Wednesday, January 30, 2013

வந்தே மாதரம்…… ஜெய் ஹிந்த்!

எங்கள் குடியிருப்பில் குடியரசு தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடியரசு தினத்துக்கு முந்தைய வாரம் ஞாயிற்றுக்கிழமை, சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் காலையில் ஆரம்பமாயின. இதை எதிர் ப்ளாட்டில் குடியிருக்கும் தோழி ஒருவரும், அவரது கணவரும் இணைந்து நடத்தினார்கள்.பம்பரம் விடுதல், ஓட்ட பந்தயம், ஸ்லோ சைக்கிளிங், தவளை ஓட்டம், வாத்து நடை, எலுமிச்சை ஸ்பூன், கிளிப்பை கயிறில் மாட்டுவது, ஒரு தட்டில் கொட்டியுள்ள பொட்டுகளை பிய்த்து இன்னொரு தட்டில் ஒட்டுவது, கோல போட்டிகள் , மியூசிக்கல் சேர் என வயது வாரியாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.மதியத்துக்கு மேலே பெரியவர்களுக்கான கோல போட்டிகள், கயிறு இழுத்தல், கண்ணைக் கட்டிக் கொண்டு சுவாமி முகத்தில் பொட்டு வைப்பது, அந்தாக்க்ஷரி, மியூசிக்கல் சேர், கைக்கு கிடைக்கும் சீட்டில் எழுதி இருப்பது போல் செய்தல், நடனம் என குடியிருப்பே களை கட்டியது. இதை தொடர்ந்து குடியரசு தினத்தின் முதல்நாள் எல்லார் வீட்டில் இருந்தும் இருக்கைகளை கொண்டு வரச் சொல்லி, நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதலில் இறை வணக்கம், தேசபக்தி பாடல்கள், சமையல் போட்டிகள், மாறுவேட போட்டிகள், பெரியவர்களுக்கான நடனம், பாட்டு, பரிசளிப்பு விழா என அமர்க்களப் பட்டது. அனைவரும் பங்குபெற்று அன்றைய நாளை இனிதே கழித்தோம்.எங்க வீட்டு வாண்டு சட்டுனு யாரிடமும் பேசக் கூட மாட்டாள். அவளே விருப்பப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்வதாக சொல்ல, கலந்து கொள். ஜெயிப்பது முக்கியமல்ல, உன்னால் என்ன முடியுமோ செய் என்றேன். ஐந்து போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாள். எலுமிச்சை ஸ்பூனில் இரண்டாம் பரிசும், பொட்டு பிய்த்து தட்டில் ஒட்டுவதில் மூன்றாம் பரிசும் பெற்றாள். எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சி தான்.


தேசபக்தி பாடல்களுக்காக நம் நாட்டுக்கொடியை பற்றி நான் பள்ளிப்பருவத்தில் கற்ற ஒரு பாடலை சொல்லிக் கொடுத்திருந்தேன். அவளும் இரண்டு நாட்களில் கற்றுக் கொண்டு விட்டாள்.  ராதையாக கண்ணனை பற்றிய ஒரு பாடலும் தேர்வு செய்து வைத்திருந்தாள். ஆனால் அங்கு நின்றவுடன் என்ன நினைத்தாளோ! பெயரை மட்டுமே சொன்னாள்….:) இவளுடன் பங்குபெற்ற குழந்தைகள் ஒன்று கிருஷ்ணனாகவும், இன்னொன்று நேதாஜியாகவும், மற்றவர் விவேகானந்தராகவும் மாறி அழகாய் தோற்றமளித்தனர். அதிலும் நிகழ்ச்சியை நடத்தும் தோழியின் மகன் நேதாஜியாக மழலை மொழியில் “நான் தான் நேதாதி சுபாத் தந்தர போஸ், நான் தான் ஆணுவத்தை உருவாக்கியவன். தெய் ஹிந்த்” என்று சொன்னது பிரமாதமாக இருந்தது. பங்குபெற்ற நால்வருக்குமே பாரபட்சமில்லாமல் முதல் பரிசு தந்து கவுரவித்தார். குழந்தைகள் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம். பரிசுகளை உடனே பிரித்து பார்த்து சந்தோஷப்பட்டனர்.

எங்கள் குடியிருப்பில் இருக்கும் மாமி, இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. ரோஷ்ணி ராதையாக வேடமிட தான் உதவுவதாக சொல்லி, வந்து தலைபின்னி விட்டு அலங்காரம் செய்து உதவினார். அக்கம் பக்கம் இருந்த கல்லூரியில் படிக்கும் பெண்களும் உதவவே, பதட்டமில்லாமல் சமையல் போட்டிக்கும் தயார் செய்து ரோஷ்ணியையும் தயார் செய்ய என்னால் முடிந்தது. சிறுமியர் நடனமாட, தானும் ஆடுகிறேன் என்று சொல்லி அதிலும் பங்கேற்றாள். ஆகவே இதுவே எனக்கு பெரிய சந்தோஷம்…..

நடனம் ஆடிய பெரியவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் தரப்பட்டது. அடுத்து மகளிர் தினத்தையொட்டி நிகழ்ச்சிகள் நடத்தப் போவதாகவும் சொல்லிக் கொண்டுள்ளனர். நல்லது நடக்கட்டும்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.


Tuesday, January 29, 2013

இரட்டிப்பு மகிழ்ச்சி


சமீபத்தில் நம்ம ஜலீலாக்கா நடத்திய பேச்சிலர்ஸ் சமையல் ஈவண்ட் பற்றி உங்க எல்லாருக்கும் தெரியாததல்ல…. அதுக்கு நான் பத்து குறிப்புகளை அனுப்பியிருந்தேன். 


 BEST SIDE DISH RECIPE FOR PALAK PANEER


BEST NORTH INDIAN RECIPE


CERTIFICATE OF PARTICIPATION


அதில் என்னுடைய பாலக் பனீர் சப்ஜிக்கு BEST SIDE DISH RECIPE என்ற அவார்டும், BEST NORTH INDIAN RECIPE என்று ஒரு அவார்டும், பங்குபெற்றதற்காக ஒரு சான்றிதழும் என மூன்று சான்றிதழ்களை பெற்றேன். போட்டியை சிறப்பாக நடத்தி பரிசுகளையும், சான்றிதழ்களையும் அளித்த ஜலீலாக்காவுக்கு நன்றி. போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.

அந்த மகிழ்ச்சியை உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும், என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த பரிசு பெறும் வாய்ப்பும் வந்தது!

எங்களது குடியிருப்பில் குடியரசு தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் சமையல் போட்டிகளும் இடம்பெற்றன, உபயோகப்படுத்த வேண்டிய பொருளாக மைதா (அ) ரவை இருந்தது. அதில் கலந்து கொண்டு,  இனிப்புக்கான இரண்டாம் பரிசை வென்றேன்.


இரண்டாம் பரிசு பெற்ற ”இனிப்பு துக்கடா”


பெற்ற இரண்டாம் பரிசு


பரிசு கிடைக்காத ரவா கட்லட்!


விதவிதமான ரெசிபிக்கள் வந்திருந்தன. மும்பையில் இருந்து வந்திருந்த ஒரு மாமி இனிப்புக்கான நடுவராகவும், எங்கள் குடியிருப்பிலேயே வசித்து வரும் சமையல் நிபுணரான ஒரு மாமா காரத்திற்கான நடுவராகவும் இருந்தார். மைதா அல்லது ரவை என்றதும் எப்பொழுதும் செய்யும் ரவா இட்லி, ரவா தோசை, ரவா லாடு, கேசரி, மைதா பிஸ்கட், மைதா சீடை போன்ற இவையில்லாமல் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். கூகிள் ராணியிடம் தஞ்சம் புகுந்தேன். அதில் எனக்கு கிடைத்த ரெசிபி தான் பரிசு வென்ற இனிப்பு துக்கடா. ரெசிபியை பகிர்ந்த அடுப்பங்கரை கமலாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அடுத்து காரத்திற்கு என்ன செய்வது என்று நானே யோசித்து செய்தது தான் ரவா கட்லட். இரண்டுமே முதன்முறையாக முயற்சி செய்தது. சொதப்பாமல் நன்றாகவே வந்தது. அதுவே பெரிய வெற்றி தானே…….:)) அன்று செய்த கட்லட் ஒன்று கூட கிடைக்காததால் அடுத்த நாள் மீண்டும் செய்த போது படமெடுத்தேன்.

அந்த இரண்டு ரெசிபிக்களின் செய்முறையை அடுத்த பகிர்வில் பகிர்கிறேன். ஒரு பதிவு தேத்திக்கிறேன்ப்பா…..:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Monday, January 28, 2013

அநுவாவியும், அப்பாவியும் - கோவை கேரளா சுற்றுலா – 3

பயணத்தின் புது திட்டமாக ஒரு மலைக்கோவில் என்று சொன்னேனல்லவா! அது தான் அநுவாவி சுப்ரமணியர் கோவில். நம்ப மகி போன பதிவில் சரியா யூகித்திருந்தாங்க. மகி உங்களுக்கு ஒரு பூங்கொத்து. டிரைவர் சொன்னவுடனேயே, ஆமாங்க நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா போனதில்லை என்று சொன்னேன். டிரைவர் அப்போது தான் சொன்னார் பார்க்காம போனா அப்புறம் ஃபீல் பண்ணுவீங்க என்று. மருதமலை இருக்கும் மலைத்தொடரின் அடுத்த கோடியில் இருப்பது தான் இந்த அநுவாவி மலை. காட்டின் நடுவில் கோவில். மாலை ஆறு மணிக்கு மேல் யாருக்கும் அனுமதியில்லை. தனியாக செல்வதையும் தவிர்ப்பது நல்லதாம். காரணம் காட்டு யானைகளின் நடமாட்டம் எப்போதும் உண்டு.

கோவிலின் அடிவாரத்தில் லலிதாம்பிகை கோவிலும், அகத்தியர் ஆசிரமமும் உள்ளது. சுப்ரமணியன் கோவிலுக்கு செல்ல படிகள் ஒன்று தான் வழி. போகும் வழியிலேயே யானைகளின் நடமாட்டம் குறித்து படமும், அறிவுரைகளும் உள்ளன. அப்படியே வழியில் வந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. த்ரில்லான அனுபவம் தான். வெயிலின் காரணத்தால் செருப்புகளை போட்டுக் கொண்டு, மேலேயே விட்டுக் கொள்ளலாம் என்று மலை ஏற ஆரம்பித்தோம். அமைதியான சூழல். சுற்றிலும் காடு நடுவில் படிகள். அங்கங்கே அசுத்தம் செய்யாதீர்கள் என்று எழுதப்பட்ட வாசகங்கள் காணப்பட்டன. ஒரு சில இடத்தில் காதலர்கள் தென்பட்டனர். கந்தா, முருகா என அழைத்த படியும், அங்கங்கே சற்று நேரம் அமர்ந்தும் என கோவிலுக்குப் போய் சேர்ந்தோம்.குருக்களை காணவில்லை. அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்த போது, அவர் சாப்பிட்டு கொண்டிருப்பதாக சொல்ல, வள்ளி, தேவசேனா சமேத முருகனை தரிசனம் செய்து விட்டு வந்தோம். குருக்கள் சாப்பிடுவதாக சொன்னவர், அங்கேயே மேலே செல்லும் பாதையை காட்டி இங்கு முதலில் ஒரு இடத்தில் மாலை போட்டிருப்பார்கள், அங்கு தான் முதலில் முருகனும், சிவனும் இருந்தாங்க என்றும், ஒருமுறை வெள்ளம் வந்த காரணத்தால், அதன் பிறகு இங்கு முருகனையும், சிவனை இன்னும் மேலே ஏறிப் பாருங்க அங்கே பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் கூற நாங்களும் மேலே ஏறிச் சென்று சிவனையும் தரிசனம் செய்தோம். வழியில் ஒரு சுனை உள்ளது. ஒரு பிரதட்சணமும் வந்தோம். அங்கிருந்த குழாயில் வந்த தண்ணீர் சிலீரென்று அந்த வெயிலுக்கு இதமாக இருக்கவே, முகம் கழுவி கொஞ்சம் ஃப்ரெஷ்ஷானேன். சில்லென்ற காற்று. அங்கிருந்து இயற்கைக் காட்சிகளை படமெடுத்தார் என்னவர். வழியில் தென்பட்ட செங்கல் சூளைகள். இங்கிருந்து பார்க்கும் போதே வித்தியாசமாக இருந்தது. சற்று நேரத்திற்கு பிறகு மலையிலிருந்து மெல்ல இறங்க ஆரம்பித்தோம்.அப்போது தான் குருக்கள் தென்பட்டார். அவரிடம் இந்த கோவிலின் ஸ்தல வரலாறு என்னவென்றும் புத்தகம் கிடைக்குமா என்று கேட்கப் போய், அவர் தங்கள் நிலையை பற்றி ஏதேதோ பேசிக் கொண்டே போனார். என் கணவர் அவருக்கு பணம் கொடுத்தார். பிரசாதமாக வெண் பொங்கல் மூவருக்கும் கிடைத்தது. அதை சாப்பிட்டு விட்டு நாங்கள் மூவரும் ரொம்ப சுவாரஸ்யமாக பேசிக் கொண்டே கீழே இறங்கி வந்து விட்டோம். அப்போது தான் எங்கள் மகள் அப்பா நம்ப செருப்பை அங்கேயே விட்டு விட்டோம்என்று சொல்ல, அடடா! பேச்சு சுவாரஸ்யத்தில் மறந்து விட்டோமே….

எங்கள் இருவரையும் அங்கேயே அமரச் சொல்லி விட்டு அவர் பாவம் மீண்டும் மேலே ஏறிச் சென்று அவைகளை எடுத்து வந்தார். சுப்ரமணியனுக்கு என்ன வேண்டுதலோ! மீண்டும் ஏறி வரச் சொல்லி விட்டார். காரில் ஏறியதும் டிரைவருக்கு நன்றி சொன்னோம். அவர் சொல்லா விட்டால் நிச்சயம் இங்கு வந்திருக்க மாட்டோம். நீங்களும் முடியும் போது இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து முருகனின் அருளைப் பெறுங்கள்.

பக்கத்தில் உள்ள லலிதாம்பிகை கோயிலுக்கு செல்லலாம் என்று பார்த்தால் சன்னிதி மூடியிருந்தது. இந்த கோவிலைப் பற்றி நம்ம இராஜராஜேஸ்வரி மேடம் அவங்க பதிவில எழுதியிருக்காங்க பாருங்க.

அடுத்து நம்ம பிரபல பதிவரை சந்திக்க தாங்க போகப் போறோம். யார்னு இப்ப எல்லாருக்குமே தெரிந்திருக்கும்! ஆமாங்க நம்ப தங்கமணியக்காவே தான். அவங்களுக்கு தொலைபேசி, வீட்டுக்கு வரும் வழியை சொல்லச் சொன்னேன். அவங்க சொல்லச் சொல்ல தலை சுற்றவே டிரைவரிடமே கொடுத்து பேசச் சொல்லிவிட்டேன். அவங்க வீட்டுக்கு ஒருவழியா போய் சேர்ந்தோம். ரோஷ்ணி தூங்கிப் போயிருந்தாள். அவளை எழுப்பி அழைத்துச் சென்றோம். வீட்டு நபர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

ரகளையான எழுத்துக்கு சொந்தக்காரரான நம்ம தங்கமணி நிஜமாகவே அப்பாவியாக தென்பட்டார். பின்பு தேநீர் போட்டுத் தருகிறேன் என்று சொல்லவே, வேண்டாம் என்று அலறி விட்டேன். இட்லி மாதிரி இருக்குமோன்னு பயந்து இல்லைங்க….. :) எனக்கு வீடு போய் சேரும் வரை பிரட்டாமல் இருக்க…. கணவர் தேநீர் குடிக்கவே, எங்கள் இருவருக்கும் எலுமிச்சை சாறு பிழிந்து தந்தார். வீட்டில் செய்த இனிப்பு மற்றும் கரகர அயிட்டங்களை எடுத்துக் கொண்டோம். ரோஷ்ணியிடம் எங்க இருவரின் பேரும், ஊரும் ஒன்று தான் என்று சொல்லிக் கொண்டேன். தங்கமணியின் ரங்கமணியைப் பார்க்க நேரமாகுமென்பதால் கிளம்பி விட்டோம்.

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
அடுத்து நாங்க சென்ற இடம், இருபத்திரெண்டு வருடங்கள் கழித்து நடக்கும் ஒரு சந்திப்புக்காக…. யார் அந்த நபர்? சஸ்பென்ஸ் வைக்கிறேன் என்று கோபப்பட்டு அடிக்க வராதீங்க. கொஞ்சம் காத்திருங்க. அதுவரை நீங்களும் சென்று தேநீர் குடித்து விட்டு வாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதிவெங்கட். 


Friday, January 25, 2013

இளமையில் கொல்! – சுஜாதா
பல நாட்களுக்குப் பிறகு நூலகத்திலிருந்து சுஜாதா அவர்களின் புத்தகம் ஒன்று கிடைத்தது. என் மாமனார் தான் வழக்கமாக புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார். அவருடன் இப்போது நானும் சேர்ந்து கொண்டேன். எழுத்தாளர்கள் வரிசைப்படி அங்கு அடிக்கி வைக்காததால் சுஜாதா புத்தகங்கள் எங்கு உள்ளது எனத் தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்போ கிடைத்ததை விடுவேனா! உடனே படிக்க ஆரம்பித்து விட்டேன்.

முதல் கதையான "இளமையில் கொல்" என்ற குறுநாவல் 1987 - ல் எழுதி, "சுஜாதா" என்கிற மாத இதழில் வெளிவந்ததாம். தன்னுடைய கதையை பற்றி இவர் சொல்வதாவது. "இத்தனை ஆண்டுகள் கழித்துப் படிக்கும் போதும் எந்த விதத்திலும் எந்த அவசரத்திலும் சுவாரஸ்யமாக கதை சொல்லும் திறமையை இழந்து விடவில்லை என்பது தெரியும்" என்கிறார். நிச்சயமாக மிகவும் சுவாரஸ்யமாக தான் செல்கிறது. அங்கங்கே சுஜாதாவின் டச்…..

கதையை பற்றி சொல்வதானால் கதாநாயகன் ரங்கராஜிடம் ஒரு பையை அவரது நண்பன் கதிர்வேலன் தந்து விட்டு தான் பம்பாய் செல்வதாக சொல்லி விட்டுச் செல்கிறார். ஒரு சிறுமியை கொன்ற தடயங்களான அந்த பையையும் அதிலிருந்த பொருட்களையும் தேடி போலீஸ் அங்கு வருகிறது.  கொலையை யார் செய்தது என்று தெரியாத நிலையில், கொலையை கதிர்வேலன் தான் செய்ததாக பொய் சாட்சி சொல்ல சொல்கிறார்கள் அவரது அண்ணனும், அண்ணியும். ரங்கராஜும் அப்படியே செய்கிறார். அதன் பின்பு கதிர்வேலன் எப்படியோ வழக்கிலிருந்து வெளியே வந்து ரங்கராஜை பழி வாங்க காத்திருக்கிறார். இந்த சமயத்தில் ஒரு பெண்ணின் பழக்கம் ஏற்படுகிறது. அவரது கணவர் ஒரு நாள் இறந்து கிடக்க அங்கு எதேச்சையாக சென்ற ரங்கராஜ் தான் கொலையாளி என்று கதிர்வேலன் பழிக்கு பழி வாங்க காத்திருக்கிறான். கொலையை செய்தது யார்? ரங்கராஜ் வெளியே வந்தாரா? கதிர்வேலன் பழி வாங்கினாரா என்பது தான் கதை. கிளைமாக்ஸில் ஏற்பட்ட ட்விஸ்ட் நான் நினைத்துப் பார்க்காதது.

இந்த புத்தகத்தில் தப்பித்தால் தப்பில்லை என்ற கதையும் உள்ளது. இந்த கதையைப் பற்றி சுஜாதா அவர்கள் சொல்வது என்னவென்றால், "1984 - ல் வெளிவந்தது என்றும், தப்பித்தாலும் தப்பு தப்பு தான் என்பது தான் இதன் ஆதர்ச செய்தி" என்கிறார்.

கதை சுருக்கம்: மனைவியை கொலை செய்ய கணவன் திட்டமிடுகிறார். ப்ளாஷ்பேக்கில் மனைவியின் தவறான நடத்தை தான் கொலை செய்ய தூண்டுமளவு காரணம் என்று நமக்கு விளங்கிறது. கொலை செய்தாரா? அல்லது மன்னித்தாரா? என்பது தான் கதையின் கிளைமாக்ஸ்.

இந்த புத்தகத்தை நீங்களும் வாங்கிப் படித்து அனுபவியுங்கள்


விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


Wednesday, January 23, 2013

கோவை – கேரளா சுற்றுலா 2 (மருதமலை மாமணியே….)


என்ன! எல்லோரும் வண்டில ஏறிட்டீங்களா? சென்ற பகுதியில் சொன்னது போல இப்போ நாம கோவையில் புதிதாக உருவாகியிருக்கும் ஒரு கோவிலுக்குப் போகலாம்.

பயணம் செய்வது என்றாலே எனக்கு ஒரு தயக்கமும், பயமும் எப்போதுமே ஏற்படும். இன்றும் அப்படித்தான். சாப்பிட்டு விட்டு கிளம்பினாலும் அதே தான், ஒன்றுமே சாப்பிடாமல் வந்தாலும் இதே தான். எனக்கு என் மேலேயே கோபமாக வரும். நம்மால் கூட வர்றவங்களுக்கும் சங்கடமாகி விடும். டிரிப்பே வேண்டாம் என்று தோன்றிப் போய் விடும். என்ன பிரச்சனை என்கிறீர்களா? வண்டியில் ஏறி உட்கார்ந்த உடனேயே பிரட்டல், வாந்தி தான். காலையில் சாப்பிட்டு விட்டு ஒரு டீயையும் வேறு குடித்தேன் என்று சொன்னேனா…. அரை மாத்திரையும் போட்டுக் கொண்டு தான் ஏறினேன். முழு மாத்திரை போட்டால் தூக்கம் வந்து விடும். போகும் வழியில் ஒரு 7UP வாங்கிக்கலாம் என்று சொன்னேன். … இப்போதெல்லாம் பயணம் என்றாலே இதில்லாமல் நானில்லை…. இது மாதிரி பானங்கள் உடல்நலனுக்கு கெடுதல் என்று தெரிந்திருந்தும் வேறு வழி தெரியவில்லை. யாராவது என்னைப் போல் இருந்தால், உபாயம் சொல்லுங்களேன்…..ப்ளீஸ்…:) 


கோவை திருப்பதி - ஒரு தோற்றம்....


மன்னிம்மா கவுண்டம்பாளையத்தில் ”கோவை திருப்பதி” புதிதாக உருவாகி வருகிறது. நல்லா இருக்கு. முதலில் அங்கு போய் விடுங்கள் என்று சொல்லவே டிரைவரிடம் சொன்னோம். அவரும் கொங்கு தமிழில் ”அந்த கோவில் எங்க வீட்டுக்கு பக்கத்தில் தான் உள்ளது, இருங்க என் மனைவியிடம் எத்தனை மணி வரை கோவில் திறந்திருக்கும் என்று கேட்கிறேன்” என்றார். விசாரித்து விட்டு, ”முதலில் அங்க போய்ட்லாங்கண்ணா….” என்று சொல்லவே புறப்பட்டோம்.

கவுண்டம்பாளையம் தாண்டுவதற்குள்ளாகவே ரோஷ்ணி இருமுறை ”அப்பா வாந்தி வருதுப்பா” என்றாள். ஆனால் வெறும் பிரட்டல் தான். அடுத்து கோவில் நெருங்குவதற்குள் எனக்கு முடியவேவில்லை. இறங்கி வாந்தி எடுத்து வயிற்றை காலி செய்து விட்டு தெளிவாகி விட்டேன். டிரைவர் அருகிலிருந்த கடையில் ஸ்பிரைட் வாங்கி வந்து தந்தார். கோவிலை சென்றடைந்தோம். சற்றே ஒதுக்குபுறமாக இருந்த கோவிலின் வெளியே பெருமாளின் ஊஞ்சல் இருந்தது. உள்ளே எல்லா சன்னிதியும் திரை போடப்பட்டு கம்பிக் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. டிரைவர் அவர் மனைவியிடம் மீண்டும் விசாரிக்க அவர்கள் இப்போ தான் கோவிலுக்கு வந்து விட்டு சென்றதாகவும் சுவாமியை பார்த்ததாகவும் சொல்லவே, சரி நமக்கு இன்னும் நேரம் வரவில்லை. அவனே அழைப்பான் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.


மருதமலை முருகையாவுக்கு ராஜகோபுரம்...

அங்கிருந்து நேரே மருதமலை சென்றோம். ஆமாங்க மலைக்கோவில் என்று குறிப்பிட்டிருந்தேனே அது இங்கு தான். ஆனா பயணத்தின் புது திட்டமாக இன்னொரு மலைக்கோவிலுக்கும் சென்றோம்…. மருதமலை  என்றவுடன் அப்பா அம்மாவுடன் வந்த நினைவுகளும், கல்லூரி தோழிகளுடன் ஒருமுறை வந்த நினைவும், கணவரும் நானும் திருமணமான அந்த வருடத்திலேயே ஒரு முறை வந்ததும் தவறாமல் நினைவுக்கு வந்து சென்றது. அப்போ மேலே வரை மினி பேருந்தில் சென்று விட்டு வரும் போது படிகளில் இறங்கியே வந்து விட்டோம். போகும் வழியிலேயே ரோஷ்ணியும் என்னைப் போலவே தன் வயிற்றை காலி செய்து கொண்டாள்.

மலை மேலே வரை காரில் சென்று விட்டோம். செருப்புகளை காரிலேயே விட்டு விட்டு சுவாமியை தரிசனம் செய்ய கிளம்பினோம். முருகா கார்த்திகேயா, கந்தா, வடிவேலா, சண்முகா என்று அவனை அழைத்துக் கொண்டே படிகளை ஏறி கடந்து உள்ளே சென்றோம். ராஜகோபுரம் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கிறது. தரிசன சீட்டு வாங்க என்னவர் செல்ல நானும் ரோஷ்ணியும் சன்னிதிக்கு முன்பு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தோம். பின்பு வரிசையில் சென்று உள்ளே விபூதி அலங்காரத்தில் சுப்ரமணியனை கண் குளிரக் கண்டோம். பத்து பத்து பேராக கருவறை முன்பு அமர சொல்கின்றனர். பின்பு தீபாராதனை. அடுத்து பத்து பேர். நல்ல அமைப்பு. எல்லோராலும் நிதானமாக நன்கு தரிசனம் செய்ய முடியும்.


ஒழுங்கா ஃபோட்டோ புடிக்கணும்... இல்ல அளுதுடுவேன்!

வெளியே வந்து ஒரு பிரதட்சணம் செய்தோம். அங்கு ஒரு பெண் குழந்தை சின்னஞ்சிறு பாவாடை சட்டையில் அழகாக இருந்தது. என் கணவர் புகைப்படமெடுக்க அழகாக போஸ் கொடுத்தது. ஒரு இடத்தில் அமர்ந்தோம். அருகில் ஒரு தம்பதியினர், டிஸ்போஸபிள் டம்ளர்களில் சர்க்கரை பொங்கலை ஸ்பூன் போட்டு ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு கன்றுக்குட்டி ஒன்று வரவே அந்த கணவர் கன்றிடம் ”என்னடா சர்க்கரை பொங்கல் வேண்டுமா? சூடாக இருக்குடா” என்றார். அது அவரிடமே நிற்க கையில் கொஞ்சம் எடுத்து ஊதி விட்டு கையில் வைத்து கன்றிடம் கொடுத்தார். அது சாப்பிட்டு விட்டு அவர் மீதி மோதியது. அவர் மனைவி அலறி ”ஏன் மாமா! உங்களுக்கு ஏன் இந்த வேலை. தேவையா இது எழுந்து வாங்க” என்று அலறினார்.


மருதமலை

மலை மேலிருந்து கோவையின் அழகை என்னவர் புகைப்படங்கள் எடுத்து தள்ளினார். இறங்கி காரைத் தேடி வந்தோம். டிரைவர், ”என்னங்ணா சாமி பார்த்தீங்களா? போட்டோ எடுத்தீங்களா?” என்று விசாரித்தார். அப்படியே வளைவுகளில் இறங்கி கீழே வந்தோம். டிரைவர் அடுத்து எங்கே போகணும் என்று கேட்கவே நாங்கள் பதிவர் இருக்கும் இடத்தை சொன்னோம். அவர் இங்கே அருகில் இன்னொரு மலைக்கோவில் இருக்கு. அதுவும் சுப்ரமணியர் கோவில் தான். அங்கே போயிட்டு போகலாம். போகாமல் அப்புறம் மிஸ் பண்னிட்டோமேன்னு நினைப்பீங்க, அதனால் போகலாம் என்றார். சரி என்று பயணப்பட்டோம்…..

அந்த மலைக்கோவில் என்ன? பதிவரை சந்தித்தோமா? அடுத்த பகிர்வில்……அதுவரை கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க……:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


Monday, January 21, 2013

கோவை - கேரளா சுற்றுலா - 1


ரங்கனைக் கண்டேன் -2 பகிர்வில் சொன்னது போல இனிமையான பயணம் ஒன்றை மேற்கொண்டோம். இந்த விடுமுறை அனுபவங்களை எங்கள் இருவரில் யார் எழுதலாம் என்று யோசித்த போது, என்னவர் நீயே எழுது என்று பெருந்தன்மையோடு சொன்னார். எனக்கு இருவருமே எழுதலாம் என்று தோன்றியது. எனக்குத் தோன்றியதை நான் எழுதுகிறேன். அவருடைய எழுத்தில் பிறகு வரும். உங்களுக்கு இருவிதமான பயணக் கட்டுரைகள் படிக்கக் கிடைக்கும். என்ன சரியா! பழைய டைரிக் குறிப்புகளைப் படித்தாலே சுவாரசியமாக இருக்கும். அதுமாதிரி இது என்னுடைய விடுமுறை டைரிக் குறிப்புகள். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ரோஷ்ணிக்கு அரைபரீட்சை விடுமுறை விட்டதும் ஒரு மாறுதலுக்காக எங்காவது போய் விட்டு வரலாம் என்று எண்ணியிருந்தோம். ரோஷ்ணி அப்பா தில்லியிலிருந்து கடும்பனியிலும் எங்களுக்காக ரயில் தாமதமாகி ஒருவழியாக முதல் நாள் இரவு வந்து சேர்ந்தார். மறுநாளே கோவைக்கு ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த ”ஜன் சதாப்தி” ரயிலை மாலை 4.50க்கு திருச்சி ஜங்ஷனில் பிடித்தோம். இந்த ரயில் முன்பு திருச்சிக்கும் கோவைக்கும் இடையே இருந்தது. இப்போது மயிலாடுதுறையிலிருந்து கோவை வரை நீட்டப்பட்டுள்ளது. ரயில் புறப்பட்டதுமே விதவிதமான உணவுகள் வரத் தொடங்கி விட்டன. நாங்கள் 7.30 மணிக்கு ஈரோடு தாண்டியதும் ஆளுக்கொரு இட்லி பார்சல் வாங்கிக் கொண்டு எங்கள் இரவு உணவை முடித்துக் கொண்டோம். பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றதுமே வீட்டில் எல்லாவற்றையும் அதற்கு தகுந்தாற் போல் ஏற்பாடு செய்ய வேண்டுமே…… காலையில் இருந்தே வேலைகள் இருந்து கொண்டே இருந்தன. சப்பாத்தி செய்து கைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தது கடைசியில் முடியாமல் போயிற்று.

கோவையில் என் பெரிய மாமா வீட்டில் தங்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். மன்னிம்மாவிடம் (இவர் என் பெரிய மாமி. எல்லோர்க்கும் மன்னி ஆகையால் எங்களுக்கும் சிறுவயதிலிருந்தே மன்னி, மாமி என்று இதுவரை அழைத்ததேயில்லை. பெரியவர்கள் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் மன்னிம்மா. இப்போ என் மகளுக்கும் இவர் மன்னிம்மா) வருவதற்கு பத்து மணிக்கு மேலாகி விடும், அதனால் சிரமப்பட வேண்டாம். நாங்கள் ரயிலிலேயே சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டேன். ரயில் இரவு 9.40 க்கு கோவையைச்சென்றடைந்தது. நான் சென்ற முறை கோவைக்கு வந்தது நான்கு வருடங்களுக்கு முன்பு. கோவையின் குளுமையான காற்று என்னை வெல்கம் என்று சொல்லி வரவேற்றது. என்னுடைய ஊருக்கு வந்ததில் மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சி. அது முகத்திலும் தெரிந்திருக்கிறது போல….ஜங்க்‌ஷனை விட்டு வெளியே வந்ததும் ஒரு ஆட்டோவை பிடித்து மாமா வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.  டவுன்ஹாலில் இருந்த என் அப்பாவின் அலுவலகத்தை ரோஷ்ணிக்கு காண்பித்தேன். அப்போது தான் என்னவர் மகளிடம் சொல்லிக் கொண்டு வந்தார் ”உங்கம்மாவுக்கு அவ ஊருக்கு வந்தவுடன் வாயெல்லாம் பல்லா இருக்கு பாரு” என்று….. இருக்காதா பின்ன…. பிறந்ததிலிருந்து இருபது வருடங்கள் இருந்திருக்கிறேன். எத்தனை விதமான சந்தோஷங்கள், அனுபவங்கள், நிகழ்வுகள், துக்கங்கள் என்று மனதில் ஊரின் அனுபவங்களைத் தாங்கிக் கொண்டுள்ளேன். சொந்த ஊருன்னா சும்மாவா?

மாமா வீட்டை சென்றடைந்தோம். நலம் விசாரிப்புக்கு பின் பழமும், பாலும் சாப்பிட்டு விட்டு உறங்கிப் போனோம். இடம் மாற்றினால் தூக்கமே வராத எனக்கு அன்றைக்கு நன்றாகவே தூக்கம் வந்தது. காலையில் எழுந்து ஒரு ட்ராவல்ஸ் வண்டியை ஏற்பாடு செய்தோம். ஒரு பிரபல பதிவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். இவரை செப்டம்பர் மாதமே கோவையில் உறவினரின் திருமணத்துக்கு வரும் போது சந்திக்க எண்ணி மின்னஞ்சல் செய்திருந்தேன். அவரும் தன் முகவரியைத் தந்து சந்திக்க ஆவலாக உள்ளதாக பதில் அனுப்பி இருந்தார். ஆனால் மகளின் யூனிட் டெஸ்ட் அதே தேதிகளில் இருந்ததால் திருமணத்துக்கு செல்ல வேண்டி பதிவு செய்திருந்த பயணச்சீட்டை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது. அவருக்கும் அலைபேசியில் தொடர்பு கொண்டு வர முடியாமல் போய் விட்டதை தெரிவித்தேன். அதனால் இம்முறை முன் தகவல் எதுவும் தெரிவிக்காமல் கோவை சென்று பேசலாம் என்று முடிவெடுத்தேன்.

எல்லோரும் குளித்து தயாரானோம். மன்னிம்மா கொடுத்த காலை உணவை உட்கொண்டு ஒரு டீயையும் குடித்து விட்டு வண்டியில் ஏறிவிட்டோம். முதலில் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு, பின்பு ஒரு மலைக்கோவிலுக்கு, அதன் பிறகு பதிவரை சந்திக்க என தொடரப் போகிறது இன்றைய பயணம். யார் அந்த பதிவர்? மலைக்கோவில் என்றால் எந்த மலைக்கோவில்? ஆவலாக உள்ளதா?

வாங்க நீங்களும் வண்டியில் ஏறுங்க… கோவையை ஒரு ரவுண்ட் அடிக்கலாம்…:)

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.


Friday, January 18, 2013

பொங்கலோ பொங்கல் - கோலங்கள்


பொங்கல் சமயத்தில் திருவரங்கத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலு்ம் விதம் விதமாய் கோலங்கள் போட்டு வண்ணங்கள் நிரப்பி அசத்தி இருப்பார்கள்.  நான் ரசித்த சில கோலங்களோடு, எங்கள் வீட்டு வாயிலில் நான் போட்ட கோலங்களையும் உங்கள் பார்வைக்கு இங்கே பகிர்ந்திருக்கிறேன்....  அடுத்த பகிர்வில் சந்திக்கும் வரை...

அன்புடன்

ஆதி வெங்கட்.Tuesday, January 15, 2013

ரங்கனைக் கண்டேன் – 2
இரண்டு மணிநேர காத்திருப்பிற்குப் பின் ஒரு வழியாக மோகினி அலங்காரத்தை கண்டு வந்தேன் என்று சென்ற பகுதியில் சொன்னேன் அல்லவா. அடுத்த நாள் வைகுண்ட ஏகாதசி ஆச்சே. கடந்த பத்து வருடத்தில் வைகுண்ட ஏகாதசியின் போது ஸ்ரீரங்கத்தில் இருப்பது இது தான் முதல் முறை. காலையில் எழுந்து குளித்து தயாரானோம். சரி சொர்க்க வாசல் படி மிதிப்பதற்கு செல்லலாம் என்று வடக்கு வாசலுக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போ ஒரு வரிசை தெற்கு வாசலை நோக்கி சென்று கொண்டிருந்தது. காவல் துறையினரிடமும், உள்ளூர்வாசிகளிடமும் விசாரித்ததற்கு, அது தான் சொர்க்க வாசல் படி மிதிப்பதற்கு செல்லும் வரிசையாம். அந்த வரிசை சித்திர வீதி, உத்திர வீதி தாண்டி ”ரங்கா ரங்கா” கோபுரத்திற்குள் நுழைந்து அங்கு பல வரிசைகளைத் தாண்டி படி மிதிக்க எப்படியும் மாலையாகி விடும் என்றார்கள்.

என்னுடன் வந்த மாமியார் “இதெல்லாம் நடக்கிற வேலையே இல்லை. இன்று மிதித்தால் தான் சொர்க்கம் கிடைக்குமா? இரண்டு நாள் கழித்து போனாலும் கிடைக்கும் வா…..” என்று எங்களை ரத்னாங்கி சேவை பார்க்க அழைத்துச் சென்றார்.

பெருமாள் திருமாமணி மண்டபத்தில் (ஆயிரங்கால் மண்டபத்தில்) எழுந்தருளியிருந்தார். அங்கும் வரிசையோ வரிசை தான். என்னடா இது! மூலவரை பார்க்க 250 ரூ கட்டணம் கட்டினாலும் அவ்வளவு சீக்கிரம் முத்தங்கி சேவை தான் இப்போதைக்கு பார்க்க முடியாதென்றால் இங்கும் தரிசனம் கிடைக்காதா என கவலை வந்து விட்டது. சரி முயற்சி செய்யலாம் என்று மண்டபத்தில் சிறிது தூரம் சென்றோம். அங்கு ஒரு தடுப்பின் அருகில் நின்று பெருமாளை தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். நாங்களும் அங்கு நின்று நன்றாகவே தரிசனம் செய்தோம். அருகில் சென்று பார்த்தால் தான் ரங்கன் அருள்வானா என்ன! இங்கிருந்தும் எல்லோர்க்கும் அருள் புரிந்து கொண்டிருந்தான்.

பலவிதமான ரத்தினங்களால் அலங்கரிக்கப் பட்ட அங்கியை அணிந்து கொண்டு அனைவருக்கும் காட்சி தந்து கொண்டிருந்தான். இந்த ரத்னாங்கி சேவை வருடத்தில் ஒருமுறை தான் இருக்குமாம். இந்த ரத்னங்களுக்கு நோய் நொடிகளை குணமாக்கும் தன்மை உண்டாம்.

மண்டபத்தை விட்டு வெளியே வந்தால் அங்கு பிரசாத கடைகள் நிறைய இருந்தன. அங்கு கும்பலோ கும்பல்…. அதன் பின் வெள்ளைக் கோபுரத்தின் வழியே வெளிவந்தோம். புதிதாக கடைத் தெருக்கள் நிறைய முளைத்திருந்தன. கடைக்காரர்கள் பலர் வட இந்தியர்களே…. அவர்கள் தமிழ் பேசும் ஸ்டைலிலேயே நான் புரிந்து கொண்டு இந்தியில் பேசி வாங்கிக் கொண்டேன். கோல தட்டு விற்றுக் கொண்டிருந்தவர் மஹாராஷ்ட்ராவிலிருந்து வந்திருக்கிறாராம். அவ்வளவு கும்பலிலும் சின்ன பேட்டி வேறு எடுத்தேன்.

ரோஷ்ணிக்கு கிச்சன் செட்டுக்கான பொருட்கள் சிலதும், கோல தட்டுகளும், பொட்டு அச்சும் வாங்கிக் கொண்டு ஒரு பிரதட்சணமாக உள்வீதி முழுவதையும் சுற்றி விட்டு வந்தோம். ஆங்காங்கே அன்னதானம் செய்து கொண்டிருந்தனர். வெளியூர் ஆட்கள் வாங்குவதும், சிலர் சாப்பிட்டு விட்டு கீழே மீதியை போடுவதும், அதை பலர் மிதிப்பதுமாக தொடர்ந்து கொண்டிருந்தது. நாங்கள் அன்று முழுவதும் பலகாரம் ஆகையால் வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு இடத்தில் துளசி தீர்த்தம் தந்தார்கள்., அதை மட்டும் வாங்கி குடித்தோம்.

அன்று மாலையும் ஒரு முறை சென்று ரத்னாங்கி சேவையை சற்று தள்ளி நின்று பார்த்து விட்டு, சொர்க்க வாசல் படி மிதிக்க எனக்கு ஒரு நப்பாசை, சென்று பார்த்தால் வரிசை இன்னும் பெரிதாகத் தான் ஆகியுள்ளதே தவிர குறையவில்லை. மார்கழி மாதம் ஆகையால் சரி அப்படியே சில வீதிகளில் வாசலில் இட்டிருக்கும் கோலங்களை பார்க்கலாம் என்று ஒரு ரவுண்ட் அடித்து சில கோலங்களை கண்டு மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டு, மாலை காய்கறி சந்தையில் அடுத்த நாள் துவாதசிக்கு அகத்திக்கீரையும், நெல்லிக்காயும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். சந்தையில் பலவிதமான காய்கறிகளை நறுக்கி கூறு போட்டு விற்று கொண்டிருந்தார்கள். அது எதற்கு என விசாரிக்க மாமியார் சொன்னார். திருவாதிரைக்கு எல்லா காய்களையும் போட்டு கூட்டு செய்து களியுடன் நைவேத்தியம் செய்வோம் இல்லையா…. அது போல் இங்கு நாளை துவாதசிக்கு 21 காய்களை போட்டு குழம்பு செய்வார்கள் என்று. சரி நாம் அவியல் செய்ய உதவும் என கால்கிலோ 10 ரூபாய் எனக் கூற வாங்கிக் கொண்டேன்.

வீட்டிற்கு வந்தும் மனதில், எங்கிருந்தெல்லாமோ படி மிதிக்க வருகின்றனர். இந்த வருடம் நாம் இங்கிருந்தும் முடியவில்லையே என ஒரு  எண்ணம்….

அதன் பின் நாங்களும் திடீர் பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியதாகி விட்டது. அந்த இனிமையான ட்ரிப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன். ஊரிலிருந்து வந்ததும் ராப்பத்து உற்சவத்தின் இறுதி நாளன்று கும்பலில்லாமல் இரண்டு முறை சொர்க்க வாசல் படி மிதிக்க முடிந்தது. சரி ஓரளவு த்ருப்தியடைந்ததும் முத்தங்கி சேவையும் இன்றோடு சரி தானே…. முயன்று பார்க்கலாமா என்று பார்த்தால் ம்ஹூம் வரிசையோ வரிசை…. சரி அவரை பார்க்க அவ்வளவு சுலபத்தில் முடியுமா….. என்று அழைக்கிறானோ…..எப்போ ப்ராப்தம் இருக்கோ…. அப்போ தான். என மனதை சமாதானம் செய்து கொண்டு,

கோபுர தரிசனம் கோடி புண்ணியமாயிற்றே VIEW POINT பார்க்கலாம் என்று கட்டணம் செலுத்தி, பெரியவர்களுக்கு 10 ரூபாய், சிறியவர்களுக்கு கட்டணம் கிடையாது. 21 கோபுரங்களை தரிசனம் செய்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம். இப்போ ரங்க நாச்சியாருக்கு ராப்பத்து உற்சவம் நடக்கிறது. படி தாண்டா பத்தினி ஆகையால் சன்னிதி உள்ளேயே புறப்பாடு. உள்ளேயே மண்டபத்தில் காட்சி தருகிறாள். கண்ணாடியில் அழகு பார்த்து கொள்கிறாள். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக அழகோ அழகு தான்….

அங்கு ஒரு பெரியவர் பெருமாள், தாயாரின் படங்களை மணிகள், சம்கிகள், பூக்கள், கோல்டன் பேப்பர் என வைத்து அலங்கரித்து விற்கிறார். நுண்ணிய வேலைப்பாடு தான். அழகாக இருந்தது. 300 ரூபாயாம். அங்கு நிற்கும் போது தான் மேலே பார்த்தேன். அழகான ஓவியங்கள். பராமரிப்பில்லாமல் அழிந்து கொண்டு வருகிறது. அந்த காலத்தில் இயற்கை வண்ணங்களைக் கொண்டு தீட்டியிருப்பார்கள்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.