Monday, October 29, 2012

என்றுதான் திருந்துவார்களோ?
தலைப்பைப் பார்த்ததும் யார் எதற்காக என்றுதானே கேட்கத் தோன்றுகிறதுசமீபத்தில் நடந்த சில சம்பவங்களை பற்றி உங்களோடு பகிர்ந்து கொண்டு என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி நம் மக்கள் என்று தான் திருந்தப் போகிறார்களோ என்று கேட்க வேண்டும்.

முதல் சம்பவம்:

சமீபத்தில் உறவினர் ஒருவர் கண் மருத்துவமனைக்கு சென்று விட்டு வந்து என்னிடம் பகிர்ந்து கொண்ட சம்பவம் இது. காவிரியின் கிளை ஆறான கொள்ளிடத்தில் குளிப்பதற்காக சென்ற ஆறு வயது சிறுவன் தன் கண் பார்வையையே இழந்து விட்டானாம். அவன் மருத்துவமனையில் சிகிச்சையெடுத்தும் தன் இடது கண் பார்வையை இழந்து விட்டு வலியால்  துடித்தானாம். எதனால் இப்படி? ஆற்றில் கிடந்த பீங்கானோ, கண்ணாடியோ அவன் கண்ணை பதம் பார்த்திருக்கிறது. வீட்டில் தேவையில்லாத பொருள் என்று தோன்றுவதையெல்லாம் ஆற்றில் கொண்டு வந்து வீசியதன் விளைவு இது? அந்த சிறுவன் துடித்த துடிப்பை அவர்கள் சொல்லி கேட்கும் போதே மனம் பதைபதைக்கிறது.

இரண்டாவது சம்பவம் :-

சமீபத்தில் ஒருநாள் கோவிலுக்கு சென்றிருந்தோம். அங்கு ஒருவர் எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்தால், அவர் பாண்டிச்சேரியிலிருந்து வந்திருக்கிறாராம். ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு ஹோட்டலில் சாப்பிட்டு  மாலையில் ஊர் திரும்பலாம் என்று கோவில் பிரகாரத்தில் சற்றே கண் அயர்ந்திருக்கிறார். எழுந்து பார்த்த போது அவரது கதர்சட்டையும் அதனுள் வைத்திருந்த 300 ரூபாயையும் காணோம்.  பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் தான் வேலையாக உள்ளதாகவும் கையில் ஊருக்கு செல்ல பணம் சற்றே குறைவாக உள்ளதாகவும், அதை விட சட்டை இல்லாமல் எப்படி ஊர் செல்வதென்றும் கண் கலங்கி அமர்ந்திருந்தார். எங்கள் கைகளில் இருந்த பணத்தைக் கொடுத்து விட்டு, வீட்டில் உள்ள இவருக்கேற்ற அளவுள்ள சட்டையை  கொடுத்ததும் மகிழ்ந்து தன்னுடைய முகவரியும் தந்து நன்றி கூறினார். எவ்வளவு பணம் இருந்தாலும் தன்னுடைய இடத்தை விட்டு வெளியே வந்த இடத்தில் தன்னுடைய பணம் மற்றும் பொருட்கள் களவு போனால் தடுமாற்றமும் கலக்கமும் வருவது தான்ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? சட்டை கசங்காமல் இருக்க வேண்டுமென நினைத்து அருகில் வைத்து விட்டு உறங்கலாமா

டிஸ்கி: இந்த சம்பவத்தை உறவினர் ஒருவரிடம் கூறிய போது "எனக்கென்னவோ அவர் உண்மையிலேயே பணத்தை தொலைத்திருப்பாரான்னு சந்தேகமா இருக்கு. ஒரே ஆசாமி வேறொரு இடத்தில் வேறொரு கதையைக் கூறி அவர்களின் அனுதாபத்தையும் பணத்தையும் பெற்றுச் சென்றதைப் பார்த்திருக்கிறேன் என்றார்.யாரைத்தான் நம்புவதோ உதவும் நெஞ்சம்இவர்களைப் போன்றவர்கள் செயலால் நிஜத்தில் சிக்கலில் மாட்டி அல்லல் உறுகிறவர்கள் பாடு இன்னும் இறுகிப் போகிறது.


மூன்றாவது சம்பவம் :-

கண் மருத்துவமனையில் நடந்தது தான் இந்த சம்பவமும். பரிசோதனை செய்து கொள்ள வந்த ஒரு பெண்மணி தனக்கு சில்லறை தேவைப்படுவதாகச் சொல்லி ஐநூறு ரூபாயை பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்மணியிடம் தந்திருக்கிறார். அதற்குள் இந்தப்  பெண்மணியை மருத்துவர் அழைக்கவே உள்ளே சென்று விட்டு சிறிது  நேரங்கழித்து வந்து பார்த்த போது அருகில் அமர்ந்திருந்த பெண்மணியைக் காணவில்லை. தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. தெரியாத ஒருவரிடம் பணத்தை கொடுத்து விட்டு சென்றதனால் ஐநூறு ரூபாயை தொலைத்து விட்டு புலம்பிக் கொண்டிருந்தார். 

கடைசி இரண்டு சம்பவங்கள் நமக்கு சொல்வது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைத் தான். ஆனால் ஆறு வயது சிறுவனின் பார்வை பறி போன விஷயம்……L


மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

Wednesday, October 10, 2012

சூப்பர் கஷாயம்!


கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால்  கசக்காமல்,  காரசாரமாக,  வீட்டில், அதுவும் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் இந்த கஷாயம் உடல்வலி, ஜலதோஷம், தொண்டை கரகரப்பு இப்படி எல்லா தொல்லைகளுக்குமே மிகவும் ஏற்ற ஒரு மருந்து.  இந்த பிரச்சனைகள் ஆரம்பிக்கும் போதே இந்த கஷாயத்தை போட்டுக்  குடித்து விட்டால் பிரச்சனைகள் குறையும். ஜாஸ்தி தொந்தரவு இருந்தால் பின்பு மருத்துவரிடம் சென்று விடுங்கள். அஜாக்கிரதையாக இருக்க கூடாது.

இந்த கஷாய வைத்தியத்தினை என் மாமியாரிடமிருந்து நான் கற்றுக் கொண்டு எங்கள் வீட்டில் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலுமே மாதம் ஒருமுறை இந்த கஷாயத்தை போட்டுத் தரும்படி என் கணவர் சொல்லுவார்.  இந்த சூப்பர் கஷாயத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாமா….

தேவையான பொருட்கள் :-

சுக்கு (அ) இஞ்சி ஒரு விரல்நீளத் துண்டு
தனியா – 2 தேக்கரண்டி
மிளகு – ½  தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
துளசி இலைகள் சிறிதளவு
கற்பூரவல்லி (அ) ஓமவல்லி இலைகள் சிறிதளவு
சர்க்கரை (அ) பனங்கல்கண்டு தேவைக்கேற்ப.

செய்முறை :-

மிக்சி ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களான இஞ்சி, தனியா, மிளகு, சீரகம், துளசி, கற்பூரவல்லி ஆகியவற்றை போட்டு மைய அரைத்து எடுக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கலாம். துளசி மற்றும் கற்பூரவல்லி ஆகியவை விருப்பம் தான். இருந்தால் அதாவது கிடைத்தால் சேர்த்துக் கொள்ளலாம் இல்லையெனில் கவலைவேண்டாம். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி நன்கு கொதிக்க விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் சிறிதளவு சுண்டியதும் இறக்கி, சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு சேர்த்து கரைந்ததும் வடிகட்டி பருக கொடுக்கலாம்.

குடித்த சிறிது நேரத்திலேயே புத்துணர்ச்சி கிடைக்கும். என்ன நீங்களும் செய்து பார்ப்பீர்கள் தானே….டிஸ்கி :

கைக்குழந்தைகளுக்கு வெறும் கற்பூரவல்லி இலைகளை மட்டும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சுண்டியதும் இறக்கி தேன் சேர்த்து கொடுக்கலாம். இது சளியை விரட்டும். ரோஷ்ணிக்கு இப்படித் தான் குழந்தைப் பருவத்தில் கொடுத்திருக்கிறேன். சூப்பரா குடிப்பா….

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

Monday, October 1, 2012

சில இடங்களில் சில மனிதர்கள்
நாம் எந்த இடத்திலிருந்தாலும் வயது வித்தியாசமில்லாமல் சிலரோடு நல்ல நட்பு ஏற்பட்டு விடுகிறது. அப்படி நான் ஸ்ரீரங்கம் வரும்போதெல்லாம் ஏற்படும்/ஏற்பட்ட சில நட்புகளைப் பற்றி இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நட்பு தாத்தா:

இந்தத் தாத்தாவோடு எனது நட்புக்கு வயது ஏழு. நான் கருவுற்றிருந்த போது பிரசவத்துக்கு முன் தினமும் காலையிலும், மாலையிலும் நடைப் பயிற்சி செய்வேன். காலையில் மொட்டை மாடியில் 50 நடையும், மாலையில் கோவிலுக்கு சென்று பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு வீட்டுக்கு வருவதும் தான் பயிற்சி. அப்படி ஒரு நாள் மாலை நடக்கும் போது என்னை இந்த தாத்தா கூப்பிட்டுயார் வீட்டு பெண் நீ?” என்று விசாரித்து எனக்கு  பேரிச்சைகளையும், மல்லிகைப்பூக்களையும் சுகப்பிரசவம் ஆக சில ஸ்லோகங்களையும் எழுதி கொடுத்து தினமும் சொல் என்று சொன்னார். திடீரென்று என்றாவது கூப்பிட்டு ஸ்லோகத்தை சொல்லச் சொல்லி தப்பில்லாமல் சொல்கிறேனா என்று பார்ப்பார். இப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு. நான் "சார்" என்று கூப்பிட்டாலும் "தாத்தா" என்று அழைக்கும்படி சொல்வார். (சிலருக்கு அவர்கள் தாத்தா ஆகும் வரை மற்ற குழந்தைகள் தாத்தா என்று கூப்பிட்டால் கூடப்  பிடிக்காது.) தாத்தாவுக்கு வயது மிகவும் குறைவு தான். நான்கு வருடங்களுக்கு முன்பு 96. வயதான காரணத்தால் கொஞ்சம் சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்வார் அவ்வளவே. இப்போதும் தன்னுடைய வேலைகளை தானே தான் செய்து கொள்கிறார் தனியாக இருக்கும் இவர்


இந்த முறை தான் கொஞ்சம் உடம்புக்கு முடியலை என்றார்.

அன்பான ஒரு மாமி:
இந்த மாமியும் எனக்கு பிரசவ நேரத்தில் தான் அறிமுகமானார். அப்போது  பக்கத்து வீட்டில் இருந்தார். மாமியார் ஊருக்கு போயிருந்த சமயத்தில் என்னை அவ்வளவு அன்பாய்ப்  பார்த்துக் கொண்டார். எனக்கு ஜாதிப்பூ மிகவும் பிடிக்கும் என்று ஒருநாள் சொன்னேன். அவ்வளவுதான். தினமும் ஜாதிப்பூ வாங்கி எனக்கு வைத்து விட்டு நடைப்பயிற்சிக்கு என்னுடன் துணையாக வருவார். முற்பகல் பதினோரு மணியாகி விட்டால் மாமிகொதிகஞ்சிகொண்டு வந்து கொடுத்து உடனே வெண்ணையும், பனங்கல்கண்டும்  போட்டு குடிக்கும்படி அன்பாய் மிரட்டல் விடுவார். எனக்காகவே கொஞ்சமாக அரிசி போட்டு வடித்து கஞ்சி வைத்துக்  கொடுப்பார். மாமியார் ஊரிலிருந்து வந்த பின்பும்  கூட அந்த மாமியே தரட்டும்மா என்று சொல்லிட்டேன். பிரசவம் வரை தொடர்ந்தது கஞ்சி. இப்போ வரைக்கும் எப்போ ஊருக்கு வந்தாலும் மாமியை பார்க்காமல் இருக்க மாட்டேன். மாமிக்கே நான் வந்திருப்பது தெரிந்து விட்டால் என்னை தேடிக்கொண்டு வந்து விடுவார்.
டெல்லி பாட்டி:
இந்த முறை பழக்கமானவர் தான் இந்த பாட்டி. டெல்லியில் ஐம்பது வருடங்களுக்கு மேல்  இருந்தவராம். இவரது கணவர் மற்றும் மகனுடன்  அரங்கன் காலடியில் இருக்க வேண்டும் என்று வந்தவர். கணவர் ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இங்கு வந்து சில காலங்களுக்குள் கணவர் இறந்து விட, அடுத்த பதினைந்தே நாளில் மகனும் இறந்திருக்கிறார். இப்போது பாட்டி தனியாகத்தான்  இருக்கிறார். தள்ளாத வயதிலும் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொண்டு. யாராவது அவரது கணவரின் இறப்பைப்  பற்றி கவலைப்பட்டு கேட்டால், "வந்தார், வந்த வேலை முடிந்து விட்டது. சென்று விட்டார்" என்பார்.. டெல்லி பற்றி யாராவது பேசினால் குங்கும நிறத்தில் இருக்கும் பாட்டியின் முகம் சந்தோஷத்தில் இன்னும் சிவந்து விடும். ”எங்கிருந்தீர்கள்? டெல்லி மாதிரி வரவே வராதுஎன்று சொல்லிக் கொண்டேயிருப்பார். என்னை எப்போது பார்த்தாலும் அன்பாய் விசாரிப்பார்.
அன்பான தம்பதிகள்:


இவர்களும் இம்முறை கோவிலுக்கு  சென்ற  போது பழக்கமானவர்கள். நான் செல்லும் நேரத்தில் தான் அவர்களும் வருவார்கள். சில நாட்கள் பார்த்துக் கொண்டோம். பின்பு புன்னகைத்து அறிமுகப்படுத்திக் கொண்டோம். என் கையைப்  பிடித்துக்  கொண்டு " நீ பிரார்த்திப்பது எல்லாம் நிச்சயமாக நடக்கும்!" என்று ஆசீர்வாதம் செய்தார்கள். ஒரு நாள் வரவில்லையென்றாலும் "நேற்று ஏன் வரவில்லை... இன்று என்ன சுடிதார் இல்லாமல் புடவையில் வந்திருக்கிறாய்?" என்று அன்பான விசாரிப்புகள். தம்பதிகள் இருவரும் சேர்ந்து சுவாமியை பிரதட்சணம் செய்வார்கள். பின்பு மாமாவை உட்கார சொல்லி விட்டு மாமி மட்டும் பிரதட்சணம். மாமா BHELல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்பு இருவரும் சேர்ந்து செல்வார்கள். வழக்கமான ஜோல்னா பையுடன் மாமியும், நடக்க சற்று ஏதுவாக அவர் தோளை பிடித்தபடி மாமாவும் போவார்கள்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை பார்ப்பது இப்போது அரிது. அவர்கள் நம்மிடம் செலுத்தும் அன்பு நம்மைக்  கட்டிப் போட்டு விடுகிறது. வயதானவர்களை பொறுத்த வரை அவர்கள் சொல்லும் விஷயங்களை நாம் சலிப்பின்றி பொறுமையாக கேட்க வேண்டும். அதுவும் திரும்ப திரும்பச் சொன்னாலும், புதிதாக கேட்பது போல் கேட்டால் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

மீண்டும் சந்திப்போம்.

ஆதி வெங்கட்.


டிஸ்கி: தற்செயலாக எழுதியது இந்த பதிவு. ஆனால் இன்று உலக முதியோர்

தினமாம். இந்த நாளுக்கு ஏற்ற பதிவாக அமைந்து விட்டதில் மகிழ்ச்சி.