Thursday, September 27, 2012

என் இனிய தோழி!பத்து வயதிலிருந்தே என் இனிய தோழி அவள். பள்ளிப்பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும், பின்பு வேலைக்கு சென்று கொண்டிருந்த காலத்திலும் கூட என்னோடு இருந்தாள். கல்யாணம் வரை இணைபிரியாது திரிந்தோம். கல்யாணம் முடிந்து தில்லி சென்ற பிறகு வேறு வழியின்றி பிரிந்து விட்டோம். அதன் பிறகு தோழியுடனான தொடர்பு முற்றிலும் விட்டுப் போயிற்று. இவளைப் போல அங்கும் சில தோழிகள் இருந்தாலும், அவர்கள் பேசும் மொழி ஹிந்தியானதால் அவ்வளவு ப்ரியம் இல்லை. பத்து வருடங்களுக்கு மேல் பிரிந்திருந்த தோழிகள்  இப்போது மீண்டும் இணைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறோம்.

யார் அந்த தோழி? யூகிக்க முடிந்ததா? மனிதர்களோடு தான் நட்பாக இருக்க முடியும் என்ற அவசியமில்லையே...... நான் சொல்வது என் வானொலித் தோழியைத் தான்.காலையில் எங்களை எழுப்பும் போதே அப்பா வானொலியை ஆன் செய்து விடுவார். வந்தே மாதரம், சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், செய்திகள், திரைப்பாடல்கள் என்று எங்களுடனேயே குடும்பத்தில் ஒருத்தியாக பள்ளி செல்லும் வரை கூடவே இருப்பாள். மாலையிலும் துணையாயிருப்பாள். சனி, ஞாயிறுகளில் பகல் வேளைகளில்  பொழுது போக ஒரே வழி இவள் தான்!  பாடல்களை கேட்டுக் கொண்டே படிப்பேன். இதற்காக எவ்வளவோ முறை திட்டும் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் காதினுள் போக முடியாதபடி பாட்டு வழிமறிக்கும்! 

உள்ளூர் பேருந்தில் இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்தது. இதற்காகவே வரும் அரசு பேருந்துகளையெல்லாம் விட்டு விட்டு தனியார் பேருந்துகளில், அதுவும்பாட்டு பாடும் பேருந்தா? என்று பார்த்து ஏறி பயணித்ததும் உண்டு. இப்போதும் அப்படித்தான். சென்ற முறை திருச்சி வந்த போது கூட உள்ளூர் பேருந்தில் பாடல்களை கேட்டுக் கொண்டே வந்து, இறங்க வேண்டிய இடத்தில் இறங்க மனமில்லாமல் இறங்கினேன். அது ஒரு சுகமான அனுபவம்.

திருமணமாகி தில்லி சென்ற புதிதில் கணவர் பதிவு செய்து வைத்திருந்த இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் தான் எனக்கு துணை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்திலிருந்து, பதினைந்து கேசட்டுகளாவது கேட்பேன். பிறகு ஒலித்தகடுகளில். அதுபாட்டுக்கு ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க நான் ஒருபக்கம் வேலை செய்து கொண்டிருப்பேன். அவர் அலுவலகம் சென்றபிறகு பாடல்களும், சத்தங்களும் தான் எனக்குத் துணை.இப்போது காலை எழுந்திருக்கும் போதே வானொலியை ஆன் செய்து விடுகிறேன். திருச்சி பண்பலையில் கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், வெள்ளிக்கிழமைகளில் மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் என பக்தி மணம் கமழ ஆரம்பிக்கும். வாசலை பெருக்கி கோலத்தைப்  போட்டு விட்டு பாலை அடுப்பில் வைத்து ஆத்திச்சூடியில் கேட்கும் புராணங்கள், இதிகாசங்கள் சம்பந்தப்பட்ட கேள்விக்கு ஓடி வந்து பதிலைச் சொல்லி விட்டு, பின்பு பக்திப் பாடல்கள், திரைப்பாடல்கள் என தொடர்ந்து அவளின் ஸ்னேகம். இரவில்வெள்ளிரதம் என்ற பெயரில் இடைக்கால திரைப்படப் பாடல்களை கேட்டு விட்டு அன்றைய நாளை நிறைவு செய்கிறேன்.

தோழி புதுகைத்தென்றல் அவர்கள் அவர்களது தோழியை சந்தித்தது குறித்து இந்த பதிவில் எழுதியிருந்தார்கள். அதை படித்தவுடன் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த வரிகளை உடனே உங்களோடு பகிர்ந்து கொள்ள தூண்டியது. இதற்காக அவர்களுக்கு என் நன்றி.

உங்களுக்கு வானொலியுடன் இருக்கும் தோழமையை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். கேட்காதவர்கள் இனிமேல் கேளுங்கள். ஆனந்தமாக, உற்சாகமாக ஒவ்வொரு நாளையும் இனிமையாக்குங்கள்.

இப்போது வானொலிப் பெட்டி (Radio) கடைகளில் கிடைப்பதே அரிதாகி விட்டதாம். நான் கூட தேடி ஒரு வானொலிப் பெட்டியை வாங்க வேண்டும். தற்போது அலைபேசியில் தான்  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

55 comments:

 1. புதுசா ஒரு ரேடியோ பார்த்தேன். நார்மல் ரேடியோ கேட்டுக்கலாம். USB Drive கனெக்ட் பண்ணி அதில் இருக்கும் பாடல்களை கேட்டுக்கலாம். நார்மல் மொபைல் சார்ஜர் மூலம் சார்ஜ் பண்ணிக்கலாம். ஐநூறு ரூபாய் ஆகிறது விலை

  ReplyDelete
 2. தில்லி வந்த புதிதில் ரேடியோ கேட்க (காலை 5-05 முதல் 6 மணி வரை பண்பலையில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்) காலையில் எழுந்து அதை கஷ்டபட்டு ‘ட்யூன்’ செய்வோம். 5-மணி வரை சமத்தாக அந்த அலைவரிசையில் இயங்கிக் கொண்டிருக்கும். 5-மணியானதும் அது படுத்தத் துவங்கும் (காரணம் அதன் அருகருகே மற்ற அலைவரிசைகள் சற்று வலுவானவை). கொஞ்சம் கூட கேட்கவில்லை என்றால் பரவாயில்லை விட்டுவிடலாம். நடுநடுவே கொஞ்சம் கொஞ்சம் பேசி ஆசையைத் தூண்டும். நடுநடுவே ரேடியோவின் ’கொய்ங்’ சத்தத்தால் தூங்கம் கெட்ட ‘கெட்ட’ நண்பர் (யார்னு கேட்கக் கூடாது!!) பாடுவதையும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

  ம்ம்.. அது ஒரு கனாகாலம் (காலை 5 மணிக்கு பாதி தூக்கத்தில் கேட்டால் கனா காலம் தான்!!)

  ReplyDelete
 3. திரு.எல்.கே சொல்லியிருக்கிற அந்த ரேடியோவை போன மாதம் தான் நான் வாங்கினேன்.
  பள்ளிநாட்களில் அப்பா பாக்கெட் ரேடியோ வைத்திருந்தார். அதில்தான் பாட்டு கேட்போம்.
  ரேடியோவில் பாட்டு கேட்பதே தனி சுகம்தான்.
  மலரும் நினைவுகளை நினைவு படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 4. I was thinking about writing a post about Radio few days back. Dont want to write in comment section here. May write it later in blog.

  There are many similarities. I normally hear songs and work. Houseboss does not like this and always object :))

  ReplyDelete
 5. உங்களுக்கு மட்டுமல்ல அனேகமா எல்லாருக்குமே அந்தக் காலத்தில் நல்ல நண்பர் ரேடியோ.

  ReplyDelete
 6. LK: Will speak to you and get to know where can we get this Radio. Planning to purchase one.

  ReplyDelete
 7. எனக்கு எப்போதும் தோழன் : கொடைக்கானல் பண்பலை (100.5 FM)

  ReplyDelete
 8. Dear
  Wonderful blog which brought our student life. Thank you. Wish you all the best.
  vijay

  ReplyDelete
 9. ஆமாங்க அந்த நாளின் இனிய தோழியே அவள் தான்...

  ReplyDelete
 10. என்னுடைய அரைடிராயர் காலத்தில் இரவு 8.30 மணிக்கு கதா காலட்சேபம் மற்றும் நாடகங்கள் கேட்டது நினைவுக்கு வருகிறாது..

  ஏ ஆகாஷ் வாணிஹே.... :-)

  ReplyDelete
 11. அந்தக்காலத்தில் ரேடியோ தான் எல்லோருக்குமே தோழியும் தோழனும். வேறு ஏது பொழுது போக்கு?

  ஆனால் ரேடியோ கேட்பது இப்போதும் சுகமே.
  காதுக்கு மட்டுமே வேலை. சுகமான நினைவலைகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 12. உங்களுக்கு வானொலியுடன் இருக்கும் தோழமையை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.//

  ஆதி, நான் ’அந்தநாளும் வந்ததே’ என்ற பதிவில் என் வானொலி அனுபவத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

  வானொலி அப்போதும், இப்போதும் உற்ற தோழி தான் எனக்கு. காரைக்கால் பண்பலையில் இப்போதும் எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டு வருகிறேன்.

  டெல்லியில் கேட்க முடியாத தமிழ் பாடல்களை இங்கு நீங்கள் கேட்டு வருவது மகிழ்ச்சி.  ReplyDelete
 13. நிஜம்தான் வானோலி இன்றும் எனக்கு
  உற்சாகம் தரும் உற்ற தோழன்தான்
  காலை ஐந்தரையிலிருந்து எட்டு மணிவரை
  பின்னிசையாக வானோலி இருந்தால்தான்
  எனக்கு வேலையே ஓடும்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. கொசுவத்தி கொசுவத்தியாச் சுத்த வச்சுட்டீங்களே!

  வானொலி மட்டுமல்ல. வானொலிக்கு ஒலி வழங்கியவர்களில் குரலும் இன்னும் காதுகளில் ஒலிக்கின்றது. அகில இந்திய வானொலியின் சரோஜ் நாரயணசாமி, பார்வதி ராமனாதன், ‘இன்று ஒரு தகவல்’ தென்கச்சி சுவாமிநாதன், இலங்கை வானொலியின் கே.எஸ். ராஜா; அப்துல் ஹமீது; தில்லையூர் செல்வராஜன். அழியாவரம் பெற்ற குரல்கள்.

  ReplyDelete
 15. மும்பைக்கு வந்த புதிதில் எனக்கும் ரேடியோதான் துணை. சாயந்திரம் விவிதபாரதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்பாடல்கள் ஒலிபரப்பாகும்.தமிழ்ப்பாட்டுக்காகக் காத்திருந்து கேட்பேன். இப்போதெல்லாம் காரில் போகும்போது மும்பை பண்பலைகளைக் கேட்பதோடு சரி. வீட்டில் டிவியில் பாடல்கள் கேட்கலாம் என்றால் கூட பசங்களிடம் பெர்மிஷன் வாங்க வேண்டி இருக்கிறது :-))

  ReplyDelete
 16. என் மாணவ மற்றும் கல்லூரிப் பருவங்கள் இதைப் படிக்கும் போது மனதில் வந்து போனது, அருமை.

  ReplyDelete
 17. ரேடியோ அனுபவம் நிறைய...

  ReplyDelete
 18. Looks like everyone has tortoise post with Radio...nice post Adhi...:)

  ReplyDelete
 19. ரேடியோவதான் சொல்றிங்கன்னு டஷ்போர்ட் ல் உள்ள ரேடியோவ பார்த்தே கண்டு பிடிச்சிட்டேன்,எனக்கு இலங்கை அலைவரிசை ரொம்ப பிடிக்கும்.

  ReplyDelete
 20. அந்த நாட்களின் இனிய தோழியே ரேடியோ தான்! புதிய பாட்டுக்களுக்கு தவம் கிடந்த காலங்களை திரும்பவும் ஞாபகப்படுத்தும் உங்களின்
  ப‌திவு சுவார‌ஸ்ய‌ம் ஆதி!!

  ReplyDelete
 21. வாங்க எல்.கே,

  தகவல்களுக்கு நன்றி. பார்க்கிறேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 22. வாங்க சீனு அண்ணா,

  //நடுநடுவே ரேடியோவின் ’கொய்ங்’ சத்தத்தால் தூங்கம் கெட்ட ‘கெட்ட’ நண்பர் (யார்னு கேட்கக் கூடாது!!) பாடுவதையும் கேட்டுக் கொள்ள வேண்டும்.//

  அது யார்னு தெரிஞ்சுடுத்து.....சொல்ல மாட்டேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

  ReplyDelete
 23. வாங்க ஜிஜி,

  ஓ!வாங்கிட்டீங்களா....நல்லா இருக்கா.... நானும் வாங்கலாம் என்று இருக்கிறேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. வாங்க மோகன்குமார் சார்,

  உங்க ரேடியோ அனுபவத்தை பற்றி உங்க வலைப்பூவில் விரைவில் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  இங்க நாங்க இருவருமே பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்பவர்கள் தான்...:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 25. நான் இங்கு காரில் போகும் பொழுது தமிழ்ப் பாடல்கள் கேட்பதுண்டு,வீட்டில் கேட்பதற்காக ஒரு சிறிய வானொலிப்பெட்டி வாங்கி ஆசையோடு டியூன் செய்தால் இங்கு அலைனில் வீட்டில் தமிழ் சேனல் எடுக்கலை,ரேடியோவை துடைத்து வைப்பதோடு சரி..: ((!
  ஆதி யூ எஞ்சாய்..

  ReplyDelete
 26. எனக்கும் ரேடியோஇனிய தோழி !!!.
  கரண்ட் கட் ஆனாலும் பாட்டரி போட்டு கேட்போமே அந்நாளில் ..
  ஞாயிறு பகல் நாடகங்கள் /இரவு ஒன்பதுக்கு மேல் விளம்பரதார் வழகும் நிகழ்சிகள் ....அப்பப்பா அதெல்லாம் இனிய நினைவுகள் ..

  நானும் மொபலில் தான் இப்ப ரேடியோ கேட்கிறேன் .. ..பின் நம்பர் கொடுத்தா போதும்


  இன்டர்நெட் ரேடியோ இங்கு கிடைக்குது விலை 140 POUNDS சன்/ரேடியோ மிர்ச்சி எல்லாம் கேட்கலாம்

  ReplyDelete
 27. ம்ஹும்ம்ம்ம்.....! சிலோன் ரேடியோ, விவித‌பார‌தி, பாட்டுக்குப் பாட்டு அப்துல் ர‌ஹ்மான், அலைவ‌ரிசை மாற்றும் கர‌க‌ர‌ கொர‌கொர‌ ச‌ப்த‌ங்க‌ள், இர‌வில் எல்லோரும் ப‌டுத்தாலும் த‌லைய‌ணைய‌ருகே காதுக்க‌ருகில் வைத்துக்கொண்டு அக்காக்க‌ள் கேட்ட‌ பாட‌ல்க‌ள்... ஒலிச்சித்திர‌ங்க‌ள், நாட‌க‌ங்க‌ள்... அதெல்லாம் ஒரு கால‌ம்! டேப் ரெக்கார்ட‌ர், டி.வி., டி.வி.டி. பிளேய‌ர்க‌ள், ஐ பாட் முத‌ல் ஆப்பிள் போன் வ‌ரை எத்த‌னை வ‌ந்தாலும் ரேடியோவை விஞ்ச‌ முடியுமா?! எதிர்பாரா நேர‌த்தில் ம‌ன‌துக்கினிய‌ பாட‌ல், எதிர்பார்க்கும் பாட‌ல் ஒலிப‌ர‌ப்பாகா த‌விப்பு இதெல்லாம் இப்போதைய‌ 'த‌யாரிப்பு'க‌ளில் கிடைக்குமா?

  ReplyDelete
 28. வாங்க கே.பி.ஜனா சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 29. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

  நீங்க கொடைக்கானல் பண்பலையா......

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 30. வாங்க விஜயராகவன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. வாங்க சிநேகிதி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 32. வாங்க ஆர்.வீ.எஸ்,

  பாலுவின் பாடல்கள் கேட்கவில்லையோ!

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 33. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  ஆமாம் சார். காதுக்கு மட்டுமே வேலை....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 34. வாங்க கோமதிம்மா,

  உங்களுடைய அந்த பதிவை நானும் படித்து பின்னூட்டம் இட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.....நீங்க காரைக்கால் பண்பலையா...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 35. வாங்க ரமணி சார்,

  எனக்கும் இப்போது வானொலி இருந்தால் தான் வேலை ஓடுகிறது....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 36. வாங்க ஈஸ்வரன் சார்,

  அவர்களின் குரல்கள் அழியாவரம் பெற்ற குரல்கள் தான்......

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 37. வாங்க அமைதிச்சாரல்,

  காத்திருந்து கிடைப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 38. வாங்க கணேஷ் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 39. வாங்க சங்கவி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 40. வாங்க புவனா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 41. வாங்க ஆச்சி,

  ஓ! கண்டுபிடிச்சிட்டீங்களா....:) நீங்க இலங்கை வானொலியா..

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 42. வாங்க மனோம்மா,

  தவம் கிடந்து கேட்பதில் தான் எத்த்னை சந்தோஷம்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 43. வாங்க ஆசியா உமர்,

  நிச்சயமாக நான் மிகவும் எஞ்சாய் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
  உங்க வீட்டில் டியூன் ஆவதில்லையா....:( விரைவில் கிடைக்கட்டும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 44. வாங்க ஏஞ்சலின்,

  ரேடியோ மிர்ச்சி கிடைக்குதா....சந்தோஷம். எஞ்சாய் பண்ணுங்க.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 45. வாங்க நிலாமகள்,

  //எதிர்பாரா நேர‌த்தில் ம‌ன‌துக்கினிய‌ பாட‌ல், எதிர்பார்க்கும் பாட‌ல் ஒலிப‌ர‌ப்பாகா த‌விப்பு இதெல்லாம் இப்போதைய‌ 'த‌யாரிப்பு'க‌ளில் கிடைக்குமா?//

  ஆமாங்க. ரேடியோவை மிஞ்ச முடியாது...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 46. அன்பு நட்புகளே,

  என்னுடைய அடுத்த பதிவான ”சில இடங்களில் சில மனிதர்கள்” அப்டேட் ஆகவில்லை. முடிந்த போது படித்து கருத்து கூறுங்கள்.

  அதன் சுட்டி இதோ,

  http://www.kovai2delhi.blogspot.in/2012/10/blog-post.html

  ReplyDelete
 47. என்னுடைய சிறுவயதில் கிராமத்தில் பாண்டிச்சேரி,திருச்சி,சென்னை, சென்னை விவிதபாரதி போன்ற வானொலி நிலையங்களின் ஒலிபரப்பை கேட்டு மகிழ்ந்த நாட்கள் ஞாபகம் வந்தது! வால்வ் ரேடியோ, ட்ரான்ஸிஸ்டர் இரண்டும் பாஎர்த்த காலங்கள். பணியில் சேர்ந்தவுடன் டேப்ரெக்கார்டர்- கிட்டத்தட்ட 400 ஒலிப்பேழைகள்- விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து பதிவு செய்து கேட்டுக்கொண்டிருந்த நாட்கள் நினைவில் வந்தன. புதுச்சேரி வானொலி குறித்து நான் எழுதிய கவிதை ஒன்றை விரைவில் பகிர இருக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 48. வாங்க சேஷாத்ரி சார்,

  உங்கள் வானொலி கவிதையை வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 49. என் 'தோழனு'ம் கூட! வானொலியின் பவளவிழா ஆண்டை ஒட்டி ஒரு பதிவு எழுதி வைத்து சேமிப்பில் தூங்கிக் கொண்டே இருக்கிறது. சீக்கிரம் வெளியிட வேண்டும்! ஒரு போட்டோவுக்காக வெயிட்டிங்! அந்தக் காலத்தில் இந்த தோழைமைதானே ஒரே பொழுது போக்கு!

  ReplyDelete
 50. வாங்க ஸ்ரீராம்,

  உங்களுடைய ரேடியோ பதிவு விரைவில் வெளியாகட்டும். காத்திருக்கிறோம்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 51. இனிய தோழி பற்றி அருமையான பகிர்வுகள்..

  ReplyDelete
 52. உங்க தோழி எங்களுக்கும் தோழிதான் ஆதி. ஆனால் இப்பொழுது எல்லோருக்கும் தொலைக்காட்சி பெட்டிதான் தோழி ஆகிவிட்டது.இதில் ஒரு சிரமாம் என்னவென்றால் வானொலியை கேட்டுக்கொண்டே வேலைகளை முடித்துவிடலாம் தொ.பெ.அப்படி இல்லையே பார்த்து கொண்டே வேலைகளை கோட்டை விட வேண்டும்.

  மிக அழகாக உங்கள் தோழமையை விவரித்து இருக்கீங்க ஆதி. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 53. எங்கள் வீட்டில் ரேடியோ உயரத்தில் இருக்கும். தென்னீந்தியாவில் இருந்ததால் ரேடியோவுக்கு மரியாதை கொடுத்து சிலோன்,திருச்சி நாடகங்கள், ஒன்று விடாமல் கேட்போம் நின்று கேட்க வேண்டும அப்பா இல்லாவிட்டால் சினிமா சங்கீதம் சத்தமாகக் கேட்கலாம்:)
  மத்தபடி,படிக்கும் போதும் வானொலி வேண்டும்:)
  நன்றி ஆதி.

  ReplyDelete
 54. தாயகத்தில் இ.ஒ .கூ அலைவரிசை இப்போது கைபேசியில் லங்கா சிரி எப்.எம் என எப்போதும் வானொலிதான் எனக்கும் தோழன் வேலை ஒரு புறம் செவி ஒருபுறம் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நினைவை மீட்டியதுக்கு!

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…