Monday, November 26, 2012

அலைகளும் ஆழங்களும் – ஜோதிர்லதா கிரிஜா
சமீபத்தில் நூலகத்தில் கிடைத்த 240 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை எடுத்ததிலிருந்து வைக்க மனமில்லாமல் கிடைத்த நேரத்திலெல்லாம் படித்து முடித்தேன். நல்லதொரு புத்தகம். ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் எழுத்தை முதல் முறையாக வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

ஜோதிர்லதா அவர்கள் வத்தலகுண்டை சொந்த ஊராக கொண்டுள்ளார். பள்ளிப் பருவத்தில் ரா.கி.ராங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம். தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி ஆகியோரால் ஊக்குவிக்கப்பட்டதன் பின் 1968ல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்த விகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம். இவர் எழுதியுள்ளவை – 600 சிறுகதைகள், 20 புதினங்கள், 60 குறும்புதினங்கள்,  60 சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள் இன்னும் தொடர்கிறது. நிறைய பரிசுகளும் பெற்றிருக்கிறார்.

சேது அலமி பிரசுரத்தார் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தில் ஐந்து சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ரகம். சமூகப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லியுள்ளார். 1993 முதல் 1995 ஆண்டு வரை ஜோதிர்லதா கிரிஜா அவர்களால் எழுதப்பட்ட ஐந்து குறுநாவல்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன்.

புருஷன் வீட்டு ரகசியம்” என்ற கதையில் திருமணச் சம்பந்தம் பேசும் போது மணமகனின் குடும்பமும் சரி, மணமகளின் குடும்பமும் சரி, சற்றே ஏறுமாறான சில சம்பவங்கள் தத்தம் குடும்பத்தில் நிகழ்ந்திருக்குமாயின் அவற்றை வெளிப்படையாக எதிராளியிடம் உள்ளது உள்ளபடி தெரிவிக்காவிட்டால் பின்னாளில் பெருங் குழப்பங்களே விளையும் என்றும், உண்மையைக் கூறி அதன் விளைவுகளை எதிர் கொள்வதே நல்லது என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது இந்தக் கதை.

இரண்டாவது கதையான “மன விலக்கு” ல் மனைவியின் உணர்வுகளைச் சற்றும் மதியாது, தன்னலம் மிக்க கணவனை வெறுத்து ஒதுக்கிச் சென்று விடும் மனைவியை பற்றி இந்தக் குறுநாவல் சொல்கிறது.

நாமாக தேடிப் போய் பெற முடியாத காதலை விடவும் நம்மைத் தேடி வரும் காதல் சிறந்தது என்பதையும், ஒரு பெண்ணோ ஆணோ உரிய மதிப்பை அதற்கு அளிப்பதே அறிவுடைமை என்பதையும் சேதியாக ”தேடி வந்த காதல்” என்ற கதை அறிவிக்கிறது.

காதலன் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளாமல் காதல் வலையில் விழுந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை சித்தரித்து காட்டும் இவர் இதன் மூலம் எச்சரிக்கையும் விடுக்கிறார். ”காதல் தொடர்கிறது” என்ற கதை மூலம்.

மனத்தில் உள்ள அன்பை வெளிப்படுத்த தெரியாத பலர் உள்ளனர். சிலர் வாய்ஜாலத்தை உபயோகித்து அடுத்தவரை கவர்ந்திழுப்பர். தன் கணவனைப் பற்றி முதலில் மனத்தாங்கல் கொள்ளும் ஒரு பெண், ஒரு சம்பவத்துக்கு பிறகு தன் கணவனை முழுதாக புரிந்து கொண்டு மன நிறைவு கொள்கிறார்.

இது தான் ”அலைகளும் ஆழங்களும்” என்ற கதை. அந்த கதையின் கிளைமேக்ஸ் வரிகளை உங்களுக்கு அப்படியே தருகிறேன்….

“நடுக்கடலில் அலைகள் இல்லை. கரையோரத்தில் அலைகள் அதிகம். என்றாலும் அங்கே ஆழம் அதிகமில்லை. நடுக்கடல் மிகவும் ஆழமாக இருப்பதால் அலைகள் அதிகம் அடிப்பதில்லை. அப்படின்னு யாரோ முகத்துல பளார்னு ஓங்கி அடிச்ச மாதிரி இருந்திச்சு. எனக்காகவே அந்தப் பையன் பாடம் படிச்ச மாதிரி தோணித்து. அன்னையிலேர்ந்து எனக்கும் அவருக்குமிடையே இருக்கற ருசி வேறுபாடு, கருத்து மாறுபாடு, அவரும் லொட லொடன்னு பேசற டைப் இல்லை – என்னோட ரொம்பவும் சளசளன்னு பேசாம இருக்கறது இதையெல்லாம் நான் மனசுலயே வச்சுக்கல்லேடி திரெளபதி”

நல்லதொரு புத்தகத்தினை படித்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. என்ன இந்தக் கதைகளையெல்லாம் நீங்களும் படிக்க ஆசையாயிருந்தா இந்த முகவரியை பாருங்கள்.

சேது அலமி பிரசுரம்
G-7 அரவிந்த் நரேன் என்கிளேவ்
8, மாசிலாமணி தெரு
பாண்டி பஜார், தியாகராய நகர்
சென்னை – 600017.
புத்தகத்தின் விலை - ரூ100

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Tuesday, November 20, 2012

குமரியின் மூக்குத்தி – கி.வா.ஜ
கி.வா.ஜ என்னும் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் தமிழ்த் தாத்தாவின் தலை மாணாக்கன். பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக திகழ்ந்து  பல தலைமுறைகளுக்கும் பயன்தரக்கூடிய தமிழ் பொக்கிஷத்தை வழங்கிச் சென்றவர். அவரது பேச்சிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வாக்கியத்திலும் சிலேடை இருக்குமாம். அவரது நூற்றாண்டு வெளியீடான ”குமரியின் மூக்குத்தி” எனற தலைப்பிட்ட இப்புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. 13 சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையுமே அருமையாக இருந்தது.

புத்தகத்தின் தலைப்பும் முதல் கதையுமான குமரியின் மூக்குத்தி வரலாற்று சிறப்பான கன்னியாகுமரி அன்னையிடமுள்ள மூக்குத்தியை பற்றியது.

”தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையை கண் கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான். அர்ச்சகர் லலிதா சகஸ்ரநாமத்தை தொடங்கினார். தேவியின் மூக்குத்தி விளக்கொளியில் சுடர்விட்டு ஒளிர்ந்தது. மன்னனின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அப்போது தேவி கன்னியாகுமரிக்கு முன் எரிந்து கொண்டிருந்த விளக்கைப் பிடிக்கும் பதுமை, பராக்கிரம பாண்டியனிடம் பேசத் தொடங்கியது….”

மூக்குத்தி அன்னையிடம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்தது, கலிங்கப் போருக்கே இந்த மூக்குத்தி தான் காரணமென்றும் படித்ததும் சுவாரசியமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

மற்ற கதைகளாவன…… தாயும் கன்றும், கீரைத் தண்டு, குழலின் குரல், உள்ளும் புறமும், அவள் குறை, கொள்ளையோ கொள்ளை, உள்ளத்தில் முள், குளிர்ச்சி, ஜடை பில்லை, பெண் உரிமை, திருட்டுக் கை, புதிய வீடு.

குழலின் குரலில் அழகான காதல் ஜோடிகளான முருகனும், மெல்லியலும் மலையிலும், காடுகளிலும் உலத்தையே மறந்து சுற்றித் திரிகின்றனர். கிடைக்கின்ற பழங்களையும், காய்களையும் உண்டு வாழ்ந்து வருகின்றனர். போதாத நேரம் மெல்லியல் இந்த உலகத்தை விட்டு மறைகிறாள். படிக்கும் நமக்கே அந்த காதல் ஜோடியில் ஒன்று பிரிந்தது கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. அப்படியானால் முருகன் எப்படி இருந்திருப்பான். இந்த சூழ்நிலையில் மெல்லியலை புதைத்த இடத்திலிருந்து முளைத்த மூங்கிலில் இருந்து அவளுடைய சத்தம் வருவதை கண்டு அந்த மூங்கிலை ஒடித்து அங்கங்கே துளைகள் செய்து ஊதுகிறான். இது தான் முதன் முதலில் கண்டுபிடித்த புல்லாங்குழலாம்.

ஜடை பில்லை என்ற கதையில் பொழுது போகாமல் ஒரு பெட்டியை எடுத்து தேடியதில் பழங்காலத்தைய தலைமுறை தலைமுறையாக வந்த ஜடை பில்லை ஒன்று கிடைக்க அதை பற்றிய கதைகளை நினைத்துக் கொண்டிருக்கையில், பக்கத்து வீட்டு பெண்மணி வந்து விடுகிறார். அவர் இந்த ஜடை பில்லையை பார்த்து விட்டு தன் மகளின் பெண் பார்க்கும் படலத்தின் போது பெண்ணுக்கு வைக்க கேட்கிறார். கவலைப்பட்டுக் கொண்டே தான் கொடுக்கிறார். அதற்கு காரணமும் இருக்கிறது. அந்த நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்து விட திரும்ப ஜடை பில்லை வந்து விடுகிறது. திருமணத்தின் போது அதே போல் வேறு செய்து கொடுக்கிறார்கள். ஆனால் மாப்பிள்ளை இந்த ஜடை பில்லையை தான் கேட்கிறார். உரிமைபட்டவர்களும் தன் பெண்ணுக்கு செய்வதாக நினைத்து கடவுளை வேண்டிக் கொண்டு கொடுக்கிறார்கள். ஏன் மாப்பிள்ளை அடம் பிடித்து கேட்டார்? என்ன காரணம்? என்பதை சுவாரசியமாக சொல்லிச் செல்கிறார்.

நானே எல்லாவற்றையும் சொல்லி விட்டால் எப்படி! ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித சுவாரசியம். இந்த புத்தகத்தை நீங்களும் வாங்கிப் படித்து அதன் உண்மையான சுவையை உணருங்கள்.

புத்தகத்தை வாங்க அணுக வேண்டிய முகவரி:

கலா நிலையம்
244, (ப.எண்) ராமகிருஷ்ணா மடம் சாலை
மயிலாப்பூர்
சென்னை – 600004
புத்தகத்தின் விலை – ரூ.60.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

Thursday, November 15, 2012

கதம்பம் – 11வாசிப்பனுபவம்:-
 

 
சமீபத்தில் வாசித்த சில நூல்கள். புத்தகங்களின் சுவாரசியத்தில் பதிவுலகுக்கு கூட அவ்வப்போது வருவதில்லை….:) மூன்று நான்கு நாட்கள் கழித்து வந்து மொத்தமாக படிக்கிறேன்….:)

குருபீடம் – ஜெயகாந்தன்
குறுநாவல்கள் – N.C மோகன்தாஸ்
சாரதையின் தந்திரம் – கல்கி
கற்பூர கனவுகள் – தேவிபாலா
என்றென்றும் உன்னோடு தான் – ரமணிசந்திரன்
கடவுள் தந்த இரு மலர்கள் – காஞ்சி. பாலச்சந்திரன்

முதல் மூன்றும் நூலகத்திலிருந்து எடுத்தவை. மீதி மூன்றும் பக்கத்து வீட்டில் இரவல் வாங்கிப் படித்தது. ஜெயகாந்தன் அவர்களுடைய ”குருபீடம்” ஒரு சிறுகதை தொகுப்பு. தேவிபாலாவின் ”கற்பூர கனவுகள்” ஒரு பெண் எப்படி இருக்கக் கூடாது, அப்படியிருந்தால் என்ன விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை பற்றிய கதை. ரமணிசந்திரன் அவர்களுடைய ”என்றென்றும் உன்னோடு தான்” கதை மிகவும் விறுவிறுப்பான கதை. ”கடவுள் தந்த இரு மலர்கள்” வித்தியாசமான காதல் ஜோடிகளை பற்றியது.

சாரதையின் தந்திரம் புத்தகத்தில் உள்ள ஏழு கதைகள் ஏற்கனவே என் பதிவில் முன்பு எழுதியிருந்த கமலாவின் கல்யாணம் என்ற புத்தகத்தில் உள்ளது தான். அதனால் பாக்கி மூன்று கதைகளையும் படித்தேன்.

தற்போது ”இக்ஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மஹாத்மியம்” புத்தகத்தை சிறிது சிறிதாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு கவிதை:-

மின்வெட்டால் கொசு ஒன்று கடித்ததன் பின் விளைவு! கவிதையை படித்த பின் நாம இப்போ இந்த பதிவை தொடரத் தான் வேணுமான்னு கேட்கக் கூடாது…..

”சொறிய சொறிய சுகம்
சொறிஞ்ச பின் ரணம்
மருத்துவருக்கு கொடுக்கணும் பணம்
தேவையா? யோசிங்க இக்கணம்!”

நவராத்திரி பொம்மை விற்பவருடன் ஒரு சந்திப்பு:-

நண்பர் வீட்டிலிருந்து விஜயதசமிக்கு பிறகு பொம்மை விலை குறைவாக இருக்கும் என்று அவர்களுக்காக வாங்கச் சொல்லியிருந்தார்கள். அதனால் ஒரு அஷ்டலஷ்மி செட்டும், ரங்கநாதர் பொம்மையும் வாங்கினேன். அப்போது நல்ல மழையாக இருந்ததால் கடைக்காரரிடம் சற்று பேச்சுக் கொடுத்து கொண்டிருந்தேன். பொம்மை சீசன் இல்லாத போது என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்கள். கணவன் பேசும் போது நிறைய ஆங்கில வார்த்தைகளை சரளமாக உபயோகப்படுத்தினார். அதே போல் மனைவியை கடிந்து கொள்ளும் போது கூட சிவபுராணத்திலிருந்து பாட்டுகளை எடுத்துச் சொன்னார். பொம்மை வியாபாரம் இல்லாத நாட்களில் கார்த்திகை விளக்குகள், பொங்கல் பானை செய்வது, கோடைகாலத்தில் பானைகள்-ன்னு  வியாபாரம் தொடர்ந்து கொண்டேயிருக்குமாம். ஆனாலும் கைவேலைகளுக்கு இப்போ மவுசு கம்மி தான் என்றார்.

நகைச்சுவை துணுக்கு:-

முடியாது
முடியாது
முடியாது!

சில விஷயத்தை யாராலும் மாத்த முடியாது.

1 காலிப்ளவரை தலையில் வைக்க முடியாது.
2 GOLD FILTER ஐ அடகு வைக்க முடியாது.
3 கோல மாவில் தோசை சுட முடியாது.
4 வீணாப்போன மெசேஜ் வந்தாலும் உங்களால படிக்காம இருக்க முடியாது!!!!

ரோஷ்ணி கார்னர்:-

நவராத்திரி சமயத்தில் ரோஷ்ணிக்கு அவளுடைய கிச்சன் செட்டுக்கான சில பொருட்கள் கிடைத்தது. ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. தத்ரூபம். பாருங்களேன்…சில வருடங்களுக்கு முன் திருச்சூரிலிருந்து கோவைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது நடந்த உரையாடல்….

ரோஷ்ணி : அப்பா அது என்னப்பா?
அப்பா : அது தான் MOUNTAIN. தமிழ்ல மலைன்னு சொல்வாங்க
ரோஷ்ணி : அப்பா அது எனக்கு வாங்கித்தாப்பா?
அப்பா : சரிடா செல்லம்.
ரோஷ்ணி : இப்பவே வேணும்ப்பா?
அப்பா : அடுத்த தடவை வாங்கித் தரம்மா
ரோஷ்ணி : ஓகே….. என் செல்லக்குட்டி அப்பா.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ”அடேங்கப்பா இவ அப்பா பெரிய ஆளு தான் போல….. மலையெல்லாம் வாங்கித் தரேன்னு சொல்றாரே”……. :)

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Monday, November 12, 2012

தீப ஒளி திருநாள்

அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.ஸ்வீட், காரம் நான் செய்தது. என்ன என்று படம் பார்த்து தெரியாதவர்களுக்காக:

1. ரவா லாடு
2. மைசூர் பாக்
3. மிக்சர்.
4. மகிழம்பூ முறுக்கு [மனோப்பு]
5. தீபாவளி மருந்து.


எடுத்துக்கோங்க!

நட்புடன்

ஆதி வெங்கட்.Friday, November 9, 2012

ஆடைகளின் மீது மோகம்
பத்து, இருபது வருடங்களுக்கு முன் கூட மக்கள் ஆடைகளுக்கு இப்போது செலவழிப்பது போல் பணம் செலவழிப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் இன்று!!!!!!!

கிராமங்களில் உள்ள மக்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்று சொல்வோம். அப்படிப் பட்ட மக்கள் வியர்வை சிந்தி வயலில் உழைத்து, சம்பாதிக்கும் பணத்தில் வருடத்தில் ஒரு நாள், பொங்கல் அன்று புத்தாடைகள் உடுத்தி தைத் திருநாளை கொண்டாடுவதுண்டு. தீபாவளிக்கு கூட புத்தாடைகள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

நடுத்தர மக்களும் வருடத்தில் ஒரு தடவை தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ துணிமணிகள் எடுப்பார்கள். பிறந்த நாளுக்கு கூட இரண்டாம் பட்சம் தான். வசதி படைத்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இன்று அப்படியில்லை. நடுத்தர மக்களும் எப்போது வேண்டுமானாலும் ஆடைகளை வாங்கி தள்ளுகிறார்கள். இதைத் தவறென்று சொல்லவில்லை. அவரவர்களின் விருப்பம். நாட்டில் பணபுழக்கமும் அதிகரித்து வருகிறது என்று தெரிகிறது.

மால்களிலும், துணிக்கடைகளிலும் ஒவ்வொரு பண்டிகைக்கும், ஏன் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு கூட தள்ளுபடிகளைக் கொடுத்து விற்பனையை அள்ளுகிறார்கள். மக்களும் தேவையோ, இல்லையோ வாங்குவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்கள்.  அதுவும் தில்லி போன்ற பெருநகரங்களில் உள்ள மக்கள் மால்களில் வாங்குவதை பார்த்தால் சற்று பயமாகத் தான் இருக்கும். இவர்கள் காசு செலவழிப்பதை பற்றி யோசிப்பதேயில்லை. பிளாஸ்டிக் பொருளாகட்டும், வேறு எதுவாக இருந்தாலும் வண்டி கொள்ளாத அளவு வாங்குவார்கள்.

நாம் இப்படியிருக்க ஒரு சாரார் மிகவும் வறுமையில் கிழிந்த உடைகளை உடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் தேவையான போது உடைகளை வாங்குவோம். உங்களிடம் காசு இருக்கும் பட்சத்தில் ஏழை எளிய குழந்தைகளுக்கு முடிந்த போது துணிமணிகளை வாங்கிக் கொடுத்தால் அவர்களும் மகிழ்வார்கள் அல்லவா!மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்