Tuesday, January 15, 2013

ரங்கனைக் கண்டேன் – 2
இரண்டு மணிநேர காத்திருப்பிற்குப் பின் ஒரு வழியாக மோகினி அலங்காரத்தை கண்டு வந்தேன் என்று சென்ற பகுதியில் சொன்னேன் அல்லவா. அடுத்த நாள் வைகுண்ட ஏகாதசி ஆச்சே. கடந்த பத்து வருடத்தில் வைகுண்ட ஏகாதசியின் போது ஸ்ரீரங்கத்தில் இருப்பது இது தான் முதல் முறை. காலையில் எழுந்து குளித்து தயாரானோம். சரி சொர்க்க வாசல் படி மிதிப்பதற்கு செல்லலாம் என்று வடக்கு வாசலுக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போ ஒரு வரிசை தெற்கு வாசலை நோக்கி சென்று கொண்டிருந்தது. காவல் துறையினரிடமும், உள்ளூர்வாசிகளிடமும் விசாரித்ததற்கு, அது தான் சொர்க்க வாசல் படி மிதிப்பதற்கு செல்லும் வரிசையாம். அந்த வரிசை சித்திர வீதி, உத்திர வீதி தாண்டி ”ரங்கா ரங்கா” கோபுரத்திற்குள் நுழைந்து அங்கு பல வரிசைகளைத் தாண்டி படி மிதிக்க எப்படியும் மாலையாகி விடும் என்றார்கள்.

என்னுடன் வந்த மாமியார் “இதெல்லாம் நடக்கிற வேலையே இல்லை. இன்று மிதித்தால் தான் சொர்க்கம் கிடைக்குமா? இரண்டு நாள் கழித்து போனாலும் கிடைக்கும் வா…..” என்று எங்களை ரத்னாங்கி சேவை பார்க்க அழைத்துச் சென்றார்.

பெருமாள் திருமாமணி மண்டபத்தில் (ஆயிரங்கால் மண்டபத்தில்) எழுந்தருளியிருந்தார். அங்கும் வரிசையோ வரிசை தான். என்னடா இது! மூலவரை பார்க்க 250 ரூ கட்டணம் கட்டினாலும் அவ்வளவு சீக்கிரம் முத்தங்கி சேவை தான் இப்போதைக்கு பார்க்க முடியாதென்றால் இங்கும் தரிசனம் கிடைக்காதா என கவலை வந்து விட்டது. சரி முயற்சி செய்யலாம் என்று மண்டபத்தில் சிறிது தூரம் சென்றோம். அங்கு ஒரு தடுப்பின் அருகில் நின்று பெருமாளை தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். நாங்களும் அங்கு நின்று நன்றாகவே தரிசனம் செய்தோம். அருகில் சென்று பார்த்தால் தான் ரங்கன் அருள்வானா என்ன! இங்கிருந்தும் எல்லோர்க்கும் அருள் புரிந்து கொண்டிருந்தான்.

பலவிதமான ரத்தினங்களால் அலங்கரிக்கப் பட்ட அங்கியை அணிந்து கொண்டு அனைவருக்கும் காட்சி தந்து கொண்டிருந்தான். இந்த ரத்னாங்கி சேவை வருடத்தில் ஒருமுறை தான் இருக்குமாம். இந்த ரத்னங்களுக்கு நோய் நொடிகளை குணமாக்கும் தன்மை உண்டாம்.

மண்டபத்தை விட்டு வெளியே வந்தால் அங்கு பிரசாத கடைகள் நிறைய இருந்தன. அங்கு கும்பலோ கும்பல்…. அதன் பின் வெள்ளைக் கோபுரத்தின் வழியே வெளிவந்தோம். புதிதாக கடைத் தெருக்கள் நிறைய முளைத்திருந்தன. கடைக்காரர்கள் பலர் வட இந்தியர்களே…. அவர்கள் தமிழ் பேசும் ஸ்டைலிலேயே நான் புரிந்து கொண்டு இந்தியில் பேசி வாங்கிக் கொண்டேன். கோல தட்டு விற்றுக் கொண்டிருந்தவர் மஹாராஷ்ட்ராவிலிருந்து வந்திருக்கிறாராம். அவ்வளவு கும்பலிலும் சின்ன பேட்டி வேறு எடுத்தேன்.

ரோஷ்ணிக்கு கிச்சன் செட்டுக்கான பொருட்கள் சிலதும், கோல தட்டுகளும், பொட்டு அச்சும் வாங்கிக் கொண்டு ஒரு பிரதட்சணமாக உள்வீதி முழுவதையும் சுற்றி விட்டு வந்தோம். ஆங்காங்கே அன்னதானம் செய்து கொண்டிருந்தனர். வெளியூர் ஆட்கள் வாங்குவதும், சிலர் சாப்பிட்டு விட்டு கீழே மீதியை போடுவதும், அதை பலர் மிதிப்பதுமாக தொடர்ந்து கொண்டிருந்தது. நாங்கள் அன்று முழுவதும் பலகாரம் ஆகையால் வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு இடத்தில் துளசி தீர்த்தம் தந்தார்கள்., அதை மட்டும் வாங்கி குடித்தோம்.

அன்று மாலையும் ஒரு முறை சென்று ரத்னாங்கி சேவையை சற்று தள்ளி நின்று பார்த்து விட்டு, சொர்க்க வாசல் படி மிதிக்க எனக்கு ஒரு நப்பாசை, சென்று பார்த்தால் வரிசை இன்னும் பெரிதாகத் தான் ஆகியுள்ளதே தவிர குறையவில்லை. மார்கழி மாதம் ஆகையால் சரி அப்படியே சில வீதிகளில் வாசலில் இட்டிருக்கும் கோலங்களை பார்க்கலாம் என்று ஒரு ரவுண்ட் அடித்து சில கோலங்களை கண்டு மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டு, மாலை காய்கறி சந்தையில் அடுத்த நாள் துவாதசிக்கு அகத்திக்கீரையும், நெல்லிக்காயும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். சந்தையில் பலவிதமான காய்கறிகளை நறுக்கி கூறு போட்டு விற்று கொண்டிருந்தார்கள். அது எதற்கு என விசாரிக்க மாமியார் சொன்னார். திருவாதிரைக்கு எல்லா காய்களையும் போட்டு கூட்டு செய்து களியுடன் நைவேத்தியம் செய்வோம் இல்லையா…. அது போல் இங்கு நாளை துவாதசிக்கு 21 காய்களை போட்டு குழம்பு செய்வார்கள் என்று. சரி நாம் அவியல் செய்ய உதவும் என கால்கிலோ 10 ரூபாய் எனக் கூற வாங்கிக் கொண்டேன்.

வீட்டிற்கு வந்தும் மனதில், எங்கிருந்தெல்லாமோ படி மிதிக்க வருகின்றனர். இந்த வருடம் நாம் இங்கிருந்தும் முடியவில்லையே என ஒரு  எண்ணம்….

அதன் பின் நாங்களும் திடீர் பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியதாகி விட்டது. அந்த இனிமையான ட்ரிப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன். ஊரிலிருந்து வந்ததும் ராப்பத்து உற்சவத்தின் இறுதி நாளன்று கும்பலில்லாமல் இரண்டு முறை சொர்க்க வாசல் படி மிதிக்க முடிந்தது. சரி ஓரளவு த்ருப்தியடைந்ததும் முத்தங்கி சேவையும் இன்றோடு சரி தானே…. முயன்று பார்க்கலாமா என்று பார்த்தால் ம்ஹூம் வரிசையோ வரிசை…. சரி அவரை பார்க்க அவ்வளவு சுலபத்தில் முடியுமா….. என்று அழைக்கிறானோ…..எப்போ ப்ராப்தம் இருக்கோ…. அப்போ தான். என மனதை சமாதானம் செய்து கொண்டு,

கோபுர தரிசனம் கோடி புண்ணியமாயிற்றே VIEW POINT பார்க்கலாம் என்று கட்டணம் செலுத்தி, பெரியவர்களுக்கு 10 ரூபாய், சிறியவர்களுக்கு கட்டணம் கிடையாது. 21 கோபுரங்களை தரிசனம் செய்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம். இப்போ ரங்க நாச்சியாருக்கு ராப்பத்து உற்சவம் நடக்கிறது. படி தாண்டா பத்தினி ஆகையால் சன்னிதி உள்ளேயே புறப்பாடு. உள்ளேயே மண்டபத்தில் காட்சி தருகிறாள். கண்ணாடியில் அழகு பார்த்து கொள்கிறாள். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக அழகோ அழகு தான்….

அங்கு ஒரு பெரியவர் பெருமாள், தாயாரின் படங்களை மணிகள், சம்கிகள், பூக்கள், கோல்டன் பேப்பர் என வைத்து அலங்கரித்து விற்கிறார். நுண்ணிய வேலைப்பாடு தான். அழகாக இருந்தது. 300 ரூபாயாம். அங்கு நிற்கும் போது தான் மேலே பார்த்தேன். அழகான ஓவியங்கள். பராமரிப்பில்லாமல் அழிந்து கொண்டு வருகிறது. அந்த காலத்தில் இயற்கை வண்ணங்களைக் கொண்டு தீட்டியிருப்பார்கள்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

17 comments:

 1. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக அழகோ அழகு தான்

  அழகான பகிர்வுகல்.. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. இவ்வளவு கூட்டம் கண்டாலே எனக்கும் ஆகாது. இதனாலேயே திருப்பதி கூட எனக்கு அலர்ஜி! சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. நாங்கள் ஒருமுறை பரமபத வாசல் மிதிக்கப் போய்விட்டு உள்ளே போகவே முடியவில்லை. பெரிய பெருமாளை சேவித்துவிட்டு பரமபத வாசலுக்கு வர வேண்டும் என்றார்கள்.

  சரி தாயாரை சேவிக்கலாம் என்று இந்தப் பக்கம் வந்தோம். பரமபத வாசலுக்கு அருகே கூட்டமே இல்லை. ஒருவர் இருவர் என்று வெளியே வந்து கொண்டிருந்தனர்.இந்தப் பக்கமாகவே பரமபத வாசலுக்குள் நுழைந்து கொஞ்ச தூரம் போய்விட்டு அப்படியே திரும்பி வந்துவிட்டோம்!
  ReplyDelete
 4. ரங்க தரிசனம் , தூவதேசி குழம்பு ம்ம்ம் ஊர் நினைவு ரொம்ப வருது. தூவதேசி குழம்பில் மொச்சைக் காய் போடுவாங்க பாருங்க. சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு

  ReplyDelete
 5. என்ன ஒரு அழகான நிறைவான பதிவு ரோஷ்ணியமா.

  உங்கள் மாமியார் சொன்னது சத்தியம். ரங்கன் நாம் எங்கிருந்தாலும் அருள்புரிவான், சொர்கவாசலை மிதிக்காவிட்டாலும் கூட.

  அனைவருக்கும் எங்கள் விழாக்கால வாழ்த்துக்கள்.

  இன்று காணும் பொங்கல். கண்டுக்கிட்டேன்:-))))

  ReplyDelete
 6. நீங்கள் கண்டு ரசித்த அனுபவங்கள் எங்களுக்கும் கிடைக்கச்செய்ததற்கு நன்றி.

  ReplyDelete
 7. திருஇந்தளூரில் பரமபதவாசல் வழியாக வந்தேன். காலை கூட்டம் நிறைய இருக்கும். மாலை போய் வந்தோம்.
  முத்தங்கி சேவை இங்குள்ள பரிமளரங்கநாதருக்கு.
  இங்கும் கோவில் வாசலில் 21 காய்கறிகள் போட்ட ஒரு பை 10 ரூபாய்.
  உங்கள் பகிர்வு அருமை.

  ReplyDelete
 8. ஆஹா.. முத்தங்கி, ரத்னாங்கி சேவைகளை ரங்கனின் அருகிலேய இருந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைப்பது எளிதா என்ன?. அருமையான பகிர்வுக்கு நன்றி ஆதி.

  ReplyDelete
 9. பெருமாளின் அழகை உங்க பதிவில் படித்து சந்தோஷித்தேன். ஆதி.

  // அருகில் சென்று பார்த்தால் தான் ரங்கன் அருள்வானா என்ன! இங்கிருந்தும் எல்லோர்க்கும் அருள் புரிந்து கொண்டிருந்தான்.//

  உண்மைதான். ரங்கனின் அருள் எங்கிருந்தாலும் கிடைக்கும்.

  ReplyDelete
 10. ரங்க தரிசனம்...

  அருமையான பகிர்வு...
  அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. அரங்கன் சேவை நல்லபடியாக நடந்தது சந்தோஷமே.அவன் இருக்கும் ஊரிலியே இருக்கிறீர்கள் அதனால பக்கத்துவீட்டுக்கார போலத்தான். 21 கறிக் குழம்பா!! என்னவெல்லாம் இருக்கு.உங்கள் மாமியார் செய்ததுதான் சரி கூட்டத்தில் மாட்டி இருந்தால் வீடு திரும்புவது எப்போது?

  ReplyDelete
 12. அருமையான பதிவு! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 13. இரண்டு பதிவுகளும் படித்தேன்,கூட்டத்தில் நின்று தரிசித்த எஃபக்ட்

  ReplyDelete
 14. எல்லாக்காயும் இங்க தேடித்தானே வாங்கவேண்டி இருக்கு..

  உங்க மாமியார் அவ்ளோ சொல்லியும் உங்களுக்கு என்ன நப்பாசை வேண்டி இருக்குன்னேன்..:)

  ReplyDelete
 15. இப்பதிவினை படித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

  ரங்கனின் அருள் எங்கு நிறைந்திருக்கட்டும்.

  ReplyDelete
 16. அருமையான பதிவும் பகிர்வும். பாராட்டுக்கள்.

  // எங்கிருந்தெல்லாமோ படி மிதிக்க வருகின்றனர். இந்த வருடம் நாம் இங்கிருந்தும் முடியவில்லையே என ஒரு எண்ணம்….//

  ;)))))

  ReplyDelete
 17. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  கருத்துரைக்கு நன்றி சார்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…