Monday, December 10, 2012

கரைமேட்டுக் குறிஞ்சி


நெய்வேலி எழுத்தாளர்களின் சிறுகதைத்  தொகுப்பான "கரைமேட்டுக் குறிஞ்சி" எனும் புத்தகத்தை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. வருடாவருடம் நடைபெறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியையொட்டி இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. 31  சிறுகதைகளை கொண்ட இப்புத்தகத்தை சாரதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கூடத்தில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் நெய்வேலி என்று படித்ததற்குப் பிறகு இந்த நிலக்கரி நகரத்தை பற்றி என் கணவர் சொல்லும் போதெல்லாம் மனதில் கற்பனைக்குதிரையை தட்டி விட்டு கண்கள் விரிய கேட்டிருக்கிறேன். அங்கு நடைபெறும் புத்தகக் கண்காட்சி, நகர் முழுவதும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை போன்ற தகவல்கள், அமைதியான சூழ்நிலை, பாம்புக் கதைகள், பேய்க் கதைகள் (நல்லவேளை! நான் திருமணமாகி வரும் போது அவர்கள் அங்கு இல்லை), பங்குனி உத்திரத் திருவிழா, வில்லுடையான் பட்டு கோவில், நடராஜர் கோவில், சாலைகளின் பெயர்கள், தோட்டம், மரங்கள், செடிகள், கல்லூரிக் கதைகள் என் ஒவ்வொன்றுமே கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

என்னையும் மூன்று முறை நெய்வேலிக்கு அழைத்துச் சென்று தான் படித்த பள்ளிக்கூடம், அவர்கள் வசித்த வீடு, சுற்றித் திரிந்த சாலைகள், இப்போது அங்கு வசிக்கும் நண்பர்கள் வீடு, பங்குனி உத்திரத் திருவிழா என காண்பித்திருக்கிறார். நெய்வேலி பற்றிய என் நினைவுகளை தூண்டி விட்டது இந்த புத்தகம்.

ஒவ்வொரு கதையும் நெய்வேலியைச் சுற்றி தான் உள்ளது. அங்கு நடக்கும் நிகழ்வுகள், தொழிற்சங்கங்களின் போராட்டம், மரங்கள், புத்தகக் கண்காட்சி என நகர்கின்றன.

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நெய்வேலி எழுத்தாளர்கள் சுப்பு அருணாசலம், பா.சத்தியமோகன், கோவிந்தசாமி சேகர், தர்மசம்வர்த்தினி, த. அறிவழகன், இராம.ஆதவன், மேசா, ப.ஜீவகாருண்யன், இரவிச்சந்திரன், ஏ.முகமது முஸ்தபா, ஜூலியட் ராஜ், குந்தன், நளினி சாஸ்திரி, அன்பு சாவித்திரி, பூவை சுபா மதிவாணன், ஆர்.டி. உதயகுமார், வெ. வெங்கடாசலம், அ. பிரான்சிஸ், சுப்ரமணி, ப. கோவிந்தராசு, பா. மனோகரன், மாலா உத்தண்டராமன், பநியான், ப்ரீதி, ஜெ.பி. குமரகுரு, விஜி பாரதி, கி. இராமசாமி, மூங்கில் உதயா, நெய்வேலி நா. கிருஷ்ணமூர்த்தி, நெய்வேலி பாரதிக்குமார் (இவர் நமது நிலாமகளின் கணவர்) தென்றல் ஆகியோர்.

எல்லா கதைகளுமே அருமையாக உள்ளன. எதை குறிப்பிட எதை விட. இருந்தாலும் கரைமேட்டுக் குறிஞ்சி என்னும் அறுசுவை விருந்தில் ஒரு சிறு பகுதியாக ஒரு கதையைப் பற்றிச் சொல்கிறேன்

வீரரே நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நம் திருமணம் தடைபட்டால்...விசும்பலுடன் அமுதா வைரவனின் மார்பில் சாய்ந்தாள்.

கலங்காதே அமுதா. நிச்சயமாக நம் திருமணம் நடக்கும். ஒருவேளை நாம் பிரிய நேர்ந்தால், நான் வேறுயாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து மீண்டும் அடுத்த பிறவியிலாவது உன்னை மணப்பேன். இது வில்லுடையான் மீது சத்தியம். ஆனால் நீ யார், உன் தாய், தந்தை பற்றி சொல்ல மறுக்கிறாயோ

இது நெய்வேலி.நா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள வில்லுடையான்என்ற சிறுகதையில் உள்ள வரிகள். பாண்டிய நாட்டு தளபதி வைரவன் கானகத்தில் தன் புரவியில் சென்று கொண்டிருக்க திடீரென்று தன் உயிரை காப்பாற்றும்படி ஒரு அலறல். அலறல் வந்த திசையை நோக்கி சென்றால் அங்கு ஒரு சிறுவனை மலைப்பாம்பு விழுங்க காத்திருக்கிறது. அருகில் சென்று சிறுவனை மலைப்பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறான் வைரவன். நன்றி சொல்லி விட்டு வேறு தன்னை பற்றிய எந்த தகவலுக்கும் பதில் தராமல் அந்த சிறுவன் சென்று விட

அடுத்த நாள் கானகத்தில் இருந்த வில்லுடையானான முருகனிடம் ஒரு பெண் பாடல்கள் பாடி பூஜை செய்து கொண்டிருக்க யாருமில்லாத இந்த இடத்தில் இவள் எப்படி என்று விசாரிக்கஅவள் வாள்போர் புரிய அழைக்கிறாள். நேற்று தன் உயிரை மீட்டவர் இவர் தான் என அக்காளிடம் சொல்கிறான் சிறுவன். தங்களைப் பற்றிய எந்த விவரத்தையும் சொல்லாமல் தளபதியிடம் மனதை பறி கொடுக்கிறாள். காதலின் உச்சத்தில் இருவரும் பேசிய உரையாடல் தான் மேலே உள்ளது. பாண்டிய மன்னன் மூலம் சிறுவனும், அமுதாவும் பல்லவ நாட்டு ஒற்றர்கள் என தெரியவந்து அவர்களை வைரவனே கைது செய்ய அனுப்புகிறார் மன்னன். ஆனால் அதற்குள் தப்பி விடுகின்றனர். காதலியை பிரிய நேரிடுகிறது.

இவர்கள் அடுத்த ஜன்மத்தில் முத்து மற்றும் லட்சுமியாக பங்குனி உத்திர திருவிழாவில் வில்லுடையான் பட்டு முருகனை கண்டதும் கோவிலில் தங்கள் முன் ஜென்ம நினைவுகள் வந்து புரிந்து கொள்கின்றனர். அந்த நேரத்தில் திருமணம் பற்றிய உறுதி பூண்டதும் முத்துவுக்கு இராணுவத்தில் இருந்து அழைப்பு வருகிறது. விடுமுறை முடிந்து வரும்படி.

என்ன நட்புகளே சுவாரசியமாக இருந்ததா? வாய்ப்பு கிடைக்கும் போது வாங்கி வாசியுங்கள்.

புத்தகத்தை வாங்க அணுகவேண்டிய முகவரி

சாரதா பதிப்பகம்
G 4 சாந்தி அபார்ட்மெண்ட்
3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, (அஜந்தா ஹோட்டல் அருகில்)
இராயப்பேட்டை, சென்னை – 14
புத்தகத்தின் விலை ரூ 50


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

24 comments:

 1. உண்மைதான் நெய்வேலியில் வசிப்பவர்கள் அந்த அருமையான சூழ்நிலைக்கு அடிமையாகி விடுவர்.எல்லா வசதிகளும் நிறைந்த ஊர். நூல் அறிமுகம் நன்று.

  ReplyDelete
 2. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்கள் இத்தனை பேரும் நெய்வேலியைச் சேர்ந்தவர்களா. மிக மகிழ்ச்சி ஆதி. அதுவும் நளினி சாஸ்திரி கதைகள் மிகவும் பிடிக்கும்.
  நல்ல கதையைக் கொடுத்திருக்கிறீர்கள். வாங்கிப் படிக்க முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 3. சுவாரசியமாக பகிர்ந்த அருமையான கதை பற்றிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. படிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த புத்தக அறிமுகம் மிகவும் உபயோகமாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. நல்ல ஒரு கதை தொகுப்பாக இருக்கும் போலிருக்கிறது. கதையை பாதியில் நிறுத்தி விட்டு எங்களை வாங்கிப் படிக்க சொல்லுகிறீர்கள்.
  படிச்சிடறோம்.
  பாராட்டுக்கள் ஆதி!

  ReplyDelete
 6. நன்றி !

  அருமையான புத்தகம்

  ReplyDelete
 7. சுவாரஸ்யமான பகிர்வு.ஆனாலும் வர வர நீங்க அநியாயத்துக்கு புக் படிக்கிறிங்க போங்க.

  ReplyDelete
 8. அருமையான அறிமுக.பகிர்சவுக்கு நன்றி

  ReplyDelete
 9. படிக்க பகிர நிறைய புத்தகங்கள் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. இன்னும் இன்னும் படியுங்கள், பகிருங்கள்! :))

  ReplyDelete
 10. கதை அறிமுகம் சுவாரசியமாக உள்ள‌து ஆதி! முடிந்தால் வாங்கிப்படிக்க வேன்டும்!

  ReplyDelete
 11. மிக்க நன்றி தோழி... எங்க ஊர், எங்க மக்கள் பற்றி அறிமுகப் படுத்தியதற்கு.

  ReplyDelete
 12. வில்லுடையான்” கதை பகிர்வு மிக நன்றாக இருக்கிறது ஆதி.

  ReplyDelete
 13. புத்தக விமர்சனமும், சொல்லப்பட்டதோர் கதையும் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.

  // நெய்வேலி பாரதிக்குமார் (இவர் நமது நிலாமகளின் கணவர்) //

  ஆஹா, கூடுதலாக ஓர் தகவல்,
  இலவச இணைப்பு போல ;)

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 14. சுவாரஸ்யமான பகிர்வு.

  ReplyDelete
 15. அருமையான கதை பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 16. வில்லுடையான் பட்டி கோவிலுக்கு போன ஞாபகம் வந்தது.. அருமையான அறிமுகம்

  ReplyDelete
 17. வணக்கம்! நானும் இப்புத்தகத்தைப் படித்துள்ளேன்!மேடம்!தங்களது இரு பதிவுகளை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். வாருங்கள்!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_21.html நன்றி!

  ReplyDelete
 18. நல்ல கதை தொகுப்பாக இருக்கும் போலிருக்கிறது

  ReplyDelete
 19. ஆதி நலமா?
  ரோஷிணி எப்படி இருக்கிறாள்?
  உங்கள் எல்லோருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. நல்ல கதைப்பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete

 21. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
 22. அருமையானதோர் பகிர்வு ஆதி..

  ReplyDelete
 23. சுவாரசியமான புத்தக அறிமுகத்திற்கு நன்றி ஆதி.நீங்கள் புத்தகத்தையும் உங்கள் நினைவுகளையும் விவரித்திற்கும் விதம் மிக அருமையாக இருக்கு.

  ReplyDelete
 24. இப்பதிவினை படித்து கருத்துகளை தந்து என்னை மேலும் ஊக்கப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…