Wednesday, December 5, 2012

கதம்பம் – 12

கைசிக ஏகாதசி:நான் இதைப் பற்றி எழுதுவதற்குள் அடுத்து இந்த மாதம் 24 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியே வரப் போகிறது. ஏகாதசிகளிலே சிறப்பானதாம் இந்த கைசிக ஏகாதசி. இந்நாளில் எல்லோரும் வீதி பிரதட்சணம் செய்தார்கள். இப்படி பிரதட்சணம் செய்தால் மறுபிறவியே கிடையாதாம். நாங்களும் இம்முறை ஸ்ரீரங்கத்தில் இதில் கலந்து கொண்டோம். காலையில் ஒன்பது மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி சித்திரை வீதிகளில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, என நான்கு வீதிகளும் சுற்றி விட்டு, கோவிலுக்குச் சென்றோம்.

அங்கு பெருமாள் புறப்பாடு நின்று பார்த்தோம். கூட்டம் அலைமோதியது. கும்பலில் ரோஷ்ணிக்கு ஒன்றும் தெரியவில்லை. பின்பு ஒரு வேகம்பளு தூக்கக் கூடாது என்று சொன்னாலும் மனது கேளாமல் தூக்கி வைத்துக் கொண்டு காண்பித்தேன். எல்லோருமே ஒருமுறை பார்த்ததும் நகர்ந்தால் பரவாயில்லை. ஊஹூம்….. யாரும் நகருவதாயில்லை. கோவிலுக்குள்ளும் பிரதட்சணம் முடித்துக் கொண்டு பின்பு உத்திர வீதிகளில் கிழக்கு, மேற்கு வடக்கு, தெற்கு, என நான்கையும் முடித்துக் கொண்டு பதினோரு மணிவாக்கில் வீட்டை வந்தடைந்தோம். அன்று முழுவதும் பாட்டிம்மா பலகாரம் தான்அடுத்து வைகுண்ட ஏகாதசிக்கு சென்று பார்த்து விட்டு வந்து எழுதுகிறேன்.

வானில் வட்டம்:-

சிலநாட்களுக்கு முன் வானில் வட்டம் தோன்றியதை ஆச்சரியத்துடன் பார்த்தேன். இதுவரை இம்மாதிரி நான் பார்த்ததில்லை. அளந்து எடுத்து பாகைமானி கொண்டு வட்டம் போட்டது போல் நிலவைச் சுற்றி என்ன ஒரு அழகான வட்டம். இம்மாதிரி வட்டம் போட்டால் மழை வரும் என்றார்கள். ஆனால் மழை தான் எங்கே போயிற்றோ தெரியவில்லை

ரசித்த காட்சி:-

வீதி பிரதட்சணம் செய்தவர்களில் ஒரு தம்பதி. அதில் கணவருக்கு காலில் அடிபட்டிருந்தது. அவரும் எங்களுடன் மெதுவாக நடந்து வந்திருந்தார். பெருமாளை பார்த்து விட்டு மனைவி அவரை அவ்வளவு கூட்டத்திலும் கால் நசுங்காமல் ஜாக்கிரதையாக சேவிச்சிட்டியாம்மா, பார்த்து வாங்கோஎன பார்த்துப் பார்த்து அழைத்துச் சென்றார்.

டிப்ஸ்:-

தண்ணீர் உப்பாக வரும் இடங்களில் வெந்நீர் போடும் பாத்திரங்களில் வெள்ளையாக கீழே படிந்து விடும். எவ்வளவு தேய்த்தாலும் சொரசொரப்பாக போகவே போகாது. இதைப் போக்க புளித்த மோரை அந்தப் பாத்திரத்தில் விட்டு முழுவதும் தண்ணீரால் நிரப்பி வைத்து இரவு முழுவதும் விட்டு விட்டு காலையில் தேய்த்தால் பளிச்சென்று ஆகி விடும். இது நான் நடைமுறையில் செய்து கொண்டு வருவது. இது என் மாமியாரிடம் கற்றுக் கொண்டது. பூஜை பாத்திரங்களையும் இம்மாதிரி மோரில் ஊற வைத்து விட்டு தேய்த்தால் பளிச் பளிச் தான்

பொன்மாலைப் பொழுதும், வசந்த காலமும்:-

சமீபத்தில் புதிதாக ஆரம்பித்திருக்கும் சேனல் சன் லைஃப். மின்வெட்டு இல்லாத ஒரு மாலைப் பொழுதில் இந்த சேனலைப் பார்த்தேன். பொன்மாலைப் பொழுது என்ற நிகழ்ச்சியில் 70, 80 களில் வந்த அருமையான பாடல்கள் இடம்பெற்றன. விளம்பர இடைவேளை இல்லாமல் பார்ப்பதே பெரிய விஷயம். இதில் அந்த தொந்தரவுகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. இன்னொரு நாள் காலையிலும் அந்த வாய்ப்பு கிட்டியது. வசந்தகாலம் என்ற நிகழ்ச்சியில் இதே போல் இனிமையான பாடல்கள்.

பொன்மாலைப் பொழுது மாலை 5 முதல் 6 வரை
வசந்த காலம் - காலை 10 முதல் 11 வரை

நீங்களும் நேரமும் மின்சாரமும் இருந்தால் பாருங்கள்.

மழலை மொழி:-

மேல் வீட்டு வாண்டு அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்வது உண்டு. மூன்றரை வயதில் மழலைமொழியில் பிச்சு உதருகிறது. நமக்கு புரிவது தான் கொஞ்சம் கடினமாக உள்ளது.

நான்:- என்னடா சாப்பிட்ட?
வாண்டு:- ரசஞ்சாம், கூத்து கரமுது
நான் :- தம்பி பாப்பா என்ன பண்றது?
வாண்டு:- ஜோ குளிக்கறது….
நான்:- என்ன சோப் போட்டு குளிக்கறது?
வாண்டு :- மஞ்சப் பொடி சோப்
நான்:- நீ என்ன போட்டு குளிப்ப?
வாண்டு :- நானா? கண் எரியற சாம்பு
நான் :- என்ன பேஸ்ட் போட்டு பல் தேய்ப்ப?
வாண்டு :- கார பேஸ்த்..

ரோஷ்ணி கார்னர்:-

இது எங்க வீட்டு வாண்டின் குறும்பு மொழி. பள்ளியில் இருந்து வந்ததும் வராததுமாக அம்மா நம்ம வாசன் ஐ கேர்போலாமா என்றாள். என்னாச்சு கண்ணா? ஸ்கூலில் ஏதாவது சொன்னாங்களாதலைவலிக்குதா? போர்டில் இருப்பது தெரியலையா? என்று அடுக்கடுக்காக கேள்விக் கணைகளால் துளைத்தேன். உடனே அவள் இல்லம்மா கொஞ்சம் கேளு

டீவியில் தான் வாங்க நாங்க இருக்கோம்ன்னு சொல்றாங்களே..அதனால் நம்ம போயி எனக்கு ஒரு கண்ணாடி வாங்கிண்டு வரலாம் என்றாள். ஓஹோ! அப்படியா சங்கதி என்று தெரிந்து விட்டதுஅதனால நிதானமாய் அவளிடம் சரி வா போகலாம். ஆனால் அங்கே கண்ணாடி போடுவதற்கு முன்னாடி கண்ணில் ஒரு ஊசி போட்டுட்டு தான் போடுவாங்களாம். பரவாயில்லை உனக்கு தான் போடணுமே…. என்றதும்….

அப்படியா! அப்படியென்றால் எனக்கு வேண்டாம்மா... ப்ளீஸ்ம்மா… வேண்டாம்

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

23 comments:

 1. இன்றையக் கதம்பம் சூப்பர் ரோஷ்ணியம்மா. யூ மேட் மை டே!

  வாண்டுகள் நல்லாவே பேசறதே!!!!!!

  உங்கூரில் ஒரு வருசம் வந்து இருந்து எல்லாப் புறப்பாடுகளையும் பார்க்கணும் என்று மனசில் ஒரு துடிப்பு எனக்குண்டு. பெருமாள் அப்பீலை க்ராண்ட் செய்யணும்.

  ஆமாம்,.... அது என்ன கிழக்கில் இருந்து ஆரம்பிச்சு வலப்புறமாவே தெற்கு மேற்கு வடக்கு கிழக்குன்னு முடிக்கப்படாதா??????

  ReplyDelete
 2. வண்ண வண்ண கதம்பத்தொடுப்பு மணக்கிறது..

  ReplyDelete
 3. அனுபவங்கள் சுவாரசியம்.இன்னும் சொல்லுங்க.

  ReplyDelete


 4. கதம்ப மாலை !இயல்பான செய்திகள்!

  ReplyDelete
 5. ஏகாதேசிக்கு ஒரு முறை என் அம்மா ஸ்ரீரங்கம் போகணும் என்று சொல்லிட்டே இருக்காங்க. மோர் டிப்ஸ் சூப்பர்.

  ReplyDelete
 6. மழலை மொழியும் ரோஷ்ணி கார்னரும் ஜூப்பரு. ரொம்ப ரசிச்சேன்.

  ReplyDelete

 7. // இந்த கைசிக ஏகாதசி. இந்நாளில் எல்லோரும் வீதி பிரதட்சணம் செய்தார்கள். இப்படி பிரதட்சணம் செய்தால் மறுபிறவியே கிடையாதாம். //

  மறு பிறவி கிடையாதா ? நிசமாவே வா ?
  கண்டிப்பா தெரியுமா ?
  நம்பி ஸ்ரீரங்கத்துக்கு இந்த வைகுண்ட ஏகாதசிக்கு போகலாமா?
  நாலு வீதியையும் சுத்தணுமா ?

  கால் நடையாவா ?
  நிக்காம சுத்தணுமா இல்ல அங்கங்க கொஞ்சம் கொஞ்சம் உட்கார்ந்துக்கலாமா ?

  மேலச்சித்திர வீதிலே என் ஃப்ரன்டு இருக்கானே !! அந்தப்பக்கம் போனாலே அவன்
  மோர்த்தீர்த்தம் அப்படின்னு கொடுப்பானே !! நடுவிலே எதுனாச்சும் சாப்பிடலாமா ?

  சுத்த ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சாப்பிட்டு போகலாமா இல்ல... உபவாசம் அப்படின்னு முதல் நாள் லேந்து இருக்கணுமா ?

  அதெல்லாம் இருக்கட்டும், இந்த அடுத்த பிறவி பத்தி என்னோட ஃப்ரன்டு ஒருவர் பங்களூரிலிருந்து ராத்திரி 12 மணிக்கு
  ஃபோன் பண்ணினார். என்னய்யா இந்த டயத்திலே அப்படின்னு பதறிப்போய் கேட்டேன்.

  அடுத்த பிறவி பத்தி ஒரு அருமையான ஜோக் என்றார்.
  சொல்லும் என்றேன்.

  ஒரு ஹஸ்பென்ட் அன்ட் வைஃப், நீங்க சொன்ன மாதிரி. ரொம்ப டிவோடட் டு ஈச் அதர்.
  //பெருமாளை பார்த்து விட்டு மனைவி அவரை அவ்வளவு கூட்டத்திலும் கால் நசுங்காமல் ஜாக்கிரதையாக ”சேவிச்சிட்டியாம்மா, பார்த்து வாங்கோ” என பார்த்துப் பார்த்து அழைத்துச் சென்றார//
  எக்ஸாக்ட்லி இதே மாதிரி.

  ரண்டு பேரும் ஒரு நாள் ரங்கனாதரையும் தாயாரையும் சேவிச்சுட்டு வரலாம் அப்படின்னு போனார்கள்.
  தாயாரை சேவிச்சு முடிஞ்சதும் இரண்டு பேரும் ஒத்தரை ஒத்தர் கேட்டார்கள்.

  நீ என்ன இன்னிக்கு தாயாரை வேண்டிண்ட சொல்லு.. அப்படின்னு ஹஸ்பென்ட் முந்திண்டார்.

  :" இனி வர ஏழு ஜன்மத்திற்கும் நீங்களே என் புருஷணா வாய்ககணும்னு வேண்டின்டேன். " அப்படின்னாள் தர்ம் பத்தினி.
  கூடவே நீங்க என்ன வேண்டிண்டேள் அப்படின்னு கேட்டாள்.

  " நானா... இதுதான் என்னோட ஏழாவது ஜன்மமா இருக்கட்டும்: என்று வேண்டின்டேன்.
  என்றார் ஹஸ்பென்ட்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 8. டிவி நிகழ்ச்சி பத்தியெல்லாம் எழுத பதிவுலகில் ஒரே ஒருத்தர் தான் காப்புரிமை வாங்கி வச்சிருக்காராமே :)

  ரோஷினி பாப்பாவை ஏமாத்தாதீங்க :)

  ReplyDelete
 9. டீச்சர்- உங்களுடைய ப்ரார்த்தனையை பெருமாள் விரைவிலேயே நிறைவேற்றட்டும்....
  வலப்புறமாக பிரதட்சணமாகத் தான் வந்தோம். எழுதியது தான். கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என...
  தங்களுடைய வருகைக்கும் நன்றி டீச்சர்.

  இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றி.

  லஷ்மிம்மா - நன்றிம்மா.

  புலவர் ஐயா - நன்றி.

  அமுதா கிருஷ்ணா - நன்றிங்க.

  அமைதிச்சாரல் - நன்றிங்க.

  சுப்பு தாத்தா - உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லிடப் போறேன்....:))
  நீங்க சொன்ன கோகை ரசித்தேன். நன்றி.

  மோகன்குமார் சார் - அப்படியா!!! காப்புரிமையை நானும் வாங்கிட்டேன்...:)) நன்றிங்க...

  ReplyDelete
 10. கைசிக ஏகாதசி முடிந்த கையோடு அதைப் பற்றி எழுதி தகவல் தந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 11. கதம்பம் சூப்பர்.

  வாண்டுகளிடம் பேசறதுன்னா எனக்கு கொஞ்சம் டர்ர்.

  (அப்படியே கிழக்கு மேற்கு வடக்கு தெற்குன்னு ஜம்ப் பண்ணி சுத்தி வர டெக்னிக்கை எங்களுக்கும் சொல்லித் தந்தா நல்லாயிருக்கும். )

  ReplyDelete
 12. கைசிக ஏகாதசி ,துவாதசி புராணமெல்லாம் அங்க கோவில்ல நடக்குமே ஆதி!
  நீங்கள் கோவில் வீதிகளை வலம் வந்தால் நாங்கள் வந்த மாதிரி. பதிவு எழுதிவிட்டீர்கள் இல்லயா அதான்.:)
  ரோஷ்ணி அரட்டை ரொம்ப இனிமை.

  ReplyDelete
 13. கைசிக ஏகாதசியன்று வீதிப் பிரதட்சணம் செய்து எங்களுக்கும் சேர்த்து புண்ணியம் தேடிக் கொண்டதற்கு முதலில் நன்றி!
  நிலா அதைப் போல வட்டம் போட்டால் 'நிலா வீடு கட்டுகிறது' என்று சொல்வார்கள். அந்த ஒளிக்குப் பெயர் 'ஜ்யோத்ஸ்னா'Jyotsna'.
  மழலை மொழிக்கு ஈடு இணை எது?
  புது தமிழ் சானலா? இங்கு கேபிள்காரர் கேட்டால் அடிக்க வருவார்:'எத்தனை தமிழ் சானல் பார்ப்பீங்க?' என்று!
  இப்போது தான் 'முரசு' வர ஆரம்பித்து இருக்கிறது.

  கதம்பம் வாசனையோ வாசனை!

  ReplyDelete
 14. புண்ணியம் செய்திருக்கீங்க. கைசிக ஏகாதசியில் பிரதக்ஷிணம் செய்ததுக்கு. ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும்.

  குழந்தைகள் என்ன பேசினாலும் இனிமைதான். இங்கேயும் சில பெண் குழந்தைகள் வண்டுகள் ரீங்காரமிடுவது போலப் பேசிக் கொண்டிருக்கும். கேட்கக் கேட்க இனிமையே.

  ReplyDelete
 15. நிலா வட்டம் பார்க்கலை. தெரியாமப் போச்சு. :((( பார்த்தால் படம் பிடிச்சிருக்கலாம்.

  ReplyDelete
 16. கதம்பம் பகிர்வு அருமை,வாண்டு ரோஷ்ணி பகிர்வு ரசித்தேன்.வானில்வட்டம்,ரசித்த காட்சி,டிப்ஸ் அமர்க்களம்.

  ReplyDelete
 17. கே.பி.ஜனா சார் - நன்றி சார்.

  ஈஸ்வரன் சார் - ஜம்ப் பண்ற டெக்னிக் தானே......சொல்லிக் கொடுத்துட்டா போச்சு...தில்லியிலிருந்து....நாகர்கோவிலுக்கு ஒரே ஜம்ப்பில்....சரி தானே..:))

  வல்லிம்மா - கைசிக புராணம் நடுஇரவில் வாசிப்பாங்களாம். அன்றே 365 போர்வை பெருமாளுக்கு போர்த்துவாங்க என்று அக்கம் பக்கம் அழைத்தார்கள். ரோஷ்ணியை விட்டு விட்டு போக முடியவில்லை...:( கருத்துக்களுக்கு நன்றிம்மா.

  ரஞ்சனிம்மா - அந்த ஒளிக்கு பெயர் ”ஜ்யோத்ஸ்னா” வா. தில்லியில் எங்க நணபரின் மகள் பெயர் அதுதான்...:) கருத்துக்களுக்கு நன்றிம்மா.

  கீதா மாமி - வட்டத்தை பார்க்க என் மாமியார் தான் அழைத்து சொன்னார். படம் எடுக்க என்னாலும் முடியவில்லை... நன்றி மாமி.

  ஆசியா உமர் - கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 18. கதம்ப மலர் மலர்ந்து அருமையாக
  மணம் வீசுகிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. பயனுள்ள டிப்ஸ்..ரோஷ்ணி கார்னர் ரசனையாக உள்ளது..பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 20. கதம்பத்தில் நல்ல நறுமணம்.

  கடைசியில் ரோஷ்ணியை சமாளித்த உங்கள் சாமர்த்தியம் ;) ஜோர்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 21. கைசிக ஏகாதசி தர்சனம் கிடைத்தது.

  வாண்டுகளின் குறும்பு மிகவும் ரசிக்கவைத்தது.

  ReplyDelete
 22. ரமணி சார் - கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி சார்.

  ராதாராணி - நன்றிங்க.

  வை.கோபாலகிருஷ்ணன் சார் - நன்றி சார்.

  மாதேவி - நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…