Monday, January 21, 2013

கோவை - கேரளா சுற்றுலா - 1


ரங்கனைக் கண்டேன் -2 பகிர்வில் சொன்னது போல இனிமையான பயணம் ஒன்றை மேற்கொண்டோம். இந்த விடுமுறை அனுபவங்களை எங்கள் இருவரில் யார் எழுதலாம் என்று யோசித்த போது, என்னவர் நீயே எழுது என்று பெருந்தன்மையோடு சொன்னார். எனக்கு இருவருமே எழுதலாம் என்று தோன்றியது. எனக்குத் தோன்றியதை நான் எழுதுகிறேன். அவருடைய எழுத்தில் பிறகு வரும். உங்களுக்கு இருவிதமான பயணக் கட்டுரைகள் படிக்கக் கிடைக்கும். என்ன சரியா! பழைய டைரிக் குறிப்புகளைப் படித்தாலே சுவாரசியமாக இருக்கும். அதுமாதிரி இது என்னுடைய விடுமுறை டைரிக் குறிப்புகள். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ரோஷ்ணிக்கு அரைபரீட்சை விடுமுறை விட்டதும் ஒரு மாறுதலுக்காக எங்காவது போய் விட்டு வரலாம் என்று எண்ணியிருந்தோம். ரோஷ்ணி அப்பா தில்லியிலிருந்து கடும்பனியிலும் எங்களுக்காக ரயில் தாமதமாகி ஒருவழியாக முதல் நாள் இரவு வந்து சேர்ந்தார். மறுநாளே கோவைக்கு ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த ”ஜன் சதாப்தி” ரயிலை மாலை 4.50க்கு திருச்சி ஜங்ஷனில் பிடித்தோம். இந்த ரயில் முன்பு திருச்சிக்கும் கோவைக்கும் இடையே இருந்தது. இப்போது மயிலாடுதுறையிலிருந்து கோவை வரை நீட்டப்பட்டுள்ளது. ரயில் புறப்பட்டதுமே விதவிதமான உணவுகள் வரத் தொடங்கி விட்டன. நாங்கள் 7.30 மணிக்கு ஈரோடு தாண்டியதும் ஆளுக்கொரு இட்லி பார்சல் வாங்கிக் கொண்டு எங்கள் இரவு உணவை முடித்துக் கொண்டோம். பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றதுமே வீட்டில் எல்லாவற்றையும் அதற்கு தகுந்தாற் போல் ஏற்பாடு செய்ய வேண்டுமே…… காலையில் இருந்தே வேலைகள் இருந்து கொண்டே இருந்தன. சப்பாத்தி செய்து கைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தது கடைசியில் முடியாமல் போயிற்று.

கோவையில் என் பெரிய மாமா வீட்டில் தங்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். மன்னிம்மாவிடம் (இவர் என் பெரிய மாமி. எல்லோர்க்கும் மன்னி ஆகையால் எங்களுக்கும் சிறுவயதிலிருந்தே மன்னி, மாமி என்று இதுவரை அழைத்ததேயில்லை. பெரியவர்கள் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் மன்னிம்மா. இப்போ என் மகளுக்கும் இவர் மன்னிம்மா) வருவதற்கு பத்து மணிக்கு மேலாகி விடும், அதனால் சிரமப்பட வேண்டாம். நாங்கள் ரயிலிலேயே சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டேன். ரயில் இரவு 9.40 க்கு கோவையைச்சென்றடைந்தது. நான் சென்ற முறை கோவைக்கு வந்தது நான்கு வருடங்களுக்கு முன்பு. கோவையின் குளுமையான காற்று என்னை வெல்கம் என்று சொல்லி வரவேற்றது. என்னுடைய ஊருக்கு வந்ததில் மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சி. அது முகத்திலும் தெரிந்திருக்கிறது போல….ஜங்க்‌ஷனை விட்டு வெளியே வந்ததும் ஒரு ஆட்டோவை பிடித்து மாமா வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.  டவுன்ஹாலில் இருந்த என் அப்பாவின் அலுவலகத்தை ரோஷ்ணிக்கு காண்பித்தேன். அப்போது தான் என்னவர் மகளிடம் சொல்லிக் கொண்டு வந்தார் ”உங்கம்மாவுக்கு அவ ஊருக்கு வந்தவுடன் வாயெல்லாம் பல்லா இருக்கு பாரு” என்று….. இருக்காதா பின்ன…. பிறந்ததிலிருந்து இருபது வருடங்கள் இருந்திருக்கிறேன். எத்தனை விதமான சந்தோஷங்கள், அனுபவங்கள், நிகழ்வுகள், துக்கங்கள் என்று மனதில் ஊரின் அனுபவங்களைத் தாங்கிக் கொண்டுள்ளேன். சொந்த ஊருன்னா சும்மாவா?

மாமா வீட்டை சென்றடைந்தோம். நலம் விசாரிப்புக்கு பின் பழமும், பாலும் சாப்பிட்டு விட்டு உறங்கிப் போனோம். இடம் மாற்றினால் தூக்கமே வராத எனக்கு அன்றைக்கு நன்றாகவே தூக்கம் வந்தது. காலையில் எழுந்து ஒரு ட்ராவல்ஸ் வண்டியை ஏற்பாடு செய்தோம். ஒரு பிரபல பதிவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். இவரை செப்டம்பர் மாதமே கோவையில் உறவினரின் திருமணத்துக்கு வரும் போது சந்திக்க எண்ணி மின்னஞ்சல் செய்திருந்தேன். அவரும் தன் முகவரியைத் தந்து சந்திக்க ஆவலாக உள்ளதாக பதில் அனுப்பி இருந்தார். ஆனால் மகளின் யூனிட் டெஸ்ட் அதே தேதிகளில் இருந்ததால் திருமணத்துக்கு செல்ல வேண்டி பதிவு செய்திருந்த பயணச்சீட்டை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது. அவருக்கும் அலைபேசியில் தொடர்பு கொண்டு வர முடியாமல் போய் விட்டதை தெரிவித்தேன். அதனால் இம்முறை முன் தகவல் எதுவும் தெரிவிக்காமல் கோவை சென்று பேசலாம் என்று முடிவெடுத்தேன்.

எல்லோரும் குளித்து தயாரானோம். மன்னிம்மா கொடுத்த காலை உணவை உட்கொண்டு ஒரு டீயையும் குடித்து விட்டு வண்டியில் ஏறிவிட்டோம். முதலில் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு, பின்பு ஒரு மலைக்கோவிலுக்கு, அதன் பிறகு பதிவரை சந்திக்க என தொடரப் போகிறது இன்றைய பயணம். யார் அந்த பதிவர்? மலைக்கோவில் என்றால் எந்த மலைக்கோவில்? ஆவலாக உள்ளதா?

வாங்க நீங்களும் வண்டியில் ஏறுங்க… கோவையை ஒரு ரவுண்ட் அடிக்கலாம்…:)

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.


26 comments:

 1. அனுபவங்கள் அருமை !

  நேரில் சென்றுவந்த திருப்தி

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. பயண தொடர் அருமையாக ஆரம்பித்து விட்டது ஆதி.
  தொடர்கிறேன்.

  ReplyDelete
 3. உங்கள் குடும்பம் கூடவே நாங்களும் பயணித்த உணர்வு நன்றி...!

  ReplyDelete
 4. ஆஹா! ஆதி அசத்துங்க,ஆவலாய் கோவை என்றவுடன் ஓடி வந்து விட்டேன்,85-89 வரை கோவை என் வாழ்வில் நீங்க இடம் பிடித்தது,என் கல்லூரி வாழ்க்கை (பொற்காலம்)உங்க ஊரில் தான்.தொடருங்க..

  ReplyDelete
 5. பயணம் நல்லபடியா ஆரம்பிச்சுருக்கு.

  கோவையில் நம்ம தங்கமணியக்கா நலம்தானே ;-)

  ReplyDelete
 6. ஆஹா.... அசத்தல்!!!

  மாமணியே முருகைய்யா.............

  கூடவே வர்றேன் கந்தைய்யா..................

  ஷதாப்தியில் தின்னக்கொடுத்தே கொன்னுருவாங்கப்பா:(

  ReplyDelete
 7. திருச்சி டு கோவை சுவாரசியமாக...

  ReplyDelete
 8. மருத மலை !

  பயணப்பதிவுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. சொந்த ஊர் என்பதால் தூக்கமும் நன்றாக வந்திருக்கிறது உங்களுக்கு! பயனம் சுவாரசியமாக ஆரம்பித்து விட்டது! நாங்களும் தொடர்ந்து வருகிறோம்!!

  ReplyDelete
 10. Trichy expres amazing start Adhi... suspense'aa? kalakunga kalakunga...:)

  ReplyDelete
 11. பயணத் தொடரா! அட்றா சக்கை! அட்றா சக்கை!

  (மன்னிம்மா, மன்னிம்மான்னு இவ்வளவு மருகியும் இன்னுமா மன்னிக்கவில்லை. அப்படி என்னதான் செஞ்சுப்புட்டீங்க?)

  ReplyDelete
 12. நானும் உங்களோட தொடர்கிறேன்.

  ReplyDelete
 13. அட்டகாச ஆரம்பம்..தொடருகிறேன்..

  ReplyDelete
 14. உலகின் எந்த மூலைக்குப் போனாலும் சொந்த ஊர் சொந்த ஊர்தான்.அந்த ஒட்டுதல் வேறெங்கும் வருவதில்லை.மிச்ச மீதி பயணத்துக்கு எனக்கும் ஒரு டிக்கெட்டைப் போடுங்க.காசெல்லாம் நான் தர மாட்டேன்னு இப்பவே சொல்லிட்டேன் :-)

  ReplyDelete
 15. பல பிறகு சொந்த ஊர் என்றால் சந்தோஷமாகத்தான் இருக்கும்.

  ReplyDelete
 16. //சொந்த ஊருன்னா சும்மாவா?//

  சும்மாவா பின்ன??

  சுவாரசியமாக ஆரம்பித்து இருக்கீங்க ஆதி. தொடருங்க.

  ReplyDelete
 17. ட்ரெயினா இது? பஸ் மாதிரியே இருக்குது!! கொஞ்சம் ஃப்ளைட் “ஜாடை”யும் இருக்கு!! :-)))

  அந்தப் பிரபல பதிவர் நம்ம “அ(ட)ப்பாவி”தானே? :-)))

  ReplyDelete
 18. பயணக்கட்டுரையின் ஆரம்பமே சுவாரஸ்யம். அதுவும் தாங்கள் செல்வதோ சொந்த ஊருக்கு. கோவை மலையென்றால், நானும் ஒரே ஒருமுறை மட்டும் சென்று வந்துள்ள மருதமலையாகத் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தொடருங்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. சுவாரசியமாய் எழுதுவதில் உங்களவரைப் போலவே கலக்குறீங்க..

  ReplyDelete
 20. நானும் தங்கள் பதிவு வண்டியில் ஏறிவிட்டேன்
  தொடர்ந்து பயணிப்போம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 21. இந்த பயணத்தொடருக்கு ஆதரவு தெரிவித்த நண்பர்கள்

  சேக்கனா M.நிஜாம்
  கோமதிம்மா
  மனோ நாஞ்சில் மனோ
  ஆசியா உமர் - பொற்காலம் எங்கள் ஊரிலா! மகிழ்ச்சி.
  அமைதிச்சாரல் - தங்கமணியக்காவ பார்த்தா கண்டிப்பா சொல்றேங்க...:)
  துளசி டீச்சர் - மருதமலை கந்தைய்யா தான்.
  கே.பி.ஜனா சார்
  இராஜராஜேஸ்வரி மேடம் - சரிதானுங்க...:)
  மனோம்மா - ஆமாம்மா. அதனால தான் நன்றாக தூங்க முடிந்திருக்கிறது போல...
  புவனா - சஸ்பென்ஸே தாங்க...
  ஈஸ்வரன் சார் - அடடா! என்னமா யோசிக்கிறீங்க...:))
  புதுகைதென்றல்
  அமுதா கிருஷ்ணா
  ராஜி - என்னனனனது! காசு தர மாட்டீங்களா? சரி வுடுங்க பார்த்துக்கலாம்...:))
  ஸ்ரீராம்
  ராம்வி
  ஹுசைனம்மா - அடப்பாவியா? வெயிட் பண்ணிப் பாருங்க...
  வை.கோபாலகிருஷ்ணன் சார் - மருதமலை தான். ஆனா இன்னொண்ணும் இருக்கே சார்...
  ரிஷபன் சார்
  ரமணி சார்

  உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
 22. அருமையாக ஆரம்பித்திருக்கிறீர்கள் ஆதி!
  கூடவே எல்லாப் பதிவர்களும் வந்து கொண்டே இருக்கிறோம் - நீங்கள் சந்தித்த அந்தப் பதிவரை சந்திக்கத்தான்!

  ReplyDelete
 23. ரஞ்சனிம்மா - அந்த பதிவரை சந்திச்சாச்சு. படிச்சீங்களா? கூடவே வர்றதுக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 24. ஹாஹா, ஏடிஎம்மைப் பார்த்தது தானே. நீங்க வந்துட்டுப் போனதுமே எனக்குத் தகவல் வந்துடுச்சே! அதனால் எனக்கு சஸ்பென்ஸே இல்லை. மெதுவா வந்து படிக்கிறேன். ஆனாலும் யாருனு தெரிஞ்சுபோச்சாக்கும். :))))))

  சொந்த ஊருக்குப் போகும் சுகமே தனி தான். எனக்கும் அப்படித்தான் மதுரைக் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கையில் இனம் தெரியா மகிழ்ச்சி வரும்.

  ReplyDelete
 25. கீதா மாமி - ஓ! உங்களுக்கு உடனுக்குடன் தகவல் வந்துடுச்சா? சொந்த ஊருன்னாலே மனதில் ஒரு சந்தோஷம் தான்...

  கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாமி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…