Wednesday, March 20, 2013

பத்மநாபனும்! நுங்கு சர்பத்தும்! (கோவை கேரளா சுற்றுலா – 10)பட உதவி: கூகிள்

என்ன நட்புகளே! பத்மநாபனின் அழகைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறீர்களா? வாங்க! அனந்தனைக் காண வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது போட்டே! போட்டே! என்ற அதிகாரக் குரல் கேட்டது என்று சொன்னேன் அல்லவா? அது என்னவென்றால் திருப்பதியின் “ஜருகண்டி! ஜருகண்டி! தான் இங்கு போட்டே! போட்டே….:) (சென்ற பதிவில் நம்ப வல்லிம்மா சரியா சொல்லியிருந்தாங்க) சரி! திட்டு வாங்கிக் கொண்டாவது சுவாமியை ஒரு நிமிடமாவது பார்த்து விட வேண்டும். சன்னிதியின் முன்புள்ள மண்டபத்தைத் தாண்டி தான் நாம் நிற்கிறோம். பளிச்சென்று உற்சவர் தான் தெரிகிறார். மூலவரான அனந்த பத்மநாபன் இருக்கும் இடமே தெரியவில்லைபோட்டே! போட்டே! என்று கையை பிடித்து இழுத்து வெளியே விட்டு விட்டார்கள்.

நான் அன்று சுவாமியை பார்க்கவே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை…:( கருவறையின் முன்பு நிற்க விட்டாலாவது விரட்டியடிக்கும் ஓரிரு நிமிடங்களில் சுவாமியை பார்க்க முடியும். வரிசையை அனுமதிப்பதோ, கருவறைக்கும் அடுத்துள்ள மண்டபத்தைத் தாண்டி, அங்கிருந்து கொண்டு கிடைக்கும் ஒரு சில நிமிடங்களில், இருட்டடிப்பில் ஒன்றுமே தெரியவில்லை என்பது தான் நிஜம். என்னவரிடம் புலம்பியே விட்டேன். இப்படி பார்க்கவே முடியவில்லையே என…. அவரும் எனக்காக மீண்டும் வேண்டுமானால் வரிசையில் நின்று பார்க்கலாமா? என்றார். எத்தனை தடவை நின்றாலும் இருட்டடிப்பில் ஒன்றுமே தெரியப் போவதில்லை என்று மறுத்து விட்டேன்.

அடுத்த வரிசையில் அர்ச்சனை தட்டு வைத்திருந்தவர்களாவது பார்த்தார்களா? என்று பார்த்தால் அவர்களுக்கும் இதே நிலை தான். தட்டில் வைத்திருந்த தேங்காய் பழத்திலிருந்து பாதியை எடுத்து ஒரு கூடையில் போட்டுக் கொண்டு தட்டை அவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள்…:( அந்த பாக்கு மட்டை தட்டையும் வெளியே வரும் போது ஒருவர் வாங்கிக் கொண்டு அதில் இருக்கும் பொருட்களை ஒரு பேப்பரில் சுற்றிக் கொடுத்து விடுகிறார். மற்ற சன்னிதிகள் மூடியிருக்க பிரகாரத்தை ஒரு முறை சுற்றி வந்தோம். ஒரு இடத்தில் கோவிலின் கடைகள் இருக்க, அங்கு உள்ளங்கையளவு உள்ள அனந்த பத்மநாபனின் லாமினேட் செய்த படம் ஒன்றை ரூ 50 கொடுத்து வாங்கிக் கொண்டேன். அதில் பார்த்து தான் அனந்த சயனத்தில் இங்கு இப்படி இருக்கிறாரா! என்று தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது…:(

ஒரு இடத்தில் ஜருகண்டி! ஜருகண்டி! என்று கையை பிடித்து இழுத்து வெளியே வீசுகிறார்கள், மற்றொரு இடத்தில் நகர்ந்துக்கோங்கோ, நகர்ந்துக்கோங்கோ என்று விரட்டியடிக்கிறார்கள். இங்கோ போட்டே! போட்டே! என்று விரட்டல். ஏனிப்படி? என்னுடைய சென்ற பதிவிற்கு வந்திருந்த ரஞ்சனிம்மாவின் பின்னூட்டத்தில் அவரும் இதைத் தான் சொல்லியிருந்தார். அது என்னவென்றால் கோயிலுக்கு அவ்வளவு சொத்துகள் இருந்தும் நல்ல வெளிச்சம் ஏற்படுத்தி தர மறுக்கிறது என்றுஅது முற்றிலும் உண்மை தான். உலகின் பல மூலைகளிலிருந்தும் சுவாமியை தரிசனம் செய்ய வரும்போது இப்படி பார்க்க முடியவில்லையென்றால் நிச்சயம் சங்கடமாகத் தானிருக்கும்.

இங்கு ஸ்ரீரங்கத்தில் பெருமாளை பார்ப்பது அபூர்வமாக இருந்தாலும், ஒரு நிமிடம் பார்த்தாலும் கருவறையின் வெகு அருகே சென்று தீப்பந்தங்களும், விளக்கொளியும் ஒருசேர பெருமாளை நன்கு தரிசனம் செய்ய முடிகிறது என்பது ஆறுதலான விஷயம்.

கோயிலை விட்டு வெளியில் வந்தோம். பணம் எடுக்கலாம் என்று ATM எங்கிருக்கிறது என்று அங்கிருந்த காவலாளியிடம் விசாரித்தால் அவருக்கும் தெரியவில்லை…:( பிரமோத்தும் ராக்கியும் இன்னும் வரவில்லையென்று வெளிப் பிரகாரத்தையும் ஒருமுறை சுற்றி வந்தோம். தெப்பக்குளம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படியே வலம் வந்து ஒரு இடத்தில் ATMல் பணம் எடுத்துக் கொண்டு வந்தோம். சட்டை இல்லாமல் ஊரையே ஒரு ரவுண்ட் வந்தாலும் இங்கு கேட்பாரில்லை….:)) மருத்துவரிடம் காண்பித்து விட்டு அவர்கள் மூவரும் வரவே அங்கிருந்து புறப்பட்டோம்.

வீட்டுக்கு செல்லும் வழியில் எங்கள் பயணச்சீட்டு விஷயமாக என்னவரும் பிரமோத்தும் ஒரு அலுவலகத்துக்கு செல்ல, நாங்கள் அங்கிருந்த கேரள அரசின் காதி கைவினைப் பொருட்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து விண்டோ ஷாப்பிங்செய்து கொண்டு வெளியே வந்தோம். அங்கு அரசால் நடத்தப்பட்டு வரும் சில உணவுக் கடைகள் இருந்தன. அதில் நேந்திரங்காய் உப்பேரியும், சக்க உப்பேரியும் வாங்கிக் கொண்டு அங்கிருந்த ஒரு சர்பத் கடைக்கு அழைத்துச் சென்றார் ராக்கி.

பெரிய கிளாசில் நுங்கு சர்பத் வாங்கித் தந்தார். ரோஷ்ணி வேண்டாமென்று சொல்ல நான் பருக ஆரம்பித்தேன். நுங்கு, பைனாப்பிள் துண்டுகள், தட்டிப் போட்ட ஏலக்காய் என சில்லென்று வித்தியாசமான சுவையாக இருந்தது. ராக்கி என்னிடமிருந்து இரண்டு சிப் சர்பத்தை பகிர்ந்து கொண்டார்…:) அடுத்து வந்த என்னவரும், பிரமோத்தும் இரண்டு கிளாஸ் ஆர்டர் செய்தார்கள். அவர்களுக்கு தந்தது வேறு மாதிரி இருந்தது. சுவைத்து பார்த்தால் அது நுங்கும், இளநீரும் கலந்த சர்பத். அது வேறுவிதமான  சுவையாக இருந்தது. ஒரு கிளாஸ் சர்பத்தின் விலை ரூ 30. ஆரோக்கியமான இதை இங்கு வரும் போது அவசியம் சுவைத்துப் பாருங்கள்.

அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்று சேர்ந்தோம். சிறிது நேர ஆசுவாசத்துக்கு பின் மதிய உணவை எடுத்துக் கொண்டோம். வீட்டு தோட்டத்திலிருந்து நறுக்கிய வாழையிலையில் சிகப்பரிசி சாதம், கூட்டுக்கறி, தோரன், கேரள சாம்பார் சகிதமாக சாப்பிட்டு முடித்தோம். மூலிகைப் பொடிகள் கலந்த சுடுவெள்ளத்தை குடித்த பின் அடுத்த பயணத்துக்கு தயாரானோம். இது சற்று தொலைவான பயணம். ஒரு மலை வாசஸ்தலத்துக்கு செல்லப் போகிறோம். பள்ளியிலிருந்து கேஷுவை பிக்கப் செய்து கொண்டு அப்படியே செல்ல வேண்டும். அதனால் அவனுக்கான மதிய உணவு, தண்ணீர், குட்டீஸ்க்கான ஸ்நாக்ஸ், கேஷுவுக்கும், மின்னுவுக்கும் மருந்துகள் என்று எல்லாம் எடுத்துக் கொண்டோம்.

என்ன! எல்லோரும் ரெடியாகுங்க! மலைவாசஸ்தலத்துக்கு போகலாம். என்ன மாதிரி ஆட்கள் இருந்தால் மறக்காம டேஷுக்கு மாத்திரை போட்டுக்கோங்க….:)) அது இப்ப ரொம்பவே முக்கியம்…:))

அது வரை பைபை

மீண்டும் சந்திப்போம்,
ஆதிவெங்கட்.

Monday, March 18, 2013

கல்லூரிப் பூக்கள் - பாலகுமாரன்
எழுத்துலக ஜாம்பவான்களில் ஒருவரான பாலகுமாரன் அவர்களின் புத்தகத்தை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தில்லியில் எங்கள் வீட்டு புத்தக அலமாரியில் கணவர் வாசித்த இவரின் இரும்பு குதிரைகள், மெர்க்குரி பூக்கள், அகல்யா, இனிது இனிது காதல் இனிது என இவரது பல புத்தகங்கள் இருந்தாலும் ஏனோ எனக்கு இதுவரை வாசிக்க தோன்றவில்லை. பக்கத்து வீட்டு பெண்மணி கல்லூரிப் பூக்கள் புத்தகத்தை படித்து விட்டு நன்றாக இருக்கிறது படித்துப் பாருங்கள் என்று கொடுத்தார்.

அவரின் கதைகள் புரிய சற்று நேரமாகுமளவு கடினமாக இருக்கும் என்று மனதுள்ளேயே ஒரு எண்ணம். அதனால் தான் புத்தக அலமாரியில் இதுவரை தூசி தட்டி வைத்ததோடு சரி. இம்முறை படித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. வாசிக்க ஆரம்பித்தேன். வைக்க மனம் வரவில்லை. 416 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை கிடைக்கும் பகல் இரண்டு மணி நேரங்களில் என்று இரண்டு நாட்களில் முடித்தேன். வாங்க கதைக்குள் போவோமா…..

வாசகர்களின் கடிதங்களில் ஆரம்பிக்குது புத்தகம். சரபேஸ்வரன் என்னும் இளைஞன் திரைப்படத்தை இயக்கும் ஆர்வத்தோடு தன் கிராமத்தை விட்டு விட்டு சென்னைக்கு வந்து துன்பப்படுகிறார். அவருடைய கிராமத்தில் அவரின் தாய் வெண்ணெய் வியாபாரம் செய்கிறாள். மகனின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் மகனுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருகிறாள். சரபேஸ்வரனோ வாய்ப்பு கிடைக்காமல் உதவி இயக்குனராக ஒரிரு படங்களில் வேலை செய்கிறார். மானசீகமாக தான் இயக்கத் துடிக்கும் திரைப்படத்திற்கு தேவையான கருவையும், திட்டங்களையும் தயார் செய்து வைக்கிறான். வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படும் இவர்  அன்னையின் வேண்டுகோள்படி ஊருக்கே செல்லலாமா என தவிக்கும் சமயத்தில் சத்யா என்னும் கதாநாயகனுடனான சந்திப்பு ஏற்படுகிறது. இருவரும் இணைந்து ஒரு தயாரிப்பாளரை சந்திக்க வாழக்கைக்கு ஒரு வழி கிடைக்கிறது. அது தான் கல்லூரிப் பூக்கள் திரைப்படம்.

தன்னை போலவே வாய்ப்புக்காக துடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு திரைப்படம் தயாராகிறது. ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இந்த துறைக்கு வந்தார்கள், ஒரு மனிதன் காசுக்காகவும், வாய்ப்புக்காகவும், வாழக்கைக்காகவும் எப்படியெல்லாம் வேஷம் போடுகிறான் என்பது இந்த கதையில் வெட்ட வெளிச்சமாகிறது. திரைப்படம் நல்ல முறையில் வெளிவந்து சரபேஸ்வரனுக்கு நல்ல பெயரை வாங்கித் தருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து வேறு சில படங்கள் இயக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பின்பு மாமன் மகளை மணந்து கொண்டு இன்ப வாழ்க்கை வாழ்வதாக முடிகிறது. (இந்தமுறை உங்களுக்கெல்லாம் முழுக்கதையையும் சொல்லி விட்டேனே!)

இந்த புத்தகத்தை வாசிக்கும் போது என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால் திரைப்படத் துறையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும், நுணுக்கமான தொழில்நுட்ப  விஷயங்களையும் பாலகுமாரன் அவர்கள் விவரித்திருப்பது தான்.

அதே போல் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் ஒரு படத்தை பார்த்து விட்டு சர்வசாதாரணமாக நம் கருத்துகளை தெரிவிக்கிறோம். ஆனால் ஒரு திரைப்படம் வெளிவர அந்த துறையில் பணியாற்றும் ஒவ்வொரும் படும் துயரை நாம் அறிவதில்லை என்று தான்…:(

சரி! இனி அடுத்து எனக்கு தோன்றியது, இங்கு திருச்சியில் பரணில் கணவரின் புத்தகப் பெட்டியில் இருக்கும் பாலகுமாரன் புத்தகங்களை அவர் வரும் போது எடுத்துத் தர சொல்ல வேண்டும் என்று….:)

இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க அணுக வேண்டிய முகவரி

திருமகள் நிலையம்
புதிய எண் 16, பழைய எண் 55
வெங்கட்நாராயணா ரோடு
தியாகராய நகர், சென்னை – 600017
விலை 145

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.Friday, March 15, 2013

ஜாய் ஆலூக்காஸ் – கேம்லின் ஓவியப் போட்டி


ரோஷ்ணியின் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு CAMLIN நிறுவனத்தார் ஓவியப் போட்டி நடத்தி இருந்தார்கள். அதில் ரோஷ்ணிக்கும் ஒரு பரிசு கிடைத்துள்ளது. பள்ளி முதல்வர் அழைத்து தந்தார்கள். பள்ளியிலிருந்து வரும் போதே அம்மா ப்ரைஸ் கிடைச்சிருக்குஎன்று கத்தியவாறே ஓடி வந்தாள். வாழ்த்தி விட்டு மேலும் பல ஓவியங்களை வரையச் சொல்லி ஊக்கமும் கொடுத்தேன்.அடுத்து பள்ளியின் ஆண்டு விழாவில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் இரண்டு முறையுமே ஒரு பேப்பர் தவிர மற்ற அனைத்திலும் முழு மதிப்பெண்கள் (தமிழ் உள்பட) வாங்கியதற்காக, இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டு SHIVANI GROUP OF INSTITUTIONS தலைவர் டாக்டர் P.செல்வராஜ்  அவர்கள் கையால் சான்றிதழும், புத்தகமும் அளிக்கப்பட்டது. ஏன் தமிழ் உள்பட என்று சொல்லியிருந்தேன் என்றால் தில்லியில் இருந்தவரை அவளுக்கு அம்மா, அப்பா என்ற இரு வார்த்தைகளும் அதில் உள்ள எழுத்துகள் மட்டுமே அறிவாள். இந்த வருடம் இங்கு சேர்க்கப் போகிறோம் என்றவுடன் விடுமுறையில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து படிக்க வைத்தேன் அவ்வளவே. ஆனால் இங்கு வந்த பின் நன்றாக பிடித்துக் கொண்டு விட்டாள்.

அடுத்து JOY ALUKKASம், UTVயும் இணைந்து பள்ளிக்கு வந்திருந்து ஓவியப் போட்டி நடத்தியிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்  பள்ளியிலிருந்து என்னுடைய அலைபேசிக்கு தகவல் வந்தது. பள்ளியிலிருந்து அழைப்பு என்றதும் உடம்பு சரியில்லையோ என்று தான் பதட்டம் வந்தது. பின்பு தான் பரிசு வாங்கியிருக்கிறாள் என்று சொல்லவே மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. உடனே கணவரை தொடர்பு கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். மாமனார், மாமியாரிடமும் மாலையில் நடக்கும் பரிசளிப்பு விழாவுக்கு போகலாம் என்று சொல்லவே, மாமியார் வருகிறேன் என்று சொன்னார். மாலையில் பள்ளியிலிருந்து குதூகலித்து வந்தவளை வாழ்த்தி தயாராக்கி நான், ரோஷ்ணி, மாமியார் மூவரும் பேருந்தை பிடித்து JOY ALUKKAS ஷோரூம்க்கு சென்று சேர்ந்தோம்.சிறிது நேர காத்திருப்புக்கு பின் திருச்சியின் லோக்கல் சேனல் UTV யிலிருந்து வந்திருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். பள்ளி முதல்வர் திருமதி பத்மினி தேஷ்பாண்டே அவர்களும் திருச்சியின் ஜாய் ஆலூக்காஸ் தலைவர் அவர்களும் இணைந்து பெற்றோர் உடனிருக்க குழந்தைகளுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள். புகைப்படங்களும், காணொளிகளும் எடுக்கப்பட்டு உடனேயே முகப்புத்தகத்தில் பகிர்ந்தனர். இந்நிகழ்ச்சி UTVல் மூன்று நான்கு வாரங்களுக்கு பிறகு ஞாயிறுகளில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

பெற்றோர்கள் பேசுவதற்கும், தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. ஓரிருவர் பேச, என் அருகில் அமர்ந்திருந்த மாமியார் என்னிடம் நீயும் போய் பேசு என்றார்நானும் என்னம்மா போய் பேச! பழக்கமே இல்லை என்றேன்மீண்டும் சொல்லவே எழுந்து மேடைக்கு சென்று மைக்கை வாங்கியதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை, நேரம் ஆனது. எல்லோருமே கை தட்டினார்கள் தான். எனக்கு தான் பதட்டத்தில் என்ன பேசினேன் என்று தெரியவில்லை…:)

மாமியார் சொன்னது இது தான் நீ பேசியது என்று என் பெயர் ஆதிலஷ்மி. என் மகள் ரோஷ்ணி இரண்டாம் வகுப்பில் படிக்கிறாள். இன்று அவள் பரிசு வாங்கியது குறித்து மிகவும் மகிழ்ச்சி. நாங்க தில்லியிலிருந்து இந்த வருடம் தான் இங்கு வந்துள்ளோம். அங்கு இவள் யாருடனும் சட்டுனு பழகவும் மாட்டாள். எதிலும் கலந்து கொள்ளவும் மாட்டாள். இங்கு வந்த பின் அவள் தொடர்ந்து பரிசு பெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இம்மாதிரி வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் ஜாய் ஆலூக்காஸுக்கு நன்றி. என் சந்தோஷத்தை அவள் அப்பாவிடமும் உடனேயே பகிர்ந்து கொண்டேன். நன்றி.இது தான்  நான் பேசிய வார்த்தைகள். அன்று என் மாமியார் சொன்னதால் தான் என் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

இப்போட்டியில் ரோஷ்ணி மூன்றாம் பரிசு பெற்றிருந்தாள். இப்போதெல்லாம் பேப்பரில் வரைவது தவிர கணினியிலும் வரைய ஆரம்பித்திருக்கிறாள்.  அவள் வரைந்ததில் சிலவற்றை வெளிச்சக் கீற்றுகள் எனும் அவளது வலைப்பூவில் அவ்வப்போது வலையேற்றுவது வழக்கம். இதுவரை பார்க்காதவர்கள் வெளிச்சக்கீற்றுகளை சுட்டிப் பார்க்கலாம்.

இது போல் வெற்றிகள் அவளை என்றென்றும் தேடி வர அவளுடைய ஃப்ரெண்ட் கணேஷா அருள் புரியட்டும்…:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Wednesday, March 13, 2013

கோவளம், ஆழிமலா, அனந்தன்! (கோவை – கேரளா சுற்றுலா – 9)

பட உதவி: கூகிள்

விழிஞம் துறைமுகத்தின் அழகைக் கண்டு திகைத்துப் போன நாங்கள் அடுத்துச் சென்றது ஆழிமலா எனும் சிவன் கோவிலுக்கு. கோவளம் செல்லும் வழியில் உள்ளது. கோவிலின் வெளியே இசைக்கருவிகளை வாசித்து கொண்டிருக்கும் நங்கைகள் புடைப்பு சிற்பங்களாக அழகாக உள்ளனர். உள்ளே சுவாமிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. கோவில் பிரகாரத்தை ஒரு முறை சுற்றி வந்தோம். ஒருபுறம் இங்கிருந்து கீழே பார்த்தால் கடற்கரை தெரிகிறது. ஜில்லென்ற காற்று நம்மைத் தள்ளுகிறது.

விநாயகர், அம்பாள் என அனைத்து தெய்வங்களும் சிறப்பான அலங்காரத்தில் காட்சி தந்தனர். மக்கள் அமைதியாக சன்னிதியின் இருபுறமும் வரிசையாக நின்று கொண்டு காத்திருந்தனர். நாங்களும் சிவனின் சன்னிதிக்கு சென்று ஐந்து நிமிடங்கள் காத்திருப்புக்கு பின் திரை அகற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிவன் விபூதி அலங்காரத்தில் அற்புதமாக காட்சி தந்தார். தரிசனம் முடித்த பின் வெளியே வந்து காரில் ஏறிப் புறப்பட்டோம்.

அடுத்து நாம் செல்லப் போவது பிரபலமான கோவளம் கடற்கரைக்கு. வழியெங்கும் மீன் நாற்றம்! நல்லவேளை மாத்திரையால் நான் தப்பித்தேன்….:) மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. காரில் FMல் மழை பற்றிய மலையாளப் பாடல்கள் காதுக்கு இதமாய் கேட்டுக் கொண்டே சென்றோம். மழ.. மழ.. மழா.. மழாஎன்று ஒரு பாடல், நான் இங்கு வந்த பின்னும் என்னை முணுமுணுக்க வைத்தது. யூ ட்யூபில் தேடினாலும் கிடைக்கவில்லை. ராக்கியிடம் கேட்டால் அது தமிழ்ப் பாட்டாஎன்று கேட்கிறார் பாவம்…:))


பட உதவி: கூகிள்

எங்கு பார்த்தாலும் வெளிநாட்டவர்களும், ஏகப்பட்ட ரிஸார்ட்டுகளும், மசாஜ் செண்டர்களும் என கோவளத்தின் யதார்த்த நிலை தென்படுகிறது….:) நாங்கள் செல்லும் போதே இருட்டத் துவங்கி விட்டது. காரை ஓரிடத்தில் பார்க் செய்து விட்டு எல்லோரும் அலைகளில் சற்று நேரம் காலை நனைத்தோம். ஒருபுறம் குடித்து விட்டு இளைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தனர்…:( சிறிது நேரத்திலேயே அங்கிருந்து கிளம்பி விட்டோம். ஷங்குமுக கடற்கரையை முதலில் பார்த்த எங்களுக்கு இந்த இடம் பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வெளிநாட்டவர்களுக்கும், சுதந்திரம்(!!!) வேண்டி வருபவர்களுக்கும் மட்டுமே இந்த இடம் ஏற்றது. கடற்கரையை ரசிக்க வேண்டுமானால் ஷங்குமுகம் தான் நல்ல இடம்…:)

வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் இன்று இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, நான் இருக்கும் காய்கறிகளை பார்த்து விட்டு ஆலு கோபி சப்ஜியும், சப்பாத்தியும் ராக்கியின் உதவியுடன் செய்து முடித்தேன். சோர்வும், தூக்கமும் ஒருசேர இருந்த குழந்தைகளுக்கு முதலில் கொடுத்து விட்டு பின்பு நாங்களும் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றோம்.

காலை வழக்கம் போல் குளித்து தயாரானோம். இன்று நாம் பார்க்கப் போவது அனந்த பத்மநாபனை…. ஆமாங்க பத்மநாப சுவாமி அம்பலத்துக்கு (கோவிலுக்கு) தான் போகப் போகிறோம். இங்கு புடவையும் வேஷ்டியும் தான் அனுமதிக்கப்படும் என்பதால், அதற்கேற்றாற் போல் நாங்கள் உடுத்தித் தயாரானோம்.

காலை உணவாக தோசையும், சம்மந்தியும் ராக்கி செய்ய, நான் நம்ம ஊரு வெங்காயம், தக்காளி சட்னி செய்தேன். எப்போதுமே வெங்காயம், தக்காளி, வரமிளகாய் வதக்கும் போது அதனுடன் சிறிது கறிவேப்பிலையும், இஞ்சியும் சேர்த்து வதக்கி அரைப்பேன். சுவையாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.(நெஜமா நம்புங்கப்பா!) நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன். ராக்கியிடம் வரமிளகாயே இல்லாததால் மிளகாய்தூள் சேர்த்து வதக்கி அரைத்தேன்..:)

மின்னுவுக்கு சற்றே வீசிங் பிரச்சனை இருந்ததால் அவளை மருத்துவரிடம் காண்பித்து விட்டு வருவதற்காக பிரமோத்தும், ராக்கியும் எங்களை கோவில் வாசலில் இறக்கி விட்டு விட்டுச் சென்றார்கள். சுவாமியை பார்த்து விட்டு இதே இடத்தில் காத்திருக்கும்படியும் அரை மணி நேரத்தில் வருவதாகவும் சொன்னார்கள். கேமிரா, பைகள் என்று எதுவுமே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லாததால் காரிலேயே விட்டு விட்டு தான் உள்ளே சென்றோம். ஆண்கள் சட்டை அணியவும் கூடாது என்பதால் சட்டையையும் காரிலேயே வைத்து விட்டார். கையில் கொஞ்சம் பணமும், ATM கார்டு ஒன்றும் தான் வைத்திருந்தோம். இது தான் நல்லது. ஏனென்றால் கையில் எடுத்துச் செல்லும் பொருட்களை வைப்பதற்கு CLOAK ROOM இருக்கிறது. அதற்கு கும்பலோ ஏராளம்…:)


பட உதவி: கூகிள்

நாங்கள் சென்றது வடக்கு வாயில். இங்கு வேஷ்டியில்லாமல் பேண்ட் அணிந்து கொண்டு வரும் ஆண்களுக்கென வாடகைக்கு வேஷ்டி தரப்படுகிறது. அது போல் சுடிதார் அணிந்து வரும் பெண்களுக்கு அதன் மேலேயே கட்டிக் கொள்ள ஒரு முண்டும் (வேஷ்டி) வாடகைக்கு தரப்படுகிறது. கல்லூரிப் பெண்கள் ஒருபுறம் இதுபோல் சுடிதாரின் மேல் முண்டு கட்டிக் கொண்டு திரிய, வடநாட்டிலிருந்து வரும் மக்களில் வேஷ்டியே கட்டி பழக்கமில்லாத ஆண்கள் ஒருபுறம் திரிய , இந்த கூத்தையெல்லாம் பார்த்து ரசிக்கும் மக்கள் ஒருபுறம் என ஒருதினுசாகத் தான் இருந்தது கோவில்….:))

முதலில் பிள்ளையாரை தரிசித்து விட்டு, பத்மநாபனை தரிசிக்க செல்கிற வரிசையில் நாங்களும் இணைந்து கொண்டோம். ஒரு அம்மா வரிசையில் ஹரே ராம..ஹரே ராம..ராம ராம ஹரே ஹரே….ஹரே கிருஷ்ணஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேஎன்று ஓங்கிய குரலில் சொல்ல நாமளும் சொல்லிக் கொண்டே தரிசிக்கச் செல்கிறோம். கட்டண சேவை இங்கு இல்லை போலும்…. அர்ச்சனைக் கூடை எடுத்து செல்பவர்களை மட்டும் தனி வரிசையாக இங்கு பிரித்து விடுகிறார்கள். சில இடங்களை கடந்து பெருமாளின் திவ்ய தரிசனத்துக்காக காத்திருந்தோம். கிட்டே வர வர ஒரு சிலிர்ப்பு! எப்போது பார்ப்போம் என

போட்டே! போட்டே! என வரிசையை நோக்கி ஒரு அதிகாரக் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்ன இது?

பத்மநாபனின் அழகைத் தெரிந்து கொள்ளக் காத்திருங்கள்…..

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

Monday, March 11, 2013

உள்ளங்கையில் ஒரு கடல் – பிரபஞ்சன்
பிரபஞ்சன் அவர்கள் தமிழ் மொழியின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளிலும் சாதனை முத்திரை பதித்தவர். தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரைச் சிறந்த எழுத்தாளராக  கெளரவித்திருக்கின்றன. இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறந்த எழுத்தாளர்.

இந்த புத்தகத்தின் பதிப்புரையில் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள செய்தி: "தினமலர் வாரமலரில் தொடராக வெளிவந்த போதே பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட நாவல் என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது."

நான் சமீபத்தில் வாசித்த இந்த கதை மிகவும் வித்தியாசமான கதையாக இருந்தது. கதைக்குள் போவோமா?

முன்னுரையில் பிரபஞ்சன் அவர்கள் இந்தக் கதையை பற்றி சொல்கிறார். புகழ்பெற்ற ஒரு சினிமா இயக்குநர் காணாமல் போவதில் தொடங்குகிறது இந்தத் தொடர்கதை. அவனைத் தேடிப் புறப்படுகிறாள் இளம் பத்திரிக்கையாளர் ஒருத்தி. அவன் உலகமும், உறவும், அவள் தேடலும் தான் கதை”.

பிரபல பத்திரிக்கையில் ரிப்போர்ட்டராக பணிபுரியும் செல்வி, பத்திரிக்கை ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப்பட இயக்குனரான மூர்த்தியை தேடி செல்கிறார். தேடச் சொன்னது  அவரது நண்பரான தயாரிப்பாளர் பரசுராம். முதலில் ஆசிரியரின் வேண்டுகோளுக்காக தேட சென்றவள். அவர் தங்கியிருந்த மேன்சன், நண்பர்கள், காதலி என்று பல பேரிடம் விசாரிக்க விசாரிக்க அவர் மேல் மரியாதை கூடுகிறது. மூர்த்தி ஒரு சிறப்பான மனிதர் எனத் தெரிகிறது. பெண்களின் மானத்தை போற்றுகிறவர், உதவும் மனப்பான்மையுள்ளவர், அவர் ஒரு இயற்கை விரும்பி என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு, அவர் ஒளிந்து கொண்டு இருக்கும் இடத்தை அடைகிறாள். அவர் தன் பேரை மாற்றிக் கொண்டு இவள் தேடி வந்தவர் தான் இல்லை என்று சொல்கிறார். செல்வியும் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதைப் போல் நடிக்கிறாள். தினமும் அவரை சந்தித்து பேசி, அவரிடம் நேரிடையாக கேட்காமல் அவர் ஒளிந்து கொண்டிருக்கும் காரணத்தை கண்டுபிடிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவரை சென்னைக்கு அழைத்து வந்து தயாரிப்பாளரிடமும், காதலியிடமும் ஒப்படைக்கிறாள்.

ஒளிந்து கொண்டதற்கான காரணம் என்ன? வாங்கிப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

இந்த புத்தகத்தை வாங்க அணுக வேண்டிய முகவரி:-

கவிதா பப்ளிகேஷன்
தபால் பெட்டி எண் 6123
8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார்,
தி.நகர், சென்னை – 600017.
புத்தகத்தின் விலை ரூ 90

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

Friday, March 8, 2013

வண்ண வண்ண கோலங்கள்...


மகளிர் தினத்தையொட்டி எங்கள் குடியிருப்பில் நடைபெற்ற  கோலப்போட்டிகள் பற்றி முன்பே என்னுடைய மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பதிவில் எழுதியிருந்தேன். உலக மகளிர் தினமான இன்று வண்ணமயமாக கோலங்களை பார்த்து ரசிக்கலாமா....முதல் பரிசு பெற்ற கோலம்


இரண்டாம் பரிசு பெற்ற கோலம்


மூன்றாம் பரிசு பெற்ற கோலம்

இது நாங்க போட்ட கோலம்!இது தான் கோல அணி!நிகழ்ச்சியை நடத்திய தோழி வாணி அவர்கள் எழுதிய பெண்கள் தின ஆத்திச்சூடி

அ – அன்பின் அடையாளம்
ஆ – ஆளுமையின் பிறப்பிடம்
இ – இனிமையாகப் பழகுபவர்கள்
ஈ – ஈடில்லா தாய்மை உள்ளம் கொண்டவர்கள்
உ – உள்ளத்தில் உறுதி உள்ளவர்கள்
ஊ – ஊக்கத்துடன் முன்னேறுபவர்கள்
எ – எளிமையாக இருப்பவர்கள்
ஏ – ஏளனத்தை விரும்பாதவர்கள்
ஐ – ஐயமில்லை அவர்களே நம் நாட்டின் பெண்கள்
ஒ – ஒற்றுமைக்கு வழி வகுப்பவர்கள்
ஓ – ஓய்வை துறந்தவர்கள்
ஒள – ஒளவியம் (பொறாமை) அகற்றியவர்கள்
ஃ – அஃதே நம் பெண்கள், ஆம் அவர்களே நம் கண்கள்.

அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்...


பட உதவி: கூகிள்


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Monday, March 4, 2013

விழிஞம் – அருள்ஜோதி - வேளி (கோவை கேரளா சுற்றுலா – 8)என்ன நட்புகளே! சென்ற பகுதியில் சென்ற ஷங்குமுக கடற்கரையின் காற்று சில்லென்று இருந்ததா! மறுநாளான இன்று காலையிலேயே விரைவில் தயாரானோம். எங்கு செல்லப் போகிறோம் என்று தெரியவில்லை, சஸ்பென்ஸாக வைத்திருந்தார் பிரமோத்….:) காலை உணவுக்கு அப்பம் செய்யப்போவதாக ராக்கி நேற்று சொல்லிக் கொண்டு, அதற்காக மிக்சியில் மாவு அரைத்தார். சரி! குழிப்பணியாரம் தான் செய்யப் போகிறார் என்று நினைத்துக் கொண்டேன். நாம் குழிப்பணியாரத்திலும் விதவிதமாக செய்வோமே! அது போல் இவர்கள் என்ன முறையில் செய்யப் போகிறார்கள் என பார்க்கலாம் என்று இருந்தேன்…..:)

டைனிங் டேபிளில் அமர்ந்தால் தட்டில் இருந்தது ஆப்பம்….:) ஓ! இவர்கள் ஆப்பத்தை அப்பம் என்பார்களா! அப்போ அப்பத்தை? மெத்தென்று இருந்தது ஆப்பம். ஆப்பத்துக்கு தொட்டுக் கொள்ள வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி உப்பு காரம் சேர்த்து வதக்கி இருந்தார்கள். பிரமோத்துக்கு பூண்டு சட்னி பிடிக்கும் என்று ராக்கி ஸ்பெஷலாக அதை செய்திருந்தார்…..:) சாயா குடித்து விட்டு கிளம்பினோம். நான் டேஷ்க்கு மரியாதை குடுத்து மாத்திரை போட்டுக் கொண்டு விட்டேன். எதற்கு வம்பு என்று….:)

இன்று முதல் ஒரு விஷயத்தை கடைப்பிடிக்க முடிவு செய்து விட்டேன்…. அது என்னவென்றால், காரில் ஏறி அமர்ந்ததும் கண்ணை மூடி தூங்குவது தான்…..:) எங்கு இறங்கப் போகிறோமோ, அங்கு இறங்கி வேடிக்கை பார்த்துக் கொள்ளலாம்….:) என்னுடைய கேரள சுற்றுலாவின் இரண்டாம் பகுதியில் அனுஜா என்ற ஒரு தோழியும் கூட இந்த முறையை தான் சொல்லியிருந்தார்…. போகும் வழியை பார்த்துக் கொண்டு வந்தாலும் தலை சுற்றுமாம்….:) சரி புறப்படலாமா.

வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் தான் பிரமோத்தின் பெற்றோர் இருக்கிறார்கள். இவர்கள் வீடு ஒரு பள்ளத்தில் இறங்கி மேட்டில் ஏற வேண்டியதாக இருந்தது. அம்மையும், அச்சனும் இனிமையாக வரவேற்றார்கள். மோளுக்கு மலையாளம் அறியோஎன்றதும். மனசிலாகும்என்றேன். அவர்கள் முகத்தில் அவ்வளவு ஒரு சந்தோஷம். கிண்ணங்களில் கோதுமைப் பாயசம் தந்தார்கள். எனக்கு அது மிகவும் பிடிக்கும். நேற்று தான் இதைப் பற்றி ராக்கியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ராக்கி சொல்லி அம்மா நமக்காக சிரமப்பட்டு செய்தார்களோ என்று விசாரித்தேன். இல்லையாம். அவர்கள் வீட்டிலும் ஒரு ரோஷ்ணி உண்டு. பிரமோத்தின் அக்கா மகள். அவளுக்கு மசக்கை ஆதலால் அவளுக்கு பிடிக்கும் என்று செய்தார்களாம்….:) எல்லோருக்கும் ஓரியோக்களும், இனிப்புகளும் தந்து உபசரித்தார்கள். நான் பாயசத்தை மட்டும் தான் பருகினேன். நேற்று சக்கை (பலாப்பழம்) கொடுத்தோமே அதை சாப்பிட்டீர்களா என்று விசாரித்தார்கள். அவர்கள் தோட்டத்தில் விளைந்ததல்லவா! சிறிது நேரம் அங்கு பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டோம்.

அங்கிருந்து அரை மணி பயணத்தில் ஒரு சுற்றுலாத் தலத்துக்கு சென்று சேர்ந்தோம். நேற்று பார்த்தோமே ஷங்குமுக கடற்கரை. அதன் தொடர்ச்சி தான் இங்கே. வேளி என்று இந்த இடம் அழைக்கப்படுகிறது. இங்கிருந்த BACK WATERS ல் படகு சவாரி, (எல்லா இடத்திலயும் ஆகாயத் தாமரையின் ஆக்ரமிப்பு) மறுபுறம் குதிரை சவாரி, குழந்தைகளுக்கான சறுக்கு மரம், ஊஞ்சல், பார்வைக்கு குளிர்ச்சியாக பூக்கள், வரிசையாக கடைகள் என அந்த இடமே களைகட்டியிருந்தது. வெயிலாக இருந்ததால் எல்லோரும் இளநீர் வாங்கிக் குடித்தோம். தென்னை மரங்களாக தென்படும் இந்த ஊரிலும் இளநீர் 25 ரூபாய்க்கு விற்கிறது. சுற்றுலாத் தலம் என்பதாலோ….:)
குழந்தைகள் செம ஜாலியாக விளையாடினார்கள். நாங்களும் இரண்டு தென்னை மரங்களுக்கிடையில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஆனந்தமாக ஆடினோம். எங்கே ஊஞ்சலை பார்த்தாலும் ஆடி பார்க்கும் ஆசை வருகிறதே….. இதுவும் அலுக்காதவைகளில் சேர்ந்தது தான்….:) படகு சவாரி செய்யலாம் என்றால், உணவு இடைவேளை நேரமாம். இரண்டு மணிநேரத்துக்கு பிறகு தானாம். சரியென்று கிளம்பி விட்டோம்.

நேரே ஒரு உணவகத்துக்கு வண்டியை செலுத்தினார் பிரமோத். பெயரை பார்த்ததும் முகத்தில் மலர்ச்சி. கோவையில் உள்ள அருள்ஜோதி உணவகத்தின் கிளை இங்கு உள்ளதே என்று தான். காரை பார்க் செய்து விட்டு உள்ளே சென்றோம். நேர்த்தியாக இருந்த உணவகத்தில் வெளிநாட்டினரின் வரவு அதிகமாகவே இருந்தது. மீல்ஸ் ஆர்டர் செய்தோம். சிகப்பரிசியா? வெள்ளை சாதமா? என்று முடிப்பதற்குள்ளேயே வெள்ளை சாதத்துக்கு என் வோட்டு விழுந்ததை பார்த்து பிரமோத் புன்முறுவல் செய்தார்….:) அன்லிமிட்டட் சாதத்துடன், இரண்டு சப்பாத்திகள், கிண்ணங்களில் குருமா, வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயசம் என அனைத்துமே நன்றாக இருந்தது.

அடுத்து என்ன! வீட்டுக்கு சென்று சற்றே இளைப்பாற வேண்டியது தான். மாலையில் முக்கியமான சில இடங்களுக்கு செல்ல வேண்டுமே! மற்றவர்கள் அரட்டை அடிக்க மதிய தூக்கம் என்பது பழக்கமே இல்லாத நான் மாத்திரையின் காரணத்தால் ஒரு மணி நேரம் நன்கு உறங்கிப் போனேன். பின்பு எழுந்து சாயா குடித்து விட்டு தயாராகி, முதலில் ஒரு இடத்துக்கு சென்றோம். அது விழிஞம் சர்வதேச துறைமுகம். சென்று கொண்டிருக்கையிலேயே மழை ஆரம்பித்து விட்டது. சட்டு சட்னு மழை வருகிறது. இது போல் நம் ஊர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதில் தோன்றியதென்னவோ உண்மை தான்

ஒருபுறம் மீன் பிடித்தல் மறுபுறம் கடல் என பிரிக்க நடுவில் போட்டிருக்கும் பாறைகள் AXIS களை நினைவுபடுத்தும். வெகுவாகவே கவர்கிறது. எப்படியும் எதோ ஒரு தமிழ் படத்தில் இந்த இடம் இடம்பெறாமல் இருந்திருக்காது. கலங்கரை விளக்கம், படகுகள், என துறைமுகத்தின் அழகே தனி தான். ஒருபுறம் சூரியன் மறைய ஆரம்பிக்க, மழை ஒருபுறம், சில்லென்ற காற்று என மனதுக்கு இதமாக இருந்தது. நானும், என்னவரும் மட்டும் ஐந்து நிமிடங்கள் காரை விட்டு இறங்கி குடைக்குள் நின்று கொண்டு துறைமுகத்தின் அழகை ரசித்தோம்…..:)

அடுத்து நாம் செல்லப் போவது பிரபலமான கடற்கரை ஒன்றுக்கும்,  மலை மேலுள்ள சிவன் கோவிலுக்கும்……அதுவரை காத்திருங்கள்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

பின் குறிப்பு: அழகிய படங்கள் எடுத்த என்னவருக்கு நன்றி!