Wednesday, January 23, 2013

கோவை – கேரளா சுற்றுலா 2 (மருதமலை மாமணியே….)


என்ன! எல்லோரும் வண்டில ஏறிட்டீங்களா? சென்ற பகுதியில் சொன்னது போல இப்போ நாம கோவையில் புதிதாக உருவாகியிருக்கும் ஒரு கோவிலுக்குப் போகலாம்.

பயணம் செய்வது என்றாலே எனக்கு ஒரு தயக்கமும், பயமும் எப்போதுமே ஏற்படும். இன்றும் அப்படித்தான். சாப்பிட்டு விட்டு கிளம்பினாலும் அதே தான், ஒன்றுமே சாப்பிடாமல் வந்தாலும் இதே தான். எனக்கு என் மேலேயே கோபமாக வரும். நம்மால் கூட வர்றவங்களுக்கும் சங்கடமாகி விடும். டிரிப்பே வேண்டாம் என்று தோன்றிப் போய் விடும். என்ன பிரச்சனை என்கிறீர்களா? வண்டியில் ஏறி உட்கார்ந்த உடனேயே பிரட்டல், வாந்தி தான். காலையில் சாப்பிட்டு விட்டு ஒரு டீயையும் வேறு குடித்தேன் என்று சொன்னேனா…. அரை மாத்திரையும் போட்டுக் கொண்டு தான் ஏறினேன். முழு மாத்திரை போட்டால் தூக்கம் வந்து விடும். போகும் வழியில் ஒரு 7UP வாங்கிக்கலாம் என்று சொன்னேன். … இப்போதெல்லாம் பயணம் என்றாலே இதில்லாமல் நானில்லை…. இது மாதிரி பானங்கள் உடல்நலனுக்கு கெடுதல் என்று தெரிந்திருந்தும் வேறு வழி தெரியவில்லை. யாராவது என்னைப் போல் இருந்தால், உபாயம் சொல்லுங்களேன்…..ப்ளீஸ்…:) 


கோவை திருப்பதி - ஒரு தோற்றம்....


மன்னிம்மா கவுண்டம்பாளையத்தில் ”கோவை திருப்பதி” புதிதாக உருவாகி வருகிறது. நல்லா இருக்கு. முதலில் அங்கு போய் விடுங்கள் என்று சொல்லவே டிரைவரிடம் சொன்னோம். அவரும் கொங்கு தமிழில் ”அந்த கோவில் எங்க வீட்டுக்கு பக்கத்தில் தான் உள்ளது, இருங்க என் மனைவியிடம் எத்தனை மணி வரை கோவில் திறந்திருக்கும் என்று கேட்கிறேன்” என்றார். விசாரித்து விட்டு, ”முதலில் அங்க போய்ட்லாங்கண்ணா….” என்று சொல்லவே புறப்பட்டோம்.

கவுண்டம்பாளையம் தாண்டுவதற்குள்ளாகவே ரோஷ்ணி இருமுறை ”அப்பா வாந்தி வருதுப்பா” என்றாள். ஆனால் வெறும் பிரட்டல் தான். அடுத்து கோவில் நெருங்குவதற்குள் எனக்கு முடியவேவில்லை. இறங்கி வாந்தி எடுத்து வயிற்றை காலி செய்து விட்டு தெளிவாகி விட்டேன். டிரைவர் அருகிலிருந்த கடையில் ஸ்பிரைட் வாங்கி வந்து தந்தார். கோவிலை சென்றடைந்தோம். சற்றே ஒதுக்குபுறமாக இருந்த கோவிலின் வெளியே பெருமாளின் ஊஞ்சல் இருந்தது. உள்ளே எல்லா சன்னிதியும் திரை போடப்பட்டு கம்பிக் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. டிரைவர் அவர் மனைவியிடம் மீண்டும் விசாரிக்க அவர்கள் இப்போ தான் கோவிலுக்கு வந்து விட்டு சென்றதாகவும் சுவாமியை பார்த்ததாகவும் சொல்லவே, சரி நமக்கு இன்னும் நேரம் வரவில்லை. அவனே அழைப்பான் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.


மருதமலை முருகையாவுக்கு ராஜகோபுரம்...

அங்கிருந்து நேரே மருதமலை சென்றோம். ஆமாங்க மலைக்கோவில் என்று குறிப்பிட்டிருந்தேனே அது இங்கு தான். ஆனா பயணத்தின் புது திட்டமாக இன்னொரு மலைக்கோவிலுக்கும் சென்றோம்…. மருதமலை  என்றவுடன் அப்பா அம்மாவுடன் வந்த நினைவுகளும், கல்லூரி தோழிகளுடன் ஒருமுறை வந்த நினைவும், கணவரும் நானும் திருமணமான அந்த வருடத்திலேயே ஒரு முறை வந்ததும் தவறாமல் நினைவுக்கு வந்து சென்றது. அப்போ மேலே வரை மினி பேருந்தில் சென்று விட்டு வரும் போது படிகளில் இறங்கியே வந்து விட்டோம். போகும் வழியிலேயே ரோஷ்ணியும் என்னைப் போலவே தன் வயிற்றை காலி செய்து கொண்டாள்.

மலை மேலே வரை காரில் சென்று விட்டோம். செருப்புகளை காரிலேயே விட்டு விட்டு சுவாமியை தரிசனம் செய்ய கிளம்பினோம். முருகா கார்த்திகேயா, கந்தா, வடிவேலா, சண்முகா என்று அவனை அழைத்துக் கொண்டே படிகளை ஏறி கடந்து உள்ளே சென்றோம். ராஜகோபுரம் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கிறது. தரிசன சீட்டு வாங்க என்னவர் செல்ல நானும் ரோஷ்ணியும் சன்னிதிக்கு முன்பு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தோம். பின்பு வரிசையில் சென்று உள்ளே விபூதி அலங்காரத்தில் சுப்ரமணியனை கண் குளிரக் கண்டோம். பத்து பத்து பேராக கருவறை முன்பு அமர சொல்கின்றனர். பின்பு தீபாராதனை. அடுத்து பத்து பேர். நல்ல அமைப்பு. எல்லோராலும் நிதானமாக நன்கு தரிசனம் செய்ய முடியும்.


ஒழுங்கா ஃபோட்டோ புடிக்கணும்... இல்ல அளுதுடுவேன்!

வெளியே வந்து ஒரு பிரதட்சணம் செய்தோம். அங்கு ஒரு பெண் குழந்தை சின்னஞ்சிறு பாவாடை சட்டையில் அழகாக இருந்தது. என் கணவர் புகைப்படமெடுக்க அழகாக போஸ் கொடுத்தது. ஒரு இடத்தில் அமர்ந்தோம். அருகில் ஒரு தம்பதியினர், டிஸ்போஸபிள் டம்ளர்களில் சர்க்கரை பொங்கலை ஸ்பூன் போட்டு ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு கன்றுக்குட்டி ஒன்று வரவே அந்த கணவர் கன்றிடம் ”என்னடா சர்க்கரை பொங்கல் வேண்டுமா? சூடாக இருக்குடா” என்றார். அது அவரிடமே நிற்க கையில் கொஞ்சம் எடுத்து ஊதி விட்டு கையில் வைத்து கன்றிடம் கொடுத்தார். அது சாப்பிட்டு விட்டு அவர் மீதி மோதியது. அவர் மனைவி அலறி ”ஏன் மாமா! உங்களுக்கு ஏன் இந்த வேலை. தேவையா இது எழுந்து வாங்க” என்று அலறினார்.


மருதமலை

மலை மேலிருந்து கோவையின் அழகை என்னவர் புகைப்படங்கள் எடுத்து தள்ளினார். இறங்கி காரைத் தேடி வந்தோம். டிரைவர், ”என்னங்ணா சாமி பார்த்தீங்களா? போட்டோ எடுத்தீங்களா?” என்று விசாரித்தார். அப்படியே வளைவுகளில் இறங்கி கீழே வந்தோம். டிரைவர் அடுத்து எங்கே போகணும் என்று கேட்கவே நாங்கள் பதிவர் இருக்கும் இடத்தை சொன்னோம். அவர் இங்கே அருகில் இன்னொரு மலைக்கோவில் இருக்கு. அதுவும் சுப்ரமணியர் கோவில் தான். அங்கே போயிட்டு போகலாம். போகாமல் அப்புறம் மிஸ் பண்னிட்டோமேன்னு நினைப்பீங்க, அதனால் போகலாம் என்றார். சரி என்று பயணப்பட்டோம்…..

அந்த மலைக்கோவில் என்ன? பதிவரை சந்தித்தோமா? அடுத்த பகிர்வில்……அதுவரை கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க……:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


29 comments:

 1. றோஷ்ணியம்மா,

  வரவர சஸ்பென்ஸ் கூடிக்கிட்டே போகுதே:-))))

  எனக்கும் பஸ் பயணம் என்றால் இந்த உவ்வே தான்.

  கடல்பயணம் என்றாலும் இதே கதிதான்:(

  ReplyDelete
 2. ஆஹா டூரை ஸ்பாயில் செய்யுமே இது.எனிவே அதையும் தாங்கி டூர் போயாகணுமே.எலுமிச்சை பழத்தை முகர்ந்தால் வாந்தி வராது என்பார்களே.

  ReplyDelete
 3. அன்புள்ள ஆதி, அடுத்து எங்க போயிருப்பீங்க என்று எனக்குத் தெரியும், ஆனா சொல்லி படிக்கறவங்க சஸ்பென்ஸை ஸ்பாயில் பண்ண விரும்பலை! ;) :)

  அ---வி கோயில் எங்க ஃபேவரிட் கோயில். எப்ப ஊருக்குப் போனாலும் ஒரு முறையாவது அங்கே போகாம வரமாட்டோம். கோயிலுக்குப் போகும் வழியே செங்கல் சூளைகளுடன் ரொம்ப அழகா இருக்கும். பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோயிலுக்குப் போனீங்களா? :)

  பயணத்தில் வாந்தினா கஷ்டம்தாங்க. மாத்திரை-எலுமிச்சைப் பழம்தான் எனக்குத் தெரிந்தது.

  பி.கு. பேச்சலர் ஈவன்ட் டைம்ல உங்க தக்காளி தோசை ரெசிப்பி பார்த்து ஒரு முறை செய்தேன். ரெசிப்பிக்கு நன்றி!

  ReplyDelete
 4. மாதத்தில் ஒரு முறையாவது என் கல்லூரியில் இருந்து ஒரு குரூப் மருதமலை போய் வருவாங்கநானும் எப்பவாவது பொழுது போக்காக உடன் போய் வருவதுண்டு,பஞ்சாமிர்தம் வாங்கினீங்களா? அங்கு விற்கும் நல்லாயிருக்கும்.,மருதமலை ரூட்டில் தான் எங்க பல்கலைக்கழகம் இருக்கு,பொட்டானிகல் கார்டனையொட்டி எங்க ஹாஸ்டல்..நினைவுகளை ஆதி கிளப்பி விட்டுட்டீங்க,இந்த வருட விடுமுறையிலாவது கல்லூரி சென்று வரும் வாய்ப்பு இருக்கான்னு பார்க்க வேண்டும்.என்னுடன் பயின்ற தோழிகள் பலர் அங்கு பணியில் உள்ளனர்..:)

  ReplyDelete
 5. பயணக்கட்டுரையில் நல்ல சுவை. பாராட்டுக்கள்.

  //அங்கு கன்றுக்குட்டி ஒன்று வரவே அந்த கணவர் கன்றிடம் ”என்னடா சர்க்கரை பொங்கல் வேண்டுமா? சூடாக இருக்குடா” என்றார். அது அவரிடமே நிற்க கையில் கொஞ்சம் எடுத்து ஊதி விட்டு கையில் வைத்து கன்றிடம் கொடுத்தார். அது சாப்பிட்டு விட்டு அவர் மீதி மோதியது. அவர் மனைவி அலறி ”ஏன் மாமா! உங்களுக்கு ஏன் இந்த வேலை. தேவையா இது எழுந்து வாங்க” என்று அலறினார். //

  ;)))))

  தொடர்ந்து எழுதுங்கோ.

  ReplyDelete
 6. டெல்லியிலிருந்து கோவைக்கு வந்தது பொங்கலையும் கொண்டாடிவிட்டு கோயில் எல்லாம் பார்த்துட்டீங்க போல. அருமையான பதிவுகள்

  ReplyDelete
 7. இதையும் பாருங்க
  http://kaviyazhi.blogspot.com/2013/01/blog-post_529.html

  ReplyDelete
 8. யாராவது என்னைப் போல் இருந்தால், உபாயம் சொல்லுங்களேன்…..ப்ளீஸ்…:) //

  ஆதி நான் இதை உங்களுக்காக ’பெட்டகம்’ என்ற வலத்தளத்தில் இருந்து எடுத்து கொடுத்து இருக்கிறேன்.

  பயணத்தின் போது வாந்தி இல்லாமல் இருக்க தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.
  என்று போட்டு இருந்தது.
  அப்படி செய்து பாருங்கள். பயணங்களை சுகமாய் அனுபவியிங்கள். ரோஷிணிக்கும் கொடுங்கள்.
  பயணத் தொடர் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 9. மே மாசம் நானும் கந்தனை தரிசனம் செஞ்சேன்.

  பயணப் பிரட்டலுக்கு பெருசா எதுவும் தெரியாது.

  தொடர்கிறேன்

  ReplyDelete
 10. நானும் உங்ககூடவே ட்ராவல் பண்ற மாதிரி ஒரு ஃபீலிங். அவ்வளவு எளிமையா சுவாரஸ்யமா சொல்றீங்க. அடுத்த மலைக்கோயிலுக்கும் பதிவர் சந்திப்புக்கும் உங்களுடன் வரத் தயாராய் நான்!

  ReplyDelete
 11. ஆஹா! பயண கட்டுரை அருமை, நான் லேட்ட வந்து சேர்ந்துகிட்டேன், இந்த பாகத்தை முதலில் படித்துவிட்டு மேலும் உள்ள பாகங்களை அப்பறம் படிக்கிறேன்.

  ReplyDelete
 12. //வேறு வழி தெரியவில்லை. யாராவது என்னைப் போல் இருந்தால்//

  நானும் உங்க கேஸ்தான் - ஸேம் ப்ளட்!! எங்கே கார்/வேன்ல கிளம்பினாலும், பிளாஸ்டிக் கேரி பேக் அஞ்சாறாவது எடுத்துக் கைப்பையில் வச்சுக்கிறதுதான் மொத வேலை!! (ரோட்டோரமா எடுக்கிற தர்மசங்கடமும் வேண்டாமேன்னுதான். மேலும், வழியில் நிறுத்தச் சொன்னா எங்கூட்டுக்கார் முறைப்பார்!!)

  நிற்க. இப்பல்லாம் இஞ்சி முரப்பாதான் துணை எனக்கு இந்த விஷயத்தில். இஞ்சி முரப்பா ஒரு சின்ன துண்டு எடுத்து வாயில அதக்கிகிட்டே வந்தா, குமட்டல் மாறும். வெறும் இஞ்சியும் உதவும். அல்லது நல்ல மிளகு. ஏதாவது நல்ல காரமா வேணும் எனக்கு, அவ்ளோதான். உங்களுக்குச் சரிவருதான்னு முயன்று பாருங்க.

  ReplyDelete
 13. பிரயாணங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், பிரயாணத்துக்குமுன் அரை வயிறு மட்டுமே, அதுவும் எண்ணெய், மசாலா கலக்காத, இன்னும் சொல்லப் போனால் மோர் சாதமாக, மட்டுமே பிரயாணம் செய்யலாம். நல்ல முன்னெச்சரிக்கை இது.

  புளிப்பு மிட்டாய் எடுத்துக் கொள்வார்கள், கையில் வைத்துக் கொள்வார்கள். ஆனாலும் நம்ம ஊர் காய்ந்த நார்த்தங்காய்க்கு ஈடு இணை ஏது? அதை வாயில் அடக்கிக் கொண்டால் போதுமே... அப்புறம் புளிப்பு+காரமாக எலுமிச்சை ஊறுகாய்!தூக்கிப் போடும் பின் சீட்களில் இல்லாமல், முன் வரிசையும் இல்லாமல் மூன்றாவது வரிசையில்-நடு வரிசையில் அமர்ந்து பிரயாணம் செய்யலாம். குறிப்பாக டயர்களுக்கு மேலுள்ள சீட்களில் அமராமல்!

  பயணக் கட்டுரை ரசிக்க வைத்தது. பொங்கல் சாப்பிட்ட மாடு முட்டியது ஏனோ? சூடோ?

  ReplyDelete
 14. மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்...

  மருதமலை பதிவு அருமை.வாந்தி பிரச்சனைக்கு இஞ்சி முரப்பா ஒதுக்கிக்கலாமே,நல்லா கேக்கும்.டேஸ்ட்டும் நல்லாருக்கும் உடம்புக்கும் நல்லது.

  இம்புட்டு சஸ்பென்ஸோட ஒரு அப்பாவி பதிவரா?

  ReplyDelete
 15. சஸ்பென்ஸ் ! சஸ்பென்ஸ் !!

  ReplyDelete
 16. ”ஒழுங்கா ஃபோட்டோ புடிக்கணும்... இல்ல அளுதுடுவேன்!”

  அப்படியாத் தெரியுது! எனக்கு என்னவோ “ஒழுங்கா ஃபோட்டோ புடிக்கணும்... இல்ல அழவச்சுடுவேன்!”ன்னு சொல்ற மாதிரி இருக்கு.

  ReplyDelete
 17. வணக்கம்...

  கோவை வந்ததில் மிக்க மகிழ்ச்சி...

  பிரபல பதிவர்கள் பிரபல பதிவர்களை மட்டும் சந்திப்பீங்க போல...

  என்னைப்போல சிறு பதிவர்களும் கோவையில் இருக்கோமுங்க... நீங்கள் வந்தது தெரிந்திருந்தால் நாங்களும் சந்தித்திருப்போம்... அப்படியே ரெண்டு பதிவையும் தேத்தி இருப்போம்...

  சீக்கிரம் சொல்லுங்க சஸ்பென்ஸ் சஸ்பென்சாவே இருக்கு...

  ReplyDelete
 18. படங்களுடன் பதிவு அருமை
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. சுவாரசியமான அனுபவங்கள்.
  //அந்த மலைக்கோவில் என்ன? பதிவரை சந்தித்தோமா? அடுத்த பகிர்வில்……அதுவரை கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க……:)//

  தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 20. இன்னும் சஸ்பென்ஸ் தொடருகிறதே!அதை தெரிந்து கொள்ளாமல் ஓய்வு எடுக்க முடியாது போலிருக்கே!

  கோவை திருப்பதி சேவை கிடைத்ததா?

  அடுத்த பகுதி எப்போ? எப்போ? எப்போ?


  ReplyDelete
 21. எனக்கும் இதே தலைசுற்றல்/வாந்தி பிரச்னை: நான் காரை ஓட்டினால் வராது. ஆனால், எனக்கும் என் இரண்டாவது வாண்டுக்கும் இருக்கும் பிரச்னை இது. இஞ்சி மொரப்பா, காய்ந்த நார்த்தங்காய் இவற்றை வாயில் அதக்கிக் கொள்ளலாம். உடலுக்குக் கேடு இல்லை. கிடைக்கலை என்றால், புளி மிட்டாய்/எலுமிச்சை மிட்டாய் வாயில் அதக்கலாம்; ஆனால் பற்களுக்கு உகந்தது இல்லை.

  கார்/வேன் வண்டியில் முடிந்தவரை முதல்/இரண்டாவது வரிசையில் அமரவும். சக்கரத்தின் மேல் உட்கார வேண்டாம். ஏற்றத்தாழ்வு/வளைவு அதிகமுள்ள ரோடு என்றால், முடிந்தவரை கண்ணைமூடிக்கொண்டு ரிலாக்ஸவும்; வழியைப் பார்ப்பதுகூட தலைச்சுற்றலைக் கொடுக்கக்கூடும்.

  ReplyDelete
 22. டீச்சர் - நீங்களும் இதே கேஸ் தானா? சேம் பின்ச்! நன்றிங்க டீச்சர்.

  அமுதா கிருஷ்ணா - எலுமிச்சை குறிப்புக்கு நன்றிங்க.

  மஹி - உங்க பேர்ல எனக்கு சென்னைல ஒரு தோழி இருக்காங்க...:) தக்காளி தோசை செய்து பார்த்ததற்கு நன்றிங்க.

  ஆசியா உமர் - பஞ்சாமிர்தம் எல்லாம் வாங்கிக்க தோணலைங்க. நான் இருந்த நிலைமைல...:)
  உங்க கல்லூரியில் தான் எங்கப்பாவின் மாமா சயிண்டிஸ்ட் ஆக இருந்து ரிடையராகியிருக்காங்க... மிக்க நன்றிங்க.

  வை.கோபாலகிருஷ்ணன் சார் - மிக்க நன்றி.

  கவியாழி கண்ணதாசன் சார் - முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  கோமதிம்மா - நெல்லிக்காய் குறிப்புகளை எங்களுக்காக தேடி தந்ததற்கு நன்றிம்மா.

  புதுகைத் தென்றல் - மிக்க நன்றிங்க.

  கணேஷ் சார் - மிக்க நன்றி.

  செம்மலை ஆகாஷ் - மிக்க நன்றிங்க.

  புவனா - தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 23. ஹுசைனம்மா - சேம் ப்ளட்! ஆக்ரா பயணத்தின் போது எடுத்துக் கொண்ட கேரி பேக்கெல்லாம் தீர்ந்து போய் வழியில் தாபாவில் வாங்கியெல்லாம் பயன்படுத்தினேன். நம்ம வரலாறு பெரிசுங்க...:))

  உங்க குறிப்புகளை முயற்சி செய்து பார்க்கிறேன். சமீபத்தில் ரயில் பயணத்தில் இஞ்சி எடுத்துக் கொண்டேன். பசியை பயங்கரமா கிளப்பி விட்டு விட்டது...:))

  இராஜராஜேஸ்வரி மேடம் - மிக்க நன்றிங்க.

  ஸ்ரீராம் சார் - குறிப்புகளுக்கு நன்றி. மாடு முட்டியது சூடாக இருந்ததால் தான்.

  ராஜி - இஞ்சி முரப்பா வாங்கி உபயோகிக்கிறேன். அப்பாவி பதிவர் தான்...:)

  மோகன்குமார் சார் - சள்பென்ஸ் தான்...:))

  ஈஸ்வரன் சார் - ஆமாமா! நீங்க சொல்ற மாதிரி தான் சொல்லிச்சு.... அதெல்லாம் வெளியில சொல்ல முடியுமா...:)

  சங்கவி - நேரம் இல்லைங்க.அடுத்த முறை வந்தா சொல்றேங்க...சஸ்பென்ஸ சொல்லியாச்சு பார்த்தீங்களா?

  மாதேவி - மிக்க நன்றிங்க.

  ரமணி சார் - மிக்க நன்றி.

  ராம்வி - மிக்க நன்றி.

  ரஞ்சனிம்மா - கோவை திருப்பதி தான் தரிசனம் கிடைக்கலையே.... அடுத்த முறை தான். சள்penச் சொல்லியாச்சு...:)

  Anuja Kekkepikkuni - நானும் இப்போ அதை தான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். காரை ஓட்டினால் வராதென்று...:) அதே தாங்க. வண்டியில் ஏறியதும் கண்ணை மூடிக் கொண்டு ரிலாக்சாக இருப்பது தான்...இப்போ கடைபிடிக்கிறேன்.

  ReplyDelete
 24. எல்லாரும் மருந்து சொல்லி இருக்காங்க. ஆகையால் புதுசாச் சொல்ல ஒண்ணும் இல்லை. எலுமிச்சைச்சாறு உப்புப் போட்டுக் குடித்தாலும் வாந்தி வராது. அல்லது எலுமிச்சை ஊறுகாய், இஞ்சி சேர்த்ததும் வாயில் போட்டுக்கலாம். கிளம்புவதற்குக் குறைந்தது ஒன்றரை மணி நேரம் முன்பே சாப்பிட்டு விடுங்கள். அல்லது ப்ரெட், வாழைப்பழம், மாதுளம்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராக்ஷை போன்ற பழங்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பசிக்கையில் கொஞ்சம் போலச் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆரஞ்சு நல்லதொரு மருந்து. வாந்தியும் நிற்கும், பசியும் எடுக்காது.

  ReplyDelete
 25. கீதா மாமி - நீங்க சொல்லியிருக்கற பழங்களையும், இஞ்சி போன்றவற்றையும் இனிமே முயற்சி செய்யறேன்.  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…