Monday, April 30, 2012

ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா
தலைப்பை பார்த்ததுமே புரிந்திருக்குமே உங்களுக்கு. ஆமாங்க நான் ஹிந்தி கற்றுக் கொண்ட அனுபவங்களை, அந்த சோகக் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என் மீண்டும் பள்ளிக்கு போகலாம் தொடர்பதிவில் சொன்னது போலவே ஆறாம் வகுப்பு ஆரம்பத்திலேயே எங்க வீட்டுக்கு மேல் வீட்டில் உள்ள ஒரு ஹிந்தி கற்பிப்பவரிடம் என்னை முதல் தேர்வான ”பிராத்மிக்” (PRATHMIC) சேர்த்து விட்டார் என் அம்மா.

அதிலிருந்து ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு தேர்வாக எழுதித் தேறிக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்கு எழுந்து மேல் வீட்டு டீச்சரிடம் கற்றுக் கொள்ள செல்ல வேண்டும். இதுவே எரிச்சல் என்றால், தப்பாக எழுதினாலோ இல்லை தெரியவில்லை என்றாலோ முட்டி போடச் சொல்வார் அந்த ஆசிரியர். இது பெரிய எரிச்சல். பள்ளிப்படிப்பு தவிர கூடுதலாக படிக்கும் இதிலும் முட்டி போடச் சொல்வது பெரிய கொடுமை… (நீங்க என்ன சொல்றீங்க?)

அந்த ஆசிரியர் அருகிலேயே மர ஸ்கேல் அல்லது குச்சி (எதுக்கா? அடிக்கத் தான்...) வைத்திருப்பார். இதனுடன் ஹிந்தி தமிழ் டிக்‌ஷனரி. ஆமாங்க முக்கால் வாசி நேரம் இதைப் பார்த்து தான் அர்த்தம் சொல்வார். ஏனோ இந்த முட்டி போடுதல், அடி வாங்குவது, எதற்கெடுத்தாலும் டிக்‌ஷனரியை பார்த்து சொல்லுதல் இந்த காரணத்தினாலேயே ஹிந்தியே பிடிக்கவில்லை. அம்மாவிடம் சொன்னாலும் மேல் வீடு தான் அருகில் இருக்கிறது என்பதால் வேறு எங்கும் அனுப்பவில்லை.

பரீட்சைக்கு முன்னர் இருமுறை ஏதாவது பள்ளிகளில் செமினார் வைப்பாங்க. அப்பா அழைத்துச் சென்று விட்டு விட்டு இருந்து மாலையில் அழைத்து வருவார். முதல் பரீட்சையன்று தேர்வு எழுதும் செண்டருக்கு சென்றதும் பயமாகி விட்டது. காரணம் அங்கு சிறியவர்கள் முதல் 60 வயது பெரியவர்கள் வரை தேர்வு எழுதுவதைக் கண்டதும் எனக்குள் என்னவோ செய்தது. கிடுகிடுவென்று தேர்வினை எழுதி விட்டு வந்து விட்டேன். வரும் வழியில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பயத்தில் வாந்தியே எடுத்து விட்டேன். அன்று செளசெள (என்ர ஊர்ல மேரக்காய்) கூட்டு சாப்பிட்டிருந்தேன். அன்று முதல் பல வருடங்களுக்கு செளசெளவே சாப்பிடாமல் இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மதிப்பெண் எவ்வளவு என்றெல்லாம் கேட்கக் கூடாது ஜஸ்ட் பாஸ். போதாதா?...

அடுத்து மத்யமா, ராஷ்ட்ரபாஷா என்ற இரு தேர்வுகளையும் எப்படியோ படித்து தேறி விட்டேன். அதற்கடுத்த நான்காம் தேர்வான பிரவேசிகாவில் ஒருமுறை தோற்று விடாப்பிடியாக (வீட்டில் விடவில்லை) படித்து மீண்டும் எழுதி தேறினேன். அதோடு எங்க மேல் வீட்டு டீச்சரும் வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஏரியாவுக்கு போயிட்டாங்க. ”அப்பாடா! தப்பித்தேனா…” என்றால் இல்லையே…

அடுத்த தேர்வான விஷாரத்தில் இரண்டு பிரிவுத் தேர்வு (பூர்வாத், உத்தராத்) இது டிகிரிக்கு ஈடானது. இதை கற்றுக் கொள்ள டவுன் ஹாலில் ”அஞ்சு முக்கு” என்றொரு பிரபலமான இடம் உண்டு. விஜயா பதிப்பகம், நேந்திரம் சிப்ஸ்களின் மணம் என்று பல விஷயங்கள் உண்டு இந்த இடத்தில். என் அப்பாவின் அலுவலகத்தின் அருகில் தான் உள்ளது இந்த இடம். இங்கு சக்தி ஹிந்தி செண்டர் என்ற இடத்தில் என்னை சேர்த்து விட்டார் அப்பா. இங்கு நிறைய பேர் அவரவர்களின் நேரத்திற்கு தகுந்த படி கற்றுக் கொள்ள வருவார்கள்.

பள்ளியிலிருந்து மாலை வந்ததும் கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாகி பேருந்தை பிடித்து 20 நிமிட பயணத்தில் அப்பாவின் அலுவலகம் சென்று விட்டு (எதற்கா? அப்போ தானே எதிர்த்தாற் போல் உள்ள அரோமா பேக்கரியில் ஏதாவது சாப்பிட வாங்கித் தருவார்) அங்கிருந்து இந்த செண்டருக்கு செல்வேன். இங்கு வருபவர்களில் நான் தான் பள்ளி மாணவி. மற்றவர்கள் டிகிரி முடித்து விட்டு வீட்டிலிருப்பவர்கள். அல்லது வேலைக்கு செல்ல முயற்சி செய்பவர்கள். இந்த டீச்சர் நல்லபடியாக சொல்லித் தந்தார். தேர்வும் எழுதி முதல் பிரிவான பூர்வாத்தை தேறினேன்.

அடுத்த பிரிவான உத்தராத்துக்கு தான் திண்டாட்டமாகி விட்டது. நானும் ஒன்பதாம் வகுப்புக்கு சென்றிருந்தேன். பள்ளி நேரத்தையும் ஷிப்ட் முறையில் மாற்றியதால் மாலை 5.30க்கு தான் வீட்டுக்கு வருவேன். அதற்கப்புறம் ஹிந்தி வகுப்புக்கு செல்வது கஷ்டமாகி விட்டது. (இருட்டிய பிறகு வெளியே அனுப்ப மாட்டார்கள் அல்லவா…) சில நாட்கள் காலையில் சென்டருக்கு சென்று வருவேன். அதற்கு பிறகு ஆர்.எஸ் புரத்தில் சில நாள், இப்படி எப்படியோ நானே படித்து இரண்டாம் பிரிவையும் தேறி விட்டேன். இந்த விஷாரத் இரு பிரிவுகளையும் முடித்தவுடன் திருச்சியில் பட்டமளிப்பு விழா வைத்திருந்தார்கள். மூப்பனார் அவர்களின் கையால் வாங்க வேண்டிய சான்றிதழை திருச்சிக்கு செல்ல முடியாத காரணத்தால் தபாலில் பெற்றுக் கொண்டேன்.

இதன் கூடவே DIRECTORATE OF HINDI EDUCATION, DELHI (அப்பவே தில்லியோடு தொடர்பு வந்திடுச்சு பாருங்க.) யிலிருந்து ஆறு மாத டிப்ளமோ கரஸ்ஸில் பண்ணலாம் என்று சேரச் சொன்னாங்க. அதையும் சேர்ந்து தான் வைப்போமே என்று சேர்ந்தாச்சு. அப்பப்போ பாடங்கள் வரும். பேப்பர்ஸும் பூர்த்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தேன். செமினார்கள் இருக்கும். கேந்திரிய வித்யாலயாவில் தேர்வு எழுதினேன். எல்லோரும் பெரியவர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த தேர்வு எழுதி தேறினால் INCREMENT  கிடைக்குமாம்.

என் பின்னால் இருந்த ஒருவர் நான் எழுதிய விடைத்தாளை காண்பிக்கும்படிச் சொல்ல, பயந்து போய் என் விடைத் தாளையே எடுத்து கொடுத்து விட்டேன். (கொடுக்காம போனா வெளில வந்து அடிச்சுடுவாங்களோ என்ற பயம் தான்) அவரும் எழுதி விட்டு மரியாதையாக கொடுத்து விட்டார். அந்த டிப்ளமோவையும் முதல் வகுப்பில் தேறி விட்டேன்.

இப்போ நான் பத்தாவது வந்திருந்ததால் அதை காரணம் காட்டி அடுத்த தேர்வான ப்ரவீன் பண்ண முடியாது என்று சொல்லி வீட்டில் தப்பி விட்டேன். நான் D.M.E பண்ணிய பிறகு கூட அப்பா எவ்வளவோ தடவை சொல்லியும் நான் கேட்கவில்லை முடியாது என்று சொல்லி விட்டேன். ஒவ்வொரு தேர்வின் போதும் அங்கிருப்பவர்களை பார்த்தால் எல்லோரும் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்தாலே வயிற்றை கலக்க ஆரம்பித்து விடும். ஹிந்தி இலக்கணம் இருக்கே… அப்பப்பா...

சரி இவ்வளவு படித்து என்ன பயனடைந்தேன் என்கிறீர்களா?...

திருமணம் முடிந்து தில்லி வந்து இறங்கியதிலிருந்து இப்போ வரை ஹிந்தியில் எழுதிய எந்த பெயர்ப் பலகையையும் உடனே படித்து விடுவேன். வேறு எதற்கும் உபயோகமாக வில்லை. பேச்சு வழக்கு என்பது நாளாக ஆகத் தான் வந்தது. பல மாநிலத்தவர்கள் இங்கிருப்பதால் ஒவ்வொருவரின் ஸ்டைலில் அவர்கள் பேசும் ஹிந்தியை புரிந்து கொள்வதற்கே நாளானது.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி 1: இது என்னுடைய 100வது பதிவு. எப்படியோ திக்கித் திணறி நூறு பதிவுகள் எழுதி விட்டேன். எனக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கு. தொடர்ந்து எனது பதிவுகளுக்கு ஆதரவு தந்த/தரும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


டிஸ்கி 2: என் வலைப்பூவில் சில நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தமிழகத்துக்கு வருகை. அதனால எல்லோரும் விடுமுறையை எஞ்சாய் பண்ணுங்கபைபை.

Tuesday, April 24, 2012

கதம்பம் - 8

ROOH AFZA
இந்தப் பெயரை தொலைக்காட்சி விளம்பரத்தில் பலரும் பார்த்திருப்பீர்கள். இல்லை நான் பார்த்ததில்லை என்பவர்களுக்கு "ROOH AFZA" என்பது தில்லியில் கோடையில் பெரும்பாலோர் வீட்டிலும் இருக்கும் ஒரு பானம். சர்பத் போல பிங்க் நிறத்தில் கண்ணாடி பாட்டிலில் கிடைக்கும். இதை பாலுடனோ, லஸ்ஸியுடனோ, அல்லது வெறும் தண்ணீருடனோ கலந்து உபயோகிக்கலாம். இதில் கலந்துள்ள மூலப்பொருட்கள் அனைத்தும் உடலுக்கு நன்மை விளைவிப்பவை. கேரட் சாறு, புதினா சாறு, சுரைக்காய் சாறு, ரோஜா பூக்களின் சாறு என இன்னும் நிறைய. சோடா கலந்து குடித்தாலும் நன்றாக இருக்கும். தண்ணீருடன் கலந்து சாப்பிடும் போது சிறிது எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொண்டால் சுவை இன்னும் கூடும். DABUR-ரிலும் "SHARBHAT E AZAM"  என்ற பெயரில் இதே போன்ற பானம் கிடைக்கிறது. அதிலும் இதிலுள்ள மூலப்பொருட்கள் தான் உள்ளன. உங்களுக்கு கிடைத்தால் வாங்கி பருகிப் பாருங்கள்.


புதிய கண்டுபிடிப்பு:-பெரிய விஞ்ஞானி ஆகிட்டாளோ என்று தயவு செய்து தப்பாகவெல்லாம் நினைச்சுடாதீங்க. சின்ன விஷயம் தான். உருளைக்கிழங்கை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி உப்பு, காரம் சேர்த்து கறி (பொரியல்) செய்வோம் இல்லையா? இத்தனை வருடங்களாக இதைச் செய்யும் போதெல்லாம் சே! அம்மா பண்ற ருசியே வரமாட்டேங்குதே என்று வருத்தப்பட்டதுண்டு. சென்ற வாரத்தில் ஒருநாள் இதே முறையில் கறி செய்யும் போது தோலை சீவாமல் தோலுடன் சேர்த்தே செய்து பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அதே ருசி. ஆஹா! ருசி இந்த தோலில் தான் இருந்திருக்கிறது என்பது தான் என் கண்டுபிடிப்பு. யாரும் அடிக்க வராதீங்க…


பிசிறில்லாத தோல், மண் இல்லாம நல்லா இருந்தா நன்றாக கழுவி விட்டு உபயோகிக்கலாம். தோலிலும் சத்து இருக்கு.


புதிதாக ஒரு பூ:சென்ற மாதம் முழுவதும் சாலையில் சிவப்பு நிறத்தில் உள்ள இந்த மலர்கள் தான் எங்கும் கிடந்தன. நல்ல உயரமான மரம். இலைகள் மிகவும் குறைவு. பூக்கள் தான் நிறைய… மலர்கள் தான் வண்டிகளின் நடமாட்டத்தால் நசுங்கி கிடக்கின்றன...

ரோஷ்ணி கார்னர்:-


ராஜ் டிவியில் பத்தாயிரத்து ஒன்றாம் தடவையாக "என் பொம்முகுட்டி அம்மாவுக்கு" படம் போட்டிருந்தாங்க. எதேச்சையாக சேனல் மாற்றும் போது பட ஆரம்பத்தில் வரும் ”ஏ சித்திரசிட்டுக்கள் சிவந்த மொட்டுகள்” என்ற பாடல் வந்ததும் சித்ரா அவர்கள் பாடிய அழகான பாடல் என்று நானும் ரோஷ்ணியும் பார்க்க ஆரம்பித்தோம். பாடல் முடியும் நேரத்தில் நான் சேனலை மாற்றினேன். காரணம் அந்த பாடலில் வரும் குழந்தை, தன்னுடைய பொம்மை தண்ணீருக்குள் விழுந்ததால் அதை எடுப்பதற்காக குழந்தையும் தண்ணீருக்குள் குதிப்பதாக சொல்லியிருப்பாங்க. (நல்லவேளை குழந்தை விழுவது போல் காட்ட மாட்டார்கள்) இந்த படத்தை பல முறை பார்த்துள்ளதால் எதற்கு இந்த விபரீதம் என்று நான் சேனலை மாற்றி விட்டு வேறு வேலையை பார்க்கச் செல்ல ரோஷ்ணி மாற்றி இதைப் பார்க்க நான் அவளுக்கு சொல்லி புரிய வைப்பதற்காக அப்பா, அம்மா பேச்சை கேட்காம பாப்பா தனியா போனதால் தான் அப்படி ஆனது. அதனால எல்லா குழந்தைகளும் அப்பா, அம்மா சொல்றதை கேட்கணும். அவங்க நல்லதை தான் சொல்வாங்க, என்று சொல்ல. அவளோ பொம்மை விழுந்தா அப்பாவிடம் சொல்லி வேற வாங்கிக்கலாம். எதுக்கு பாப்பா இதுக்கு போய் தண்ணிக்குள் குதிக்கிறா? இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்றாள்.

அப்பாடா! தப்பித்தேன்…..மீண்டும் சந்திப்போம்,ஆதி வெங்கட்.
புது தில்லி.

Monday, April 16, 2012

"ஒரு வண்ணத்துப்பூச்சியின் கோபம்" – வாசிப்பனுபவம்
இரா.பசுமைக்குமாரின் ”ஒரு வண்ணத்துப்பூச்சியின் கோபம்” உலக புத்தக கண்காட்சியில் நான் தேர்வு செய்து வாங்கிய புத்தகம். சமூக விழிப்புணர்வு சிறுகதைகள் என்ற தலைப்பை பார்த்தவுடன் வாங்கத் தோன்றியது. இவரின் எழுத்தை முதன் முறையாக வாசிக்கிறேன். சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை, அவலங்களை தன்னுடைய எழுத்தால் புரிய வைக்கிறார்.

இவர் லால்குடியை சேர்ந்தவராம். பத்திரிக்கையாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், டாக்குமெண்டரி மற்றும் குறும்பட இயக்குனர், திரைப்பட ஆய்வாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர், திரைப்புனல் திரைப்பட இயக்கத்தின் மாநில அமைப்பாளர் என்று தொடர்கிறது இவரது பன்முக திறமை. தமிழகத்தின் முன்னணி ஏடுகளில் இவரது படைப்புகள் வெளி வருகிறதாம்.

பதிமூன்று சிறுகதைகளை அடங்கிய தொகுப்பு இது. என் மனதை பாதித்த சில கதைகளிலிருந்து  சில துளிகள்…

”கரும்பு வெட்டு” என்ற சிறுகதையில் வாழையடி வாழையாக நெல்லை பயிரிட்டு வந்த ஒரு விவசாயி ”கரும்பு இன்ஸ்பெக்டர்” சொன்ன வார்த்தைகளை நம்பி கரும்பைப் பயிரிட்டு அதை அறுவடை செய்யும் நேரத்தில் வெட்ட ஆர்டர் தராமல் போனதும், நொந்து போகிறார். லஞ்சம் கொடுக்காமல் காரியங்கள் நடக்காத இன்றைய நிலையில் ஏழை விவசாயிகள் படும் பாட்டை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இறுதியில் கரும்புக் காட்டை அந்த விவசாயியே எரிக்கும் போது மனது பதைபதைக்கிறது.

”கல்யாணப் புடவை” என்ற கதையில் மனமொத்த தம்பதியினரின் அன்புப் பிணைப்பை அழகாக எளிமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். திருமண நாளன்று கணவனுக்கு பிடித்த கல்யாண பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு சினிமாவுக்கு செல்ல வேண்டியவள், கணவனுக்கு உடம்பு சரியில்லாமல் போய் மருந்து வாங்கக் கூட பணம் இல்லாமல் கடைசியில் தன் கல்யாணப் புடவையையே அடமானம் வைத்து பணம் வாங்கச் செல்லும் போது நம் கண்களில் கண்ணீர் பொங்குவதென்னவோ உண்மை.

புத்தக தலைப்பாக உள்ள சிறுகதையில் வண்ணத்துப்பூச்சியை போன்று மென்மையான மனைவியை கணவன் தொடர்ந்து செய்யும் சித்ரவதையால் இறுதியில் அவள் சீறி எடுக்கும் முடிவை நமக்கு சொல்லி அதிரவைக்கிறார்.

”ஒரு பைக் எரிந்து கொண்டிருக்கிறது” என்ற கதையில் மக்கள் ஒரு சம்பவத்தை எதிர்நோக்கும் பார்வை கிராமத்திலும், நகரத்திலும் எப்படியெல்லாம் மாறுபடுகிறது என்று சொல்லியிருக்கிறார். நகரத்தில் உள்ள மக்களிடம் மனிதாபிமானம் என்பது மறைந்து கொண்டே வருவதையும், தனக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்ற ஒவ்வொருவரின் மனப்பாங்கும் இந்த கதையில் தெள்ளத் தெளிவாகிறது.

இப்படி பல விதமான சம்பவங்களை கருத்தில் கொண்டு புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார். கதாசிரியர் லால்குடியைச் சேர்ந்தவர் என்பதால் கதைக்களம் முழுவதும் பெரும்பாலும் திருச்சியைச் சுற்றியே உள்ளது. மனதுள் ஏற்படும் குழப்பங்களால் அது படும் பாட்டை கொள்ளிடம் ஆற்றின் பரந்த மணற்பரப்பில் வெறும் கால்களால் மத்தியான வெய்யிலில் நடப்பது போன்று உள்ளதாக எழுதியிருக்கிறார்.

நீங்களும் வாங்கி படித்துப் பாருங்களேன். 

புத்தகத்தை வாங்க:

சாந்தா பதிப்பகம்
முத்துவிழா இல்லம்
13/5, ஸ்ரீபுரம் 2வது தெரு
இராயப்பேட்டை, சென்னை – 600014.
தொலைபேசி – 28115618, 28116018
விலைரூ.50.

நட்புடன்

ஆதி வெங்கட்
புது தில்லி.


Wednesday, April 11, 2012

முஜே (B)பச்சாவ்…


தில்லி, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மின்சாரம் இல்லாமல் வெகு நேரம் இருப்பது என்பது மிகவும் சாதாரணமானது. ஒருநாளைக்கு குறைந்த பட்சம் எட்டு மணிநேரம் வரை கூட மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறோம். அதுவும் கடும் கோடையில் 46, 47 டிகிரி என்று வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில் மின்சார தட்டுப்பாட்டால் இரவு முழுதும் காற்றே இல்லாமல் புழுங்கித் தவித்திருக்கிறோம். தரையெல்லாம் தண்ணீரை ஊற்றி வைத்தாலும் நிமிடத்தில் காய்ந்து விடும். அதே போல் தான் கடும் குளிரிலும். இப்போ நமக்கு காற்று தேவைப்படாது. ஆனால் மாலை சீக்கிரமே இருட்டத் துவங்கி விடும். அதனால் வெளிச்சம் தேவைப்படுமல்லவா…

எட்டு, ஒன்பது வருடங்களுக்கு முன்பு கடுங்குளிரில் இரண்டு நாட்கள் மின்சாரமே இல்லாமல் இருந்த சமயம் அது. மாலை சீக்கிரமே இருட்டி விட்டது. முகத்தை கழுவி விட்டு வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று பாத்ரூமில் முகத்திற்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்தேன். தீடீரென்று ”முஜே (B)பச்சாவ்” ”முஜே (B)பச்சாவ்” (என்னை காப்பாத்துங்க) என்று ஈனக் குரலில் அலறல். ”கீழ் வீட்டிலிருக்கும் நண்பரின் வயதான அம்மாவின் குரல் போல் இருக்கிறதே!” எனத் தோன்றவும்... 

சட்டென்று முகத்தில் தண்ணீரை ஊற்றி கழுவிக் கொண்டு கீழே ஓடினால், முதல் தளத்திலிருந்த அம்மாவின் குரல் தான் அது. நெருப்பு அவர்களை நன்கு தழுவிக் கொண்டிருக்கிறது. அதற்குள் அந்த கட்டிடத்தில் உள்ளவர்களும் வந்திருந்தனர். நான் போவதற்குள் அம்மாவின் பக்கத்து வீட்டிலிருந்த தோழி ஓடி தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்திருந்தார். நானும், தோழியும் பாத்ரூம் அருகிலிருந்த அவரைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு முதலுதவிக்காக ஒரு மருத்துவரை தொலைபேசியில் அழைக்க அவரும் உடனே புறப்பட்டு வருவதாக சொன்னார்.

அம்மாவோ அலறுகிறார், துடிக்கிறார். அவரின் மகனுக்கும், மருமகளுக்கும் தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள் வர எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும். அதற்குள் மருத்துவர் வந்து முதலுதவியை ஆரம்பித்தார். இடுப்புக்கு கீழே முழுவதும் வெந்து விட்டது. முதலில் அவரது உடம்பில் ஒட்டியிருந்த துணிகளை பிய்த்து எடுப்பதற்காக தோழி ட்ரிப்ஸை உடம்பில் பீய்ச்சி அடிக்க மருத்துவர் துணிகளையும், தோலையும் பிய்த்து எடுக்க நான் அவைகளை ஒரு கவரில் வாங்கிக் கொண்டேன்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போக வேண்டும் என்று மருத்துவர் சொல்லிச் சென்றார். மகனும், மருமகளும் வருவதற்குள் கொஞ்சம் பாலில் நனைத்த பிரெட்டை அவருக்கு ஊட்டி விட்டோம். அவர்கள் வந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஒருநாள் வைத்திருந்தார்கள். பின்பு தில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பலநாட்கள் வைத்தியம் செய்து கொண்ட பின் வீடு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு ஏற்பட்டது 80 சதவிகித தீக்காயமாம்.

வீட்டுக்கு வந்த பின்னும் பல நாட்கள் இரவெல்லாம் அவரின் அழுகையும், அலறலும், கத்தலும் தொடர்ந்தன. கேட்கும் நமக்கே உலுக்கிப் போட்டு விடும்படியான குரல். சிலநாட்கள் கழித்து சென்னையில் உள்ள இன்னொரு மகனின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன் அவர் இறந்து விட்டதாகவும் தகவல் வந்தது.

இந்த தீக்காயம் எப்படி ஏற்பட்டது? மின்சாரம் இல்லாத அந்த நேரத்தில் ஒருபுறம் மெழுகுவர்த்தியை ஏற்றி அந்த வெளிச்சத்தில் கடவுளுக்கு விளக்கேற்றியிருக்கிறார். திரும்பும் போது புடவையில் தீ பிடித்திருக்கிறது. குளிரினால் முதல் சில நொடிகளுக்கு அவருக்கு தெரியவில்லை. அதே போல் மடிசார் புடவையின் மீது நல்ல கனமான ஸ்வெட்டர் போட்டிருந்திருந்தனால் இடுப்புக்கு கீழே தான் தீக்காயம். சிறிது நேரத்திற்கு முன்பு தான்  வேலையை முடித்து விட்டு மரக்கதவை திறந்து வைத்து விட்டு வெளியேயுள்ள இரும்பு கேட்டை மட்டும் வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு சென்றுள்ளார் வேலைக்காரி. இல்லையெனில் யாரும் உள்ளே போயிருக்கவே முடியாது. இங்கேயுள்ள கேட்களில்  உள்பக்கமாக நெருக்கமான கம்பி வலைகள் அடிக்கப்பட்டிருப்பதால் கையை உள்ளே விட்டெல்லாம் திறக்க வாய்ப்பே இல்லை.

எப்பவுமே இவர் அலுவலகம் சென்றவுடன் ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வருவேன். உரிமையுடன் “அவனுக்கு கைக்கு சப்பாத்தி பண்ணி குடுத்து விட்டாயா? இன்னிக்கு என்னடி சமையல் பண்ணின? என்றும் இதை இப்படித் தான் செய்யணும் என்று ஏதாவது சமையல் சந்தேகங்களை சொல்லிக் குடுப்பார். சமையல் செய்வதிலும், விதவிதமாக சாப்பிடுவதிலும் அவருக்கு ஒரு அலாதி ப்ரியம் என்றும் தெரிந்து கொண்டேன்.

அம்மாவுக்கு இப்படி ஆனதில் நான் பல நாட்கள் புலம்பி அழுதிருக்கிறேன். ஏன் அன்றே கூட எல்லா உதவிகளும் செய்து விட்டு வீட்டிற்கு வந்து ஒரே அழுகை தான்… நல்ல மனுஷி. எல்லோரிடமும் பாசமாகவும், உரிமையுடனும் நடந்து கொள்வார். சில நாட்கள் தான் பழக்கம் என்றாலும் மனதை விட்டு அவர் முகம் அகலவே இல்லை.

அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Saturday, April 7, 2012

கேரள ஸ்டைல் குழம்பு


[காராமணி போட்டு செய்தது] 

எத்தனையோ விதமான குழம்புகளை செய்து சாப்பிடுகிறோம். அந்த விதத்தில் இது ஒரு புது மாதிரியான குழம்பு. சத்துள்ளதும் கூட. நான் என் மகளிடம் இது ”புரோட்டீன் குழம்பு” என்று சொல்லி தான் கொடுப்பேன். என் அம்மா செய்ததில் நான் மிகவும் விரும்பி சாப்பிட்டது. கேரளக் குழம்புகளில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்திருப்பார்கள். இதுவும் அப்படித்தான். அதனால் தான் இந்த பெயர். உங்களுக்காக அதன் செய்முறை…தேவையானப் பொருட்கள்:-கொண்டைக்கடலை (அ) காராமணி – இரண்டு கையளவு

உருளைக்கிழங்கு – 1

கத்திரிக்காய் – 1

புளி – எலுமிச்சையளவு

தேங்காய் – அரை மூடி

பச்சை மிளகாய் – 4 (அ) 5 அவரவர்களின் காரத்திற்கு ஏற்ப

இஞ்சி – ஒரு சின்ன துண்டு

சீரகம் – ஒரு தேக்கரண்டி

மஞ்சள்தூள் – சிறிதளவு

கடுகு – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை :-


[கொண்டைக்கடலை போட்டு செய்தது]


கொண்டைக்கடலை அல்லது காராமணி இவற்றில் எதை வேண்டுமானாலும் இந்த குழம்பு செய்ய உபயோகிக்கலாம். இந்த பயறுகளில் ஒன்றை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். குழம்பு செய்வதற்கு முன்பு பயறை குக்கரில் சாதம் வைக்கும் போதோ அல்லது தனியாகவோ நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் ,கத்திரிக்காயையும் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை தாளித்த பொருட்களுடன் சேர்த்து சற்று வதக்கிக் கொண்டு புளியை கரைத்து விடவும். குழம்பிற்கு தேவையான அளவு உப்பையும், சிறிதளவு மஞ்சள்தூளையும் சேர்க்கவும். நன்றாக கொதித்து காய்கள் வெந்தவுடன், வெந்த பயறையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இந்த சமயத்தில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி இவற்றை தண்ணீர் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை கொதிக்கும் குழம்பில் சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து மிதமான தீயில் சற்று கொதிக்க விட்டு இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான, சத்தான, வயிற்றுக்கு கெடுதல் செய்யாத கேரள ஸ்டைல் குழம்பு தயார். நீங்களும் செய்து பார்த்து ருசியுங்கள்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

டிஸ்கி – 1 பச்சை பயறையும் சிறிதளவு இந்த பயறுகளுடன் சேர்த்தும் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது.


டிஸ்கி – 2:  குழம்பு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால் ஒரு தேக்கரண்டி அரிசி மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து இரண்டு நிமிடத்தில் அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.

Wednesday, April 4, 2012

பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லம்…….


[ஐந்து மாதத்தில்.....
எப்ப எழுந்து விஷமம் பண்ணலாம்! :)]


[பொம்மையையும் ஃபோட்டோ எடுங்களேன்!
பாவம்.... அவங்களை யாரு ஃபோட்டோ எடுப்பா?]


[குட்மார்னிங்.... நான் எழுந்துட்டேன்...
சீக்கிரம் பால் கொண்டுவாங்க!]


[ரோஷ்ணி ராதா ஆனாள்!
Play School - கிருஷ்ண ஜெயந்திக்காக!]


[எர்ணாகுளத்தில் பச்சைப் புல்வெளிக்கு நடுவே ஒளிவெள்ளம்!]


[ஸ்.... அப்பா.... ஐஸ்க்ரீம் சாப்பிட்டு பல் கூசுது!]

[நானும் எல்.கே.ஜி. - ல சேர்ந்துட்டேனே..... ]


[ஏம்மா! இது உங்களுக்கே நியாயமா!
வாய் மேல் விரலை வைச்சு உட்கார வைச்சுட்டீங்களே!][நாங்களும் ராஜஸ்தானி ட்ரெஸ் போடுவோம்!]


[முடி இன்னும் அதிகமா வேணும்...
அதுவரைக்கும் சௌரி வைச்சு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதுதான்!]


[பாரத அன்னைக்கு ஜே! போடுங்க!]
வீட்டுல சொன்னப்போ எடுத்த காணொளி.
Play School-இல் சொன்னது அம்மா.... அம்மா.... :) மட்டுமே!]   

இன்று எங்கள் குட்டிச் செல்லம் ரோஷ்ணிக்கு ஏழாவது பிறந்தநாள். கடவுள் அவளை அன்பான, ஆரோக்கியமான, அறிவுள்ள, அனுசரணையான குழந்தையாக வைத்திருக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்!அவள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைத்து, பெயருக்கேற்றார் போல பிரகாசமாய் ஜொலிக்க அவளுடைய ஃபிரண்ட் “கணேஷா” அவளுக்கு உதவி புரியட்டும்.

பிறந்த நாள் வாழ்த்துகள் ரோஷ்ணி!


Monday, April 2, 2012

ஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே)
தில்லியில் நடைபெற்ற உலக புத்தக கண்காட்சியில் நம்ம துளசி டீச்சர் எழுதிய ”ஃபிஜித்தீவு” என்ற புத்தகத்தை வாங்கிய என் கணவர் தான் முதலில் இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார். வேறு ஒரு சிறுகதை தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்த நான், ஒருநாள் எதேச்சையாக இந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். ரொம்ப சுவாரசியமாக இருந்ததால் புத்தகத்தை நான் தான் முதலில் படித்து முடித்தேன்.

வேலை விஷயமாக மூன்று வருட காண்ட்ராக்டில் ஃபிஜிக்கு போக நேர்ந்ததில் ஆரம்பித்து அங்கு நம் இந்தியர்கள் எப்படி வந்து செட்டில் ஆனார்கள், அங்குள்ள நம்ம சாமி கோயில்கள், முருகன் எப்படி அங்கு வந்தான், அங்கிருப்பவர்களின் தொழில், அசற வைக்கும் புயல், உணவுப் பழக்கங்கள் இப்படி பலதரப்பட்ட விஷயங்களை முழுமையான மற்றும் சுவையான தகவல்களுடன் எழுதியிருக்கிறார்.

தமிழகத்தின் வறண்ட பகுதிகளிலிருந்து, “அடுத்த ஊரில் வேலை தருகிறோம், முடிந்ததும் கொண்டு வந்து விடுகிறோம்” என்று ஏஜெண்டுகளால் ஆசைகாட்டப்பட்டு சென்னைக்கு கூட்டிச் சென்று அங்கு கொட்டகையில் தங்க வைத்து, பின்பு ஃபிஜியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் கூலி வேலை செய்வதற்கு கப்பலில் அழைத்து சென்று மோசம் செய்யப்பட்ட இவர்களில்  பலர் நான்கு மாத கடும் கடல் பயணத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தே போயிருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்களின் வழக்கப்படி இவர்களிடமும் சர் நேம் கேட்க ஒவ்வொரு வட இந்தியர்களின் பெயருக்குப் பின்னாலும் மஹராஜ் உள்ளது, காரணம் ஆங்கிலேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்கள் ”ஜி மஹராஜ்” என கூறியுள்ளனர். அதுவே சர் நேம் ஆகி விட்டதாம். இது போலவே நம்ம ஊர் குப்புசாமி கூப்புசாமி ஆகியிருக்கிறார். கரும்புத் தோட்ட வேலை முடிந்ததும் திரும்பிச் செல்ல வழியில்லாமல் இங்கேயே தங்கி விட்டனர். இவர்களின்  அடுத்த தலைமுறைகளும் தங்களுடைய சொந்த ஊர் எது என்று கூடத்  தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் திண்ணாமலை என்கிறார்களாம். அடுத்த ஊருக்கு வேலைக்கு சென்றிருப்பதாக நினைத்த அவர்களது குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்றும் தெரியாத இவர்களின் நிலை பற்றி என்ன சொல்வது.

நேடிவ் ஃபிஜியர்கள் காட்டு ஜனங்களாக நர மாமிசம் சாப்பிடுபவர்களாகத் தான் முன்பு இருந்திருக்கிறார்கள். சகமனிதரையே உண்ணும் இவர்களை ஒரு கிறிஸ்துவ அமைப்பினர் தான் அதிலிருந்து மீட்டு இப்போதைய உணவு முறைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் – அப்படி மாற்றுவதற்குள் அவர்களில் பாதிப் பேர் கடைசியில் காணவில்லை - அவ்வளவு ருசி போலிருக்கிறது நர மாமிசம். ஃபிஜியன் மொழிக்கு எழுத்துரு கிடையாதாம். அதனால் ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்திக் கொள்கிறார்களாம்.

ஃபிஜியர்களின் தேசிய விளையாட்டு ரக்பி. முதலில் இந்த விளையாட்டு வந்த கதையைச் சொல்லும் போது, ”எதிரிகளைக்  கொன்று அவர்களின் தலையை, பந்துக்கு பதிலாய் உருட்டி விளையாடுவார்களாம்” என்று சொல்லும்போது நமக்கு தலை தானாகவே ஆடுகிறது. பழங்குடியினரின் மதிப்பு மிக்க பொருட்கள் என்றால் திமிங்கலப் பல்லும், பாயும் தானாம். மதிப்பு மிக்கவர்கள் என்று நினைப்பவர்களுக்கு திமிங்கலப் பல் மாலை அணிவிப்பார்களாம்.

புரட்டாசி மாதம் வந்தாலே “குளுகுளா திருவிழா”ன்னு ஒண்ணு நடுத்துவாங்களாம். மாரியம்மன் முன்னிலையில் மைதா மாவில் சர்க்கரை சேர்த்து போண்டா போல் செய்து எண்ணெயில் போட்டதும் விரதமிருப்பவர்கள் கொதிக்கும் எண்ணெயில் இருந்து தங்கள் விரல்களாலேயே கோரி எடுப்பார்களாம். ஆமாங்க இந்த போண்டாவுக்கு பேர் தான் குளுகுளாவாம்.

இங்கு வியாபாரம் செய்ய வந்த குஜராத்திகளை பற்றி சொல்றாங்க… அது என்னன்னா…. ”சோம்பல் என்றால் என்ன?” என்று கேட்கும் ரகம்! எப்போதும் வெகு சுத்தமான ஆடைகளுடன், முகத்தில் ஒரு வாட்டமும் இல்லாமலிருக்கும் அவங்களை பார்க்கும் போதே நமக்கும் ஒரு உற்சாகம் வந்துடும். முதியோரை அவர்கள் பராமரிக்கும் விதமே தனி. எப்பவும் எது செஞ்சாலும் அவங்ககிட்டே கருத்துக்களைக் கேட்டே செய்றாங்க”.

நாட்டின் ஆட்சி ஒவ்வொருவர் கையாக மாற மாற பணத்தின் மதிப்பைக் குறைத்தார்களாம். இதனால் மக்களின் சேமிப்பு குறைய ஆரம்பித்தது. இப்படியே மூன்று வருட காண்ட்ராக்ட்டுக்காக இங்கு வந்தவர்கள் ஆறு வருடங்கள் தங்கி பின்பு மாறி அங்கிருந்து நியூசிக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார்களாம்.

இருபது வருடங்களுக்கு பிறகு ஃபிஜிக்கு சென்று தோழி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டு அப்படியே இடைப்பட்ட காலத்தில் ஃபிஜி நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் நமக்குக்  காட்டுகிறார். இப்படிப் பட்ட சுவாரசியமான செய்திகளை தரும் இந்த புத்தகத்தை நீங்களும் வாங்கிப் படித்து அதன் முழுமையான சுவையை உணருங்கள்.

புத்தகத்தை சந்தியா பதிப்பகத்தினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.  அவர்களது முகவரி:-

சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53 - வது தெரு
9 - வது அவென்யூ
அகோக் நகர்
சென்னை – 600083
தொலைபேசி – 044 24896979
விலை – ரூபாய் 120.

மீண்டும் சந்திப்போம்,

நட்புடன்
ஆதி வெங்கட்.