Tuesday, September 11, 2012

ஆடிப் பார்க்கலாம் ஆடு...


 
[பட உதவி: கூகிள்]
 

சமீபத்தில் வீட்டிற்கு வந்த என்  தம்பி, என் மகளுக்கு  ஒரு BRAINVITA வாங்கித் தந்திருந்தான். அதை அவளுக்கு விளையாடச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது அவள் என்னிடம் கேட்டாள், அம்மா "உன்னிடமும் இது இருந்ததா? நீ சின்னதா இருக்கும்போது என்னென்ன விளையாட்டெல்லாம் விளையாடுவே?"

அப்போது எனக்குள்  கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சது.  என் சிறுவயது விளையாட்டுக்கள் அத்தனையும்  நினைவுக்கு  வந்து என்னை சூழ்ந்து கொண்டு " இதை உடனே பதிவா எழுதலைன்னா தலை வெடிச்சுடும்"-னு மனபூதம் பயமுறுத்தவே உடனே எழுதிட்டேன்.

 
[பட உதவி: கூகிள்]


மாம் அந்த காலத்தில் எங்களிடமும் ஒரு BRAINVITA இருந்தது. நாங்கள் மதுரையில் உள்ள  மாமா வீட்டிற்கு சென்றிருந்த போது மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தோம். புதுமண்டபத்தில் BRAINVITAவும், மீன் வடிவில் பல்லாங்குழியும் வாங்கித் தந்தார் அப்பா. பல்லாங்குழியில் போட்டு விளையாட பாட்டி நிறைய சோழிகளும் கொடுத்தனுப்பினார். இது போக எங்கள் வீட்டுக்கருகில் ஒரு மரத்திலிருந்து சிவப்பு நிறத்தில் மாத்திரைகள்  போல காய்கள் விழும். அதை பத்திரப்படுத்தி எடுத்து வைத்துக் கொள்வோம்.  பல்லாங்குழியில் பல விளையாட்டுகள் இருக்கு.  அதையெல்லாம் திரும்ப நினைவு படுத்தியோ இல்லைன்னா யார்கிட்டயாவது கேட்டோ விளையாடணும்கிற ஆசை எனக்குள் இப்போ எழுந்திருக்கு..

அடுத்து பிசினஸ் ட்ரேட் கதையைப் பார்ப்போம். தம்பி பக்கத்து வீட்டில் இருந்த சிறுவனுடன் சேர்ந்து விளையாடுவான். அவங்க வீட்டில் இருந்த ட்ரேடில் இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள். சிலசமயம் எங்கள் வீட்டுக்கும் அதை  எடுத்து வரும் போது நானும் சேர்ந்து கொள்வேன். இப்படியே ஓடுமா? கொஞ்ச நாளிலேயே  அந்த சிறுவனின்  அம்மா எங்கள்  வீட்டுக்கு அதை எடுத்து வந்து விளையாட  அனுமதிக்கவில்லை. தம்பியையும் அவங்க வீட்டில்  விளையாட விடவில்லை. இதனால் அவன்  புதுசா ஒரு ட்ரேட் வாங்கித் தரச் சொல்லி அடம்பிடிக்க, அப்பாவோ "விலை ஜாஸ்தி" என்று சொல்லி விட்டார்.

எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் நானும் விளையாடி பழகியதால் பழைய லாங்சைஸ் நோட்டு அட்டையை எடுத்து வெள்ளைத் தாளை ஒட்டி கட்டங்களை வரைந்து ஸ்கெட்ச்சால் எழுதி பணத்திற்கு காகிதங்களை ஒன்று போல வெட்டி, ஒரு ட்ரேடை பக்காவாக தயார் செய்து தம்பிக்கு கொடுத்தேன். நாங்கள் இருவரும் நெடுநாட்களுக்கு வைத்திருந்து விளையாடியிருக்கிறோம். இந்த கதையை மகளுக்குச் சொன்னேன்.

100
வருட பழமையான விளையாட்டுப் பொருட்கள்:  
ரோஷ்ணிக்கு சமையல் செய்து விளையாட அவள் பாட்டி "மாக்கல் " என்று சொல்லப்படுகிற கல்லாலான பாத்திரங்கள் தந்தார்கள். இதில் குட்டி அடுப்பு, பாத்திரங்கள், திருகை, ஆட்டுக்கல், துளசிமாடம் என்று அவ்வளவு அழகான பொருட்கள் இருந்தன. இவையாவும் நான்கு தலைமுறை பழசு.  பழசா இருந்தாலும் இன்னும் நல்லாவே இருக்கு.  பார்க்கவே அழகா, விளையாட ஆசையா இருக்கும்.  நாலு தலைமுறையா விளையாடிய இப்பொருட்களை வைத்து இப்போ ரோஷ்ணி விளையாடறா.  இத்தனை வருடம் பத்திரமா வைத்திருந்து என் பெண்ணுக்குக் கொடுத்த என் மாமியாருக்கு ஒரு பூங்கொத்து!  "சரி, அதையெல்லாம் எங்க கண்ல காட்டக்கூடாதா?"ன்னா கேட்கறீங்க?  சரி உங்களுக்காக ஒரு புகைப்படம் இணைச்சிருக்கேன்.  இப்பல்லாம் இந்த கல் சட்டிகள் வருவதே இல்லை.  கல் சட்டில சமையல் செஞ்சு சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்குமாம்.  நான் சாப்பிட்டதில்ல.  இப்போதெல்லாம்  நான்-ஸ்டிக், எவர்சில்வர், மைக்ரோ ஓவன் பாத்திரங்கள்  தானே மார்க்கெட்டில் கோலோச்சுகின்றன.  அதனால விளையாட்டு பொருட்கள் கூட நவீனமாத் தான் இருக்குநான் வாங்கிக் கொடுத்த நவீன சமையல் பாத்திரங்களையும் பாருங்களேன். குட்டியாக இருந்தாலும் நேர்த்தியாக உள்ளது.  முதலில் நான் விளையாடி விட்டுத்  தான் ரோஷ்ணிக்கே கொடுத்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  ஆனாலும் மாக்கல் கல் சட்டிக்கு முன்னாடி இவை நிற்க முடியாது.  நீங்க என்ன சொல்றீங்க?  மீண்டும் வேறு பகிர்வில் சந்திப்போம்...ஆதி வெங்கட்38 comments:

 1. அழகிய மலரும் நினைவுகள்.....

  ReplyDelete
 2. மாக்கல் மாக்கல்தான் .. கல் சட்டி சமையல் ருசி இப்ப வராது

  பல்லாங்குழி கத்துகிட்டு எழுதுங்க.

  ReplyDelete
 3. மலரும் நினைவுகள்.புளியங்கொட்டை வைத்து பல்லாங்குழி விளையாண்ட ஞாபகம் வருகிறது..

  ReplyDelete
 4. அட்டகாசம்ப்போங்க..
  நானும் இப்பத்தான் இந்த சிகப்பு பாத்திரங்களைப்பார்த்து ஆசைப்பட்டு வாங்கி .. என் தம்பி மகனுக்குக் கொடுத்தேன்..:) அவன் பல விதமான கலரில் வச்சிருக்கான்.. மாக்கல் பாத்திரங்களை நினைவுப்படுத்திட்டீங்களே..ம்.. எங்க பாட்டி வீட்டிலும் பலவிதமான சொப்பு சாமான் இருந்தது..

  நீங்க செய்துகொடுத்த விளையாட்டு ட்ரேட் க்ரேட்ங்க..

  ReplyDelete
 5. //எங்கள் வீட்டுக்கருகில் ஒரு மரத்திலிருந்து சிவப்பு நிறத்தில் மாத்திரைகள் போல காய்கள் விழும்.//

  அதனை நாங்கள் ‘மஞ்சாடி’ விதை என்போம். ’குன்னிமுத்து’ என்றொரு விதை உண்டு. பாதி கருப்பும் பாதி சிவப்புமாய் சிறிய capsule போல பார்க்க அழகாய் இருக்கும். அடர்ந்த வேலிகளில் கொடிகளில் இருந்து பறிக்கும் போது பாம்பு இருக்கும் என்ற எச்சரிக்கையையும் மீறி குன்னிமுத்து பறித்து சேர்ப்போம்!

  (எங்களையும் கொசுவத்தி சுத்த வச்சுட்டீங்களே!)

  ReplyDelete
 6. ஆஹா... உங்கள் மனபூதம் நன்றாயிருக்கட்டும். ட்ரேட் போன்ற விளையாட்டுகள் விளையாடிய என் இளமைப் பருவத்தை மீண்டும் நினைக்க வைத்து மகிழ வைத்து விட்டதே... அந்தக் கல்சட்டிகள் எல்லாம் படங்கள்லயே மனசைப் பறிக்குது. எங்கம்மா கொலுவுல வெச்சிருந்தாங்க இதையெல்லாம். இனி வர்ற தலைமுறைக்கு கிடைக்காத விஷயங்கள் இவையெல்லாம்... ஹும்..!

  ReplyDelete
 7. ஆஹா அழக்காக இருக்கே குட்டி குட்டி சொப்பு சாமான்.

  பல்லாங்குழிய பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு

  ReplyDelete
 8. //பழைய லாங்சைஸ் நோட்டு அட்டையை எடுத்து வெள்ளைத் தாளை ஒட்டி கட்டங்களை//
  நாங்கள் தெரு பொறுக்கிகள்...
  தெருவில் கிடக்கும் சிகரெட் அட்டைகளும், தீப்பெட்டி அட்டைகளும் தான் எங்களுக்கு காசும் ஊரும்.
  செஸ் காய்கள் கூட அட்டையில் வரைந்து தான் வைத்திருந்தோம்.

  ReplyDelete
 9. மாக்கல்.... எனக்கும் கொசுவத்தி சுத்து. எங்கம்மா எனக்கு ஒவ்வொரு லீவுக்கு களிமண்ணால புதுசா செப்பு சாமான் செஞ்சு கொடுப்பாங்க. அவ்வாகூட பல்லாகுழி விளையாடுவேன். இப்பவும் வீட்டில் பல்லாங்குழி இருக்கு. அம்ருதம்மாவுக்கு விளையாட ரொம்ப பிடிக்கும்.

  ReplyDelete
 10. சூப்பரா இருக்கு மாக்கல் பாத்திரங்கள்.நான் சின்ன வயதில் இதை மாதிரி சின்ன சின்ன பாத்திரங்கள் பித்தளையில் செய்தது என் பாட்டியுடையது வைத்து விளையாடி கொண்டு இருந்த போது ஊரிலிருந்து வந்திருந்த என்னுடைய அத்தை அத்த்னையும் அவரின் பெண்ணிற்கு வேண்டும் என்று எடுத்து கொண்டு போனார். இப்பவும் எனக்கு மறக்கவே முடியாது. சரி அவரின் அம்மாவோடது அவருக்கு தானே என்று என் அம்மா என்னை சமாதானம் செய்தார். பாதியாவது எனக்கு கொடுக்கலை என்று இப்பவும் என் அத்தை மீது எனக்கு கோபம் உண்டு. என் தம்பி மகனுடன் பல்லாங்குழி விளையாடுகிறேன். கை விரல்களுக்கு அருமையான ஒரு எக்ஸர்சைஸ்.

  ReplyDelete
 11. அழகான மலரும் நினைவுகள்.

  அந்த மாக்கல் பொம்மைகளைப் பார்த்து அகம் மகிழ்ந்து போனேன்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. மாக்கல் சாமான் இப்ப தான் பார்க்கிறேன்.கடைசியாக இருக்கிற நன்ஸ்டிக் செட் எனக்கே எனக்கு,மிக அழகு.நல்ல பகிர்வு.

  ReplyDelete
 13. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. வாங்க எல்.கே,

  கல்சட்டி சமையலை சாப்பிடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. சொல்லி தான் கேட்டிருக்கிறேன். பல்லாங்குழியில் சீதையாட்டம், கட்டும் பாண்டி, காசி தட்டுதல், இப்படிப் பல உண்டு. கொஞ்சம் தான் நினைவிருக்கிறது...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 15. வாங்க கோவை நேரம்,

  நாங்களும் புளியங்கொட்டைகள் வைத்தும் விளையாடியிருக்கிறோம்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 16. வாங்க முத்துலெட்சுமி,

  நீங்களும் தம்பி மகனுக்கு வாங்கிக் கொடுத்தீங்களா....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 17. வாங்க ஈஸ்வரன் சார்,

  குன்னிமுத்து, மஞ்சாடி விதை பெயர் நல்லா இருக்கே. தெரிந்து கொண்டேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 18. ஆமா நானும் இந்த பல்லாங்குழி விளயாட்டு பத்தி என் பழய பதிவில் போட்டிருக்கேன் அந்த சிவப்பு மணி மஞ்சாடிதான். மாக்கல் சட்டி ஜோக் ஒன்னும் பழய பதிவில் சொல்லி இருக்கேன்.

  ReplyDelete
 19. வாங்க கணேஷ் சார்,

  இனி வர்ற தலைமுறை காண முடியாத விஷயங்கள் தான் இவை.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 20. வாங்க ஜலீலாக்கா,

  அழகா இருக்கா....அதான் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொண்டேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 21. வாங்க சீனு அண்ணா,

  நீங்கள் சிகரெட் அட்டைகளும் தீப்பெட்டிகளும் வைத்தா....நான் சிகரெட் டப்பாவை வைத்து ஹேண்ட்பேக் செய்திருக்கிறேன். தீப்பெட்டியையும், சோப்பு டப்பாவையும் வைத்து சோபா செய்திருக்கிறேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க புதுகைத்தென்றல்,

  பல்லாங்குழி இருக்கா.... அம்ருதாவுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. என் சிறுவயதில் பக்கத்து வீட்டில் இருக்கும் அக்காக்களுடன் விளையாடும் அந்த அக்காக்கள் களிமண்ணால் அழகாக சொப்பு சாமான்கள் செய்வார்கள்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 23. வாங்க அமுதா கிருஷ்ணா,

  இப்பவுமா அத்தை மேல கோபம்...விட்டு விடுங்கள்.

  நல்ல ஒரு பயிற்சி தான் கைகளுக்கும், மூளைக்கும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 25. வாங்க ஆசியா உமர்,

  நான்ஸ்டிக் வேண்டுமா...அப்படியே எடுத்துக்கோங்க...:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 26. வாங்க லஷ்மிம்மா,

  உங்க பதிவை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 27. என்னுடைய பழைய நினைவுகளை
  கிள்றிப்போகுது தங்கள் பதிவு
  தங்கள் பாணியில் சொன்னால்
  இப்போது எனக்குள்ளும் ஒரு கொசுவத்திச் சுருள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. மலரும் நினைவுகளின் விளையாட்டு சொப்பு சாமான்கள் படம் அருமை.

  என் அம்மாவீட்டில் மாக்கல் செட், பித்தளை, இரும்பு அம்பாசமுத்திரத்தில் செய்த மரசாமான் பாத்திர செட்கள் இருந்தன நாங்கள் விளையாடி, எங்கள் குழந்தைகள் விளையாடினர். இப்போது அது எந்த தம்பி, தங்கைகளிடம் இருக்கு என்று தெரியவில்லை எனக்கும் பகிர ஆசை.
  என் பேரனுக்கு சொப்பு சாமான்களை ஆசைக்காட்டிதான் என் மகன் இந்தியா அனுப்பினான். வந்தவுடன் அவற்றை கேட்டு ஆசையாய் விளையாடினான். எல்லோருக்கும் வித விதமாய் சமைத்துக் கொடுத்தான். இப்போது அவன் அம்மா பாட்டி வீட்டுக்கு போய் இருக்கிறான்.

  மஞ்சாடி. குன்றிமணி என் அம்மா வீட்டில் நிறைய இருக்கும்.
  மலரும் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 29. வாங்க ரமணி சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 30. வாங்க கோமதிம்மா,

  தங்களின் அனுபவங்களை படிக்க சந்தோஷமாக இருந்தது.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 31. பழங்கால விளையாட்டுகள் பற்றிய பகிர்வுக்கு நன்றி ஆதி. எனக்குள்ளும் கொசுவத்தி இப்போ... என் மகளுக்கு என் அம்மா மரத்தாலான சொப்பு சாமான்கள் வாங்கித் தந்தாங்க. கலர் கலரா ரொம்ப அழகா இருக்கும். ஆனாலும் தலைமுறை தலைமுறையா தொடரும் மாக்கல் சொப்பு இன்னும் சிறப்புதான்.

  ReplyDelete
 32. அட....

  கொசுவர்த்தி சுருள் சுருண்டாலும் சுருண்டது படிக்கிற எல்லாருக்குமே இந்த கொசுவர்த்தி இனிய மலரும் நினைவுகளையும் சேர்த்து தூக்கி விட்டுருத்தேப்பா...

  சின்ன வயசுல இருந்தே உங்களுக்குள்ள க்ரியேட்டிவிட்டி இருந்திருக்கு. அதனால தான் தம்பிக்கு பக்கத்து வீட்டு ஆண்ட்டி தராத ட்ரேட் நீங்களே அதை அழகா செய்து அதை ரொம்ப நாள் வெச்சிருந்து விளையாடியதா சொன்னீங்களே... அசத்தல் தான்....

  என்னென்னவோ விளையாட்டுகள் பழைய காலத்துல இருந்திருக்கு... அதுவே திரும்ப இனி வந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டது தங்களின் பதிவு....

  பதிவும் ரசிக்க வைக்கும்படி எழுதுவதில் அசத்தல் தான்....

  மாக்கல் சாமான்கள் போட்டோவில் தான் பார்க்க முடிகறது.. அப்படி ஒன்னு இனி யாராவது பூனைக்கு மணி கட்டினால் தான் உண்டு...

  திரும்ப அந்த பழைய காலம் வந்தால் எவ்ளோ நல்லாருக்கும்???

  அருமையான மனம் கவர் பதிவுப்பா.. அன்பு வாழ்த்துகள்....

  ReplyDelete
 33. நான்கு தலைமுறையாக இருப்பது மகிழ்ச்சி.  ReplyDelete
 34. வாங்க கீதமஞ்சரி,

  மரத்தாலான சொப்பு சாமான்களை நானும் விளையாடியிருக்கிறேன்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 35. வாங்க மஞ்சுபாஷிணி,

  பழைய கால விளையாட்டுகள் திரும்ப வந்தால் நன்றாகத் தானிருக்கும்.....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 36. வாங்க மாதேவி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…