Thursday, February 14, 2013

மகளிர் தின விழா அட்டகாசங்கள்-1



பட உதவி: கூகிள்



வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்! பதிவில் குடியரசு தினத்தையொட்டி எங்கள் குடியிருப்பில் நடைபெற்ற விளையாட்டு, சமையல் மற்றும் மாறுவேட போட்டிகள் பற்றி சொல்லியிருந்தேன். அப்போது மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கென பல்வேறு போட்டிகள் நடைபெறும் என்றும் சொல்லியிருந்தார்கள். மார்ச் எட்டு தான் உலக மகளிர் தினம். ஆனால் அடுத்த மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதால் அவர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடும் என்று ஃபிப்ரவரி மூன்றாம் தேதியே மகளிர் தினப் போட்டிகள் நடைபெற்றன.



ஒரு வாரத்துக்கு முன்னதாகவே நோட்டீஸ் போர்டில் இதைப் பற்றிய தகவல்களையும், பங்கேற்க விரும்புகிறவர்கள் தங்களது பெயரை காலனி வாயில் காப்பாளரிடம் உள்ள புத்தகத்தில் எழுதி வைக்கும்படியும் சொல்லப்பட்டிருந்தது. சென்ற முறை போட்டிகளை நடத்திய தோழி வாணி தான் இம்முறையும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கோலப்போட்டிகள், அம்மா - மகள்/மகன் போட்டி, அந்தாக்‌ஷரி, ஒரு நிமிட போட்டிகள், மியூசிக்கல் சேர் என பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



காலை பதினோரு மணியளவில் கோலப்போட்டிகள் ஆரம்பமாயின. சென்ற முறை ஒருவர் மட்டுமே கோலம் போட வேண்டும் என்று சொல்லியிருந்தவர்கள், இம்முறை இருவர் சேர்ந்து புள்ளி வைத்து, வண்ணமும், ஒரு மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டும். ஒரே வீட்டுக்கே பரிசுகள் செல்லக் கூடுமென்பதால் அக்கம் பக்கம் உள்ளவர்களோடு கூட்டு சேர்ந்து கோலம் போடலாம் என்றும், பரிசும் இருவருக்குமே உண்டு என்றும் சொல்லியிருந்தார்கள். எங்கள் குடியிருப்பில் உள்ள பெண்மணிகள் அருமையாக கோலம் போட்டிருந்தார்கள். அன்று எங்கள் குடியிருப்பில் ஸ்டால் போட்டிருந்த GRT THANGA MALIGAI-லிருந்து  வந்திருந்த பெண்மணி தான் நடுவராக இருந்து தேர்வு செய்தார். பரிசுகளும் உடனேயே அறிவிக்கப்பட்டது. நடுவராக இருந்த GRT பெண்மணிக்கு சிறப்பு பரிசு தரப்பட்டது. கோலங்களின் புகைப்படங்களை இன்னொரு பகிர்வில் பகிர்கிறேன்



அடுத்து அம்மா- மகள்/மகன் போட்டி நடைபெற்றது. அதிலும் நிறைய பேர் கலந்து கொண்டார்கள். குழந்தைகளிடம் கேள்வித்தாளை கொடுத்து ஒரு இடத்தில் அமர வைத்து விடையை எழுதச் சொல்லி அம்மாவிடம் அதே கேள்வியை கேட்டு சரி பார்ப்பது தான் இந்த விளையாட்டு. அம்மாவுக்கும் மகளுக்கும் இடையேயுள்ள புரிதலை தெரிந்து கொள்வதற்காக. அதில் தவறாது எல்லோருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் சண்டை வருமா என்றுஎல்லா அம்மாவுமே ஆமாம் என்று தான் சொன்னார்கள். மகள்கள் தான் சிலர் ஆமாம் என்றும், சிலர் இல்லையென்றும்…. :) எங்க வீட்டு செல்லத்தையும், இன்னொரு குட்டிப் பையனையும் தவிர்த்து அனைவருமே கல்லூரியில் படிக்கும் மகள்கள் தான். :) முதல் பரிசு வாங்கிய ஜோடி பத்துக்கு பத்து மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.



அடுத்து அந்தாக்‌ஷரி நடைபெற்று, பரிசுகளும் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் நாங்கள் வேறு ஒரு இடத்திற்கு சென்றோம். அது எங்கு என்றால் GRT-இலிருந்து வந்திருந்த பெண்மணி எல்லோருக்கும் மெஹந்தி போட்டு விட்டார். அதனால் அங்கு காத்திருந்து ரோஷ்ணி மெஹந்தி வைத்துக் கொண்டாள். அனைவருக்கும் பொறுமையாக பலவித டிசைன்கள் போட்டு விட்டார்கள்.!



இதன் பிறகு உணவு இடைவேளை விடப்பட்டது. மீண்டும் மாலை நான்கு மணிக்கு கூடினோம். முதல் போட்டியாக சேஃப்டி பின்னை துணியில் பின் செய்ய வேண்டும். ஒரு நிமிடத்தில் எத்தனை போடுகிறார்கள் என்பதை வைத்து பரிசுகள் தேர்வு செய்யப்பட்டன. அனைவரும் இதில் உற்சாகமாக கலந்து கொண்டனர். முதல் பரிசு பெற்றவர் பதினெட்டு பின்களை பின் செய்திருந்தார்.



அடுத்த விளையாட்டு பேப்பர் கப். பேப்பர் கப்பை மேஜையில் கவிழ்த்து வைத்து விட்டு நாம் அதன் முன் மண்டியிட்டு ஊத வேண்டும். ஒரே ஒருமுறை ஊதுவதில் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை பொறுத்து தான் பரிசுகள். கப் கீழே விழுந்தால் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுவர். இதில் முதல் பரிசு பெற்றவர் முப்பத்தியெட்டு செ.மீ. பேப்பர் கப்பை நகர்த்தியிருந்தார்.



அடுத்ததாக ஒருவர் கண்ணைக் கட்டிக் கொண்டு மற்றொருவருக்கு ஒரே ஒரு நிமிடத்தில் பவுடர், மை, லிப்ஸ்டிக், பொட்டு இவை அனைத்தையும் பயன்படுத்தி மேக்கப் செய்து விட வேண்டும். இதிலும் பெண்மணிகளும், கல்லூரி பெண்களும் உற்சாகமாக பங்கேற்றனர். மேக்கப் இட்ட பின் அவர்களை படமெடுத்து வைத்து அதை பார்த்து பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.



அடுத்ததாக BALANCE BALL நடைபெற்றது. மெலிதாக சற்றே தட்டையாக நான்கடியுள்ள PVC பைப்பை இரு கைகளில் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு நுனியிலிருந்து ஒவ்வொரு சின்ன பிளாஸ்டிக் பந்தாக வைப்பார்கள். அதை நம் கைகளால் பைப்பை பேலன்ஸ் செய்து அடுத்த நுனியின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் கூடையில் பந்துகளை தள்ள வேண்டும். இவ்வாறு ஒரு நிமிடத்தில் எத்தனை பந்துகளை தள்ளுகிறோம் என்பதை பொறுத்து பரிசுகள் அறிவிக்கப்பட்டன. முதல் பரிசு பெற்றவர் பதிமூன்று பந்துகளை ஒரு நிமிடத்தில் தள்ளியிருந்தார்.



அடுத்ததாக வார்த்தை விளையாட்டு வைக்கப்பட்டது. ஒரு நிமிடத்தில் அவர்கள் சொல்லும் எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு வார்த்தைகள் அமைக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் எத்தனை சொற்கள் அமைக்கிறோம் என்பதை பொறுத்து இங்கும் பரிசுகள். முதல் பரிசு பெற்றவர் இருபத்தி மூன்று வார்த்தைகள் எழுதியிருந்தார்.



அதற்கடுத்து மியூசிக்கல் சேர். அதைப் பற்றி நான் சொல்ல தேவையில்லை. இது இரு பிரிவுகளாக வைக்கப்பட்டது. இல்லத்தரசிகள் ஒரு பிரிவு, கல்லூரி பெண்கள் ஒரு பிரிவு.



இப்படியாக அன்றைக்கு மகளிர் தினப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன…. அடுத்த வாரம் பரிசளிப்பு விழா வைக்கப் போவதாக சொன்னார்கள். அன்றைய நாளை இனிதே கழித்த திருப்தியுடன் வீடு வந்தடைந்தோம்.



பரிசளிப்பு விழாவுக்கு வெவ்வேறு துறைகளில் சாதித்து கொண்டிருக்கும் மூன்று பெண்களை சிறப்பிக்க அழைத்திருந்தார்கள். அவர்கள் யார்அடியேன் எத்தனை போட்டிகளில் பங்கு கொண்டேன். எத்தனை விளையாட்டுகளில் பரிசு பெற்றேன்…. என்பதை தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரை காத்திருங்கள்…..:))



மீண்டும் சந்திப்போம்,



ஆதி வெங்கட்.



15 comments:

  1. நன்றாக இருக்கிறது உங்கள் விழா விவரிப்பு ஆதி. நீங்கள் எவ்வளவு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றீர்கள் என்று அறிய ஆவல். இந்த மாதிரி விழாக்கள் மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

    ReplyDelete
  2. FM ரேடியோ அறிவிப்பாளர் பேசும் வேகத்தில் பதிவு!

    ReplyDelete
  3. மிகவும் உற்சாகம் தரக்கூடிய அனுபவப்பகிர்வு. பாராட்டுக்க்ள்.

    ReplyDelete
  4. நல்ல விழாவாக இருக்கே, ஆதி. உங்களுக்கு பரிசு கிடைத்த விவரமெல்லாம் தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. விழாவை அழகாய்த் தொகுத்தளித்திருக்கிறீர்கள்.

    அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்:)!

    ReplyDelete

  6. குடியிருப்புகளில் தங்குவதில் உள்ள சில அனுகூலங்கள். ஒருவரை ஒருவர் அறியவும் நட்பு பாராட்டவும் இம்மாதிரிப் போட்டிகள் உதவும். வெற்றி பெறுவதை விட பங்கேற்பே முக்கியம். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். (எந்தக் குடியிருப்பு என்று கூறவில்லையே.)

    ReplyDelete
  7. இனிதான அருமையான விழா பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  8. தொகுப்பும் வர்ணனையும் அழகு!

    ReplyDelete
  9. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  10. ஆகா!மிக இனிமையாகப் பொழுது போயிருக்கும்!

    ReplyDelete
  11. விழாவை இவ்வளவு நேர்த்தியாக நடத்தியவர்களுக்குப் பாராட்டுகள். வசிக்கும் இடம் இப்படி இருந்தால், வாழ்க்கை மேலும் இனிமையாகும். எஞ்சாய்!!

    ReplyDelete
  12. விழாவில் பங்கு பெற்று அனுபவத்தை பகிர்ந்து இருப்பது ரசிக்கும் படியாக உள்ளது.

    ReplyDelete
  13. விளையாட்டுகள் ஜூப்பர்..

    ReplyDelete
  14. இப்பதிவினை படித்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…