Thursday, September 27, 2012

என் இனிய தோழி!பத்து வயதிலிருந்தே என் இனிய தோழி அவள். பள்ளிப்பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும், பின்பு வேலைக்கு சென்று கொண்டிருந்த காலத்திலும் கூட என்னோடு இருந்தாள். கல்யாணம் வரை இணைபிரியாது திரிந்தோம். கல்யாணம் முடிந்து தில்லி சென்ற பிறகு வேறு வழியின்றி பிரிந்து விட்டோம். அதன் பிறகு தோழியுடனான தொடர்பு முற்றிலும் விட்டுப் போயிற்று. இவளைப் போல அங்கும் சில தோழிகள் இருந்தாலும், அவர்கள் பேசும் மொழி ஹிந்தியானதால் அவ்வளவு ப்ரியம் இல்லை. பத்து வருடங்களுக்கு மேல் பிரிந்திருந்த தோழிகள்  இப்போது மீண்டும் இணைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறோம்.

யார் அந்த தோழி? யூகிக்க முடிந்ததா? மனிதர்களோடு தான் நட்பாக இருக்க முடியும் என்ற அவசியமில்லையே...... நான் சொல்வது என் வானொலித் தோழியைத் தான்.காலையில் எங்களை எழுப்பும் போதே அப்பா வானொலியை ஆன் செய்து விடுவார். வந்தே மாதரம், சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், செய்திகள், திரைப்பாடல்கள் என்று எங்களுடனேயே குடும்பத்தில் ஒருத்தியாக பள்ளி செல்லும் வரை கூடவே இருப்பாள். மாலையிலும் துணையாயிருப்பாள். சனி, ஞாயிறுகளில் பகல் வேளைகளில்  பொழுது போக ஒரே வழி இவள் தான்!  பாடல்களை கேட்டுக் கொண்டே படிப்பேன். இதற்காக எவ்வளவோ முறை திட்டும் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் காதினுள் போக முடியாதபடி பாட்டு வழிமறிக்கும்! 

உள்ளூர் பேருந்தில் இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்தது. இதற்காகவே வரும் அரசு பேருந்துகளையெல்லாம் விட்டு விட்டு தனியார் பேருந்துகளில், அதுவும்பாட்டு பாடும் பேருந்தா? என்று பார்த்து ஏறி பயணித்ததும் உண்டு. இப்போதும் அப்படித்தான். சென்ற முறை திருச்சி வந்த போது கூட உள்ளூர் பேருந்தில் பாடல்களை கேட்டுக் கொண்டே வந்து, இறங்க வேண்டிய இடத்தில் இறங்க மனமில்லாமல் இறங்கினேன். அது ஒரு சுகமான அனுபவம்.

திருமணமாகி தில்லி சென்ற புதிதில் கணவர் பதிவு செய்து வைத்திருந்த இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் தான் எனக்கு துணை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்திலிருந்து, பதினைந்து கேசட்டுகளாவது கேட்பேன். பிறகு ஒலித்தகடுகளில். அதுபாட்டுக்கு ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க நான் ஒருபக்கம் வேலை செய்து கொண்டிருப்பேன். அவர் அலுவலகம் சென்றபிறகு பாடல்களும், சத்தங்களும் தான் எனக்குத் துணை.இப்போது காலை எழுந்திருக்கும் போதே வானொலியை ஆன் செய்து விடுகிறேன். திருச்சி பண்பலையில் கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், வெள்ளிக்கிழமைகளில் மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் என பக்தி மணம் கமழ ஆரம்பிக்கும். வாசலை பெருக்கி கோலத்தைப்  போட்டு விட்டு பாலை அடுப்பில் வைத்து ஆத்திச்சூடியில் கேட்கும் புராணங்கள், இதிகாசங்கள் சம்பந்தப்பட்ட கேள்விக்கு ஓடி வந்து பதிலைச் சொல்லி விட்டு, பின்பு பக்திப் பாடல்கள், திரைப்பாடல்கள் என தொடர்ந்து அவளின் ஸ்னேகம். இரவில்வெள்ளிரதம் என்ற பெயரில் இடைக்கால திரைப்படப் பாடல்களை கேட்டு விட்டு அன்றைய நாளை நிறைவு செய்கிறேன்.

தோழி புதுகைத்தென்றல் அவர்கள் அவர்களது தோழியை சந்தித்தது குறித்து இந்த பதிவில் எழுதியிருந்தார்கள். அதை படித்தவுடன் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த வரிகளை உடனே உங்களோடு பகிர்ந்து கொள்ள தூண்டியது. இதற்காக அவர்களுக்கு என் நன்றி.

உங்களுக்கு வானொலியுடன் இருக்கும் தோழமையை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். கேட்காதவர்கள் இனிமேல் கேளுங்கள். ஆனந்தமாக, உற்சாகமாக ஒவ்வொரு நாளையும் இனிமையாக்குங்கள்.

இப்போது வானொலிப் பெட்டி (Radio) கடைகளில் கிடைப்பதே அரிதாகி விட்டதாம். நான் கூட தேடி ஒரு வானொலிப் பெட்டியை வாங்க வேண்டும். தற்போது அலைபேசியில் தான்  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Monday, September 24, 2012

கதம்பம் 10

இம்முறை  பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி பார்ப்போம்...

வாசித்தவை :

 [பட உதவி: கூகிள்]

பதிவுலகுக்கு வராமல்  விடுமுறையில்  இருந்த காலத்தில் சில புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்... வாய்ப்பு கிடைக்கும் போது நீங்களும் வாசித்து பாருங்க...

கடமையும் கடைவிழியும் – விக்ரமன்
காதல் தெய்வம் – கு.ம.கிருஷ்ணன்
கல்யாணமே வைபோகமே – நா.ராமச்சந்திரன்
அம்மா காத்திருப்பாயா? – சுமங்கலி
அற்புதமான கதைகள் – அநுத்தமா
திசை மாறும் வாழ்க்கை – லதா முகுந்தன்
புண் உமிழ் குருதி – அசோகமித்திரன்
கமலா டியர் கமலா – அகஸ்தியன்
ரொட்டி ஒலி – அகஸ்தியன்


தமிழ் வாழ்க :

சென்னைக்கு மே மாத விடுமுறையில் சென்ற போது அங்காடிகளின் வாசலில் அவர்கள் வைத்திருந்த பெயர்ப்பலகை கவனத்தை ஈர்த்தது...

பயணப் பொருளகம் – TRAVELLERS SHOP
அறைகலனகம் – FURNITURE SHOP
அடுமனை – BAKERY
மின் பொருளகம் – ELECTRICAL SHOP
வன் பொருளகம் – HARDWARE SHOP

என்ன நல்லாயிருக்குல்ல...

டிப்ஸ் :


[படம்:  சிறுமுயற்சி வலைப்பூவிலிருந்து]

காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது பாலிதீன் கவரில் போட்டு வைப்போம் இல்லையா... நீண்ட நேர மின் துண்டிப்பில் கவரில் நீர் சேர்ந்து காய்கறிகளை வீணாக்கி விடும். அதற்குப் பதிலாக காய்கறிகளை துணிப்பைகளில் (பருத்தி) போட்டு வைத்தால் மின்சாரம் நெடுநேரம் இல்லையென்றாலும், ஈரம் அதிகம் இருந்தாலும் பை இழுத்து விடும். காய்கறிகள் ஒரு வாரம், பத்து நாள் வரை கூட நன்றாக இருக்கிறது. நான் அப்படித் தான் செய்கிறேன்.

இந்த துணிப்பைகளை வைத்து இன்னோரு உபயோகம் ஒன்றும் இருக்கிறது. இதை பல வருடங்களாக நான் செய்து கொண்டு வருவது. பட்டுபுடவைகளை இரும்பு பீரோவில் வைப்பதால் ஜரிகை கறுத்து விடுகிறது என்று நான் கேள்விப்பட்டதுண்டு. அதனால் இந்த மாதிரி துணிப்பைகளில் போட்டு வைப்பதால் ஜரிகை கறுக்கவில்லை. இதையும் செய்து பாருங்களேன்...

மஞ்சப்பைகளையும், துணிப்பைகளையும் இப்படி உபயோகிக்கலாமே...

ஆடிப்பூர திருவிழா:

 

[பட உதவி: கூகிள்]

ஸ்ரீரங்கத்தில் ஆடிப்பூரத்திற்காக ஆண்டாள் கண்ணாடி அறை சேவை  கோலாகலமாக இருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்திருந்து தினம் ஒரு அலங்காரம் செய்திருந்தார்கள். பார்க்கவே கொள்ளை அழகு... தினமும் அரங்கனின் லீலை தான்...

கஜேந்திர மோட்சம், சேது பந்தனம், காளிங்க நர்த்தனம், உலகளந்த பெருமாள், துலாபாரம், சிசுபாலன் ருக்மயி உடன் கிருஷ்ணரும், ருக்மிணியும், கனாக்கண்ட ஆண்டாள் திருமணக்கோலம் அரங்கனை கைப்பிடித்தல், துவாரக்நாத்ஜீ இப்படி பத்துநாட்களும் கண்கொள்ளாக் காட்சி தான். அந்த இடமே நம்மை அந்த காலத்திற்கு கொண்டு சென்றது.. அந்தளவுக்கு தத்ரூபம். வாய்ப்பு அமையும் போது இந்த சமயத்தில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கன், ஆண்டாளின் ஆசியைப் பெறுங்கள்.

சோதனை எலிகளின் மூலம் சோதனை:


[பட உதவி: கூகிள்]

சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு ரெசிபியை செய்து பார்த்தேன். நன்றாக வந்திருந்தது. காரம் தான் கொஞ்சம் ஜாஸ்தின்னு கணவரின் கருத்துரை. அடுத்த முறை கொஞ்சம் குறைத்தால் சரியாகிவிடும். அது என்ன ரெசிபி என்பவர்களுக்கு, வாங்கி பாத் அதன் பெயர். கத்திரிக்காய் சாதம். கத்திரிக்காயே எங்கள் வீட்டில் யாருக்கும் பிடிக்காது. வட இந்திய சப்ஜியான பேங்கன் கி பர்த்தா என் கணவருக்கு மட்டும் பிடிக்கும். முடிந்த அளவு டப்பாவில் போட்டு கொடுத்து விடுவேன்.... இந்த முறையில் சாதம் செய்ததில் எல்லோருக்குமே காய் உள்ளே சென்றது.. ரெசிபி வேண்டுமென்பவர்களுக்கு அடுத்த பதிவில் தருகிறேன். ஆஹா! இன்னோரு பதிவு தேத்திட்டேன்...


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


Monday, September 17, 2012

எச்சரிக்கை! எங்க இடத்தை அழிச்சா...

"என்னங்க, தலைப்பிலேயே மிரட்டுனா பயமா இருக்காதா?"-ன்னு  பயந்து ஓடாதீங்க, மேலே படிங்க.  

ஊர்ல இருக்கற காடு, மரம், செடி, கொடின்னு எல்லாத்தையும் அழித்துக்கொண்டு  இருக்கோம்.  ஆற்றுப் படுகைகள், தோப்புகள், விளை நிலங்கள்  என ஒன்றையும் விடாமல் அழித்து வீடுகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாற்றிக் கொண்டு வந்தால் அங்கிருக்கும் உயிரினங்கள் எங்கு செல்லும்? அப்படி நாம் கட்டிய  வீடுகளே அவர்களுக்கும் வீடுகள்.ஸ்ரீரங்கத்தை பொறுத்தவரை அடுக்குமாடி குடியிருப்புகள் இல்லாத இடம் எங்குள்ளது என்று பைனாகுலர் மூலம் தேடவேண்டியிருக்கிறது.  அந்தளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆதிக்கம். இந்த ஊரில், விஷ்ணுவின் திருவடிகளுக்கு அருகிலே தங்களுக்கென்று ஒரு வீடு இருக்கட்டும் என்று  எங்கிருந்தெல்லாமோ மக்கள்  வாங்கிப் போட்டு விடுகிறார்கள். விலையும் தில்லிக்கு இணையாக உள்ளது. (வீடு பார்த்த அனுபவங்கள், அதில் தெரிந்து கொண்ட விஷயங்கள் என ஒரு பதிவே போடலாம் போலிருக்கு!) புதிதாக கட்டுபவர்கள் ஒருபுறம் இருக்க, பழைய காலத்து அகலம் குறைவாக, ஒரு தெருவிலிருந்து பின் தெரு வரை நீண்ட  வீடு உள்ளவர்களும் அதை இடித்து விட்டு அந்த நீளத்தை பாதியாக்கி முன்புறம், பின்புறம் என 5,6 வீடு கட்டி விடுகிறார்கள். இந்த மாதிரி வீடுகளில், காசு கொடுத்தாலும் இயற்கைக் காற்றுக்கு வழியேயில்லை. நாள் முழுதும் மின்விசிறி சுற்றிக் கொண்டேயும்   குழல் விளக்குகள் எரிந்து கொண்டேயும்  இருக்க வேண்டும். அதற்கு முதலில் தடையில்லா மின்சாரம் வேண்டும். அது கிடைப்பதோ குதிரைக் கொம்பு - ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இருப்பதில்லை. 

எதைப் பற்றியோ எழுத ஆரம்பித்து எங்கேயோ போய் விட்டதோ பகிர்வு?  தோ வந்துட்டேன்.   தோப்புகளின் அழிவை பற்றி சொன்னேன் அல்லவா? சென்ற முறை வந்த போது என் மாமியார் தினமும் வீட்டிற்கு பின்புறம் காலையும், மாலையும் ஏறக்குறைய 13 குரங்குகள் வரிசையாக வந்து அட்டகாசம் செய்வதாக புலம்பிக் கொண்டிருந்தார். இப்போது அது 25-க்கு மேல் ஆகி விட்டது. அவைகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் வருகிறது.  பட்டியல் போட்டால் ஹனுமார் வால் போல நீளளளளளளளம்...பால்கனியில் இருக்கும் தண்ணீர்க்  குழாயை திறந்துவிட்டுச் செல்வது, குட்டிகள் ஜன்னலின் வழியே வீட்டுக்குள் நுழைந்து கிடைக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வது, கொடிகளில் காயும் துணிமணிகளை கிழித்து விட்டு செல்வது ஆகியவை தினம் தினம் நடக்கும் விஷயங்கள். பின்புறத்  தெருவில் உள்ள காய்கறிக்காரர் வண்டியில் இருந்து காய்களை எடுத்துக் கொண்டு வந்து சாப்பிடுகிறது. குட்டி ஒன்று [அவ்வளவு அழகு!] வீட்டிற்குள் வந்து fridge-ஐ திறந்து பழங்கள் எடுத்துக் கொண்டு போனது! 

முகம் பார்க்கும் சின்ன கண்ணாடி ஒன்றினை எடுத்துப் போய், மணிக்கணக்காய் தன் அழகை பார்த்துக் கொள்கிறது.  எப்படி இருந்தாலும் அதன் கண்களுக்கு அது அழகுதானே! தண்ணீர் குழாயினை திறந்து விடுவதால், தண்ணீர் வீணாகிறதே என்று பழைய துணியால் கட்டி வைத்தால், துணியைக் கடித்துக் கிழித்து விட்டு செல்கிறது. இனி அந்த குழாயையே எடுத்து விட வேண்டியது தான். மொட்டை மாடியிலும் எதையாவது காய வைப்பவர்கள்.  அவைகளிடமிருந்து காப்பாற்ற தாங்களும் சேர்ந்து காய வேண்டியிருக்கிறது, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.. 

அவர்களின் இடத்தை நாம் ஆக்கிரமித்துக்கொண்டு அவைகளை குறை சொல்வதில் அர்த்தமில்லை. இப்படியே போனால் தலைப்பில் சொன்னது போல அவைகள் நம்மைப் பார்த்து கேள்வி கேட்டாலும் ஆச்சரியமில்லை!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


Tuesday, September 11, 2012

ஆடிப் பார்க்கலாம் ஆடு...


 
[பட உதவி: கூகிள்]
 

சமீபத்தில் வீட்டிற்கு வந்த என்  தம்பி, என் மகளுக்கு  ஒரு BRAINVITA வாங்கித் தந்திருந்தான். அதை அவளுக்கு விளையாடச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது அவள் என்னிடம் கேட்டாள், அம்மா "உன்னிடமும் இது இருந்ததா? நீ சின்னதா இருக்கும்போது என்னென்ன விளையாட்டெல்லாம் விளையாடுவே?"

அப்போது எனக்குள்  கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சது.  என் சிறுவயது விளையாட்டுக்கள் அத்தனையும்  நினைவுக்கு  வந்து என்னை சூழ்ந்து கொண்டு " இதை உடனே பதிவா எழுதலைன்னா தலை வெடிச்சுடும்"-னு மனபூதம் பயமுறுத்தவே உடனே எழுதிட்டேன்.

 
[பட உதவி: கூகிள்]


மாம் அந்த காலத்தில் எங்களிடமும் ஒரு BRAINVITA இருந்தது. நாங்கள் மதுரையில் உள்ள  மாமா வீட்டிற்கு சென்றிருந்த போது மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தோம். புதுமண்டபத்தில் BRAINVITAவும், மீன் வடிவில் பல்லாங்குழியும் வாங்கித் தந்தார் அப்பா. பல்லாங்குழியில் போட்டு விளையாட பாட்டி நிறைய சோழிகளும் கொடுத்தனுப்பினார். இது போக எங்கள் வீட்டுக்கருகில் ஒரு மரத்திலிருந்து சிவப்பு நிறத்தில் மாத்திரைகள்  போல காய்கள் விழும். அதை பத்திரப்படுத்தி எடுத்து வைத்துக் கொள்வோம்.  பல்லாங்குழியில் பல விளையாட்டுகள் இருக்கு.  அதையெல்லாம் திரும்ப நினைவு படுத்தியோ இல்லைன்னா யார்கிட்டயாவது கேட்டோ விளையாடணும்கிற ஆசை எனக்குள் இப்போ எழுந்திருக்கு..

அடுத்து பிசினஸ் ட்ரேட் கதையைப் பார்ப்போம். தம்பி பக்கத்து வீட்டில் இருந்த சிறுவனுடன் சேர்ந்து விளையாடுவான். அவங்க வீட்டில் இருந்த ட்ரேடில் இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள். சிலசமயம் எங்கள் வீட்டுக்கும் அதை  எடுத்து வரும் போது நானும் சேர்ந்து கொள்வேன். இப்படியே ஓடுமா? கொஞ்ச நாளிலேயே  அந்த சிறுவனின்  அம்மா எங்கள்  வீட்டுக்கு அதை எடுத்து வந்து விளையாட  அனுமதிக்கவில்லை. தம்பியையும் அவங்க வீட்டில்  விளையாட விடவில்லை. இதனால் அவன்  புதுசா ஒரு ட்ரேட் வாங்கித் தரச் சொல்லி அடம்பிடிக்க, அப்பாவோ "விலை ஜாஸ்தி" என்று சொல்லி விட்டார்.

எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் நானும் விளையாடி பழகியதால் பழைய லாங்சைஸ் நோட்டு அட்டையை எடுத்து வெள்ளைத் தாளை ஒட்டி கட்டங்களை வரைந்து ஸ்கெட்ச்சால் எழுதி பணத்திற்கு காகிதங்களை ஒன்று போல வெட்டி, ஒரு ட்ரேடை பக்காவாக தயார் செய்து தம்பிக்கு கொடுத்தேன். நாங்கள் இருவரும் நெடுநாட்களுக்கு வைத்திருந்து விளையாடியிருக்கிறோம். இந்த கதையை மகளுக்குச் சொன்னேன்.

100
வருட பழமையான விளையாட்டுப் பொருட்கள்:  
ரோஷ்ணிக்கு சமையல் செய்து விளையாட அவள் பாட்டி "மாக்கல் " என்று சொல்லப்படுகிற கல்லாலான பாத்திரங்கள் தந்தார்கள். இதில் குட்டி அடுப்பு, பாத்திரங்கள், திருகை, ஆட்டுக்கல், துளசிமாடம் என்று அவ்வளவு அழகான பொருட்கள் இருந்தன. இவையாவும் நான்கு தலைமுறை பழசு.  பழசா இருந்தாலும் இன்னும் நல்லாவே இருக்கு.  பார்க்கவே அழகா, விளையாட ஆசையா இருக்கும்.  நாலு தலைமுறையா விளையாடிய இப்பொருட்களை வைத்து இப்போ ரோஷ்ணி விளையாடறா.  இத்தனை வருடம் பத்திரமா வைத்திருந்து என் பெண்ணுக்குக் கொடுத்த என் மாமியாருக்கு ஒரு பூங்கொத்து!  "சரி, அதையெல்லாம் எங்க கண்ல காட்டக்கூடாதா?"ன்னா கேட்கறீங்க?  சரி உங்களுக்காக ஒரு புகைப்படம் இணைச்சிருக்கேன்.  இப்பல்லாம் இந்த கல் சட்டிகள் வருவதே இல்லை.  கல் சட்டில சமையல் செஞ்சு சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்குமாம்.  நான் சாப்பிட்டதில்ல.  இப்போதெல்லாம்  நான்-ஸ்டிக், எவர்சில்வர், மைக்ரோ ஓவன் பாத்திரங்கள்  தானே மார்க்கெட்டில் கோலோச்சுகின்றன.  அதனால விளையாட்டு பொருட்கள் கூட நவீனமாத் தான் இருக்குநான் வாங்கிக் கொடுத்த நவீன சமையல் பாத்திரங்களையும் பாருங்களேன். குட்டியாக இருந்தாலும் நேர்த்தியாக உள்ளது.  முதலில் நான் விளையாடி விட்டுத்  தான் ரோஷ்ணிக்கே கொடுத்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  ஆனாலும் மாக்கல் கல் சட்டிக்கு முன்னாடி இவை நிற்க முடியாது.  நீங்க என்ன சொல்றீங்க?  மீண்டும் வேறு பகிர்வில் சந்திப்போம்...ஆதி வெங்கட்