Wednesday, February 6, 2013

மூக்கணாங்கயிறு!
மூக்கணாங்கயிறு பற்றி இப்போ எதுக்கு பதிவு என்று யோசிக்கிறீர்களா? நம்ம ரஞ்சனிம்மா ”மூக்குத்திப் பூ” என்ற தலைப்பில் அவர்களுடைய மலரும் நினைவுகளை, ஒரு பதிவாக பகிர்ந்திருந்தார்கள். இதுவரை படிக்காதவங்க படிச்சுட்டு வாங்க. அதை படித்ததும், ”நான் ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த விஷயமாச்சே!” என்று தோணவே உடனே எழுதலாம் என்று முடிவெடுத்து விட்டேன். நம்ம வரலாறு எப்பவுமே பெரிசுங்க!

எங்கப்பா மூக்கணாங்கயிறு போட்டாத் தான் மாடு அடங்கும். அது போல் மூக்கு குத்தினால் தான் நீயும் அடங்குவே என்று மிரட்டுவார். அப்போதெல்லாம் அப்பா மேல் கோபமாக வரும். அப்போது என்ன இப்போவும் தான். ஆனால் கோபத்தை காட்டத் தான் அப்பா இல்லை. சரி மேலுலகில் இருக்கும் அவரை எதுக்கு வம்புக்கு இழுக்க வேண்டும்…

மூக்கு நீளமாக இருப்பதால் அழகாக இருக்கும், அந்தந்த வயதில் குத்தினால் தான் எளிதாக இருக்குமென்றும் பல காரணங்களை சொல்லி என்னுடைய பத்தாம் வயதில், அதாவது நான் ஐந்தாம் வகுப்பு முடிந்து முழுபரீட்சை விடுமுறையில் சிவகங்கைக்கு சென்ற போது மூக்கு குத்தும் படலத்தை நடத்தினார்கள். பாட்டி (அப்பாவின் அம்மா) ஐந்து பேத்திகளுக்கும் மாங்காய் பிஞ்சு மூக்குத்தி வாங்கித் தந்தார். தங்கத்தில் மாங்காய் போன்ற மூக்குத்தியில் முத்து பதித்தது. மாமா வீட்டில் ஆசாரியை வர வைத்து நல்ல நேரத்தில் மூக்கு குத்தி விட்டனர்.

விடுமுறை முடிந்து கோவைக்கு வந்து பள்ளி சென்று கொண்டிருந்தேன். பள்ளியில் ஏதோ விளையாடும் போது கையை முகத்துக்கு குறுக்கே கொண்டு வரும் சமயம் வளையல் மூக்குத்தியில் மாட்டி இழுத்து விட்டேன் போலிருக்கிறது. வலியோ உயிர் போகிறது. எல்லோரும் இரத்தம் வருவதாக சொல்ல, மாலையில் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் காண்பித்தால் அம்மாவும் பயப்படுகிறார். எதிர் வீட்டு மல்லிகாம்மாவிடம் (இவரை பற்றி முன்பே எழுதியிருக்கிறேன்) காண்பித்தேன். அவர் தான் பொறுமையாக அமர்ந்து தண்டு பாதி உடைந்த நிலையில் இருந்த மூக்குத்தியை (கழட்டி எடுக்கவும் முடியாத நிலையில் இருந்தது) பார்த்து முழுதும் உடைத்து எடுத்து விட்டார். இரத்தத்தை துடைத்து தேங்காய் எண்ணெய் வைத்து ஓட்டை அடைந்து போகாமல் இருக்க வேப்பிலை குச்சியை சொருகி விட்டார்.

தூக்கத்தில் குச்சியும் எங்கோ விழுந்து விட மீண்டும் போட்டுக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வெற்றி கண்டேன். (இப்போ என் மகள் எதற்கு அடம் பிடித்தாலும் எனக்கு கோபம் வருகிறது. அம்மா பாவம்!) ஓட்டையும் அடைந்து விட்டது. புண் ஆறியதும் எத்தனையோ முறை அம்மா மூக்கு குத்திக் கொள்ள அழைத்த போதும் போக மறுத்து சண்டை போட்டு வெற்றியும் கண்டேன். விதி வலியது! விட்டதா என்னை?

பத்தாம் வகுப்பில் எதிர் வீட்டு சின்ன குழந்தை அக்‌ஷய்க்கு (இப்போ எங்கு இருக்கிறானோ!) முதல் பிறந்த நாள் வந்தது. ஆயுஷ்ஹோமம் செய்து வீட்டிலேயே ஆசாரியை வர வைத்து காது குத்தினார்கள். அழுகையோ அழுகை. அவனை சமாதானம் செய்து கொண்டிருந்தேன். அடுத்து நானும் அழப்போவது தெரியாமல்…. :)

அடுத்து என்ன! எனக்கே தெரியாமல் எங்கம்மா வைத்திருந்த மூக்குத்தியை ஆசாரியிடம் கொடுத்து பிடித்து உட்கார வைத்து குத்தி விட்டார்கள். அதே மாங்கா பிஞ்சு தான் பத்த வைத்து விட்டார்கள். இருவரும் அழுகை. கூல் டிரிங்ஸ் கிடைத்தது. இருந்தாலும் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டு சத்தம் போட்டா அழ முடியும். இமேஜ் என்னாவது! மனதுக்குள்ளேயே அழுகை…..

அதே மூக்குத்தியுடன் தான் பல வருடங்கள் இருந்தேன். திருமணத்தின் போதும். மூக்கு குத்தாதவர்களை பார்த்து பெருமூச்சு விடுவதுண்டு. நம்மளை மட்டும் பழி வாங்கி விட்டார்களென்று. கணவரிடம் கேட்டு திருமணத்திற்கு பிறகு தங்கத்தில் வெறும் சின்ன மொட்டு ஒன்று வாங்கிக் கொண்டேன். இப்போதும் அது தான். அம்மாவுடைய மூக்குத்தியின் ”தளுக்கு” (மூன்று கற்கள் தனித்தனியாக ஒரு வளையத்தில் ஒன்றாக கோர்க்கப்பட்டது) என்னிடம் உள்ளது. அதை என்னவர் போட்டுக் கொள், நன்றாக இருக்கும் என்று சொல்வதுண்டு. நான் தான் அய்ய! நன்றாகவே இருக்காது என்று கண்ணாடி முன் வைத்து பார்த்து விட்டு கூறுவதுண்டு…..:)) உங்களுக்கும் இது போல் கதைகள் இருந்தால் பகிருங்களேன்….

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

18 comments:

 1. எனக்கு அனுபவமே இல்லாத ஏரியாங்கறதால இயல்பா பகிர்ந்த உங்கள் எழுத்து நடை ரொம்பப் பிடிச்சதுன்னு மட்டும் சொல்லிட்டு எஸ்கேப் ஆகறேன்.

  ReplyDelete
 2. போன மாதம் என் உறவினருக்கு மூக்கில் உள்ளே விழுந்து, நுரையீரலில் தங்கி..... நிறைய அவஸ்தைக்குப் பிறகு... இப்போது நலம்...

  ReplyDelete
 3. மலரும் நினைவுகளை மூக்கின் மேல் விரல்வைத்து மலரவைத்துவிட்டீர்களே ..!!

  ReplyDelete
 4. எனக்கு மூக்குத்தி போட்டுக்கொள்ள ரொம்ப படிக்கும் அதனால் அழுதெல்லாம் அமர்க்களம் பண்ணாமல் குத்திக்கொண்டுவிட்டேன்.
  சுவாரசியமான அனுபவங்கள் சிறப்பாக விவரித்து இருக்கீங்க.

  ReplyDelete
 5. //மூக்குத்தியின் ”தளுக்கு”// அட! புது வார்த்தை எனக்கு.

  (பெண்கள் தளுக்கி மினுக்கி போகிறார்கள் என்ற வார்த்தை பிரயோகம் இதனால்தானா!!)

  ReplyDelete
 6. என்ன டில்லி! இப்போ மூக்கு மேல கோபம் போயி மூக்குத்தி வந்துட்டாக்கும்?

  ReplyDelete
 7. மறக்க முடியாத அனுபவங்கள் என்று தெரிகிறது. நமக்கு ஒரு நியாயம் குழந்தைக்கு ஒரு நியாயமா!

  ReplyDelete
 8. என் மாமியார் உன் மூக்கு அழகாய் இருக்கிறது நீ மூக்கு குத்திக் கொண்டால் நல்லா இருக்கும் என்று சொல்லி சொல்லி என்னை மூக்கு குத்த வைத்து விட்டார்கள். புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் இருப்பார்களா! நான் திருமணம் ஆகி மகள் பிறந்தபின் மூக்கு குத்திக் கொண்டேன். என் அண்ணன் திருமணத்திற்கு தாலி செய்ய ஆசாரி பொன் உருக்க வீட்டுக்கு வந்த போது அம்மா வாங்கி தந்த 65 ரூபாய் முத்து மூக்குத்தி மீன் வடிவில் இருக்கும் அதை அன்று குத்திக் கொண்டேன். தலைவலி வந்துக் கொண்டு இருந்தது முத்து மூக்குத்தி காரணமாய் இருக்கும் என்று சொன்னார்கள். அப்புறம் சிவப்பு கல் மூக்குத்தி போட்டுக் கொண்டேன்.

  நீங்கள் சொல்லும் தளுக்கு மூக்குத்தி அழகாய் இருக்கும். எங்கள் பக்கம் அதை கோஸு மூக்குத்தி என்பார்கள். என் மாமா பெண் போட்டு இருப்பார்கள் இருட்டில் டால் அடிக்கும். வெயிலில் ஒளி சிந்தும். என் அம்மா இரண்டு பக்கமும் 7 கல்லில் போட்டு இருப்பார்கள். என் மாமியாரும் இரண்டு பக்கம் போட்டு இருப்பார்கள். நான் ஒரு பக்கம் மட்டும் தான். எங்கள் குடும்பத்தில்(கணவ்ர் வீட்டில்) நான் மட்டும் மூக்குத்தி போட்டு இருக்கிறேன். இரண்டு தங்கைகள் போட்டு இருக்கிறார்கள். ஒரு தங்கை ஸ்ரீதேவி மூக்குத்தி, ஒரு தங்கை ஒற்றைகல் மூக்குத்தி .
  //உங்களுக்கும் இது போல் கதைகள் இருந்தால் பகிருங்களேன்….//

  உங்கள் விருப்ப படி நான் என் கதையை பகிர்ந்து கொண்டேன்.

  // பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டு சத்தம் போட்டா அழ முடியும். இமேஜ் என்னாவது! மனதுக்குள்ளேயே அழுகை…..//

  அது தானே!
  உங்கள் வழக்கம் திருமணத்தின் போது மூக்கு குத்தவேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா.


  ரோஷிணி விருப்ப பட்டால் மூக்குத்தி குத்துவீர்களா?

  ReplyDelete
 9. அப்படீன்னா காதில் நாலைந்து ஓட்டை போட்டு தினுசு தினுசாக மாட்டிக் கொண்ட ஃபேஷன் வந்தபோது சும்மாவா இருந்துட்டீங்க?!

  வயசானா மூக்கு முத்திடும்னு எங்களையும் ஒற்றை மூக்கில் ஓட்டை போட்டு தான் விட்டாங்க. ஆறாவதிலோ ஏழாவதிலோ ... நினைவில்லை. புண்ணாகி, அம்மியை உரைத்து பற்று போட்டு... வலியோடு எரிச்சலும் :((

  மகளுக்கு காது மட்டும் தான் குத்தினோம்.

  ReplyDelete
 10. சகோதரி ரஞ்சனியின் மூக்குத்திப்பூ வாசித்தேன். தங்கள் அனுபவம் கொஞ்சம் துன்பம் தான்.
  நான் 40 வயதில் தான் மூக்குத்தி குத்திப் போட்டேன். நாம் வசித்தது சிங்களவர்கள் இருக்கும் வட்டாரம்
  கணவர் அங்கு தான் வேலை. அரசாங்க வீடு வேலைக்காரர் என்று. நாம் தமிழர் என்பதைக் காட்டீக் கொள்ளாது. பொட்டு காப்பு தாலிக் கொடி என்பன போடாது வாழ்ந்து வந்தோம்.எனக்கு மூக்கு குத்த ஆசை. இப்படியாக தமிழர் என்று மறைந்து வாழும் வாழ்வு எங்களிற்குப் பிடிக்கவில்லை. டென்மார்க்கிற்கு வரும் சந்தர்ப்பம் கணவருக்கு சடுதியாக வந்தது. அவர் இங்கு வந்ததும் நாங்கள் அந்த சிங்கள வட்டாரத்திலிருந்து கொழும்பு தலைநகருக்கு வந்தோம். நாமும் விசா எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். விசா வந்ததும் மூக்கு குத்தினேன். தங்க நகைக் கடையில் தனிக் குமிழி போன்ற மூக்குத்தியை வாங்கி அவர்களே குறடு போன்ற ஓர கருவியால் குத்தி அப்படியே மூக்குத்தியும் போட்டது. கொஞ்சக் காலம் நொந்தது. இப்பொது 26 வருடங்கள் ஆகி விட்டது டென்மார்க்கில். மிக்க நன்றி. இனிய வாழ்த்து. தங்களிற்குக் கருத்திட இது 2வது தடவையாக வந்துள்ளேன். சகோதரி.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 11. அன்பு ஆதி, என் பெண் பிடிவாதம் பிடித்து 10 வயதில் மூக்குக் குத்திக்கொண்டாள்.
  திருமணத்துக்குப் பிறகு போயே போச். பிறகு அவளே வைர மூக்குத்தி வாங்கிக் கொடுத்து ஆசாரியிடம்
  அழைத்துச் சென்று எனக்கு குத்திவிட்டாள்.:|) இப்போதுதான்
  தளுக்கு வாங்க ஆசை வந்திருக்கு. பார்க்கலாம்:)
  நல்ல பதிவு ஆதி.

  ReplyDelete
 12. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என் அத்தை - அப்பாவின் தங்கை என்னைவிட ஆறுமாதம் சிறியவர் - மூக்குக்குத்திக்கொள்ள எங்கள் குடும்ப ஆசாரியிடம் அழைத்துச் சென்றார்...

  முதலில் அவர்தான் ஆசாரியிடம் மூக்கு கொடுத்தார் ..

  மூக்கு குத்தும் போது அவர் அலறிய அல்றலில் நான் எழுந்து வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன் ...

  பிறகு யாராவது மூக்குத்தி என்று ஆரம்பித்தால் நழுவிவிடுவேன் ..

  ReplyDelete
 13. மூக்குத்தி பற்றிய அழகான நகைச்சுவையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  அநிருத்தின் அம்மாவை அன்று சந்தித்து “சுடிதார் வாங்கப்போறேன்” கதைப்பற்றிகூட பேசினீர்களே!

  அவளும் இன்று வரை மூக்குத்தியே குத்திக்கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கிறாள்.

  நாங்களும், அது அவள் விருப்பப்படி செய்யட்டும், என அவளை ஏதும் வற்புருத்தவில்லை. அதைபற்றி அவளிடம் பேசுவது கூட இல்லை.

  ஆனால் அவளின் அம்மா [என் சம்பந்தி மாமி, நாங்கள் இது விஷயத்தில் வற்புருத்திச்சொல்ல வேண்டும் என] எங்களை வற்புருத்திக்கொண்டே இருக்கிறாங்க, என்ன செய்ய?

  ReplyDelete
 14. மூக்கணாங்கயிறு கதையை ரொம்பவும் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள், ஆதி!

  எங்கள் அறுபதாம் கல்யாணத்தில் என் சம்மந்தி எனக்கு மூன்று கல் தளுக்கு (இந்த வார்த்தை ரொம்பவும் பிடித்து விட்டது!) வாங்கிக் கொடுத்தார். சில சமயங்களில் அதையும் போட்டுக் கொள்வேன். ஆனாலும் அப்பா சென்டிமென்ட் காரணமாக வைரக்கல் மூக்குத்திதான் எப்பவுமே!

  உங்களுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களும் ரசிக்கும்படி இருக்கின்றன.

  உங்களின் ஸ்ரீரங்கம் கதம்பம் படித்தபோது மூக்கணாங்கயிறு உங்கள் மூக்குத்தி அனுபவம் என்று தெரியவில்லை.

  ஹாரம் - இல் இந்தப் பதிவு பார்த்தேன். அது தமிழ் திரட்டி என்று தெரிந்திருக்கவில்லை. அந்த வலைத்தளத்தில் நீங்கள் எழுதுகிறீர்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். அங்கு பின்னூட்டம் போட முடியவில்லை.

  தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்!

  ReplyDelete
 15. அங்கே ஒருத்தர் நல்லா சாப்பாடு கிடைக்காம “பீட்ஸா புராணம்” எழுதிகிட்டிருக்கார். நீங்க “மூக்குத்தி புராணம்” எழுதிட்டிருக்கீங்க. சரி, சரி, அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு!! :-)))

  மற்றபடி, வரலாறு நல்லாருக்கு. மூக்கு குத்திக்கலாம்னு ஒரு ஆசை சின்ன வயசுலெ இருந்தாலும், வலிக்குப் பயந்து செஞ்சதில்லை.

  //பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டு சத்தம் போட்டா அழ முடியும். இமேஜ் என்னாவது! //
  அதானே!! இதுக்காகத்தான் இப்பவும் ஊசிபோட்டுக்கும்போது என் பிள்ளைகளைப் பக்கத்தில் விடமாட்டேன். இமேஜ் என்னாவுறது!! :-)))

  ReplyDelete
 16. கணேஷ் சார் - நன்றி.

  திண்டுக்கல் தன்பாலன் - இப்போ பரவாயில்லையா அவங்களுக்கு.... பயமா இருக்கே....இப்படியெல்லாம் வேற ஆகுதே...

  இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றி.

  ராம்வி - உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான் போல...:)

  ஈஸ்வரன் சார் - உங்களுக்கு குசும்பு கொஞ்சம் நஞ்சம் இல்ல...:))

  சேக்காளி - நன்றிங்க.

  ஸ்ரீராம் - நன்றி.

  கோமதிம்மா - தங்களின் மூக்குத்தி நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ரோஷ்ணி விருப்பப்பட்டால் குத்திக் கொள்ளட்டும்...

  நிலாமகள் - அந்த காது குத்துவதை பற்றியெல்லாம் நான் யோசித்ததே இல்லை...:)

  கோவைக்கவி - தங்களின் மூக்குத்தி நினைவுகளும் அருமை. நன்றி.

  வல்லிம்மா - உங்க பெண் உங்களை அழைச்சிட்டு போய் மூக்கு குத்தி விட்டார்களா! ஆச்சரியம் தான்.

  இராஜராஜேஸ்வரி மேடம் - அலறலை பார்த்து ஓட்டம் பிடித்து விட்டீர்களா...:)

  வை.கோ சார் - அது அவரது விருப்பம் விட்டு விடுங்கள். அவருக்காக ஒருநாள் தோன்றும் அப்போது குத்திக் கொள்வார்...:)

  ரஞ்சனிம்மா - தாங்கள் தானே இந்த பதிவு இட காரணமானவர்... முத்தும் தளுக்கும் என்று என் அம்மா சொல்வார்...:)

  ஹுசைனம்மா - பீட்சா புராணம் எழுதினா நல்ல சாப்பாடு கிடைக்கலைன்னு அர்த்தமா? அவர் சூப்பரா சமைச்சு சாப்பிடுகிறார்...:) அது போக நாங்க யாருமே ஃபாஸ்ட் புட் பக்கமே போக மாட்டோம். சாப்பிட்டதும் இல்லை...:)

  ReplyDelete
 17. மூக்குத்தியெல்லாம் பார்க்கத்தான் பிடிக்கும். குத்திக்கிறதுன்னா?... இந்த விஷப்பரீட்சைக்கு நான் ஆளில்லைப்பா :-))

  ReplyDelete
 18. அமைதிச்சாரல் - நல்ல வேளை தப்பிச்சீங்கப்பா! கருத்துக்கு நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…