Wednesday, October 10, 2012

சூப்பர் கஷாயம்!


கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால்  கசக்காமல்,  காரசாரமாக,  வீட்டில், அதுவும் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் இந்த கஷாயம் உடல்வலி, ஜலதோஷம், தொண்டை கரகரப்பு இப்படி எல்லா தொல்லைகளுக்குமே மிகவும் ஏற்ற ஒரு மருந்து.  இந்த பிரச்சனைகள் ஆரம்பிக்கும் போதே இந்த கஷாயத்தை போட்டுக்  குடித்து விட்டால் பிரச்சனைகள் குறையும். ஜாஸ்தி தொந்தரவு இருந்தால் பின்பு மருத்துவரிடம் சென்று விடுங்கள். அஜாக்கிரதையாக இருக்க கூடாது.

இந்த கஷாய வைத்தியத்தினை என் மாமியாரிடமிருந்து நான் கற்றுக் கொண்டு எங்கள் வீட்டில் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலுமே மாதம் ஒருமுறை இந்த கஷாயத்தை போட்டுத் தரும்படி என் கணவர் சொல்லுவார்.  இந்த சூப்பர் கஷாயத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாமா….

தேவையான பொருட்கள் :-

சுக்கு (அ) இஞ்சி ஒரு விரல்நீளத் துண்டு
தனியா – 2 தேக்கரண்டி
மிளகு – ½  தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
துளசி இலைகள் சிறிதளவு
கற்பூரவல்லி (அ) ஓமவல்லி இலைகள் சிறிதளவு
சர்க்கரை (அ) பனங்கல்கண்டு தேவைக்கேற்ப.

செய்முறை :-

மிக்சி ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களான இஞ்சி, தனியா, மிளகு, சீரகம், துளசி, கற்பூரவல்லி ஆகியவற்றை போட்டு மைய அரைத்து எடுக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கலாம். துளசி மற்றும் கற்பூரவல்லி ஆகியவை விருப்பம் தான். இருந்தால் அதாவது கிடைத்தால் சேர்த்துக் கொள்ளலாம் இல்லையெனில் கவலைவேண்டாம். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி நன்கு கொதிக்க விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் சிறிதளவு சுண்டியதும் இறக்கி, சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு சேர்த்து கரைந்ததும் வடிகட்டி பருக கொடுக்கலாம்.

குடித்த சிறிது நேரத்திலேயே புத்துணர்ச்சி கிடைக்கும். என்ன நீங்களும் செய்து பார்ப்பீர்கள் தானே….டிஸ்கி :

கைக்குழந்தைகளுக்கு வெறும் கற்பூரவல்லி இலைகளை மட்டும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சுண்டியதும் இறக்கி தேன் சேர்த்து கொடுக்கலாம். இது சளியை விரட்டும். ரோஷ்ணிக்கு இப்படித் தான் குழந்தைப் பருவத்தில் கொடுத்திருக்கிறேன். சூப்பரா குடிப்பா….

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

30 comments:

 1. அருமையான இயற்கை வைத்தியம் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. தேவையான பகிர்வு...

  மிக்க நன்றிங்க...

  ReplyDelete
 3. பலருக்கும் பயன் தரக் கூடிய குறிப்பு. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 4. அட மிக்ஸி கஷாயம்! சுலபமாக இருக்கிறதே. ஆதி இன்னும் மாமியாரிடம் நிறையக் கற்றுக் கொண்டு எங்களுக்கும் சொல்லுங்கள். நன்றிமா.

  ReplyDelete
 5. கஷாயம் எளிமையாக இருக்கு செய்து பார்க்கிறேன்

  ReplyDelete
 6. ஆமா எங்க வீட்டிலும் குழந்தைகள் குழந்தைகளாக இருந்தவரை இந்தக்கஷாயம் செய்து கொடுத்திருக்கே. ஓமவல்லி இலைகளுக்குபதிலாக தூதுவளை இலைகள் சேர்த்து செய்வேன்

  ReplyDelete
 7. போடச் சொல்லி குடிச்சுப் பார்த்துடறேன். மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 8. கஷாயம் ... சூப்பர்! பயனுள்ள பதிவுக்கு நன்றிகள்.

  ReplyDelete


 9. சூபர் கஷாயம் போங்கள்.!!

  இந்தக் கஷாயம் தான்.
  ஆமாம். இதே தான். இதுவே தான்.
  இருபதா.. இல்லை முப்பது வருசத்துக்கு முன்னாடி
  இல்லாள் என் தங்கைக்கு கொடுத்தாள்.

  இன்னாடி ! ஒண்ணும் பேசல்ல !

  இப்ப எப்படி இருக்கு, அப்படின்னு
  இஞ்சி தின்ன குரங்கு போல மூஞ்சியை வச்சுட்டு இருந்த‌
  இரண்டு வார்த்தை தான் கேட்டாள்.

  என்னாடி கொடுத்த எனக்கு !
  என்றாள்.
  பதறிப்போனேன்.
  பாய்ந்து குறிக்கிட்டேன்.

  ஒன்னுமில்லை.
  ஒரு தேசீயக்கொடி போல

  உடம்பெல்லாம் இருக்குது என்றாள்.

  அப்படின்னா என்ன ? என்றதற்கு,
  குடிக்கும்பொது
  தொண்டை எறிஞ்சது. சிகப்பு மிளகாய் வத்தல் போல்
  மார்பு வழியா போனப்போ கொஞ்சம் இதமாய் இருந்தது.
  வயித்துக்குள்ளெ போனப்பறம் குளிர்ச்சியா இருக்கு.

  இப்ப என்ன பண்றது அப்படின்னு கேட்டேன்.
  இன்னும் கொஞ்சம் இருக்கா எனக்கேட்டாள்.
  ஏன் இன்னும் என்றதற்கு
  இது இருமல் சளி ஜல்பு சரியாகுமோ தெரியாது. ஆனாலும்
  இப்ப கொஞ்சம் சுகமாக இருக்கு என்றாள்.

  காஷாயத்துக்கு ஜே !!
  ஸாரி ..
  கஷாயத்துக்கு ஜே !

  சுப்பு தாத்தா.
  http://Sury-healthiswealth.blogspot.com

  ReplyDelete
 10. சொல்ல வந்ததை மறந்துட்டு
  சுய புராணமே பாடிட்டு இருக்காரு இந்த‌
  சுப்பு தாத்தா.

  இந்த ஓம வல்லி இருக்கே !
  அத நல்லா பசுமையா வாடாததா பத்து பதினைந்து எடுத்து
  நெய்யிலே ஒரு சொட்டு ஊத்தி லேசா ஃப்ரை பண்ணி,
  கடலை மாவு, உப்பு, மிளகு, கலந்த கலவையிலெ
  ஒவ்வொண்ணா முக்கி,
  ( அதாவது ஆத்துலே முழுக்க முக்கமாதிரி )
  அதை இதயம் நல்லெண்ணை லே
  ஒவ்வொண்ணா போட்டு
  நன்னா வெந்தப்பறம் பொன் நிறம் வந்தப்பறம்
  எடுத்து ஆற வச்சு,
  கொஞ்சம் தேங்காய் சட்னி தொட்டுக்க வச்சு
  வீட்டுக்காரருக்கு
  டிஃபனா கொடுங்க...

  ஆஹா ஆஹா அப்படின்னு உங்களை
  ஆக்ராவுக்கு அழைச்சுகிட்டு போவாரு.

  மீனாட்சி பாட்டி.
  ஹஸ்பென்ட் ஆஃப்,
  ஓ...ஐ அம் சார்,
  வைஃப் ஆஃப்
  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 11. உபயோகமான ஒன்று. கற்பூரவல்லி இலைகள் கிடைப்பதில்தான் சிக்கல். வீட்டிலும் வளர்க்கவில்லை இங்கு தமிழகத்தில் சமஹன் கிடைக்கிறது. சுக்கு மிளகு, திப்பிலி கலந்தது என்று நினைக்கிறேன். அது கூட உபயோகமாக இருக்கிறது.சளிக்கும் இருமலுக்கும் இஞ்சியை தேனிலோ சர்க்கரைப் பாகிலோ ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 12. வீட்டம்மாவுக்கு இப்பதிவை காட்டுகிறேன் அவருக்கு உதவ கூடும் நன்றி

  ReplyDelete
 13. இப்பல்லாம் ரெடிமேட் மிக்ஸ் கிடைக்குது இந்தச் சுக்குக்கஷாயத்துக்கு; இருந்தாலும் வூட்டுலே பண்ணினா அந்த ருசியே அலாதிதான்! அதுவும் சர்க்கரைக்குப் பதிலா கருப்பட்டி சேர்த்தா, ஆஹா!

  ReplyDelete
 14. சுக்கு கஷாயம், தனியா கஷாயம் எல்லாம் குடித்த ஞாபகம் வந்தது! பயனுள்ள பதிவு! நன்றி!

  ReplyDelete
 15. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 16. ரொம்ப நல்ல கஷாயம். கொஞ்சம் தேனையும் விட்டால் இன்னும் நல்லது.

  ReplyDelete
 17. நல்லதொரு கஷாயம் பற்றிய குறிப்பு கொடுத்திருக்கீங்க ஆதி.நன்றி பகிர்வுக்கு.

  சிறு வயதில் ஜிரம் வந்தால் எங்கம்மா இந்த கஷாயம்தான் கொடுப்பாங்க சக்கரைக்கு பதிலாக சிறிதளவு தேன் விட்டுக் கொடுப்பாங்க..

  ReplyDelete
 18. இன்றுகாலை முதல் ஜலதோஷம்,தொண்டை எரிச்சலால் அவதிப்படுகிறேன்.இன்றைக்குச் சரியாக எனக்காகவே இப்பதிவு,
  நன்றி ஆதிவெங்கட்

  ReplyDelete
 19. நல்ல கஷாயம்.
  நேரம் கிடைக்கும்போது இக்குறிப்புக்களையும் பாருங்கள்.
  http://sinnutasty.blogspot.com/2008/09/blog-post_30.html

  ReplyDelete
 20. இப்பதிவை ரசித்து கருத்திட்டு, வாக்குகளையும் அளித்து என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 21. அனைவருக்கும் பயனுள்ள பதிவு்
  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete 22. http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_18.html

  சூப்பர் கஷாயம் வலைச்சர அறிமுகத்திற்கு
  வழி வகுத்திருக்கிறது ....வாழ்த்துகள்...

  ReplyDelete
 23. ஸாரி ஃபார் த லேட் கம்மிங். :-))))

  கருப்பட்டி சேர்த்து, அவ்வப்போது அருந்துவதுண்டு. சும்மா ‘ஜிவ்’வுன்னு இருக்கும்!! :-))))

  சொல்ல மறந்துட்டேனே, இவற்றோடு ஏலம்-கிராம்பு-பட்டையும் சேர்த்துக் கொள்வேன் நான். துளசி, ஓமவல்லி இலைகள் இதில் சேர்ப்பதில்லை.

  ReplyDelete
 24. நல்ல பகிர்வு.டிப்ஸ்க்கு மிக்க நன்றி.உங்க முறையில் கஷாயம் சூப்பர்.

  ReplyDelete
 25. நானும் இப்போக் கஷாயம் போடப் போகணும். :)))) தூதுவளை, துளசி, சுக்கு,மிளகு சேர்த்த கஷாயம், இதுவும் சளி, இருமலுக்கு ஏற்றது. அப்புறமா ஒண்ணும் எழுதலை போல. இதையே இன்னிக்குத் தான் வந்து பார்க்க முடிஞ்சது. இன்னும் கொஞ்ச நேரத்திலே கரன்ட் அவுட் ஆகிடும். :)))))

  ReplyDelete
 26. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
  வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…