Friday, February 8, 2013

கதம்பம் – 13


இந்த முறை கதம்பத்தில் பெரும்பாலுமே ரங்கனின் புகழ் தான். ஸ்ரீரங்கத்திலிருந்துஎன்ற தலைப்பிலோ ரங்கா ரங்காஎன்ற தலைப்பிலோ இனிமேல் எழுதலாம் போல் இருக்கிறது. அவ்வளவு விஷயங்களும், உற்சவங்களும் வருடம் முழுவதுமே இருக்கிறது….:)

கருட சேவை:-தைமாத உற்சவத்தில் கருட சேவையை காண உத்திர வீதிக்கு சென்று அங்கு உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்று காத்திருந்து கருட வாகனத்தில் பெருமாளை தரிசனம் செய்தோம். கோவில் யானையான ஆண்டாள் பட்டாடை போர்த்திக் கொண்டு முன்பு வர, அதை அடுத்து வெள்ளை குதிரை, தீப்பந்தங்கள், கருட வாகனத்தின் பின்னே பிரபந்தங்களை சொல்லிக் கொண்டு வருபவர்கள் என வீதி முழுவதும் பக்தி மயமாய் இருந்தது. பெருமாள் வருகிறார் என்றால் உடனே தெருவையடைத்து போடப்படும் இரட்டை இழை கோலங்கள், இங்கிருக்கும் சிறுமிகள் கூட தனது பிஞ்சு விரல்களால் எத்தனை அழகாகக் கோலமிடுகிறார்கள். நமது நாட்டவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் கருட வாகனத்தை ஆர்வத்தோடு பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

பூத்தேர்:-

கருட வாகனத்தின் அடுத்த நாள் யானை வாகனம். பெரிய வெள்ளி யானையின் மேல் பெருமாள் வீற்றிருப்பார். அன்று யானை வாகனத்தை காண போக முடியவில்லை. அதற்கடுத்த நாள் தான் பூத்தேர். தை மாத அறுவடையை பெருமாள் பார்வையிட்டு விட்டு செங்கமல நாச்சியார் சன்னிதியிலிருந்து அன்று புறப்பாடாகியது. கருட வாகனத்தை கண்ட இடத்திலேயே இன்றும் நின்று பூத்தேரை கண்டு களித்தேன். தேர் போன்று பூக்களால் அலங்காரம் செய்ததை ஆட்கள் தூக்கி வர அதன் நடுவில் பல்லக்கில் பெருமாள் நாச்சியார்களுடன் பவனி வந்தார். அருகில் நின்று தரிசனம் செய்து விட்டு நானும் பக்கத்து வீட்டு பெண்மணியும் வந்து கொண்டிருந்தோம். திடீரென ரோஷ்ணி வரலையா? என்ற குரல் திரும்பி பார்த்தால் ரிஷபன் சார், அவரும் பெருமாளை தரிசனம் செய்து விட்டு வந்து கொண்டிருந்தார். அவரது கையில் திரவியப் பொடி இருந்தது. எங்களுக்கும் தந்தார். பெருமாளின் பிரசாதம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

தைத்தேர்:-

இதுவரை எனக்கு தேரோட்டத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்ததில்லை. இம்முறை அக் குறை தீர்ந்தது. தைத்தேரை நானும் ரோஷ்ணியும் ரங்கா ரங்காகோபுரத்தினருகில் நின்று கண்ணாரக் கண்டோம். பெண்கள் கும்மியடித்தும், சிலர் நாராயண நாராயண”, ரங்கா ரங்கா கோஷங்களும் பாட, தேர் நிலைக்கு வந்ததும் கரகோஷங்களும், அதிர் வேட்டுகளும் முழங்கியது. பின்பு அங்கிருந்து அருகில் உள்ள கோவிலுக்கும் சென்று விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

பெரிய பெருமாள் தரிசனம்:-

ரங்கனைக் கண்டேன் பகிர்வில் முத்தங்கி சேவை காண முடியாமல் போனதை பற்றி எழுதியிருந்தேன். அதன் பின்பு இவ்வளவு நாட்கள் கழித்து கோவிலில் பணி புரியும் ஒரு நண்பரிடம் என் மாமனார் சொல்லி வைத்து பெருமாளின் தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார். அவரின் உதவியால் அரை மணி நேர காத்திருப்பில் பெருமாளின் திவ்ய தரிசனம் கிடைக்கப் பெற்றேன். தாயாரையும், சக்கரத்தாழ்வாரையும் கண்டு வீடு வந்து சேர்ந்தோம். அன்று தான் யானை வாகனத்தில் பெருமாள் உலா வந்தார்.

கொள்ளிடத்தில் மாரியம்மன்:-

சமயபுரம் மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் அருள்பாலித்தாள். ஏறக்குறைய ஒரு மணி நேரம் வரிசையில் நின்று அவள் அழகை கண்டு வந்தோம். பெருமாள் சமயபுரத்தாளுக்காக சீர் எடுத்து வருவாராம். முழங்கால் அளவு தண்ணீர் இருந்தது. அதை கடந்து தான் அம்பாளின் தரிசனம் கிடைத்தது. அங்கேயே புதிதாக கடைகள் நிறைய முளைத்திருந்தன.  வரும் வழியில் தீமிதித் திருவிழா நடந்து கொண்டிருந்தது. சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். இப்போ நேரில் காணும்  வாய்ப்பு. சிலர் அலகு குத்தி காவடியும் எடுத்து வந்தார்கள்.

என்ன நட்புகளே பக்தி மயமாய் இருந்ததா! கதம்பம் முழுவதுமே திருவரங்கம் பற்றிய செய்திகளோடு தந்ததில் மகிழ்ச்சி. மீண்டும் வேறொரு கதம்பத்தில் சந்திப்போம்.

ஆதி வெங்கட்.

15 comments:

 1. தினம் தினம் திருவிழாவும் புறப்பாடுமா ரங்கன் ஜொலிச்சுண்டுதான் இருக்கான்!!!!

  நேரில் பார்ப்பதற்கு கொடுப்பினை வேணும். இதுக்குத்தான் ஸ்ரீரங்கத்தில் ஒரு வருசம் பூராவும் இருக்கணுமாம்!

  உங்களுக்குக் கிடைச்ச அனுபவத்தை எங்களோடு பகிர்ந்தது மனசுக்கு திருப்தியா இருக்கு ரோஷ்ணியம்மா.

  ReplyDelete
 2. ஸ்ரீரங்க வாழ்க்கையில் கோவில்கள் உங்களை நன்கு மகிழ்விக்கிறது என தெரிகிறது !

  ReplyDelete
 3. அடாடா... நானும் ஸ்ரீரங்கத்துக்கு வந்து ஒரு மாசம் தங்கிடணும்னு ஆசையே வந்துடுச்சு. நீ்ஙக பார்த்த தரிசனங்களை நானும் அனுபவி்ச்சாப்பல உணர முடிஞ்சது உங்க எழுத்தால. சந்தோஷமுங்க!

  ReplyDelete
 4. ஸ்ரீரங்கம் திவ்ய தேசம், தினம் திவ்ய தரிசனம்.
  கொடுத்து வைத்து இருக்க வேண்டும் ஆதி.
  நாங்களும் உங்கள் பதிவு மூலம் தரிசிக்கிறோம்.
  நன்றி ஆதி.
  கதம்பம் மணக்கிறது.

  ReplyDelete
 5. அட... சக பதிவரை சந்தித்தது...

  ReplyDelete
 6. அற்புதமான அனுபவம். எங்களோட பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி, ஆதி.

  //”ஸ்ரீரங்கத்திலிருந்து” என்ற தலைப்பிலோ ”ரங்கா ரங்கா” என்ற தலைப்பிலோ இனிமேல் எழுதலாம் போல் இருக்கிறது. //

  எழுதுங்க ஆதி. உங்க பதிவு மூலமாக தினமும் ரங்கனை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தால் நல்லது.

  ReplyDelete
 7. இந்தக் கதம்பம் ஸ்ரீரங்கமாலையா?

  //”ஸ்ரீரங்கத்திலிருந்து”//
  கோவை2தில்லி2ஸ்ரீரங்கம்...

  ReplyDelete
 8. ஆஹா! இப்படியெல்லாம் இருக்கிறதா? நீங்க உண்மையிலையே ரொம்ப கொடுத்துவச்சவங்கதான். எல்லாத்தையும் காணும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
  சந்தோஷம்.

  ReplyDelete
 9. கதம்ப மாலை ஸ்ரீரங்க வாசனையுடன் கமகமக்கிறது ஆதி!

  ReplyDelete
 10. பெருமாள் வருகிறார் என்றால் உடனே தெருவையடைத்து போடப்படும் இரட்டை இழை கோலங்கள், இங்கிருக்கும் சிறுமிகள் கூட தனது பிஞ்சு விரல்களால் எத்தனை அழகாகக் கோலமிடுகிறார்கள்.

  சிறுவயதில் நின்று நின்று வியந்து பார்த்திருக்கிறேன் ...

  ஸ்ரீரங்கத்தில் துளசியாகட்டும் ரோஜாப்பூககள் ஆகட்டும் ஃப்ரெஷ் ஆக வண்டுகள் மொய்த்துக்கொண்டு கருத்தைக்கவரும் .. பதிவு அருமை ,..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 11. ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் நடனத்தை நீங்களாவது பார்த்திருக்கிறீர்களா? :))

  ReplyDelete
 12. நல்ல மணமுள்ள கதம்பம். ஸ்ரீரங்கத்துக்கதம்பம் அல்லவா! அதனால் தான் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. ஸ்ரீரங்கனின் தர்சனங்கள் கண்டு களிப்புற்றேன்.

  ReplyDelete
 14. வாசிக்கும்போது அங்கே நானும்நேரில் பார்த்ததுபோலவே இருக்கு ஆதி .அருமை .

  ReplyDelete
 15. ரங்கனை தரிசித்த அனைவருக்கும் நன்றிகள் பல...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…