Monday, December 30, 2013

உப்மாவும்! முஸ்கானும்!


எங்கள் மகளின் மழலைப் பருவ நாட்களை பற்றிய டைரி இது!

முதல் பகுதிஎம் ஃபார் மோங்க்கி!


பள்ளி செல்ல ஆரம்பித்ததிலிருந்தே உடன் படிக்கின்ற குழந்தைகளின் பெயர்களை அவள் மழலை மொழியில் கூறும் போது ஒன்றுமே புரியாது….:)) நான் [B]பாயா! [G]கேர்ளா! என்று விசாரிப்பேன்! தில்லியில் உள்ள எல்லா பெண் குழந்தைகளுமே தலைவிரி கோலமாக அல்லது பாய் கட் பண்ணியோ, தோடும் இல்லாமல், பொட்டு வைக்கும் பழக்கமே இல்லாதவர்கள் :) ஆதலால் அவளும் [B]பாய் என்று சொல்லி விடுவாள்….:))

பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும்…MUSKAAN, KASHISH RATHORE, BANU SONI, THULIKA, PALAK, YUMNAA, RONAK, KASHISH SONI இப்படி…. பெயர்களை வைத்து பையனா! பொண்ணா! என்று கண்டுபிடிப்பது கடினம்….:) வட இந்தியர்கள் தந்தையின் பெயரை இனிஷியலாக போட்டுக் கொள்ள மாட்டார்கள்தங்களது குடும்ப பெயர்களை தான் தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வார்கள்


வகுப்பில் குழந்தைகளை ஷேர் பண்ணிக் கொண்டு சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் - ஆனால் நீங்களோ! நானோ நினைப்பது போல் குழந்தைகளுடன் அல்ல! ஆசிரியருடன்…:) நாம் கொடுக்கின்ற உணவில் ஆசிரியர் ஒரு சிறுபகுதி எடுத்துக் கொள்வார். அது தென்னிந்திய உணவாக இருக்கும் பட்சத்தில் பெரும்பகுதி காலியாகி விடும். இது போக மாதா மாதம் வரும் இரண்டாவது சனிக்கிழமையில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் என்னிடம் தோசையுடன் சாம்பாரும் சட்னியும் ஒருநாள் கொடுத்து விடும்படி வேறு சொல்வார்! :)


இந்த பழக்கத்தால் தமிழகம் வந்த பின்னாலும் ஒவ்வொரு முறை அவளது ஆசிரியரை சந்திக்கும் போது ரோஷ்ணியை பற்றி அவள் ஆசிரியர்கள் கூறுவது என்னவென்றால் – லஞ்ச் பாக்ஸிலிருந்து எடுத்துக் கொள்ளும்படி எங்களைத் தொந்தரவு செய்கிறாள் என்று….:) நானும் இங்குள்ளோர் அப்படியெல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள், என்று சொல்லியும், அவள் இன்றும் அப்படித் தான் செய்து கொண்டிருக்கிறாள்.. ஆசிரியர்களும் வட இந்திய உணவாக இருக்குமானால் சிறிதளவு எடுத்துக் கொள்வார்களாம்…..:))

எல்.கே.ஜி, யூகே.ஜி முடிந்ததும், எங்களுக்கும் மத்திய தில்லியில் உள்ள அரசு குடியிருப்பில் வீடு கிடைக்கவே வேறு பள்ளி மாற்ற வேண்டி வந்தது. அடுத்து என்ன! முன்பு போல் ஒரு சில பள்ளிகளில் அப்ளிகேஷன் வாங்கினோம், ஒரு பள்ளியில் எழுத்துத் தேர்வும் நடைபெற்றது.. என்ன ஆனது என்று, அந்த கதையைப் பற்றி இந்த பகுதியில் போய் பாருங்க…:) மத்திய தில்லி என்பதால் பள்ளிக் கட்டணங்களும் முன்பை விட அதிகமாகவே இருந்தது…:( அங்கும் ஒரு வருடம் படித்தாள்…..

தில்லியில் உள்ள ஆசிரியர்களின் மனப்பாங்கு எப்படி என்பதை பற்றி முன்பு நான் எழுதிய பதிவை போய் பார்த்தால் தெரியும்அது போல அதிலேயே டியூஷன் கலாச்சாரத்தை பற்றியும் எழுதியிருப்பேன்

பள்ளிகளில் உபயோகத்தில் உள்ள ஒரு சில வார்த்தைகள் நமக்கு வேறுவிதமான அர்த்தங்களை தரும்.. அவைகளில் ஒரு சில இங்கே..

COPY – NOTE BOOK
PAPER – EXAM


மூன்று வருட பள்ளிக் காலங்களை தில்லியில் கழித்து விட்டு திருவரங்கம் வந்து சேர்ந்தோம்… C.B.S.E பாடத்திட்டத்தில் இடம் கிடைக்காததால் MATRICULATIONல் சேர்த்தோம். அது தான் இப்போது சமச்சீர் ஆகி விட்டதே. அப்போது தமிழை நினைத்து தான் நான் மிகவும் பயந்தேன். காரணம் இரண்டாம் வகுப்பு என்கிற போது தமிழில் வாக்கியங்களே வந்திருப்பார்களே. இவளுக்கு அம்மா, அப்பா என்கிற இரண்டு வார்த்தையும் அதிலுள்ள எழுத்துக்களுமே அடையாளம் காட்டத் தெரியும் :)) எழுத்துத் தேர்வில் தமிழை சுமாராக செய்திருந்தாலும் இடம் கிடைக்கப்பட்டு, சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே நன்கு பிடித்து கொண்டு விட்டாள். அடுத்து வந்த காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் வகுப்பில் அவளே தமிழில் முதல் மதிப்பெண். புத்தகங்களும் படிக்க தொடங்கி விட்டதால், சுட்டி விகடன் வாங்கித் தந்து வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளோம்.

பள்ளிநாட்கள் என்றும் இனிமையானது. இனி வரும் நாட்களும் இனிமையாகவே அமைய அந்த கடவுள் அருள் புரியட்டும்

இதுவரை இந்த தொடரை ஆர்வத்துடன் வாசித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்


சொல்ல மறந்துட்டேனே! உப்மா என்று தலைப்பில் கொடுத்து விட்டு அதைப் பற்றி ஒன்றுமே சொல்லா விட்டால் எப்படி? அவள் படித்த பள்ளி ஒன்றின் பிரின்சிபால் பெயர் தான் அது - UPMAA SAXSENA…..:)))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்..


Thursday, December 26, 2013

கதம்பம் – 19

திருவரங்கம் கோயில் இற்றைகள்:-கடந்த ஒன்றரை மாதங்களாகவே, அதாவது கார்த்திகை மாத ஆரம்பத்திலிருந்தே திருவரங்கம் கோவில் மக்கள் வெள்ளத்தால் மூழ்கி தவிக்கிறது. சபரிமலை பக்தர்கள் ஒருபுறம், மேல் மருவத்தூர் பக்தர்கள் ஒருபுறம் என வீதிகளில் எப்போதும் மக்கள் நடமாட்டம். இப்போது மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் கண்ணாடி அறை சேவையை தரிசிக்க வேறு வரிசை. முடிந்த அளவு சென்று தரிசித்து வருகிறேன். புகைப்படமெடுக்க அனுமதியில்லையாம் :( அதனால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. தினமும் அன்றைய திருப்பாவை பாசுரத்தினை மையமாக வைத்து வெகு அழகாக அலங்கரிக்கிறார்கள்.

அடுத்து வரவிருக்கும் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மக்கள் வெள்ளத்தை சமாளிக்க வரிசையில் செல்ல தட்டிகள் அமைத்து, வீதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி என வேலைகளுக்கா பஞ்சம்! தொடர்ந்து ஏதோ ஒரு விழா, கொண்டாட்டம் திருவரங்கத்தில்!

ஜன்னல் காட்சிகள்:-

நேற்று முன் தினம், சமைத்துக் கொண்டே ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கு கீழே உள்ள பாட்டி நீண்ட நாட்களாகவே படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரது நிலைமை பற்றி அவரது மகள் வேறு ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்க, அங்கு வந்த ஒருவர் தான் ஒரு அமைப்பாக வயதானவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, டயப்பர் மாற்றுவது போன்றவற்றை சேவை மனப்பான்மையில் செய்து வருவதாகச் சொல்லி தன் முகவரியையும், அலைபேசி எண்ணையும் தந்து விட்டுச் சென்றார். இப்படிப்பட்ட உதவும் மனப்பான்மையுள்ள மனிதர்கள் இருப்பதால் தான் அங்கங்கே மழை பெய்கிறது.

தேன் மிட்டாய்:-பள்ளிப்பருவத்துக்கு பிறகு சமீபத்தில் ஒருநாள் தெற்கு வாசலில் உள்ள பொரிகடலைக் கடையில் அவல், பொரிகடலை முதலியவற்றை வாங்கிக் கொண்டிருந்த போது, எதேச்சையாக இந்த தேன்மிட்டாயை பார்த்தேன். தயக்கத்துடன் தேன் மிட்டாய்ன்னு சொல்வாங்களே இது தானே? எனக் கேட்க கடைக்காரரும் ஆமோதித்தார். உடனே இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக் கொண்டேன். 5 ரூபாய் பாக்கெட்டுக்குள் 10 தேன் மிட்டாய்கள். :)) ரோஷ்ணியும் சாப்பிட்டு விட்டு அதற்கு ரசிகையாகி விட்டாள். :)) அடுத்த முறை சென்ற போது தீர்ந்து விட்டது என்று சொன்னார் கடைக்காரர் - உடனே தீர்ந்து விடுமாம். என்னைப் போல் தேன்மிட்டாய் ரசிக்கும் ஜீவன்களும் இன்னும் இருக்காங்க போல! :))

பார்த்ததில் பிடித்தது:-

திருதிரு துறுதுறுஎனும் திரைப்படத்தினை சமீபத்தில் தான் பார்த்தேன். விளம்பரத் துறையில் வேலை பார்க்கும் கதாநாயகனும், கதாநாயகியும் மாடலாக ஒரு குழந்தையைத் தேடி அலைந்து கடைசியில் ஒரு குழந்தையும் கிடைக்கிறது. அந்த குழந்தையை வைத்துக் கொண்டு அவர்கள் செய்கின்ற அமர்க்களம் இருக்கே…..:)) ஆனால் அந்த குழந்தையின் பெற்றோரிடம் ஒப்பந்த கையெழுத்து வாங்குவதில் தான் பிரச்சனையே. என்ன செய்தார்கள்? முடிந்தால் நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன். இதில் மெளலி ஞாபக மறதியால் பெயரை மாற்றி மாற்றிச் சொல்லி சிரிப்பில் மூழ்கடிக்கிறார்.

ரோஷ்ணி கார்னர்:-

தினமும் ஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு வருவாள். ஒருநாள் என்னோட பெயரை மாத்திடும்மா என்றாள் ஏன்? அழகான பெயரைத் தானே உன் அப்பா தேர்வு செய்து வைத்தார். ரோஷ்ணி என்றால் வெளிச்சம் அல்லது பிரகாசம் என்று அர்த்தம். நீ பிரகாசமாக ஒளிர வேண்டும் என்று வைத்தோம் என்றேன். என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் மூஷிணி, பூசணி என்று என்னெல்லாமோ சொல்கிறார்கள். அதனால் நாளைக்கே என்னோட பெயரை மாத்திடு என்கிறாள். ஒருவழியாக சமாதானம் செய்யவே போதும் போதுமென்றாகி விட்டது:))  இந்த மாதிரி நிறையவே வரும்மார்கழி மாதக் கோலங்களை பார்த்து ஆசை வந்து, தற்போது கோலம் போட பழகிக் கொண்டிருக்கிறாள் - காகிதத்திலும், தரையிலுமாக…. அப்படி அவள் வரைந்த கோலம் மேலே!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.  

Tuesday, December 24, 2013

தவலை அடை!இது ஒரு பாரம்பரிய சிற்றுண்டி. என் மாமியாரிடமிருந்து தான் இதை கற்றுக் கொண்டேன். அந்த காலத்தில் வெண்கலத் தவலையில்(பானை) இதை செய்திருப்பார்கள். அதனால் இந்த பெயர் வந்திருக்கிறது. நாம் இன்று தோசைக்கல்லில் தான் போட்டு செய்யப் போகிறோம். இது கட்லட்டின் முன்னோடி என்று சொல்லலாம். இந்த தவலை அடையின் பாரம்பரிய செய்முறையை பற்றி கீதா மாமி எழுதியிருக்காங்க பாருங்க. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான இந்த சிற்றுண்டியின் செய்முறையை பார்க்கலாமா?

தேவையானப் பொருட்கள்:-

பச்சரிசி – 1 தம்ளர்
துவரம்பருப்பு – 2 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 மேஜைக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தேங்காய் பல்லு பல்லாக கீறியது தேவையான அளவு

தாளிக்க:-

எண்ணெய் தேவையான அளவு
கடுகு – ¼ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
வரமிளகாய் – 3 (அ) 4
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:-அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை மிக்சியில் போட்டு ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களான கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கிள்ளிய வரமிளகாய் துண்டங்கள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.. வறுபட்டதும் 21/2 தம்ளர் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய்த் துண்டங்களையும், தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.. தண்ணீர் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள அரிசி கலவையை போட்டு கிளறவும். உதிர் உதிராக வரும் அளவுக்கு கிளற வேண்டாம். தண்ணீர் சுண்டி கொஞ்சம் கெட்டியாக வந்தால் நிறுத்தி விடலாம்.கை பொறுக்கும் சூட்டில் ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.. தோசைக்கல்லை காயவைத்து உருண்டைகளை உள்ளங்கை அளவு அடைகளாக கைகளில் வைத்தோ அல்லது வாழையிலை, பிளாஸ்டிக் ஷீட் இவற்றில் வைத்தோ தட்டிக் கொள்ளவும். மெலிதாக தட்டவேண்டாம். நான் கைகளில் வைத்தே தட்டுவது தான் வழக்கம்.ஒரு சமயத்தில் ஏழு அடைகள் வரை தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு மூடவும். நிதானமான தீயிலேயே இருக்கட்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து, கவனமாக அடைகளை திருப்பிப் போட்டு, மீண்டும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். இருபுறமும் முறுவலாக வந்த பின்னர் எடுத்து பரிமாறவும். இதற்கு சட்னி, சாம்பார் இவையெல்லாம் தேவைப்படாது. உங்களுக்கு விருப்பமிருப்பின் அவற்றோடோ அல்லது இட்லி மிளகாய்ப்பொடியுடனோ சாப்பிடலாம்.

சுவையான தவலை அடை, ருசிக்க தயார்….


நீங்களும் செய்து பார்த்து உங்க வீட்டில் உள்ளவர்களையும் அசத்துங்களேன்..

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

தொடர்புடைய பதிவுகள்:-


Monday, December 23, 2013

திரும்பி பார்க்கிறேன் – தொடர்பதிவு!காணாமல்போன கனவுகள் ராஜி, ஒரு தொடர்பதிவு போட்டிருந்தாங்க! நானும் என்னுடைய பின்னூட்டத்தை எழுதி விட்டு வந்தேன். அதில் நம்ம பெயர் இல்லை தப்பித்தேன் என்று நினைத்தேன். விதி வலியது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒருவர் வேறு ஒருவரால் அழைக்கப்பட்டதாக சொல்ல தேடி எடுத்து என்னை கோர்த்து விட்டு விட்டார்…:))

சரி! என் சொந்தக் கதையை படிக்கணும்னு உங்களுக்கு எழுதியிருக்கு – வாங்க படிக்கலாம்!…:))

வழக்கம் போலத் தானே இந்த வருடமும் என நினைத்த நான், சற்று யோசித்து பார்த்தேன்.. சந்தோஷமும், சங்கடமும் கலந்து தான் இருந்திருக்கிறது. கண்ணீர் திரையிட்ட தருணங்களை ஒதுக்கி விட்டு சந்தோஷ தருணங்களை மட்டும் பார்க்கலாம்..

எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நடந்த குடியரசு தின விழா, மற்றும் மகளிர் தினவிழாவுக்காக நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றேன்…:)) எனக்கே என் மீது நம்பிக்கை வந்த நாட்கள் அவை….

ஆகஸ்டு மாதத்தில் டூ வீலர் ஓட்ட வகுப்பில் சேர்ந்து விழுந்து வாரிக் கற்றுக் கொண்டேன்…இதை பற்றியும் ஓரம் போ ஓரம் போ என்ற தலைப்பில் 
இங்கு பார்க்கலாம்....:))

ரோஷ்ணி பள்ளி ஆண்டு விழாவில் இரண்டாம் பரிசு வாங்கினாள்சமீபத்தில் நடந்த குழந்தைகள் தின ஓவியப் போட்டியிலும் முதல் பரிசு வாங்கியிருக்கிறாள்ஜூன் மாதத்திலிருந்து பாட்டு கற்றுக் கொள்ள வகுப்பில் சேர்ந்திருக்கிறாள்..

சைக்கிள் வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை அவளது தந்தை நனவாக்கியதால், அவளுக்கு கற்றுக் கொடுத்து கொண்டிருக்கிறேன்அவளுக்கு கற்றுக் கொடுக்கும் சாக்கில் நானும் 6,7 ரவுண்ட் ஓடி வருகிறேன்….:))

ஆகஸ்டு மாதத்தில் சென்னையில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்று பல வருடங்களுக்குப் பிறகு என் தந்தை வழி உறவுகளை சந்தித்தது…. ஒருநாள் ட்ரிப்பாக மகாபலிபுரம் வரை சென்று வந்தது என்று இனிமையான தருணங்கள் அவை

அடுத்து பதிவர் திருவிழாவில் நாங்கள் குடும்பமாக பங்கேற்று நிறைய பதிவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கப் பெற்றோம்

சீனா ஐயா தம்பதிகள், வை.கோ சார், ருக்மணி சேஷசாயி பாட்டி போன்றோர் எங்கள் இல்லத்துக்கு வருகை தந்தார்கள்

வருத்தங்கள் இருந்தாலும் அவற்றை உங்களுடன் பகிர்ந்து உங்களையும் சோகம் கொள்ள வைக்க ஆசையில்லை – ஏற்கனவே பலர் டீ.வி. சீரியல் பார்த்து அழுது கொண்டிருக்க, இது வேறு எதற்கு? 

இந்த தொடரை விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.Friday, December 20, 2013

உலகின் சிறந்த 10!

நேற்று ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது அதில் சில உணவுப் பொருட்களின் நன்மை தீமைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.. உடனே எனக்கு ஒரு யோசனை தோன்றியது... 


உலகின் சிறந்த சத்துள்ள 10 உணவுகளை பற்றி தேடினேன்..உலகின் சிறந்த சத்துள்ள 10 உணவுகள் .......


1) apple


2) almonds3) broccoli


4) blueberries


5) oily fish


6) leafy green vegetables


7) sweet potatoes


8) wheat germ


9) avacadoes


10) oatmeal


இந்த ஒவ்வொரு உணவுகளில் உள்ள சத்துக்களை பற்றி உங்களுக்கு தெரியாததல்ல....இவற்றில் எத்தனை உணவுகளை நாம் நாள்தோறும் எடுத்துக் கொள்கிறோம்? கொஞ்சம் யோசித்து பாருங்க...மீண்டும் சந்திப்போம்,ஆதி வெங்கட்

திருவரங்கம்.Wednesday, December 18, 2013

திருவாதிரைத் திருநாள்.....களியும்! கூட்டும்!

இன்று திருவாதிரைத் திருநாள்.... 

நன்றி - கூகிள்

சேந்தனார் என்னும் சிவபக்தன், சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வசித்து வந்தார்... தினமும் சிவனடியார்களுக்கு அமுது படைத்து அவர்கள் மனம் கோணாமல்  நடந்து கொள்வார்... ஒருமுறை மழை பெய்து விறகுகளெல்லாம் நனைந்து விடவே என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்...

அந்நேரம் ஒரு அடியாரும் வந்து சேரவே, ஈர விறகில் கஷ்டப்பட்டு சமைத்து வீட்டில் இருந்த அரிசியையும், உளுந்தையும் போட்டு களி செய்து சிவனடியாருக்கு படைத்தனர். அவர் இதுவரை தன் வாழ்நாளிலேயே இப்படியொரு களியை சாப்பிட்டதில்லை என்று கூறியதும், தம்பதிகள் மகிழ்ந்து நடராஜரின் சந்நிதிக்கு ஓடோடிச் சென்றனர்... 

போகும் வழியெல்லாம் இவர்கள் படைத்த களி சிதறிக் கிடந்தது... நடராஜரின் வாயிலும் களி இருக்கவே, தங்கள் வீட்டுக்கு அமுதுண்ண வந்தது அந்த சிவபெருமானே என அகமகிழ்ந்தனர்... அன்று மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரமாக இருந்தபடியால் அன்று முதல் களி செய்து கடவுளுக்கு படைப்பது வழக்கமாயிற்று...


சூரிய உதயத்திற்கு முன்பே களியும், எழுகறி கூட்டும் செய்து நைவேத்தியம் செய்யும் படி வீட்டுப் பெரியவர்கள் சொல்ல, அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வாசலில் கோலமிட்டு, விளக்கு ஏற்றி வைத்து, ரேடியோவில் சுப்ரபாதமும், கந்த சஷ்டி கவசமும் ஒலிக்க நானும் உடன் சொல்லிக் கொண்டே சமைக்க ஆரம்பித்தேன்... இன்றைய நாளின் சிறப்புகளையும் தெரிந்து கொண்டு, சாஸ்திரங்கள் குறித்த சுவாமி ஓம்கார் அவர்களின் உரையையும் கேட்டுக் கொண்டே சமையலை முடித்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்தேன்...:) 

ஏழுவித காய்கள் போட்டு செய்த கூட்டு!

ரோஷ்ணிக்கு அரைப்பரீட்சை நடப்பதால் அவளையும் படிக்க வைத்து, தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி விட்டு, அருகிலுள்ள சிவன் கோவிலுக்கும் சென்று தரிசித்து , வழியில் ஆஞ்சநேயரையும் பார்த்து விட்டு வீடு வந்தடைந்தேன்...

திருவாதிரைக் களி!
மாலையில் தான் ரங்கநாதர் கோவிலுக்கு சென்று வர வேண்டும்.. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் கண்ணாடி அறை சேவையில் பாசுரப்படி சிறப்பாக அலங்காரம் செய்திருப்பார்கள்... இதற்காகவே ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்து அலங்காரம் செய்வார்கள்... இன்று ஓங்கி உலகளந்த உத்தமன் என்று நினைக்கிறேன்... பார்த்து விட்டு வந்து பகிர்கிறேன்..

நன்றி - துளசி டீச்சர்

திருவரங்கம் முழுவதும் வண்ண வண்ண கோலங்களும், இரட்டை இழைக் கோலங்களுமாக கண்களைக் கவர்கின்றன... அவற்றையும் படம் பிடித்து வர வேண்டும்...:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.