தலைப்பைப்
பார்த்ததுமே யாரைக் காணோம், எதைக் காணோம் என்று எல்லோரும் பயந்துட்டீங்களா? பதட்டப்பட
வேண்டாம். பல வருடங்களுக்கு முன்னால் நிஜமாகவே என் பெயர் இப்படி காணாமல் போனவர்
பற்றிய அறிவிப்பில் வந்திருக்க வேண்டியது. அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் மனதில் பயத்தை உண்டு
பண்ணுகிறது.
என்னுடைய கோடை
விடுமுறை என்ற பதிவில் என் சிறு வயதில் அத்தை வீட்டிற்கு சென்றிருந்ததைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். சின்ன அத்தை வீடு
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.
இவர்கள் கூட்டுக் குடும்ப வாழ்கையை பல வருடங்களாக அனுபவித்து
வருகின்றனர். தினமும் சாப்பாடே மூன்று நான்கு பந்திகளுக்கு நடக்கும். இப்போது
அவர்களின் குழந்தைகள் வளர்ந்து படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும்
வெளியூர்/வெளிமாநிலங்களுக்கு என்று சென்றுவிட்டாலும் பெரியவர்கள் ஒன்றாகத் தான்
இருக்கிறார்கள்.
விடுமுறையில்
இந்த அத்தை வீட்டில் 15 நாட்கள் இருப்பதற்காக அப்பா என்னையும், தம்பியையும் கொண்டு
வந்து விட்டு விட்டுச் சென்றார். அப்பா-அம்மாவை பிரிந்திருப்பது எனக்கு ஏக்கமாக
இருந்தாலும், அங்கிருந்த குழந்தைகளுடன் எப்போதும் விளையாட்டு, தினமும் ஒரு சினிமா,
விதவிதமான ஐஸ்கிரீம், அவர்கள் நடத்தும் ஹோட்டலிலிருந்து தினமும் ஒரு டிபன் என்று
சந்தோஷமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் அருகில் உள்ள ஊரில் கோவில் திருவிழா
என்றும் அங்கு மயில்கள் நிறைய இருப்பதாகவும் அதற்குப் போகலாம் என்றும் என்னை
அத்தையின் புகுந்த வீட்டு மனிதர்கள் சிலர் அழைத்துச் சென்றனர்.
அந்த ஊரின்
பெயரை இப்போது நினைத்தாலும் ஞாபகம் வரவில்லை. கோவில் தரிசனம் முடிந்ததும் அங்கேயே
கையில் கொண்டு சென்றிருந்த உணவையும் சாப்பிட்டு விட்டு பேருந்து நிலையத்தை
சென்றடைந்தோம். பல ஊர்களுக்கும் செல்ல அங்கு மாறி மாறி பேருந்துகள் வந்து
கொண்டிருந்தன. மக்கள் கூட்டமோ அலை மோதியது. கைக்குட்டை, பை, இவற்றையெல்லாம் போட்டு
இடம் பிடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் ஒரு பத்து பேராவது இருந்திருப்போம்.
எல்லோருக்கும் இடம் வேண்டுமே என்று காத்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்திற்குப்
பிறகு எல்லோரும் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்துக்கு அருகில் சென்றோம். சரி இந்த
பேருந்தில் தான் ஏற வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று கூட்டத்திலிருந்த மக்கள் திபுதிபுவென்று பேருந்தில்
ஏறினர். எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் சடாரென திரும்பிப் பார்க்க
என்னருகில் இருந்த உறவினர்களைக் காணவில்லை. சுற்றும்
முற்றும் பார்த்தாலும் தெரியவில்லை. சரி பேருந்தில் ஏறி விட்டார்கள் என்று
நினைத்து நானும் பேருந்தில் ஏறிவிட்டேன். கும்பல் அதிகமாக இருந்ததால் ஓட்டுநரின்
அருகில் நின்று கொண்டு பின்னால் திரும்பி பேருந்தின் உள்ளே அவர்களை தேடிக் கொண்டே
இருக்கிறேன்… ஆனால்…
யாருமே
தென்படவில்லை…. பயம் வந்து விட்டது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. கீழே
இறங்கலாம் என்றால் நகரவே முடியவில்லை. வண்டியை வேறு எடுக்கப் போகிறார்கள். கடவுளே…
பேருந்து நகர
ஆரம்பிக்க… ஓட்டுநர் இருக்கும் பக்கத்தின் வெளியே என் உறவினர் கத்திக்
கூப்பிடுகிறார். ஏய், வண்டியை விட்டு சீக்கிரம் இறங்குடி என்று… நான் அப்போது தான்
கவனித்தேன். பின்பு அவர் ஓட்டுநரிடம் சொல்லி நிறுத்தச் சொல்ல நான் இறங்கினேன். அப்பாடா… எனக்கு உயிர் வந்தது.
கூடவே அழுகையும்.
அப்போது தான் அந்த
அண்ணா சொன்னார் "இப்படியே விட்டிருந்தா, நீ இராமேஸ்வரம் போயிருப்ப!" என்று. ஆமாங்க அந்த பேருந்து
இராமேஸ்வரம் செல்வதாம். பின்பு எல்லோருடனும் சேர்ந்து வீட்டிற்குப் போய் சேர்ந்ததும், அத்தையிடம் சொல்லி அழுதேன்.
எல்லோரும் மிகவும் ஆறுதலாக பேசினார்கள். இருந்தும் அன்றே எனக்கு ஜுரம் வந்து
விட்டது. அப்பா, அம்மாவிடம் செல்ல வேண்டும் என்று ஒரே அழுகை. ஒரு வாரம்
ஜுரத்துடனேயே இருந்தேன். எங்க ஊருக்கு வந்து அப்பாவையும், அம்மாவையும்
பார்த்ததும்தான் நிம்மதி வந்தது என்றும் சொல்லலாம்.
இந்த
சம்பவத்திற்குப் பிறகு என் பயம் மிகவும்
அதிகமாகி விட்டது. அப்பா-அம்மாவுடன் எங்கு போனாலும் என்னை விட்டுட்டு எங்கேயும்
போயிடாதம்மா என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன். கையையும் இறுக்கிப் பிடித்துக்
கொள்வேன்.
திருமணமான
பிறகும் என்ன, இப்பவும் இப்படித்தான். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அதை
பற்றி எனக்குக் கவலையுமில்லை. என் பயம் எனக்கு. கூட்டம் என்றால் கணவரின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். திருமணமான புதிதில்
கோவையிலிருந்து திருச்சிக்கு பேருந்தில் செல்லும் போது வாந்தியின் காரணத்தால் நான்
மாத்திரை போட்டு தூங்கி விட காங்கேயத்தில் வண்டி நின்றிருக்கிறது. கணவர் இறங்கி
போன் பேசப் போய்விட தீடீரென முழித்தவள் அருகில் கணவர் இல்லாததையும், அக்கம் பக்கம்
தேடியும் காணாததால் எனக்கு அழுகையே வந்து விட்டது. சிறிது நேரத்திற்கு பின் அவர் சிரித்துக் கொண்டே
வருகிறார்.
இப்படி
பலநேரம் என்னை பயமுறுத்துவதுண்டு. ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இறங்கி விட்டு வண்டி
கிளம்பி நான் பயந்து அழ ஆரம்பிக்கும் முன்னர் வந்து விடுவார்.
உண்மையிலேயே
என் சிறுவயதில் அன்று காணாமல் போயிருந்தால்?... நினைத்துக்
கூட பார்க்க முடியவில்லை என்ன நடந்திருக்குமென்று?
மீண்டும்
சந்திப்போம்,
ஆதி வெங்கட். 





