Monday, July 23, 2012

யாரடி என்னை உதைத்தது?சிறு வயதில் சிவகங்கையில் என் அத்தை வீட்டில் கோடை விடுமுறைக்கு சென்றிருந்த போது, சின்ன பசங்க எல்லோரும் சேர்ந்து ஓடி பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி, செஸ் இப்படி நிறைய இருக்குமே… அப்படி ஒன்றான ஒளிந்து விளையாடும் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருந்தோம். இந்த இடத்தில் என் அத்தை வீட்டை பற்றி ஒரு அறிமுகம்.

அது அந்த கால வீடு. திண்ணை, ரேழி, நடைபாதையின் ஒரு புறம் ஒரு சிறிய அறை, பின்பு கூடம், கூடத்தின் ஒரு புறத்தில் பூஜையறை, ஸ்டோர் ரூம், அடுத்து சமையலறை நடுவில் பெரிய முற்றம், கிணற்றடி, விறகுகள் அடுக்கி வைப்பதற்காக இரு அறைகள். அடுத்து பெரிய தோட்டம். அதன் இறுதியில் கொல்லைப்புறக் கதவு. அதைத் திறந்தால் அடுத்த தெருவின் முன் பக்கம். இப்படி நெடுக போய்க் கொண்டேயிருக்கும் பெரிய வீடு.

எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்த போது ஒருவர் சென்று ஒளிந்து கொள்ள நான் கண்டுபிடிக்க அந்த பெரிய வீட்டில் தேடிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கஷ்டம் தான். ஏனென்றால் அறைகள் எல்லாம் கும்மிருட்டாக இருக்கும். பெரிய பெரிய பீப்பாய்கள் இருக்கும். அதில் இறங்கி ஒளிந்து கூட இருக்கலாம். அப்படி நடைபாதையின் ஒரு புறத்தில் ஒரு அறை சொன்னேன் அல்லவா! அங்கு சென்று மெதுவாக எட்டிப் பார்த்தால்…

என் வயது இருக்கும் உறவுப் பெண்கள் இருவர், எதையோ சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னவென்று நான் கேட்டவுடன், சீக்கிரம் வா! கதவை மூடு என்றார்கள். நானும் அப்படியே செய்து விட்டு, என்னவென்று பார்த்தால் அது ஒரு பளிங்கினால் ஆன சிறிய தாஜ்மஹால். அதனுடன் இணைத்துள்ள இரண்டு சிறிய வயர்கள்.

அப்போது தான் புதிதாக திருமணமாயிருந்த என் அத்தை பெண் அவளுடைய கணவனுடன் டெல்லி, ஆக்ரா சென்று வந்திருந்தாள். அவர்கள் வாங்கிக் கொண்டு வந்தது தான் இந்த தாஜ்மஹால். அவள் கணவன் ஆசையாக வாங்கிக் கொடுத்ததாம். எங்களை கையால் தொடக் கூட விடவில்லை. அது தான் நாங்கள் திருட்டுத் தனமாக இப்படி பார்க்க வேண்டியிருந்தது.

இந்த தாஜ்மஹாலை மின் இணைப்பு கொடுத்தால் உள்ளே உள்ள விளக்கெரிந்து தாஜ்மஹால் ஜொலிக்குமா எனச் சந்தேகம்! செய்து தான் பார்த்துடலாமே என அதனுடன் இணைந்திருந்த வயரை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே நான் தோழிகளின் பரிந்துரையின் பேரில் பாயிண்டில் சொருகி ஸ்விட்சை போட்டேன். அவ்வளவு தான்…

யாரோ என்னை ஒங்கி பின்னங்காலில் உதைத்தது போன்ற உணர்வு. அதிர்ந்து போனாலும், தாஜ்மஹாலை பத்திரமாக வைத்து விட்டு திரும்பி, ”ஏண்டி என்னை உதைத்தீங்க?” என்று கேட்டால், அவர்கள் ”உதைக்கவில்லையெனச்” சொன்னார்கள். ஓஹோ! இது தான் ஷாக் அடிப்பது என்பதா! அப்போது தான் அதை முதல் முறையாக உணர்ந்திருந்தேன். அப்பா! என்னா ஒரு உதை?

நல்லவேளையாக ஷாக் அடித்தவுடன் தாஜ்மஹாலை மரியாதையாக மேஜையின் மீது வைத்து விட்டேன். அவள் கணவன் ஆசையாக வாங்கி கொடுத்த பரிசான அதை கீழே போட்டு உடைத்திருந்தால், அவள் எனக்கு பரிசு கொடுத்திருப்பாள் வீட்டை சுற்றி துரத்தித் துரத்தி…

எதுவுமே முதல் முறை என்றால் மறக்காது இல்லையா! அப்படித் தான் இதுவும்.  உதை வாங்கினாலும் இன்னும் இது போல எதையாவது செய்து பார்க்கத்தான் தோன்றுகிறது!  ஆனால் கரண்ட் ஷாக் கொடுக்குதோ இல்லையோ வேற ஒருத்தர் எதாவது சொல்வாரேன்னு கைகளைக் கட்டிப்  போட்டு வைத்திருக்கிறேன்!

மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்.


33 comments:

 1. ஹஹா , எல்லோருமே இந்த மாதிரி பண்ணி இருப்போமே

  www.bhageerathi.in

  ReplyDelete
 2. உதை வாங்கினாலும் இன்னும் இது போல எதையாவது செய்து பார்க்கத்தான் தோன்றுகிறது!

  ஆனால் கரண்ட் ஷாக் கொடுக்குதோ இல்லையோ வேற ஒருத்தர் எதாவது சொல்வாரேன்னு கைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறேன் ..

  வாழ்த்துகள் கட்டிய கரங்களுக்கு !

  ReplyDelete
 3. நல்லவேளையாக ஷாக் அடித்தவுடன் தாஜ்மஹாலை மரியாதையாக மேஜையின் மீது வைத்து விட்டேன். //

  ஷாக் அடித்தாலும் பொறுப்புணர்ச்சியுடன் தாஜ்மஹாலை காப்பாற்றி விட்டீர்கள்.
  உங்கள் அத்தை பெண் ஆசையாக வைத்துக் கொண்டு இருப்பதை காப்பாற்றியதற்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. வெல்கம் பேக் மேடம்; எப்படி இருக்கீங்க? ரோஷினி எப்படி இருக்கிறார்? திருச்சியில் அனைவரும் நலமா?

  ஷாக் அடித்த அனுபவம் சுவையா சொல்லிருகீங்க. நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது எழுத பாருங்க

  ReplyDelete
 5. ஆஹா கரண்ட் ஷாக் வாங்கினீங்களா அதையும் சுவாரசியமா சொன்ன விதம் நல்லா இருக்கு

  ReplyDelete
 6. ம்ம்.. ரொம்ப நாளை பிறகு பதிவு...

  இதுப்போல் compass divider-ஐ electric socket-ல் வைத்தால் அது காந்தம் ஆகும் என்று கூறியதை நானும் என் அக்காவும் நம்பி அதை வைத்து switch on செய்ய எங்கள் colony transformer-ல் current shot-ஆகிய அனுபவம் உண்டு. அப்பொழுது current shot-க்கு காரணம் தெரியவில்லை. பின்னர், அதைப் பற்றி படிக்கும் பொழுது தன் புரிந்தது.

  ReplyDelete
 7. சின்ன வயது நினைவுகளும் குறும்பான அனுபவங்களும் என்றுமே இது போலத்தான்‍ -நினைத்தால் இனிக்கும் ஆதி!
  ஊருக்குச் சென்று திரும்பி வந்தாச்சா?

  ReplyDelete
 8. வேற ஒருத்தர் ரொம்பவே நல்லவர். ஒண்ணும் சொல்ல மாட்டார். ஆனா எனக்கு சிவியரா கரண்ட் ஸாக் வாங்கின அனுபவம் உண்டுங்கறதால... இந்த விளையாட்டு வேணாம் தோழி... அதுபக்கமே போயிடாதீ்ங்க...

  ReplyDelete
 9. நல்லதொரு அதிர்ச்சி தந்த அழகான பகிர்வு தான். பாராட்டுக்கள். ;) vgk

  ReplyDelete
 10. அவள் கணவன் ஆசையாக வாங்கி கொடுத்த பரிசான அதை கீழே போட்டு உடைத்திருந்தால், அவள் எனக்கு பரிசு கொடுத்திருப்பாள் வீட்டை சுற்றி துரத்தித் துரத்தி...

  ஷாக் அடித்ததை நகைச்சுவையாய் சொன்ன விதம் ரசிக்க வைத்தது.

  ReplyDelete
 11. முதல் ஷாக் அனுபவம்... ஷாக்கிங்!

  ReplyDelete
 12. ம் தில்லி வந்த புதிதில் வீட்டில் குளியலறை மற்றும் கிச்சன் குழாய்கள் ஷாக்கடிக்கும்.. சின்னதாத்தான்.. அப்பல்லாம் சின்னதா இருக்கும் போது டேப்ரெக்கார்டரில் சில பட்டனைப்போட்டா அடிச்ச ஷாக் நினைச்சுப்பேன்.. அப்பறம் கவர்ன்மெண்ட் லயே மின்கம்பிகள் மாற்றும்வரை அதே போல அடிச்சிட்டுத்தான் இருந்தது..வீட்டுக்கு வரவங்களுக்குத்தான் பெரியவிசயம் எங்களுக்கு இல்லைன்னு இருந்தோம்..
  ஆனா இப்படி உதை வாங்கலப்பா நாங்க...

  ReplyDelete
 13. நானும் கூட இந்த 'உதை' வாங்கியிருக்கிறேன். நான் ஆறாவது படிக்கும்போது வாங்கிய அந்த அடி மறக்கவே இல்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நினைவிழந்து பக்கத்திருந்தவர்களை பயமுறுத்தியிருக்கிறேன்!

  ReplyDelete
 14. ஆஹா! வந்தாச்சா?! வருக வருக ஆதி!

  நான் கூட இந்த உதை வாங்கி இருக்கேன்.நீங்களும் நம்ம கட்சிதானா?ஹா ஹா ஹா...

  ReplyDelete
 15. தொடாமயே ஷாக் அடிக்க வைக்குது நம்ம தமிழ் நாட்டு கரண்ட்.நமா கரண்ட் பில்லை தான் சொல்றேன்.

  ReplyDelete
 16. ரொம்ப நாளைக்கு முன்னால நடந்ததை அப்படியே கரண்டா சொன்னீங்க. உங்களுக்கு ஷாக்கடித்த கதையக் கேட்டு நாங்க ஷேக் ஆயிட்டோம்.

  ReplyDelete
 17. சுவையான அனுபவம்...

  ReplyDelete
 18. விடுமுறை ஊரில் நன்றாக இருந்ததா ஆதி .
  நானும் உதை வாங்கியிருக்கேன் :) அந்த காலத்து அயர்ன் பாக்ஸின் முன்கையை வைத்து/ four in one பிளேயர் ஆண்டென்னாவை ஈரக்கையால் தொட்டு ..அம்மாடியோ இப்பவும் ஊருக்கு போனா பென்சில் அல்லது மரக்கட்டை ரூலரில்தான் சுவிட்ச் போடுவேன் .

  ReplyDelete
 19. எல்லோருமே ஷாக் வாங்கியிருப்போம்... சின்ன‌தோ பெரிய‌தோ... அதை சுவார‌ஸ்ய‌மாக‌ சொல்வோமா தெரிய‌லை. ப‌ல‌ச‌ம‌ய‌ம் திருட‌னுக்கு தேள் கொட்டிய‌து போல் அட‌க்கி வாசித்திருப்போம். த‌ப்பு ந‌ம்மேல் என‌ டோஸ் கிடைக்கும் என்ப‌தால். சுவையான‌ அனுப‌வ‌த்தை வெகு சுவையாக‌ சொன்னீங்க‌. கைம‌ர‌த்துப் போன‌வ‌ங்க‌, ஷாக் வாங்கிய‌ இட‌த்தில் ப‌ல‌ நாள் ர‌த்த‌ ஓட்ட‌ம் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ங்க‌, உயிரையே விட்ட‌வ‌ங்க‌ எல்லாம் உண்டு ஆதி. ந‌ல்ல‌வேளையா நினைச்சு சிரிக்கும‌ள‌வு த‌ப்பிச்சீங்க‌. திருட்டுத் த‌ன‌மா தாஜ்ம‌காலை பார்க்க‌ ஆசைப்ப‌ட்டு ஷாக் வாங்கிய‌தாலோ க‌ட‌வுள் நிர‌ந்த‌ர‌மா தாஜ்ம‌கால் கிட்ட‌ கொண்டு போயிட்டார்! உங்க‌ ந‌ல்ல‌ நேர‌ம் அந்த‌ பொருள் உடையாம‌ல் காப்பாற்ற‌ப்ப‌ட்ட‌தும்! ந‌ல்ல‌வ‌ங்க‌ள‌ க‌ட‌வுள் சோதிப்பார்; ஆனா, கைவிட‌வே மாட்டார்! ஹ‌ ஹ‌ ஹா... அந்த‌ வேறொருத்த‌ர் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ர்ன்னு எங்க‌ எல்லோருக்குமே தெரியும். ஒண்ணும் ப‌ய‌ப்ப‌ட‌ற‌ மாதிரி ந‌டிக்க‌ வேணாம்... ஆமாம்!

  ReplyDelete
 20. யாரடி உதைத்தது :)) சுவாரஸ்யம்.

  ReplyDelete
 21. CURRENT விஷயமே மறந்து போற நாளில, எப்பவோ நடந்த CURRNET விஷயத்த மறக்காம எழுதினதற்கு நன்றி !

  ReplyDelete
 22. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
 23. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
 24. ஷாக் அடித்த விஷயத்தை நகைச்சுவையாய் அழகாய் எழுதியிருக்கிறீர்கள் ஆதி. தலைவரும் நீங்களும் வலையுலகை கலக்கி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. hi dear, Inviting you to join my event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

  ReplyDelete
 26. இந்த பதிவினை படித்து கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…