Wednesday, March 20, 2013

பத்மநாபனும்! நுங்கு சர்பத்தும்! (கோவை கேரளா சுற்றுலா – 10)பட உதவி: கூகிள்

என்ன நட்புகளே! பத்மநாபனின் அழகைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறீர்களா? வாங்க! அனந்தனைக் காண வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது போட்டே! போட்டே! என்ற அதிகாரக் குரல் கேட்டது என்று சொன்னேன் அல்லவா? அது என்னவென்றால் திருப்பதியின் “ஜருகண்டி! ஜருகண்டி! தான் இங்கு போட்டே! போட்டே….:) (சென்ற பதிவில் நம்ப வல்லிம்மா சரியா சொல்லியிருந்தாங்க) சரி! திட்டு வாங்கிக் கொண்டாவது சுவாமியை ஒரு நிமிடமாவது பார்த்து விட வேண்டும். சன்னிதியின் முன்புள்ள மண்டபத்தைத் தாண்டி தான் நாம் நிற்கிறோம். பளிச்சென்று உற்சவர் தான் தெரிகிறார். மூலவரான அனந்த பத்மநாபன் இருக்கும் இடமே தெரியவில்லைபோட்டே! போட்டே! என்று கையை பிடித்து இழுத்து வெளியே விட்டு விட்டார்கள்.

நான் அன்று சுவாமியை பார்க்கவே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை…:( கருவறையின் முன்பு நிற்க விட்டாலாவது விரட்டியடிக்கும் ஓரிரு நிமிடங்களில் சுவாமியை பார்க்க முடியும். வரிசையை அனுமதிப்பதோ, கருவறைக்கும் அடுத்துள்ள மண்டபத்தைத் தாண்டி, அங்கிருந்து கொண்டு கிடைக்கும் ஒரு சில நிமிடங்களில், இருட்டடிப்பில் ஒன்றுமே தெரியவில்லை என்பது தான் நிஜம். என்னவரிடம் புலம்பியே விட்டேன். இப்படி பார்க்கவே முடியவில்லையே என…. அவரும் எனக்காக மீண்டும் வேண்டுமானால் வரிசையில் நின்று பார்க்கலாமா? என்றார். எத்தனை தடவை நின்றாலும் இருட்டடிப்பில் ஒன்றுமே தெரியப் போவதில்லை என்று மறுத்து விட்டேன்.

அடுத்த வரிசையில் அர்ச்சனை தட்டு வைத்திருந்தவர்களாவது பார்த்தார்களா? என்று பார்த்தால் அவர்களுக்கும் இதே நிலை தான். தட்டில் வைத்திருந்த தேங்காய் பழத்திலிருந்து பாதியை எடுத்து ஒரு கூடையில் போட்டுக் கொண்டு தட்டை அவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள்…:( அந்த பாக்கு மட்டை தட்டையும் வெளியே வரும் போது ஒருவர் வாங்கிக் கொண்டு அதில் இருக்கும் பொருட்களை ஒரு பேப்பரில் சுற்றிக் கொடுத்து விடுகிறார். மற்ற சன்னிதிகள் மூடியிருக்க பிரகாரத்தை ஒரு முறை சுற்றி வந்தோம். ஒரு இடத்தில் கோவிலின் கடைகள் இருக்க, அங்கு உள்ளங்கையளவு உள்ள அனந்த பத்மநாபனின் லாமினேட் செய்த படம் ஒன்றை ரூ 50 கொடுத்து வாங்கிக் கொண்டேன். அதில் பார்த்து தான் அனந்த சயனத்தில் இங்கு இப்படி இருக்கிறாரா! என்று தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது…:(

ஒரு இடத்தில் ஜருகண்டி! ஜருகண்டி! என்று கையை பிடித்து இழுத்து வெளியே வீசுகிறார்கள், மற்றொரு இடத்தில் நகர்ந்துக்கோங்கோ, நகர்ந்துக்கோங்கோ என்று விரட்டியடிக்கிறார்கள். இங்கோ போட்டே! போட்டே! என்று விரட்டல். ஏனிப்படி? என்னுடைய சென்ற பதிவிற்கு வந்திருந்த ரஞ்சனிம்மாவின் பின்னூட்டத்தில் அவரும் இதைத் தான் சொல்லியிருந்தார். அது என்னவென்றால் கோயிலுக்கு அவ்வளவு சொத்துகள் இருந்தும் நல்ல வெளிச்சம் ஏற்படுத்தி தர மறுக்கிறது என்றுஅது முற்றிலும் உண்மை தான். உலகின் பல மூலைகளிலிருந்தும் சுவாமியை தரிசனம் செய்ய வரும்போது இப்படி பார்க்க முடியவில்லையென்றால் நிச்சயம் சங்கடமாகத் தானிருக்கும்.

இங்கு ஸ்ரீரங்கத்தில் பெருமாளை பார்ப்பது அபூர்வமாக இருந்தாலும், ஒரு நிமிடம் பார்த்தாலும் கருவறையின் வெகு அருகே சென்று தீப்பந்தங்களும், விளக்கொளியும் ஒருசேர பெருமாளை நன்கு தரிசனம் செய்ய முடிகிறது என்பது ஆறுதலான விஷயம்.

கோயிலை விட்டு வெளியில் வந்தோம். பணம் எடுக்கலாம் என்று ATM எங்கிருக்கிறது என்று அங்கிருந்த காவலாளியிடம் விசாரித்தால் அவருக்கும் தெரியவில்லை…:( பிரமோத்தும் ராக்கியும் இன்னும் வரவில்லையென்று வெளிப் பிரகாரத்தையும் ஒருமுறை சுற்றி வந்தோம். தெப்பக்குளம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படியே வலம் வந்து ஒரு இடத்தில் ATMல் பணம் எடுத்துக் கொண்டு வந்தோம். சட்டை இல்லாமல் ஊரையே ஒரு ரவுண்ட் வந்தாலும் இங்கு கேட்பாரில்லை….:)) மருத்துவரிடம் காண்பித்து விட்டு அவர்கள் மூவரும் வரவே அங்கிருந்து புறப்பட்டோம்.

வீட்டுக்கு செல்லும் வழியில் எங்கள் பயணச்சீட்டு விஷயமாக என்னவரும் பிரமோத்தும் ஒரு அலுவலகத்துக்கு செல்ல, நாங்கள் அங்கிருந்த கேரள அரசின் காதி கைவினைப் பொருட்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து விண்டோ ஷாப்பிங்செய்து கொண்டு வெளியே வந்தோம். அங்கு அரசால் நடத்தப்பட்டு வரும் சில உணவுக் கடைகள் இருந்தன. அதில் நேந்திரங்காய் உப்பேரியும், சக்க உப்பேரியும் வாங்கிக் கொண்டு அங்கிருந்த ஒரு சர்பத் கடைக்கு அழைத்துச் சென்றார் ராக்கி.

பெரிய கிளாசில் நுங்கு சர்பத் வாங்கித் தந்தார். ரோஷ்ணி வேண்டாமென்று சொல்ல நான் பருக ஆரம்பித்தேன். நுங்கு, பைனாப்பிள் துண்டுகள், தட்டிப் போட்ட ஏலக்காய் என சில்லென்று வித்தியாசமான சுவையாக இருந்தது. ராக்கி என்னிடமிருந்து இரண்டு சிப் சர்பத்தை பகிர்ந்து கொண்டார்…:) அடுத்து வந்த என்னவரும், பிரமோத்தும் இரண்டு கிளாஸ் ஆர்டர் செய்தார்கள். அவர்களுக்கு தந்தது வேறு மாதிரி இருந்தது. சுவைத்து பார்த்தால் அது நுங்கும், இளநீரும் கலந்த சர்பத். அது வேறுவிதமான  சுவையாக இருந்தது. ஒரு கிளாஸ் சர்பத்தின் விலை ரூ 30. ஆரோக்கியமான இதை இங்கு வரும் போது அவசியம் சுவைத்துப் பாருங்கள்.

அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்று சேர்ந்தோம். சிறிது நேர ஆசுவாசத்துக்கு பின் மதிய உணவை எடுத்துக் கொண்டோம். வீட்டு தோட்டத்திலிருந்து நறுக்கிய வாழையிலையில் சிகப்பரிசி சாதம், கூட்டுக்கறி, தோரன், கேரள சாம்பார் சகிதமாக சாப்பிட்டு முடித்தோம். மூலிகைப் பொடிகள் கலந்த சுடுவெள்ளத்தை குடித்த பின் அடுத்த பயணத்துக்கு தயாரானோம். இது சற்று தொலைவான பயணம். ஒரு மலை வாசஸ்தலத்துக்கு செல்லப் போகிறோம். பள்ளியிலிருந்து கேஷுவை பிக்கப் செய்து கொண்டு அப்படியே செல்ல வேண்டும். அதனால் அவனுக்கான மதிய உணவு, தண்ணீர், குட்டீஸ்க்கான ஸ்நாக்ஸ், கேஷுவுக்கும், மின்னுவுக்கும் மருந்துகள் என்று எல்லாம் எடுத்துக் கொண்டோம்.

என்ன! எல்லோரும் ரெடியாகுங்க! மலைவாசஸ்தலத்துக்கு போகலாம். என்ன மாதிரி ஆட்கள் இருந்தால் மறக்காம டேஷுக்கு மாத்திரை போட்டுக்கோங்க….:)) அது இப்ப ரொம்பவே முக்கியம்…:))

அது வரை பைபை

மீண்டும் சந்திப்போம்,
ஆதிவெங்கட்.

17 comments:

 1. //உலகின் பல மூலைகளிலிருந்தும் சுவாமியை தரிசனம் செய்ய வரும்போது இப்படி பார்க்க முடியவில்லையென்றால் நிச்சயம் சங்கடமாகத் தானிருக்கும்.//

  கரெக்ட்...

  அடுத்து மலைவாச ஸ்தலமா.. கலக்குங்க...

  ReplyDelete
 2. சுவாமி தரிசனம் செய்வதில் நான் பலமுறை இந்தச் சங்கடத்தை அனுபவித்து எரிச்சல் அடைந்ததுண்டு. நீங்கள் எழுதியிருக்கறது சரி. நுங்கும் இளநீரும் கலந்து சர்பத்தா? கோடை வெப்பம் கொளுத்த ஆரம்பிச்சிருக்கற இந்த நேரத்துல நாக்குலருந்து தண்ணி வடிய வெச்சுட்டீங்களே...!

  ReplyDelete
 3. பயணப்பகிர்வுகள் அருமை..

  ReplyDelete
 4. அடிக்கிற வெயிலுக்கு... நுங்கும், இளநீரும் கலந்த சர்பத் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்...

  இனிய பயணத்தை தொடர்ந்து வருகிறோம்...

  ReplyDelete

 5. சாமியைப் பார்க்க விடாமல் ஆசாமிகள் பண்ணும் அட்டகாசமிருக்கே...அப்பப்பா..... போதுமடா சாமி:(

  http://thulasidhalam.blogspot.co.nz/2009/05/2009-24.html
  நம்ம சோகக்கதை இங்கே!

  ஆனால் மறுநாள் திருவட்டாறில் ஏகாந்தஸேவை இதே பதுமனைக் கண்குளிரப் பார்த்தோம்.

  நமக்கு நோ நுங்கு சர்பத். வெளியே போனால் வாயைக் கட்டிக்கிட்டு கண்ணைத் திறந்து வச்சுக்குவேன்.

  ReplyDelete
 6. பயணப்பகிர்வுகள் அருமை.

  //இங்கு ஸ்ரீரங்கத்தில் பெருமாளை பார்ப்பது அபூர்வமாக இருந்தாலும், ஒரு நிமிடம் பார்த்தாலும் கருவறையின் வெகு அருகே சென்று தீப்பந்தங்களும், விளக்கொளியும் ஒருசேர பெருமாளை நன்கு தரிசனம் செய்ய முடிகிறது என்பது ஆறுதலான விஷயம்.//

  உண்மை. ;)))))

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. எத்தனை தடவை நின்றாலும் இருட்டடிப்பில் ஒன்றுமே தெரியப் போவதில்லை என்று மறுத்து விட்டேன்//

  உண்மை, உண்மை. மனக்கண்ணில் தான் தரிசிக்கணும்.

  ReplyDelete
 8. //நகர்ந்துக்கோங்கோ
  இது எங்கே ?

  நானும் பார்த்துவிட்டேன். ஒருத்தர் கூட இது போன்ற கோவில்களில் தரிசனம் அற்புதம் என்று சொல்வதில்லை. ஆனால் தொடர்ந்து போவதையும் நிறுத்துவதில்லை.

  நுங்கு ஜூஸ் சாப்பிட ஆசை வந்துவிட்டது. உப்பேரி?

  ReplyDelete
 9. //இருட்டடிப்பில் ஒன்றுமே தெரியவில்லை என்பது தான் நிஜம்//

  அனந்தசயனத்தில் இருக்கும் பத்மநாபனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று குறைந்த வெளிச்சம் போட்டிருப்பார்களோ?

  பெரிய கோவில்களில் பெரும் கூட்டத்தில் இறைவன் தரிசனத்திற்கும், சிறு கோவில்களில் தனிமையில் அதே இறைவன் தரிசனத்திற்கும் வித்தியாசம் வேண்டாமா!

  (பத்மநாபன் தரிசனத்துடன் முக்கண்ணன் (அதான் நுங்கு) இனிமையும் கிடைத்ததல்லவா!)

  ReplyDelete
 10. சாமியைப் பார்க்க பணம் வாங்கிக் கொண்டு கோவில்களில் படுத்தும்பாடு இருக்கே... அப்பப்பா...

  எங்கள் பிள்ளையார்பட்டியில்தான் சாமி தரிசனத்துக்கு என்று பணம் வசூலிப்பதில்லை... நின்று நிதானமாக சாமியையும் தரிசிக்கலாம்...


  ReplyDelete
 11. இந்தக் கோவிலில் இன்னொரு வருத்தமான விஷயம், பிரதட்சணம் வரும்போது ஒரு நரசிம்மஸ்வாமி சந்நிதி இருக்கிறது. இந்த சந்நிதி அருகில்தான் சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்ட நிலவறைகள் இருப்பதால் இந்த சந்நிதியை இப்போது மூடி விட்டார்கள்!
  துளசி சொல்வதுபோல திருவாட்டாறில் அங்கும் பெரிய வெளிச்சம் இருக்காது - ஆனாலும் பெருமாள் நன்றாக தரிசனம் கொடுப்பார்!

  ஸ்ரீரங்கத்தில் மதியம் இரண்டு மணிக்குப் போனால் பெரிய பெருமாளை - கூட்டம், க்யு இருக்காது - திரும்பத்திரும்ப வந்து சேவிக்கலாம்!

  ReplyDelete

 12. நான் ஒருபதிவில் இதேமாதிரி ஆதங்கப்பட்டுக் கொண்டு ஆண்டவனின் திரு உருவை தரிசிக்க முடிவதில்லை என்று எழுதி இருந்தேன். எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனுக்கு நாம்தான் உருவம் கொடுத்து உருவகப் படுத்துகிறோம் என்ற பொருளில் மாதங்கி மாலி என்ற பதிவர் பின்னூட்டம் இட்டிருந்தார். எவ்வளவு பெரிய உண்மை. ஆண்டவனை நாமே உருவகப் படுத்தி நம்முள்ளேயே தரிசிக்கலாம். மற்றபடி கட்டிட அமைப்புக்காகவும் சிற்ப வேலைப்பாடுகளைக்காணவும் சரித்திரப் பின்னணிகளைத் தெரிந்து கொள்ளவும் ஆலயங்கள் போகலாம்.

  ReplyDelete
 13. அத்தனையும் நினைவு வைத்து பகிர்வது சிறப்பு உங்க பயணத்தை ரிவர்சில் சுற்றிப்பர்கிறேன்

  ReplyDelete
 14. http://www.en-iniyaillam.com/2013/03/passion-on-plate.html

  ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு, பரிசுக்குத்தேர்வாகியுள்ள தங்களுக்கு என் அன்பான மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 15. இப்படி எல்லா இடத்திலயும் விரட்டினால் எந்தத் தெய்வத்தைதான் பார்ப்பது.:(
  ஆனாலும் எங்கும் கூட்டம் தான்.
  படம் அழகா இருக்கிறது. அவரும் இப்படித்தான் இருப்பார் என்று ஆறுதல் அடையவேண்டியதுதான். எங்கள் ஊர் பத்மநாபன் ஆற அமரத் தரிசனம் கொடுப்பார். மனசே வராது வெளியே வர!!
  சர்பத் கேட்கவே நன்றாக இருக்கிறது.நான் ரெடி மலைமேல் ஏற:)

  ReplyDelete
 16. பயன அனுபவம் படிக்க இனிமை! நுங்கு சர்பத் அவசியம் தேடிப்போய் வாங்கி சாப்பிட்டுப் பார்க்க வேன்டும்!

  ReplyDelete
 17. ஸ்கூல் பையன் - நன்றிங்க.

  கணேஷ் சார் - நன்றி.

  இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றி.

  திண்டுக்கல் தனபாலன் சார் - நன்றி.

  துளசி டீச்சர் - திருவட்டாறா! அடுத்த முறை தான் போய் பார்க்கணும். ஆசாமிகள் பண்ணும் தொல்லை தான்....:((

  வை.கோ சார் - நன்றி.

  கோமதிம்மா - மனக்கண்ணில் தான் தரிசித்தேன்... நன்றி.

  அப்பாதுரை சார் - //நகர்ந்துக்கோங்கோ
  இது எங்கே ?// அது இங்கே தான் ஸ்ரீரங்கத்தில்....:)

  //உப்பேரி?// சிப்ஸ் அல்லது வறுவல் என்பது தான் உப்பேரி...:)

  ஈஸ்வரன் சார் - நன்றி.

  சே.குமார் - நீங்க பிள்ளையார்பட்டியா? இரண்டு முறை வந்து, அருமையான தரிசனத்தை அனுபவித்திருக்கிறேன்.

  ரஞ்சனிம்மா - நன்றி. ஆமாம். இரண்டு மணியளவில் தான் சென்று தரிசிக்கிறோம்.

  G.M.B சார் - தங்களின் கருத்து மிகச்சரியே.... நன்றி.

  ஆச்சி - நன்றிப்பா.

  வை.கோ சார் - தகவலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த தங்களுக்கு நன்றி.

  வல்லிம்மா - கருத்துக்கு நன்றி.

  மனோம்மா - நுங்கு சர்பத் அவசியம் பருகிப் பாருங்கள். பிரமாதமாக இருக்கும்.  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…