Monday, November 26, 2012

அலைகளும் ஆழங்களும் – ஜோதிர்லதா கிரிஜா
சமீபத்தில் நூலகத்தில் கிடைத்த 240 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை எடுத்ததிலிருந்து வைக்க மனமில்லாமல் கிடைத்த நேரத்திலெல்லாம் படித்து முடித்தேன். நல்லதொரு புத்தகம். ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் எழுத்தை முதல் முறையாக வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

ஜோதிர்லதா அவர்கள் வத்தலகுண்டை சொந்த ஊராக கொண்டுள்ளார். பள்ளிப் பருவத்தில் ரா.கி.ராங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம். தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி ஆகியோரால் ஊக்குவிக்கப்பட்டதன் பின் 1968ல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்த விகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம். இவர் எழுதியுள்ளவை – 600 சிறுகதைகள், 20 புதினங்கள், 60 குறும்புதினங்கள்,  60 சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள் இன்னும் தொடர்கிறது. நிறைய பரிசுகளும் பெற்றிருக்கிறார்.

சேது அலமி பிரசுரத்தார் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தில் ஐந்து சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ரகம். சமூகப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லியுள்ளார். 1993 முதல் 1995 ஆண்டு வரை ஜோதிர்லதா கிரிஜா அவர்களால் எழுதப்பட்ட ஐந்து குறுநாவல்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன்.

புருஷன் வீட்டு ரகசியம்” என்ற கதையில் திருமணச் சம்பந்தம் பேசும் போது மணமகனின் குடும்பமும் சரி, மணமகளின் குடும்பமும் சரி, சற்றே ஏறுமாறான சில சம்பவங்கள் தத்தம் குடும்பத்தில் நிகழ்ந்திருக்குமாயின் அவற்றை வெளிப்படையாக எதிராளியிடம் உள்ளது உள்ளபடி தெரிவிக்காவிட்டால் பின்னாளில் பெருங் குழப்பங்களே விளையும் என்றும், உண்மையைக் கூறி அதன் விளைவுகளை எதிர் கொள்வதே நல்லது என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது இந்தக் கதை.

இரண்டாவது கதையான “மன விலக்கு” ல் மனைவியின் உணர்வுகளைச் சற்றும் மதியாது, தன்னலம் மிக்க கணவனை வெறுத்து ஒதுக்கிச் சென்று விடும் மனைவியை பற்றி இந்தக் குறுநாவல் சொல்கிறது.

நாமாக தேடிப் போய் பெற முடியாத காதலை விடவும் நம்மைத் தேடி வரும் காதல் சிறந்தது என்பதையும், ஒரு பெண்ணோ ஆணோ உரிய மதிப்பை அதற்கு அளிப்பதே அறிவுடைமை என்பதையும் சேதியாக ”தேடி வந்த காதல்” என்ற கதை அறிவிக்கிறது.

காதலன் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளாமல் காதல் வலையில் விழுந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை சித்தரித்து காட்டும் இவர் இதன் மூலம் எச்சரிக்கையும் விடுக்கிறார். ”காதல் தொடர்கிறது” என்ற கதை மூலம்.

மனத்தில் உள்ள அன்பை வெளிப்படுத்த தெரியாத பலர் உள்ளனர். சிலர் வாய்ஜாலத்தை உபயோகித்து அடுத்தவரை கவர்ந்திழுப்பர். தன் கணவனைப் பற்றி முதலில் மனத்தாங்கல் கொள்ளும் ஒரு பெண், ஒரு சம்பவத்துக்கு பிறகு தன் கணவனை முழுதாக புரிந்து கொண்டு மன நிறைவு கொள்கிறார்.

இது தான் ”அலைகளும் ஆழங்களும்” என்ற கதை. அந்த கதையின் கிளைமேக்ஸ் வரிகளை உங்களுக்கு அப்படியே தருகிறேன்….

“நடுக்கடலில் அலைகள் இல்லை. கரையோரத்தில் அலைகள் அதிகம். என்றாலும் அங்கே ஆழம் அதிகமில்லை. நடுக்கடல் மிகவும் ஆழமாக இருப்பதால் அலைகள் அதிகம் அடிப்பதில்லை. அப்படின்னு யாரோ முகத்துல பளார்னு ஓங்கி அடிச்ச மாதிரி இருந்திச்சு. எனக்காகவே அந்தப் பையன் பாடம் படிச்ச மாதிரி தோணித்து. அன்னையிலேர்ந்து எனக்கும் அவருக்குமிடையே இருக்கற ருசி வேறுபாடு, கருத்து மாறுபாடு, அவரும் லொட லொடன்னு பேசற டைப் இல்லை – என்னோட ரொம்பவும் சளசளன்னு பேசாம இருக்கறது இதையெல்லாம் நான் மனசுலயே வச்சுக்கல்லேடி திரெளபதி”

நல்லதொரு புத்தகத்தினை படித்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. என்ன இந்தக் கதைகளையெல்லாம் நீங்களும் படிக்க ஆசையாயிருந்தா இந்த முகவரியை பாருங்கள்.

சேது அலமி பிரசுரம்
G-7 அரவிந்த் நரேன் என்கிளேவ்
8, மாசிலாமணி தெரு
பாண்டி பஜார், தியாகராய நகர்
சென்னை – 600017.
புத்தகத்தின் விலை - ரூ100

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

18 comments:

 1. நல்ல புத்தக அறிமுகத்துக்கு நன்றி

  ReplyDelete
 2. அவரது நூல் ஒன்று கூட இதுவரை படித்ததில்லை !

  நூல் மட்டுமன்றி அவர் குறித்த அறிமுகமும் தந்தது நன்று

  ReplyDelete
 3. நல்லதொரு விமர்சனம். நன்றி ஆதி.

  ReplyDelete
 4. Long time since i read her book. Didn't read this one. Will try to get. Thanks adhi

  ReplyDelete
 5. அருமையான ஒரு எழுத்தாளரை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள், ரொம்ப நன்றி.

  ஜோதிர்லதா கிரிஜா...இவங்களின் புத்தகம் கிடைத்தால் வாங்கிப்படிக்கிறேன்.

  ReplyDelete
 6. நல்லதொரு புத்தக அறிமுகம்...

  நன்றி...
  tm4

  ReplyDelete
 7. வாசித்ததில்லை. நல்ல பகிர்வு ஆதி.

  ReplyDelete
 8. வாராந்தரிகளில் சிறுகதைகளாக இவரது படைப்புகள் சிலவற்றை படித்த நினைவு இருக்கிறது. குறிப்பாக எந்தப் படைப்பும் நினைவிலில்லை!

  ReplyDelete
 9. ஜோதிர்லதா கிரிஜா புரட்சி எழுத்தாளர். வாழ்வின் யதார்த்தம் நன்கு அறிந்தவர். அவர் எழுதிய புத்தகங்களை வாங்காமல் இருந்துவிட்டேனே என்று தோன்றுகிறது உங்களது விமரிசனத்தைப் படிக்கையில்.
  நம் துளசி அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

  ReplyDelete
 10. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 11. நல்ல விமர்சனம். 75ம் ஆண்டில் நானும் நிறைய ஜோதிர்லதாகிரிஜா அவர்களின் கதைகளை நூலகத்தில் படித்து இருக்கிறேன். மறுபடியும் படிக்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள் ஆதி.

  ReplyDelete
 12. எனக்கும் முன்பு பிடித்த எழுத்தாளர்களுள் ஜோதிர்லதாகிரிஜாவும் ஒருவர்.நினைவு படுத்தியமைக்கு மகிழ்ச்சி.நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 13. நல்லதொரு புத்தக விமர்சனம். பாராட்டுக்கள்.
  இவரின் ஒருசில கதைகளை நானும் படித்துள்ள ஞாபகம் உள்ளது. நன்றாகவே எழுதுவார்.

  ReplyDelete
 14. நல்லதொரு புத்தகத்தினை படித்த திருப்தியுடன் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 15. நல்லதொரு எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா.
  அவரது புத்தகத்தை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

  வலைச்சரத்தில் கணவரைத் தொடர்ந்து அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 17. வணக்கம்.
  அவரது கதையில் உயிர் இருக்கும், உயிரோட்டமான உணர்வுகள் நம்மையும் சேர்த்து பிரயாணம் பண்ண வைக்கும்.
  கதையாக இருக்காது. வாழ்க்கையாக சில மணி நேரங்களில் வாழ்ந்து விட்ட திருப்தி இருக்கும்..புத்தகத்தை மூடும் போது .
  அது தான் ஆசிரியரின் வெற்றி. ஒவ்வொரு கதையிலும் இதர் வெற்றி தான் அவருக்கு.
  உங்களுக்கு மிக்க நன்றி.
  ஜெயஸ்ரீ ஷங்கர்

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…