Monday, July 23, 2012

யாரடி என்னை உதைத்தது?சிறு வயதில் சிவகங்கையில் என் அத்தை வீட்டில் கோடை விடுமுறைக்கு சென்றிருந்த போது, சின்ன பசங்க எல்லோரும் சேர்ந்து ஓடி பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி, செஸ் இப்படி நிறைய இருக்குமே… அப்படி ஒன்றான ஒளிந்து விளையாடும் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருந்தோம். இந்த இடத்தில் என் அத்தை வீட்டை பற்றி ஒரு அறிமுகம்.

அது அந்த கால வீடு. திண்ணை, ரேழி, நடைபாதையின் ஒரு புறம் ஒரு சிறிய அறை, பின்பு கூடம், கூடத்தின் ஒரு புறத்தில் பூஜையறை, ஸ்டோர் ரூம், அடுத்து சமையலறை நடுவில் பெரிய முற்றம், கிணற்றடி, விறகுகள் அடுக்கி வைப்பதற்காக இரு அறைகள். அடுத்து பெரிய தோட்டம். அதன் இறுதியில் கொல்லைப்புறக் கதவு. அதைத் திறந்தால் அடுத்த தெருவின் முன் பக்கம். இப்படி நெடுக போய்க் கொண்டேயிருக்கும் பெரிய வீடு.

எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்த போது ஒருவர் சென்று ஒளிந்து கொள்ள நான் கண்டுபிடிக்க அந்த பெரிய வீட்டில் தேடிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கஷ்டம் தான். ஏனென்றால் அறைகள் எல்லாம் கும்மிருட்டாக இருக்கும். பெரிய பெரிய பீப்பாய்கள் இருக்கும். அதில் இறங்கி ஒளிந்து கூட இருக்கலாம். அப்படி நடைபாதையின் ஒரு புறத்தில் ஒரு அறை சொன்னேன் அல்லவா! அங்கு சென்று மெதுவாக எட்டிப் பார்த்தால்…

என் வயது இருக்கும் உறவுப் பெண்கள் இருவர், எதையோ சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னவென்று நான் கேட்டவுடன், சீக்கிரம் வா! கதவை மூடு என்றார்கள். நானும் அப்படியே செய்து விட்டு, என்னவென்று பார்த்தால் அது ஒரு பளிங்கினால் ஆன சிறிய தாஜ்மஹால். அதனுடன் இணைத்துள்ள இரண்டு சிறிய வயர்கள்.

அப்போது தான் புதிதாக திருமணமாயிருந்த என் அத்தை பெண் அவளுடைய கணவனுடன் டெல்லி, ஆக்ரா சென்று வந்திருந்தாள். அவர்கள் வாங்கிக் கொண்டு வந்தது தான் இந்த தாஜ்மஹால். அவள் கணவன் ஆசையாக வாங்கிக் கொடுத்ததாம். எங்களை கையால் தொடக் கூட விடவில்லை. அது தான் நாங்கள் திருட்டுத் தனமாக இப்படி பார்க்க வேண்டியிருந்தது.

இந்த தாஜ்மஹாலை மின் இணைப்பு கொடுத்தால் உள்ளே உள்ள விளக்கெரிந்து தாஜ்மஹால் ஜொலிக்குமா எனச் சந்தேகம்! செய்து தான் பார்த்துடலாமே என அதனுடன் இணைந்திருந்த வயரை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே நான் தோழிகளின் பரிந்துரையின் பேரில் பாயிண்டில் சொருகி ஸ்விட்சை போட்டேன். அவ்வளவு தான்…

யாரோ என்னை ஒங்கி பின்னங்காலில் உதைத்தது போன்ற உணர்வு. அதிர்ந்து போனாலும், தாஜ்மஹாலை பத்திரமாக வைத்து விட்டு திரும்பி, ”ஏண்டி என்னை உதைத்தீங்க?” என்று கேட்டால், அவர்கள் ”உதைக்கவில்லையெனச்” சொன்னார்கள். ஓஹோ! இது தான் ஷாக் அடிப்பது என்பதா! அப்போது தான் அதை முதல் முறையாக உணர்ந்திருந்தேன். அப்பா! என்னா ஒரு உதை?

நல்லவேளையாக ஷாக் அடித்தவுடன் தாஜ்மஹாலை மரியாதையாக மேஜையின் மீது வைத்து விட்டேன். அவள் கணவன் ஆசையாக வாங்கி கொடுத்த பரிசான அதை கீழே போட்டு உடைத்திருந்தால், அவள் எனக்கு பரிசு கொடுத்திருப்பாள் வீட்டை சுற்றி துரத்தித் துரத்தி…

எதுவுமே முதல் முறை என்றால் மறக்காது இல்லையா! அப்படித் தான் இதுவும்.  உதை வாங்கினாலும் இன்னும் இது போல எதையாவது செய்து பார்க்கத்தான் தோன்றுகிறது!  ஆனால் கரண்ட் ஷாக் கொடுக்குதோ இல்லையோ வேற ஒருத்தர் எதாவது சொல்வாரேன்னு கைகளைக் கட்டிப்  போட்டு வைத்திருக்கிறேன்!

மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்.