந்தது. மீல்ஸ் ஆர்டர் செய்தோம். சிகப்பரிசியா? வெள்ளை சாதமா? என்று முடிப்பதற்குள்ளேயே வெள்ளை சாதத்துக்கு என் வோட்டு விழுந்ததை பார்த்து பிரமோத் புன்முறுவல் செய்தார்….:) அன்லிமிட்டட் சாதத்துடன், இரண்டு சப்பாத்திகள், கிண்ணங்களில் குருமா, வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயசம் என அனைத்துமே நன்றாக இருந்தது.

அடுத்து என்ன! வீட்டுக்கு சென்று சற்றே இளைப்பாற வேண்டியது தான். மாலையில் முக்கியமான சில இடங்களுக்கு செல்ல வேண்டுமே! மற்றவர்கள் அரட்டை அடிக்க மதிய தூக்கம் என்பது பழக்கமே இல்லாத நான் மாத்திரையின் காரணத்தால் ஒரு மணி நேரம் நன்கு உறங்கிப் போனேன். பின்பு எழுந்து சாயா குடித்து விட்டு தயாராகி, முதலில் ஒரு இடத்துக்கு சென்றோம். அது விழிஞம் சர்வதேச துறைமுகம். சென்று கொண்டிருக்கையிலேயே மழை ஆரம்பித்து விட்டது. சட்டு சட்னு மழை வருகிறது. இது போல் நம் ஊர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதில் தோன்றியதென்னவோ உண்மை தான்

ஒருபுறம் மீன் பிடித்தல் மறுபுறம் கடல் என பிரிக்க நடுவில் போட்டிருக்கும் பாறைகள் AXIS களை நினைவுபடுத்தும். வெகுவாகவே கவர்கிறது. எப்படியும் எதோ ஒரு தமிழ் படத்தில் இந்த இடம் இடம்பெறாமல் இருந்திருக்காது. கலங்கரை விளக்கம், படகுகள், என துறைமுகத்தின் அழகே தனி தான். ஒருபுறம் சூரியன் மறைய ஆரம்பிக்க, மழை ஒருபுறம், சில்லென்ற காற்று என மனதுக்கு இதமாக இருந்தது. நானும், என்னவரும் மட்டும் ஐந்து நிமிடங்கள் காரை விட்டு இறங்கி குடைக்குள் நின்று கொண்டு துறைமுகத்தின் அழகை ரசித்தோம்…..:)

அடுத்து நாம் செல்லப் போவது பிரபலமான கடற்கரை ஒன்றுக்கும்,  மலை மேலுள்ள சிவன் கோவிலுக்கும்……அதுவரை காத்திருங்கள்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

பின் குறிப்பு: அழகிய படங்கள் எடுத்த என்னவருக்கு நன்றி! 

18 comments:

 1. இனிய பயணம்... படங்கள் அருமை...

  தூங்காமல் பயணம் செய்ய (தோழி அனுஜா அவர்களுக்கும்) வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. Hearing the places for the first time..beautiful places and ofcourse enjoyed the food on the side! :)

  ReplyDelete
 3. அழகான பயணப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. பயணங்கள் இனிமையாகத் தொடரட்டும். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. இனிமையான பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ட்ந்ஹு இருப்பது படிக்கவே உற்சாகமாக உள்ளது.

  ReplyDelete
 6. கேரளாவில் ரொம்பப்பிடிச்சதே அந்தத் திடீர் மழைதான். ஜில்லுன்னு ஆகிரும் :-))

  ReplyDelete
 7. இரண்டு தென்னை மரங்களுக்கிடையில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஆனந்தமாக ஆடினோம். எங்கே ஊஞ்சலை பார்த்தாலும் ஆடி பார்க்கும் ஆசை வருகிறதே….. இதுவும் அலுக்காதவைகளில் சேர்ந்தது தான்….:)//


  உண்மைதான் ஆதி, எனக்கும் எப்போது ஊஞ்சலை பார்த்தாலும் ஆடி பார்க்கும் ஆசை வரும், அலுக்காதவைகளில் இதுவும் தான்.
  பயண விவரங்களும் படங்களும் அழகு.

  ReplyDelete
 8. ஊஞ்சலில் ஆடுவதற்கு வயதே கிடையாது ஆதி.அது எந்த வயதிலும் அலுக்காது.

  மிகவும் சுகமான சுவாரசியமான பயணம்.தொடருங்க..

  ReplyDelete
 9. பயண அனுபவம் படிக்க மிகவும் இனிமை ஆதி! அதுவும் ஊஞ்சலாடும் அனுபவம் எப்போதாவது தான் கிடைக்கும்!

  எனது ஈமெயில் அட்ரஸ்: smano26@gmail.com
  உங்கள் தொலைபேசி எண்னை அதில் குறிப்பிடுங்கள் ஆதி! நான் விரைவில் அழைக்கிறேன்.

  ReplyDelete
 10. வெங்கட்டின் அழகான படங்களுடன் சுவாரஸ்யமான பகிர்வு!

  ReplyDelete
 11. படங்களுடன் பதிவு சுவாரஸ்யம். நாங்களும் கூடவே வந்து கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
 12. ஆஹா ஊஞ்சலா. பார்த்தே நாளாச்சுதே.:)
  உங்கள் பயண அனுபவங்கள் உணர்வு பூர்வமாக இருக்கின்றன .அதனாலயே சுவையா இருக்கு.
  நடுவில் கொஞ்சம் படிக்கம விட்டுவிட்டேன். அடிக்கிறேன்.

  ReplyDelete
 13. நல்லா சுவாரஸ்யமா எழுதிருக்கீங்க.

  //நடுவில் போட்டிருக்கும் பாறைகள் AXIS களை நினைவுபடுத்தும்//

  அதென்ன Axis?? X,Y Axis??

  ReplyDelete
 14. கேரள சுற்றுலாவில் என்னுடன் பயணிக்கும் அனைவருக்கும் நன்றிகள். தங்களின் கருத்துகள் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்....

  மனோம்மா - தங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி.

  ஹுசைனம்மா - AXIS பற்றி யாருமே கேட்கவில்லை என்று நினைத்தேன்...:) அது X AXIS , Y AXIS போல் எனக்கு தோன்றியது...:) அதனால் தான் அதை நினைவுபடுத்துவது போல் உள்ளதாக எழுதியிருந்தேன்.

  ReplyDelete
 15. அவசியம் இந்த இடத்தக்கு போகணும் என எண்ண வைத்து விட்டது பதிவு. படங்கள் மிக அழகு. வெங்கட் நல்ல படங்களை உங்களுக்கு கொடுத்து விடுகிறார் !

  ReplyDelete
 16. மோகன்குமார் சார் - நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய பக்கத்தில் தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

  ReplyDelete
 17. இனிமையான பயணம் axix bank தான் நினைவிற்கு வந்தது.

  ReplyDelete
 18. ஆச்சி - உங்களுக்கு வங்கி நினைவு வந்ததா!

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…