Wednesday, February 27, 2013

ஆலு பராத்தா!
வட இந்திய உணவான “ஆலு பராத்தாஎன்பது, ஒரு ஸ்டஃப்ட் சப்பாத்தி. உருளைக்கிழங்குடன் மசாலா சேர்த்து சப்பாத்தி உள்ளே வைத்து செய்வது. வட இந்தியாவில் சப்பாத்திக்கு உள்ளே பல விதமான பூரணம் வைத்து ஆலு பராத்தா, மேத்தி பராத்தா, கோபி பராத்தா என பல வித பராத்தாக்களை தயார் செய்வார்கள். மிகவும் பிரபலமானதும், சுவையானதும், அனைவருக்கும் பிடித்தமானதும் ஆலு பராத்தா. இந்தப் பராத்தாவினை எப்படிச் செய்வது எனப் பார்க்கலாம்!

தேவையானப் பொருட்கள் :-

கோதுமை மாவு – 1கப்
உருளைக்கிழங்கு – 3 (பெரியது)
உப்பு தேவையான அளவு
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – ¼ தேக்கரண்டி
மஞ்சள் தூள் சிறிதளவு
கொத்தமல்லி  இலைகள் சிறிதளவு
எண்ணெய் () நெய் தேவையான அளவு

செய்முறை :-

கோதுமை மாவை தண்ணீர் சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும். உருளைக் கிழங்கை குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இது தான் ஸ்டஃப் செய்ய வேண்டிய பூரணம்.

பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவை பெரிய எலுமிச்சையளவு உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து சிறிய சப்பாத்தியாக திரட்டிக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டியளவு உருளைக்கிழங்கு மசாலா கலவையை வைத்து மூடி, மாவை தொட்டுக்கொண்டு பராத்தாவாக திரட்டவும். எவ்வளவு மெலிதாக செய்ய முடியுமோ செய்யலாம். சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணையோ அல்லது நெய்யோ விட்டு வாட்டி எடுக்கவும்.

சூடான சுவையான, ஆலு பராத்தா தயார். இதற்கு சைட் டிஷ் ஆக ராய்தா எனப்படும் தயிர் பச்சடி, ஊறுகாய் அல்லது தொக்கு ஒத்துப் போகும்.

இந்த ரெசிபியை PASSION ON PLATE – GIVE AWAY ஈவண்டிற்கு அனுப்பி வைக்கிறேன். 


மீண்டும் சந்திப்போம்,

ஆதிவெங்கட்.

Monday, February 25, 2013

ஷங்குமுகமும் - ஷாஹி பனீரும் (கோவை – கேரளா சுற்றுலா – 7)

கோவை-கேரளா சுற்றுலா பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4  பகுதி 5 பகுதி 6என்ன! எல்லோரும் மிருகக்காட்சி சாலைக்குள்ளே போவதற்குத் தயாரா இருக்கீங்களா! வாங்க உள்ளே போகலாம்! தில்லி தேசிய உயிரியல்  பூங்காவில் உள்ளது போலவே சிங்கம், புலியைத் தவிர எல்லா மிருகங்களுமே சுதந்திரமாக அதனதன் இடத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றன. சிங்கமும், புலியும் தான் கூண்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தன. அவைகள் இந்த இடத்துக்கு வந்த தேதி, அவற்றின் பெயர் என தகவல்கள் இருந்தன. சிங்கவால் குரங்கு, கரடி, மான்கள், யானை, காண்டாமிருகம், சிறுத்தை இப்படி பலவகையான மிருகங்களும், கிளிகள், மயில்கள் என விதவிதமான பறவைகளும் நம்மை வரவேற்றன. அங்கங்கே மலையாளத் தமிழில் வழிகாட்டும் பலகைகள் இருந்தன! அதென்னங்க மலையாளத் தமிழ் இங்க பாருங்க….
பலாமரங்களும், நாகலிங்க மரம், ஆலமரம் என்ற அந்த சூழல் நன்றாக இருந்தது. அங்கங்கே சில உயிரினங்களை பற்றி நாம் ஆச்சரியப்படும் தகவல்கள் உள்ள பலகைகள் காணப்பட்டன. உள்ளே சற்று தூரம் நடந்து வந்தவுடன் ஒரு இடத்தில் AVTன் சுவையான தேநீர் கிடைத்தது. எல்லோரும் வாங்கிப் பருகினோம். எனக்கு டிப் டீ இல்லாமல் இது போல் மெஷின்லிருந்து வரும் தேநீர் பிடிக்கும்…:) அடுத்து REPTILE HOUSE க்கு சென்றோம். கண்ணாடி கூண்டுக்களுக்குள் விதவிதமான பாம்புகள்…… அய்யோ! கடவுளே! இன்னிக்கு விபூதி வைத்துக் கொண்டு தான் படுக்கணும். சீக்கிரம் பார்த்து விட்டு வெளியே ஓடி வந்துட்டேன்….இன்னும் சில படங்கள் இங்கே இருக்கு!


மீன்கள் காட்சியகத்துக்கும் நுழைவுச் சீட்டு வாங்கியிருந்ததால் அங்கும் சென்றோம். சின்னது தான். உள்ளே குளம் போல் அமைத்து அதில் படகு ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் பாலம். அதில் ஒருபுறம் ஏறி மீன்களை பார்த்து விட்டு மறுபுறம் இறங்க வேண்டும். சென்ற முறை கோவை போன போது குரங்கு நீர்வீழ்ச்சியும், ஆழியார் அணைக்கும் சென்று வந்தோம். அங்கே ஆழியார் அணைக்கருகில் ஒரு மீன்கள் காட்சியகம் சென்றோம். இதை விட பெரியது. நிறைய மீன்கள் அங்கே இருந்தது

மிருகக்காட்சி சாலைக்கு வெளியே குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், ஊஞ்சல் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன். அதில் குட்டீஸ் ஆனந்தமாக விளையாடினர்.

ஒரு வழியாக மிருகக்காட்சி சாலையை சுற்றிப் பார்த்த திருப்தியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். தோட்டத்திலிருந்து வாழையிலைகளை பறித்து வந்து எங்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. மெனுவாக சிகப்பரிசி சாதம், பருப்பு (பார்த்தவுடன் மோர்குழம்பு என்று நினைத்தேன். பாசிப்பருப்புடன் உப்பு ,காரம் சேர்த்து குழம்பு போல் செய்தது) , அவியல், பப்படம், கிச்சடி (தயிர் பச்சடியைத் தான் இவர்கள் கிச்சடி என்கின்றனர்) தோரன் (கறி, அல்லது பொரியல்). மதிய உணவு வழக்கம் போல் சாம்பார், ரசம் என்றில்லாமல் வித்தியாசமாக சாப்பிட்டது நன்றாக இருந்தது. பிரமோத்தும், ராக்கியும் அருமையாக உபசாரம் செய்தார்கள்.

அவர்களும் சாப்பிட்டவுடன் அடுத்து ஒரு இடத்திற்கு செல்ல தயாராகச் சொன்னார்கள். எங்கு என்று கேட்டால் சஸ்பென்ஸ்! திருவனந்தபுரத்தில் எப்போது வேண்டுமானாலும் மழை வரும். அதனால் தோட்டத்தில் காயப் போட்டிருந்த துணிகளையெல்லாம் எடுத்து உள்ளே போடச் சொன்னார் ராக்கி. அங்கிருந்த நான்கு நாட்களும் துணி காய்வதற்கு தான் படாத பாடு பட வேண்டியிருந்தது…..:)

கிளம்புவதற்கு முன்னால் பிரட்டலுக்கு, வேண்டாம் வேண்டாம் டீச்சர் சொல்ற மாதிரி டேஷ்க்கு மாத்திரை போட்டுக்கணுமா தெரியலை. ரொம்ப தூரம் என்றால் கண்டிப்பா போட்டுக்கணும்…:) சொல்லவும் இல்லையே…. கோவையில் பட்ட அனுபவத்திற்கு பிறகு திருவனந்தபுரம் செல்கிறோம் என்றவுடன் சுற்றிப் பார்க்கும் ஆவலை விட அங்கே அங்கங்கே வீசும் மீன் நாற்றத்தில் என்ன செய்யப் போகிறேனோ! கூட வர்றவங்களும் மூட் அவுட் ஆகப் போறாங்களேன்னு பயம் தான் அதிகமாக இருந்தது….:)

காரில் ஏறி அரை மணி பிரயாணத்தில் SHANGUMUGAM BEACH ஐ சென்றடைந்தோம். கடலை நெருங்குகிறோம் என்பது நம் முகத்தின் வீசும் சில்லென்ற காற்றே சொல்கிறது. எவ்வளவு முறை பார்த்தாலும் சில விஷயங்கள் அலுக்கவே அலுக்காது. அதில் கடலும் ஒன்று. கன்னியாகுமரி, மெரினா, பாண்டிச்சேரி போன்ற கடற்கரைகளை நான் பார்த்திருந்தாலும் ரோஷ்ணிக்கு இதுவே முதல் முறை. செமையாக எஞ்சாய் பண்ணினாள். நானும் தான். மின்னு மட்டும் கடலில் விளையாடாமல் அவள் அம்மாவுடன் மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாள். நாங்கள் அனைவரும் கால் நனைத்து வீடு திரும்ப மனமின்றி இருந்தோம்.

இருட்டத் துவங்கியதும் அங்கிருந்து கிளம்பி வீடு வந்தடைந்தோம். மாத்திரை போட்டுக் கொள்ளவில்லை. வழியில் ஒரு 7UP மட்டும் வாங்கிக் குடித்தேன். ஆனால் தலைவலி வந்து விட்டது. இரவு உணவு நான் தயார் செய்கிறேன் என்று மதியமே சொல்லியிருந்தேன். அதற்கு தேவையானப் பொருட்களை ராக்கி நடுவில் ஒரு இடத்தில் இறங்கி வாங்கினார்.  வீட்டுக்கு வந்தவுடன் அதற்கு தயார் செய்யத் துவங்கினேன். என்ன என்கிறீர்களா! சப்பாத்தியும் ஷாஹி பனீர் (பனீர் பட்டர் மசாலா) சப்ஜியும்….:)

நானும் ராக்கியும் ஆங்கிலமும், மலையாளமும், இந்தியும் கலந்து கட்டி பேசிக் கொண்டே இரவு உணவை இருவருமாக தயார் செய்தோம். வட இந்திய உணவுகளுக்கான செய்முறையை கேட்டு தெரிந்து கொண்டார். குழந்தைகளுக்கு பரிமாறி அவர்கள் சாப்பிட்டதும் நாங்களும் அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தோம். பிரமோத்தின் பெற்றோர் எங்களுக்காக அவர்கள் வீட்டில் விளைந்த சக்கப்பழங்களை (பலாப்பழங்கள்) கொடுத்தனுப்பி இருந்தார்கள். அதனையும் உண்டவுடன் அசதியாக இருந்ததால் தூங்கச் சென்றோம்.

நாளை வேறு சில இடங்களுக்கு செல்ல வேண்டுமே…..அது என்ன இடங்கள்? தெரிந்து கொள்ள காத்திருங்கள்…..:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதிவெங்கட்.

Thursday, February 21, 2013

அரிசி உடைசல் உப்புமா


அரிசி உப்புமா, குருணை உப்புமா, அரிசி உடைசல் உப்புமா என்று சொல்லப்படும் அனைத்துமே ஒன்று தான். எங்க வீட்டில் ரவை, சேமியாவில் செய்யப்படும் உப்புமாவுக்கெல்லாம் வேலையே இல்லை. பேச்சிலர்ஸ் டேஸில் ரவா உப்புமா சாப்பிட்டு அலுத்ததால் ரவா உப்புமாவே செய்யாதே என்று சொல்லியதால் செய்வதேயில்லை. சேமியாவும் அப்படித் தான்….:)

அரிசி உப்புமா என்றால் எல்லோருக்குமே இஷ்டம். அதுவும் வெங்கலப் பானையில் செய்து காந்தலோடு சாப்பிட்டால் ஆஹா! சிலர் குக்கரில் வைப்பார்கள். அதெல்லாம் இங்க நடக்கவே நடக்காது…:) எங்க அப்பாவுக்கு வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம், குருணை உப்புமா என்றால் உயிர்.

இங்கு நான் சொல்லப்போகும் செய்முறை என் மாமியார் வீட்டு முறைப்படி… ஒரு சிலர் வீட்டு வழக்கம் வேறு. இதிலயும் மாற்றங்கள் செய்வார்கள்.

தேவையானப் பொருட்கள்:-

அரிசி – 1 தம்ளர்
துவரம்பருப்பு – 1 கையளவு
கடலைப்பருப்பு – 1 கையளவு
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய்துருவல் – சிறிதளவு
நெய் - சிறிதளவு

தாளிக்க:-

கடுகு – ½ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
வரமிளகாய் – 2 (அ) 3
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 2 குழிக் கரண்டி

செய்முறை :-

கொடுக்கப்பட்டுள்ள அரிசி, துவரம்பருப்பு, மிளகு, கடலைப்பருப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு ரவை போல் பொடித்துக் கொள்ளவும். அரிசியில் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசறி வைத்து ஐந்து நிமிடம் கழித்து பருப்புகள், மிளகுடன் பொடித்தால் ஒன்று போல பொடிக்க வரும். எப்படி வசதியோ அப்படி செய்யலாம்.அடுப்பில் வெங்கலப் பானையை வைத்து எண்ணெய் விட்டுக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும். அடுத்து வரிசையாக கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, இரண்டாக கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை, இவற்றுடன் பெருங்காயம் சேர்க்கவும். பொன்நிறமாக வறுபட்டதும் தண்ணீர் விட வேண்டும். 1 தம்ளர் அரிசிக்கு 2 1/2 தம்ளர் தண்ணீர் விடலாம். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொதிக்கும் போது சிறிதளவு தேங்காய் துருவல் சேர்க்கவும். இது விருப்பம் தான்.தண்ணீர் கொதிக்கும் போது, அடுப்பை மிதமான தணலில் வைத்து, பொடி செய்த அரிசி ரவை கலவையை ஒரு கையால் போட்டுக் கொண்டே ஒரு கையால் கிளற வேண்டும். விட்டு விட்டால் கட்டி தட்டி விடும். கலவை தண்ணீருடன் சேர்ந்து கெட்டிப் பட்டதும், சரியான அளவு உள்ள மூடியை போட்டு மேலே ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சூடான இந்த தண்ணீரை சேர்த்து கிளற வசதியாக இருக்கும்.அவ்வப்போது மூடியை எடுத்து கிளறி விடலாம். மேலோட்டமாக கிளற வேண்டும். அடி வரை கிளறினால் அடிக்காந்தல் கிடைக்காது. அடுப்பும் குறைந்த தணலில் தான் இருக்க வேண்டும். நன்றாக வெந்தாலும் அடிக் காந்தலுக்காக சிறிது நேரம் விடவும். ஏறக்குறைய இருபது நிமிடங்களுக்கு பிறகு நமக்கு சுவையான அரிசி உப்புமா தயாராக இருக்கும். காந்தலானவுடன் மணமே உங்களை அடுப்பை நிறுத்த அழைக்கும். மேலே சிறிதளவு நெய் விட்டால் வாசனையாக இருக்கும். இதுவும் விருப்பமே.. ஐந்து நிமிடம் உலைப்பாற விட்டு விட்டு கபளீகரம் செய்யலாம்…:)

பின்குறிப்பு – 1  இதற்கு தொட்டுக் கொள்ளவென்று தனியாக எதுவும் கட்டாயமில்லை. சர்க்கரை, நெய், ஊறுகாய், கொத்சு, சாம்பார் என எதுவோடும் ஒத்துப் போகும்.

பின்குறிப்பு – 2 வெங்கலப் பானையில் செய்வதால், செய்த சிறிது நேரத்தில் சாப்பிட்டு விடவும். நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது.

பின்குறிப்பு – 3 அடுப்பை நிறுத்திய ஐந்து நிமிடங்கழித்து உப்புமாவை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு அடிக்காந்தலை பெயர்த்து எடுத்தால் வந்து விடும். கிரிஸ்பியாக பிரமாதமாக இருக்கும்.

பின்குறிப்பு - 4 எண்ணெய் கொஞ்சம் தாராளமாக சேர்த்தால் சுவையும் கூடுதலாகும்….:)என்ன நட்புகளே! நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து விட்டு கருத்துகளை தெரிவியுங்கள். இந்த ரெசிபியை நான் PASSION ON PLATE ஈவண்டிற்கு அனுப்புகிறேன்.


மீண்டும் சந்திப்போம்,

ஆதிவெங்கட்

Wednesday, February 20, 2013

கல்யாண சாப்பாடு!
சமீபத்தில் திடீரென அழைப்பு வர ஒரு சஷ்டியப்தபூர்த்திக்கு சென்றேன். உறவினர்களை பார்த்து பேசி விட்டுஅறிமுகப் படலங்கள் முடிந்தபின் காலைச் சிற்றுண்டி சாப்பிட அழைத்துச் சென்றார்கள். நேரமானதால் வேண்டாம் நேராக மதியம் சாப்பிடுகிறேன் என்றேன். வற்புறுத்தி அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார்கள். எல்லோரும் சாப்பிட்டு விட்டதால்நான் மட்டுமே பந்தியில். கிச்சடிஅல்வாசாம்பார்-வடை,ஊத்தப்பம்இட்லிசட்னிசாம்பார் என்று இருந்தது. எனக்கு வேண்டிய அளவு மட்டும் வாங்கி சாப்பிட்டேன். எல்லாமே நன்றாக இருந்தது. பொறுமையாக கேட்டு கேட்டு பரிமாறினார்கள்.

பின்பு மீண்டும் பேச்சு. அங்கு சென்ற பின் தான் தெரிந்தது எங்கள் குடியிருப்பில் இருக்கும் ஒருவரும் எனக்கு தூரத்து சொந்தம் என – குடியிருப்பில் பல முறை பார்த்தாலும் இது தெரியாதது ஆச்சரியம் தான். திருமண சடங்குகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்கெல்லாம் ஜூஸ் வந்தது. ஹோமம் முடிந்து தம்பதி பூஜை,திருமணம் என முடிந்ததும் அவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டேன். அடுத்து என்ன மதிய சாப்பாடு தான்….:))

மூன்றாவது பந்தியில் உறவினர்களுடன் சாப்பிட அமர்ந்தேன். வழக்கம் போல் உருளைக்கிழங்கு கறிபீன்ஸ் பருப்புசிலிஅவியல்பழப் பச்சடி,வெள்ளரிக்காய் தயிர் பச்சடிகொத்தமல்லி சாதம்பருப்பு வடைசாம்பார்,ரசம். வத்தக்குழம்புமோர்ஊறுகாய்அப்பளம் இவற்றுடன் சாதம்பருப்பு,நெய் – இது தான் மெனு :)

குழம்பு சாதம் முடிந்ததும் டிஸ்போஸபிள் டம்ளரில் பால் பாயசம்ரசம் சாதத்திற்கு பிறகு குலோப்ஜாமுன் (இதுவும் டம்ளரில் தான்) பின் மோர் சாதம் சாப்பிட்ட பிறகு எழுந்து கை அலம்பிய உடன் ஜில்லென்று ஐஸ்க்ரீம். கூடுதலாக இங்கும் குலோப்ஜாமூன் – வட இந்தியர்கள் போலஐஸ்க்ரீமுடன் குலோப்ஜாமூன் கலந்து சாப்பிடுவார்களே என இங்கும் அதை வைத்திருந்தார்கள். கடைசியாக பீடா தனித்தனியாக கவர் போட்டுஎப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சென்று போட்டுக் கொள்ளலாம். சமையல் மிகவும் அருமையாக இருந்தது. அதை விட சில விசேஷங்களில் அவசர அவசரமாக எதை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பார்க்காமல் சாதத்தை மேலே போடுவார்கள்,இல்லையென்றால் குழம்பு முடித்த உடன் மோரை விட்டு விடுவார்கள்,அதுவும் இல்லையென்றால் சாப்பிட்டு முடிக்கும் முன் இலையை எடுக்க துவங்கி விடுவார்கள். இது எதுவும் இல்லாமல் என்ன வேண்டும்என்ன சாப்பிட்டு முடித்தீர்கள்ரசம் விடணுமாமோர் விடணுமா எனக் கேட்டுபரிமாறியது என்னை மிகவும் கவர்ந்தது. எல்லாரையுமே கவர்ந்திருக்கும்.

சாப்பிட்டு முடித்த பின்னர் என் நெருங்கிய உறவினர் கூட சொன்னார்….. ”ஒரே ஒரு குறை தான் என்று” என்ன குறை என்று பதறிப் போய்க்கேட்டதற்கு ஒரு குறையுமே சொல்ல முடியவில்லையே, அது தான்குறை என்று  சொன்னார். :)

இவர்களின் முகவரி:-

SRI SHIVA VISHNU CATERING
K.S.VAIDYANATHAN @RAVI
PADMA VILAS, 30, BHARATHIYAR STREET,
TOWN STATION ROAD TRICHY – 2
PH.NO. 2703507
CELL.. 9443754044தாம்பூலம் பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். தாம்பூலத்திலும் ரவிக்கைத் துணிக்கு பதிலாக அழகான ஒரு மண்டபத்தில் தவழும் கிருஷ்ணன் இருந்தார். நல்ல விஷயம் தான். யாரும் அந்த துணிகளை தைத்துக் கொள்வதில்லை. சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் அதற்கு பதிலாக இது மிகச்சரியானது.

சரி! என்னுடைய இந்த பதிவை பற்றி கீதா மாமியிடம் யாரும் சொல்லி விடாதீர்கள். ஏனென்றால் அவர்கள் வீட்டுக்கு அருகில் தான் இந்த மண்டபம்….:)) ரோஷ்ணி பள்ளியிலிருந்து வரும் நேரம் ஆகி விடுமென்பதால் மாமியை பார்க்காமல் வந்து விட்டேன்….:))


மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.