Monday, December 3, 2012

சுவாரசியமான மருத்துவர்
சமீபத்தில் ரோஷ்ணிக்கு ஜூரமும், வாந்தியும் இருந்ததால் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தேன். குழந்தை பிறந்ததிலிருந்து மூன்று மாதங்கள் வரை இவரிடம் தான் காட்டி தடுப்பூசி எல்லாம் போட்டுக் கொண்டிருந்தேன். அதன் பின்பு தில்லியில் "திலக்ராஜ் டங்வால்" என்ற மருத்துவரிடம். இவரைத் தவிர வேறு யாரிடமும் காட்டுவதில்லை. ஒரே ஆளாக இருக்கட்டும் என்று மாற்றவில்லை. இப்போ மீண்டும் குழந்தையாக இருந்த போது பார்த்த இந்த மருத்துவரிடம் தான் காண்பித்தோம்.

எனக்கு இந்த மருத்துவரை பற்றி பேசினாலே அவர் ரோஷ்ணி கைக்குழந்தையாக இருந்த போது நடந்த சம்பவம் தான் நினைவுக்கு வரும். இவரிடம் தடுப்பூசி போட எடுத்துச் சென்ற போது குழந்தைக்கு மையால் நெற்றியில், கைகளில், கன்னத்தில், காலில் பொட்டுகள் வைத்திருந்தேன். மருத்துவர் முதலில் கேட்டது இது ஐடெக்ஸ் மையா, இல்லை வீட்டில் எடுத்த மையா என்று. ஐடெக்ஸ் தான் என நான் சொன்னதும், வீட்டில் எடுக்கும் மையே கூட விரல்களில் எடுத்து இடுவதால் இன்ஃபெக்‌ஷன் ஏற்படும். இதில் கடைகளில் வாங்கும் மையாகண்ணுக்கு முக்கியம் பார்வை தான், அழகு அல்ல. அதனால் தயவு செய்து இடாதீர்கள் என்றார். அன்றோடு விட்டு விட்டேன். நெற்றிக்கு வைப்பதோடு சரி. இப்போது வரை ரோஷ்ணிக்கு கண்களில் மை இட்டதே இல்லை. எனக்கும் மை வைத்து கொள்ளும் பழக்கமேயில்லை….

அதேப் போல் தொப்புள் கொடி விழுந்ததும் சிலர் அதில் சுருட்டை எரித்து அதன் சாம்பல் வைப்பாங்க. அதெல்லாம் கூடவே கூடாது. தானாகவே சரியாகிவிடும் என்றும் சொன்னார்.


சரி இப்போ மருத்துவமனைக்கு செல்வோம். அன்று ஞாயிறு என்பதால் விடுமுறையாக இருக்குமோ என்று காலையிலேயே தொலைபேசியில் அழைத்து விசாரித்தேன். 11.30க்கு அட்மிட் செய்திருக்கும் குழந்தைகளை பார்க்க வருவார். அதனால் 11.00 மணிக்கு வந்து விடுங்கள் என்று செவிலியர் தெரிவித்தார். சரியென்று 11 மணிக்கு அங்கு சென்று விட்டேன். என்னைப் போல் நிறைய தாய்மார்கள் அங்கு குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். முதலில் குழந்தைக்கு என்ன பிரச்சனை, உயரம், எடை, எவ்வளவு ஜூரம் என்று செவிலியர் பார்த்து குறித்துக் கொண்டு பின்பு டோக்கன் கொடுத்தார். மொத்தம் 23 குழந்தைகள். நாங்கள் பன்னிரெண்டாவது ஆள்.

சிறிது நேர காத்திருப்புக்கு பின் மருத்துவர் வந்தார். எல்லா பெற்றோர்களையும் முதலில் அழைத்து அமைதி காக்க சொல்லி மழைக்கு பின் எல்லா இடங்களிலும் வைரல் மற்றும் டெங்கு ஜூரம் ஆகியவை பரவியுள்ளது என்றும், டெங்கு ஜூரத்தை முதல் நான்கு, ஐந்து நாட்களுக்குள் சோதனை மூலம் கண்டுபிடிக்க இயலாது என்றும், அதே போல் ஜூரம் வந்தாலே டெங்குவாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் விளக்கங்கள் தந்தார். குழந்தை சோர்வாக இருந்தாலோ, சாப்பிட முடியாமல் போனாலோ, மலஜலம் ஒழுங்காக கழிக்க முடியாமல் போனாலோ தான் பயப்பட வேண்டும் என்று விளக்கமளித்தார். கொசு கடிக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளும் படியும், ஜன்னல்களில் நெட் அடிக்கலாம், ஓடோமாஸ் தடவி விடலாம், எப்பவும் ஃபுல் ட்ரெஸ் அணிவித்து விடும் படியும் சொல்லி விட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் என்று நேரம் ஒதுக்கினார். பின்பு வரிசைப்படி நான்கு நான்கு பேராக வரலாம் என்று சொன்னார்.

ஒவ்வொருவராக சென்று கொண்டிருந்தனர். பிறந்து ஐந்தே நாளான ஒரு குழந்தை வந்திருந்தது.  ரோஜாப்பூ போன்று அவ்வளவு மென்மை. அதன் தாய் அழுது கொண்டிருந்தார். ஏனென்று கேட்டேன். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் குழந்தையை பார்த்து விட்டு மஞ்சள் காமாலை வந்திருக்கும் போல என்று சொன்னார்களாம். அதனால் மருத்துவரிடம் காட்டி விட்டு செல்லலாம் என்று வந்திருக்கிறேன் என்றார். உடனே நான்  அதெல்லாம் ஒன்றும் இருக்காது. யார் சொல்வதையும் காதிலேயே வாங்காதீர்கள். மருத்துவர் என்ன சொல்றாரோ அது தான் முக்கியம்என்றேன்.

எங்க மகளுக்கும் இப்படித்தான் ஒருவர் சொன்னார். குழந்தையை இந்த மருத்துவரிடம் தான் எடுத்துச் சென்றோம். ரோஷ்ணியின் அப்பா வேறு அன்று காலையிலேயே தில்லிக்கு கிளம்ப வேண்டி இருந்தது. மனசு கேட்காமல் போகும் போதெல்லாம் தொலைபேசியில் அழைத்துக் கேட்டுக் கொண்டே இருந்தார். மருத்துவர் ஒன்றும் இல்லையென சொன்ன பிறகு தான் நிம்மதியாக பயணத்தை தொடர்ந்தார். தயவு செய்து உங்க அபிப்ராயத்தையெல்லாம் அடுத்தவரிடம் சொல்லி அவர்களை பயமுறுத்தாதீர்கள்.

அந்த குழந்தைக்கும் ஒன்றும் இல்லையென மருத்துவர் சொன்ன பிறகு அந்த தாயின் முகத்தில் எத்தனை ஒரு சந்தோஷம். குழந்தைகளை மருத்துவர் அவரும் குழந்தையாகவே மாறி கொஞ்சினார் என்று தான் சொல்ல வேண்டும். அங்கு இருக்கும் சின்ன சறுக்கு மரம் போன்ற விளையாட்டுகளில் அவரும் குழந்தைகளுடன் ஏறி விளையாடுவாராம்.

எங்க நேரம் வந்ததும் கூப்பிட்டார். என்னவென்று விசாரித்தார். மருந்துகள் கூட நாம் என்ன கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என விசாரித்து பெரும்பாலும் அதையே தொடரச் சொல்கிறார். ஒருசிலது தான் புதிதாக எழுதிக் கொடுக்கிறார். நான் நடுவில் தில்லியில் காட்டிக் கொண்டிருந்த மருத்துவர் தந்த ஃபைலை காட்டி தடுப்பூசிகள் இதுவரை போட்டது தவிர வேறு ஏதேனும் உள்ளதா எனக் கேட்க அவர் ஒரு பலகையை காட்டினார். அதில்….

ஞாயிறு என்று போட்டதன் கீழ் குழந்தைக்கு முடியாமல் போனதால் தான் நாங்கள் பார்க்கிறோம். அதனால் தற்போது அவசியமான கேள்விகளை மட்டும் கேளுங்கள். மற்றவற்றை மற்ற நாட்களில் OP யில் விசாரித்து கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தது. நானும் பார்த்து விட்டு சரி இன்னொரு நாள் வருகிறேன் என்றேன். தாராளமாக வாங்கோ செவிலியர்கள் உங்களை கைட் பண்ணுவாங்க என்றார். கிளம்பும் போது பைடா செல்லம் என்று ரோஷ்ணியிடம் சொன்னார்.

நல்லதொரு மனிதரை சந்தித்த திருப்தி ஏற்பட்டது.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

25 comments:

 1. பலரும் இது போல் பயமுறுத்துவது உண்டு... நாம் தாம் முடிவு எடுக்க வேண்டும்...

  அந்த மனிதர் - போற்றப்பட வேண்டிய மருத்துவர்...
  tm2

  ReplyDelete
 2. இதுபோல தன்மையாகபேசும் டாக்டர்கள் அமைந்து விட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்

  ReplyDelete
 3. நிஜமாகவே நல்ல டாகடர் தான்.
  நல்ல பதிவு .
  வாழ்த்துக்கள்.

  ராஜி

  ReplyDelete
 4. நல்லதொரு மனிதரை சந்தித்த திருப்தி ஏற்பட்டது.

  ReplyDelete
 5. உங்கள் பதிவினைக் கண்டதும் எனக்கு Dr. Safaya நினைவுக்கு வந்து விட்டார். தில்லியில் நாங்கள் மயூர் விஹார் - 3 ல் இருந்த போது அவரிடம்தான் எங்கள் குழந்தையின் தடுப்பூசிகளுக்கும் மருத்துவத்திற்கும் செல்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் செலவிடுவார். அதில் மூன்று நிமிடங்கள் குழந்தைக்கும் மீதி நிமிடங்கள் பெற்றோருக்கும். பல வருடங்கள் கழிந்த பின்னும் நினைவில் நிற்கும் ஒரு மருத்துவர்.

  (எனது தாயார் குழந்தை வளர்ப்பு பற்றி இரண்டு நிமிடம் பேசினாலே பொறுமையின்மையை கடைபிடிக்கும் என் மனைவி Dr. Safaya - வின் இருபது நிமிட உரையை அசையாமல் உட்கார்ந்து தலையாட்டுவார்)

  ReplyDelete
 6. மருத்துவர்கள் பலவிதம். இவர் பொறுமை ரகம் போல!நுங்கம்பாக்கம் டாக்டர் ஜே. விஸ்வநாத் கூட இந்த மாதிரி அன்பான மருத்துவர்தான்.

  ReplyDelete
 7. இப்படிப்பட்ட மருத்துவர் வாய்ப்பது அரிது...

  ReplyDelete
 8. நாம தைரியமாக இருந்தாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நம்மளை குழப்பிவிடுவதே பொழப்பா போச்சி,

  குழைந்தைக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தயவு செய்து அக்கம் பக்கத்தாரை கேட்கவேண்டாம் உடனே மருத்துவரை போய் பார்ப்பது மிகவும் நல்லது, இது எனது கருத்து.

  அருமையான உங்களது அனுபவத்தை எங்களுக்கும் உணர வைத்துவிடீர்கள் சபாஷ்!

  ReplyDelete
 9. குழந்தைகளுக்கான டாக்டர் மட்டுமே பொறுமையானவரா இருக்கணும்ன்னு இல்லாம எல்லா டாக்டர்களுமே பொறுமை அதிகம் உள்ளவர்களாக இருந்தா நல்லாத்தான் இருக்கும்.

  அருமையானதொரு மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

  ReplyDelete
 10. உண்மையாகவே அருமையான டாக்டர் தானுங்க...

  ReplyDelete
 11. ஆமாங்க, மருத்துவர்கள் சரியா அமைஞ்சிட்டாலே பாதி வியாதி குணமான மாதிரிதான். அதிலும் குழந்தை மருத்துவர்கள் - இப்படிப்பட்டவர்கள் காண்பது அரிது. பேரைச் சொன்னா தெரியாதவங்களுக்கும் பயன்படலாமோன்னு ஒரு எண்ணம். ரோஷ்ணி முழு நலம்தானே இப்போ.

  திருநெல்வேலியில் டாக்டர் தம்பி என்பவரும் இப்படிப்பட்ட பொறுப்பானவர்.

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு. பெங்களூரில் இரண்டு பகுதிகளில் வசித்து மூன்றாவது இப்போதிருக்கும் பகுதிக்கு வந்திருப்பினும், வந்த புதிதில் பிடித்துப் போன மருத்துவரிடமே இன்று வரை தொடருகிறோம்.

  ReplyDelete
 13. மருத்துவரை மட்டுமல்ல இன்னொரு சிறு குழந்தைக்காக மிக வருந்திய அந்த கணவன் - மனைவி இருவரின் நல்ல உள்ளமும் பிடித்தது :)

  கண்ணில் மை வைக்க கூடாது என்பது நல்ல தகவல். முடிந்தால் இப்பதிவை வானவில்லில் பகிர்கிறேன்

  ReplyDelete
 14. //எனது தாயார் குழந்தை வளர்ப்பு பற்றி இரண்டு நிமிடம் பேசினாலே பொறுமையின்மையை கடைபிடிக்கும் என் மனைவி Dr. Safaya - வின் இருபது நிமிட உரையை அசையாமல் உட்கார்ந்து தலையாட்டுவார்) //

  அண்ணாச்சி இதை அப்படியே அண்ணி கிட்ட சொல்லி இருக்கீங்களா? :)))

  ஏதோ நம்மாலானது :)

  ReplyDelete
 15. அவரைப் போன்ற மருத்துவர்களைப் பார்ப்பது அரிதாகி வருகிறது! என்ன செய்கிறது? என நம்மைக் கேட்டு நாம் கூறும் ஒவ்வொரு உபாதைக்கு ஒரு மருந்து என சீட்டு முழுதும் எழுதும் மருத்துவர்கள் பெருகும் காலமிது! நோய்முதல் நாடி... எல்லாம் அந்தக் காலம் என்றாகிவிட்டது! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 16. மருத்துவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்!

  ReplyDelete
 17. திண்டுக்கல் தனபாலன் - கருத்துக்கு நன்றிங்க.

  லஷ்மிம்மா - நன்றிம்மா.

  ராஜி - முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

  இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.

  ஈஸ்வரன் சார் - நன்றி.

  ஸ்ரீராம் - நன்றி.

  கே.பி.ஜனா சார் - நன்றி.

  ஆதி மனிதன் - நன்றிங்க.

  செம்மமலை ஆகாஷ் - முதல் வருகை என நினைக்கிறேன். நன்றிங்க.

  அமைதிச்சாரல் - நன்றிங்க.

  ஃபாயிஜா காதர் - நன்றிங்க..

  ஹுசைனம்மா - நன்றிங்க. இப்போ அவள் நலம் தான்.

  காஞ்சனா ராதாகிருஷ்ணன் - நன்றிங்க.

  ராமலஷ்மி - நன்றிங்க.

  மோகன்குமார் சார் - வானவில்லில் இப்பதிவை பதிகிறேன் என்று சொன்னதற்கு நன்றி. அன்று கணவன் வரவில்லை...மனைவி மட்டுமே குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றாள்...:) எப்போதுமே மருத்துவமனை என்றால் மனைவி தான்..:)

  வெங்கட் - என்னப்பா இது! குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிகிட்டு...அப்படியே ரீப்பீட் ஆயிடப் போகுது...:))

  சேஷாத்ரி சார் - நன்றி.

  புலவர் ஐயா - நன்றி.

  ReplyDelete
 18. மருத்துவர் சரியாக அமையணும். அதுதான் முக்கியம். எங்க குழந்தைங்களுக்கும் மருத்துவரை மாற்றியதே இல்லை. அதோட பலரும் பலது சொல்லத்தான் சொல்வாங்க. இந்தக் காதில் வாங்கி இன்னொரு காது வழியா விட்டுடணும். நாம என்ன செய்யறோமோ அதைத் தான் கடைப்பிடிக்கணும்.

  நுங்கம்பாக்கம் சைல்ட் ட்ரஸ்ட் மருத்துவர் விஸ்வநாதனையும் அப்படித்தான் சொல்வாங்க.

  ReplyDelete

 19. //December 5, 2012 8:16 PM
  Geetha Sambasivam said...
  நுங்கம்பாக்கம் சைல்ட் ட்ரஸ்ட் மருத்துவர் விஸ்வநாதனையும் அப்படித்தான் சொல்வாங்க.//


  //December 3, 2012 11:10 AM
  ஸ்ரீராம். said... மருத்துவர்கள் பலவிதம். இவர் பொறுமை ரகம் போல!நுங்கம்பாக்கம் டாக்டர் ஜே. விஸ்வநாத் கூட இந்த மாதிரி அன்பான மருத்துவர்தான்.//

  ஹிஹி......சேம்..சேம்... ஸ்வீட் ஸ்வீட்!

  ReplyDelete
 20. கீதா மாமி - கருத்துக்களுக்கு நன்றி.

  ஸ்ரீராம் - மீண்டும் நன்றி.

  ReplyDelete
 21. சுவாரசியமான மருத்துவர் பற்றிய இந்தப்பதிவு படிக்க நல்ல சுவாரஸ்யமாகவே உள்ளது. நன்றி.

  குழந்தை மருத்துவர் பெயர் + விலாசம் + தொலைபேசி எண் பற்றி எழுதியிருந்தால் மேலும் சிலருக்காவது பயன் அளிக்குமே!

  ReplyDelete
 22. வை.கோபாலகிருஷ்ணன் சார் - கருத்துக்களுக்கு நன்றி சார்.

  மருத்துவரின் பெயர் டாக்டர் ராகவன். ஸ்ரீரங்கத்தில் காந்தி ரோடில் ரெங்கஸ்ரீ கிளினிக் என்று உள்ளது. அங்கு தான் உள்ளார்.

  ReplyDelete
 23. கோவை2தில்லி said...
  //வை.கோபாலகிருஷ்ணன் சார் - கருத்துக்களுக்கு நன்றி சார்.

  மருத்துவரின் பெயர் டாக்டர் ராகவன். ஸ்ரீரங்கத்தில் காந்தி ரோடில் ரெங்கஸ்ரீ கிளினிக் என்று உள்ளது. அங்கு தான் உள்ளார்.//

  அவரை எனக்கு மிகவும் நன்றாகத்தெரியும். ஓரிரு முறை என் பேரனுக்காகப்போய் வந்துள்ளேன். என் அக்கா பேத்திகள் மூன்று சிறு குழந்தைகள் அதில் No. 2 + 3 Twins வேறு. இப்போது அவரிடம் தான் சென்று வருகிறார்கள். மிகவும் நல்ல டாக்டர் தான்.

  பதிவினைப்படித்ததும் ஒருவேளை அவராகத்தான் இருக்முமோ என்று நானே சந்தேகப்பட்டேன்.

  இப்போது நீங்களும், எனக்கு சந்தேகம் இல்லாமல் அவரே தான் எனச்சொல்லி விட்டீர்கள். சந்தோஷம். நன்றி.

  VGK

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…