Wednesday, April 11, 2012

முஜே (B)பச்சாவ்…


தில்லி, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மின்சாரம் இல்லாமல் வெகு நேரம் இருப்பது என்பது மிகவும் சாதாரணமானது. ஒருநாளைக்கு குறைந்த பட்சம் எட்டு மணிநேரம் வரை கூட மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறோம். அதுவும் கடும் கோடையில் 46, 47 டிகிரி என்று வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில் மின்சார தட்டுப்பாட்டால் இரவு முழுதும் காற்றே இல்லாமல் புழுங்கித் தவித்திருக்கிறோம். தரையெல்லாம் தண்ணீரை ஊற்றி வைத்தாலும் நிமிடத்தில் காய்ந்து விடும். அதே போல் தான் கடும் குளிரிலும். இப்போ நமக்கு காற்று தேவைப்படாது. ஆனால் மாலை சீக்கிரமே இருட்டத் துவங்கி விடும். அதனால் வெளிச்சம் தேவைப்படுமல்லவா…

எட்டு, ஒன்பது வருடங்களுக்கு முன்பு கடுங்குளிரில் இரண்டு நாட்கள் மின்சாரமே இல்லாமல் இருந்த சமயம் அது. மாலை சீக்கிரமே இருட்டி விட்டது. முகத்தை கழுவி விட்டு வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று பாத்ரூமில் முகத்திற்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்தேன். தீடீரென்று ”முஜே (B)பச்சாவ்” ”முஜே (B)பச்சாவ்” (என்னை காப்பாத்துங்க) என்று ஈனக் குரலில் அலறல். ”கீழ் வீட்டிலிருக்கும் நண்பரின் வயதான அம்மாவின் குரல் போல் இருக்கிறதே!” எனத் தோன்றவும்... 

சட்டென்று முகத்தில் தண்ணீரை ஊற்றி கழுவிக் கொண்டு கீழே ஓடினால், முதல் தளத்திலிருந்த அம்மாவின் குரல் தான் அது. நெருப்பு அவர்களை நன்கு தழுவிக் கொண்டிருக்கிறது. அதற்குள் அந்த கட்டிடத்தில் உள்ளவர்களும் வந்திருந்தனர். நான் போவதற்குள் அம்மாவின் பக்கத்து வீட்டிலிருந்த தோழி ஓடி தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்திருந்தார். நானும், தோழியும் பாத்ரூம் அருகிலிருந்த அவரைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு முதலுதவிக்காக ஒரு மருத்துவரை தொலைபேசியில் அழைக்க அவரும் உடனே புறப்பட்டு வருவதாக சொன்னார்.

அம்மாவோ அலறுகிறார், துடிக்கிறார். அவரின் மகனுக்கும், மருமகளுக்கும் தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள் வர எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும். அதற்குள் மருத்துவர் வந்து முதலுதவியை ஆரம்பித்தார். இடுப்புக்கு கீழே முழுவதும் வெந்து விட்டது. முதலில் அவரது உடம்பில் ஒட்டியிருந்த துணிகளை பிய்த்து எடுப்பதற்காக தோழி ட்ரிப்ஸை உடம்பில் பீய்ச்சி அடிக்க மருத்துவர் துணிகளையும், தோலையும் பிய்த்து எடுக்க நான் அவைகளை ஒரு கவரில் வாங்கிக் கொண்டேன்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போக வேண்டும் என்று மருத்துவர் சொல்லிச் சென்றார். மகனும், மருமகளும் வருவதற்குள் கொஞ்சம் பாலில் நனைத்த பிரெட்டை அவருக்கு ஊட்டி விட்டோம். அவர்கள் வந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஒருநாள் வைத்திருந்தார்கள். பின்பு தில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பலநாட்கள் வைத்தியம் செய்து கொண்ட பின் வீடு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு ஏற்பட்டது 80 சதவிகித தீக்காயமாம்.

வீட்டுக்கு வந்த பின்னும் பல நாட்கள் இரவெல்லாம் அவரின் அழுகையும், அலறலும், கத்தலும் தொடர்ந்தன. கேட்கும் நமக்கே உலுக்கிப் போட்டு விடும்படியான குரல். சிலநாட்கள் கழித்து சென்னையில் உள்ள இன்னொரு மகனின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன் அவர் இறந்து விட்டதாகவும் தகவல் வந்தது.

இந்த தீக்காயம் எப்படி ஏற்பட்டது? மின்சாரம் இல்லாத அந்த நேரத்தில் ஒருபுறம் மெழுகுவர்த்தியை ஏற்றி அந்த வெளிச்சத்தில் கடவுளுக்கு விளக்கேற்றியிருக்கிறார். திரும்பும் போது புடவையில் தீ பிடித்திருக்கிறது. குளிரினால் முதல் சில நொடிகளுக்கு அவருக்கு தெரியவில்லை. அதே போல் மடிசார் புடவையின் மீது நல்ல கனமான ஸ்வெட்டர் போட்டிருந்திருந்தனால் இடுப்புக்கு கீழே தான் தீக்காயம். சிறிது நேரத்திற்கு முன்பு தான்  வேலையை முடித்து விட்டு மரக்கதவை திறந்து வைத்து விட்டு வெளியேயுள்ள இரும்பு கேட்டை மட்டும் வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு சென்றுள்ளார் வேலைக்காரி. இல்லையெனில் யாரும் உள்ளே போயிருக்கவே முடியாது. இங்கேயுள்ள கேட்களில்  உள்பக்கமாக நெருக்கமான கம்பி வலைகள் அடிக்கப்பட்டிருப்பதால் கையை உள்ளே விட்டெல்லாம் திறக்க வாய்ப்பே இல்லை.

எப்பவுமே இவர் அலுவலகம் சென்றவுடன் ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வருவேன். உரிமையுடன் “அவனுக்கு கைக்கு சப்பாத்தி பண்ணி குடுத்து விட்டாயா? இன்னிக்கு என்னடி சமையல் பண்ணின? என்றும் இதை இப்படித் தான் செய்யணும் என்று ஏதாவது சமையல் சந்தேகங்களை சொல்லிக் குடுப்பார். சமையல் செய்வதிலும், விதவிதமாக சாப்பிடுவதிலும் அவருக்கு ஒரு அலாதி ப்ரியம் என்றும் தெரிந்து கொண்டேன்.

அம்மாவுக்கு இப்படி ஆனதில் நான் பல நாட்கள் புலம்பி அழுதிருக்கிறேன். ஏன் அன்றே கூட எல்லா உதவிகளும் செய்து விட்டு வீட்டிற்கு வந்து ஒரே அழுகை தான்… நல்ல மனுஷி. எல்லோரிடமும் பாசமாகவும், உரிமையுடனும் நடந்து கொள்வார். சில நாட்கள் தான் பழக்கம் என்றாலும் மனதை விட்டு அவர் முகம் அகலவே இல்லை.

அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

45 comments:

 1. படிக்கிறப்பவே ரொம்ப கஷ்டமா இருக்கு ..அன்றைக்கு தைரியமாக கூட உதவி செய்திருக்கீங்க..
  கதவு பூட்டியிருந்தா என்பதை நினைச்சே பார்க்கமுடியல.. ம்..

  கரெண்ட் கட் மிகமோசமாக நாம் அனுபவிச்சிருக்கோம்.. அப்பல்லாம் ஊருல சொல்வாங்க தில்லி நாட்டின் தலைநகர் அங்கயா இப்படின்னு.. இப்ப கொஞ்சம் பரவாயில்லைன்னு சொன்னா.. உங்களுக்கு என்ன நாட்டின் தலைநகர்ங்கறாங்க..

  ReplyDelete
 2. ஆத்மா சாந்தி அடையட்டும்.

  ReplyDelete
 3. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  ReplyDelete
 4. மனதை கலங்க வைத்த சம்பவம். ஆனா சமயத்தில் நீங்க போய் உதவி செய்தது பெரிய விஷயம் இல்லியா? அன்றாட பாடே போராட்டமான்னா இருக்கு.

  ReplyDelete
 5. “அவனுக்கு கைக்கு சப்பாத்தி பண்ணி குடுத்து விட்டாயா? இன்னிக்கு என்னடி சமையல் பண்ணின? என்றும் இதை இப்படித் தான் செய்யணும் என்று ஏதாவது சமையல் சந்தேகங்களை சொல்லிக் குடுப்பார்.//
  இப்படி எல்லோரிடமும் அன்பாய் பேசக்கூடியவர்களின் பிரிவு மனதை சங்கடப்படுத்திக் கொண்டே தான் இருக்கும்.

  நல்ல மனுஷிக்கு இப்படி ஆனது வருத்தமான விஷயம் தான்.
  அவர்கள் ஆதமா சாந்தி அடைய பிராத்திப்போம்.

  ReplyDelete
 6. தர்ட் டிகிரி பர்ன்ஸ் என்று இந்த 80 சதவீத தீக்காயங்களைச் சொல்வார்கள். தாங்கொணாத வேதனை அது. அந்த ஆத்மா அமைதியடையட்டும். சமயத்தில் நீங்கள் உதவி செய்ததும், அதைவிட உதவி செய்தபின் வீட்டுக்கு வந்து அழுத இரக்க உள்ளமும் மிகமிகப் பாராட்டுக்குரியது. வியக்கிறேன் உங்களை...

  ReplyDelete
 7. ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்

  ReplyDelete
 8. மனம் கலங்கும் பதிவு.அவரது ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திப்போம்.சமயத்தில் தாங்களும் தங்கள் தோழியும் உதவியது பாராட்டப் பட வேண்டிய செயலே.

  ReplyDelete
 9. அன்று அந்தம்மா ஸ்வெட்டர் அணிந்திருந்ததும், வேலைக்காரி வெளியில் பூட்டிச்சென்றதும் தற்செயல் என்றாலும் அப்படியில்லையென்றால் அவரது கதியை நினைத்தே பார்க்க முடியவில்லை. மனத்துணிவுடன் அவருக்குத் துணையிருந்த உங்களையும் தோழியையும் பாராட்டியே ஆகவேண்டும். அவரது ஆத்மா சாந்தியடைய நானும் பிரார்த்திக்கிறேன். மின்வெட்டு சமயத்தில் எச்சரிக்கை தரும் பதிவு.

  ReplyDelete
 10. வேதனையான சம்பவம்.

  ReplyDelete
 11. படிக்கவே கஷ்டமா இருந்தது. மனதை உருக்கும் பதிவு. உங்கள் உதவி பாராட்டுக்குரியது.

  ReplyDelete
 12. Kovai Arasiyay,

  Love all and Serve all, enbadharkku thaangal oru eduththukkattu. Ungalludaya Ilagiya ullamum, samayojitha Budhdhiyum Paaraattudharkuriya onru. Yendha oru Prathi Palanum Edhirpaarkkaadhu, Manidha Neyathtudan Seyalpatta ungalukku "Plattinum Blog" Award vazhanguvadhil Perumai Adaigiren. Andha Nalla Ammavin AAathmaa Shanthi Perattum.!!

  ReplyDelete
 13. மனம் கலங்கும் பதிவு.

  அவரது ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திப்போம்.

  மனதை உருக்கும் பதிவு.

  உங்கள் உதவி பாராட்டுக்குரியது.

  ReplyDelete
 14. வாங்க முத்துலெட்சுமி,

  அம்மாவுக்கு காலில் கொஞ்சம் பிரச்சனை. அதனால நடந்து வந்து சாத்துவதற்குள் வேலைக்காரியே வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு சென்று விட்டாள். இல்லேன்னா என்றைக்கோ.....

  வெயில் காலத்துல தில்லியில் இந்த மின்சார துண்டிப்பு கொடுமையிலும் கொடுமை. நான் நடுராத்திரியெல்லாம் பால்கனியில் போய் உட்கார்ந்திருப்பேன். தூக்கமே இருக்காது....:( சுவற்றில் சாயமுடியாது, தரையில் உட்காரவும் முடியாது. கொதிக்கும். நாங்கள் வேறு 9 வருடங்கள் TOP FLOORல் இருந்தோம். இந்த ஒரு வருடமாக பரவாயில்லை....NDMC ஏரியா என்பதால் மின்சாரம் போவதில்லை. வருடா வருடம் எனக்கு தவறாமல் சன் ஸ்ட்ரோக் வந்து விடும். இந்த வருடம் சில நாட்களுக்கு முன்னயே வந்து விட்டது.

  இரண்டு ,மூன்று முறை, அடிக்கும் வெய்யிலில் காஸ் அடுப்பில் இருந்து இளகி ரப்பர் ஹோஸ் விழிந்திருக்கிறது. சப்பாத்தி கட்டை கூட பிளந்திருக்கிறது.... சூப்பரான வெய்யில்....:)

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 15. வாங்க கோவை நேரம்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 16. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 17. வாங்க லஷ்மிம்மா,

  ஆமாம்மா. ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்வில் பல வித பிரச்சனைகள் தான்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 18. வாங்க கோமதிம்மா,

  அம்மாவின் பெயர் கூட எனக்கு தெரியாது. முகம் மட்டும் எப்போதும் மனதில் இருக்கும். பாவம் அன்றைக்கு அவர்கள் துடித்த துடிப்பு....சொல்ல வார்த்தைகளே இல்லை. நல்ல பாசமான மனுஷி தான்....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 19. வாங்க கணேஷ் சார்,

  அம்மா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்த பின்னும் ராத்திரியெல்லாம் கத்துவார், அழுவார். எழுந்து உட்கார்ந்து கொண்டு தவிப்பேன். பாவம் என்னவொரு வேதனை.
  என்ன இருந்தாலும் மனது துடிக்கிறதே... நேற்றெல்லாம் நில அதிர்வுக்கும், சுனாமி வரக்கூடாது என்பதற்காகவும் புலம்பிக் கொண்டும், கவலைப்பட்டுக் கொண்டும், பிரார்த்தித்துக் கொண்டும் இருந்தேன். என்னால் முடிந்தது.....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 20. வாங்க புதுகைத் தென்றல்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க ராஜி,

  பக்கத்து வீட்டில் இருந்த தோழி தான் முதலில் ஓடி தண்ணீரை ஊற்றி உதவினார். அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 22. வாங்க கீதமஞ்சரி,

  ஆமாங்க. அன்று நடந்த எல்லாமே தற்செயல் தான். இல்லையென்றால்...... எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 23. வாங்க ஸ்ரீராம்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. வாங்க கே.பி.ஜனா சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 25. வாங்க வீ.கே.நடராஜன் அவர்களே,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 26. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 27. மனம் மிகவும் சங்கடப்பட்டது
  அவர்கள் ஆன்மா சாந்தியடைய
  நாங்களும் பிரார்த்திக்கிறோம்

  ReplyDelete
 28. படிக்கும் நாங்களே கலங்கிப் போகிறோம்.நேரில் பார்த்த உங்களுக்கு;என்ன சொல்வதென்று தெரியவில்லை ஆதி வெங்கட்.
  அவருக்காகப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 29. ம‌ன‌ம் ப‌தைக்கிற‌து ஆதி. சகோத‌ர‌ர் ப‌ல‌மொழிச் சொற்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தியிருக்கிறார். ம‌ன‌தில் அறைந்து ப‌திந்து விட்ட‌து முஜே ப‌ச்சாவ்!

  தாங்க‌ளும் தோழியும் கால‌த்தில் செய்த‌ உத‌வியால் அந்த‌ம்மாவின் ஆயுள் ச‌ற்று நீடித்திருக்கிற‌து. அத‌ற்கான‌ புண்ணிய‌ம் உங்க‌ க‌ண‌க்கில். அன்புக்குரிய‌வ‌ர்க‌ளின் துய‌ர‌ம் ந‌ம்மையும் வ‌ருத்தி துடிக்க‌வே செய்யும்.

  தீப்ப‌ற்றினால் நீரூற்றுவ‌தைவிட‌ க‌ன‌த்த‌ போர்வையால் சுருட்டி த‌ரையில் உருட்டுவ‌து பாதுகாப்பான‌ முத‌லுத‌வி என்கிறார்க‌ளே... ப‌த‌ட்ட‌த்தில் ம‌ன‌தில் ப‌ட்ட‌தை செய்த‌தும் ச‌ரியே. எக்கால‌த்தும் எல்லோருக்குமான‌ எச்ச‌ரிக்கையும் இப்ப‌திவின் த‌க‌வ‌ல்.

  ReplyDelete
 30. பரிதாபமான சம்பவம்தான் அது. என் காவல்துறை நண்பர் சொன்ன ஒரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. இதே போல் எண்பது சதவீத தீக்காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் ஒரு இளம் பெண். அவளிடம் காவல்துறை நண்பர் வாக்குமூலம் வாங்கியிருக்கிறார். எனக்கு ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. நான் பிழைத்துக் கொள்வேன் என்று தைரியமாகச் சொல்லியிருக்கிறாள். ஒரு வாரம் கழித்து மறுபடியும் விசாரணைக்கு சென்று விசாரித்துக் கொண்டிருக்கும்போது முக்காலியில் உட்கார்ந்திருந்தவள் சட்டென்று அப்படியே மல்லாக்க கவிழ்ந்தவள் எழுந்திருக்கவே இல்லை. சடுதியில் மரணித்து விட்டாள். நண்பர் அந்த சம்பவத்தை அதிர்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். ஆனால் இந்த அம்மாவோ இத்தனை நாட்கள் உயிரோடிருந்ததே கடவுளின் கிருபைதான். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 31. எங்கள் வீட்டில் கொசுவர்த்தி சுருள் இப்படித்தான் மெத்தையில் விழுந்து பெரும்பகுதி கருகிப் போய் விட்டது. நெடி வந்து ஓடிப் போய்ப் பார்த்தால் அந்த அதிர்ச்சி. அதன்பின் சுருள் உபயோகிப்பதே இல்லை.

  பழகிய மனிதருக்கு இப்படி ஆனால் மனசு துடித்துத்தான் போகும்.

  ReplyDelete
 32. வாங்க ரமணி சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 33. வாங்க சென்னை பித்தன் சார்,

  அன்று பார்த்த சம்பவம், இன்னும் கண் முன் தான் இருக்கிறது. கொடுமை...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 34. வாங்க நிலாமகள்,

  தாங்கள் சொல்வதும் சரியே. கம்பளியால் சுத்தியிருக்கலாம். ஆனால் அன்று முதலில் ஓடி வந்த தோழி அருகில் பாத்ரூம் இருந்ததால் தண்ணீரை எடுத்து ஊத்தி அணைத்திருக்கிறார். அதே போல மேலே கனமான ஸ்வெட்டர் அணிந்திருந்ததால் தான், தீ மேலே பரவவில்லை.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 35. வாங்க துரைடேனியல்,

  தாங்கள் சொன்ன சம்பவம் மிகவும் பரிதாபத்துக்குரியது. அம்மா அன்று உயிர் பிழைத்தது கடவுளின் க்ருபை தான்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 36. வாங்க ரிஷபன் சார்,

  கொசுவத்தி சுருள் சற்றே கவனக் குறைவாக இருந்தால் ஆபத்தானது தான். எங்க வீட்டில் என்னவருக்கு இந்த சுருளின் நெடி ஆகவே ஆகாது. மூச்சு முட்டுது என்பார். அதனால் லிக்விட் தான்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 37. என்ன ஒரு கொடுமை ஆதி. சத்தம் கேட்டு நீங்களும் போய் உதவி செய்திருக்கிறீர்கள். உங்கள் ,மற்றும் உங்களது தோழியின் உதவியை நான் மிகவும் மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறேன்.
  இப்படிக்கூட நடக்குமா.பாவம்.உங்களது இளகின மனதுக்கும், அந்த அம்மாவின் அன்புக்கும் என் வணக்கங்கள்.

  ReplyDelete
 38. கலங்கடிக்கிறது. இரண்டு வருடங்களாகியும் தீப்புண் ஆறவில்லையா? ஏன் வலி இருந்தது அவருக்கு?

  தீ விபத்து யாருக்கும் நேரவே கூடாது என்று பிரார்த்தனை எப்போதும் செய்வதுண்டு. எப்போதோ குமுதத்தில், “வாழ்க்கையில் எனக்கு அது இல்லை; இது இல்லை என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் சென்னை மருத்துவமனையின் தீ விபத்து பகுதியைப் போய் ஒருமுறை பார்த்து வாருங்கள்” என்று எழுதிருந்தது எப்பவும் மறக்கவே முடியாது. தீக்குளித்துத் தற்கொலை செய்பவர்களால் எப்படித்தான் முடிகிறதோ என்று நினைப்பேன். அதை ஆதரிப்பவர்களையும், பெருமைப்படுத்திப் பேசுபவர்களையும் கண்டால் பற்றிகொண்டு வருவதும் இதனால்தான்.

  ReplyDelete
 39. நினைத்துப் பர்ர்கவே கஷ்டமாகவும் பயமாகவும் உள்ளது. எல்லா விசயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்

  ReplyDelete
 40. வாங்க வல்லிம்மா,

  கொடுமை தான்.....ரொம்பவே கஷ்டப்பட்டார்கள்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 41. வாங்க ஹுசைனம்மா,

  இரண்டு வருடங்களுக்கு முன்னால் அம்மா இறந்து விட்டார் என் எழுதியிருந்தேன்...
  குமுதத்தில் எழுதியிருந்தது என்னவோ உண்மை தான். நம்மை உலுக்கி போட்டு விடும் படியான அலறலும், துடிப்பும்...... யாருக்குமே இப்படியாக கூடாது.

  தீக்குளிப்பது என்பதை ஏதோ சாகசம் போல் பேசுபவர்களை பார்த்தால் பற்றிக் கொண்டு தான் வருகிறது.
  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 42. வாங்க சீனு,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 43. காலையிலேயே செண்டிமெண்டா ஆக்கிட்டீங்க..

  ReplyDelete
 44. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஆனந்த்..

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…