Thursday, March 1, 2012

மல்லிகாம்மா


நெடுநாட்களாக இவரைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எல்லோராலும் அவரின் மகளின் பெயரால் மல்லிகாம்மா என்றும் எங்களைப் போன்ற அக்கம் பக்கத்து வீட்டு பசங்களால் அத்தை என்று அழைக்கப்படும் இவர் நாங்கள் கோவையில் இருந்த அரசு குடியிருப்பில் எங்கள் வீட்டிற்கு எதிரில் ஏறக்குறைய 18 ஆண்டுகள் இருந்தார். அவர்கள் வீட்டில் எங்களை விட பத்து வயது பெரியவர்களான அண்ணாவும், அக்காவும்.

எதிர் வீடு என்பதால் பெரும்பாலான நேரம் அத்தை வீட்டில் தான் நானும் என் தம்பியும் இருப்போம். அவரிடம் தான் சுத்தம் என்றால் என்ன, வேலையை எப்படி நேர்த்தியாக செய்வது என்று எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். சிறிய வீட்டையும் அவ்வளவு அழகாக வைத்திருப்பார். அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. நான் தப்பு செய்தாலும் அடிப்பார். அதே போல் தான் எங்கள் வீட்டிலும். அப்போதெல்லாம் அவ்வளவு உரிமை உண்டு.

[படம்:  கூகிள்]


வயர் கூடைகள் நிறைய பின்னுவார். நான் அவரிடம் தான் கூடை பின்ன கற்றுக் கொண்டேன். வாசல் நிலையில் மாட்டும் கிளி, மீன் போன்ற உருவங்கள் கொண்ட “நிலவுலேஸ்” செய்யவும் அவரிடம் கற்றுக் கொண்டேன். சோப்பு வைத்து அதை சுற்றி வயரால் பின்னி மலர் ஜாடிகள் தயாரிப்பார்.

[படம்:  கூகிள்]


எனக்கும், அவரின் மகளுக்கும் தலை பின்னி விடுவார். ஒரு பிசிறில்லாமல் அதே சமயம் இறுக்கமாகவும். எங்காவது வெளியில் போன போதோ அல்லது தொலைக்காட்சியில் பார்த்ததை  அழகாக தோன்றினால் உடனே என் தலைமுடியில் செய்து பார்த்து விடுவார். அதை இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது. என் அம்மா பின்னியது பிடிக்காததால் அவங்க பின்னி விட்டா தான் பள்ளிக்கு செல்வேன் என்று அடம் பிடித்து, கடைசியில் அவர்கள் பின்னி விட்ட பின் பள்ளிக்குச் சென்றது நிறைய முறை.

பள்ளி விடுமுறை நாட்களில் அம்மாவும் அத்தையும் சின்ன வயர் கூடையில் நொறுக்கு தீனியும், தண்ணீரும் எடுத்துக் கொண்டு சினிமாவுக்கு அழைத்துச் செல்வார்கள். ராஜா ராணி விளையாட்டு அதில் தான் எத்தனை விறுவிறுப்பு இருந்தது அப்போது. தாயக்கட்டை, ஏழு கல் இவைகளிலும் அம்மாவும்  அவர்களும் கலந்து கொள்வார்கள். இந்த ஏழு கல் விளையாடும் போது ஒரு கிராமத்து பாட்டு வேறு பாடிக் கொண்டே விளையாடுவாங்க. அது இத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கு. இரவில் வெளியில் எல்லாப் பசங்களும் வட்டமாக உட்கார்ந்து கொண்டு குண்டு கத்திரிக்காய், கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடுவோம்.

ஏழாங்கல் பாட்டு


கம கம லேடி, கமலா லேடி
ஊஞ்சல் ஆடி ஒரு பணம் ஆடி
மஞ்ச மஞ்ச தோப்பில
மணியக்காரன் தோப்பில
நாலு மஞ்ச கன்னெடுத்த நாயக்காரன் தோப்பில
மாவு கல்லுக்கு சாமி வந்து மாவாடுது
திண்டுகல்லுக்கு சாமி வந்து திண்டாடுது
ரெண்டு மாடு தண்ணிக்குள்ள தத்தளிக்குது
உங்க பொண்ணுக்கு எப்ப கல்யாணம்
நேத்து மத்யானம்
சந்தனப்பொட்டும் குங்குமப்பொட்டும் நெத்திக்கு நல்லாயில்ல
காக்கா கொத்தின கொய்யாப்பழம் வாய்க்கு நல்லாயில்ல

இப்படியாக எனது இளமைக்காலங்கள் இனிமையாக கழிந்தது. என் திருமணத்தின் போது அத்தை நான் தினமும் உபயோகப்படுத்தும் பொருளையே பரிசாக கொடுக்க வேண்டும் என நினைத்து பெரியதாக எவர்சில்வர் அஞ்சறைப்பெட்டி வாங்கிக் கொடுத்தார். இன்றும் அதைத் தான் பயன்படுத்துகிறேன். என்றாவது தலைவாரி பின்னிக் கொள்ளும் போது ஒழுங்காக இல்லாமல் போனால் அவர்கள்  பிசிறில்லாமல் அழகாக பின்னியதை நினைத்துக் கொள்வேன்.

18 வருடங்கள் மல்லிகாம்மாவோடு இருந்தேன் என்றால் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டுக்கு வந்தால் என் மாமியாரையும் மல்லிகாம்மா என்று கூப்பிடுகிறார்கள்!!. காரணம் என் நாத்தனாரின் பெயர் மல்லிகா.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.48 comments:

 1. அழ்கான இனிமையான மணக்கும் மலரும் மல்லிகாம்மா நினைவுகள்..

  ReplyDelete
 2. மல்லிகாம்மா பற்றிய சுவாரசியமான நினைவுகள்.சோழி,பல்லாங்குழி எல்லாம் இப்ப யாராவது விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை. நிறைய விஷயங்களை நாம் இழந்திருக்கிறோம் ஆதி.

  ReplyDelete
 3. ஆஹா.... மல்லிகாம்மா டு மல்லிகாம்மா!!!!!!

  சூப்பர் கொசுவத்தி! ரசித்தேன்.

  ReplyDelete
 4. மல்லிகாம்மா பெயரில் மாமியாரும் அமைந்ததால் எப்பவும் அந்த மல்லிகாம்மா நினைவும் இருக்கும்.என் மகள் கூட நான் பின்னி விடுவது பிடிக்காமல் ஊர் போனால் அவங்க அத்தைகிட்ட தலையை பின்னிக்குவா.

  ReplyDelete
 5. அப்பொழுதெல்லாம் நாம் விளையாடிய இம்மாதிரி விளையாட்டுக்கள் நம் பிள்ளைகளுக்கு வாய் வழியாக நாம் சொல்லி தெரிய வைத்தால்தான் உண்டு.ஆனால் இன்றும் எங்கள் வீட்டில் என்னுடைய மற்றும் உடன் பிறந்தோர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சேர்ந்து தாயக்கட்டை கேரம் கண்ணாமூச்சி ஆடுவதுண்டு.

  என்றும் உங்களுடன் மல்லிகாம்மா இருந்துக்கிட்டே இருக்காங்க. :))

  ReplyDelete
 6. அருமையான மலரும் நினைவுகள் ஆதி.
  ஏழாங்கல் பாட்டு நன்றாக இருக்கிறது.
  மல்லிகாம்மா நினைவுகள் மல்லிகை பூவாய் மணக்கிறது.

  ReplyDelete
 7. அவங்க பரிசு செலக்ட் செய்ததுல இருக்குங்க அன்பு.. :)

  ReplyDelete
 8. ஏழாங்கல் பாட்டு நான் கேட்டதில்லை. மல்லிகாம்மாவைப் பற்றிய மலரும் நினைவுகளை ரசித்துப் படித்தேன். அருமை.

  ReplyDelete
 9. அருமையான மலரும் நினைவுகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 10. ஜூப்பராயிருக்கு.. மலரும் நினைவுகள். நினைவுகளில் காலத்துக்கும் தங்கி நிற்கிறதுக்கு ரத்த சம்பந்தமான உறவுகளாத்தான் இருக்கணும்ன்னு அவசியமில்லை. இது போல் பாசமான உறவுகளா இருந்தாலும் போதும்..

  ReplyDelete
 11. அந்தக்காலத்தில் இப்படித்தான் நல்லவிதமாக நேரங்கள் கழித்தோம். பாட்டுகள்தான் எத்தனை?? எல்லாம் மறந்துபோச்சு. மல்லிகாம்மாவின் பரிசுத் தேர்வு அவருக்கு உங்கமேலயுள்ள பாசத்தைக் காட்டுகீறது.

  ReplyDelete
 12. நல்ல நினைவலைகள்..

  ReplyDelete
 13. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. வாங்க ரமா,

  நிறைய விஷயங்களை நாம் இன்று இழந்து கொண்டு தான் இருக்கிறோம். என் பிறந்த வீட்டில் மதுரையில் வாங்கிய மீன் வடிவ பல்லாங்குழி இருந்தது. சோழியெல்லாம் இப்போ யார் விளையாடுகிறார்கள்...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 15. வாங்க டீச்சர்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 16. வாங்க ஆசியா உமர்,

  மல்லிகாம்மா பெயர் எப்பவும் நினைவில் இருக்கும்.உங்க மகளும் என் போல் தானா...:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 17. மலைப்பாம்பு மாதிரி எத்தனை அழகாக இருக்கிறது படத்தில் இருக்கிற பெண்ணின் கூந்தல்!!

  உங்கள் மலரும் நினைவுகள் வெகு அருமை!

  //என் மாமியாரையும் மல்லிகாம்மா என்று கூப்பிடுகிறார்கள்!!. காரணம் என் நாத்தனாரின் பெயர் மல்லிகா.//

  நான் ஈழத்துப் பெண்.உறவு முறைகள் புரியவில்லை.மாமியார் என்றால் கணவரின் தாயார். நாத்தனார் என்றால் மச்சாளா?

  ReplyDelete
 18. வாங்க ராஜி,

  நிறைய விஷயங்களை நானும் ரோஷ்ணிகிட்ட அவ்வப்போது சொல்லிக்கிட்டு இருக்கேன். இன்றைய குழந்தைகள் டிவி, கம்யூட்டர் இப்படித் தானே போய்க் கொண்டிருக்கிறார்கள்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 19. வாங்க கோமதிம்மா,

  உங்க பதிவில் ”சந்தன அத்தை” படித்ததிலிருந்து எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... இப்போ தான் எழுத முடிந்தது.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 20. வாங்க முத்துலெட்சுமி,

  ஆமாங்க. தினமும் அவங்களை ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்காக தந்த அன்பளிப்பு.... ஆத்மார்த்தமான அன்பு.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க கணேஷ் சார்,

  கிராமத்துப் பாடல். இவ்வளவு வருடங்களுக்குப் பின்னாலும் ஞாபகம் இருந்ததை பதிந்து வைத்து விட்டேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 23. வாங்க அமைதிச்சாரல்,

  நீங்க சொல்லியிருப்பது மிகச்சரி. ரத்த சம்பந்தமா இருக்கணும்னு அவசியமில்லை. பாசம் என்ற ஒன்றே போதும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. வாங்க ஹுசைனம்மா,

  ஆமாங்க. அப்பல்லாம் உபயோகமான, அறிவுப்பூர்வமா நேரங்கள் கழிந்தது.. அவங்க அன்பளிப்பு நிச்சயம் உயர்ந்தது தான்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 25. வாங்க மாதவன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 26. வாங்க மணிமேகலா,

  //நான் ஈழத்துப் பெண்.உறவு முறைகள் புரியவில்லை.மாமியார் என்றால் கணவரின் தாயார். நாத்தனார் என்றால் மச்சாளா?//

  நாத்தனார் என்றார் கணவரின் சகோதரி.
  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 27. ஏழாங்கல் பாட்டு நான் கேட்டதில்லை. மல்லிகாம்மாவைப் பற்றிய மலரும் நினைவுகளை ரசித்துப் படித்தேன். அருமை.

  ReplyDelete
 28. நல்லாச் சொன்னீங்க, ரோஷ்ணியம்மா!

  ReplyDelete
 29. வாங்க லஷ்மிம்மா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 30. வாங்க ஈஸ்வரன் சார்,

  ரோஷ்ணியம்மான்னு யாரும் என்னை இது வரை கூப்பிட்டதில்லை சார். கேட்கவே நல்லா இருக்கு.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. இனிமேல் உங்களை ரோஷ்ணீம்மான்னு கூப்பிடப்போறேன்.

  பூனாவில் நாங்க இருந்தப்ப நான் 'ச்சிண்ட்டு க்கா மா'வா இருந்தேன்.

  ச்சிண்டு என் செல்லச்செல்வம்.

  ReplyDelete
 32. யாரையும் பெய‌ரிட்டுக் கூப்பிடுவ‌து ஒரு புள‌ங்காகித‌ம் ... அதிலும் அவ‌ர‌வ‌ர் குழ‌ந்தையின் பெய‌ரிட்டு அம்மா, அப்பா என்ற‌ இணைப்பு சொல்லாவ‌து அத‌னினும் அதிக‌ ம‌கிழ்வ‌ளிப்ப‌து. உங்க‌ ஏழாங்க‌ல் பாட்டு என‌து சின்ன‌ வ‌ய‌சுக்கு தூக்கிப் போன‌து என்னை! ஏழாங்க‌ல்லின் ப‌ல‌ தினுசு விளையாட்டுக்கும் ப‌ல‌ தினுசு பாட‌ல்க‌ள் சொல்லி விளையாண்ட‌து நினைவ‌லைக‌ளாய்... சினேகிதிக‌ள் உற‌வின‌ர் வீடுக‌ளுக்கு வேறு ஊர் சென்று திரும்பி அந்த‌ந்த‌ ஊரில் வ‌ழ‌ங்கும் புதுப் பாட‌ல்க‌ளைக் க‌ற்று வ‌ந்து உள்ளூரில் அறிமுக‌ப்ப‌டுத்தும் பெருமித‌மிருக்கிற‌தே... சிலாகிப்புக்குரிய‌ ப‌ருவ‌ம‌து! ந‌ன்றி ரோஷ்ணிம்மா... நினைவுக‌ளை மீட்டெடுத்த‌மைக்கு!

  ReplyDelete
 33. அழகான பகிர்வு. மல்லிகா அம்மாவின் அன்பு புகுந்த வீட்டிலும் தொடர்வது ஆண்டவன் அளித்த பரிசு:)!

  ReplyDelete
 34. மல்லிகாம்மா.. மணக்கிறது.
  இரவில் வெளியில் எல்லாப் பசங்களும் வட்டமாக உட்கார்ந்து கொண்டு குண்டு கத்திரிக்காய், கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடுவோம்.
  இப்போது கணினியில்தான் விளையாட்டு

  ReplyDelete
 35. வாங்க டீச்சர்,

  தாராளமா கூப்புடுங்க டீச்சர்.

  மீண்டும் வருகை தந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 36. வாங்க நிலாமகள்,

  //சினேகிதிக‌ள் உற‌வின‌ர் வீடுக‌ளுக்கு வேறு ஊர் சென்று திரும்பி அந்த‌ந்த‌ ஊரில் வ‌ழ‌ங்கும் புதுப் பாட‌ல்க‌ளைக் க‌ற்று வ‌ந்து உள்ளூரில் அறிமுக‌ப்ப‌டுத்தும் பெருமித‌மிருக்கிற‌தே... சிலாகிப்புக்குரிய‌ ப‌ருவ‌ம‌து!//

  ஆமாங்க. தங்கள் கருத்துக்களை கண்டு மகிழ்ந்தேன்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 37. வாங்க ராமலஷ்மி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 38. வாங்க ரிஷபன் சார்,

  தொலைக்காட்சியும், கணினியும் தான் அவர்களை கவர்ந்திழுக்கிறது.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 39. "மல்லிகாம்மா" மகிழ்ச்சியான அன்புப் பிணைப்பு.

  ReplyDelete
 40. அருமையான உறவுகள் எத்தனைஆண்டுகள்
  ஆனாலும் நீங்காத காவியமாய்
  நம் மனதில்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 41. தாமதத்துக்கு மன்னிக்கவும்.சுவாரஸ்யமான பகிர்வு.மல்லிகாம்மா பெயர் தற்செயல் இணைவு ஆச்சரியமே!

  ReplyDelete
 42. வாங்க மாதேவி,

  தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 43. வாங்க ரமணி சார்,

  நிச்சயம் இது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது...

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 44. வாங்க சென்னை பித்தன் சார்,

  மன்னிப்பெல்லாம் எதற்கு சார். முடியும் போது வந்து பாருங்கள்.

  புகுந்த வீட்டிலும் மல்லிக்காம்மா பெயர் என்னைத் தொடர்வது ஆச்சரியம் தான்....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 45. நாங்க கூழான்கல் னு விளையாடுவோம். ஆற்றில் கிடைத்த கல்லை வைத்து விளையாடுவதால் அந்தப் பெயர். ஒரு பாடல் உண்டு மறந்து விட்டேன். பழைய நினைவுகளை நினைவூட்டிய பதிவு

  ReplyDelete
 46. வாங்க சீனு,

  பழைய நினைவுகளை நினைவூட்டியதா.... நன்றி.

  ReplyDelete
 47. இந்த வலைதளத்தை சில நாட்களுக்கு முன்புதான் அறிந்தேன். உங்கள் பதிவுகளை இப்போதுதான் முதலில் இருந்து ஒவ்வொன்றாய் படித்து வருகிறேன். உங்கள் எழுத்து நடை அருமையாகவும் சரளமாகவும் உள்ளது.

  எழாங்கல் பாட்டை நினைவில் வைத்து அனைவருடனும் பகிர்ந்துகொண்டது பாராடிர்க்குரியது. அதை மெட்டுடன் பாடி mp3 file-ஆக பதிவேற்றினால் எல்லாரும் கேட்டு மகிழ்வார்கள்.

  நட்புடன்,
  மஹேஷ்

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…