Wednesday, January 30, 2013

வந்தே மாதரம்…… ஜெய் ஹிந்த்!

எங்கள் குடியிருப்பில் குடியரசு தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடியரசு தினத்துக்கு முந்தைய வாரம் ஞாயிற்றுக்கிழமை, சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் காலையில் ஆரம்பமாயின. இதை எதிர் ப்ளாட்டில் குடியிருக்கும் தோழி ஒருவரும், அவரது கணவரும் இணைந்து நடத்தினார்கள்.பம்பரம் விடுதல், ஓட்ட பந்தயம், ஸ்லோ சைக்கிளிங், தவளை ஓட்டம், வாத்து நடை, எலுமிச்சை ஸ்பூன், கிளிப்பை கயிறில் மாட்டுவது, ஒரு தட்டில் கொட்டியுள்ள பொட்டுகளை பிய்த்து இன்னொரு தட்டில் ஒட்டுவது, கோல போட்டிகள் , மியூசிக்கல் சேர் என வயது வாரியாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.மதியத்துக்கு மேலே பெரியவர்களுக்கான கோல போட்டிகள், கயிறு இழுத்தல், கண்ணைக் கட்டிக் கொண்டு சுவாமி முகத்தில் பொட்டு வைப்பது, அந்தாக்க்ஷரி, மியூசிக்கல் சேர், கைக்கு கிடைக்கும் சீட்டில் எழுதி இருப்பது போல் செய்தல், நடனம் என குடியிருப்பே களை கட்டியது. இதை தொடர்ந்து குடியரசு தினத்தின் முதல்நாள் எல்லார் வீட்டில் இருந்தும் இருக்கைகளை கொண்டு வரச் சொல்லி, நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதலில் இறை வணக்கம், தேசபக்தி பாடல்கள், சமையல் போட்டிகள், மாறுவேட போட்டிகள், பெரியவர்களுக்கான நடனம், பாட்டு, பரிசளிப்பு விழா என அமர்க்களப் பட்டது. அனைவரும் பங்குபெற்று அன்றைய நாளை இனிதே கழித்தோம்.எங்க வீட்டு வாண்டு சட்டுனு யாரிடமும் பேசக் கூட மாட்டாள். அவளே விருப்பப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்வதாக சொல்ல, கலந்து கொள். ஜெயிப்பது முக்கியமல்ல, உன்னால் என்ன முடியுமோ செய் என்றேன். ஐந்து போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாள். எலுமிச்சை ஸ்பூனில் இரண்டாம் பரிசும், பொட்டு பிய்த்து தட்டில் ஒட்டுவதில் மூன்றாம் பரிசும் பெற்றாள். எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சி தான்.


தேசபக்தி பாடல்களுக்காக நம் நாட்டுக்கொடியை பற்றி நான் பள்ளிப்பருவத்தில் கற்ற ஒரு பாடலை சொல்லிக் கொடுத்திருந்தேன். அவளும் இரண்டு நாட்களில் கற்றுக் கொண்டு விட்டாள்.  ராதையாக கண்ணனை பற்றிய ஒரு பாடலும் தேர்வு செய்து வைத்திருந்தாள். ஆனால் அங்கு நின்றவுடன் என்ன நினைத்தாளோ! பெயரை மட்டுமே சொன்னாள்….:) இவளுடன் பங்குபெற்ற குழந்தைகள் ஒன்று கிருஷ்ணனாகவும், இன்னொன்று நேதாஜியாகவும், மற்றவர் விவேகானந்தராகவும் மாறி அழகாய் தோற்றமளித்தனர். அதிலும் நிகழ்ச்சியை நடத்தும் தோழியின் மகன் நேதாஜியாக மழலை மொழியில் “நான் தான் நேதாதி சுபாத் தந்தர போஸ், நான் தான் ஆணுவத்தை உருவாக்கியவன். தெய் ஹிந்த்” என்று சொன்னது பிரமாதமாக இருந்தது. பங்குபெற்ற நால்வருக்குமே பாரபட்சமில்லாமல் முதல் பரிசு தந்து கவுரவித்தார். குழந்தைகள் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம். பரிசுகளை உடனே பிரித்து பார்த்து சந்தோஷப்பட்டனர்.

எங்கள் குடியிருப்பில் இருக்கும் மாமி, இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. ரோஷ்ணி ராதையாக வேடமிட தான் உதவுவதாக சொல்லி, வந்து தலைபின்னி விட்டு அலங்காரம் செய்து உதவினார். அக்கம் பக்கம் இருந்த கல்லூரியில் படிக்கும் பெண்களும் உதவவே, பதட்டமில்லாமல் சமையல் போட்டிக்கும் தயார் செய்து ரோஷ்ணியையும் தயார் செய்ய என்னால் முடிந்தது. சிறுமியர் நடனமாட, தானும் ஆடுகிறேன் என்று சொல்லி அதிலும் பங்கேற்றாள். ஆகவே இதுவே எனக்கு பெரிய சந்தோஷம்…..

நடனம் ஆடிய பெரியவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் தரப்பட்டது. அடுத்து மகளிர் தினத்தையொட்டி நிகழ்ச்சிகள் நடத்தப் போவதாகவும் சொல்லிக் கொண்டுள்ளனர். நல்லது நடக்கட்டும்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.


18 comments:

 1. //போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாள். எலுமிச்சை ஸ்பூனில் இரண்டாம் பரிசும், பொட்டு பிய்த்து தட்டில் ஒட்டுவதில் மூன்றாம் பரிசும் பெற்றாள். எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சி தான்.//

  எங்களுக்கும் மகிழ்ச்சியே. செள. ரோஷ்ணிக்கு எங்கள் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. பிரமாதம்! ரோஷ்ணிக்கும் ரோஷ்ணி அம்மாவுக்கும் பாராட்டுக்கள்! ஏற்பாடு செய்தவர்களையும் பாராட்ட வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குதூகலத்தையும் அக்கம் பக்கத்தினரிடையே மன நெருக்கத்தையும் தர வல்லது.

  ReplyDelete
 3. குடியிருப்பே களை கட்டிய
  குடியரசு தினத்தில் ரோஷ்ணி பரிகள் பெற்றதற்கும் உற்சாகமாகக் கலந்துகொண்டதற்கும் வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. ரோஷ்ணிக்குப் பாராட்டுகள்..

  ReplyDelete
 5. நல்ல மகிழ்ச்சியான பகிர்வு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. romba nalla enjoy panni irukeega.. ungal veethu vaanduku vaalthukal.. kutties ellarum super...

  ReplyDelete
 7. படங்களுடன் பதிவு அருமை
  கொண்டாட்டத்தில் நாங்களும்
  பங்கு கொண்ட திருப்தி.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அடடே... ரோஷ்ணிப் பொண்ணு பரிசுல்லாம் வாங்கிச்சா... சந்தோஷம்œ! இந்த மாதிரி விழாக்கள்ல எல்லாரும் உற்சாகமா பங்கெடுத்துக்கறதும், குழந்தைங்க பங்களிக்கறதும் ரொம்ப ரொம்ப நல்ல விஷயம். குழந்தைகளுக்கு எல்லாரோடயும் பழகற தன்மை வரும். கூச்ச ஸ்பாவம் விலகிடும். அடுத்தடுத்த போட்டிகள்ல பாருங்களேன்... ரோஷ்ணி இன்னும் கலக்கப் போறா... என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. ரோஷணிக் குட்டி வெகு விரைவில் அப்பா அம்மாவுக்கு இணையாக எல்லாவற்றிலும் சிறந்து விளங்கப் போகிறாள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி முதல் அச்சாரம்!

  சமையல் போட்டியில் என்ன செய்து அசத்தினீர்கள்? விரைவில் செய்முறை போடவும்.

  பரிசு பெற்ற ரோஷ்ணிக்கும், பாட்டு சொல்லிக் கொடுத்து தயார் செய்த உங்களுக்கும், பரிசு வாங்கியதைக் கண்டு உள்ளம் பூரித்த திரு வெங்கட்டிற்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. படிக்கும்போது மகிழ்ச்சியாகவும்,ஜாலியாகவும் உள்ளது ,பரிசு கிடைக்கிறதோ இல்லையோ வாய்ப்பு கிடைக்கும்போது இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டும் என்பது எனது விருப்பமும்.

  ReplyDelete
 11. ரோஷ்ணி போட்டியில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
  ரோஷ்ணிக்கு ராதை அலங்காரம் அழகாய் இருக்கிறது.

  குடியிருப்புகளில் இப்படி விழாகக்ள் நடப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.
  மகளிர் தினத்திலும் பங்கு பெற்று பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. குடியிருப்புகளில் இப்படி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது ரொம்பவே நிறைவாக இருக்கும். உங்க பதிவு படிச்சதில் நாங்களும் கலந்துகிட்டது போல உற்சாகமாக இருந்தது. அம்மாவும் பெண்ணும் பரிசுகள் பெற்றதுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. ரோஷ்ணி க்கு எங்கள் வாழ்த்துகளைச் சொல்லுங்க..:)

  ReplyDelete
 14. அன்பு ஆதி, நீங்கள் கொண்டாடி இருக்கும் விதம் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது,.
  ரோஷ்ணி குட்டி அழகா இருக்கிறாள். இந்த மாதிரி ஒற்றுமையாகக் கொண்டாடி இருப்பது

  அழகு. ஜெய் ஹிந்த்.

  ReplyDelete
 15. வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.... இந்த விழாவினை ஏற்பாடு செய்த தோழியிடம் இந்த பதிவினை காண்பித்து தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தேன். மிகவும் மகிழ்ந்தார். அக்கம் பக்கம் உள்ளோரும் மகிழ்ந்தார்கள்.

  அடுத்து மகளிர் தின பதிவும் விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

  ReplyDelete
 16. ஆஹா... அட்டகாசம்!!!! இப்பதான் இந்தப்பதிவைப் பார்த்தேன்.

  ரோஷ்ணிக்கு இனிய பாராட்டுகள்!

  ஊக்குவித்த உங்களுக்கும்தான்!

  ReplyDelete
 17. டீச்சர் - பாராட்டுகளுக்கு நன்றிங்க டீச்சர்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…